Search the Community
Showing results for tags 'சுதந்திரன்'.
-
Courtesy: சுதந்திரன் திருகோணமலையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுஸ்டிக்க முடிவு செய்தார்கள். அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்பினார்கள். எனவே இருசாராருக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாண அதிபர் மக்கேஷருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்டது. சமரச விவகாரம் அரசாங்க அதிபர் மக்கேஷர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மகாநாடுகூட்டி தமிழ் மக்கள் துக்கம் அனுஸ்டிக்கவும், சிங்கள மக்கள் சுதந்திர தினம் கொண்டாடவும் எப்படி வசதிசெய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பிரகாரம் காலை 6 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை தமிழ் பேசும் மக்கள் துக்கதின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்றும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை சிங்கள மக்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழர் தங்கள் இல்லங்களிலும், ஸ்தாபனங்களிலும் கறுப்புக்கொடி உயர்த்துவதென்றும் சிங்களவர்கள் தங்கள் இடங்களில் சிங்கக்கொடி உயர்த்துவதென்றும் ஒருவரையொருவர் நிர்ப்பந்திப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. மார்க்கெட் விவகாரம் ஆனால் திருமலை மார்க்கெட்டைப் பற்றி ஒரு பிரச்சினை கிளம்பியது. திருமலை மார்க்கெற் நகரசபைக்கு சொந்தமான கட்டடமாகும். திருமலை நகரசபை, சபைக் கட்டடத்திலும், அதற்கு சொந்தமான இடங்களிலும் கறுப்புக்கொடி உயர்த்துவதென முடிவு செய்திருந்தது. இதன்படி மார்க்கெட்டிலும் கறுப்புக்கொடி உயர்த்த நகர சபைக்கு உரிமையுண்டு. ஆயினும் மார்க்கெட் முழுவதிலும் சிங்கள வியாபாரிகளே இடம்பிடித்திருந்தமையால் அங்கு கறுப்புக்கொடி ஏற்றுவது அவர்களைப் புண்படுத்தும் என்று வாதிக்கப்பட்டது. முடிவில் மார்க்கெட் கட்டடத்தில் சிங்கக்கொடியும் ஏற்றக்கூடாது, கறுப்புக்கொடியும் ஏற்றுவதில்லை. அதனை ஒரு பொது இடமாகக் பாவிக்க வேண்டும் என்று சுமூகமான முடிவு செய்யப்பட்டது. இந்தளவிற்கு திருமலையில் வாழும் தமிழ் பேசும் மக்களும், நகர சபையினரும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தனர். மரக்கறி மார்க்கெட்டிலும் மீன் விற்பனைச் சந்தையிலும் எந்தவிதமான கொடியும் ஏற்றுவதில்லையென்ற முடிவை தமிழரும் சிங்களவரும் ஒப்புக்கொண்டனர். ஊர்வலம் 4ஆம் திகதி காலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் கறுப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டும் கறுப்புச் சின்னங்களை அணிந்துகொண்டும் மடத்தடி சந்தியிலிருந்து நகரசபை காரியாலயத்தை நாடி அமைதியுடன் ஊர்வலமாகச் சென்றனர். இவ்வூர்வலத்தைத் திருமலை பிரதிநிதி என்.ஆர். இராஜவரோதயம், ஊர்காவற்றுறை பிரதிநிதி வி.ஏ.கந்தையா, கப்டன் ஏ.ஸி.கனகசிங்கம், டாக்டர் துரைநாயகம் ஆகியோர் முன்னின்று நடத்தினர். ஊர்வலம் நகரசபைக் காரியாலயத்தை அடைந்ததும் நகரசபை தலைவர் த.ஏகாம்பரம் அங்கு ஒரு கறுப்புக் கொடியை ஏற்றிவைத்து உணர்ச்சிகரமாக ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். பின்னர் அங்கு திரளாக சென்று திருமலை மணிக்கூண்டுக் கோபுரத்தின் மீதும் கறுப்புக்கொடி உயர்த்தினார். இதைத் தொடர்ந்து திருமலை காளிகோயில் முன்றலில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இராஜவரோதயம் தலைமைதாங்கி சுமார் மூன்று நிமிடங்கள் பேசியிருக்கலாம். அப்போது கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. வீர இளைஞர்கள் மரக்கறி – மீன் மார்க்கெட்டை நாடி ஓட்டம் பிடித்தனர். என்ன காரணம் என்று பார்த்தபோது, கண்ணியமாகச் செயற்பட்ட ஒப்பந்தத்தை மீறி சிங்களவர்கள் சிலர் மீன் சந்தையிலும், மரக்கறி சந்தையிலும் தனிச் சிங்கள கொடிகளை ஏற்றிவைத்து விட்டனர் என்று தெரியவந்தது. பொலிஸ் இராணுவம் உடனே அங்கிருந்த தலைவர்களும் அந்த இடத்திற்குச் சென்றனர். மாகாண அதிபருக்கும், மாவட்ட நீதிபதிக்கும், பொலிஸாருக்கும், டெலிபோன் செய்யப்பட்டது. அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். இராணுவமும், பொலிஸ் படையும் கூட துப்பாக்கிகள் சகிதம் அங்கு வந்து வட்டமிட்டு அணிவகுத்து நின்றன. முடிவை மீறுவதா? மாகாண அதிபர் மக்கேஷரும் தலைவர்களும் மார்க்கெட் கட்டடங்களிலிருந்து சிங்கக் கொடிகளை இறக்கி சமாதானத்தைக் காக்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சிங்களவர்களோ, மணிக்கூண்டு கோபுரத்தின் மீது ஏற்றப்பட்ட கறுப்புக்கொடியை இறக்க வேண்டும் என்று அடம்பிடித்தனர். அவர்களின் கோரிக்கை நியாயமற்றது என்றும் மணிக்கூண்டு கோபுரம் நகர சபையின் உடமை என்றும் முதல் நாள் மாநாட்டில் மார்க்கெட் மட்டுமே பொது இடமாக ஒப்புக்கொள்ளப்பட்டதென்றும், மணிக்கூண்டு கோபுரம் பொது இடமாகாது என்றும் வாதிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர். சிங்களவர்கள் எல்லோரும் கூட்டமாகத் திரண்டு மார்க்கெட்டின் இரு தலைவாசல்களையும் அடைத்து நின்றனர். துப்பாக்கி முழங்கிற்று இந்த நேரத்தில் டும்..டும்..என்று இரு வெடியோசைகள் கிளம்பின. எங்கேயோ பட்டாசு கொளுத்தப்படுகிறதென்று ஆரம்பத்தில் மக்கள் எண்ணினார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்..! கூட்டத்தில் கூக்குரல் கிளம்பிற்கு. நடராஜா என்கிற இளைஞரின் மார்பில் குண்டு பாய்ந்ததினால் அவர் பதறிக் கதறிக்கொண்டு அடிசாய்ந்தார். துடிக்கத் துடிக்க அவர் உயிர் பிரிந்தது. வ.நடராஜா என்கிற மற்றொரு இளைஞர் படுகாயப்பட்டார். முதியவர் ஒருவரின் கண்களினூடாக குண்டு பாய்ந்துவிட்டது. இன்னொரு இளைஞருக்கு நெற்றியில் காயம்பட்டது. மற்றும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. சன சமுத்திரம் அல்லோலகல்லோலப்பட்டது. எங்கும் குழப்பம். எங்கும் கலவரம். எங்கும் பயங்கரத் தத்தளிப்பு நிலவியது. கூட்டத்தைக் கலைந்து போகுமாறு மாவட்ட நீதிபதி கந்தசாமி கட்டளையிட்டார். கூட்டம் கலைந்தது. துப்பாக்கியினால் தாக்குண்டவர்கள் வைத்தியசாலை நோக்கி விரைந்தெடுத்துச் செல்லப்பட்டனர். நடந்தது இதுதான் வெளியில் தலைவர்களும், மக்களும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கையில், சிங்களவர்கள் திரண்டு மார்க்கெட் வாயில்களை மறைத்து நிற்க, சிங்களவர் ஒருவர் மார்க்கெட்டுக்குள் மறைந்து நின்று, மார்க்கெட் கிராதித் துவாரத்தின் மூலம் இரட்டைக் குழல் துப்பாக்கியினால் குருட்டுவாக்கில் கூட்டத்தை நோக்கி இரண்டு முறை சுட்டிருக்கிறார். ரவைகள் நாலாத்திசைகளிலும் பாய்ந்து, தமிழ் மக்களைப் பலிகொண்டன. கொடி காக்கும் பணியில் தியாகி நடராஜன் தன் இன்னுயிரைப் பணையம் வைத்தார். ஒருவர் கைது மேற்படி துப்பாக்கி சம்பவம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் எல்.ஜி.மனுவல் சில்வா என்ற சிங்களவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை கோர்ட்டில் முற்படுத்திய போது இம்மாதம் 15 ஆம் (1957) திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். திருமலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து நகரத்தில் பல பகுதிகளிலும் ஆங்காங்கு சில சிறுசிறு கலவரங்கள் ஏற்பட்டன. சிங்களவர்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர் என்றும், சிங்களவர்களுக்கு சொந்தமான சில கடைகள் தீயிடப்பட்டனவென்று தெரிகிறது. சிங்களவர் வெளியேற்றம் திருமலையில் இருந்த பல சிங்கள முதலாளிகளும், மற்றையோரும் குடும்ப சகிதம் திருமலையைவிட்டு வெளியூர்களுக்கு சென்றனர் என்று தெரிகிறது. இப்போது திருமலையில் அமைதி நிலவுகிறது. இராணுவமும் பொலிஸாரும் காவல் புரிகின்றனர். ஆயினும் இந்த நிமிடம் வரையில் கலவரங்கள் தனிந்துவிட்டதாகத் தெரியவில்லை. ஒரு மைல் தூரத்திற்கு இறுதி ஊர்வலம் துப்பாக்கிக் குண்டுக்கு இரையான நடராஜன் ஸ்தலத்திலேயே மரணமானார். குண்டு மார்பின் ஊடாகப் பாய்ந்திருந்தது. நடராஜனுடைய பிரேதத்தையும், மற்றும் காயப்பட்டவர்களையும் உடனடியாகத் திருமலை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து வி.ஏ.கந்தையா வைத்தியசாலைக்கு சென்றார். கந்தையாவின் கண்ணீர் வைத்தியசாலையின் முன்னால் நடராஜனின் பிரேதம் வைக்கப்பட்டிருந்ததை கண்ட வி.ஏ.கந்தையாக வாய்விட்டுக் கதறியழுதார். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் மாலைமாலையாக ஓடிற்று. பிரேதத்தைச் சுற்றியிருந்தவர்கள் கந்தையாவைக் கண்டதும் “ஐயா முடிந்தது, வளர்த்திவிட்டோம்.இதோ பாருங்கள் ஐயா” என்று கதறினார்கள். இலங்கையின் முதல் கரிநாள்...! | 75 Independence Day Protest In Sri Lanka அந்தக் கோலத்தைத் கந்தையாவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனினும் அவர் சகலருக்கும் ஆறுதல் கூறி, “சுதந்திரப் போராட்டத்தில் இதையெல்லாம் சகித்துக்கொண்டு தேசத்திறாகவும், மொழிக்காகவும் மேலும் மேலும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்றார். அப்படி கூறும்போது அவரது நா தளர்ந்தது. பின் கந்தையாக காயப்பட்ட மற்றவர்களைப் பார்வையிட்டு ஆவன செய்தார். திருமலை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினால் காயப்பட்ட இருவர் உடனடியாக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். மற்றும் இருவர் கண்களில் காயம்பட்டதனால் கண்டி கண் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் கந்தையாக மரண விசாரணையில் கலந்துகொண்டார். தமிழரசுக் கட்சி கையேற்றது தியாகி நடராஜனின் சடலத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை கிளை கையேற்றது. நடராஜனுக்கு திருகோணமலையில் உற்றார் உறவினர் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் திருமலைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் சகல மரியாதைகளுடனும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசும் பொதுமக்கள் வரிசையில் நின்று சடலத்தைப் பார்வையிட்டு சாம்பிராணி புகைத்து, மலர் வளையங்கள் சூட்டித் தமிழ் தியாகிகளுக்குத் தங்கள் இறுதி மரியாதையை தெரிவித்துக்கொண்டனர். ஊர்வலம் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (1957) பிற்பகல் பிரேத ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் ஒரு மைல் நீளத்திற்கு இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தெருநெடுகிலும் பெண்கள் கூடி நின்று கண்ணீர் வடித்தனர். நடராஜனின் பிரேதப் பெட்டியை திருமலை நகரசபைத் தலைவர் த. ஏகாம்பரம், திருவாளர்கள் வி.ஏ. கந்தையா, எம்.பி.என்.ஆர்.இராஜவரோதயம் எம்.பி., எம். தாமோதரம்பிள்ளை, சட்டத்தரணி துரைநாயகம், கப்டன், ஏ.ஸி.கனகசிங்கம் ஆகியோர் கையேந்தித் தூக்கிச் சென்று ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர். பிரேத ஊர்வல ஏற்பாடுகளை எல்லாம் எம்.இராமநாதன் கவனித்துக்கொண்டார். தொண்டர்கள் சுமார் 50 மலர் வளையங்களைத் தாங்கிச் சென்றனர். பிரேத அடக்கம் கந்தளாய் மயானத்தில் பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டது. https://tamilwin.com/article/75-independence-day-protest-in-sri-lanka-1675447814