முள்ளி வலி
முள்ளி வாய்க்கால் - இனவாதம் ஆடிய வெறியாட்டம்
மனிதம் மடிந்துபோனது. சிறிய வாய்க்கால் செந்நிறமானது
முன்தோன்றிய மூத்த குடி -பெயரளவில்மட்டுமே.
இலங்கையின் வடதிசையும் பாரதத்தின் தென்திசையும்
கலங்கி நின்றது, அடிவருடிகளைத்தவிர.
வலி தமிழனுக்கு மட்டுமே தரணிக்கு இல்லை.
பல பத்தாண்டுகள் அழுது கிடந்தோம்
முள்ளி வாய்க்கால் நாம் கடைசியாய் அழுதது
அழுவதுக்கு எம்மிடம் கண்ணீரும் இல்லை
வலி மட்டும் நெஞ்சில் உயிருள்ளவரையில்
பிஞ்சுக்குழந்தைக்கும் நெஞ்சினில் குண்டு
கூடி இருந்தவரே குழி பறித்தனர்-
கொலைக்கும்பலுக்கு ஆணை கொடுத்தனர்.
மீண்டும் ஒரு உணர்வு உருவாக்கா வண்ணம்
தாயக கவிஞனையும் காணாமல் செய்தனர்
ஆடு நனைந்ததுக்கு ஓநாய் அழுதது போல்
துரோகத்தின் வழி வந்தோர் இன்றும் அழுதபடி
போலிக் கண்ணீரால் பொறி வைக்கிறார்கள்.
புலம் பெயர் பலத்தை உடைத்திட வேண்டி
போலியாய் அழும் எட்டப்பர் கூட்டம்
பாடலைக்கேட்டே பதறி அழுவார்கள்.
கொடியை ஏந்தி, கொள்கையை விற்பவர்!
நோக்கம் ஒன்றே - ஒற்றுமையை குலைப்பது
விழித்துக்கொள் தமிழா!
ஒற்றுமை மட்டுமே துரோகத்தை துரத்தும்
குனிந்த தலையை மீண்டும் நிமிர்த்து
சாவு நமக்கு புதியது அல்ல
தளத்திலும் புலத்திலும் ஒற்றுமை வேண்டும்
எம்மண்ணை நாமே ஆழவும் வேண்டும்
இந்தத் தலைமுறை போனதன் பின்பு
விடியலின் தூரமும் தூரமாகும்…
- காவலூரான்.