ஊர்ப்புதினம்

சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

1 week 3 days ago
image

எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். 

எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகாரம் அற்றவை.

எனிலும் சிறிலங்காவினால் நடாத்தப்படுகின்ற தேர்தல்களையும், நாடாளுமன்றத்தினையும் தமிழீழ விடுதலைக்கான களங்களாக, கருவிகளாக கையாளவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. 

தற்போதைய சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால தேர்தல்முறை இல்லை. நாம் தேர்தல் முறையினை புத்திகூர்மையுடன் கையாள்வதன் மூலம் சிங்களபௌத்த பேரினவாதத்திற்கு நெருக்கடியினை ஏற்படுத்துவதன் மூலம் உலகின் கவனத்தினை நாம் ஈர்க்க முடியும்.

தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்பவர்கள் சிங்கள நாடாளுமன்றத்தினை எவ்வாறு தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்துவார்கள் என்பதனை முன்னரேயே மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

சிங்கள பேரினவாதம் முள்ளிவாய்க்கால் இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முயன்று வருகின்றது. 

எனவேதேசிய மக்கள் சக்தி தற்காலத்தில் முன்வைக்கும் தனிநபர் சமத்துவம், இலங்கையர்கள் என்ற கோட்பாடுகள் என்பன, கோத்தா முன்வைத்த கோட்பாடுகள். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட 15 ஆண்டுகளின் பின்னரும் சிங்கள பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை தொடர்ச்சியாக பேணி வருவதானது, தமிழ் மீதான அடக்குமுறைக்கு சான்றாக அமைகின்றது.

கூட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டாலே தனிநபர் உரிமைகளை அனுபவிற்பதற்கான சூழல் உருவாகும். இன்று சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம் என்பது அரசியல் ஆய்வறிஞர் மு.திருநாவுக்கரசு கூறுவது போல், சின்ன மீனும் பெரிய மீனும் சமன் என்று கூறாலம். 

ஆனால் யாதார்தத்தில் பெரிய மீனே சின்ன மீனை விழுங்கும். சிங்கள பேரினவாதம் பேசும் சமத்துவம், இனங்களுக்கு இடையிலான சமத்துவம் அல்ல.

சிங்கள தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்காது நிராகரிப்பது தமிழர் நலன் நோக்குநிலில் இருந்து அவசியமானது உட்பட சிங்களத் தேசியக்  கட்சிகள் முன்வைக்கும் அரசியல் ஈழத் தமிழர் தேசத்தின் இருப்பை மறுதலிப்பதுடன், சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தலைமையேற்றுச் செய்யும் கட்சிகளாக இவை இருக்கின்றன் இருக்கப் போகின்றன. இத்தகைய சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பின், அது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானதாகும்.

மேலும் தமிழ்பிரதிநிதிகளாக செல்பவர்கள் தமிழீழ தேசியத்தினை பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் தேசம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணயம் போன்ற நிலைப்பாடுகளில் சொல்லிலும் செயலிலும் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

அரசியல், சமூக வாழ்வில் தூய்மையானவர்களாகவும், சமூக நீதி  வழி நின்று செயற்படுபவர்களாகவும், பெண்கள்,  இளையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுப் வகையிலும் ஈழத் தமிழ் மக்கள் அரசியற் பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும்.

ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுவாக்கெடுப்பு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையூடாக நீதி கோரல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் வாக்களிக்கும்போது கவனத்திற் கொள்ள  வேண்டியவை.

நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழர் தேசத்தின் அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் மேம்பாட்டுக்கு எத்தகைய செயற்திட்டத்தின் அடிப்படையில் இயங்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும்.

தேர்தல் அரசியலில் ஈடுபடாத, தமிழ்த் தேச வளர்ச்சிக்கு  செயற்படக்கூடிய தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. 

இத்தகையதொரு, தேசியப் பேரியக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் காலதாமதமின்றி ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/198396

பலமான எதிர்க்கட்சியும்; ஜேவிபியின் கட்டமைப்பு மாற்றமும்

1 week 3 days ago

பலமான எதிர்க்கட்சியும்; ஜேவிபியின் கட்டமைப்பு மாற்றமும் NPP-2.jpg

இலங்கையின் அரசியல் இலக்கு ஒன்றை நோக்கிய திசையில் செல்வதை தற்போது உணர முடிகின்றது.

கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசாங்கத்தை நடத்துவதற்கு தேவையான நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அவரது கட்சியும் சில விமர்சகர்களும் கூறுகின்றனர். முரண்பாட்டில் உடன்பாடாக இந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சில எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கூட இந்த அரசாங்கம் அதிக அதிகாரத்தைப் பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வெளிப்படுத்துகின்றனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்பித்துள்ள 8361 வேட்பாளர்களுள் 1000க்கும் குறைவான வேட்பாளர்கள் மாத்திரமே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இவ்வாறு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள பல வேட்பாளர்கள் பலமான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற தொனிப் பொருளில் பிரசாரம் செய்வதை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் கூட ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உறுதியளித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த தடையற்ற நாடாளுமன்ற அதிகாரம் அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் எந்த சிக்கல்களும் இல்லை. எனினும், நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சி மட்டும் இருக்கும் இடம் அல்ல.

இப் பின்னணியில்தான் ‘நாடாளுமன்றத்தை திசைகாட்டியால் நிரப்புவோம்’ என மேற்கொள்ளும் பிரசாரங்கள் அடிப்படை தன்மை அற்றவையாக பார்க்கப்படுகின்றன.

நாடாளுமன்றம் என்பது ஒரு தனித்துவமான விவாத மைதானமாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மாத்திரம் இருக்குமானால் அவ்வாறான அரசாங்கம் அதிகாரமிக்க சர்வாதிகார அரசாங்கமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தகைய அரசாங்கங்கள் நாட்டிற்கு அழிவுகரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமலுமில்லை.

எனவே, புதிய நாடாளுமன்றம் பற்றி சிந்திக்கும் போது பலமான எதிர்க்கட்சி பற்றி பேசுவதிலும் தவறுகள் எதுவும் இல்லை.

‘இது எதிர்க்கட்சி அல்ல, ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு’ என்ற தொனியில் பிரசாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டும் என கடந்த காலங்களில் கோஷங்கள் எழுப்பப்பட்ட போது கூட தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் கூட தங்களை ஆட்சி அமைக்க அழைத்தால், ஊழலற்ற ஏனைய கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கூட்டி, அமைச்சரவையை அமைத்து, ஆட்சி அமைப்போம் என, பலமுறை தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கூறினர்.

ஆக, ஒரு கூட்டுறவு அரசாங்கத்தை நடத்துங்கள் என்பதே மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றில் நான்காவது அதிகாரம் எதிர்க்கட்சி தலைவருக்கு உரியது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் உள்ள குழுக்களின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சியினரிடம் உள்ளது.

கடந்த காலங்களில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இத்தகைய குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளின் பிரதான பங்கு.

எனவே, அதிகாரப் பேராசை இல்லாவிட்டால், பலமான ஆட்சியைக் கட்டியெழுப்பவும், வலுவான எதிர்க்கட்சியைத் தக்கவைக்கவும் எங்களைப் போன்ற பொருத்தமானவர்களை எதிர்க்கட்சிக்குத் தெரிவு செய்யுங்கள் என்று தேசிய மக்கள் சக்தி பிரசாரம் செய்தால் அது அரசியல் அறமாக இருக்கும்.

எவ்வாறாயினும், பிரசாரம் செய்யும் வேட்பாளர்களும் அதனை புரிந்து பலமான ஒரு எதிர்க்கட்சியை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், இலங்கை நாடாளுமன்றத்திற்கு பலமான எதிர்க்கட்சி அத்தியாவசியம்!

அதேநேரம் தேசிய மக்கள் சக்தி தங்கள் அடிப்படை அமைப்பான ஜேவிபியின் கொள்கை மற்றும் கட்டமைப்பிலும் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இலங்கைத்தீவில் ”பன்மைத்துவ அரசு” என்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அது தமிழர்களின் சுயநிர்யண உரிமைக்கு வழி சமைக்கவும் வேண்டும்.

மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் எது என்பதிலும் அவதானம் தேவை.

ஜேவிபிவியின் ஆரம்பகால ”கொள்கை” ”கட்டமைப்பு” என்பது தற்போது இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மலையகத் தமிழர்கள் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை ஏற்றுக் கொண்டதாக இருக்கவில்லை.

தற்போது தேசிய மக்கள் சக்தி என்று மாற்றமடைந்திருந்தாலும் ஜேவிபியின் அடிப்படைக் கொள்கைகளில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லவும் முடியாது.

தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் பலமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் நிலையில் ஏனைய சமூகங்களின் அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேசிய மக்கள் சக்தியிடம் உருவாக வேண்டும்.

அரசியல் தூய்மைவாதம் பேசுவது போன்று அரசியல் அறத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

 

 

https://akkinikkunchu.com/?p=298803

தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்

1 week 3 days ago

தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல் shathivel.jpg

நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தை தமதாக்குவதற்கு முன்பே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக தேசிய அரசியலுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது.

அன்றைய ஆயுத யுத்த காலத்தில் சிங்கள பௌத்த இனப்படுகொலை ஆட்சியாளர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததை போன்று எம் மத்தியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.

இன்னும் பலர் திருவிழா கால வியாபாரிகள் போன்று உழைப்புக்காக சுயமாகவும் இறங்கி உள்ளனர். அவர்களோடு சேர்ந்து சுயநல சுக போக அரசியல்வாதிகளும் போலி தேசியம் பேசி வாக்கு வேட்டையாட முற்படுகின்றனர்.

இவர்களை வடக்கு கிழக்கு தமிழ் தேசிய பற்றாளர்கள் தமது வாக்கினால் வீழ்த்த வேண்டும். அதுவே மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்கதிரையில் அமரும் முன்பே “யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை நடக்கும்.

ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என்றார். அதிபர் பதவியில் அவர் அந்த பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்; முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பின்பற்றி “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51/1 தீர்மானத்தை ஏற்க மாட்டோம்” எனக் கூறினார். அவரே தற்போது “சமஸ்டி தீர்வுக்கு இடமே இல்லை” எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் “13 திருத்தமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு தேவை இல்லை.

பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வே அவசியம்” என்றார். இவை எல்லாம் தமிழர்களை அரசியல் போருக்கு அழைப்பதாகவே பொருள்கோடல் வேண்டும். இவற்றிற்கு எதிராக அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே எம் தேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

போதாக்குறைக்கு மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சரத் விஜேசேகர அவர்கள் “தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு சமஸ்டியை கொடுக்க போகின்றது அதற்கு இடமளிக்க மாட்டோம்” என கூறியிருப்பது அவருடைய அரசியல் அறியாமையும் வாக்கு வேட்டை காண பிரகடனமாகவே நாம் உணர்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் இன்றைய ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2015-2019 காலப்பகுதியில் நாடாளுமன்ற அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட வரைவின் அடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசித்திருப்போம் என கூறுகின்றார்.

அதில் ஏக்கிய ராஜ்ய(ஒற்றை ஆட்சி) ஆட்சியை அவர்களை வலியுறுத்தியதோடு வடகிழக்கு இணைய விடாது தடுப்பதற்கான முன் மொழிவையும் மக்கள் விடுதலை முன்னணி கொடுத்துள்ளது.தற்செயலாக தற்போதைய ஆட்சியாளர் காலத்தில் ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டாலும் நியமிக்கப்படும் ஆளுநர்கள் மூலம் அவர்களின் அதிகாரத்தை பாவித்து மகாணசபைகளை கட்டுப்படுத்தும் முன் மொழிவுகளையும் கொடுதுள்ளதோடு இவர்களால் பிரிக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைவதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் கொடுகப் போவதில்லை.

அதனாலேயே டில்வின் சில்வா வடக்கு மக்களுக்கு 13 தேவை இல்லை என்பது கிழக்கை பிரித்து விட்டே. என்கிறார்.இதுவே தமிழர்களின் அரசியலுக்கு எதிரான அவர்களின் அரசியல் மனநிலை.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தேசியத்தின் அரசியலுக்கு எதிரான புல்லுருவிகள் தமிழர் தேசம் என்றும் வியாபித்துள்ளனர். அவர்களை சரியான வகையில் நாம் அடையாளம் கண்டு களைதல் வேண்டும். அவர்களோடு தமிழ் தேசியம் பேசி பேசிய நாடாளுமன்றம் சென்றவர்கள் சுகபோகங்களை மட்டும் அனுபவித்து சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகளுக்கு துணைநின்று சர்வதேச ரீதியில் போர் குற்றங்களுக்கான விசாரணைகளையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்னொரு பக்கம் 13 அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் தற்போது தேர்தல் களத்திலே நிற்கின்றனர். தமிழர்களின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மிகவும் பயங்கரமானது. தெற்கின் பெரும் தேசிய வாதத்திற்கு எதிராகவும் எம் மத்தியிலே தோன்றியுள்ள எம் தேச அரசியலுக்கு எதிரான சக்திகளையும் நேரடியாக மோதி தோற்கடிக்க வேண்டிய நிலையிலே நாம் உள்ளோம்.

இம்முறை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு எதிரானவர்கள் புள்ளடியினால் தோற்கடிக்க வேண்டும். எமக்காக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க வல்லவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும்.

அத்தகைய பெரும் சக்தியாக அணி திரண்டு எமது எழுச்சியை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தி மாவீரர் மாவீரர்களுக்கு சுடரேற்றுவோம். அது தேசத்தின் ஒளியாகட்டும் சர்வதேசமெங்கும் வியாபிக்கட்டும். நாம் ஓர் அணியாக திரண்டு எதிர்கொள்ளும் போர் இறுதியானது.

இதுவரை நாட்டை ஆண்ட பேரினவாத சக்திகள் பேச்சு வார்த்தை என்றும் தீர்வு என்றும் ஏமாற்றினார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் மாற்றம் என மக்களை கவர்த்து நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்று ஊழலுக்கு எதிரான போரை ஒரு பக்கம் நடத்தி க்கொண்டு இன்னொரு பக்கம் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரையும் தொடுக்க உள்ள நிலையில் இதற்கு முகம் கொடுக்க எமது வாக்குகளை பயன்படுத்துவோம். எமது சக்தியை வெளிப்படுத்துவோம். என்றுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=298718

தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் - விஜித ஹேரத்

1 week 3 days ago

image

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே அழைப்புவிடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம், நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும், என தெரிவித்துள்ள விஜித ஹேரத் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும் அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198387

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

1 week 3 days ago
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 2,088 ஆக அதிகரிப்பு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவ‍ேளை, தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளானது இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை நள்ளிரவுக்குள் அகற்றப்படாவிட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமைதியான காலம் அமுலில் இருக்கும் எனவும், நாளை (12 ஆம் திகதி), நாளை மறுதினம் (13 ஆம் திகதி) மற்றும் தேர்தல் நடைபெறும் 14 ஆம் திகதிகளில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது.

அந்த நாட்களில் ஊடகங்களால் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது. குறித்த காலப்பகுதியில் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை வெளியிடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1408042

நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது!

1 week 3 days ago

image

சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது.

இலங்கை - இந்திய கப்பல் சேவை  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்  எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது,

மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

“கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை.

நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேல் நாங்கள் முன்பதிவு செய்யவில்லை.

சீரற்ற வானிலையினால் தற்காலிகமாக கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், கிட்டத்தட்ட 150 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கடல் அலையின் உயரம் மற்றும் காற்றின் திசை முன்னறிவிப்புகள் கப்பல் பயணங்களைத் திட்டமிட உதவுகின்றன. பயணிகளை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க, இலங்கை மற்றும் இந்திய வானிலை முன்னறிவிப்புகளையும், Windy app போன்ற செயலிகளையும் நாங்கள் நம்பியுள்ளோம்.

மேலும், வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வடக்கு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/198381

அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

1 week 3 days ago
image

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198370

தமிழ்நாட்டின் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து நெடுந்தீவை வந்தடைந்த 9 இலங்கையர்கள்

1 week 4 days ago
image

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒன்பது இலங்கையர்கள் நெடுந்தீவை வந்தடைந்தனர். 

திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரே நெடுந்தீவுக்கு நாட்டுப்படகில் வந்துள்ளனர். 

இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு பொலிஸார், அந்த 9 பேரையும் தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர். 

பின்னர், இவர்களுக்கு நெடுந்தீவு வைத்தியசாலையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

IMG-20241110-WA0052.jpg

https://www.virakesari.lk/article/198316

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும் - ஜனாதிபதி

1 week 4 days ago
image

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198303

கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !

1 week 4 days ago

கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
November 10, 2024
IMG-20241109-WA0051-696x522.jpg

கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும்.

இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் .

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்கும் என்றும் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

அன்று கருணா மட்டும் வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதறடித்தார். இன்று படகு வீடு சைக்கிள் திசைகாட்டி மணிக்கூடு என வந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அழிக்க புறப்பட்டு இருக்கின்றனர் .
இவர்களெல்லாம் கடந்த காலத்தில் இங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்பதை மக்கள் அறிவார்கள்.

தாங்கள் வெல்ல முடியாது என்று அறிந்தும் தெரிந்தும் களம் இறங்கி இருக்கின்றார்கள்.

புளட் சித்தார்த்தன் இயக்கத்தில் இயங்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு படு தோல்வி அடைய இருக்கின்றது. தெரிந்தும் சுரேஷ் சித்தரின் தேசிய பட்டியலுக்காக இங்கு அவர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

75 வருட கால பழந்தமிழ் கட்சியான எமது கட்சியை உடைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே எடுபடாது .
நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் 2015 தொடக்கம் 2020 வரைக்கும் 1800 மில்லியன் பெறுமதி யான அபிவிருத்தியை செய்து இருக்கின்றோம்.

இம்முறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று சரித்திரம் படைக்க இருக்கிறது.

எனவே தமிழரசுக் கட்சி வெல்லப்போவது தெரிந்த விஷயம்.அதுக்கு மட்டும் ஆதரவு அளித்து உங்களது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் .
வேட்பாளர் கே.யசோதரனும் கலந்து சிறப்பித்தார்.

IMG-20241109-WA0048-300x225.jpg

IMG-20241109-WA0053-300x170.jpg

https://www.supeedsam.com/209335/IMG-20241109-WA0050-300x225.jpg

IMG-20241109-WA0051-300x225.jpg

IMG-20241109-WA0052-300x225.jpg

 

 

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள் - சந்தோஷ் ஜா

1 week 4 days ago
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்களாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பிணைப்புகள் இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற்பட்டதுடன் ஆழமான கலாசார மற்றும் மூலோபாய இணைப்பிலும் கவனம் செலுத்துவதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்வதில் வேரூன்றிய தனித்துவமான சகோதரத்துவத்தை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தெற்காசிய சுற்றுலா தலைமைத்துவ மன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

2023ஆம் ஆண்டில், இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களில் சுமார் 20 சதவீதமானோர் இந்தியாவை சார்ந்தவர்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவடைந்து வரும் இணைப்பின் எடுத்துக்காட்டாகவே இந்த எண்ணிக்கை உள்ளது.  

வலுவான உட்கட்டமைப்பு, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் இலக்குக்கான ஊக்குவிப்புகள் ஆகியவை இந்தியப் பயணிகளுக்கான முதன்மையான இடமாக இலங்கையின் நிலையை உயர்த்துவதுடன், உள்ளுர் வேலை வாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருமானத்தையும் அதிகரிக்கச் செய்யும். 

இந்தியாவின் வலுவான சந்தை வாய்ப்புகளில் இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 330,758 சுற்றுலாப் பயணிகளின் வருடாந்த வருகையினால் இலங்கையின் மிகப் பெரிய மூலச் சந்தையாக இந்தியா உள்ளது.  

இந்த வலுவான பங்களிப்பு சுமார் 200,000 நேரடி மற்றும் 300,000 மறைமுக வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்கிறது. பொருளாதாரத்துக்கான அந்நியச் செலாவணி வருமானத்தின் மூன்றாவது பெரும் மூலாதாரமாகவும் உள்ளது. 

இந்த எண்களை மேலும் விரிவுபடுத்துதல், உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான அரச மற்றும் தனியார் துறை முயற்சிகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.  

விடுமுறை நாட்களை இன்பமாக்க இலங்கைக்கு செல்லுமாறு இந்தியர்களை, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஊக்குவித்து வருகின்றார்.  

இலங்கையை ஒரு சற்றுலா இலக்காக மேம்படுத்துவதற்கான இந்திய முயற்சிகளின் வெளிப்பாடாகவே இவை உள்ளன. மறுபுறம் ஒரு வெளிநாட்டு தலைவர் தனது சொந்த குடிமக்களை அவர்களின் தாய்நாட்டுக்கு வெளியே விடுமுறைக்கு செல்ல ஊக்கப்படுத்துவது மிகவும் அசாதாரணமானதாகும். 

இருப்பினும் இந்தியாவின் அத்தகைய ஊக்குவிப்பு எமது இருதரப்பு உறவின் அரவணைப்பை எடுத்துக்காட்டுகிறது. பாரம்பரிய சுற்றுலாவுக்கு அப்பால் குறிப்பிட்ட வளர்ச்சிப் பகுதிகளும் உள்ளன. அதாவது பௌத்த மரபுரிமை கேந்திரங்கள் மற்றும் இராமாயண தொடர்புப் பாதை என்பன இந்திய பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க கலாசார இணைப்புகளுக்கு வழிவகுக்கின்றன. 

இந்தியாவின் அயோத்தி கோயிலை உதாரணமாகக் கொண்டு, சாத்தியமான உள்ளுர் சுற்றுலா உட்கட்டமைப்பில் முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானங்கள் உட்பட இந்திய மற்றும் இலங்கையை 250 விமான சேவைகள் இணைக்கின்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இணைப்பு என்பது முக்கிய முன்னுரிமையாக உள்ளது. 

எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துதல், இந்தியா வழியாக பயணிக்கும் இந்தியர் அல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவாயிலாகச் செயல்படுவது, அதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்தளத்தை பன்முகப்படுத்துவது மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் பயன்படுத்தப்படாத சுற்றுலாத் திறனை விரிவுப்படுத்தல் என்பன அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/198300

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

1 week 4 days ago

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன். சுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (9.11.2024) மாலை கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இங்குதான் ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. அதில் எனது சகோதரரும் ஒருவர். எம்மை பொறுத்தவரை இது துயிலுமில்லம் ஒரு சிலரை பொறுத்தவரை இது சுடுகாடு.

அஞ்சலிக்க முடியாத நிலை

பிணங்கள் குவிக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பதை நான் இதை விட வேறு எங்கும் கண்டதில்லை. எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் இலங்கை இராணுவம் (Sri Lanka Army) குடியிருக்கின்றது.

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை | Anura Should Remove The Army From Thuyilum Illam

அவர்களைப் பொறுத்தவரை இவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரை இவர்கள் எமது உறவுகள், அண்ணன் தங்கைகள்.

இவர்களை அஞ்சலிக்க கூட முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் எம்மை வைத்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை 

இந்த இடத்தில் நின்று கொண்டு இலங்கை ஜனாதிபதி, பெளத்த குருமார்கள், சிங்கள மக்களுக்கு இருகரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை | Anura Should Remove The Army From Thuyilum Illam

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதை துயிலும் இல்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து இதை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதை விடுவிக்கும் பட்சத்தில் அமைதி, சமாதானம் இதில் இருந்தே ஆரம்பிக்கப்படும். இறந்தவர்களை அஞ்சலி செலுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போது ஒரளவேனும் மனநிறைவாக இந்த நாட்டில் அவர்கள் வாழ முடியும்” என தெரிவித்தார்.

https://ibctamil.com/article/anura-should-remove-the-army-from-thuyilum-illam-1731221639

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!

1 week 4 days ago

தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை! sritharn.jpg

“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நானும் எனது கட்சி சார்ந்த ஒன்பது பேரும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், அவர்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அடைகின்ற வகையிலும், எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே கூறப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மையமாக வைத்தும் ஒரு நீண்டகால வரலாற்றைக் கொண்ட தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு தேசியத் தலைவர் பிரபாகரனால் வழிகாட்டப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு எங்கள் மக்களுக்கான பயணத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

எமது மக்களுக்கான இந்தப் பயணத்திலே தேர்தல்கள் ஒரு பெரிய முக்கிய புள்ளிகளாக மாறுகின்றன. அந்த முக்கியமான புள்ளிகளாக இருக்கின்ற தேர்தல் காலங்களில் மக்களுடைய ஆணை திரும்பத் திரும்ப வழங்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற 10 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் என்பது தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் வாழ்வை, தங்களுக்கான அரசியல் உரிமையை, தங்களுக்கான அரசியல் இருப்பைத் தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு தேர்தல் களமாக – அதற்காக தாங்கள் தெரிவு செய்கின்ற ஆணை வழங்குகின்ற ஒரு தேர்தலாக அமைகின்றது.

அந்தவகையில்தான் தமிழ் மக்கள் கூருணர்வோடும் தெளிவான பார்வையோடும் இந்த அரசியல் பெருவெளியில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், நாங்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யார் யாரைத் தெரிவு செய்ய வேண்டும், யார் யார் நாடாளுமன்றம் சென்றால் எங்களுக்காக பேசுவார்கள், எங்களினுடைய மக்களின் உரிமைகளை கொண்டு செல்வார்கள் என்ற அடிப்படையில் உங்களுடைய தெரிவுகள் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஒட்டுமொத்தத்தில் இந்தத் தேர்தலுக்கான நீதிபதிகளாக தமிழர்களே அமைவதால் அவர்களுடைய வாக்குகள் சிதறிப் போகாமல் அது தமிழ்த் தேசியத்துக்கான தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்றவர்களுக்கான வாக்காக மாற வேண்டும்.

இப்போது யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 44 தரப்புகளாக 396 பேர் 6 ஆசனங்களுக்காக களத்திலே இருக்கின்றார்கள். ஆகவே, தேர்தலில் வாக்குகள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. எங்கள் மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கப்பட்ட இருக்கின்றன. மக்களுடைய உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் நிலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் கேட்பது வடக்கு, கிழக்கில், மலையகத்தில், கொழும்பில் வாழுகின்ற தமிழர்கள் தமிழ்த் தேசியத்துக்காகத் தமிழர்களுடைய உரிமைக்காக யார் யார் உரத்துக் குரல் கொடுக்கின்றார்களோ, யார் யார் தேவையென்று கருதுகின்றீர்களோ, அந்தவகையில் தமிழ்த் தேசியத்துக்காக உங்களுடைய வாக்குகள் அமைய வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோளாகும்.

நான் மதுபானசாலைக்குப் சிபாரிசு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து எனக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது கூட்டுச் சதியாகும். எங்களது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரும், கிழக்கிலே இருக்கின்ற ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து எனக்கு எதிராகத் திட்டமிட்ட கூட்டுச்சதியாகவே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

இந்தக் கூட்டுச் சதி மக்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும். மக்கள் அதைப் புரிந்துகொள்கின்றார்கள். யாராவது கூடுதலாக விருப்பு வாக்குகளை எடுத்து விடுவார்கள் அல்லது கட்சியை மீண்டும் கட்டியமைப்பதற்கு அவருக்கு ஓர் ஆணையை மக்கள் வழங்கிவிடுவார்கள் என்ற பயத்தில் கட்சிக்குள் இருக்கின்ற சில அநாமதேயமான சந்தேகப் பிறவிகளுடைய அல்லது தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இந்த விடயத்தைக் கையாளுகின்றார்கள்.

எங்கள் மீது மதுபானசாலை இருப்பதாகக் குறிப்பிடும் இவர்கள் தங்களுடைய படத்துடன் என்னுடைய படத்தை இணைத்து கிளிநொச்சிக்குத் தபாலில் அனுப்புகின்றார்கள். நீங்கள் அவருக்கும் (எனக்கும்) போடுங்கோ, எங்கள் இருவருக்கும் போடுங்கோ என்று. இது ஒரு கேவலமான செயல் இல்லையா? மதுபானசாலை இருக்கு என்று கூறிக்கொண்டு எங்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்கும் போக்கிலித்தனத்துக்கு ஏன் போகின்றீர்கள்? என்னுடைய அனுமதி இல்லாமல் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடு கீழ்த்தரமான செயற்பாடாகும். வரலாறும் காலமும் இதற்குச் சரியான பதிலை வழங்கும்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டபோது வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் போட்டு தடுக்காது இருந்திருந்தால் எமது கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் 4 – 5 ஆசனங்களை அலுங்கல் – குலுங்கல் இல்லாமல் நாங்கள் எடுத்திருக்க முடியும்.

தங்களுடைய சுயநலத்துக்காகவே எங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய பதவி மோகங்களுக்காகத் தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழ் மக்களை வேறு திசைக்குக் கொண்டு செல்வதற்காக அவர்கள் செய்த கைங்கர்யம்தான் வழக்கு. அதன் காரணமாகத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இடைக்காலத் தடை எப்போது விலக்கப்படுகின்றதோ அப்போது நான் தலைவராகப் பொறுப்பெடுப்பேன்.

அன்புக்குரிய மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது இம்முறை எனக்கு ஒரு ஆணை தாருங்கள். சிறீதரன் ஆகிய நான் திரும்பவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து இந்தக் கட்சியை வழிநடத்தி, புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களையும், நிலத்தில் இருக்கின்ற தமிழர்களையும் ஒருங்கிணைத்து வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என்று எங்கள் தமிழர்களை ஓரணியாக ஒன்றாக்கி, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் எல்லாக் கட்சிகளையும் ஒரு பாதையில் கொண்டுவந்து, தேசிய விடுதலைக்கான இயக்கத்தை அமைப்பதற்கு என்னாலான முழு முயற்சிகளையும் மற்றவர்களையும் அரவணைத்து நான் செய்வதற்கு எனக்கொரு ஆணை தாருங்கள். மீண்டும் நான் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஆணையாக அது இருக்கட்டும் என எனது மக்களிடம் வினவி நிற்கின்றேன்.

தேர்தல் முடிந்த பிற்பாடு நான் கட்சியின் அடுத்த தலைமைத்துவத்தைப் பொறுப்பெடுப்பேன். வழக்குகள் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நினைக்கின்றேன். 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி வழக்கின் தவணை. மேலும் தவணைகள் போகும் வாய்ப்பு உள்ளது. இப்போதும் வழக்கைப் போட்டவர்கள் கைவாங்க முடியும். அவ்வாறு செய்தால் கட்சி மீண்டும் நல்ல நிலைக்கு வரும். மக்களிடம் கட்சி மீது நம்பிக்கை வரும். கட்சிக்குள் இருப்பவர்களே கட்சிக்கு எதிராக வழக்குப் போட்டிருக்கும்போது தமிழ் மக்களுடைய விடங்களை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

தற்போது மக்கள் யாவற்றுக்கும் தீர்ப்பு எழுதுகின்ற காலம். யார், யார் என்னென்ன கேவலங்களைச் செய்கின்றார்களோ, யார் யார் மக்களுக்கு எதிரான விரோதமான நடவடிக்கைகளை ஆற்றுகின்றார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு அளித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குகின்ற காலம் மக்களிடம் வந்திருக்கின்றது. மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்ற காலம் போய் மக்கள் நீதிபதிகளாக மாறி இருக்கின்றார்கள். உங்களுடைய நீதிக்காக எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி கடந்து 15 ஆம் திகதி வரக் காத்திருக்கின்றோம்.” – என்றார்.

 

 

https://akkinikkunchu.com/?p=298659

ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன்

1 week 4 days ago

ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன்
SayanolipavanNovember 10, 2024
 
IMG-20241109-WA0084.jpg


ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைத் தமிழரசுக் கட்சி பழம்பெரும் கட்சியாகும். தற்போது மாற்றம் தேவை என்று கூறுபவர்கள் பழம்பெரும் கட்சியை விட்டுவிட்டு புதிய கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். அது உண்மையான மாற்றம் அல்ல.

அடையாளம் மாற்றாத அரசியல் மாற்றமே உண்மையான மாற்றமாகும். நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தேசம் என்கிற அடையாளத்தினை வழங்கியது எமது கட்சியாகும். அதன் காரணத்தினால் தான் எமது கட்சியின் ஸ்தாபகரை தந்தை செல்வா என்று அழைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறான நிலையில் ஏனைய கட்சிகள் தற்போது தான் சமஷ்டி பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையில் நீண்டகாலமாக சமஷ்டியை வலியுறுத்தும் எமக்கு வாக்களிப்பதில் என்ன தவறுள்ளது.

அதேநேரம், தமிழரசுக் கட்சி பொருத்தமான மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது. உதாரணமாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் ஒன்பது வேட்பாளர்களில் இருவரைத் தவிர ஏனைய எழுவரும் பாராளுமன்ற தேர்தல் களத்துக்கு புதியவர்கள்.

அதேபோன்று அவர்களில் இரண்டு பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பெண் வேட்பாளர்கள் ஆணை மையப்படுத்திய வகையில் தான் தெரிவு செய்வார்கள். ஆனால் இம்முறை உண்மையான செயற்பாட்டாளர்களை நாம் அடையாளம் கண்டு நிறுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை, நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி பதவியேற்று ஒருமாதத்துக்குள்ளேயே தனது செயற்பாடுகளில் இருந்து சறுக்க ஆரம்பித்துவிட்டார். மதுபான சாலைகளுக்கான சிபார்சுக்கடிதங்களை வழங்கிய அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களின் பட்டியலை அவர் தற்போது வரையில் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி அநுர, புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஏற்கனவே எமது பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கவுள்ளதாக எழுத்துமூலமாகவே தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார்.

இடைக்கால அறிக்கையை நாம் தயாரித்து அதனை வெளியிடுவதற்கு தயாரானபோது, அப்போது அநுரகுமார எம்மிடத்தில் வருகை தந்து கூறினார்... இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், மாகாண சபை முறைமைக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் நாங்கள். ஆகவே இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கம் சம்பந்தமாக நாம் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று எனக்கும் சம்பந்தனுக்கும் கூறினார்.

அதனையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அவரை நாங்கள் அழைத்துச் சென்று அவரது கூற்றில் நியாயம் உள்ளது. கால அவகாசத்தினை வழங்குவோம் என்று கூறினோம். ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அநுர குறிப்பிட்டார்.

அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது. அதனை கையாள வேண்டியுள்ளது. இடைக்கால அறிக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கும் செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக பலமான அணியொன்றை வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும். அந்த அணியானது தமிழரசுக் கட்சியாகவே இருக்க வேண்டும் என்றார்

 

 

https://www.battinews.com/2024/11/blog-post_739.html

இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்!

1 week 4 days ago
New-Project-10-5.jpg?resize=750,375&ssl= இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பு அளித்தனர்.

ஐஎன்எஸ் வேலா என்பது 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், 53 பேர் கொண்ட பணியாளர்களை கொண்ட இதற்கு கமாண்டர் கபில் குமார் தலைமை தாங்குகிறார்.

நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் அதன் குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் பணியாளர்கள் அதனை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை ஆராய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, ஐஎன்எஸ் வேலா நவம்பர் 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும்.

New-Project-11-4.jpg?resize=600,338&ssl=

https://athavannews.com/2024/1408020

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்; சுயேட்சை குழு 4 அறிவிப்பு!

1 week 4 days ago

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்; சுயேட்சை குழு 4 அறிவிப்பு!

தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக  தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (08) மதியம் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பாராளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும் என்பதை கடந்த சில நாட்களாக நான் அறிந்து கொண்டேன்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சக்திகள்  நிறைய பணத்தை கொட்டியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய நான் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

தான் போட்டியிட இருந்த சுயேட்சை குழு மாற்றத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை நான் இனம் கண்டு கொண்டமையினால் அவர்களுக்கு என்னால் எந்த துரோகமும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த சுயேட்சை குழுவில் இருந்து வெளியேறினேன்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்காது சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/311923

தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்

1 week 4 days ago

தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
1166940727.jpg

தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வடமாகாணத்துக்கு பயணித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. 

இவ்வாறாக தமிழர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

பிரதமர் ஹரிணி, ஜனாதிபதியின் ஆலோசகர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் வடக்குக்குச் விஜயமாகி பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, ஜனாதிபதி அநுர வடக்கில் இன்று தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் பாசையூர் பகுதியில் இன்று  மாலை 3 மணியளவில் ஜனாதிபதியின் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.

ஜனாதிபதியாக அநுர பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்குக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

 

 

https://newuthayan.com/article/தேர்தல்_பரப்புரைக்காக_ஜனாதிபதி_வடக்குக்கு_பயணம்

ரவிராஜின் நினைவேந்தல்

1 week 4 days ago

ரவிராஜின் நினைவேந்தல்
adminNovember 10, 2024
f4b08c4b-cf9b-4034-859b-ea2c2153b8d2-117

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.   சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.   இந்நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

4fbcb441-36e0-4991-9cec-afee73bd2a8d-800476ffd27-1ebf-4348-a683-ca963936803c-800a270e913-6236-4a4c-8d13-a4a154e9ba53-800c6efc4b6-e80f-4d90-9d10-fc9df02205d9-800c6597192-aee8-4209-9749-f2c167874f19-800d3061523-58d6-4687-b49c-262e94b81021-800
 

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!

1 week 4 days ago
New-Project-4-13.jpg?resize=750,375&ssl= ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!

பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறியுள்ள நிறுவனம், இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மன்னிப்பும் கோருவதாக குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1407965

Checked
Thu, 11/21/2024 - 10:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr