சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
முருகானந்தன் தவம்
இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை,
அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது .
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முந்தைய பாராளுமன்றத்தில் பணியாற்றிய பாராளுமன்ற ஊழியர்களில் பெரும்பாலோர் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை.
இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான சிறீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறீதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களைப் பராமரித்து வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.
இந்த முறைப்பாட்டாளர் ரணில் விக்ரமசிங்கவின் தீவிர ஆதரவாளர். அவர் முன்னாள் சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்களின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு பல முறைப்பாடுகளை செய்துள்ளவர்.
ஆனால் ‘’எனக்கு முகம் தெரியாத சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிதிக்கேற்ற புலனாய்வு பிரிவில் சொத்துக் குவிப்பு சம்பந்தமாக என் மீது முறைப்பாடு செய்திருக்கிறார். இந்த விடயத்தை நல்லதொரு விடயமாகவே நான் பார்க்கிறேன்.
என்னுடைய பெயரிலேயோ அல்லது என்னுடைய குடும்பத்தினரின் பெயரிலேயோ இலங்கைக்குள்ளோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ சொத்துக்கள் இருந்தால் அது தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவினர் கண்டுபிடித்து,
அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவது அவர்களது தார்மீக கடமை என தெரிவித்திருக்கும் சிறீதரன், என் மீதான இந்த அவதூறான செயற்பாட்டுக்குப் பின்னால் தமிழரசு கட்சியின் தலைமை பதவி தொடர்பில் எனக்கெதிராக நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்கும் தரப்பினரே இருப்பதாகவும் , தமிழரசு கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது
என்னோடு சேர்ந்திருந்து எனது கைகளைத் தூக்கி, என்னோடு இணைந்து செயற்படுவதாகக் கூறியவர்களே ,கட்சியில் இணைந்து 6 மாதங்களே ஆகாதவர்களை வைத்துக்கொண்டு, பின்னணியில் இருந்து கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்காலத் தடையைப் பெற்றிருந்தார்கள்.
அந்த அடிப்படையில், இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் பின்னால் கட்சியின் தலைமைப்பதவி தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, நிதி குற்றப் புலனாய்வு பிரிவை நம்பி என்மீது சொத்துக் குவிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்திருக்கும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சஞ்சே மகாவத்த என்ற நபருடைய முறைப்பாட்டை ஏற்று உரிய விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அவசியம் .
என்னிடம் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அதனை உறுதிப்படுத்தவேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. வருடாந்தம் என்னுடைய சொத்து விபரங்களைப் பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பதோடு, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற பிரிவுக்கும் கையளித்து வருகிறேன்.
இணையத்தளங்களில் அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் என்னுடைய சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. என்னுடைய சொத்து விபரங்கள் என்பது வெளிப்படையானது.
இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவனாக என்னுடைய சொத்து விபரங்களை வெளிப்படையாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணையத்தளத்தினூடாக வெளியிட்டு வருகிறேன். அதனை எவரும் பார்க்கமுடியும்.
ஆகவே, என் மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைப்பாட்டை ஏற்று விரைவாக விசாரணைகளை ஆரம்பித்து உண்மையைக் கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையை நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
சிறீதரன் மீதான இந்த சட்ட விரோத சொத்துக்குவிப்பு முறைப்பாட்டின் பின்னணியில், அவரது தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைகள் சம்பந்தப்பட்டிருப்பது உள் வீட்டுத் தகவல்களாகக் கசிந்துள்ளது. இதற்கு சிறீதரன் எம்.பியை தமிழரசுக் கட்சியிலிருந்து மட்டுமல்லாது எம்.பி. பதவியிலிருந்தும் அகற்றுவதே இந்த தலைகளின் திட்டமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தலைமைக்கு சிறீதரன் கட்டுப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துத் தோற்றவர்கள், சிறீதரன் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி தோற்றவர்கள் தற்போது சிங்களத்தரப்போடு சேர்ந்து சிறீதரன் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், கட்சி நடவடிக்கையாக சிறீதரன் மீது கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமை குற்றச்சாட்டுடன் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டையும் முன் வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதே இவர்களின் திட்டம்.
தமிழரசுக் கட்சியின் இந்த பெரிய தலைகளுக்கு சிறீதரன் மீது ஏன் இந்த வன்மம் என் று பார்த்தால் அது சிறீதரன் மீதான வன்மம் அல்ல அவரின் எம்.பி. பதவி மீதான மோகமே காரணம் என உள்வீட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழரசின் தலைவர் பதவியிலும் பாராளுமன்ற எம்.பி. பதவியிலும் சிறீதரனிடம் தோற்றவர்களினால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.
அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் ‘’மக்களினால் தெரிவு செய்யப்பட்டால் மட்டுமே பாராளுமன்றம் செல்வோம் .தேசியப்பட்டியல் மூலம் ஒருபோதும் பாராளுமன்றம் செல்ல மாட்டோம் ‘’ என தெரியாத்தனமாக சூளுரைத்துவிட்ட நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தோற்று இன்று தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமுடியாத நிலை.
அதனால்தான் சிறீதரனை ஏதோவொரு வழியில் கட்சியிலிருந்து வெளியேற்றினால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் .அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் சிறீதரனுக்கு அடுத்ததாக வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில், பாராளுமன்றம் செல்லமுடியும் என்ற திட்டத்தில் சிறீதரனின் எம்.பி. பதவி மீது இலக்கு வைத்தே இவ்வாறு தொடர்ந்தும் சிறீதரனை வீழ்த்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்கின்றது அந்த உள்வீட்டுத்தகவல்.
சிறீதரனின் எம்.பி.பதவிக்கு எவ்வேளையும் ஆபத்து ஏற்படலாம் என்பதனை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அளித்துள்ள விளக்கமொன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.அந்த விளக்கத்தில் சுமந்திரன் பின்வருமாறு கூறுகின்றார்.
கட்சியின் ஒழுக்கக் கோவையுடன் இணைந்து செயற்பட முடியாதவர்கள் தாராளமாக வெளியே போகலாம்.கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு மாறாக, செயற்படுவதனை எந்த மானமுள்ள அரசியல் கட்சியும் அனுமதிக்காது. கட்சிக்குள் இருந்து கொண்டு பலவிதமான கேள்விகளை எழுப்பலாம் கருத்துரைக்கலாம்.
கட்சி செய்வது தவறு என்று கூறலாம். இவை செவிமடுக்கப்படும். ஆனால், இறுதியில் ஒரு தீர்மானத்தைக் கட்சி எடுத்தால் அந்த தீர்மானத்திற்கு ஆதரவில்லாமல் பேசியவர்கூட கட்சியின் தீர்மானத்தோடு சேர்ந்து நிற்க வேண்டும்.
வெளியே போய் நின்று கொண்டு நான் இதனை எதிர்த்தேன். எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என சொல்வது முறையற்ற செயற்பாடு. கட்சி கட்டுப்பாட்டோடு இயங்காது விட்டால், அது ஒரு கட்சி அல்ல.
கட்சி ஒரு கொள்கையை அறிவித்தால் இல்லை அதனை நான் ஏற்கமாட்டேன் என்றால், அவர் வேறு கட்சிக்குப்போக வேண்டும். இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இந்த விடயத்தில் எமது மத்தியக் குழுவும் செயற்குழுவும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்சியின் தீர்மானம். கொள்கைக்கு மாறாக, செயற்படுபவர்களுக்கு எதிராக கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
அவர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்ட ரீதியாகக்கூட நிவாரணம் எதுவும் கிடைக்காது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
எனவே, கட்சி ஒழுக்கக் கட்டுப்பாடு காரணமாக நடவடிக்கை எடுக்கும்போது, எந்த நீதிமன்றமும் அதில் தலையிடாது. ஆகவே, எதையும் செய்து விட்டு கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கு நான் இணங்க மாட்டேன்.
இது என்னுடைய சுதந்திரம், நான் இன்னொரு வேட்பாளரை ஆதரிப்பேன் என்று சொல்லி நடப்பவர் கள் விரைவில் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஆனால், வழக்கம் போலவே சிறீதரனின் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படாமை, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறீதரனிடம் தோற்றதுபோலவே இந்த சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டிலும் இந்த பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலையே உள்ளது.
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெரிய-தலைகள்-தோற்றுப்போகும்-நிலை/91-362524