Search the Community
Showing results for tags 'அன்பரசன்'.
-
தடங்கள்-1 1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்றுசேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கைநெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும் தொடங்கிவிட்டது. தொடக்க நாட்களிலேயே நெடுங்கேணியை இராணுவம் கைப்பற்றிவிட்டதால் ஒட்டுசுட்டான் காட்டுப்பகுதியில் இருந்த எமக்கு ஆபத்து நெருங்கியிருந்தது. ஆகவே எமது கற்கைநெறியும் பாதிக்கப்பட்டது. காட்டுப்பகுதியிலிருந்து கொஞ்சம் பின்னகர்ந்து புளியங்குளத்தில் எமது முதன்மைத் தளத்தை அமைத்துக் கொண்டோம். அங்கே நிர்வாக வேலைகள் நடந்துகொண்டிருக்க, படிப்புக்காக மட்டுமே அணிகள் அங்கே ஒன்றுகூடுவோம். மற்றும்படி பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறுசிறு அணிகளாகப் பிரிந்து சற்றுத் தூரம் தள்ளித் தங்கியிருந்தோம். இந்தப் புளியங்குளம் என்பது ‘ஜெயசிக்குறு’ புகழ் புளியங்குளமன்று. அது கண்டிவீதியில் ஓமந்தைக்கும் கனகராயன் குளத்துக்குமிடையில் அமைந்துள்ளது. இது ஒட்டுசுட்டான் புளியங்குளம். ஒட்டுசுட்டான் – முள்ளியவளைச் சாலையில் ஒட்டுசுட்டானுக்கு அடுத்துள்ள கிராமம். எமது கற்கைநெறி மீண்டும் தொடங்கியது. சிரமத்துக்கு மத்தியிலும் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு வகுப்புக்களாவது நடந்துவிடும். ஒட்டுசுட்டான் நோக்கியோ முள்ளியவளை நோக்கியோ நகராமல் புளியங்குளத்தை நோக்கி நகர்வதே நெடுங்கேணி இராணுவத்தின் நோக்கமாக இருந்ததால் எமது பக்கத்தில் அதிக சிக்கலிருக்கவில்லை. ஆனால் மக்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். ஒருநாள் காலை வகுப்புக்கென்று நாங்கள் அமர்ந்திருந்த நேரத்தில், ‘இன்று வகுப்பில்லை, முக்கிய விடயம் பற்றி உங்களோடு ஒருவர் பேசுவார்’ என்று கற்கைநெறிப் பொறுப்பாளர் சொன்னார். ஒரு பிக்-அப் வாகனம் வந்துநின்றது. ஒருவர் வந்து கதைக்கத் தொடங்கினார். அவர் கதைக்குமுன்னமே எமக்குள் இருந்த சிலரை வகுப்பறையிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அவர்களுள் இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். “உங்களை ஒரு வேலைக்காகக் கூட்டிக்கொண்டு போகச்சொல்லியிருக்கினம். அதுபற்றிக் கதைக்கத்தான் வந்தனான். உங்களில சிலபேரை எடுக்க வேண்டாமெண்டு உங்கட தளபதிகள், பொறுப்பாளர்கள் சொன்னவை. அவையளைத்தான் முதலிலயே எழுப்பி அனுப்பீட்டம். நீங்கள் போற இடத்தில கஸ்டமான வேலையள் வரும். பெரிய வெயிற்றுகள் தூக்கிப் பறிக்கிற வேலை வரும். உடல்நிலை ஏலாத ஆக்கள் இப்பவே சொல்லிப் போடுங்கோ. அங்கபோய் நிண்டுகொண்டு கஸ்டப்பட்டால் அதால எல்லாருக்கும் பிரச்சினைதான். உங்களைக் கூட்டிக்கொண்டு போனபிறகு வேலை தொடர்பாக் கதைக்கிறன்” எது தொடர்பான வேலை என்பது எம்மிற் சிலருக்கு உடனேயே விளங்கிவிட்டது. கூட்டிச்செல்ல வேண்டாமென்று படையணியால் சொல்லப்பட்டவர்களைப் பார்த்தால் இது ஏதோ தாக்குதலோடு தொடர்புபட்டது என்பதும் விளங்கிவிட்டது. ஏனென்றால் பயிற்சித் திட்டத்துக்கென அவர்கள் வரும்போது அவர்கள் நின்ற இடமும் பணியும் அப்படிப்பட்டது. அவர்களுள் ஒருவன் கப்டன் அன்பரசன். எம்மோடு வந்து கதைத்தவர் வேறு யாருமில்லை. மணியண்ணை. ‘மோட்டர் மணி’ என்று முன்பும் ‘ஆட்டி மணி’ என்று பிற்காலத்திலும் இயக்கத்தில் அறியப்பட்ட தளபதி மணிவண்ணன்தான் எம்மோடு வந்து கதைத்தார். அவரைப்பற்றி இயக்கம் முழுவதும் அறிந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவரைக் கண்டதில்லை. அப்போது வகுப்பறையில் இருந்த பலருக்கு தம்மோடு கதைப்பது யாரெனத் தெரிந்திருக்கவில்லை, அவர் கதைக்க முன்பு சொல்லப்படவுமில்லை. எமக்கோ அது ஆட்லறியோடு தொடர்புபட்ட வேலையென்பது விளங்கிவிட்டது. அந்நேரத்தில் ஆட்லறிப் படையணியை ராயு அண்ணையும் மணியண்ணையும்தான் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் எவரிடமும் இதைப்பற்றிப் பேசவில்லை. அது இயக்க நடைமுறையுமன்று. நிறையப் பேருக்கு என்ன வேலை, தம்மோடு கதைப்பது யாரென்பது தெரியாமலேயே இருந்தது. எம்மை ஏற்கனவே மணியண்ணைக்குத் தெரியுமென்பதாலும், இந்த வேலை எது தொடர்பானதென்று நாம் ஊகித்திருப்போம் என்று அவர் கருதியதாலும் எம்மைத் தனியே அழைத்து ‘இந்த வேலைக்குச் சரிவராத ஆட்களை நீங்கள் தான் சொல்ல வேணும். ஏலாத ஆக்கள் அங்க வந்தால் பிறகு எல்லாருக்கும் சிரமமாத்தான் போகும். அதுக்காக அவையளை இஞ்சயே விட்டிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு வேற வேலைக்கும் ஆக்கள் தேவைதான். அவையள அங்க விடுவம்.’ என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் மூன்று பேரைக் காட்டிக் கொடுத்தோம். ஒருவன் வயிற்றுவெடிக்காரன். மற்ற இருவரும் கையெலும்பு முறிந்தவர்கள். அதன்பிறகு வந்த ஒருவருடத்துக்கு – எமது முதன்மைக் கற்கைநெறி முடிவடையும்வரை – அந்த மூவராலும் நாங்கள் ‘காட்டிக் கொடுப்போராக’க் குறிப்பிடப்பட்டு வந்தோமென்பது தனிக்கதை. அன்று காலையுணவை முடித்துக் கொண்டு நாம் புறப்பட்டோம். நிப்பாட்டப்பட்டவர்கள் போக எஞ்சிய எமது படையணிப் போராளிகள் எட்டுப்பேருக்கும் லெப்.கேணல் கதிர்(பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்தார்) பொறுப்பாக வந்தார். எமது கற்கை நெறியிலிருந்தும் அங்குநின்ற நிர்வாகப் போராளிகளிலிருந்தும் கிட்டத்தட்ட நாற்பது பேர்வரை மணியண்ணையோடு புறப்பட்டோம். தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ? விசுவமடுவில் ஒரு காட்டுப்பகுதி. முகாம் ஏதும் அங்கு இருக்கவில்லை. காட்டுக்குள் சிறு கூடாரங்கள் இரண்டு இருந்தன. போனவுடன் எம்மை நான்கு அணிகளாகப் பிரித்தார்கள். ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு கூடாரம் தந்து எமக்கான வதிவிடத்தை அமைக்கச் சொன்னார்கள். அங்கு தேவராஜ் அண்ணன்தான் பொறுப்பாக நின்றார். அவர் ஏற்கனவே எம்மோடு நின்று, முல்லைத்தீவில் ஆட்லறி கைப்பற்றப்பட்டதும் ஆட்லறிப்படையணிக்கென்று அனுப்பப்பட்டவர். இரண்டில் ஓர் ஆட்லறி இவரின் பொறுப்பின் கீழேயே இருந்தது. அன்று மாலை மணியண்ணை வந்தார். ‘நீங்கள் ஆட்லறிப்பயிற்சி எடுக்கப் போகிறீர்கள்’ என்று அப்போதுதான் சொன்னார். ஓர் ஆட்லறி கொண்டுவரப்பட்டது. எம்மோடு நின்றசிலர் முல்லைத்தீவுச் சண்டையில் பங்குபற்றியதோடு ஆட்லறியைக் கைப்பற்றிய அணியிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களைவிட மற்றவர்கள் அனைவரும் முதன்முதலாக அன்றுதான் ஆட்லறியைப் பார்க்கிறோம். மணியண்ணையின் கதையைத் தொடர்ந்து எமக்கான பயிற்சிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. பயிற்சித்திட்டம் 24 மணிநேரப் பயிற்சியாக இருந்தது. ஓரணி இரண்டு மணிநேரம் பயிற்சியெடுக்கும். அந்நேரத்தில் மற்ற இரு அணிகள் ஓய்வெடுக்கும். எஞ்சிய ஓரணி ஆட்லறிக்கான காவற்கடமையில் ஈடுபட்டிருக்கும். பிறகு மற்றதோர் அணிக்கு இருமணிநேரப் பயற்சி, பிறகு இன்னோர் அணிக்கு என்று தொடரும். நான்காம் அணிக்குப் பயிற்சி முடிந்ததும் மீள முதலாமணி தொடரும். காவற்கடமையும் இரண்டு மணித்தியாலத்துக்கொருமுறை சுழன்றுகொண்டிருக்கும். இச்சுழற்சிமுறைப் பயிற்சியில் ஆசிரியர்களும் மாறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்லறி ஒன்றாய்த்தானிருந்தது. அந்த ஆட்லறிக்குரிய தேவராஜ் அண்ணையின் அணியினரே பயிற்சி தந்துகொண்டிருந்தனர். மற்ற ஆட்லறியும் அதற்குரிய அணியும் ஏற்கனவே நடவடிக்கைக்காக நகர்த்தப்பட்டிருந்தது. பயிற்சி 24 மணிநேரமும் சுழற்சியில் நடந்துகொண்டேயிருந்தது. இரவில் பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் நடக்கும். ஓரணிக்குக் கிடைக்கும் நான்குமணிநேர இடைவெளியில்தான் நித்திரை, சாப்பாடு, குளிப்பு, துவைப்பு, அரட்டை எல்லாமே. இரண்டு பகல்களும் மூன்று இரவுகளும் இப்படியே பயிற்சி நடந்தது. இரண்டு மணிநேரப் பயிற்சியிலேயே உடல் துவண்டுவிடும். இதற்குள், இருமணிநேரக் காவற்கடமை, இருமணிநேரப் பயிற்சி, நான்குமணிநேர ஓய்வு (இதற்குள் மற்ற வேலைகளும் வந்துவிடும்) என்று மூன்றுநாட்கள் நடந்த தொடரோட்டத்தில் உடம்பு தும்பாகிப் போனது. ஓர் ஆட்லறி எறிகணையின் மொத்தநிறை 43 கிலோகிராம் என்பதாக இப்போது நினைவுள்ளது. அதில் குண்டுப்பகுதி மட்டும் முப்பது கிலோவுக்கு மேல்வரும். கட்டளைக்கேற்ப அதைத்தூக்கிக் கொண்டு ஆட்லறியடிக்கு வந்து குழலேற்றுவதும் பிறகு தூக்கிக் கொண்டு மீளப்போவதுமென்று நாலைந்து முறை செய்தாலே நாக்குத் தள்ளிவிடும். ஆள்மாறி ஆள்மாறி அந்த இரு மணிநேரங்களும் நெருப்பாக நிற்க வேண்டும். ஆட்லறிக் கால்களை விரிப்பது, சுருக்குவது என்று நாரி முறியும். நுட்பங்கள் விளங்கப்படுத்தப்படும் சிலநிமிடங்கள் மட்டுமே ‘அப்பாடா’ என்றிருக்கும். இயக்கத்தில், ஆட்லறிப் பயிற்சியெடுப்பதில் நாங்கள் மூன்றாவது தொகுதியாக இருந்தோம். முதலாவது தொகுதி, முல்லைத்தீவில் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டதும் ஒழுங்கமைக்கப்பட்டு பயற்சியெடுத்த தொகுதி. புளுக்குணாவ இராணுவ முகாமிலிருந்த ஆட்லறியைக் கைப்பற்றவென தென்தமிழீழப் போராளிகளைக் கொண்ட ஓரணி பயிற்சியெடுத்துச் சென்றது. அதுவே இரண்டாவது தொகுதி. நாங்கள் மூன்றாவது தொகுதி. எந்தத் தொகுதிக்கும் எங்களைப்போல் பயிற்சி நடக்கவில்லை. அவையெல்லாம் முறைப்படி நடத்தப்பட்ட பயிற்சி நெறிகள். நாங்கள்தான் ‘மூன்றே நாளில் முனைவராவது எப்படி?’ என்ற கணக்காகப் பயிற்சியெடுத்தவர்கள். ஆட்லறி எறிகணைகள் ஏவிக் காட்டப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தும் அதற்கான நேரமிருக்கவில்லை. மூன்றுநாட்கள் நடந்த பயிற்சியிலேயே நாங்கள் ஒருவழி ஆகிவிட்டிருந்தோம். எறிகணையை ஏவிப்பார்க்கவில்லையே தவிர மற்றதெல்லாம் அத்துப்படி. நித்திரைத் தூக்கத்திற்கூட எந்தப்பிழையும் விடாமல் முறைப்படி செய்யும் நிலைக்கு அந்த மூன்றுநாள் கடும்பயிற்சியில் வந்திருந்தோம். மூன்றாவது இரவுப்பயற்சி நடந்துகொண்டிருந்தபோது மீளவும் மணியண்ணை வந்தார். பயிற்சி நிறுத்தப்பட்டது. அந்த இரவு வினோதமாக இருந்தது. ஆட்லறிப் படையணியின் நிர்வாக வேலைகளில் நின்ற அனைவரும் பொறுக்கி ஒன்றுசேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முறைப்படியாகவோ அரைகுறையாகவோ ஆட்லறிப்பயிற்சியெடுத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, முன்பு புளுக்குணாவ முகாம் தகர்ப்புக்காக வந்து பயிற்சியெடுத்தவர்களில் வன்னியில் எஞ்சி நின்ற போராளிகளையும் அங்கிங்கென்று பொறுக்கிக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களில் இருவர் கொம்பனி நிலை அணித்தலைவர்களாக இருந்தும்கூட அழைத்துவரப்பட்டிருந்தார்கள். மளமளவென அணிகள் பிரிக்கப்பட்டன. ஓர் ஆட்லறிக்கு எட்டுப்பேர் என்றளவில் அணிகள் அமைக்கப்பட்டன. பயிற்சியாளர்களின் அறிவுரையோடு ஒவ்வோர் அணியிலும் ஆட்களுக்கான பணிகள் வழங்கப்பட்டன. முதன்மைச் சூட்டாளன், தொலைத் தொடர்பாளன், எறிகணையைக் குழலேற்றுபவன் என்ற பணிகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வோர் அணியோடும் தேவராஜ் அண்ணையின் ஆட்லறியணியின் போராளிகள் இருவர் கலக்கப்பட்டனர். இறுதியில் ஒன்பது அணிகள் எம்மிடமிருந்தன. இன்னும் ஓரணிக்கு என்ன செய்வதென்பது மணியண்ணையின் தலையிடியாகவிருந்தது. எங்களுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது, இயக்கம் சுளையாக எதையோ பார்த்துவிட்டது, காலங்கடத்தாமல் கொத்திக்கொள்ளப் பரபரக்கிறது. ‘இந்த மூண்டுநாளும் பயிற்சியெடுத்தாக்கள் ஓய்வெடுங்கோ, இப்ப வந்து சேர்ந்தாக்கள் திரும்ப ஞாபகப்படுத்திறதுக்காக பயிற்சியெடுங்கோ. விடிய நாலு மணிக்குள்ள எல்லாரும் ரெடியாயிடோனும்’ என்று மணியண்ணை சொல்லி எம்மை ஓய்வுக்காக அனுப்பிவைத்தார். எங்கே ஓய்வெடுப்பது? உடல் மிகமிகக் களைப்படைந்திருந்தாலும் மனம் மிகமிக உற்சாகமாகவே இருந்தது. எல்லோருக்கும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. இன்னும் இரண்டொரு நாட்களில் எமது போராட்டத்தில் பெரிய வரலாற்றுத் திருப்புமுனை நிகழப்போகிறது என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் ஒவ்வொருவரிடமும் மிகுந்திருந்தது. ஒன்றில் இயக்கத்திடம் புதிதாக பத்து ஆட்லறிகள் வந்திருக்க வேண்டும், அவற்றை வைத்து அவசரமாக பெரியதொரு தாக்குதலைச் செய்யப் போகிறது; அல்லது எங்கோ பத்து ஆட்லறிகளை இயக்கம் கண்வைத்து விட்டது, அவற்றைக் கைப்பற்றப் போகிறது. ஆட்லறிகளைக் கொள்வனவு செய்துவந்து இறக்குவதென்பது அப்போது சாத்தியமற்றதாகவே பெரும்பாலானவர்களால் கருதப்பட்டது. எனவே இரண்டாவது நிகழ்வையே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். சிந்தனைகள் இன்னும் விரிவடைந்துகொண்டிருந்தன. தாக்குதலென்றால் எந்த முகாமாயிருக்கக் கூடும்? ஜெயசிக்குறு இராணுவம் ஓமந்தை வரை பிடித்துவிட்டது. அங்கால்பக்கம் ஏதாவதோ? இல்லாட்டி திரும்பவும் ஆனையிறவு தானோ? அல்லது தள்ளாடிப் பக்கமோ? மட்டு – அம்பாறைக் காரரையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறாங்கள், சிலவேளை அங்கால்பக்கம்தான் ஏதாவது செய்யப்போறாங்களோ? சே… அங்கயெல்லாம் பத்து ஆட்லறிகளை ஒண்டாக் குவிச்சு வைச்சிருக்க வாய்ப்பில்லை. சிலவேளை ‘இதய பூமி’யில் தானோ? கிடைத்திருக்கும் நான்கு மணிநேரத்தில் யார்தான் நித்திரை கொள்வார்கள்? நித்திரைதான் வந்துவிடுமா? மற்றப்பக்கத்தில் ஏனையவர்களுக்கு மீளநினைவூட்டற் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு தூக்கமின்றி குறுகுறுப்பாகவே கழிந்தது. மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. தொடரும்… எழுதியவர்: அன்பரசன். https://www.eelanesan.com/2021/12/thadankal-1.html September 3, 2009