https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK
ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன்.
தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும்
எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள்
இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே
புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம்
புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை
கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு
கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார்
எண்பட்ட யாவரையும் கவருமிந்த
இழிகாலன் செய்கையது என்னே! என்னே!
செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர்
சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும்
செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை
செழு முலையினூடோடி வீரம் சிந்தும்
செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும்
தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும்
எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள்
இழிகாலன் செய்கையது என்னே என்னே
(வேறு)
தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும்
சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார்
மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து
விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான்
ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக
வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு
பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த
நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ?
(வேறு)
கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே
காற்றால் உதிர்ந்த சருகானாய்
எண்ணார் உன்னை ஏற்காதோரும்
ஏற்றும் தெய்வம் நீயானாய்
விண்ணேகினையோ செல்வா தமிழின்
விழியே உயிரே ஆரீரோ
அண்ணா தூங்கு ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
துன்பஞ் செய்த உடல் நோயோடும்
தூய தமிழிற் குழைத்ததிலே
இன்பங் கண்டாய் செல்வா என்றும்
ஈழத் துயர்வே பேச்சானாய்
என்புந் தோலும் கொண்டாய் எனினும்
எங்கள் தமிழே மூச்சானாய்
அன்பே போதும் ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
கைகால் நடுங்கும் உந்தன் உருவைக்
கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய்
மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய்
மெலிந்தாய் வாடி மிக நொந்தாய்
பொய்யாகிய இவ்வுலகின் பதவிப்
போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய்
ஐயா தூங்கு ஆறத் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ
சீரார் தமிழின் சிறப்பிற்காகச்
சிறை சென்றனையே செல்வா நின்
பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர்
பதவிப் பித்தால் நொந்தாயோ
சோரா மனதிற் துயரச் சுமையாற்
தோள் சோர்ந்தனையோ செல்வா எம்
ஆராவமுதே போதும் தூங்கு
ஆரீர் ஆரீர் ஆரீரோ