புதிய பதிவுகள்2

மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி 222 ஆண்டுகள் நிறைவு - விசேட பெயர்ப்பலகை திரைநீக்கம்

2 months ago
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி அழித்த... அந்தக் கோட்டையின் எஞ்சிய பகுதிகள் மேலும் சேதம் அடையாமல் இருக்க நிழற்குடை அமைத்தது பாராட்டுக்குரிய விடயம். நல்லூரில் உள்ள சங்கிலியன் தோப்பு நுழைவாயில்.... மழையிலும், வெய்யிலிலும் பாதிக்கப் பட்டுக் கொண்டு உள்ளதை கவனிக்க யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகத்திற்கு அக்கறை இல்லை. கோவில்களுக்கும், தென்னிந்திய இசை கலைஞர்களுக்கும் தேவையில்லாத செலவு செய்வார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலியன் தோப்பை பாதுக்காக்க வேண்டும் என்ற அக்கறை ஒருவருக்கும் இல்லை.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த பிரமாண்ட காட்சிகளை நீக்கியது ஏன்? இயக்குநர் செல்வமணி பேட்டி

2 months ago
பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். 1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் செல்வமணி. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில், 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் பிரதான வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் பின்னணி இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான ஆக்‌ஷன் திரைப்படமாக இன்றளவிலும் பேசப்படும் 'கேப்டன் பிரபாகரன்' குறித்து சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம். மறுவெளியீடுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் 'கேப்டன் பிரபாகரன்' குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் ராவுத்தருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்தத் திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கு, தயாரிப்பாளர் ராவுத்தரும், நாயகன் விஜயகாந்தும், எனக்குக் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். ஆனால் ஆரம்பத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது படத்தின் வேலைகள் ஆரம்பமானவுடன், எனக்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை, படப்பிடிப்புக்கான இடங்களை இறுதி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கே இவ்வளவு நாட்களா என்று கேட்டார் தயாரிப்பாளர். வீரப்பன் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், படப்பிடிப்புக்குச் சரியான இடங்களைப் பார்க்கவும் இந்தக் கால நேரம் தேவை என்றேன். ஒப்புக் கொண்டார். ஒரு புதிய ஜீப் வாங்கிக் கொடுத்தார். அதன் ஓட்டுநர், என் உதவியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் என நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றோம். மனம் போன போக்கில், தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை வனப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தோம். நாங்கள் செல்லாத பாதையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அந்தப் பயணம். சில இடங்களுக்கு நடந்தும் சென்றோம். 'எமரால்ட் ஃபாரஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படத்தை, அமேசான் காடுகளில் படம் பிடித்திருப்பார்கள். அடர்த்தியான வனப் பகுதி, ஒரு மரத்தின் அடிப்பகுதியே 2 மீட்டர் அளவு இருக்கும் இடங்களிலெல்லாம் காட்சிகள் அமைந்திருந்தன. அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தில் தான், அதைப் போலவே ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் கேரளாவில் சாலக்குடிக்கு மேல் ஒரு இடம், அதிரப்பள்ளி, இடுக்கி பகுதிக்குக் கீழே ஒரு ஊர் எனப் பல இடங்களைக் கண்டறிந்தேன். அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முதலில் தயாரிப்பாளர் சரி என்று சொன்னார். பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT ஆனால் அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் இறந்து போனார்கள், வண்டி விபத்தில் ஒருவர் இறந்து போனார், குதிரை ஒன்று இறந்து போனது. இதெல்லாம் நல்ல சகுனங்கள் அல்ல என்று ராவுத்தர் நம்பினார். அவருடன் இருப்பவர்களும் அதை ஆமோதிக்க உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார். விஜயகாந்த், நாம் சென்னைக்கு சென்ற பிறகு அவரைப் பார்த்து சம்மதிக்க வைப்போம் என்று சொன்னதால், அனைவரும் புறப்பட்டோம். சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அது திரைப்படத்துக்கு மிக முக்கியமான இடம் என்று சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. அதனால் முண்டந்துறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து, அங்கு சென்றோம். என் அதிர்ஷ்டம், அங்கு ஓயாமல் அடைமழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்றாலும் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. படப்பிடிப்பு நிற்கவே கூடாது என்று நினைப்பார் விஜயகாந்த். எனவே அவரிடம் மெதுவாகச் சென்று, மீண்டும் கேரளா செல்லலாம் என்றேன். அவரும், இப்போது தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம், நாம் சென்றுவிடுவோம் என்று கூறவே, எல்லோரும் மீண்டும் கேரளா சென்றோம். தன் பேச்சை மீறி விஜயகாந்திடம் பேசிவிட்டு இப்படி நடந்ததால் ராவுத்தருக்கு என் மேல் சிறிய வருத்தம். சில நாட்கள் என்னோட பேசாமல் கூட இருந்தார். ஆனால் அந்த மன வருத்தம் எல்லாம் பிரசவ வலி போல தான். எங்கள் படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே. எனவே இந்தப் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 100வது திரைப்படம் ஓடாது என்ற சினிமா சென்டிமென்ட் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஸ்ரீ ராகவேந்திரா', கமல்ஹாசனின் 'ராஜ பார்வை' என அப்போது முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களின் 100வது திரைப்படங்களே ஓடவில்லை. இதனால் கேப்டனின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மீதும் ஒரு வகையில் அந்த அழுத்தம் இருந்தது. ஒரு இயக்குநரின் முதல் படம் ஹிட் ஆனால் 2வது படம் ஓடாது என்கிற ஒரு நம்பிக்கையும் துறையில் இருந்தது. இரண்டும் சேர்ந்து எனக்கு லேசான அச்சத்தைத் தந்தன. ஆனால் 'புலன் விசாரணை'யின் வெற்றியால், தயாரிப்பு தரப்பு, படக்குழு என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை, என் அச்சத்தைப் போக்கியது. படமும் வெற்றி பெற்றது. ராசியில்லாத நடிகையை நடிக்க வைக்கலாமா? படத்தின் நடிகர்கள் தேர்வு என்று வரும்போது பெரும்பாலும் ஆண் நடிகர்களே இருந்தனர். ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினேன். அதில் நடிக்க யார் வந்தாலும் முக்கியமான நிபந்தனை, 90 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்பதே. ஆரம்பத்தில் சரண்யா (பொன்வண்னன்) அவர்களை ஒப்பந்தம் செய்தோம். இரண்டு நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பும் நடந்தது. அவருக்கு அந்தச் சூழல் அவ்வளவு சவுகரியமாக இல்லை, மேலும் ஒரு உடை அணிவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு. ஒரு நாள் வயிறு வலி என்று கிளம்பிச் சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கும் போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகை. அவர் நடித்தால் படம் ஓடாது. ஏற்னவே 100வது படம் என்கிற சென்டிமென்ட் வேறு உங்களுக்கு இருக்கிறது. எனவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். இதனால் எங்கள் தரப்பிலும் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் என்று முதலில் கூறிவிட்டனர். ஆனால் எங்களுக்கோ உடனே படப்பிடிப்பில் நடிக்க ஒரு நடிகை வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு. இதனால் வேறு வழியே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம். அன்றைய சூழலில் ரம்யா கிருஷ்ணனுக்கு நடிக்க அந்தப் படம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, எங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS நாயகன் 35 நிமிடங்கள் வரை கதைக்குள் வராதது பற்றி... விஜயகாந்தின் அறிமுகமே படம் ஆரம்பித்த 34-35வது நிமிடத்தில் தான் வரும். அது எனக்குச் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் 100வது படம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரது ரசிகர்களுக்காகச் சில விஷயங்களைச் செய்யலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முதலில் நாங்கள் ஒரு பிரதி தயார் செய்திருந்தோம். அதன்படி, 50வது நிமிடத்தில் தான் நாயகன் கதாபாத்திரம் வருவார். சரத்குமார் கதாபாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருந்தாலும், வனவிலங்கு புகைப்படக் கலையிலும் ஆர்வமாக இருப்பார். அவர் காடுகளைச் சுற்றும்போது ஒரு அழகானப் பழங்குடியினப் பெண்ணைச் சந்திப்பார். அவரைப் பின் தொடர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து, நட்பாகி, இருவரும் காதலிப்பார்கள். இதனிடையே வில்லன் கதாபாத்திரத்தை அவர் தேடுவதும் இருக்கும். இதன் பின் வில்லனிடம் சரத்குமார் கதாபாத்திரம் சிக்குவது, இறப்பது, அவர் குடும்பம் சென்னை வருவது, விஜயகாந்தை சந்திப்பது எனக் கதை தொடரும். ஆனால் இந்த முதல் பிரதியின் நீளம் 23,500 அடி. அதாவது ஏறக்குறைய 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் திரைப்படம் இருக்கவே கூடாது என ராவுத்தர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே பல காட்சிகளை நீக்கி, தற்போது இருக்கும் நீளத்துக்கு படம் தொகுக்கப்பட்டது. இதில் 35வது நிமிடத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தின் அறிமுகம் நடக்கும். இதற்கு முன்னால் 'பாசமுள்ள பாண்டியரே...' பாடல் வரும்போது, படத்தின் டைட்டில் வரும்போது, சரத்குமாருக்கு ஆபத்து ஏற்படும்போது என 3 இடங்களில் நாயகன் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வர மாட்டார். இதற்குப் பிறகு நாயகனுக்கு சரியான அறிமுகக் காட்சி இல்லையென்றால் கண்டிப்பாக அது எனக்கு வினையாக முடியும். என்னால் திரையரங்குக்குள் நுழையவே முடியாது. ரசிகர்கள் விட மாட்டார்கள். ஆனால் நான் வைத்திருந்த காவல் நிலையும் தொடர்பான காட்சிகளும், நாயகனின் அறிமுகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாதியில் 5-6 காட்சிகளே விஜயகாந்த் வந்தாலும், படத்தின் பிரம்மாண்டம் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்தது. படத்தில் 7,000 அடி நீக்கப்பட்டது பற்றி... 23,500அடி திரைப்படத்தைக் குறைத்தோம் என்று குறிப்பிட்டேன் இல்லையா. இதில் சில முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளும் நீக்கப்பட்டன. விஜயகாந்த் கேப்டனாக இருக்க, அவர் தலைமையில் சில கமாண்டோக்களுடன், வில்லனை பிடிக்க காட்டுப் பகுதிக்கு வருவார்கள். வில்லனுக்கு தெரியாமல் வேறு வழியில் சுற்றி வந்து தாக்குவார்கள் என்பது போலவே கதை அமைத்திருந்தேன். இதில் கார் துரத்தல், 2-3 சண்டைக் காட்சிகள், வன விலங்கை இவர்கள் எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட 7,000 அடிக்கு பலவிதமான ஆக்‌ஷன் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்தேன். அந்த பிரமாண்டமான காட்சிகளே தனியாக ஒரு படம் போல இருக்கும். அதையெல்லாம் நீக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, இந்தக் காட்சிகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த திரைப்படத்தில் உதவும், நான் இயக்கவில்லை என்றால் கூட உங்களின் அடுத்த தயாரிப்பில் பயன்படுத்துங்கள், என் பெயர் கூட போட வேண்டாம் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதன் மதிப்பு தெரியாமல், பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். இன்று இருந்தாலும் அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம் என்பேன். ஏனென்றால் அப்போதே கோடிகளில் செலவு செய்து தான் எடுத்திருந்தோம். விஜயகாந்த் கொடுத்த ஊக்கம் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, விஜயகாந்துடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது அப்போது திருமணமாகி, குழந்தை இருக்கும் நாயகன் கதாபாத்திரம் என்பது அரிது. ஆனால் விஜயகாந்த் அந்த விஷயத்திலும் தயங்கவில்லை. ''புலன் விசாரணை' திரைப்படத்தில், வயது வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இது குறித்து சிலர் விமர்சனம் பேச, அப்போதே தயாரிப்பாளர், இந்தக் கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்த், அது வழக்கமானதாக இருக்கும், இதுவே கதைக்கு ஏற்றவாரு உணர்ச்சிகரமாக இருக்கும். மற்ற திரைப்படங்களில் இரண்டு நாயகிகள், பாடல்கள் எல்லாம் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தில் இப்படியே இருக்கட்டும் என்றார். அவருடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது, வழக்கமான நாயகியாக அல்லாமல், நாயகனின் மனைவி கதாபாத்திரம் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். அவரும் எதுவும் ஆட்சேபிக்கவில்லை. படப்பிடிப்பில் தொடர்ந்த ஆபத்துகள்... நான் ஏற்கனவே சொன்ன விபத்துகள் அல்லாமல், இந்தப் படப்பிடிப்பு முடியும் வரை பல்வேறு விதமான ஆபத்துகளை எங்களில் பலர் சந்தித்தோம். உயிருக்கே ஆபத்தான சூழல்களையும் எதிர்கொண்டோம். காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்த் 2-3 முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்தார். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென அணை திறக்கப்பட்டது. அது எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரின் நிறம் மாறியது. ஒருவர் தூரத்திலிருந்து நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பைப் பார்த்துக் கத்துகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அவசரஅவசரமாக எங்களிடம் ஓடி வந்து, அணை திறக்கப்பட்டுள்ளது. உடனே புறப்படுங்கள் என்று எச்சரித்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். கிரேனிலிருந்து கேமராவை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக எங்களைச் சூழந்தது. வேகமாகக் கேமராவை கிரேனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினோம். ஆனால் அந்த நீரின் வேகத்தில் கிரேன் சில கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. அது வெறும் நீர்ப்பகுதி அல்ல. பல பாறைகள் நிறைந்த வழி. அடித்துச் செல்லப்பட்ட கிரேன், பாறைகளில் மோதி, வளைந்த நிலையில்தான் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் யாராவது மாட்டியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தெரியாத அளவுக்கு மேலும், கீழும் சம நிலை ஆகும் அளவுக்கு தண்ணீர் அளவு இருந்தது. கடைசி நீதிமன்றக் காட்சியை நீக்கத் தயாராக இருந்தோம் படத்தின் இறுதிக் காட்சியைப் படம்பிடிக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காலகட்டத்தில், 'பராசக்தி' படத்தில் வருவதைப் போல ஒரு நீளமான நீதிமன்றக் காட்சியை ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்தேன். வில்லனை நாயகன் கைது செய்ததும் கதை முடிந்தது போல ஆகிவிடுமே, அதன் பிறகு 2000 அடி நீளக் காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது. நாம் இதை தனி ரீலாக எடுத்து வைப்போம். மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றக் காட்சிகள் தேவையில்லை என்று தோன்றினால், அப்படியே நீக்கிவிடலாம். நீங்கள் வில்லனை தோற்கடிக்கும் இடத்திலேயே படம் முடிந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அங்கே முடித்துவிடலாம் என்று விஜயகாந்திடம் கூறினேன். முதல் பிரதியைப் பார்க்கும் போது கூட சந்தேகம் தொடர்ந்தது. ஆனால் முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். ஒவ்வொரு வசனமும் அனல் தெறித்தது. வீரப்பனைத் தாண்டி சமூகத்தில் எவ்வளவு குற்றவாளிகள் உள்ளனர் என்பது எனது சிறிய ஆய்வில் தெரிய வந்தது. பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு உண்டு என்பதை என்னிடம் பலர் அப்போது தெரிவித்தனர். அவற்றையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேச முடியாத நிலை. வசனமாக வைத்திருந்தேன். எதிர்காலத்தில் வீரப்பனைப் பிடித்தாலும் உயிருடன் பிடிக்க மாட்டார்கள் என்று நான் யூகித்தேன். பல ஆண்டுகள் கழித்து அதுதான் நடந்தது. எங்களது ஒட்டுமொத்த படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தந்த கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதுதான் இன்றும் 'கேப்டன் பிரபாகரன்' கொண்டாடப்படுவதன் காரணமும் கூட. இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பலர் எங்களைப் பார்த்து சந்தேகப்படும் போது கூட விஜயகாந்த அவர்கள் ஒரு வார்த்தை எங்களைக் கேள்வி கேட்டதில்லை. ராவுத்தரும், 'விஜயகாந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், கவலை வேண்டாம்' என்று உறுதுணையாக நின்றார். அவர்கள் இருவருக்கும் என்றென்றும் நான் கடமைபட்டவனாக இருப்பேன்". இவ்வாறு உணர்ச்சிபொங்க பேசி முடித்தார் ஆர்.கே.செல்வமணி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2eny4yy9d3o

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

2 months ago
உக்ரைனுக்கு இந்தக் கிழமை நல்ல சாத்து, சாத்தப்படும் என்று... அரசியல் ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். 😂

மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி 222 ஆண்டுகள் நிறைவு - விசேட பெயர்ப்பலகை திரைநீக்கம்

2 months ago
25 AUG, 2025 | 03:58 PM மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றிபெற்று, 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட பெயர்ப்பலகை இன்று (25) திரைநீக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரப்போர் நடத்திய பண்டாரவன்னியன் தலைமையிலான படைகளால் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று, மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பண்டாரவன்னியனின் வெற்றியை குறிக்கும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டையானது ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 1715ஆம் ஆண்டில் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது. பின்னர், பிரித்தானியரால் இக்கோட்டை 1795ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. அடுத்து, 1803 ஆகஸ்ட் 25ஆம் திகதி பண்டாரவன்னியனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டமை வரலாற்றுப் பதிவாகிறது. https://www.virakesari.lk/article/223329

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

2 months ago
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்ற உக்ரேன்-ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்றையதினம் உக்ரேனின் 34வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலேயே ரஷ்ய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். இத் தாக்குதலில் எவருக்கும் காணம் ஏற்படவில்லை ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது, உக்ரேன் டிரோன் தாக்குதல் காரணமாக கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவ

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொல்லை சட்ட ஆவணங்களில் சேர்க்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - விஜித்த ஹேரத்

2 months ago
முதலில் மலையக மக்களின் வாழ்வாதாரங்களை சீர் செய்யுங்கள்.வீட்டு வசதிகளை செய்து கொடுங்கள். அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை கொடுங்கள்.

“மலையக தமிழ் மக்கள்” என்ற சொல்லை சட்ட ஆவணங்களில் சேர்க்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - விஜித்த ஹேரத்

2 months ago
பச்சை இனவாதிகளின் கைகளில் அரசு. வட-கிழக்கைப் பிரிப்பதில் முன்னின்ற இனவாதிகளில் ஒருவரான இவர் ஈழத்தமிழரையும் மலையகத் தமிழரையும் வெவ்வேறான அடையாளப்படுத்தலுள் கொண்டு வருவதன் ஊடாகத் தமிழினத்தை மேலும் பலவீனப்படுத்தும் நயவஞ்சக நோக்கமாகும். மலையகத் தமிழர் என்ற அடையாளப்படுத்தல் தேவையாயின் ஏனைய தமிழர்களையும் இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று ஆவணங்களிற் குறிப்பிடவும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா? முன்பு இலங்கைத் தமிழர் என்ற பதம் பாவனையில் இருந்தது என்பதை இவர் அறியாதிருக்கமாட்டார்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
ரணில் கைது : நீதிமன்ற உத்தரவை மலினப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் - மக்கள் விடுதலை முன்னணி Published By: VISHNU 24 AUG, 2025 | 08:58 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் 'ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்றார்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாகவே ரணில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச நிதி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணையளிப்பதற்கு போதுமான காரணிகள் இல்லாததால் அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இன்று நீதிமன்றம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுபவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை கிடைத்திருந்தால் நீதிமன்றத்தை புகழ்வார்கள். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தவுடன் தேர்தல் காலத்தில் முட்டிமோதிக்கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களில் 99 சதவீதமானோர் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.தமது குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் தான் இவர்கள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.இவர்களின் கூட்டிணைவு எமக்கு சவாலல்ல, ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்' என்று கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் குரல் எழுப்பியவர்கள் தான் இன்று அவருக்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.நாட்டு மக்கள் முதலில் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். சிறு குற்றங்களுக்கு தண்டபணம் செலுத்த முடியாமல் எத்தனை பேர் இன்றும் சிறையில் உள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுப்படுத்த கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் அவரது ஆட்சியில் எவ்வாறு சட்டவாட்சி செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை மக்கள் ஆராய வேண்டும். அதிகாரத்தில் இருந்தவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்றால் சட்டத்தின் மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும். எவ்வாறு சட்டவாட்சியை உறுதிப்படுத்துவது. ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து நாளை கொழும்புக்கு ஒரு தரப்பினர் வருவதாக குறிப்பிடப்படுகிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நீதிமன்றத்தின் உத்தரவை சவாலுக்குட்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றார். https://www.virakesari.lk/article/223275

படகுகளை மீட்க கடல் வழியாக யாழ்.வந்துள்ள தமிழக கடற்தொழிலாளர்கள்

2 months ago
25 AUG, 2025 | 12:05 PM இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு கால பகுதிகளில், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்று, நீதிமன்றினால், படகுகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை மீண்டும் தமிழகம் எடுத்து செல்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டமையால், அது தொடர்பில் படகு உரிமையாளர்கள், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் தமது படகுகளை தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தனர். இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு கடந்த வாரம் படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர். அதனை அடுத்து, திங்கட்கிழமை (25) இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்தனர். அவர்களை இலங்கை - இந்திய கடல் எல்லையில் வைத்து , இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று, அங்கிருந்து அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லவுள்ளனர். அங்கு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு, அவற்றின் தரங்களை பரிசோதித்து, மீட்டு செல்ல கூடிய படகுகளை மீட்டு செல்லவும், ஏனைய படகுகளை மீட்பது தொடர்பில் ஆராயவுள்ளனர். குறித்த குழுவினர் மீண்டும் இராமேஸ்வரம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர், இலங்கை - இந்திய கடல் எல்லை வரையில் அழைத்து சென்று இந்திய கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223301

மண்டைத்தீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை - யாழ். மாவட்ட செயலர்

2 months ago
மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம் 25 AUG, 2025 | 09:41 AM மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்த அமைச்சர், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி, மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு, அலுவலகத்தை திறந்து வைத்து, கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார். பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து, நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன், சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார். மறுநாள் 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து, வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் தென்னை முக்கோண வலய செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். எமது அரசாங்கம் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தற்போது நாட்டின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதனால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/223286 இந்த மைதானம் வடமாகாணத்திற்குரியதாக இருப்பின் மாங்குளம் பகுதியில் அமைவதே பொருத்தமாகும்.

இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா

2 months ago
Published By: DIGITAL DESK 3 24 AUG, 2025 | 11:46 AM வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம் கடந்த வட கொரிய வீரர்கள் மீது செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கடந்து சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. வொஷிங்டனில் திங்கட்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திக்க உள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி, கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்தார். இருப்பினும், கிம்மின் சகோதரி லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை "மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை" என விவரித்தார். வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது நோக்கத்தை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார். ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளரையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என கூறியது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கு ஈடாக வட கொரியா ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து தென் கொரிய மூத்த அதிகாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர். https://www.virakesari.lk/article/223244

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months ago
ரணில் விக்கிரமசிங்க கைது சரியா, தவறா ஆராய போவதில்லை நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் - விமல் வீரவன்ச Published By: VISHNU 24 AUG, 2025 | 08:20 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொது சொத்து துஷ்பிரயோகம் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமை சரியா, தவறா என்பதை நாங்கள் ஆராய போவதில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை தோளில் சுமந்துக் கொண்டு செல்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்று உண்ணும் நிலைக்கு ஜனாதிபதி நாட்டை நிர்வகிக்கிறார். ஆளும் தரப்பினர் இழைக்கும் குற்றங்களுக்கு சட்டம் முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு சிந்தனைக்கு வருவதில்லை. பொது சொத்துக்கு முறைகேடு குற்றத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்தின் செயற்பாடுகள் பற்றி நாங்கள் பேச போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உத்தேகமளித்துக் கொண்டு ஜனநாயகவாதிகளை முடக்குவதற்கு முன்னெடுக்கும் அரசியலமைப்பு சர்வாதிகார செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/223274

"நீதியின் ஓலம்" கையொப்பப் போராட்டம் செம்மணியில் ஆரம்பம்!

2 months ago
தமிழ் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது Published By: VISHNU 24 AUG, 2025 | 08:17 PM தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது சனிக்கிழமை (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக மக்கள் கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (24) நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது . இக்கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்ட இந்துசமய குரு தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார். இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள், இளைஞர்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர். https://www.virakesari.lk/article/223273

ரணில் கைதுக்கு எதிராக ஓரணியில் 4 முன்னாள் ஜனாதிபதிகள் - இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?

2 months ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் முதல் தற்போது வரை எதிர்கட்சிகள் ஒன்றாக கூடி பல்வேறு வகையிலான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டது. இந்த சந்திப்பில் அரசியல் ரீதியில் பல்வேறு வகையில் கடந்த காலங்களில் பிளவுப்பட்டிருந்த பெரும்பாலான பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருந்தனர். இலங்கை வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்திருந்த வரலாறு காணப்படுகின்றன. எனினும், வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே கூட்டு எதிர்கட்சியாக களமிறங்க முயற்சிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராடிய தரப்பினர், இன்று ராஜபக்ஸ தரப்புடன் இணைந்தவாறு ஓரணி திரண்டுள்ளமை முக்கிய வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் நடாத்திய ஊடக சந்திப்பு பட மூலாதாரம், UNP MEDIA படக்குறிப்பு, இலங்கையில் பிளவுபட்டுக் கிடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன அரசியல் ரீதியில் பிளவுப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, விசேட ஊடக சந்திப்பொன்றை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான பல கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர். அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்து, இன்றைய தினம் இந்த ஊடக மாநாட்டை நடத்தியிருந்தன. பட மூலாதாரம், UNP MEDIA ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''எமது நாடு தற்போது செல்கின்ற பயணத்தில் நாட்டில் ஜனநாயகம் என்பது தொடர்பில் இன்று கேள்வி எழும்பியுள்ளது. ஜனநாயக சமூகத்தில் இருக்கின்ற அறிகுறிகள், சிறிது சிறிதாக அழிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் சவப் பெட்டியின் பலகைகளை ஒன்று சேர்க்கும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அரசியல்வாதி ஒருவர் சிறையில் இருக்காத பட்சத்தில், அந்த அரசியல் வாழ்க்கை முழுமையடையாது. எனினும், தற்போது எழுந்துள்ள நிலைமையானது மிகவும் பாரதூரமானது. ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்துக்கொள்வதற்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் செய்வோம்.'' என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஆதரவை, ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியுள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தினால் ஊடக சந்திப்பிற்கு வர முடியாத சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, விசேட அறிக்கையொன்றை ஊடக சந்திப்பிற்கு அனுப்பிய நிலையில், அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல வாசித்தார். அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வாறான செயற்பாடுகளுக்கு தான் எதிர்ப்பு வெளியிடுவதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிரிட்டன் விஜயம் தொடர்பில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவூட்டியிருந்தார். விக்ரமசிங்க அரசாங்க செலவில் பயணம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். ''வோல்வஹம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பில் சில தெளிவின்மை காணப்படுகின்றது. இந்த இடத்தில் இரண்டு சம்பவங்கள் காணப்படுகின்றன. ஒன்று தான் விருந்துபசாரம். விருந்துபசாரமானது வோல்வஹம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை 25 வருடங்கள் தொடர்ச்சியாக வகித்த ஸ்வராஜ் பால் ஆண்டகையை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிலிட்ஸ் இந்தியா ஊடகத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி என்ற முறையில் இதில் கலந்துக்கொண்டார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. '' என்று ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார். மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டார். ''ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கை தொடர்பில் இணக்கம் இருக்க முடியும். இல்லாதிருக்கவும் முடியும். அது தொடர்பில் நாங்கள் இந்த இடத்தில் பேச வரவில்லை. 6 மாதத்தில் நாட்டை சீர்செய்வதாக பொய் கூறி அதிகாரத்தை கைப்பற்றிய அரசாங்கத்தினால், தற்போது ஒன்றுமே செய்துக்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்துக்கொள்ளும் போது தனது எதிர் தரப்பை அடக்குமுறைக்கு உட்படுத்தி, தமது அதிகார இருப்பை தக்க வைத்துக்கொள்ள அந்த தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த நடவடிக்கையை எமது கட்சி வன்மையை கண்டிக்கின்றது. தமது அரச இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக எதிர் அணியினரை அடக்குமுறைக்கு உட்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றார். "விசாரிக்க வேறு காரணங்கள் இருக்கின்றன" இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கருத்து வெளியிட்டார். ''இன்று கூட்டு எதிர்கட்சிகளாக ஒன்று சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமகாலத்தில் பட்டலந்த வதை முகாம் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. மத்திய வங்கி ஊழல் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இவற்றை எல்லாம் மக்கள் முன்னால் வைத்து நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி தான் இன்று அநுர குமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதை செய்யுங்கள். அதை செய்வீர்களேயானால், நான் நினைக்கின்றேன். இன்று கூடியிருக்கின்ற இந்த எதிர்கட்சிகள் இவ்வாறான ஊடக சந்திப்பை செய்ய வேண்டிய தேவையில்லை. அதற்கான அவசியம் வந்திருக்காது. ஏனென்றால், ரணில் விக்ரமசிங்க மீது இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்திய கட்சிகளில் பெரும்பாலானோர் இங்கும் இருக்கின்றார்கள். பிரச்னையில்லை. ஆனால் இதுவென்ன. நாட்டில் ஒரு விவாதம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி பதவி எங்கே முடிகின்றது. தனிப்பட்ட செயற்பாடு எங்கே ஆரம்பிக்கின்றது என்ற அந்த விவாதம் நடக்கின்றது. வெள்ளிகிழமையில் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, மின்சாரத்தை துண்டித்ததை நாம் அவதானித்தோம். விளையாட வேண்டாம் என நண்பர் அநுர குமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன். பிரிட்டனில் செலவிட்ட பணத்தை மீள செலுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கலாம். மீள் செலுத்தும் முறையொன்று நாட்டில் உள்ளது. ஒன்று செலுத்துவார், அல்லது முடியாது என கூறுவார். அதன்பின்னர் நீதிமன்றம் சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாது, இழுத்துக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனாலேயே எதிர்கட்சியாகிய நாம் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.'' என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒன்றிணைவு இலங்கையின் 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டி.எம்.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிறைவேற்று ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்ததுடன், தற்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அரசியல் பேதங்களினால் பிரிந்திருந்த அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் இன்று ஒரு இடத்திற்கு வருகைத் தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து, தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளியிட முயற்சித்து வருகின்றனர். ரணில் விக்ரமசிங்க ஏன் கைது செய்யப்பட்டார்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை வரும் 26ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து அதிகாரபூர்வ விஜயமாக கியூபா சென்ற அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து அமெரிக்கா நோக்கி பயணித்திருந்தார். அதிகாரபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக பிரிட்டனுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக செலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்திருந்தார். இதன்படி, இந்த பிரிட்டன் விஜயத்திற்காக ரணில் விக்ரமசிங்க 166 லட்சம் இலங்கை ரூபாவை அரச நிதியிலிருந்து செலவிட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது மனைவியான மைத்திரி விக்ரமசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ரா பெரேரா, மருத்துவர் ஒருவர் மற்றும் 10 போலீஸ் அதிகாரிகள் இந்த விஜயத்தில் அடங்கியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார். ஒன்றரை நாள் விஜயத்தின் போது வாகனத்திற்காக 4,475,160 ரூபாவும், வாகனத்திற்காக முற்கொடுப்பனவாக 14 லட்சம் ரூபாவும், உணவு மற்றும் குடிபானத்திற்காக 13 லட்சத்திற்கும் அதிக பணமும், ஹோட்டல் வசதிகளுக்காக 34 லட்சம் ரூபாவும், விமான நிலைய விசேட பிரமுகர் பிரிவிற்காக 6000 பிரிட்டன் பவுண்டும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செலவிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்திருந்தார். அத்துடன், இந்த விஜயத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்காக போலீஸ் திணைக்களம் 3,274,301 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட சென்ரா பெராராவிற்கு 39,000 ரூபாவை வழங்கியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் நாடு பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் அரச நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தனிப்பட்ட விஜயத்திற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தவறான செயற்பாடு என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் 26ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ரணிலின் உடல் நிலை எப்படி இருக்கின்றது? நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிக இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரமும் விசேட மருத்துவ குழுவினரால் ரணில் விக்ரமசிங்க கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார். '' முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தற்போது நான் பார்வையிட்டேன். அவரின் உடல் நிலைமை ஓரிரு தினங்களில் வழமைக்கு வரக்கூடும். சரியாக சிகிச்சைகள் வழங்காத பட்சத்தில் நோய் அறிகுறிகள் மேலும் அதிகரிக்கக்கூடும். உடலில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன. 3 நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவரை விசேட மருத்துவ குழாம் பார்த்துக்கொள்கின்றது. அதிதீவிர சிகிச்சை பிரிவிலுள்ள ஒருவருக்கு நீதிமன்றத்திற்கு வருகைத் தர முடியாது. அன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மணிநேரத்திற்கு மேல் அவர் காத்திருந்திருக்கின்றார். அன்று மின்சாரமும் இருக்கவில்லை. தண்ணீர் கூட அருந்தியிருக்க மாட்டார் போல தெரிகின்றது. அதனால், உடலில் சில நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அதிக உஷ்ண நிலைமை போன்றதொரு காரணம் என கூற முடியும். அவரை நாங்கள் சரியாக பார்த்துக்கொண்டால், ஓரி இரு தினங்களில் வழமை நிலைமைக்கு திரும்புவார். அவ்வாறு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை வழங்கப்படாத பட்சத்தில், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.'' என மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ரூக்ஷான் பெல்லன தெரிவிக்கின்றார். அரசாங்கத்தின் பதில் பட மூலாதாரம், NALINTHA JAYATHISSA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தலையிடவில்லை என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகளில் தமது அரசாங்கம் எந்தவிதத்திலும் தலையீடு செய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார். ''குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெரிவித்திருந்தது. அதன்படி, நீதிமன்றம் தீர்மானமொன்றை எடுத்தது. நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை பேணப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசாரணைகள் மற்றும் நீதிமன்றம் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டு பிரஜையொருவருக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கை இதனூடாக அதிகரித்துள்ளது. எந்தவொரு நபருக்கும் நாட்டின் நீதித்துறை பொதுவானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் அதனை கருதுகின்றேன்.'' என அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gzy3743k8o
Checked
Sat, 10/25/2025 - 22:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed