From: மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!
மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்!
[saturday, 2011-04-23 02:58:08]
நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்..
ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்..
நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்!
ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே?
நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல..
ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான்.
நம்பியார்: என்ன! உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் பேப்பருக்குக் கொடுத்திட்டு, அதிலை வந்ததைதான் வாசித்தீர்களோ?
ராஜபக்ச: ஆமாம். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள். காசை எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தாள் பேப்பரிலை எவ்வளவு கொள்ளை போனதென்று செய்தி வந்ததும்தான் - அவர்களுக்கு தாம் கொள்ளையடித்தது தெரியவரும். அதுபோலத்தான்..
நம்பியார்: அதுக்காக நாங்கள் அனுப்பிய அறிக்கையை வாசிக்காமல் விடுகிறதே?
ராஜபக்ச: அப்படியில்லை. 196 பக்கத்தையும் யார் மினக்கெட்டு வாசிக்கிறது. பேப்பருக்குக் கொடுத்தால் அவை வாசித்து, முக்கியமானதை மட்டும் பிரசுரிப்பினம், அதை வாசிக்கலாம் என்டுதான்..
நம்பியார்: பேப்பரை பார்த்தியளோ?
ராஜபக்ச: ஓ! என்ன என்னைப் பற்றி எக்கச்சக்கமாய் கண்டித்திருக்கு! இனிமேல் வெளிநாடுகளுக்குப் போகவே எலாதுபோல..
நம்பியார்: இனிமேல்த்தான் நீங்கள் எந்த நாட்டுக்கும் பயமின்றிப் போகலாம். யாரும் உங்களைக் கைதுசெய்ய முடியாது. ஐ.நா சபையின் முன் உங்கள் பிரச்சினை எடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்த நாடும் உங்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை இப்போது எடுக்க முடியாது. ஐ.நா சபையே இனிமேல் உங்கள் பிரச்சினையைப் பார்த்துக்கொள்ளும்.
ராஜபக்ச: ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பிரச்சினை போகும் போல்லலே கிடக்கு?
நம்பியார்: அதுக்குத்தான் ரசியா உடனமே அறிக்கை விட்டுட்டுதே. அவையிற்றை வீற்றோ பவர் இருக்கைகேக்கை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.
ராஜபக்ச: ஆனால் வேறு யாராவது புதிய ஐ.நா செயலாளர் வந்தால் என்பாடு என்னாவது?
நம்பியார்: பயப்படாதீர்கள். மீண்டும் ஐ.நா செயலாளராக வருவதற்காகத் தான் பான் கீ மூன் இப்படியொரு குழுவை அமைத்ததும், அந்தக்குழு பான்கி மூனைப் பற்றியே கண்டனம் வெளியிட்டதும்.
ராஜபக்ச: எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நம்பியார்: இதுவரையும் பான் கீ மூனுக்கு இருந்த ஒரேஒரு கெட்டபெயர் இலங்கைப் பிரச்சினைதான். அதற்கு இப்போது ஒரு தீர்வு காணப்படுவதுபோல் ஒரு பாவனை காட்டப்பட்டுவிட்டது. இனிமேல் யாரும் அவரைப் பற்றி இலங்கை விடயத்தில் குறைசொல்ல முடியாது.
ராஜபக்ச: ஆனால் தமிழர்கள் சும்மா இருப்பார்களா?
நம்பியார்: வடக்கு கிழக்கிலைதான் யாரும் வாய் திறக்கேலாதே?
ராஜபக்ச: நான் அவையைச் சொல்லேலை..
நம்பியார்: யாரை � புலம்பெயர் தமிழரைச் சொல்லுறியளோ! அவைக்கை இப்ப பல பிரிவு. அவை தங்கடை குடுமிச் சண்டையை பிடிக்கவே நேரமில்லை. அவையாவது ஒற்றுமைப்படுறதாவது - போராடுறதாவது.. இம்மானுவல் சுவாமி எதாவது செய்தால் சரி. அதையும் சமாளிக்கலாம்..
ராஜபக்ச: ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருக்கிறதே?
நம்பியார்: பயப்படாதையுங்கோ அவையலை இந்தியா பார்த்துக்கொள்ளும்.
ராஜபக்ச: ஆனால் இப்ப அவையள் இரகசியமாய் கதைப்பதற்காக சிங்கப்ப+ர் போயிருக்கினமே. அதுதான் எனக்குச் சந்தேகமாயிருக்கு.
நம்பியார்: பயப்படாதையுங்கோ அவை இரகசியமாய் எதையும் செய்யேலாது. இந்தவாரம் இணையத்தளங்களில் சில கேள்விகள் அவையிட்டை தமிழர் சிலர் கேட்டிருக்கினம் பார்த்தனீங்களே?
ராஜபக்ச: இப்ப கொஞ்ச நாளாய் எனக்கு பேப்பரென்றாலே அலர்ஜி. அதாலை பார்க்கேலை. சிங்கப்ப+ர் போன கூட்டமைப்பிடம் தமிழர்கள் - அப்ப என்னதான் கேட்டிருக்கினம்?
நம்பியார்: சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதற்கும் உங்கள் உறுப்பினர்களின் பிரயாணம் மற்றும் அவசியச் செலவுகளுக்கு தேவையான நிதியை வழங்கிய நிறுவனம் அல்லது நாடு எது? இதை உங்களால் நமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? இந்த சிங்கப்பூர் கருத்தரங்கை நடத்துவதில் இந்தியாவிற்கு ஏதாவது பங்கு உண்டா அல்லது ஏதாவது நெருக்குவாரங்கள் அந்த நாட்டின் உயர் பீடத்திலிருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டதா? இந்த சிங்க்ப்பூர் கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? இவ்வாறான மூன்று கேள்விகளை உலகத் தமிழர்கள் சார்பாகவும் தாயகத்து தமிழர்கள் சார்பாகவும் கேட்கின்றோம் என இந்தவார பத்திரிகைகள் சிலதிலையும் இணையத்தளத்திலும் கேள்விக்கணைகளை சிலர் விடுத்துள்ளனரே?
ராஜபக்ச: அதாவது அரசியல் சதுரங்கம் ஆடும் தமது தலைவர்கள் - எப்படி காய்களை எங்கே எதற்காக நகர்த்துகிறார்கள் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு நகர்த்துமாறு தமிழர்கள் கேட்கிறார்கள் அப்படித்தானே இருந்தாலும் எல்லாத் தமிழரையும் ஒரே மாதிரி நினைக்க முடியுமே?
நம்பியார்: பயப்படாதையுங்கோ. நிபுணர் குழுவின் அறிக்கை அவர்களுக்குச் சார்பாக இருப்பதால், அதை நினைத்தே அவர்கள் பெருமைப்படுவார்கள், மகிழ்ச்சியடைவார்கள். எதையும் செய்யாது தமக்குத் தாமே முதுகில் தட்டிக்கொள்வார்கள். எல்லாத்தையும் ஐ.நா சபை பார்த்துக்கொள்ளும் என்று நம்பி பேசாதிருப்பார்கள்.
ராஜபக்ச: மீறிப் போராடினால்?
நம்பியார்: இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை பரிசீலிக்க இன்னொரு குழுவை நியமிக்க வேண்டியதுதான்.
ராஜபக்ச: அந்தக் குழு என்ன செய்யும்?
நம்பியார்: அதுவும் ஒரு அறிக்கையை தயாரிக்கும்.
ராஜபக்ச: இன்னொரு அறிக்கையோ? மகே புத்தா!
நம்பியார்: அதுக்கடையிலை நீங்கள் ஐக்கிய தேசிய கட்சி பிரதி தவிசாளர் லக்ஸ்மன் கிரியெல்ல செவ்வாய்க்கிழமை சொன்ன விடயத்தைச் செய்யவேண்டும்.
ராஜபக்ச: என்ன சரத் பொன்சேகாவை விடுதலை செய்யிறதோ?
நம்பியார்: அதுவும் நல்லதுதான். ஆனால் கிரியெல்ல இன்னொரு விடயத்தையும் சொல்லியிருக்கிறார்.
ராஜபக்ச: என்ன என்குக் சார்பாகவே?
நம்பியார்: ஓம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் சிபாரிசுகள் சிலவற்றை அமுல்படுத்துவதன் மூலம் அவ்வறிக்கையை இலங்கைக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறர்! ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் மீது போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது இஸ்ரேல் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சில சிபாரிசுகளை இவ்வாறு அமுல்படுத்தியது. அதன்பின் நிபுணர் குழுவுக்குத் தலைமை தாங்கிய தென்னாபிரிக்க நீதிபதி, இஸ்ரேலின் நிலை முன்னேறியுள்ளது என மற்றொரு அறிக்கையை வெளியிட நேரிட்டது. இதைத்தான் லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கிறார். அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை தளர்த்த வேண்டும். யுத்தத்தின்போது காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். இவையே நிபுணர் குழுவின் பிரதான சிபாரிசுகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறாறெல்லே?
ராஜபக்ச: இவற்றைச் செய்தால் காணுமே? ஐ.நா சபை ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதே?
நம்பியார்: நீங்கள் வடிவாய் வாசிக்கேல்லை. அந்த விசாரணைக் குழுவை நீங்கள் தான் நியமிக்கப் போகிறீர்கள் என்றுமெல்லே பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. எங்காவது கொலையாளியிடமே நீதிபதியைத் தெரிவுசெய்யுமாறு கேட்பதுண்டா?
ராஜபக்ச: ஆனால் ஐ.நா சபை ஒரு குழுவை உருவாக்கி � எனது விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக ஐ.நா பேச்சாளர் தெரிவித்துள்ளாரே?
நம்பியார்: அதேசமயம் அந்தக் குழுவில் எனது பெயரும் இடம்பெறலாம் என்று அவர் சொல்லியிருக்கிறாரே?
ராஜபக்ச: அதெப்படி உங்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே. சர்வதேச நீதிமன்றில் உங்கள் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதே?
நம்பியார்: இதைத்தான் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளரும் ஐ.நா பேச்சாளரிடம் கேட்டார்.
ராஜபக்ச: அதற்கு அவர் என்ன சொன்னார்?
நம்பியார்: �அது சட்ட ரீதியானதாக சரியானது போன்று தோன்றும் தவறான கேள்வி. அவர் ஒரு இலக்கு என்ற வகையில் என்னுடைய (நம்பியாரின்) பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே எனது (நம்பியாரின்) பெயரும் குழுவில் சொல்லப்படலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருக்கிறாரே?
ராஜபக்ச: அப்ப நீரும் அந்தக் குழுவில் இருப்பீரோ?
நம்பியார்: நான் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
ராஜபக்ச: என்ன ரஜனி மாதிரி பேசுறியள்
நம்பியார்: நான் அல்லது எனது ஆட்கள் இருப்பார்கள்!
ராஜபக்ச: எனக்கு ஒன்றுமே புரியேலை?
நம்பியார்: ஒரு விடயத்தை தெளிவாய் தெரிந்துகொள்ளுங்கோ. ஐ.நா சபையின் மீதும், பான்கீ மூனின் மீது உலகத்திற்கு நம்பிக்கை வரவேண்டுமென்பதற்காகத் தான் - பக்கச்சார்பற்ற நீதியான ஒரு நிபுணர் குழுவை நியமித்தனாங்கள்.
ராஜபக்ச: அது எனக்கெல்லே ஆபத்தாய் போவிடும்போல கிடக்கு?
நம்பியார்: ஒருநாளுமில்லை. இப்ப எல்லாருக்கும் ஐ.நா சபை மீதும், பான் கீ மூன் மீதும் நம்பிக்கை வந்திட்டுது. இன்pமேல் அவர் எதுசெய்தாலும் இலங்கை விடயத்தில் சரியாத் தான் இருக்கும் என்று நம்புவினம். இதனாலை ஒரே கல்லிலை இரண்டு மாங்காய்.
ராஜபக்ச: அதெப்படி ஒரே கல்லிலை இரண்டு மாங்காய்?
நம்பியார்: இலங்கை விடயத்தில் எதுசெய்தாலும் அது சரியாத் தான் இருக்கும் என்று உலகம் நம்பும். மேலும் தொடர்ந்து விசாரணைகள் நடத்துவதற்காகவும், பான் கீ மூன் தேவையென்று நினைப்பினம். பான் கீ மூனுக்கிருந்த கெட்ட பெயரும் மறைந்ததால் அவர் அடுத்த தடவையும் செயலாளராக தெரிவுசெய்யப்படுவதற்கு தடையில்லை. நானும் அவரின் ஆலோசகராக இருப்பதற்குத் தடையில்லை. நீங்களும் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதற்குத் தடையில்லை?
ராஜபக்ச: அதெப்படி?
நம்பியார்: இந்த நிபுணர் குழு அற்pக்கையால் - உங்கள் நாட்டில் இருந்த எல்லாப் பிரிவினைகளும் மறைந்துபோய் எல்லாரும் ஒற்றுமையாய், அறிக்கையை எதிர்த்தே கதைக்கத் தொடங்கிவிட்டினம். அதாவது எல்லாரும் உங்களுக்குச் சார்பாகக் கதைக்கத் தொடங்கிவிட்டினம். உங்களுக்குச் சார்பாக எல்லாரையும் இந்த அறிக்கை சேர்த்திருக்கு. நாட்டையும், படையினரையும் காப்பாற்றுவதற்காக மீண்டும் உங்களையே ஜனாதிபதியாக அவர்கள் தெரிவுசெய்ய வேண்டும்.
ராஜபக்ச: அதாவது போர்க்குற்றவாளியான என்னைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் ஒன்றுபட்டு உழைக்கப் போகிறார்கள் என்று சொல்லுறியள்.
நம்பியார்: சரியாச் சொன்னீர்கள். இந்த அறிக்கையாலை � நான் , பான்கீமூன், நீங்கள் - எங்கள் மூன்றுபேருடைய பதவிகளும் இன்னும் சில வருடங்களுக்கு மாறாதென்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
ராஜபக்ச: அப்ப தமிழ் மக்கள்?
நம்பியார்: அவையும்தான். அவையின்றை துன்பங்கள், துயரங்கள், கவலைகள், கஸ்டங்களும் இன்னும் சில வருடங்களுக்கு மாறாது என்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
வாசகன் ரட்ணதுரை - கனடா (சுதந்திரன்)
seithy.com
0 Comments
Recommended Comments
There are no comments to display.