வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய வேண்டுமா?
வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா?
இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது.
இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை?
ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது.
உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது.
இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது.
அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது.
இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும்.
நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள்.
கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன:
ஆக்கம்: போக்குவரத்து
- 2
3 Comments
Recommended Comments