ஊர்ப்புதினம்

தமிழ் தேசிய பேரவை - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையே கொள்கை ரீதியான இணக்க ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 03:45 PM

image

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம் என தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டுள்ளனர். 

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில், 

சுதந்திர இலங்கைத் தீவில் கடந்த 77 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தும் விதத்திலும் தன்னுடைய தனித்துவம், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தனது மரபுவழித் தாயகத்தில் ஒரு தனியான தேசம் என்ற அடிப்படையில் தனது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனது விவகாரங்களைத் தானே கையாளக்கூடிய விதத்திலும் தனது சுதந்திரத்தை நிலை நிறுத்தும் வகையிலும் பூரண பொறுப்பு வாய்ந்த ஒரு சுயாட்சி அரசியல் ஆட்சி முறையைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும், இந்த இலக்கினை அடைவதற்கு தமிழ்த் தேசத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்திருக்கும் ஒற்றையாட்சி எனப்படும் அரசியல் ஆட்சி முறையின் எந்தவொரு ஏற்பாட்டின் கீழும் அறவே இடமில்லை என்பதுடன் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்றினை, தமிழ்த் தேசத்தின் மரபுவழித் தாயகத்தில், இலங்கைத் தீவு என்ற யாதார்த்த ரீதியான வரையறைக்குள் ஏற்படுத்துவதற்கு, ஒற்றுமையாகவும் உறுதியாகவும் பாடுபட நாம் தீர்மானித்துள்ளோம் என்பதையும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு என்பது ஒரு புதிய அரசியல் சாசனத்தை திட்டவட்டமானதும் தெளிவானதுமான முறையில் உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏதுவாக, தமிழ்த் தேசத்தின் அரசியல் ஒற்றுமையை தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி ஏற்படுத்தப்படுகின்றது.

1. தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழ்த் தேசத்தின் இறைமையின் பாற்பட்டும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மரபுவழித் தாயகத்தில், ஒரு பூரணமான சம்ஸ்டி ஆட்சி முறை, அரசியல்சாசன ரீதியாக ஏற்படுத்தப்படுவதே தமிழ்த் தேசத்தின் இறைமையை ஏற்பதாகவும் தியாகம் செறிந்ததுமான நீண்ட விடுதலைப் போராட்டத்தின் அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்.

மேலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எமது முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் நிலைநிறுத்தும் விதத்தில் அரசியல் சாசன ரீதியானவையும், வலுவானவையுமான அரசியல் நிர்வாக ஏற்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சம்மதத்துடனும் இணக்கப்பாட்டுடனும் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

2. அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தம் என்பது தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ இறுதியானதோ தீர்வு அல்ல என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

3. கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைபு என்பது, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்ற காரணத்தால் தமிழ்த் தேசத்தின் சுயாட்சிக்கு இடமளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை நாங்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளோம் என்பதனை இருதரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

4. போரின் போதும் அதற்குப் பின்னும் இழைக்கப்பட்ட மற்றும் இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில், உள்ளகப் பொறிமுறைகளை முழுமையாக நிராகரித்துச் சர்வதேசக் குற்றவியல் விசாரணை ஒன்று அவசியமானது என்பதனை இரு தரப்பினரும் வெளிப்படுத்துகின்றோம்.

5. இந்த இலட்சியப் பயணத்தில் தமிழ் தேசத்தின் நலனை விரும்பும் சகல தமிழ்த் தேசிய சக்திகளும் நேர்மையாகவும், விரைவாகவும் இணைத்துக் கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

6. இந்த அடிப்படையில் பிரதிநிதித்துவ ஆட்சி முறை ஒன்றின் கீழ் கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும், தமிழ்த் தேசியம் சார்ந்து நேர்மையாக செயற்படும் சக்திகள் ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் இலங்கைக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர் ஈழத் தமிழர்கள் மற்றும் பரந்த தமிழர் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரதும் ஒருமித்த ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம். இந்த அடிப்படையில் இந்த முயற்சிகளுக்கு எமது மக்கள் அனைவரினதும் ஆதரவையம் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நாங்கள் நாடி நிற்கின்றோம்.

7. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வலியுறுத்துவதிலும் அரசியல் சாசன ரீதியாக அவற்றை நிலைநாட்டிக் கொள்வதிலும் தமிழ் மக்கள் நேர்மையாகவும் உறுதியாகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளனர். தமிழ் மக்களின் முழுமையான அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாக எதிர்காலத்தில் நேர்மையுடனும் கொள்கை உறுதியுடனும் தமிழர் தேசத்தின் அரசியல் செயல்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெகுசன அமைப்புகளும் ஒருங்கிணைந்து, மக்களின் பங்கேற்புடன் தயாரித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளமுடியும் என நாம் கருதுகின்றோம்.

8. இந்தக் குறிக்கோளை ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாலும்,மக்கள் எழுச்சியினாலுமே சாதிக்க முடியும் என்பதை நாங்கள் வலியுறுத்தி, ஒரு பரந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பாகவும், இந்த இலக்கினை முன்வைத்து சகல தமிழ்த் தேசிய சக்திகளையும் ஒன்றிணைத்துச் சாத்தியமான விதத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும், அதை முன்னெடுத்துச் செல்வதற்கும் எமது மக்களின் ஆதரவினை நாடிநிற்கின்றோம்.

9. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இரண்டு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை கருதி ஓரணியாகச் செயற்படுவோம் என்பதனையும் வெளிப்படுத்துகின்றோம்.

என குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்று தமிழ் தேசிய பேரவையின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கைச்சாத்து இட்டுள்ளனர்.  

501156962_2016488108878948_4885936248109

494822683_1935115060579692_5749278701029

494828995_1251140599730056_3300799345173

494835305_1466911771350960_2840280692798

500423042_708978121739981_79646336766074

https://www.virakesari.lk/article/216332

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ். பலாலி விமான நிலையம் நோக்கி சென்றடைந்த விமானம்!

3 months 2 weeks ago

02 JUN, 2025 | 03:38 PM

image

டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.

அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.

குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

20250602_133351.jpg

20250602_131653.jpg

20250602_132128.jpg

20250602_130948.jpg

20250602_134239.jpg

https://www.virakesari.lk/article/216339

சங்கு - சைக்கிள் சந்திப்பு!

3 months 2 weeks ago

00]சங்கு - சைக்கிள் சந்திப்பு!

http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

  

சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

http://seithy.com/breifNews.php?newsID=334091&category=TamilNews&language=tamil

பெப்ரவரி முதல் இராணுவத்தை சேர்ந்த 2,900 பேர் கைது

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

02 JUN, 2025 | 11:30 AM

image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய வீரர்கள் உட்பட மொத்தம் 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி  மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 2,261 இராணுவ வீரர்கள், 194 கடற்படை வீரர்கள் மற்றும் 198 விமானப்படை வீரர்கள் அடங்குவர்.

இதே காலப்பகுதியில் பொலிஸார் மேலும் 330 பேரைக் கைது செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216317

யாழ். போதனா அருகே மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி ; சகோதரர்கள் இருவருக்கு எதிராக முறைப்பாடு

3 months 2 weeks ago

02 JUN, 2025 | 09:47 AM

image

யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சனிக்கிழமை (31)  இரவு இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

பளையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் நகர பகுதியில் தனது வேலை நிமித்தம் வந்துள்ளார். பேருந்தில் பயணிப்பதற்காக தனது சைக்கிளை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டவரிடம் அங்கு வந்த ஒருவர் அவரை தனக்கு தெரியும் என்று கூறி கைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டுள்ளார்.

இருட்டில் நின்ற நபரிடம் தான் கைபேசி பாவிப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். உடனே எதிரில் நின்றவர் அவரின் முகத்தில் குத்திவிட்டு பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியிலிருந்தவரிடம் சம்பவத்தை கூறியுள்ளார்.

இவர் கூறியதைக் கேட்ட பணியிலிருந்த நபர், அவ்வாறு செய்தவர் தனது தம்பிதான் என்றும் நாளை வாருங்கள் உங்கள் பணப்பையை மீட்டுத் தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

அத்துடன், பேருந்தில் செல்வதற்கு செலவாக 500 ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இரவு நேரமென்பதால் பாதிக்கப்பட்டவரும் வேறு வழியின்றி அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.   

மறுநாள் காலை குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்துக்கு சென்ற பாதிக்கப்பட்ட நபரிடம் தனது தம்பியிடம் வாங்கினார் என்று கூறி அவரின் பணப்பையை வாகன பாதுகாப்பு பணியிலிருந்தவர் கொடுத்துள்ளார்.

பணப் பையை வாங்கிய பாதிக்கப்பட்ட நபர், அந்த இடத்திலேயே சோதனையிட்டுள்ளார். பணப்பையிலிருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததுடன், வங்கி அட்டை மூலம் 26 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில், பணப் பையை வழங்கியவரிடம் பாதிக்கப்பட்டவர் கேட்டபோது, அவருக்கு ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, “எனது தம்பியை பிடிக்கமுடியாது. நீ இதைக் கொண்டு போ”, என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வாகன பாதுகாப்பு நிலையத்தில் பணியாற்றிய நபர் திட்டமிட்டு இவ்வாறான வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்றும் பொலிஸார் கூறினர் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/216302

முல்லைத்தீவு உடுப்புக்குளம் - தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

3 months 2 weeks ago

தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற சிறுவன் உட்பட இருவர் தோணி கவிழ்ந்து உயிரிழப்பு

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:40 PM

image

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில்  இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது தோணியில் இருந்த இருவரும்  நீரிற்குள் மூழ்கிய நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும்  10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன்  எனும் இருவரே  உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு  பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல்  குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற  இரு  மாணவிகள்  கேணியில் தவறி வீழ்ந்து. உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216288

முல்லைத்தீவில் சோகம்: கோயில் குளத்தில் விழுந்து இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

3 months 2 weeks ago

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:04 PM

image

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

1000303237.jpg

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். 

1000303239.jpg

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

1000270319.jpg

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216285

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்றில் மலத்தொற்று; தொற்று நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 05:19 PM

image

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு  வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனைய தேவைகளும்  நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நீரில்  ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும்  நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

IMG-20250601-WA0007.jpg

https://www.virakesari.lk/article/216271

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்து விசமிகள்!

3 months 2 weeks ago

Published By: VISHNU

01 JUN, 2025 | 08:44 PM

image

ஞாயிற்றுக்கிழமை (01) யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள் உயிரிழந்துள்ளன.

கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம் வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

வளலாய் மேற்கு, அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது. இது குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/216289

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

3 months 2 weeks ago

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, 

“இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அவரை அரசாங்கம் கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடனடியாக தலையிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது என்பதே புலம்பெயர் தமிழர்களின் கருத்தாக உள்ளது. 

தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும். அதனை நாம் செய்ய வேண்டும். 

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். அதேவேளை, மேலும் சில சபைகளில் எதிர்க்கட்சி தலைவராகக்கூட சிறப்பாக செயற்பட முடியும்.”- என்றார்.

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள்...
No image previewயாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; ஞா. சிறிநேசன்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 04:20 PM

image

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (31) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் மட்டு.ஊடக அமையம்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,வடகிழக்கு,தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் அமரர் நடேசனின் உருவப்படத்திற்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களான நடராசா மற்றும் பெடிகமகே ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் சுடரை மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு தெற்கிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp_Image_2025-06-01_at_14.53.30__1

WhatsApp_Image_2025-06-01_at_14.53.32.jp

WhatsApp_Image_2025-06-01_at_14.53.37__1

WhatsApp_Image_2025-06-01_at_14.53.34.jp

https://www.virakesari.lk/article/216263

குடிவரவு, குடியகல்வு குறித்து விரைவில் சட்டதிருத்தம் ; அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவிப்பு

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 12:11 PM

image

ஆர்.ராம்

நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார்.

அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து  வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஆனந்த விஜயபாலவைத்தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன்.

அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.

ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின்கொள்கை அல்ல.

அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது.

அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும்.

அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/216242

மாகண அதிகாரங்களை சூட்சுமமாக மீளப்பெறுவதற்கு முயற்சி; ஈ.பி.டி.பி.சுட்டிக்காட்டு

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 12:10 PM

image

(நமது நிருபர்)

மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்கவேண்டும்.

மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.

குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட. வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முனனெடுக்கப்பட்டன.

குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, 1000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம் எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல் அபிலாஷைகளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/216234

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:57 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,  இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

https://www.virakesari.lk/article/216228

அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கும் சாத்தியம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 10:11 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னடைவுகளை தொடர்ந்து துரித அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்வீட்டு முரண்பாடுகளை தனிக்காது மாற்றங்கள் செய்வது பயனற்றதாக கருதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். 

எனினும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக்க அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஆளும் கட்சியின் அமைச்சரவை மாற்றம் குறித்து தேசிய அரசியலில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. இதன் பிரகாரம் பிரதமர் பதவியிலும் மாற்றத்தை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் உள்வீட்டு மோதல்களே திடீர் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. 

இதன் பிரகாரம், விஜித ஹேராத்தை பிரதமராக்கவும், ஹரிணி அமரசூரியவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்கவும் ஜே.வி.பிக.குள் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி அநுரகுமார இருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் 46க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமடைய தயாராக இருப்பதாகவும் ஆளும் கட்சியின் உள்வீட்டு மோதல்களை சுட்டிக்காட்டி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இருப்பினும் ஆளும் கட்சியின் அனைத்து தரப்புகளுடனும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கொள்கை ரீதியிலான இணக்கப்பாடின்மையை சரிசெய்வதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216216

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

3 months 2 weeks ago

01 JUN, 2025 | 09:23 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகப்பூர்வ விஜயத்தை  மேற்கொண்டு  செவ்வாய்கிழமை (03) இலங்கைக்கு வருகிறார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருணா ஜெயசேகர உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.

இதேவேளை, லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு நிகழ்வின் போது 'அவுஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல்' என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை விஜயத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு பேரவையின் மாநாட்டில் பங்பேற்றிருந்தார்.

இதன் போது குவாட் அமைப்பின் பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற முதல் சந்திப்பு என்பதால் முத்தரப்புமே மிக ஆர்வமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டனர்.

அதே போன்று மூன்று நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இதன் போது ஒப்புக்கொண்டன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகளை ஆழப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, கல்வி, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒத்துழைப்பின் வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதுடன், இரு நாடுகளுக்க இடையில் 78 வருடகால இராஜதந்திர உறவுகள் உள்ளன.

அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பொதுவான நலன்களை பாதுகாப்பதிலும் பொருளாதாரம், பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் உட்பட பரந்துப்பட்ட ஒத்துழைப்புகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் வலுப்படுகின்ற நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216215

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

3 months 2 weeks ago

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

adminJune 1, 2025

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.

சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

43-1.jpg?resize=800%2C450&ssl=143-2.jpg?resize=800%2C450&ssl=143-4.jpg?resize=800%2C378&ssl=143-5.jpg?resize=800%2C450&ssl=143-6.jpg?resize=800%2C450&ssl=143-12.jpg?resize=800%2C450&ssl=143-15.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/216200/

யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன்

3 months 2 weeks ago

யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன்

adminJune 1, 2025

kapilan-scaled.jpg?fit=1170%2C688&ssl=1

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் உறுதியுரையை எடுத்துக் கொண்டார்.  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்கும் நிகழ்வு, நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையை மேற்கொண்டார்கள். இதில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட (விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ். மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையை எடுத்துக்கொண்டுள்ளார்.

“யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனைத் தடுப்பதற்கு வழக்குத் தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/216194/

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்படுகின்றன; தரம் ஒன்று பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது - வடக்கு ஆளுநர் கவலை

3 months 2 weeks ago

31 MAY, 2025 | 05:10 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

குரும்பசிட்டி பொன். பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 'பரமானந்தம்' மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க. வசந்தரூபன் தலைமையில்  சனிக்கிழமை (31)  நடைபெற்றது. 

இந்த நிகழ்வில்  பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

போரால் இந்தப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது.

மீள்குடியமர்ந்த பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச் செய்துள்ளார்கள். 

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான் தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள். 

அவர்களைப் பாராட்டுகின்றேன். அதேபோல பாடசாலையின் தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன் இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது. 

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல, மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. 

இங்கு கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றவேண்டும். 

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது. இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை.

வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள் வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப் பயன்படுத்தவில்லை. 

முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான் கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். 

அவர்கள் இங்கிருந்து தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும் என்றார்.  

IMG-20250531-WA0007.jpg

IMG-20250531-WA0023.jpg

IMG-20250531-WA0017__2_.jpg

IMG-20250531-WA0006__1_.jpg

https://www.virakesari.lk/article/216196

மாங்குளம் நகரில் 3007 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

31 MAY, 2025 | 05:36 PM

image

2017 மார்ச் 8ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை (31) 3007 ஆவது நாட்களை எட்டியுள்ளது. 

இதனை முன்னிட்டு, மாங்குளம் நகரில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதந்தோறும் இவ்வாறு மாபெரும் முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் உறவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் மாங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்நாளை குறிப்பாக நினைவுகூர்ந்தனர்.

இலங்கையில் நீதி கிடைக்காது எனும் நம்பிக்கையுடன், சர்வதேசம் ஊடாகவே தமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாகும்.

இன்றைய போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும் என உறவுகள் தெரிவித்துள்ளனர்.

1000301062.jpg

1000301060.jpg1000301047.jpg1000301046.jpg1000301048.jpg1000301058.jpg1000301030.jpg

https://www.virakesari.lk/article/216205

Checked
Thu, 09/18/2025 - 10:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr