Search the Community
Showing results for tags 'நிக்சன்'.
-
புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில், நிலமட்டத்தோடு, சீமெந்தாலான குழாய் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது; இருபக்கத்திலும் முறையே நான்கு போடப்பட்டது. சில மீற்றர் தூரத்தில் சிங்களப் படையினர் காவலரண் அடித்து இருப்பான். இந்த ஒரு கல்லை - இவ்விடம் கண்டக்கற்கள் நிறைந்த பகுதியாகையால் - நாங்கள் நிலத்திலிருந்து வெட்டும்போது கொந்தாலி ஓசை கேட்டால் தலைக்கு மேலால் பகைவரின் சன்னம் கூவிச் செல்லும். எங்கள் மிகுதி சாப்பாட்டுக்கு காகம் வந்தாலும் இதே கதிதான். பதுங்ககழிகள் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் பாடசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டன. இந்த பதுங்ககழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள். ஒருமுறை யாழ்பாணத்திலிருந்த பரவலறியான பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள். மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள். அவர்களில் பிழையில்லை; அவர்கள் களமுனை வாழ்விற்கு பழக்கப்படாதவர்கள் என்பதோடு எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்களாவர். அங்கு காவலிற்கு நின்ற போராளிகள் மாணவர்களை சமாளித்து பார்த்தார்கள். அவர்களால் இயலவில்லை. எனவே பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் அறிவிக்கப்பட்டது. அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படுத்த முற்படும்போது சொன்னார், "தம்பியவை எங்கட போராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பாடு வந்திடும் பொறுங்கோ!". அவர் கூறியதைக் கேட்ட மாணவர்கள் சொன்னார்கள், "உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள்." என்று. பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார், "அது காலைச் சாப்பாடு" என்று. மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை! 1991ஆரம்ப பகுதியில் பதுங்ககழியின் பின்பகுதியால் வந்து சிங்களப் படைத்துறை கைப்பறியது. நேரடியாக அடித்து பிடிக்க முடியாது பிற்பகுதியால் சுற்றிவளைத்தபோது பதுங்ககழியில் இருந்த போராளிகளை பின்வாங்கச்சொல்லி பிரிகேடியர் பானு அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் பின்வாங்கினர். தகவல் வழங்குநர்: "நிக்சன்" (இவர் பதிந்திருந்த யூரியூப் கருத்தை, அவரது முதல் தர அனுபவமாகையால், இங்கே வரலாற்று ஆவணக் காப்பிற்காக பதிவாக மாற்றி இடுகிறேன்). தொகுப்பு & வெளியீடு: நன்னிச் சோழன்