ஊர்ப்புதினம்

சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...

3 days 13 hours ago

தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது.

எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.

மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும் கருத்து தெரிவித்த அவர்...

 

https://tamilwin.com/article/controversy-over-the-national-list-of-tna-1731866604

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!

3 days 20 hours ago

image

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின் அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்ட நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மன வலிமையோடு எமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்க நினைத்திருந்த மக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முனனெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிபடுத்த வேண்டிய கட்டாய கடமை கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானாந்தா அலைகள் அடித்தாலும், கார்முகில்கள் சூழ்ந்தாலும் எமது கடும் பயணம் ஒருபோதும் நிற்பதில்லை என்றும் எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199017

மட்டக்குளியில் ஆவா கும்பலைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் கைது

3 days 20 hours ago

image

மட்டக்குளிய பிரதேசத்தில் 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிபட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

மேற்படி 'ஆவா' கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு 'டிக் டாக்' மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரையும் பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசி அலசலில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/199015

மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : அரசிடம் தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை

3 days 20 hours ago
image
 

மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. 

இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : 

பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும் அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் உட்பட  நாட்டின் சகல பிராந்தியங்களையும் தழுவியதாக அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் பரந்தளவிலான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாக அமைகிறது. 

ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன, மத பிளவுகளை இணைத்திருப்பதன்  ஒரு  அறிகுறியாக இதை தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது. 

முன்னென்றும் இல்லாத வகையிலான இந்த நல்லெண்ணத்தின் பின்புலத்தில், நாட்டின் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தேசிய சமாதானப் பேரவை கேட்டுக்கொள்கிறது.

தேசிய மக்கள் சக்தி உண்மையான ஒரு தேசிய நோக்கையும் அணுகுமுறையையும் அடைந்திருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த அம்சத்தை நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதன் மூலமாக வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு சொந்தமான நிலங்களை திருப்பிக் கையளிப்பது,  அதிகாரங்களை பகிர்வது, பரவலாக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமய நீக்கத்தைச் செய்வது,  காணாமல்போனவர்களினதும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களினதும் விவகாரங்களை கையாள்வது என்று பல்வேறு பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன.

நாட்டின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தில் அரசாங்கம் பிரவேசிக்கும் நிலையில், பொருளாதாரச் சவால்களை கையாள்வதுடன் சகல குடிமக்களுக்குமான நீதியையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடைவதில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும்  என்று தேசிய சமாதானப் பேரவை விரும்புகிறது.

நிலைபேறான ஒரு அரசியல் தீர்வுக்கு சிவில் சமூகத்தின் பங்கேற்பும் சகல சமூகங்களினதும் இணக்கமும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பரந்தளவு ஆதரவுடனான அத்தகைய ஒரு தீர்வு நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவிருக்கும் சந்ததிகளுக்கு உறுதிசெய்யும்.

https://www.virakesari.lk/article/199004

500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்

3 days 20 hours ago

20190930_661disaster_09.jpg

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

20190930_661disaster_06.jpg

https://globaltamilnews.net/2024/208356/

தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டும்

3 days 20 hours ago

manivannan.jpg

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இடதுசாரிகளுக்கு என பண்பியல்வு இருக்கிறது. அவர்கள் தமக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றி தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருப்பார்கள்.  இதனை உணர்ந்து கொண்டு தமிழர்தரப்பு ஒற்றைமைப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்து விட்டு, எங்கள் மீது திணிக்கப்பட போகும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட போகும் என்பதனை உணர்ந்து கொண்டும், உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அவற்றினை தமிழர் தரப்பு பறிக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதனை உணர்ந்து தமிழர் தரப்புக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். இதனை நாம் அழைப்பாக கூட விடுகின்றோம்.

தேர்தலில் தோற்றுபோனவன் என   பலர்  எள்ளி நகையாடலாம். அவ்வாறில்லாமல் தமிழ் தலைமைகள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிளவுபட்ட தமிழர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பவில்லை.

கூட்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என கூறவில்லை. ஆசன மோதல்களை கைவிட்டு தமிழ் தரப்பு ஒன்றிணைய வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் என தமிழ் வாக்களர்களை மலினப்படுத்த விரும்பவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும். பொதுக்கட்டமைப்பின் உடைவுக்கு, பொது அமைப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் உடைத்தார்கள். அதனை தொடர்ந்து கட்சி தலைவர்களின் ஈகோ மற்றும் ஆசன பங்கீடும் காரணமாக அமைந்திருந்தது என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2024/208342/

அனைவரையும் அரவணைத்துச்செல்ல தயாராக இருக்கிறோம் - சிறிதரன்!

3 days 20 hours ago

image

எமது நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைத்து தரப்பையும் அரவணைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சில கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களையும் கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுத்தோம். இந்த பிரதேசத்தில் வேறுவகையான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவதையும் கருத்தில் கொண்டே ஒரு ஒத்த முடிவிற்கு வந்துள்ளோம். 

அத்துடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதில் அதிக கரிசனையும் விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது. 

எனது தேர்தல் பிரச்சாரங்களிலும் கூட அந்த ஆணையை வழங்குமாறு மக்களிடம் கேட்டிருக்கிறேன்.  எனவே நாங்கள் ஒன்றாக பலமாக இணைந்து செல்லவேண்டிய தேவையை உணர்ந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம்.

நான் தமிழரசுக்கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர். நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன்.  அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/199019

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்..!

4 days ago

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

 

 

பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்

இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்..! | Sumanthran Refused Buy Charge Sheet Sivamohan

குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச்சென்றார்.

குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவு

இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்… தோற்றவர்கள், நாடாளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது.

முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது.

சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்..! | Sumanthran Refused Buy Charge Sheet Sivamohan

அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும்.

நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும்.

தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்.

https://tamilwin.com/article/sumanthran-refused-buy-charge-sheet-sivamohan-1731834495

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா

4 days ago

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நாட்டு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் முன்வைப்பது மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை மக்கள் அனுமதியுடன் நிறைவேற்றுவோம். ஆனால், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது என்பது சவால் மிக்கதொரு பணி என்பது எமக்கு தெரியும். எனினும் அதனை வெற்றிகரமாக செய்து முடிப்போம். அதே போன்று தேசிய மக்கள் சக்தியிக் தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இரண்டு  முக்கிய நோக்கங்களுக்காகவே ஐரோப்பாவில் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்கள் மீது ஒரு அரசின் அதிகாரத்தை (அரசியலமைப்பு கட்டுப்பாடுகள்) கட்டுப்படுத்தவும், சமத்துவத்துக்கான முழுமையான உத்தரவாதங்களை வழங்குவதன் மூலம் பெரும்பான்மையினரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கங்களே அவையாகும்.

எவ்வாறாயினும், இலங்கையில்  நிறைவேற்றப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அரச இயந்திரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை அதிகரித்ததன் மூலம் நேர்மறையான விடயங்களே இடம்பெற்றுள்ளன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளில் அமைச்சர்களின் தன்னிச்சையான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

https://www.virakesari.lk/article/198978

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

4 days 2 hours ago

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

November 17, 2024  02:45 pm

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17)  காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற் குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196026

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பம்!

4 days 3 hours ago
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல் ஆரம்பம்!

10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் குறித்த நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

https://athavannews.com/2024/1408793

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

4 days 3 hours ago
தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்! தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும்.

அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

சமன்மலி குணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 59,657 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளதோடு, அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டத்தில் 58,201 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹெச்சிகே 131,375 வாக்குகளுடனும், ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டத்தில் 69,232 வாக்குகளுடனும், சரோஜா போல்ராஜ்-  மாத்தறை மாவட்டத்தில் 148,379 வாக்குகளுடனும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டத்தில் 48,791 வாக்குகளையும், சாகரிகா அதாவுத – கேகாலை மாவட்டத்தில் 59,019 வாக்குகளையும் ஹிருணி விஜேசிங்க – புத்தளம் மாவட்டத்தில் 44,057 வாக்குகளையும் கௌசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டத்தில் 80,814 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தி சார்பாக சதுரி கங்கானி மொனராகலை மாவட்டத்தில் 42,930 வாக்குகளையும், துஷாரி ஜயசிங்க கண்டி மாவட்டத்தில் 58,223 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, ஹஸார லியனகே காலி மாவட்டத்தில் 82,058 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றுக்குள் பிரவேசிக்கவுள்ளனர்.

அத்தோடு, மாத்தளை மாவட்டத்தில் 47,482 தீப்தி வாசலகே, குருநாகல் மாவட்டத்தில் 84,414 வாக்குகளுடன் குமாரி ஹேரத், கம்பஹா மாவட்டத்தில் 66,737 வாக்குகளைப் பெற்று ஹேமாலி சுஜீவா ஆகியோர் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாத்தளை மாவட்டத்தில் 27,845 வாக்குகளைப் பெற்ற ரோஹினி குமாரி விஜேரத்ன, கண்டி மாவட்டத்தில் 30780 வாக்குகளைப் பெற்ற சமிந்திரானி கிரியெல்ல ஆகியோரும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, அந்தந்த அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இருந்து மற்றுமொரு பெண்கள் குழுவும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1408807

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !

4 days 4 hours ago

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! mavai.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.
 

https://akkinikkunchu.com/?p=299504

ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! - சிவாஜிலிங்கம்

4 days 4 hours ago

ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! 1731761758-sivajilingam-2-780x470.jpg

ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.

தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார்.
 

 

https://akkinikkunchu.com/?p=299458

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் உண்மையெனில் மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும்! - பொன் சுதன்

4 days 4 hours ago

image

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு, மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி  பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில்  என்றுமில்லாதவாறு  தங்களிற்க்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும்.

எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/198954

ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

4 days 4 hours ago
ரில்வின் சில்வாவின் கருத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற ஆபத்தை தெளிவாக புலப்படுத்துகின்றது; ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்கமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (16) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த - தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதில் வரப்போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது வரப்போகின்ற முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும்  இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் சொல்லியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டுக்கு இத்தனை வருடங்களாக தமிழ் மக்கள் ஆணை வழங்கி வந்திருக்கின்ற நிலையில் அந்த ஆணையை இனவாதம் என்று சொல்லி கொச்சைப்படுத்துகின்ற வகையில் ரில்வின் சில்வா பேசியுள்ளார்.

உண்மையில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து வந்திருக்கின்ற நிலையில் அந்தத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை இனவாத நிலைப்பாடாக கொச்சைப்படுத்தி இன்றைக்குத் தேர்தல் முறையில் உள்ள ஒரு சில முறைகளால் எண்ணிக்கையில் ஒரு சில ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற என்று சொல்கின்ற கருத்துக்கள் எந்தளவுக்கு ஆபத்து என்பதை எமது மக்கள் உணர வேண்டும்.

அந்த வகையில்தான் தேர்தல் காலத்திலும் நாம் எமது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தோம். அதாவது இந்த அரசு தேர்தல் முடிந்த கையோடு 2015 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி அரசமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று சொன்னோம்.

அந்த ஒற்றையாட்சி ஏக்கிய ராஜ்ஜியவை நிராகரித்து எங்களுடைய மக்களின் ஆணையைக் காட்டி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுப்போம் என்ற கருத்தைத்தான் நாங்கள் சொல்லியிருந்தோம்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வினை எட்டுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

அந்தச் செயற்பாடுகளோடு ஒத்துப்போவதற்குத் தயாராக இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் செயற்பட நாங்கள் தயாராகவும் இருக்கின்றோம். விசேடமாக ஒற்றையாட்சி அரசமைப்பின் ஏக்கிய ராஜ்ஜிய என்ற இடைக்கால அறிக்கையை வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகம் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமைதியான முறையிலும் ஐனநாயக முறையிலும் வெளிப்படுத்துவதற்கும் அதனைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் வெளிப்படுத்தி எங்களது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அந்த நிலைப்பாட்டோடு ஒன்றிணைந்து போவதற்கு இருக்கின்ற அனைத்து தரப்புகளோடும் இணைந்து இந்த விடயங்களைக் கையாளுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த விடயத்தில் எம்மோடு இணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு  அறைகூவலும் விடுக்கின்றோம்.  

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயத்தை தமிழ் மக்கள் நிராகரிப்பார்களாக இருந்தால் அதுவே அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதோடு தேசிய மக்கள் சக்தி அரசு ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி பாதையைக் கைவிட்டு சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தக்கூடிய புதிய மேடையொன்றை உருவாக்கும். அந்த நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

ஏனென்றால், இன்றைக்கு இலங்கை அரசு சர்வதேச மட்டத்திலும் பொருளாதார ரீதியாகவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை.

ஆனால், இலங்கையில் இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாத வரை அந்த உதவிகள் கிடைக்காது. ஆகவே அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நாங்கள் அந்த அழுத்தங்களை சரியான வகையில் கொடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில்தான் தமிழ்த் தேசியத்தோடு தாங்கள் பயணிக்கின்றதாக சொல்லக்கூடிய ஏனையவர்களோடும் சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, நல்லாட்சி காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டுவரப் போவதாகவும் இந்த நேரத்தில் தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாள்வார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்குக் கஜேந்திரகுமார் பதிலளிக்கையில்,

"அவர் கூறுகின்றதை போன்று இந்த அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற விடயமல்ல. இன்றைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவர் சார்ந்த தேசிய மக்கள் சக்தியும் ஒரு புதிய அரசமைப்பாக எண்ணியிருக்கின்ற வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

ஆகையினால் அந்த வரைபுக்கு எதிராக அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்பு முரணானது என்ற பலமான ஒரு செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபை தயாரிப்பதற்கும் அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப்போகின்றோம்.

அதற்குத் தமிழ் அரசுக் கட்சியாக இருக்கலாம் ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம் நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம். அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/198961

இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!

4 days 4 hours ago

இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, 155.2 மீற்றர் நீளம் கொண்ட, மொத்தம் 333 பணியாளர்களை கொண்ட ‘USS Michael Murphy’ என்ற Arleigh Burke class guided missile destroyer போர்க்கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகிறார்.

மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Michael Murphy' கப்பல் இன்று (17) நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196016

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு!

4 days 5 hours ago

image

2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி சென்றிருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர். 

IMG-20241116-WA0090.jpgIMG-20241116-WA0079.jpgIMG-20241116-WA0082.jpgIMG-20241116-WA0084.jpgIMG-20241116-WA0089.jpg

https://www.virakesari.lk/article/198956

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்!

4 days 5 hours ago

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196012

இன்று இலங்கை வரும் IMF குழு!

4 days 5 hours ago

இன்று இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196011

Checked
Thu, 11/21/2024 - 10:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr