தேசிய பிரச்சினைகளின் தீர்வுக்கு, அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடு அவசியம்
கலாநிதி ஜெகான் பெரேரா
நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது.
பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது.
ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக் கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை.
அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர். ஆனால், அவர் முன்னர் ஒருபோதும் கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு முன்னரான உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும் அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில் இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன் ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம்.
பிரதான பிரச்சினை
அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன.
கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம்.
ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள் சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை, புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு -- செலவு திட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.
நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு, இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும்.
சாத்தியமான பங்காளிகள்
அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம். அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில் 47 சதவீதமான வாக்குகளைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன.
நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது. அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள்.
ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம் தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள்.
அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.