ஊர்ப்புதினம்

முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்

2 weeks 3 days ago

முல்லைத்தீவில் வட்டுவாகல்,கேப்பாப்புலவில் இராணுவ முகாம்களில் உள்ள விகாரைகளின் கீழ் புதைகுழிகள்; ஆய்வுகள் செய்ய வலியுறுத்துகிறார் ரவிகரன்

thumbnail_1000080856-780x470.jpg

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் படுகொலைசெய்யப்பட்டு கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவமுகாம்களின் விகாரைகளின் கீழ் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தமிழ் இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழர்தாயகப் பகுதிகளில் இனங்காணப்பட்ட மனிதபுதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய தேசியமக்கள்சக்தி அரசாங்கம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து செம்மணிவரை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகாலத்தில் தமிழர்கள் மீது இனவழிப்புச் செயற்பாடுகள் இடம்பெற்றன என்பதற்கு வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் இனங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளும், மனிதப் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளும்,சாட்சியாக இருக்கின்றன. இதனை யாருமே மறுக்கமுடியாது.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. செம்மணியில் அகழ, அகழ எம்மவர்கள் எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்ற அவலங்களைக் காண்கின்றோம். கொலைசெய்தவனிடமே

நீதியைக் கோருகின்ற உள்ளக நீதிவிசாரணைப்பொறிமுறையில் எமக்கு கடுகளவும் நம்பிக்கை கிடையாது.

ஆகவேதான் தமிழ் இனவழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மனிதப்புதைகுழிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தொடர்சியாக பன்னாட்டு நீதி விசாரணையைக் கோருகின்றோம்.

முல்லைத்தீவில் வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு பகுதிகளில் இராணுவமுகாம்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகள் அகற்றப்பட்டு விகாரைகளின் கீழ்ப்பகுதிகள் அகழ்ந்து ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அல்லது நவீன கருவிகளின் துணையுடன் ஸ்கேன் செய்யப்பட்டு விகாரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விடயங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவேண்டும் எனக் கோருகின்றேன்.

2009ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த போராளிகள் மற்றும் மக்களை இராணுவம் கைதுசெய்துள்ளது. அதன்பின்னர் அவ்வாறு இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு அருகே கடற்கரைநோக்கி போகும் பாதையினூடாக பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதேபோல் சரணடைந்த பலர் கேப்பாப்புலவு நோக்கியும் இராணுவத்தினரால் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இராணுவத்தால் பேருந்துகள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் திருப்பி அழைத்து வரப்படவில்லை. என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமலுள்ளது. அப்படியெனில் அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்கள் எங்கேபோனார்கள்.

தனிச் சைவத் தமிழ் கிராமமான வட்டுவாகலில் எதற்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டது. அந்த விகாரையை அகற்றி அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது விசேட ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு உண்மைத்தன்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். அதேபோல் கேப்பாப்புலவு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள பாரிய விகாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதுதொடர்பில் ஏற்கனவே பலதடவைகள் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றிலும் இந்த கேப்பாப்புலவு மற்றும் வட்டுவாகல் இராணுவமுகாம்களில் அமைந்துள்ள விகாரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டுமென கோரியுள்ளேன். இதுவரை அந்த விகாரைகளை ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

https://akkinikkunchu.com/?p=339154

மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது

2 weeks 3 days ago

மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் - இரு சிறுவர்கள் கைது

By kugen

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்டத்திலுள்ள ஒரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் தாயார் தந்தையர்கள் மீன்பிடி தொழிலுக்காக கடற்கரை பகுதியில் மீன் வாடியில் இருந்து வருவதாகவும் வீட்டில் குறித்த சிறுமியும் அவரது சகோதரரும் தங்கியிருந்து வந்துள்ளனர்.

இதன்போது, கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவன் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும், அவனை அடையாளம் தெரியாது என பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, குறித்த அதே பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை. எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில், குறித்த சிறுமி இல்லை இவன்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மாவட்டதிலுள்ள இன்னொரு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinews.com/2025/08/3-2.html

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

2 weeks 3 days ago

New-Project-7.jpg?resize=750%2C375&ssl=1

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது சீட் பெல்ட்கள் பொருத்தப்படாத சில வாகனங்களில் அவற்றைப் பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று, அதிவேக ‍நெடுஞசாலைப் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 30 அன்று, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், சபைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, இந்த முயற்சி “க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுத்தப்படுகிறது என்று விளக்கினார்.

Athavan News
No image previewஅதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!
இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவ

எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2 weeks 3 days ago

Published By: Vishnu

31 Aug, 2025 | 10:28 PM

image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

https://www.virakesari.lk/article/223877

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் - சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா எச்சரிக்கை

2 weeks 3 days ago

31 Aug, 2025 | 09:03 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும்.

திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால்   செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/223870

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் கோரிய ஆவணத்தை கடற்படை வழங்கவில்லை!

2 weeks 3 days ago

Published By: Digital Desk 3

31 Aug, 2025 | 10:55 AM

image

இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரில் ஒரு தொகுதியினரை தடுத்து வைத்திருந்த கடற்படை அதிகாரிகள் குழுவொன்றுடன் தொடர்புடைய ஆவணத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படிவதற்கு கடற்படை தவறியுள்ளமை நீதிமன்றத்தின் முன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.  

காணாமலாக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் ஐவருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அறுவருக்கும் எதிரான வழக்கின் விசாரணையின்போது பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னான்டோ அக்கடிதத்தின் பிரதியொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு  இரண்டாவது தடவையாகவும் கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

நபரொருவரை காணாமலாக்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு முன் இரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தமித் நிஷாந்த சிரிசோம உலுகேதென்ன மீண்டும் ஓகஸ்ட் 27ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை தெரிவித்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளமையால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அட்மிரல் உலுகேதென்ன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கிரிஷாந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சந்தேகநபரை விடுதலை செய்வது பொருத்தமற்றது என சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவீர என்பவரை கடத்திக் கொண்டுபோய் திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் பிரசாந்த பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்தார்.

சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் சிலரது பெற்றோர்களும் வழக்கு விசாரணை தினத்தன்று சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுடன்  பொல்கஹவெல நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தனர்.

சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதைமுகாமில் தடுத்து வைத்து காணாமலாக்கியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் சார்ஜண்ட் 38640 பண்டார, பொலிஸ் சார்ஜண்ட் 37611 ராஜபக்‌ஷ மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க ஆகியோர் நீதிமன்றில் தகவல்களை சமர்ப்பித்தனர்.

இலங்கை கடற்படையால் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய 2009ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அட்மிரல் உலுகேதென்ன மூன்று மாதத்திற்கும் மேற்பட்ட காலம் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

2010 ஒக்டோபர் முதலாம் திகதி கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக  நியமனம் பெற்றதன் பின்னர் அப்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் சோமதிலக திசாநாயகவிடமிருந்து பெற்ற எழுத்து மூல அனுமதிக்கு அமைவாக திருகோணமலை கன்சைட் முகாமை பார்வையிடுவதற்குச் சென்றதாக சிரிசோம உலுகேதென்ன அறிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.

அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதைமுகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே  இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது  நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடற்கரையின் உளவுப் பிரிவுடன் தொடர்பற்றது எனக் கூறப்படும் அந்த புலனாய்வுப் பிரிவுக்கு அப்போது கமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க கட்டளை வழங்கியதாகவும் கடற்படையின் உறுப்பினர்களான ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி மற்றும் கௌசல்யா ஆகிய அறுவர் அவரின் கீழ் இருந்ததாகவும் அந்த விசேட புலனாய்வுப் பிரிவு தம்மால் கலைக்கப்பட்டதாகவும் அட்மிரல் உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

2008-09 காலப்பகுதியில் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்திக் கொண்டு போய் திருகோணமலை கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக விசாரணை செய்யும் இரகசியப் பொலிஸ் அதிகாரிகளிடம் சுமார் ஓராண்டு காலம் கன்சைட் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த் என்ற பொடிமல்லி என்பவர் சாந்த சமரவீர தன்னுடன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாரச்சி என்பவரும் அவர்களுடன் இருந்ததாக பொலிஸார் மேலும் கண்டுபிடித்துள்ளனர்.

கேகாலை சாந்த சமரவீரவை கடத்தி திருகோணமலை 'கன்சைட்'  கடற்படை வதை முகாமில் தடுத்துவைத்து காணாமலாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தொடர்பாக நடைபெற்ற கடந்த வழக்குத் தவணையில் பின்னர் அது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த ஒரு கூற்றினால் விசாரணை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன உள்ளிட்ட சிலர் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அது தொடர்பிலும் தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/223815

நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்

2 weeks 3 days ago

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.

எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம்.

இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/223801

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

2 weeks 3 days ago

செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  

ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது.

ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார்.

பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது.  

இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது.

இருப்பினும்  உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம்.

மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223800

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

2 weeks 3 days ago

30 Aug, 2025 | 05:46 PM

image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மஹரகம நகரசபையில்  சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.

எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223794

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

2 weeks 3 days ago

New-Project-68.webp?resize=750%2C375&ssl

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு  4000 கோடி ரூபாய்  மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில்  40 கோடி  ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும்,  பாலவத்த வீதியில்  11 கோடி ரூபாய்  மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட  55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும்  நாரஹென்பிட்டவில்  20 கோடி ரூபாய்  மதிப்புள்ள நிலமும் இருப்பதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில்  70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய்  ஆகும்.

அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445387

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

2 weeks 4 days ago

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

August 31, 2025 3:38 pm

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர்.

அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

2 weeks 4 days ago

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

31 Aug, 2025 | 03:51 PM

image

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். 

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, 

கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) 

பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 

முழுமையான கிரகணம் - இரவு 11:01 

அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 

கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) 

பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 

கிரகணம் முடிவு - அதிகாலை 2:25

https://www.virakesari.lk/article/223852

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

2 weeks 4 days ago

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

adminAugust 31, 2025

Gotabaya.jpg?fit=650%2C433&ssl=1

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வாக்குமூலம்   பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை  தொடர்பாக முன்னாள்  காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219865/

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

2 weeks 4 days ago

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

adminAugust 31, 2025

0-9.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர்  காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார்.   கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு  காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.  காவல்துறையினர் குறித்த  இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர்  இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை  சான்று பொருளாக    மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

https://globaltamilnews.net/2025/219869/

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி!

2 weeks 4 days ago

sattama-athibar.jpg?resize=461%2C296&ssl

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த  கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445327

ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்!

2 weeks 4 days ago

vijitha-herath.jpg?resize=750%2C375&ssl=

ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்!

செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445311

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

2 weeks 4 days ago

30 Aug, 2025 | 01:48 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223772

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி

2 weeks 5 days ago

New-Project-309.jpg?resize=750%2C375&ssl

சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுவதற்கு முதலீடு செய்யுங்கள் – ஜனாதிபதி.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய வெறும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மட்டும் போதாது என்றும், அரச மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைக்கும் புதிய மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா, அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, வசதியான சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் தற்போது நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்கள் குறித்து வர்த்தகர்களினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அப்பொன்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திஅதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் தரப்பினர்கள் குழு இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

https://athavannews.com/2025/1445262

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

2 weeks 5 days ago

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர். 

இதற்கு, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஏற்கனவே படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளைச் சுட்டிக்காட்டி, இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

அவரது எதிர்ப்பை அடுத்து, நேற்று (29) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

ரவிகரன் தனது கருத்தில், “ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில், விமானப்படை மீண்டும் இக்காணிகளைக் கோருவது பொருத்தமற்றது. கேப்பாப்புலவில் இன்னும் 190 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. 

மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். 

யுத்தம் முடிந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகியும், விமானப்படையினர் மக்களின் காணிகளை அபகரித்து யாருடன் போர் செய்யப்போகின்றனர்? எனவே, இக்காணிகளை விமானப்படைக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விமானப்படையினருக்கு காணி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmexjjmlv003sqplp8xkhyrpm

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!

2 weeks 5 days ago

முன்னாள் ஜனாதிபதி இருவரை கைது செய்ய நடவடிக்கை!

344538877.jpg

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக போராடும் பல சிவில் சமூக அமைப்புகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த அமைப்புகள் சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளன.

அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வழக்கறிஞர்கள் அதற்கான தகவல்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

அவற்றில், மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமாணங்களும், கோட்டபாய ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பல மோசடிகளும் அடங்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “இது போன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்.

சந்தேகநபர் முன்னர் வகித்த பதவிகள் அத்தகைய சட்டச் செயல்பாட்டில் பொருத்தமானவை அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இவ்வாறான நிலையில் எந்தவொரு ஜனாதிபதியும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் முன்னாள் ஜனாதிபதிகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/முன்னாள்_ஜனாதிபதி_இருவரை_கைது_செய்ய_நடவடிக்கை!#google_vignette

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr