அரசியல் அலசல்

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்

1 day 13 hours ago
இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்

-என்.கே.  அஷோக்பரன்

அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான ‘ஃபமிலி மான்’  தொடரின் இரண்டாவது பகுதி. அடுத்தது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வௌிவந்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம்.
இந்திய சினிமாவில் ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையும் கையாளப்படுவது இது முதன் முறையல்ல; அதுபோல, இது கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை. 

ஆனால், ஒவ்வொரு முறையும், ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களின் அரசியலையும் ஈழத்தமிழர் பிரச்சினையையும் காட்சிப்படுத்தும் போது, இந்திய சினிமா, ஈழத்தமிழர்களுக்கு பெரும் அநீதி இழைப்பதான உணர்வு, பல ஈழத் தமிழர்கள் இடையே எழுந்துவிடுகிறது. 

“சினிமாவைச் சினிமாவாகப் பாருங்கள்; அது, பொழுதுபோக்கு மட்டும்தான்” என்று சொல்லி, இதை அமைதியாகக் கடந்து செல்லக் கூறும் அறிவுரைகள், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் இடையேயும் எழுவதையும் அவதானிக்கலாம். அதில் ஒருவகை நியாயமும் தென்படலாம். 

ஆனால், கலையும் எழுத்தும் பேச்சும் மனித இனத்தை ஆளும் மிகப் பலமான ஆயுதங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒன்று, உலகமெங்கும் வாழும் தமிழர்களை, ஆளும் கலையாக, சினிமாவே இருக்கிறது. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மொழி, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழிப் பயன்பாட்டில், இன்று தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது, தமிழ்ச் சினிமா கொண்டுள்ள ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. 

ஆகவே, அத்தகைய ஆதிக்கம் மிக்கதொரு கலைவடிவம், ஒருவகையான கருத்தியலை முன்னிறுத்தும் போது, அது அந்த மனிதக் கூட்டத்தினிடையே செல்வாக்கைப் பெறுவதாகவும் மற்றைய மனிதக் கூட்டங்களிடையே, குறிப்பிட்ட அந்த மனிதக் கூட்டத்தைப் பற்றி, அறிமுக அடையாளமாகவும் மாறிவிடுகிறது. 

இந்த அடிப்படையில்தான், ஈழத் தமிழர்கள் பற்றிய இந்தியப் படைப்புகள் மீதான, ஈழத் தமிழர்களின் அதிருப்தியும் எதிர்ப்பும் எழுவதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மறுபுறத்தில், இந்தியப் படைப்புகள் என இந்தப் படைப்புகளை ஒரே வகைக்குள் அடக்குதலும் பொருத்தமானதல்ல. மேற்கூறிய இரண்டு உதாரண படைப்புகளை எடுத்துக்கொண்டால் கூட, அவற்றின் படைப்பாளிகள், அவை பேசும் அரசியல், அந்தப் படைப்புக்கான நோக்கங்கள் ஆகியன வேறுபட்டவை. ஆகவே, இவையும் வெவ்வேறாக நோக்கப்பட வேண்டியவை. 

இதற்குள் குறைந்தபட்சம் மூன்று வகையான படைப்புகளை நாம் அடையாளம் காணலாம். குறித்ததொரு திரைப்படைப்பில், ஈழத் தமிழர்களைப் பற்றிய வௌிப்படுத்தல்களையும் ஈழத் தமிழ் கதாபாத்திரங்களையும் கொண்ட படைப்புகள் ஒருவகை. கமலஹாசன் நடித்த ‘தெனாலி’, சூர்யா நடித்த ‘நந்தா’, மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ உள்ளிட்ட படைப்புகள், இந்த வகையைச் சார்ந்தவை. 
இவற்றில், ஈழத்துத் தமிழ் என்று கருதி, இவர்கள் பேச முயற்சித்த மொழி பற்றிய விமர்சனங்களைத் தாண்டி, பெருமளவான அரசியல் முக்கியத்துவம் இவற்றுக்குக் கிடையாது. இத்தனை வருடங்கள் கடந்தும், தென்னிந்திய தமிழ் சினிமாவால், ஈழத்தமிழை முறையாக உச்சரிக்கக் கூட முடியாதிருப்பது, ஒரு புரியாத புதிர்தான்.

இரண்டாவது வகை, ஈழத் தமிழர் அரசியலை அல்லது இலங்கையில் நடந்த போராட்டத்தைத் தொட்டுச் செல்லும் திரைப்படங்கள். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை இந்த வகைக்குள் உள்ளடக்கலாம். அடிப்படையில், இது ஒரு தாதாக்கள் பற்றிய திரைப்படம் (ganster film). இரண்டு தாதாக்களிடையேயான கருத்தியல் வேறுபாடாக, ‘வந்தேறுகுடிகள்’ எதிர் ‘பூர்வக் குடிகள்’ என்பது முன்வைக்கப்படுகிறது. 

இங்கிலாந்தை மையப்படுத்திய கதைக்கு வசதியாக, இங்கிலாந்தில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையை எடுத்துக்கொண்டால், இங்கு ஈழத் தமிழர்களுக்குப் பதிலாக, போரால் பாதிக்கப்பட்டு, மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறிய வேறு எந்த இனமும் சித்திரிக்கப்பட்டு, இந்தக் கதை படம்பிடிக்கப்பட்டிருக்க முடியும். ஏனென்றால், கதைக்குத் தேவைப்படுவது, வேறுநாட்டிலிருந்து போரால் பாதிக்கப்பட்டு, எப்படியோ தப்பி வந்து, மேற்கில் அகதிகளாகக் குடியேறி, அங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் ஓர் இனக்கூட்டம் ஆகும். 

அதை எதிர்க்கும் பூர்வக்குடி அமைப்பு; அந்த எதிர்ப்பை முறியடிக்கும் நாயகன். இந்த வகை திரைப்படங்களில், உண்மைக்கு மாறான காட்சிப்படுத்தல்கள் பற்றிய பிரச்சினைகள் எழுந்தாலன்றி, இவற்றின் அரசியல் தாக்கம், முக்கியத்துவம் பெருமளவுக்கு இல்லை. 

ஆனால், மூன்றாவது வகையைச் சார்ந்த படைப்புகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவை அரசியல் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசும் படைப்புகளாக அமைகின்றன. அதனால்தான், அவை பிரச்சினைக்கு உரியவையாகவும் சிக்கலானவையாகவும் கருதப்படுகின்றன என்பதோடு, கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகின்றன. இந்த வகைக்குள் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும் ‘ஃபமிலி மான் 2’ திரைப்படமும் வருகின்றன. 

இந்த இந்தியப் படைப்புகளிடையே, ஓர் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம். இவை இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்தும், இந்திய அரசின் நலன் மையப் பார்வையை முன்னிறுத்தும் அரசியலை, நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தமாகச் சொல்லும் படைப்புகள் ஆகின்றன. 

அவை முன்னிறுத்தும் அரசியலுக்கும் கருத்தியலுக்கும் முரணானவற்றைப் பிழையானதாகச் சித்திரிக்கின்றன. அதனைச் செய்வதற்கு, அவை பாதி உண்மைகளை மட்டுமல்ல, பொய்களையும் பொய்யான கற்பனைகளையும் பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான், அவற்றுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தலைதூக்குகின்றன. 

இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான பகடைக் காய்களாக, ஈழத்தமிழர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘இலங்கை’ என்ற இந்தப் பூகோள தந்திரோபாயம் மிக்க தீவில், இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள, வசதியான துருப்புச் சீட்டு ஈழத்தமிழர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையும்தான். அதேவேளை, ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதை இந்திய தேசியவாதம் விரும்புவதில்லை. அது, இந்திய நலன்களுக்கு விரோதமானது என்று, இந்திய தேசியவாதம் கருதுவதாக நாம் ஊகிக்கலாம். 

ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைவை, இந்திய தேசியவாதம் ஐயத்துடனேயே அணுகியது. ராஜீவ் காந்தியின் படுகொலையுடன், ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதைத் தவிர்க்க, ஒரு புறநிலை தார்மிக நியாயப்படுத்தல் (objective moral justification) கிடைத்தது; அதுதான் பயங்கரவாதம். 

ஒரு மக்கள் கூட்டத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதுதான், அந்த மக்கள் கூட்டத்தை ஏனையோர் அச்சத்துடன் அணுகச்செய்வதற்கும், அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை, சட்டவிரோதமாக்குதவற்கு அல்லது, நம்பகத்தன்மை அற்றதாக்குவதற்கான இலகுவான குறுக்கு வழியாகும். 

இந்த மூன்றாவது வகையிலான படைப்புகள், இதைத்தான் செய்கின்றன என்பதுதான், ஈழத்தமிழர்கள் பலரும் இவற்றை விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அடிப்படைக் காரணம் ஆகும். நிற்க!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியப் படைப்புகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அவர்களால் கட்டளையிட முடியாது. அதுபோலவே, கற்பனைகளைத் தணிக்கை செய்வது, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்புடைய வழிமுறையும் அல்ல. 

படைப்பது ஒருவரது சுதந்திரம் என்றால், அதற்கான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைப்பது, மற்றவருடைய சுதந்திரம். ஆனால், வெறும் எதிர்ப்போடும் விமர்சனத்தோடும் நின்றுவிடாது, மாற்றுப் படைப்புகளை முன்வைப்பதுதான், நீண்டகாலத்தில் பயனுள்ள தீர்வாக அமையும். 

இந்த இடத்தில்தான், ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் மறுமலர்ச்சி பற்றி, ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சாத்தியப்படக் கூடியதே!

படைப்பு, மக்களைக் கவர்வதாக அமைகின்ற போது, அது அனைவரையும் வெற்றிகரமாகச் சென்றடையக்கூடிய, திறந்த வாய்ப்புகள் உள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாற்றுப்படைப்புகள்தான் கருத்தியல் சமநிலையை உருவாக்குவதற்கான முதற்படி. அதுபற்றிப் பேசுதல், சிந்தித்தல், முயற்சிகளை முன்னெடுத்தல் என்பனதான் பயன்தருவன.

கார்த்திக் சுப்பராஜ், தனது வசனத்தில் எழுதியதுபோல, “இலங்கைல போர்னா, என்ன கொடுமைடானு உச்சு கொட்டீட்டு, அடுத்த வேலையப் பார்க்கிற கூட்டங்க நாங்க... எனக்கெப்டீங்க இதெல்லாம் புரியும்... எப்டீங்க இதெல்லாம் ஒறைக்கும்” என்பதாகத்தான், ஈழத்தமிழர்கள் பற்றிய இரக்கம் மிகுந்த தமிழக உறவுகளின் நிலையே இருக்கிறது. 

ஆகவே, இந்திய சினிமாவில், ஈழத் தமிழர்களைப் பற்றிய முழுமையான புரிதல் மிக்க படைப்புகளை வழங்கவேண்டும் என்று எண்ணுவது அதீத எதிர்பார்ப்பாகவே அமையும். அவர்கள் விசுவாசமாக, அதை முயன்றாலும் கூட, அது கடினமானதே! ஆகவேதான், தனக்கான குரலாகத் தானே இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

‘தொப்புள் கொடி உறவுக்கு’ என்று ஒரு தார்ப்பரியம் இருக்கிறது. தொப்புள்கொடி என்பது, பிறந்தவுடன் வெட்டிவிடப்படும் ஒன்று. அது, இருந்ததற்கான அடையாளம் மட்டும் இருக்கும். பாசம் இருக்கலாம்; பற்றும் இருக்கலாம். ஆனால், தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு; அதுதான் யதார்த்தம்!
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-சினிமாவும்-ஈழத்தமிழர்களும்/91-274639

இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு

1 day 14 hours ago
இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – யே.மேரி வினு
 
Capture-18-696x510.jpg
 33 Views

கடந்த 2019 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல் எல்லைக்குள் உள்ள ஒரு நாடாகக் காணப்படுகின்ற அதேவேளை, உலக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாடாகவும் கடந்த காலங்களிலிருந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தற்கால அரசியல் நகர்வை பின்வரும் ஐந்து அம்சங்களின் ஊடாக முன்வைக்கலாம். இந்த அடிப்படையில் விரிவாக நோக்குகின்ற பொழுது,

 1. இராணுவ ஆதிக்கவாதம்

இராணுவ ஆதிக்கவாதம், இலங்கையின் தற்கால அரசியலில் முக்கியமான அம்சமாக உள்ளது. நிர்வாக அமைப்பில் இராணுவத்தினர் இணைக்கப்படுகின்றனர். குறிப்பாக, தற்போதைய அரசாங்கத்தில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கியமான பதவிகள் தற்போது இராணுவத்தினர் வசமாகி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்த பின் அவருக்குக் கீழ் உள்ள பதவிகளுக்கு இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான செயலாளர் பதவிக்கு இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வகையில் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க பொறுப்பிலுள்ளார். அதுமாத்திரமன்றி, ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.கே.எஸ்.பெரேரா, மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பிலுள்ளார். அத்துடன் இராணுவத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதி இராணுவத்தில் இருந்த காலகட்டத்தில் கஜபாகு படையணியில் கடமையாற்றிய ஆறு ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களை அவர் தனது அணிக்குள் உள்வாங்கியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக்கும் பல இராணுவத்தினர் இவ்வாறு பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய 14 இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உத்தியோகபூர்வ பதவிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் எனும் அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த நிலையில், இலங்கையானது, தற்போது இராணுவ அதிகாரிகள் கூட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்ற அரசியல் போக்கினைக் கொண்டுள்ளதென அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது. அத்துடன் இலங்கை அரசின் தற்போதைய நிர்வாக அமைப்பில் நியமனம் செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் என பின்வருவோரை குறித்த அமைப்பு இனங்காட்டியுள்ளது.

 1. லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா
 2. மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே
 3. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
 4. மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா எகொடவல
 5. மேஜர் ஜெனரல் கே. ஜகத் அல்விஸ்
 6. மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க
 7. மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராட்ச்சி
 8. மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா
 9. மேஜர் ஜெனரல் விஜித்த ரவிபிரிய
 10. மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்ச்சி
 11. பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க
 12. பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ
 13. பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே
 14. எட்மிரல் ஜயநாத் கொலம்பகே
 15. உதவி போலிஸ் அத்தியட்சகர் பிரியந்த டி அல்விஸ்

இவர்களைத் தவிர, மேலும் பலர் அரச நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பல அரச நிறுவனங்களில் சிவில் அதிகாரிகள் இருக்க வேண்டிய இடங்களில், படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாடாளுமன்றத்தை முடக்கி, ஜனநாயக அரசியல் ஓட்டத்தைத் தடுத்து, தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதனையும் இராணுவ மயமாக்கலுக்குள் இலங்கையின் சமகால அரசியல் செல்வதனையும் அறுதியிட்டுச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக :- 01

Capture.JPG-1-7-300x151.jpg

 1. குடும்ப ஆட்சி ( ராஜபக்சமயம்)

குடும்ப ஆட்சி இலங்கையின் சமகால அரசியலில் மிக முக்கியமான அம்சம். இலங்கை ‘ராஜபக்சமயம்’ என்று தற்போது கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தாரின் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் மேலோங்கி வருவதனைக் காணலாம். குறிப்பாக 2009இல் கிடைத்த யுத்த வெற்றியின் விளைவாக ராஜபக்ச குடும்பத்தார் தென்னிலங்கை அரசியலில் விரும்பப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும், இலங்கையில் இருந்த காலத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பின்னர் 2019இல் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகு ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முழுமையாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதெனலாம். அத்துடன் அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் இலங்கை அரசியலில் புதிய விடயம் இல்லை என்றாலும், தற்போதைய இலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ச குடும்பம்தான் என்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட யுத்த வெற்றி, சிங்களப் பெரும்பான்மை சமூகத்தினரிடையே ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கை உயர்த்திப் பிடிப்பதாக அமைந்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே ‘ராஜபக்சமயம்’ நுழைந்தது. முக்கியமாக தற்போது தென்னிலங்கையில் எங்கு திரும்பினாலும் ராஜபக்ச குடும்பத்தாரின் சுவரொட்டிகளைத்தான் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. “ஜனாதிபதியின் சகோதரர்கள், மகன்கள், அத்தைகள், உற்றார் என்று எல்லோரும் அவர்களாகவே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வேறு யாரும் அரசியலில் முன்னுக்கு வருவதற்கு அவர்கள் இடம் தருவதே இல்லை.” என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தற்போதைய இலங்கையின் அரசியலில் குடும்ப ஆட்சி மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.

 1. ஒடுக்குமுறைச் சிந்தனை

ஒடுக்குமுறைச் சிந்தனை என்ற வகையில், இலங்கையின் தற்போதைய அரசியலை நோக்குகையில், இலங்கையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகள் தற்போதைய அரசியலில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுபான்மை இனங்களைக் குறிவைத்து ஒடுக்குமுறை நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக சிறுபான்மையினரின் வாய்ப்புகள், உரிமைகள், அனுபவிப்புகள் போன்றவற்றில் திருப்தியின்மை ஏற்படுத்தப்படுகிறது. ஜனநாயகப் போர்வை அணிந்த பெரும்பான்மை சிங்களப் பேரினவாத அரசால் நன்கு திட்டமிட்ட வகையில் ஒடுக்குமுறைச் சிந்தனைகள் இலங்கையில் தூவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எடுத்துக்காட்டு -01

புர்க்கா ஒடுக்குமுறையைச் சொல்லலாம். முஸ்லிம்களின் ஆடைக் கலாச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை சிறுபான்மை முஸ்லிம்களை இலங்கை அரசியலில் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது. அவர்களது மதப் பாரம்பரிய நம்பிக்கை மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுபான்மை முஸ்லிம் அமைச்சர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமாகக் கைது செய்யப்பட்டமை போன்றவற்றை கூறலாம். இவை மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கொண்டு தற்கால அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

எடுத்துக்காட்டு-02

தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக தற்போது நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் மகாவலி அபிவிருத்தி ஊடான ஆக்கிரமிப்புப் போன்றன பலவந்தமாக முன்னெடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகள் எனலாம். சிறுபான்மை இன மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்டுக் குடியேற்றங்கள் நடைமுறைப்படுத்துதல், மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக சிறுபான்மையினர் பிரதேசங்களில் மதத் தலங்களை நிறுவுதல் போன்ற அரசியல் நகர்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவையெல்லாம் சிறுபான்மை மக்களை புறமொதுக்கல் செய்கின்றன.

எடுத்துக்காட்டு-03

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும், வடக்கு கிழக்கு பிராந்தியத்திலுள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பல முறை பேரணிகள் நடத்தப்பட்டு, அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தில் சிறந்த அரசியல் தீர்வு இன்னும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த யுத்தத்தின் போது ஜனாதிபதியாக இருந்தவர் தற்போதைய அரசியல் நிர்வாகத்தில் பிரதமராக இருக்கையில், மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்படுவதாக பலரும் விமர்சனம் செய்து வருவதனைக் காணலாம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பதவியேற்பு நிகழ்வு உரையில் “நான் சிறுபான்மையினர் வாக்குகளால் ஜனாதிபதி ஆகவில்லை” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தமையானது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இவ்வாறு ஒடுக்குமுறைச் சிந்தனைகள் தற்போதைய அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஆயிரம் பேர் வேலைவாய்ப்புத் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறு ஒரு அநாகரீகமான பழிவாங்கல் ஒடுக்கல் தற்போதைய அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக ஏற்படுத்தப்படுகின்றது எனலாம்.

தொடரும்….

யே.மேரி வினு

4ம் வருடம்

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

https://www.ilakku.org/?p=52928

 

ஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்

1 day 14 hours ago
ஜிஎஸ்பி வரிச்சலுகை விவகாரம்: மோசமான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு – பி.மாணிக்கவாசகம்
 
Capture-17-696x487.jpg
 13 Views

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தை மோசமானதொரு நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. கோவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ள நாட்டின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கு இந்தத் தீர்மானம் அடிகோலியிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் ஜனநாயகம் மற்றும் சர்வதேச மனித உரிமை, அதனுடன் சார்ந்த மனிதாபிமான நியமங்களுக்கு முரணானது. அது மோசமான சர்வாதிகாரப் போக்கைக் கொண்டது என்ற காரணத்தினால், அந்தத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இந்தச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியதிகளுக்கு உட்பட்ட வகையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு. எனவே தனது நிலைப்பாட்டிற்கு அமைவாக இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி சலுகையை நிறுத்த வேண்டி இருக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் அந்நிய செலவாணியிலேயே தங்கியிருக்கின்றது. அதிலும் ஆடை உற்பத்தித் தொழிலே அந்த அந்நிய செலவாணியின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. இந்த ஆடை உற்பத்திக்குரிய பிரதான சந்தை வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையிலேயே அரசுக்கு இலாபம் தரத்தக்க வகையில் அமைந்துள்ளது. இலங்கையின் 52 வீதமான அந்நிய செலவாணியை இந்த ஆடைத் தொழிலிலே ஈட்டித் தருகின்றது என அரச பொருளாதாரப் புள்ளிவிபரத் தகவல் ஒன்று கூறுகின்றது.

இதன் காரணமாகத்தான் பயணத் தடை நடைமுறையில் இருக்கின்ற நிலையிலும், நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை சோர்வின்றி செயற்படுத்துவதில் அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகின்றது. ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் எண்ணிக்கையில் நெருக்கமாக இருந்து செயலாற்றுகின்ற ஊழியர்கள் மத்தியில் கோவிட் 19 தொற்று அவதானிக்கப்பட்டுள்ள ஆபத்தான நிலைமையிலும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆடை உற்பத்தித் தொழிற்துறையின் செயற்பாட்டை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

ஆடைத் தொழிற்துறையில் சர்வதேச அளவில் போட்டியும் இருக்கத்தான் செய்கின்றது. பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தத் தொழிற் துறையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் ஜிஎஸ்பி வரிச் சலுகையின் மூலம் இலங்கை இந்தத் தொழிற் துறையில் அதிக இலாபத்தை ஈட்டக் கூடியதாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயற்படா விட்டால், இந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்கு முன்னரும் தற்காலிகமாக இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை மீண்டும் பெறுவதற்காக முன்னைய அரசாங்கம் பெரும் பாடுபட நேர்ந்திருந்தமை கவனத்திற்கு உரியது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதாக அந்த அரசு உறுதியளித்திருந்ததுடன், அது தொடர்பிலான சில பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அதிகாரத்தைக்  கைப்பற்றிய ராஜபக்சக்கள் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மனித உரிமை நிலைமைகளைத் தலைகீழாக்கி உள்ளனர்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனை விலக்கு விசாரணையாளர்கள் கைது

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான பொறுப்புக் கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப் பட்டிருந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்தப் பிரேரணைக்கு முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கி, அதனை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய அரசு அந்த இணை அனுசரணையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகியது மட்டுமல்லாமல், பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற முடியாது என்றும் மறுத்துரைத்து விட்டது.

அது மட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் விடயங்களில் ஆதாரபூர்வமான சில வழக்கு விசாரணைகளையும் இடைநிறுத்தி, அவற்றில் குற்றம் சாட்டப்பட்டிருந்த படையினரையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்து விட்டது. அத்துடன் அந்த முக்கிய வழக்குகளில் நியாயமான முறையில் புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட படை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த திறமை வாய்ந்த காவல்துறை உயரதிகாரிகள் பக்கச் சார்பாக நடந்து கொண்டார்கள் என்றும், வேண்டுமென்றே படை அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்து கொண்டார்கள் என்றும் குற்றம் சாட்டி, கைது செய்து ஒரு வருட காலம் பிணை அனுமதியின்றித் தடுத்து வைத்து விசாரணைகளையும் நடத்தி உள்ளது.

இந்தக் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான நியாயமற்ற அரசாங்கத்தின் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் சுட்டிக்காட்டிக் கண்டித்திருக்கின்றது.

மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமை நிலைமைகளைச் சீர்செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவை போன்ற அமைப்புக்களின் ஊடாக சர்வதேசம் விடுத்திருந்த கோரிக்கை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இராணுவத்தினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதத்துடன் குற்றம் செய்தவர்களைத் தண்டனை பெறுவதில் இருந்து அரசு பாதுகாத்து வருகின்றது. இது மனித உரிமைகள் விடயத்தில் குளிக்கப் போய் சேறு பூசிய கதையாகவே முடிந்துள்ளது.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை பற்றிய இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், நீதியும் நியாயமும் நிறைந்த முறையான சட்டவாட்சியின் சீர்குலைவு, பன்மைத் தன்மை கொண்ட ஜனநாயக நடைமுறைகள் புறந்தள்ளப் பட்டிருக்கும் நிலைமைகள் போன்ற இலங்கையின் உள் விவகாரங்கள் மட்டுமல்லாமல் வேறு காரணங்களும் இருக்கின்றன.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சீன சார்புப் போக்கு அதன் அயலில் மிகப் பெரிய ஜனநாயாக நாடாகிய பாரத தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சீனாவுடனான கலை, கலாசார, வர்த்தக, பொருளாதார நடவடிக்கைகள் என்பனவும் முக்கிய காரணங்களாக அவதானிக்கப் பட்டிருக்கின்றன.

இலங்கை ஒரு பாரம்பரிய ஜனநாயக நாடாக நோக்கப்படுகின்ற போதிலும், ராஜபக்சக்களின் அதிகாரத்தின் கீழ் இராணுவப் போக்கும் சர்வாதிகார ஆட்சி முறையும் அதன் ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைப்பனவாக அமைந்திருக்கின்றன. சிவில் ஆட்சியில் இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார பலம் வாய்ந்த முக்கியத்துவம், மத, இன சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஒடுக்கு முறை நடவடிக்கைகள், குடும்ப ஆட்சியை மேம்படுத்துவதற்கான அதிகாரப் போக்கு என்பனவும் சர்வதேசம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு முக்கிய காரணங்களாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி

குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்தகால யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு, சர்வதேச ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு வருடங்களாகின்றன. ஆனால், உள்நாட்டு யுத்தம் ஒன்று மூள்வதற்கான காரணங்கள் சரியான முறையில் இனங் காணப்பட்டு, அரசியல் ரீதியாக அவற்றுக்குத் தீர்வு காணப்படவில்லை.

அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களாகத் திரித்துக் காட்டப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை போலியாக ஆட்சியாளர்களினால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு அரசியல் ரீதியான மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும், அரசியல் ரீதியான எதிரிகளையும் அடக்கி ஒடுக்குவதற்கே பயங்கரவாதத் தடைச்சட்டம் பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. இந்த வகையிலேயே சிறுபான்மை இன மதத்தைச் சேர்ந்தவராகிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்டவர்களை அரசு கைது செய்தது.

விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பயங்கரவாதம் தலையெடுக்கவே இல்லை என்று அடித்துக் கூறுகின்ற அரசாங்கமே தமிழர்கள் தமது ஆட்சி உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை பயங்கரவாதத்தை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகள் என திரித்துக் கூறி, அவற்றை அடக்கி ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த அடாவடித்தனமான போக்கும் சர்வாதிகாரச் செயற்பாடும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும், சர்வதேசத்தினதும் ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் மனித உரிமை நிலைப்பாட்டிற்கு நேர் விரோதமானவை. இதனை சகித்துக் கொள்ளப் போவதில்லை என்ற இறுக்கமான செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பிலான தீர்மானம் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

ஜிஎஸ்பி வரிச் சலுகையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அரசு மனித உரிமை நிலைமைகளை சீராக்குவதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிப் போக்கு இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு இடமில்லை என்பதையே கோடி காட்டி நிற்கின்றன.

அது மட்டுமல்லாமல், சீனச் சார்பு கொள்கைகளிலும் அரசு விடாப்பிடியான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. கொழும்புத் துறைமுக நகரத்தை நாட்டின் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றது.

இந்தத் துறைமுக நகரத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கனவில் சஞ்சரிக்கின்ற அரசு, சீன ஆதிக்கத்தின் பின்விளைவுகள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவோ அல்லது அது குறித்து அக்கறை கொண்டிருப்பதாகவோ தெரியவில்லை.

வெறுப்பாக மாறிவரும் மக்களின் அதிருப்தி

இந்த நிலையில் தறி கெட்டதொரு வழியில் செல்கின்ற ஆட்சிப் போக்கின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிறுத்துமேயானால், பாரிய விளைவுகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும்.

கோவிட் 19 பெருந் தொற்றுப் பரவி, பல நாடுகளையும் பதகளிக்கச் செய்துள்ள இந்த வேளையில், ஜிஎஸ்பி வரிச்சலுகை நிறுத்தம் காரணமாக ஆடை உற்பத்தித் தொழில் துறை பாதிக்கப்படும் போது, அதில் முதலீடு செய்துள்ள வர்த்தக நிறுவனங்கள், தமது முதலீட்டை இலங்கையில் இருந்து நகர்த்தி வர்த்தக வாய்ப்புள்ள நாடுகளுக்கு மாற்றுகின்ற நிலைமை நிச்சயம் உருவாகும்.

அவ்வாறு முதலீட்டாளர்களை இழந்தால், நாடு பெரும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும். ஏனெனில் இன்று ஆடைத் தொழில் உற்பத்தியிலேயே நாடு கணிசமான தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தொழில் இழப்பார்களேயானால், கோவிட் 19 இன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நிலையில் நாடு மிக மோசமான நிலைமைக்குள் தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமன்றி, அரசாங்கம் தனது போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தா விட்டால், ஆட்சி மாற்றம் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய புறச்சூழல் ஒன்றும் வலிந்து உருவாகும் என்பதையும் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம். ஏற்கனவே கோவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதில் தடுமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்ற அரச நடவடிக்கைகளில் சிங்கள மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த பௌத்தமதத் தலைவர்களும் அரசு மீது பெரும் அதிருப்தியைக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்து வைத்துக் கொண்டுள்ள நிலையிலும், கொரோனா பெருந்தொற்றை சமயோசிதமாக எதிர்கொள்ள முடியாமல் திண்டாடும் அரசு மீதான அதிருப்தி வெறுப்பாக மாறிக் கொண்டிருக்கின்றது என்பதையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டிய நிலைமைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கின்றது.

 

 

https://www.ilakku.org/?p=52918

இணைப்போமா? இணைவோமா?

2 days ago
இணைப்போமா? இணைவோமா?
 
%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%
 238 Views

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது.

இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்றுத் தொடர்புடன் விளங்கும் தீவு. உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களும், வர்த்தகக் கப்பல்களில் அரைவாசிக்கு மேற்பட்டனவும் பயணிக்கும் கடல்வழிப் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மாலைதீவு உலகச் சந்தை,  உலகப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று உள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் இருந்து 1200 கிலோ மைலிலும், இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தில் இருந்து 700 கிலோ மைலிலும் உள்ளது மாலைதீவு.  1965இல் மாலைதீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக அரை நூற்றாண்டுக்கு மேலாக 52 ஆண்டுகள் மாலைதீவு, இந்திய மேலாண்மையுள் விளங்கிய நாடு. 1988இல் அன்றைய சர்வாதிகாரத் தனமான மாலைதீவு அரச அதிபர் மாமூன் அப்துல் கயாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக நடந்த சதியை இந்தியா தனது படையினை அனுப்பி முறியடிக்கும் அளவுக்கு இந்திய மேலாண்மையைக் கொண்டிருந்த நாடு மாலைதீவு. இந்தியாவைச் சார்ந்து நின்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தையும், இந்தியா மாலைதீவு அரசியலுள் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தியது என்பதும் வரலாறு.

மேலும் புவியியல் சூழல் காரணமாக உள்ள பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதை அரசறிவியலில் ‘பின்லன்டனிசம்’ என்பர். அதாவது பின்லாந்து மேல் யேர்மன் மேலாதிக்கம் செலுத்திய இயல்பு நிலையையும், பின்லாந்து,  ‘இஸ்காண்டிநேவிய’ நாடுகளுடனான இணைவின் வழி அதனை வென்று, செயற்படும் வரலாற்றையும் இந்த ‘பின்லன்டனிசம்’ என்னும் சொல்லாட்சி குறிக்கும். சிறு நாடும் கூட நாடுகளின் கூட்டுகளுள் இணைவதன் வழி தம்முடைய தன்னாட்சியினை உறுதிப்படுத்த முடியும் என்னும் இந்த வரலாற்று உண்மைக்கு, மாலைதீவின் சமகால வரலாறு மற்றொரு சான்றாகிறது.

2014 இல் சீனாவின் அரச அதிபர் சீ ஜின்பிங்கின், அதுவரை தூதரகத் தொடர்புகள் கூட இல்லாதிருந்த மாலைதீவுடன், “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்” என்னும் அவருடைய தத்துவத்தின் அடிப்படையில் சீன – மாலைதீவு நட்புப் பாலத்தை உருவாக்கினார். இது சீனாவின் 21ஆம் நூற்றாண்டில் மீளவும் முன்னைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடாகிய ‘மண்டலங்களையும் பாதைகளையும்’ அமைத்தலுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உருவாக்க உதவியது. இதன்வழி மிக அதிகளவிலான உட்கட்டுமான வளர்ச்சியை மாலைதீவுக்கு ஏற்படுத்த உதவும் நிதியளிப்புக்களையும், கடனளிப்புக்களையும் சீனா தொடங்கியது. 08.12.2017 இல் மாலைதீவின் அரச அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் மாலைதீவு, சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டாவது தெற்காசிய நாடாகக் கையெழுத்திட்டது. மாலைதீவுடனும், சிறீலங்காவுடனுமான சீனாவின் நெருக்கம், இன்று இந்தியாவின் இலட்சத்தீவில் நேரடியல்லாத மூலதனமிடும் அளவுக்குச் சீனா தன்னை அகலப்படுத்தச் சீனாவுக்கு உதவியுள்ளது. இது இன்று இந்துமாகடலில் சீனாவின் பட்டுப்பாதை குறுகிய காலத்தில் விரைந்து எழும் புதிய வரலாற்றின் செல்நெறியாகிறது.

இந்நிலையில், இந்துமாகடலில் தன் மேலாண்மையுடன் கூடிய அமைதியினை உறுதிப்படுத்தும் அரசியல் மூலோபாய நோக்கில்தான்,  2018இல் இந்தோனேசியா மாலைதீவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலையான உறுப்பினரல்லாத, உறுப்புரிமைக்குப் போட்டியிட்ட போது, இந்தியா இந்தோனேசியாவை ஆதரித்து வெற்றிபெற வைத்தது.

ஆனால் இன்று சீன – மாலைதீவு நட்புறவுப் பாலம் இறுக்கமடைந்த நிலையில், மீளவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராவதை ஆதரித்துள்ளது.

இது ‘எதிர் காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்’ என்னும் சீனத் தத்துவத்தின் ஆற்றலாகப் பார்க்கப்பட வேண்டிய ஓன்றாகவுள்ளது. இந்தத் தத்துவத்தை ஈழமக்கள் இன்று தங்கள் அரசியல் மூலோபாயமாகக் கொள்ள வேண்டிய நேரமிது.

அதாவது சிறீலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் மாலைதீவைச் சேர்ந்த அப்துல் சாகிட் அவர்களின் தலமையிலேயே தொடங்கப் போகின்றது. இந்நிலையில், மாலைதீவுடன் ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொன்மையின் பழமையும் இன்று ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொல்லைகளின் நிலைமைகளும் ஈழத்தமிழர்களால் எந்த அளவுக்குத் தெளிவாக்கப்படப் போகின்றன என்பதிலேயே ஈழத்மிழர்கள் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் பலமாக ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாலைதீவுடன் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் அத்தனையுடனும், ஈழத்தமிழர்கள் தங்களின் உலகளாவிய நிலையில் பரந்துள்ள புத்திஜீவித் தனத்தையும், சமூக மூலதனங்களையும், எந்த அளவுக்கு இணைப்பார்கள் – எந்த அளவுக்கு ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைவார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளமைக்கப்படும் காலத்தின் குறுக்கம் உள்ளது என்பதே ‘இலக்கின்’ இவ்வார எண்ணமாக உள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=52910

 

 

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

2 days 9 hours ago

 

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை போல
அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?
சுரேனும் சுமந்திரனும் முன்னோடி ஆலோசனையா? சுமந்திரன் மறுக்கிறார்
 
 
Sumanthiran-Suren-Namal
 
 
ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
 
ஈழப்போரின் இறுதி முடிவாக இலங்கை அரசின் போர் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு மேற்குலகத்தை விடவும் இந்தியத் தரப்பினால் அழுத்தம் ஏற்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்கு இருந்தது

 

மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'பிரதிநிதி'களுடனான அந்தக் கூட்டத்திலே கூட ஒருவர் மீது கணினித் தொடர்பு குறித்த ஐயம் ஏற்பட்டதால் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இவ்வாறான ஏதேனும் சந்திப்பில் அண்மையில் திரு சுமந்திரன் அவர்கள் பங்குபற்றியதை அவரிடமே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் அவரிடம் தொடர்புகொண்டு வினாவியபோது இந்த விதமான எந்தக் கூட்டத்திலும் தான் பங்குபெறவில்லை என்று அவர் கூர்மை ஆசிரிய பீடத்தவருக்குத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அதேவேளை, இந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவராக விளங்கிய எஸ். ஜே. இமானுவல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்திலே தற்போது தங்கியிருக்கிறார். அவரிடமும் கூர்மை ஆசிரிய பீடம் தொடர்புகொண்டு அவரது பதவி குறித்து வினாவியபோது தான் அந்த அமைப்பில் இருந்து பதவி விலகிவிட்டதாகவும், அரசியற் சிக்கல்களுக்கு உள்ளாகத் தான் விரும்பவில்லை என்றும் மக்கள் சேவை என்பதில் மட்டுமே தனது கவனத்தைத் தான் தற்போது செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அடிகளாருக்குப் பின்னர் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பதவி இன்னமும் இட்டுநிரப்பப்படாது காலியாக இருப்பதாகவும் சுரேன் சுரேந்திரன் மாத்திரமே அதனை இயக்கிவருவதாகவும் அறிய முடிறது. அவரோடு சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக தொடர்பு கொள்ள நாம் முயற்சி எடுத்தபோதும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

எனினும், ஆதாரபூர்வமாக அந்தச் சந்திப்பு ஒரு கணனியின் மூலையில் இருந்து பதிவுசெய்யப்பட்ட ஒளிப்பதிவு ஆதாரத்தை கூர்மையின் ஆசிரியபீடம் நேரடியாகப் பார்வையிட்ட பின்னரே இந்தக் கட்டுரை வரையப்படுகிறது.

கடந்த மாதம் திடுமென பசில் ராஜபக்ஷ கோவிட் பயண நெருக்கடிக்குள்ளும் அமெரிக்கா பயணமாகத் தயாராகிய வேளையில் இறுதிக்கணத்திலேயே அந்தப் பயண விடயம் அவரது சகோதரர்களான இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியவந்ததாகவும் இது குறித்து அவர்கள் ஓர் அவசர கூட்டத்தையே நடாத்தவேண்டியிருந்ததாகவும் கொழும்பில் வெளிவரும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தன. தனது வைத்தியம் தொடர்பான விடயமாகவே அவர் அமெரிக்காவுக்கு சகோதரர்களுக்கும் அறிவிக்காமல் பயணிக்க ஒழுங்கு செய்திருந்ததாகவும் குறித்த செய்திகள் சிலாகித்திருந்தன.

இதேவேளை ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் மனக்கசப்புகள் தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாடும் பத்திரிகை உலகில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரர்களுக்கிடையே முரண் நிலை தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாட்டை வேண்டுமென்றே சில இராஜதந்திர நகர்வுகளுக்காக அவர்கள் உருவாக்கி அதைத் தென்னிலங்கை வட்டாரங்களும் நம்பும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ராஜபக்ஷ சகோதரகள் தமக்கு அரசியல் நெருக்கடிகள் தோன்றும் போது அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்காக பயணிப்பது முன்னரும் பல தடவைகள் நடந்திருக்கிறது என்பது நாம் அறியாத ஒன்றல்ல.

குறிப்பாக, 2009 இன அழிப்புப் போராக ஈழத்தமிழர்களால் குறிப்பிடப்படும் யுத்தகாலத்தின் இறுதி நாட்களில் தமிழர் தரப்புடன் தொடர்புடைய அரசியற் பிரமுகர்களுடன் பசில் ராஜபக்ஷ சில சமிக்ஞைகளைப் பரிமாறியதும் வாக்குறுதிகளை வழங்கியதும் அதேவேளை அச்சமிக்ஞைகளையும் வாக்குறுதிகளையும் நன்கு அறிந்திருந்த அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான அவரது இளைய சகோதரரின் உத்தரவு எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்களை இலங்கை இராணுவத் தரப்பின் தளபதியாக இருந்தவர்களும் சணல் நான்கு போன்ற சர்வதேச ஊடகங்களும் மனித உரிமைத் தரப்புகளும் 2009 இன் பின்னான சில வருடங்களுக்குள் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தன.

அதேவேளை, ஈழப்போரின் இறுதி முடிவாக இலங்கை அரசின் போர் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு மேற்குலகத்தை விடவும் இந்தியத் தரப்பினால் அழுத்தம் ஏற்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்கு இருந்தது. தமிழ் நாட்டின் ஊடாக காங்கிரஸ் ஆட்சி மீது ஏற்படக்கூடிய தேர்தல் கால அரசியல் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சவாலை கோட்டபாய ராஜபக்ஷவும் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவும் ஆழமாக உணர்ந்திருந்ததால் மூவர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை (troika) இந்தியாவுடனான தொடர்புக்காக பரஸ்பரம் இலங்கை அரசின் பிரேரிப்புக்கு அமைவாக இரண்டு நாடுகளும் நியமித்து மணித்தியால இடைவெளிகளுக்குள் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். இதுவே தமது போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது என்று அதற்குச் சாட்சியமான லலித் வீரதுங்க தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்ட அந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர் இலங்கைத்தீவிற்கு வந்து தனது முதிய வயதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். இவர் முன்னை நாள் வடமாகாண ஆளுநராக விளங்கிய இலங்கை இராணுவத்தளபதியான ஜீ. ஏ. சந்திரசிறீ என்பவருக்கு ஆலோசகராகவும் 2013 காலகட்டத்தில் முன்னைய ராஜபக்ஷ அரசின்போது பங்காற்றியிருந்தார்

 

இதே கருத்தை கோட்டபாய ராஜபக்ஷவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதாவது போர்நிறுத்தம் ஒன்றை உருவாக்கும் படியான அழுத்தம் எங்கிருந்தாவது இலங்கை மீது வரும் ஆயின் அது இந்தியா ஊடாக வருவதற்கே சாத்தியம் அதிகம் என்றும் அதனால் இந்தியாவை சமாளித்து போரின் முடிவைத் தமக்கேற்ற வகையில் கட்டமைக்க இலங்கை அரசுக்கு இந்த துரொய்கா அவசியமாக இருந்தது.

இந்த மூவர் கொண்ட உயர்குழுவில் பசில் ராஜபக்ஷ தனது இரண்டு சகோதரர்கள் சார்பான ஆழமான விளக்கமுள்ளவராகப் பங்கேற்றார் என்று லலித் வீரதுங்கா எழுதியிருக்கிறார்.

ஆக, பசில் ராஜபக்ஷ தனது சகோதரர்களுக்காக சர்வதேச மற்றும் தமிழ் அரசியற் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. அதற்காக அவர் எந்த எல்லையையும் தொடக்கூடியவர்.

இந்தச் சூழலில் தான் தற்போது ஒரு மாதமாக அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பதும் இவ்வாறான இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்த அமெரிக்க-பிரித்தானிய தரப்புகள் முனைவதும் வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கைச் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த நோர்வே போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறையின் முக்கிய அதிகாரிகளும் தமது பழைய தமிழ்த் தொடர்புகளை அண்மையில் புதுப்பித்து மீண்டும் 2015 நல்லிணக்க முயற்சி போன்ற ஒரு புதிய முயற்சிக்கான முத்தாய்ப்புகள் ஆரம்பிக்கவுள்ளதாக புலம் பெயர் தரப்புகளுக்கு அறியத் தந்ததாகவும் ஐரோப்பிய புலம்பெயர் வட்டாரங்கள் தெரிவித்தமையையும் இத்தோடு இணைத்து நோக்கவேண்டும்.

அதாவது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் மீண்டும் ஒன்றரை வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டமை மூலம் இலங்கை அரசு மேற்குலகுடன் ஒரு பேரம் பேசலை நடாத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கான வாய்ப்பை பிரித்தானியா தலைமையிலான கருக்குழு நாடுகள் ஏற்படுத்தியிருந்தன.

இந்தச் சூழலில், சீனாவுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ஒருபுறம் தீவிரமாக ஏற்படுத்தி, இந்தியாவை விடவும் மேற்குலகுடன் நேரடியாக ஒரு பேரம் பேசலை மேற்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயங்கவேண்டிய சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, புதிய மறைமுகப் பேச்சுவார்த்தைக்கான நகர்வு என்பது மிகவும் ஆழமான அவதானத்துடன் நோக்கப்படவேண்டியது.

இந்தப் போக்கிலேயே இரண்டு விடயங்களை நாம் கூர்மையாக நோக்கவேண்டியிருக்கிறது.

முதலாவது, மேற்குலக நாடுகள் தமது முன்னைய பாணியில் புலம் பெயர் தமிழ் அமைப்புகளை உலகத் தமிழர் பேரவை ஊடாகவே அணுக முயல்வது என்பது.

இரண்டாவது, இந்தியா, தனது மாநிலங்களுக்குள் வந்து தங்கியிருக்கும் முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களதும் புலிகளது மறைமுக முன்னாட் செயற்பாட்டாளர்கள் மூலமாகவும் புலம் பெயர் அமைப்புகளைத் தமது வியூகத்துக்குள் தமிழ்த் தேசியம் என்ற மாயத் தோற்றுப்பாட்டின் ஊடாக மறுசீரமைத்து வியூகப்படுத்தி வருகின்றமை என்ற விடயமாகும்.

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு பிரித்தானியாவில் 2009 நவம்பரில் பதியப்பட்டு இயங்கிவருகின்ற ஒரு அமைப்பு. ஆனால், பிரித்தானிய தமிழர் பேரவை என்று மக்களால் அறியப்பட்ட அமைப்பில் இருந்தே அது உருவாகி இருந்தது.

தற்போது அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை நடாத்தவேண்டும் என்ற முனைப்பில் உலகத் தமிழர் பேரவை செயற்படும் அதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பு அமெரிக்காவில் பதியப்பட்டுவருகிறது. இந்த அணியில் இந்தியத் தொடர்புள்ள ஒரு சில புலம் பெயர் அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. இவை தமிழ்த் தேசியம் தமிழ் உரிமை பேசும் அமைப்புகளாகவும் தமிழ் இன அழிப்புக்கான நியாயம் கோரும் போக்கையும் கொண்டுள்ளன. எனினும் இந்த முயற்சியின் மூலக்கயிறு எங்குள்ளது என்பது இன்னும் தெளிவாகப் புரியவில்லை. ஆனால், பரந்தன் இராஜன் தொடர்புகள், தமிழ்நாட்டில் உள்ள சில முன்னாள் வன்னி மாஸ்டர்களின் தொடர்புகள் உள்ள நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

கரட்டும் குச்சியும் (carrot-and-stick) என்ற தந்திரோபாயத்தை இலங்கைத் தீவின் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் அரசை நோக்கி மேற்குலகும் இந்தியாவும் இணைந்தும் தனித்தனியாகவும் தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசும் விடாப்பிடியான சீனசார்புப் போக்கை மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் காட்டி மிரட்டுவதன் ஊடாக ஆழமான ஆபத்துக் கலந்த - ஆனால் துணிகரமான - பேரம்பேசலுக்கான அடிப்படைகளைச் செதுக்கிவந்துள்ளது (இதை அறியாத தமிழர் தரப்பு ஆய்வாளர்கள் பலர் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து மீள முடியாத பிடிக்குள் ஏற்கனவே சென்று விட்டதாக முன்கூட்டியே முடிவெடுத்த நிலையில் தமது கருத்துகளை வெளியிட்டு தமிழர் தரப்பைத் தவறாக வழிநடாத்திவருவது கவலைக்குரியது).

 

வெளிச்சக்திகளின் தலையீட்டால் தமது ஸ்ரீலங்கா இறைமை பங்கமடைந்தாலும் ஈழத்தமிழர் உரிமை பெற்றவர்களாகவோ பேரம் பேசுபவர்களாகவோ அரசியற் சம அந்தஸ்தை எட்டிவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகள் கவனமாயிருக்கும் என்பது கண்கூடான ஒன்று மட்டுமல்ல வரலாற்று உண்மையும் கூட

 

தென்னிலங்கை, மேற்குலம் மற்றும் இந்தியத் தரப்பின் செயற்பாடுகளை மேலெழுந்தவாரியாக அன்றி, ஆழமான முறையில் கூர்மையாக நோக்கவேண்டும். இந்தவகையில் கோட்டாபய எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

இந்தியாவுடன் அல்ல, அமெரிக்காவுடன், அதாவது பைடன் நிர்வாகத்துடன், தான் ஒரு நேரடியான புரிந்துணர்வை அடுத்த ஜெனீவா மைல் கல்லுக்கு முன்னதாக (15 மாதங்களுக்குள்) எட்டிவிடவேண்டும் என்ற அடிப்படை நோக்குடன் சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று (One Belt One Road / Belt and Road Initiative) திட்டத்தின் ஊடாக தனது பொருளாதார ரீதியான உறவுகளைச் சீனாவுடன் பலப்படுத்தி, மேற்குலகு மற்றும் இந்தியாவின் கரட்டும் குச்சியும் அணுகுமுறையைத் தனது பெயரளவிலான அணிசேரா அணுகுமுறை என்பதனூடாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு என்ற புள்ளியில் ஓர் அச்சநிலையை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தோற்றுவித்து, ஈழத்தமிழர் மற்றும் மனித உரிமை தொடர்பான சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசை நிரந்தரமாக விடுவித்துக்கொள்ளும் அணுகுமுறையை அவர் எடுத்திருக்கிறார் என்பது ஊகிக்கப்படக்கூடிய ஒன்று.

வெளிச்சக்திகளின் தலையீட்டால் தமது ஸ்ரீலங்கா இறைமை பங்கமடைந்தாலும் ஈழத்தமிழர் உரிமை பெற்றவர்களாகவோ பேரம் பேசுபவர்களாகவோ அரசியற் சம அந்தஸ்தை எட்டிவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகள் கவனமாயிருக்கும் என்பது கண்கூடான ஒன்று மட்டுமல்ல வரலாற்று உண்மையும் கூட.

இந்த அடிப்படையில் தான், இலங்கையில் இனங்களுக்கிடையான நல்லிணக்கம் என்பது தீவின் மீதான பெரும்பான்மையின் முதன்மைத் தன்மையையும் ஏகத்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்களாக, சிறுபான்மையாகத் தமிழர்கள் தம்மைக் கருதி, பெரும்பான்மையின் காருண்யத்தில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாகத் தங்களைத் தாங்களே கட்டமைத்துக் கொள்வதன் மூலமே எட்டப்படக்கூடியது என்ற நிலைப்பாட்டை மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் தென்னிலங்கைத் தரப்புகள் புகட்டிவந்துள்ளன.

இதையே இலங்கை தொடர்பான மெய்-அரசியல் (realpolitik) உண்மை என்று சிங்களப் பெருந்தேசியவாதம் மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல இணக்க அரசியலில் ஈடுபடும் தமிழர் தரப்புகளுக்கும் உணர்த்துவதில் முனைப்புக் காட்டிவருகிறது.

இந்த அடிப்படையிலேயே உள்ளகமாய்ப் பிறக்கும் தீர்வு (home-grown solution) என்ற சொற்பிரயோகத்தை ராஜபக்ஷ தரப்பினர் தமது முன்னைய ஆட்சியிலும் சரி தற்போதைய ஆட்சியிலும் சரி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உள்ளகமாய்ப் பிறக்கும் தீர்வுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர் மத்தியில் காணப்படும் தமிழ்த் தேசிய அரசியல்-வெளியே (diaspora political space) முதன்மையான ஆபத்தாக தென்னிலங்கைப் பேரினவாதிகளுக்குத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் ஒற்றுமையான ஒன்றிணைந்த ஒரு தலைமை இல்லாதிருப்பது இலங்கை அரசுக்கும் மேற்கு மற்றும் இந்தியத் தரப்புகளுக்கும் தான் பெரும் கவலையாக இருக்கிறது. இந்த உண்மையையும் தமிழர் தரப்பு இன்னமும் சரிவர அறிந்துகொள்ளவில்லை.

ஒன்றிணைந்த தலைமை ஒன்று இருந்தால் அதை ஒரேயடியாக வளைத்துப் போட்டுவிடலாம்.

ஒன்றிணைந்த கூட்டாக புலம்பெயர் சமூகம் இல்லாதபடியால் அதை வளைத்துப் போடுவது மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த சவாலாகவும் சிரமமானதாகவும் புலம்பெயர்க் களநிலைமை காட்சியளிக்கிறது.

இது தொடர்பான தனது ஐயங்களை இலங்கைத் தரப்பும் இந்தியாவுக்கும் மேற்குலகுக்கும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கும் என்பதையும் நாம் ஊகிக்கலாம்.

இதே நிலைதான் தற்போது இலங்கைத் தீவுக்குள்ளும் பாராளுமன்ற அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் தரப்பை, குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இலங்கையில் வந்து சந்திக்கும் இந்தியத் தரப்பு ஏனைய தமிழ்த் தேசியத் தளத்தில் தேர்வாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்ததாக ஒன்றிணைந்த வகையில் தம்மை அணுகுமாறு வலியுறுத்திவருவதன் மூலமும் இந்தப் போக்கை நாம் காணமுடிகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர் ஒன்றிணைந்த கட்டமைப்பாக இல்லாவிடினும் கருத்து ரீதியில் அவர்களின் பெரும்பான்மை ஒன்றியைந்திருக்கும் தன்மை நிலவுவதை இந்தச் சக்திகள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளன.

இதனால், புலம்பெயர் அமைப்புகளை தனித்தனியாகவும் வேறு வேறு குழுமங்கள் என்ற ரீதியிலும் அணுகி, அவற்றை தமிழ் நாட்டிலுள்ள ஈழத்தமிழ் வழிகாட்டிகள் ஊடாக வளைத்துப் போட்டு தேவையான இடத்தில் அந்த அமைப்புகளிடையே ஒன்றிணைந்த தன்மையை உருவாக்கும் முயற்சிகளில் இந்திய மத்திய உளவு மற்றும் இராஜதந்திர அமைப்புகள் அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க-பிரித்தானிய தரப்புகளும் அதேபோன்ற கைங்கரியங்களில் ஈடுபட்டுவருகின்றன.

புலம்பெயர் அமைப்புகள் ஊடாகவே தாயகத்திலும் சில போக்குகளைத் தீர்மானிக்க இயலும் என்று இந்தச் சக்திகள் விளங்கிக்கொண்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட நகர்வை ஆரம்பிப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் இந்தியாவின் வகிபாகம் இந்த அடிப்படையிலேயே இருந்தது. எனினும் போராட்டத்தின் முடிவில் அது தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது என்பது வேறு ஒரு சுருக்கமான கதை.

தற்காலிக உற்சாகம் தரும் சுருக்கமான கதைகளை விட அவற்றின் தொடர்கதை கொண்டுவரும் ஆபத்துக் குறித்தே தமிழர் தரப்பு அவதானமாக இருக்கவேண்டும். தமிழர்கள் அவ்வப்போது சுருக்கமான உற்சாக பானங்களை அருந்துவது குறித்து வெளிச்சக்திகள் பெருமளவு அலட்டிக்கொள்வதில்லை. அவற்றைப் பொறுத்தவரை எதைப் பயன்படுத்தி எதை அடையலாம் என்பதே முக்கியமானது.

2009 இன அழிப்புப் போரின் முடிவிற்குப் பின்னர் பதின் நான்கு புலம் பெயர் அமைப்புகளின் பேரவையாக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் பேரவை (Global Tamil Forum, GTF) என்ற அமைப்பு தனது பேரவைத் தன்மையை உருவாக்கப்பட்ட சிலவருடங்களுக்குள்ளேயே இழந்துவிட்டிருந்தது.

பின்னாளில், பெயரளவில் உலகத்தமிழர் பேரவை என்று இயங்கினாலும் ஒரு பேரவைக்குரிய தன்மைகளைக் கொண்டிராத வெறும் குறியீட்டு அறிக்கை அமைப்பாகவே சுரேன் சுரேந்திரன் என்பவரால் இயக்கப்படும் இந்த அமைப்பு இயங்கிவந்திருக்கிறது என்பது பல புலம் பெயர் தமிழ்ச்செயற்பாட்டாளர்களின் கருத்து.

இந்த அமைப்புடன் இயைந்த போக்கைக் கொண்ட ஒரு சில அமைப்புகளே புலம்பெயர் சூழலில் தற்போது உள்ளன. அவையும் ஜனநாயக, மற்றும் தமிழ்த்தேசியத் தன்மைகள் அருகிப்போயுள்ள அமைப்புகளாகவே காணப்படுகின்றன.

தனிநபர்களாக இலங்கைத்தீவில் தமது சொத்துகளையும் முதலீடுகளையும் எதிர்காலத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிற சந்தர்ப்பவாத - ஆனால் தமிழ்தேசிய முகமூடி அணிந்த - நபர்கள் தனிப்பட்ட குழுமங்களாக ஆங்காங்கே இந்தக் குழுவோடு கைகோத்துள்ளனர்.

ஈழத்தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இருந்து விடுபட்டு மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இணைவான ஓர் இணக்க அரசியலை இந்த அமைப்பும் இதன் சிநேக அமைப்புகளும் தழுவிக்கொண்டுள்ளன.

உலகத்தமிழர் பேரவை உருவாகுவதற்குக் காரணமான பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamil Forum, BTF) எனும் அமைப்பும் தனது செல்வாக்கை கணிசமாக இழந்திருக்கிறது. எனினும் தமிழ்த்தேசிய அடிப்படைகளில் இருந்து அச்சு விலகிவிடாத ஒரு நிலைப்பாட்டை அது வெளிப்படுத்திவருகிறது. அது மட்டுமல்ல, பிரித்தானிய தமிழர் பேரவையானது உலகத் தமிழர் பேரவை என்ற இந்தப் பெயரளவு அமைப்போடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதும் இல்லை. அப்படியிருந்தபோதும் தனது அங்கத்துவ அமைப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் இருந்துவருவதான ஒரு பாவலாவை உலகத்தமிழர் பேரவை வெளிச்சக்திகளுக்கு அவ்வப்போது காட்டிவந்திருக்கிறது.

 

சீனாவுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ஒருபுறம் தீவிரமாக ஏற்படுத்தி, இந்தியாவை விடவும் மேற்குலகுடன் நேரடியாக ஒரு பேரம் பேசலை மேற்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயங்கவேண்டிய சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது

 

பெரும்பான்மைத் தமிழ்த் தேசிய ஓட்டத்திலிருந்து அச்சுவிலகியிருக்கும் இந்தப் புலம்பெயர் குழுவானது அமெரிக்க மற்றும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்திசைந்து செயற்பட்டுவருகிறது. குறிப்பாக, இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் மேற்குலம் இலங்கைத் தீவு தொடர்பான தனது கேந்திரத் தேவைகளை ஒட்டிய பேரம்பேசலை மேற்கொள்ளும்போது ஈழத்தமிழர்களை இலங்கை ஒற்றையாட்சியின் தற்கால அல்லது எதிர்கால ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியலுக்குப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளில் தமிழர் சார்பான எந்தவிதப் பேரம்பேசல்களும் இல்லாமல் பிற சக்திகளின் நலன்களுக்குப் பறிபோகும் அரசியலை முன்னெடுக்கும் ஒரு குழுவாகவே இது இயங்கிவருகிறது.

ஈழத்தமிழர்களை இணக்க அரசியலுக்கு உட்படுத்தி தமிழ்த்தேசிய அடிப்படைகளைப் பலவீனமாக்கும் வேலைத்திட்டங்களுக்குப் பலிபோகும் இந்த அமைப்பின் முதலாவது தலைவராக அமெரிக்காவில் புலம்பெயர்ந்திருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகச் செயற்பட்ட கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்பவர் 2009 ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 5 மாதங்கள் செயற்பட்டார்.

இவரை இலங்கையில் தேர்தலில் பங்குபற்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான இணக்க அரசியலை முன்னெடுக்குமாறு அமெரிக்கத் தரப்பு ஆலோசனை வழங்கியது. இதனை அறிந்துகொண்ட அப்போதைய பேரவையின் உறுப்பு அமைப்புகள் அவரைப் பேரவையில் இருந்து விலகிக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தன. அதன் பின்னர் எதிர் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்ட அந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர் இலங்கைத்தீவிற்கு வந்து தனது முதிய வயதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். இவர் முன்னை நாள் வடமாகாண ஆளுநராக விளங்கிய இலங்கை இராணுவத்தளபதியான ஜீ. ஏ. சந்திரசிறீ என்பவருக்கு ஆலோசகராகவும் 2013 காலகட்டத்தில் முன்னைய ராஜபக்ஷ அரசின்போது பங்காற்றியிருந்தார்.

எதிரின் பின்னர் உலகத்தமிழர் பேரவைக்கு முற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன், குறிப்பாக அதன் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும் நீண்ட கால மனித உரிமைச் செயற்பாட்டளராக விளங்கியவருமான எஸ். ஜே. இமானுவல் அடிகளார் நியமிக்கப்பட்டார்.

நீண்ட காலமாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்துவந்த இமானுவல் அடிகளார் உலகத் தமிழர் பேரவைக்குத் தலைவராக இருந்தபோதும் சுரேன் சுரேந்திரன் என்பவரே அதன் அரசியலைத் தீர்மானிப்பவராக இருந்துவந்தார். இதன் தொடர்ச்சியாக இமானுவல் அடிகளாரும் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார். தற்போது தனது முதிய வயதில் தீவுக்குத் திரும்பியிருக்கும் அவர் யாழ் மேற்றிராணியாரின் அலுவலகத்தில் வதிந்துவருகிறார். மக்களுக்குச் சேவை செய்வதில் மட்டும் தான் தற்போது நாட்டம் செலுத்துவதாக அவர் கூர்மைக்குத் தெரிவித்தார்.

உலகத்தமிழர் பேரவையானது அமெரிக்க, பிரித்தானிய, தென்னாபிரிக்க மற்றும் இந்திய சக்திகளுடன் இணக்க அரசியலை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறது. இதனால், இலங்கைத்தீவில் இயங்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் அடிக்கடி உலகத் தமிழர் பேரவையின், குறிப்பாக சுரேன் சுரேந்திரனின் நேர்காணல்களை அவ்வப்போது முக்கியத்தும் கொடுத்து பிரசுரித்துவருகின்றன. இதனாலே தனது குறியீட்டு முக்கியத்துவத்தை பலம் பொருந்த மற்றைய புலம் பெயர் அமைப்புகளையும் விஞ்சியதாக ஊடகப் பரப்பில் உலகத் தமிழர் பேரவை பேணிவருவதில் வெற்றி கண்டிருக்கிறது.

இந்த அமைப்பின் செயற்பாடு குறித்த பலத்த விமர்சனங்களின் பின்னர் பல புலம்பெயர் அமைப்புகள் இதிலிருந்து தமது வருடாந்த உறுப்புரிமைக் கட்டணத்தைச் செலுத்தாமல் விலகிக்கொண்டன.

எனினும், நல்லிணக்க ஆட்சி என்ற பெயரில் 2015 இல் மேற்குலகினதும் இந்தியாவினதும் உந்துதலினால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்ற நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிவகுப்பதில் மங்கள சமரவீரவுடன் ஒத்துழைத்து ரணில் விக்கிரமசிங்ஹா, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட ஆரம்பித்த 2013க்குப் பின்னான காலகட்டத்தில் அதே நிகழ்ச்சிநிரலில் புலம்பெயர் சூழலில் இதே உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு செயற்பட்டிருந்தது.

தமிழ் உரிமைகளுக்காக சர்வதேசத் தளத்தில் ஓங்கிக் குரல்கொடுத்திருக்கக்கூடிய எதிர் மற்றும் இமானுவேல் அடிகளார் போன்றவர்களை இலங்கைத் தீவிற்குள் தமது முதிர்ந்த வயதில் ஒதுக்கிவிட்டுள்ள அரசியல் என்பது இலங்கை ஆளும் தரப்புக்கு கிடைத்த அரசியற் புலனாய்வு மற்றும் இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படவேண்டியது என்று ஐரோப்பிய தளத்தில் செயற்பட்டுவரும் மனித உரிமை மற்றும் அரசியற் செயற்பாடு சார்ந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு இவ்வாரம் தெரிவித்தன.

நல்லிணக்க ஆட்சி தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்தபோது இந்த உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து தற்காலிகமாகக் காணாமற்போய்விட்டிருந்தது.

எனினும், மீண்டும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு இணக்க அரசியலுக்கான பின்கதவுகள் தட்டப்படுகின்ற சூழலில் புலம்பெயர் சூழலில் தூசி தட்டப்பட்டு மீண்டும் இந்த அமைப்பு களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பைடன் ஆட்சிமாற்றம் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் சூழலில் ஒபாமா மற்றும் ஹிலரி கிளின்ரன் காலத்து அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்களில் தனக்கிருந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து இலங்கை அரசு மீது ஜெனீவாவில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழுத்த அரசியல் என்ற நாணயத்தின் மறுபக்கமான இணக்க அரசியலுக்கு பயன்படும் அரசியல் வெளியை இந்த அமைப்புத் தேடிப்பிடித்திருக்கிறது என்பது புலனாகிறது. இந்த அரசியல் வெளிக்குள் பிரித்தானியாவும் 2002 சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட வடதுருவ நாடான நோர்வே போன்றவையும் தென்னாபிரிக்க தரப்புகளும் அமெரிக்காவின் நெருங்கிய இந்தோ-பசுபிக் பங்காளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற தரப்புகளும் பின்னிப்பிணைந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த அமைப்பு கடந்த மே மாதம் ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்ட தருணம் வெளியிட்ட தனது ஆங்கில அறிக்கையில் தமிழர் சமூகமும் தனது முன்னைய அரசியல் வரலாறு சார்ந்த வெற்றிகளையும் தோல்விகளையும் ஆழமாக மீள்தரிசனம் செய்து தமிழர் பெயரில் முற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மற்றைய சமூகங்கள் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை வழங்கியிருந்தது (Tamil community also need to reflect deeply - its political history and its successes and failures - and acknowledge the pain and suffering endured by all communities due to actions carried out on behalf of them).

அது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திலும் இலங்கைத் தீவுக்குள்ளும் தற்போதுள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் கணக்கிலெடுத்து தீவுக்குள் உள்ள அனைத்து சமூகங்களிடையே தீர்மானிக்கவல்ல பங்காளிகளாயுள்ள சக்திகளுடனும் சர்வதேச சமூகத்தில் ஆளுமைபெற்றுள்ள பங்காளிகளுடனும் நடைமுறைக்கேற்ற சாத்தியமான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான தமிழர் வேணவாக்களை நிறைவுசெய்யும் நோக்குடனான ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முன்வருவது கடந்த கால நினைவேந்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்துக்கு ஒப்பானது என்ற கருத்தையும் வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையைக் கொழும்பில் வெளிவரும் தி ஐலண்ட் எனும் ஆங்கிலப் பத்திரிகை சுரேன் சுரேந்திரினின் படத்தோடு தனிக்கட்டுரையாக வெளியிட்டிருந்தது (It is important that the Tamil community remains conscious and sensitive to the immense suffering and sacrifices made by large sections of our community during the decades-long struggle. Equally important is that the Tamil people and their leaders take stock of the challenges and opportunities in the present political climate and act strategically by forming partnerships with stakeholders across all communities in Sri Lanka and in the international community. The importance and urgency of securing pragmatic and tangible gains, with the objective of fulfilling the political and economic aspirations of the Tamil people, cannot be overstated).

இதற்கு ஒப்பான ஒரு கருத்தையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய பேச்சாளரான திரு சுமந்திரன் அவர்களும் வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களின் தியாகங்களை மட்டுமல்ல இலங்கை இராணுவத்தினர் உள்ளிட்ட உயிரிழப்புகளையும் நினைவு கூருவதான காலமாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளைத் தான் நோக்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்ல, தென்னிலங்கைச் சக்திளுடன் தமிழர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய உரிமைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் அல்லது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற தோரணையில் சர்வதேச நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விண்ணப்பங்களை முன்வைக்கும் அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்றும் தீவுக்குள்ளேயே எவ்வாறு தமிழர் அரசியலை தென்னிலங்கைப் பங்காளிகளுடன் மேற்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரிசனை காட்டுவதே தமது ஒளியியற் பார்வை என்றும் சுமந்திரன் அவர்கள் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கிறார்.

உரிமை சார்ந்த கட்சியாக தந்தை செல்வாவினாலும் வ. நவரத்தினம் அவர்களாலும் உருவாக்கப்பட்டு வளர்ந்த கட்சியான தமிழரசுக் கட்சி 2009 இன் பின்னர் கைக்கொண்டிருக்கும் பிறழ்வு அரசியல் ஆங்கில மொழியில் இவர்கள் வெளிப்படுத்தும் அறிக்கைகளில் அப்பட்டமாகத் தென்படுகிறது.

 

இலங்கைத் தீவிற்குள்ளும் வெளியேயும் சர்வதேசச் சக்திகளால் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலும் உரிமை அரசியல் போலத் தோற்றமளிக்கும் ஏமாளி அல்லது மாற்று அரசியலும் ஈழத்தமிழர்களின் உரிமை அரசியலை மென்று தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன

 

ஆனால், மேலோட்டமாக செய்திகளை வெளியிட்டுவரும் தமிழ் ஊடகங்களின் கண்களுக்கும் வெறும் பிரதியாக்கம் செய்யும் (copy-paste reporting) ஊடகங்களுக்கும் இவையெல்லாம் தென்படுவதில்லை. தமிழ்த் தேசிய்க்கூட்டமைப்புக்கு தாங்களே மாற்று என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகளும் உன்னிப்பாக நோக்கவேண்டிய இவ்வாறான அரசியற்போக்குகளை தவறவிட்டுவிடுகின்றன.

சிதறுண்டிருக்கும் தமிழர் தரப்புகளை ஒருபுறம் மேற்குலகும் மறுபுறம் இந்தியாவும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திவிட்டு எறிந்துவிட்டுச் செல்லும் சூழ்நிலையே மீண்டும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மறைபொருளாக மறைந்திருக்கும் சிலர், குறிப்பாக பி.ஜே.பியின் ஆர். எஸ். எஸ், இந்திய வெளிவிவகார உளவுப் பிரிவு மற்றும் புது தில்லியின் தென் கட்டிடத் தொகுதி (South Block) விற்பன்னர்களின் தொடர்புடன் இயங்கும் முன்னாள் வன்னி 'மாஸ்டர்'கள் சிலரின் தொடர்புகளால் நெறிப்படுத்தப்படும் புலம் பெயர்க் குழுக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை முன்வைத்து 'மறுசீரமைக்கப்பட்ட' அமைப்புகளை புலம்பெயர் சூழலில் உருவாக்குவதில் தீவிரம் காட்டுவதாக புலம்பெயர் அவதானிகள் கருதுகின்றனர்.

பரந்தன் ராஜன் குழுவினரும் இந்த விடயங்களில் முஸ்தீபு காட்டிவருவதையும் இவ்வாறான குழுக்களால் உருவாக்கப்படும் 'மறுசீரமைக்கப்பட்ட' அமைப்புகளில் ஒன்றாகத் தற்போது அமெரிக்காவில் பதியப்பட்டுவரும் ‘மறுசீரமைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை’ (RGTF) அமைந்திருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்த முயற்சியில் பங்கேற்றிருக்கும் அமைப்புகளின் நெறிப்படுத்துநர்களை கூர்மையாக ஆராய்ந்துவரும் அரசியல் அவதானிகள் சிலர் எச்சரித்துள்ளனர்.

இந்தப் புலம் பெயர் போக்குகளை நோக்கும் போது 'இரண்டு கிராமங்களைத் தின்ற ஆடு' என்று தமிழ் மலரில் நாம் படித்த சிறுவர் கதையே நினைவுக்கு வருகிறது.

ஆக, இலங்கைத் தீவிற்குள்ளும் வெளியேயும் சர்வதேசச் சக்திகளால் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலும் உரிமை அரசியல் போலத் தோற்றமளிக்கும் ஏமாளி அல்லது மாற்று அரசியலும் ஈழத்தமிழர்களின் உரிமை அரசியலை மென்று தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை உள்ளும் வெளியிலுமான தமிழர் தரப்புகள் உணர்ந்து செயற்பட இனியாவது முன்வரவேண்டும்.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1797&fbclid=IwAR1EDorvTYXXuYF8H2XRnCw-meFQlgWK3OXgjI-978LZOvusWN3N6oRbztE

கொய்யப்படும் மாகாண அதிகாரங்கள்

2 days 15 hours ago
கொய்யப்படும் மாகாண அதிகாரங்கள்

இல.  அதிரன்

மனம் உண்டானால் இடமுண்டு. ஆனால், இலங்கையில்  இந்த வார்த்தைக்குரிய அர்த்தம், யாருக்கும் தெரியாது என்பதே உண்மையாகிக் கொண்டிருக்கிறது.  கேட்பதும் கிடைப்பதும் தேவையுள்ளவனுக்காக இருந்தால், அது  சரியானதாக இருக்கும். 

இலங்கை சுதந்திரமடைந்தது முதற்கொண்டு  உருவான தமிழர்களின் உரிமைக்கோசம் ஆயுதப் போராட்டமாக வடிவம் பெற்ற நிலையில், மாகாண சபை ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது சிங்களவர்களுக்கு ஒரு பொருட்டல்ல; தேவையானதும் கிடையாது. அவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கேட்டோ, உரிமை கேட்டோ போராட்டம் நடத்தியது இல்லை.  இப்போது அதிகாரப் பறிப்புகள் நடைபெறுகின்றன.

spacer.png

இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து நவம்பர் 14 இல் நாடாளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்  அறிவிக்கப்பட்டு, மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.  அதன் தொடர்ச்சியாக, 1988 ஆம் ஆண்டு பெப்ரவரியில் 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.  இதன் இணைப்பு நிரந்தரமாவதற்கு கிழக்கு மாகாணத்தில் அதேயாண்டு இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அது நடைபெறவில்லை. தொடர்ந்தும் இணைந்தே இருந்தது.

2006இல் மக்கள் விடுதலை முன்னணி வழக்குத்தாக்கல் செய்து அதனை நிரந்தரமாகப்பிரித்து வைத்தது.  இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வரலாறுகள், நடைபெற்றவைகள் தொடர்ந்தும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் பயன் எதுவுமில்லை என்று தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் ஒப்புவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1988 செப்டெம்பர் 2 இல் வடக்கு - கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டது.  இந்த இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி  இத்தேர்தலில் வெற்றி பெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியன இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. அ. வரதராஜப்பெருமாள் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார். 

இந்திய - இலங்கை உடன்படிக்கையை அடுத்து இந்திய இராணுவம் அமைதி காக்கும் படையாக நாட்டுக்கு வந்தது. அவர்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் போர் புரிந்ததன் காரணமாக, இங்கு பல அட்டூழியங்கள் நடைபெற்றன. அதன் பின்னர், 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினர், இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மாகாண சபையைக்  கலைத்து தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அப்போது  ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தார்.

வடக்கு - கிழக்கு தற்காலிகாலிக இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2006 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி  உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் குழாம் வடக்கு - கிழக்கு மாகாண சபையைப் பிரித்து தீர்ப்பளித்தது. 

ஒன்றுக்குள் இருக்கும் மற்றொன்றுதான் இலங்கையின் அதிகார நிருவாகப் பரப்பு. நாம் எதனைத் தொட்டாலும் அதற்கு ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும். அரசியல் ரீதியாகக் காணப்படும் இந்த பெரும் இடைவெளியைச் சீர் செய்துகொள்வதில் விட்டுக் கொடுப்புகளும் பரஸ்பர நம்பிக்கையும் கட்டாயமானது.

நாம் யாரும் அரசியல் தேவையில்லை என்று ஒதுங்கியிருக்க முடியாதளவுக்கு சமூக, பொருளாதார, கல்வி, கைத்தொழில், சுகாதாரம் என எல்லாவற்றிலுமே அரசியல் இறுகப் பின்னிப்பிணைந்துள்ள நிலையில், நடைபெற்று வருகின்ற கண்மூடித்தனமான சுவீகரிப்புகள் இப்போது தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் பெரும் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மாகாண ஆட்சி முறையானது அவர்களுடைய அரசியல்  அபிலாஷைகளின் நிறைவேற்றத்தின் மீதான பிரதிபலனுக்கானதாகவே எண்ணப்பட்டது. அதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே கொள்ளமுடியும் என குறிப்பிட்ட தரப்பினர் கூறினர். இருந்தாலும் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை.

ஜனாதிபதி சந்திரிகாவால் கொண்டுவரப்பட்ட நீலன் திருச் செல்வத்தின் வரைபில் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வையும் ஏற்கவில்லை. பின்னர், நோர்வேயின் அனுசரணையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் வந்த ஒஸ்லோ உடன்படிக்கையையும் அவர்கள் ஏற்கவில்லை.

இலங்கை மாகாண அமைப்பு முறையின் கீழ் அமையப்பெற்ற வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளின் திட்டமிடல் வழிகாட்டலின் ஊடாக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக  நிர்வாகக் கட்டமைப்புடனும் நிதி முகாமைத்துவத்துடனும் இயங்கி வருகின்றன. ஆனால் வடக்கு - கிழக்கு அதற்கு நேர்மாறாக இருந்தது. 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமை பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட ஆளுநர் வடக்கு - கிழக்கு நிர்வாகங்களை மத்திய அரசாங்கத்துக்குச் சார்பாகவும் வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற நிதியைச் சரியாகச் செயற்படுத்துகின்றோம் என்று வெளி உலகுக்குக் காட்டிக் கொள்வதற்கான போலிப் பிரசாரத்தை மேற்கொண்டும் சில உயர் அதிகாரிகளுக்குப் பதவி ஆசை காட்டியும் தமக்குச் சார்பான செயற்பாட்டில் ஈடுபடவைத்ததும் வரலாறு.

13 வது திருத்தச் சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமலாக்குவதற்கோ, மாகாண அமைப்பு முறை தொடர்பான மேலதிக உரிமைகளைப் வழங்குவதற்கோ எந்த முயற்சிகளையும் வட கிழக்கு ஆளுநர் மேற்கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் இப்போது இரண்டு ஆளுநர்களும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் அரசாங்கத்தின் செயற்றிட்ட நடவடிக்கையாளர்களாகவே இருக்கிறார்கள்.

இவ்வாறிருக்கையில்தான், இப்போது மாகாண சபைகளின் அதிகாரங்களுக்குள் இருக்கின்ற வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருகின்ற கைங்கரியம் நடைபெறுகிறது. கொவிட் 19 நிலைமைகளால் நாடு முடங்கியிருக்கிறது; சரியான இயக்கமில்லை. ஆனால் மத்திய அரசின் கைங்கரியயங்கள் உள் நோக்கங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

ஏற்கெனவே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய காணி, பொலிஸ் அதிகாரங்களை சரியாக வழங்காது, இழுத்தடிப்புச் செய்துகொண்டிருந்த நிலையில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருக்கின்ற சூழலில் வளங்களைப் பிடுங்கிக் கொள்வது சட்டவிரோதம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இருந்தாலும் மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் பலன் ஏதுமில்லை என்ற நிலைமையே தமிழர் தரப்புக்கு!

அதிகாரப்பரவலாக்கத்துக்கான  குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யவதோடு தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு மத்திய அரசுடன் பேரம் பேச முடியும் என்ற தகுதி  தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இப்போதும் காணப்படுகிறது. இருந்தாலும் அதற்கான வாய்ப்பைக்கூட சரியாக வழங்குவதற்கு அரசு தயாரில்லை.

கடந்த நல்லாட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முயற்சியும் அதன் தொடர்ச்சியே. இப்போதும் கூட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்துடன் பேசி எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. அதுகூட கைகூடுவதாக இல்லை. இருக்கின்ற ஒன்றிலும் அதிகாரங்கள் வழித்தெடுக்கப்படுகின்றன.

மாகாணங்களின் அதிகாரங்களில் முக்கியமானவை கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் போன்றவைகள்தான். திவிநெகும ஊடாக விவசாயமும், தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தின் ஊடாக கல்வித்துறையும் பறிக்கப்பட்டு, இப்போது வைத்தியசாலைகள் ஊடாக சுகாதாரத்துறையும் கொய்யப்படுகிறது. இது மத்திய அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே கொள்ளமுடியும்.

வளங்கள் இல்லை என்பதனைக் காரணம் காட்டி மாகாணத்தின் அதிகாரங்களை பறிப்பது எவ்வகையில் நியாயமானதாக இருக்கும் என்பதுதான் இப்போது தமிழர் தரப்புக் கேள்வி. தேவைகளை நிறைவேற்றி ,வளங்களைக் கொடுப்பதற்கு சுவீகரிப்பு போன்ற நடைமுறை தேவையில்லை. கொடுப்தைக் கொடுக்கலாம் அல்லவா; பறிக்கவா வேண்டும் என்ற நியாயம் மத்திய அரசுக்கு புரியவேண்டும் என்று தமிழ்த் தரப்பு சொல்கிறது.

மக்களதும் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளதும் தூர நோக்கற்ற செயற்பாடுகளால் உருவாகிவரும் இவ்வாறான சூழல் தமிழர்களின் அரசியல் பலம், அதிகாரத்தில் ஒன்றுமில்லா நிலையையே உருவாக்கும். அத்துடன்  இந்த அரசாங்கத்தின் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்யும் தூர நோக்குக்கு முழு உதவி செய்துவிட்டதாகவே அமையும்.

70 வருடங்களைத் தாண்டியும் உள்நாட்டுக்குள் தீர்வைக் காணமுடியாதிருக்கின்ற ஒன்றை தீர்த்துவைக்க இனியேனும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வழியைத் தேடுமா?

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொய்யப்படும்-மாகாண-அதிகாரங்கள்/91-274571

ரணில் வாறார்? நிலாந்தன்!

2 days 17 hours ago
ரணில் வாறார்? நிலாந்தன்!

June 20, 2021

spacer.png

 

அண்மை வாரங்களில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நகர்வுகள் ஈழத்தமிழர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியவை. அதேசமயம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடியவை. முதலாவது நகர்வு அமெரிக்கக் கொங்கிரசின் வட கரோலினாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்மொழிவு. அது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தை தாயகம் என்று ஏற்றுக்கொள்ளும் ஒரு முன்மொழிவு. அது இனிமேல்தான் அமெரிக்க கொங்கிரசிலும் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அதில் ஓர் அழுத்தப் பிரயோக நோக்கம் இருக்கிறது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவித அழுத்தத்தை பிரயோகிக்க விரும்புகிறது என்று பொருள். இது முதலாவது.

இரண்டாவது ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக எச்சரித்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு அச்சலுகையை மீளப்பெற்றபோது இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு சில வாக்குறுதிகளை வழங்கியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது அதை அனைத்துலகத் தரத்துக்குத் திருத்துவது, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனங்களை நடைமுறைப்படுத்து ஆகிய வாக்குறுதிகளே அவை. அவ்வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை பற்றி மீளாய்வு செய்யவேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படுமாக இருந்தால் அது இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பாதிக்கும்.ஏற்கனவே இலங்கைத்தீவு கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் மேலும் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம் கடன் இன்னொருபுறம் கொரோனா இரண்டுக்கும் நடுவே தடுமாறுகிறது நாடு.யுத்தத்தின் விளைவாக வீழ்ச்சியுற்ற இலங்கைத்தீவின் பொருளாதாரம் இன்றுவரையிலும் மீண்டுஎழவில்லை. யுத்தகாலத்தில் பட்ட கடன்களை தீர்க்க முடியாதிருந்த ஒரு பின்னணியில்தான் இலங்கைத்தீவு சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கியது. தொடர்ந்தும் கடனை அடைக்க கடனை வாங்குவதன் விளைவாக இலங்கைத்தீவின் பொருளாதாரம் முன்னேற முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளான உல்லாசப் பயணத்துறை தைக்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி,மத்திய கிழக்கில் தொழில் புரிவோரின் உழைப்பு போன்றன பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஒருபுறம் கடன் இன்னொருபுறம் வைரஸ். அதனால்தான் வைரசைக் கட்டுப்படுத்த முழு அளவிலான சமூக முடக்கத்துக்கு போக அரசாங்கம் தயாரில்லை. சமூகத்தை முழுமையாக முடக்கினால் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும். எனவே பொருளாதாரத்தை பாதிக்காத ஒரு சமூக முடக்கத்தைத்தான் அரசாங்கம் சிந்திக்கின்றது. இது சிலசமயம் வைரஸ் பெருக்கத்தை அதிகப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் நிறுத்தப்படுமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடையும். எனவே அதன்மூலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை உணர்த்த முற்படுகின்றன.அதாவது சீனாவை நோக்கி செல்வதிலும் மனித உரிமைகளை மீறி செல்வதிலும் இலங்கை அரசாங்கத்துக்குள்ள வரையறைகளை உணர்த்த முற்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் முன்னெடுத்து வரும் நகர்வுகளின் பின்னணியில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் நாடாளுமன்றத்துள் நுழைகிறார். யுத்தம் இலங்கைத் தீவின் இரண்டு பாரம்பரிய கட்சிகளையும் தோற்கடித்து விட்டது. இலங்கையின் பழம்பெரும் கட்சிகளான யு.என்.பியும் எஸ்.எல்.எப்.பியும் சிதைந்து போய்விட்டன. அவற்றின் சிதைவுகளில் இருந்து தாமரை பொட்டு கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு சிதைந்துபோன ஒரு கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் அரங்கினுள் நுழைகிறார்.

அவர் ஒரு வலிய சீவன் எல்லாத் தோல்விகளின்போதும் நெருக்கடிகளின் போதும் ஒருகல உயிரியான அமீபாவைப் போல வழுக்கி வழுக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு வலிய சீவன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டு உருவாகியது. அதன்பின் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைக் கண்டது. அதற்கு கிடைத்த ஒரே தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதாக கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கடும் தோல்வியின் பின்னணியில் தேசியப்பட்டியல் மூலம் உள்நுழைவதற்கு ரணில் தயங்கினார். தவிர சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்றும் அவர் கருதியிருக்கலாம். எனவே தன்னுடைய காலம் வரும் வரையிலும் அவர் காத்திருந்தார் என்றும் நம்பலாம். ஆயின் இப்போது அந்த காலம் வந்துவிட்டதா?

இல்லை அப்படிக் கூறமுடியாது. ஆனால் சஜித் பிரேமதாச தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறி விட்டார் என்பது மட்டும் பெருமளவுக்கு நிரூபணமாகியிருக்கிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்ததிலிருந்து நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கவர்ச்சியான விதத்தில் தன்னை நிரூபிக்கத் தவறியிருக்கிறார். சஜித் தன்னை நிரூபிக்க தவறியமைக்கு பின்வரும் வலிமையான காரணங்கள் உண்டு.

முதலாவது சிங்கள் பௌத்த அரசியலில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வு. சிங்கள பௌத்த உயர் குழாம் அவரை அங்கீகரிக்கத் தயாரில்லை. அவர் தன் கட்சிக்குள்ளேயே போராட வேண்டியிருக்கிறது. இது ஒரு அடிப்படையான தடை. இதே தடை அவருடைய தகப்பனுக்கும் இருந்தது. ஆனால் தகப்பனை செதுக்கிய காலகட்டம் வேறு. மகனைச் செதுக்கும் காலகட்டம் வேறு.

இரண்டாவது காரணம்-யுத்த வெற்றி வாதத்துக்கு தலைமை தாங்கும் ராஜபக்சக்களை மேவி இனவாதத்துக்கு தலைமை தாங்க நாட்டில் ஒருவராலும் முடியாதிருப்பது. இனவாதத்தை கையில் எடுத்தால்தான் ராஜபக்சக்களை சமாளிக்கலாம். ஆனால் அது விடயத்திலும் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியவில்லை. யுத்த வெற்றி வாதம் காரணமாக தாமரை மொட்டு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அந்த பலத்தை உடைக்க எந்த ஒரு எதிர்க்கட்சியாலும் முடியவில்லை.

மூன்றாவது காரணம். உலகப் பொதுவான கொரோன வைரஸ். அதுவும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தடைதான். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறக்குவதற்கு வைரஸ் ஒரு தடையாக இருக்கிறது. உலகம் முழுவதுமே மக்கள் எழுச்சிகளையும் திரட்சிகளையும் வைரஸ் நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. நல்ல உதாரணம் ஹொங்கொங்கில் நடந்த போராட்டம். எனவே வைரஸ் இது விடயத்தில் அரசுகளுக்கே அதிகம் சேவகம் செய்திருக்கிறது. இதுவும் சஜித் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம்தான்.

இதுபோன்ற பல காரணங்களினாலும் ஓர் எதிர்க்கட்சி தலைவராக சஜித் சோபிக்கத் தவறிவிட்டார். இந்த இடையூட்டுக்குள்தான் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார். சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பானது சம்பிக்க ரணவக்க போன்றோரை இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் கூட்டணியாக எழுச்சி பெறக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாடப்படும் ஒரு பின்னணியில் ரணில் நாடாளுமன்றத்துக்குள் வருகிறார்.

இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய ஏனைய எந்தத் தலைவரையும் விட ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்த தேவையான தகுதி ரணிலுக்கு உண்டு என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடும். உருவாகக்கூடிய புதிய கூட்டுக்கு அவர் ஒன்றில் தலைமை தாங்கலாம் அல்லது முன்னைய ஆட்சி மாற்றத்தின் போது சந்திரிக்கா செயற்பட்டதை போன்று ஒரு நொதியமாகச் செயல்படலாம். அவருடைய பாத்திரம் எப்படிப்பட்டதாகவும் அமையலாம். ஆனால் அவரை அரங்கில் செயற்படு நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை மேற்கிற்கு உண்டு.

ராஜபக்சக்களின் யுத்தவெற்றி வாதம் எனப்படுவது 2009க்கு பின்னரான இனவாதத்தின் புதிய வளர்ச்சி. அதை தோற்கடிப்பதற்கு தேர்தல் அரசியலில் ஒரே ஒரு கூட்டினால்தான் முடியும். அது என்னவெனில் இலங்கைத் தீவில் உள்ள மூன்று இன மக்களும் சேர்ந்துருவாக்கும் ஒரு கூட்டு. அதிலும் குறிப்பாக யுத்தவெற்றி வாதத்தின் பங்காளிகள் மத்தியிலிருந்து ஒரு பகுதியை உடைத்து எடுக்கவும் வேண்டும். இதுதான் 2015இல் நடந்தது.

அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் ராஜபக்சக்கள் தனிச் சிங்கள வாக்குகளை கேட்டு கடந்த தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றார்கள். எனவே இனிமேலும் அவர்களை தோற்கடிப்பதற்கு மூவினத் தன்மை பொருந்திய ஒரு கூட்டு அவசியம். அப்படி ஒரு கூட்டை உருவாக்கத்தக்க சக்தி நாட்டில் இப்பொழுது ரணிலுக்குத்தான் அதிகம் உண்டு என்று மேற்கு நாடுகள் சிந்திக்கின்றனவா? ஆனால்,2015இல் நடந்தது மீண்டும் ஒரு தடவை நடப்பதற்கு ராஜபக்சக்கள் இடம் கொடுப்பார்களா? அல்லது சீனா இடம் கொடுக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை கண்டால்தான் ஒரு ஆட்சி மாற்றத்தை குறித்து சிந்திக்க முடியும்.

கடனும் வைரஸும் அரசாங்கத்தை சிங்கள மக்கள் முன் அம்பலப்படுத்தி விட்டன. பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டு போகின்றன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக்கொடுத்த மக்கள் இப்பொழுது அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தியோடு காணப்படுகிறார்கள்.. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் இரண்டு வைரஸ்களை முன்னிறுத்தி அரசாங்கம் சிங்கள-பௌத்த ஆதரவுத் தளத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே.

முதலாவது வைரஸ் இனவாதம்.அதுதான் யுத்தவெற்றி வாதம். யுத்த வெற்றி வாதத்தை முன் நிறுத்தி அதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் கடந்து போகலாம் என்பதே இலங்கைத்தீவின் நவீன அரசியல் அனுபவமாக காணப்படுகிறது. அதை ராஜபக்சக்கள் வெற்றிகரமாக செய்ய முடியும். ஏனெனில் யாரும் பெற்றுக்கொடுத்திராத ஒரு யுத்த வெற்றியை அவர்கள் சிங்கள மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த முதலாவது வைரஸ் வீரியம் இழக்காத வரையிலும் ராஜபக்சக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு பலமான கூட்டணியை ஏற்படுத்தினாலும் அது நீண்ட காலத்துக்கு தாக்குப் பிடிக்குமா?

இரண்டாவது வைரஸ் உண்மையான வைரஸ்.கொரோனா. இது எதிர்க்கட்சிகள் ஒரு திரட்சிக்கு போவதற்கு தடையாக காணப்படுகிறது. இந்த இரண்டு வைரஸ்களின் காரணமாகவும் இலங்கை தீவில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஒரு திரட்சியை ஏற்படுத்துவதில் வரையரைகள் உண்டு. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ரணில் மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

ஆனால்,மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தை சீனாவிடமிருந்து பிரிக்கப் போதுமானவை அல்ல என்பதை கடந்த காலம் நிரூபித்திருக்கிறது. தொடர்ந்தும் ராஜபக்சக்களை நெருக்கினால் அவர்கள் மேலும்மேலும் சீனாவை நோக்கி போவார்கள். ஏனெனில் இலங்கைத்தீவின் மிகவும் சிறிய பொருளாதாரத்தைக் கடன்சுமையில் இருந்து காப்பாற்றுவது சீனாவின் மிகப் பிரம்மாண்டமான பொருளாதாரத்துக்கு ஒரு பொருட்டேயல்ல. எனவே சீனா தொடர்ந்தும் ராஜபக்சக்களைப் பாதுகாக்கும். மேற்கிடமிருந்து வரக்கூடிய எந்த ஓர் அழுத்தமும் குறிப்பாக இன்னும் இரண்டு மாதங்களில் ஐநாவில் உருவாக்கப்படவிருக்கும் போர்க்குற்றம் தொடர்பான தகவல் திரட்டுவதற்கான பொறிமுறையும் இலங்கைதீவில் யுத்தவெற்றி வாதத்தை அப்டேட் செய்யவே உதவும். எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரணிலின் வருகை உடனடிக்கு ராஜபக்ஷக்களுக்கு அல்ல சஜித்துக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தும்.

 

https://globaltamilnews.net/2021/162529

 

பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

3 days 12 hours ago


 

பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்
June 11, 2021
ரூபன் சிவராஜா

மே 10-ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவி தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டிடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டிட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகளைக் கொண்ட அந்த ஊடகமையம் தகர்க்கப்பட்டுள்ளது. சாட்சிகளை முன்கூட்டியே அப்புறப்படுத்துகின்ற திட்டமிட்ட செயல் இது. 11 நாட்களின் பின் எகிப்தின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவின் திரைமறைவுப் பேச்சுகள் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புகளுக்கிடையில் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.

உலக ஊடகங்கள் கொடுக்கும் பிம்பம்

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு தொடர்பாக பெரும்பான்மையான உலக ஊடகங்கள் கொடுக்கின்ற பிம்பம் பெருமளவில் ஒருதலைப்பட்சமானது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடுக்கின்ற ஏவுகணைத் தாக்குதலுக்கான பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இராணுவத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்பதாகவே அதிகமும் செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றது. மேற்கின் ஊடகச் செய்திகள் இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சினையை அதன் வரலாற்றுப் பின்னணி, சமகால நிலைமைகள் மற்றும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவது குறைவு. பெரும்பான்மை ஊடகங்களில் ஒரு வகையான இஸ்ரேல் ஆதரவுப் போக்கினை அவதானிக்க முடியும். மட்டுமல்லாது பலஸ்தீனத் தரப்பு, குறிப்பாக ஹமாஸின் தாக்குதல்கள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதையும் காணலாம். இடதுசாரி ஊடகங்களிலும்,  செய்திகளைத் தாண்டிய அரசியல் ஆய்வுக்கட்டுரைகளிலும் பத்திகளிலும் ஓரளவு நியாயமான பார்வையைக் காணமுடியும்.

spacer.png

பலஸ்தீன மக்களின் பிரச்சினை என்பது, வன்முறையாகவோ, கலவரமாகவோ, பயங்கரவாதமாகவோ, பதட்டநிலை என்றோ, இருதரப்பு மோதல் என்றோ சித்தரிக்கக்கூடிய பிரச்சினை அல்ல. அதன் பரிமாணம் வேறானது. வரலாற்று நீட்சியுடையது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைக்காகப் போராடி வருகின்ற மக்கள் அவர்கள். அவர்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது யூத இனவெறிக்கும், இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டம். நில அபகரிப்பிற்கு எதிரான, அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான அந்த வரலாறு, ஆயுத விடுதலைப் போராட்டத்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளாலுமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளில் மிக மோசமானது நில அபகரிப்பு. இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட யூதக்குடியேற்றங்கள் மூலமாக பலஸ்தீன மக்களின் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பூர்வீகப் பிரதேசங்கள் விழுங்கப்பட்டுள்ளன.

மீண்டும் மீண்டும் காஸா மீது இஸ்ரேல் இராணுவ இயந்திரம்

கடந்த 2006-லிருந்து சில ஆண்டுகால இடைவெளிகளுக்குள் தொடர்ச்சியாக தற்போதையதைப் போன்ற மோசமான தாக்குதல்களைக் காஸா மீது இஸ்ரேல் நடாத்தியுள்ளது. 2006-இல் லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான பாரிய போர், 2009-2010, 2012, 2014 என காஸா மீதான இதற்கு முந்தைய இஸ்ரேலின் படையெடுப்புகள் அமைந்தன.

காஸா மீதான தாக்குதல்களுக்குக் காரணம், இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பதாகவே ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரம் வேறானது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஷா மசூதி பலஸ்தீன முஸ்லீம் மக்கள் புனிதமாகக் கருதும் ஸ்தலம். அது இஸ்லாமியர்களின் 3-வது புனித ஸ்தலம் எனப்படுகின்றது. அதனை ஆக்கிரமித்து அழித்து அதில் யூத ஸ்தலத்தை நிறுவும் முனைப்பு இஸ்ரேலுக்கு உண்டு. கடந்த ஏப்ரல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்புகால இறுதி நாட்களில் அம்மசூதிக்குள் இஸ்ரேல் காவல்துறையினரும் இராணுவமும் நுழைந்ததில் அங்கு கலவரம் ஏற்பட்டது. பலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி, யூத கடும்போக்காளர்கள் திட்டமிட்ட ஒரு பேரணியும் இஸ்ரேல் காவல்துறை அல்-அக்ஷா மசூதியை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளமையுமாகும். ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயருடன் அந்நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. 1967-இல் நடைபெற்ற ‘ஆறுநாள்’ (05.06.1967 – 10.06.1967) போரில் இஸ்ரேல் படைகள் கிழக்கு ஜெருசலேமினைக் பைக்பற்றியதை நினைவுகூர்வது இந்நிகழ்வின் நோக்கம்.

1967 – ஆறுநாள் போர் ஏற்படுத்திய பாரிய மாற்றம்

1967-ல் இந்த ஆறுநாள் போர், இஸ்ரேலுக்கும் அரபுநாடுகளுக்கும் (எகிப்த், ஜோர்டான், சிரியா); இடையில் நடைபெற்றது. குறுகிய போரெனினும் இன்றுவரை நீடிக்கின்ற அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கின்றது இப்போர். இதன் போது கைப்பற்றப்பட்ட மேற்குக்கரை, கோலான் குன்றுகளின் பிரதேசங்கள் (Golan Heights) மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியன இன்றுவரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அதிலும் கிழக்கு ஜெருசலேம் பலவந்தமாக இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலவந்த இணைப்பினை ஆங்கிலத்தில் Annexation என்பார்கள். இந்தப்போரின் விளைவுகள் பிராந்தியத்தின் அரசியல் சூழலை பல வழிகளில் மாற்றியமைத்தது. சர்வதேச ரீதியாக இஸ்ரேல் தனது வகிபாகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டது. அரபு உலகம் பலவீனப்படுத்தப்பட்டது.

தவிர பலஸ்தீன எதிர்ப்பிற்கான இன்னுமோர் சமகாலக் காரணியும் உள்ளது. அது யூதக்குடியேற்றவாசிகளுக்கும் பலஸ்தீனக் குடும்பங்களுக்குமிடையிலான நிலம்/வீடு தொடர்பான வழக்கு ஆகும். கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheik Jarrah எனும் பகுதியில் நான்கு பலஸ்தீனக் குடும்பங்களை அவர்களின் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றும் முனைப்பில் யூதக்குடியேற்றவாசிகள் இறங்கியுள்ளனர். இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு (1947) முன்பிருந்தே அந்த வீடுகள் தமக்குச் சொந்ததாக இருந்ததாக யூதக்குடியேற்றவாசிகள் வழக்குத் தொடுத்து கீழ் நீதிமன்றம் ஒன்றில் வென்றுமுள்ளனர். ஆனால் இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. பலஸ்தீனர்களின் எதிர்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலத்தில் பலஸ்தீனக்குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. ஜோர்டான் ஆட்சிக்காலத்தில் (1948 – 1967) அதனிடமிருந்து காணிகளைப் பலஸ்தீனக் குடும்பங்கள் கொள்வனவு செய்துள்ளன எனப்படுகின்றது.

தமது நிலங்களை ஆக்கிரமித்து திட்டமிட்ட யூதக்குடியேற்றங்களை நிறுவியதை யூதர்கள் கொண்டாடுவதென்பது பலஸ்தீன மக்களை ஆத்திரமூட்டக் கூடியது. பலஸ்தீன எதிர்ப்பிற்கு அடிப்படையானது இஸ்ரேலின் தொடர்ச்சியான நில அபகரிப்பும், யூதக்குடியேற்றங்களும்.

பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டும் ஒடுக்குமுறைகள்

இந்தப் பின்னணிகளில் கிழக்கு ஜெருசலேம் மக்களுக்கும் அவர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாகவும், அப்பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தையும் காவல்துறையையும் வெளியேறக் கோரியே ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கினர். 2014-ற்குப் பின்னர் இஸ்ரேல் மீது முதற்தடவையாக ஏவுகணைத் தாக்குதல்களைக் ஹமாஸ் நடாத்தியிருக்கின்றது. இதற்கு முந்தைய கட்டங்களிலும் இதே பற்றர்னிலேயே காஸா மீதான தரை மற்றும் வான்படைத் தாக்குதல்களை நடாத்தி வந்திருக்கின்றது இஸ்ரேல். அதாவது ஹமாஸ் இஸ்ரேல் பகுதிகளுக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்த, அதற்குப் பதிலடியாகத் தம்மைத் ‘தற்பாதுகாக்கும் உரிமையின்’ பெயரில் ‘பயங்கரவாதிகளை’ அழிக்கும் தாக்குதல் என்பதாகத் தனது போரை இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆனால் காஸா மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஹமாசை எப்படித் தூண்டவேண்டுமென்ற கைங்கரியத்தினை இஸ்ரேல் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது.

spacer.png

இஸ்ரேலிடம் Irone Dome எனப்படும் வலுவான ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பம் (Anti missile system) உள்ளது. ஹமாஸினால் ஏவப்படும் ஏவுகணைகளை வான்வெளியில் வைத்தே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம் அது. ஆயினும் அதனையும் தாண்டிச் சில இடங்களில் ஹமாஸின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இம்முறை 12 வரையான இஸ்ரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவை ஈரான்  ஹமாஸிற்கு வழங்கிய ஏவுகணைகள் என்று கூறப்படுகின்றது.

இஸ்ரேலுக்கு நிபந்தனையற்று ஆதரவளிக்கும் அமெரிக்கா

சர்வதேச அரசியலை, குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான உலக அரசியலை, அதன் கயமைகளைக் கருத்திலெடுக்காமல் மேம்போக்காகப் பேச முடியாது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றங்கள் சர்வதேச நிலைமைகளைப் பொறுத்தவரை மாற்றங்களைக் கொண்டு வந்ததில்லை. ஒபாமா பதவிக்கு வந்த போதும், இந்தியத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோதும் அதனைக் கொண்டாடுகின்ற ‘தமிழ் உளவியல்’ சில ஊடக மட்டத்திலும் சமூக மட்டத்திலும்; அவதானிக்கப்பட்டிருந்தது. அது அரசியல் புரிதல் அற்ற ஒருவகை உணர்ச்சிவசப்பட்ட வெளிப்பாடு. எவர் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று உள்ளது. அதுவும் பனிப்போருக்குப் பிற்பட்ட கால வெளியுறவு அரசியல் என்பது நீதியின் அடிப்படையிலான கொள்கைகளின் பாற்பட்டதல்ல. அது முற்றிலும் பொருளாதார (மற்றும் அரசியல், இராணுவ) நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோருவது தொடர்பான தீர்மானத்தினை ஐ.நா பாதுகாப்பு அவையில் கொண்டுவருவதற்கு சில நாடுகள் எடுத்த முயற்சியினை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டிருந்தது. இஸ்ரேல் மீது ஒரு இராஜதந்திர அழுத்தத்தினைக் கொண்டுவருவதற்குக்கூட அமெரிக்கா பின் நிற்கின்றது. 1972-ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை 43 தடவைகள் இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானங்களைத் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்துள்ளது. தற்போதும் அதனைச் செய்துள்ளதோடு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுமுள்ளன. அதாவது ஹமாஸ் அமைப்பின் எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கின்றதென்பது இந்நாடுகளின் நிலைப்பாடு.

ஐ.நா என்பதுகூட அமெரிக்க நலன்களைத் தாண்டி உலக அரசியலில் வினைத்தாக்கத்தினை ஏற்படுத்தியதில்லை என்பது நெடுங்காலமாக பலமுறை மெய்ப்பிக்கப்பட்ட நிதர்சனம். இஸ்ரேலைப் பொறுத்தமட்டிலும் ஐ.நாவினால் எவ்விதத் தாக்கத்தையும் செலுத்த முடியாது. ஐ.நாவின் கண்டனங்கள் வெறும் சடங்குபூர்வமாக நிகழ்வுகளே.

அமெரிக்காவின் இராணுவ பொருளாதார உதவி

அமெரிக்கா பாரிய அளவில் இராணுவ, பொருளாதார உதவிகளை இஸ்ரேலுக்கு பல தசாப்தங்களாக வழங்கி வருகின்றது. இராணுவ பொருளாதார உதவி என்பதற்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் அரசியல், இராஜதந்திர ஆதரவினை அது இஸ்ரேலுக்கு வழங்கிவருகிறது. மறுவளமாகச் சொல்லப்போனால் ஆக்கிரமிப்பு சக்தியும் போர்க்குற்றவாளியுமான இஸ்ரேலின் அனைத்துவகையான ஆக்கிரமிப்புப் போர்கள், (பலஸ்தீன) நிலப்பறிப்பு, திட்டமிட்ட பாரிய யூதக்குடியேற்றங்கள் உட்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு வலுவான முண்டுகொடுப்பினைச் செய்துவருவது அமெரிக்கா மட்டுமே. அமெரிக்க – இஸ்ரேல் உறவு நெருக்கமும் தனியாகப் பேசப்பட வேண்டியது.

அமெரிக்காவில் பெரும் நிறுவன மயப்படுத்தப்பட்ட யூத ‘லொபி’ இயக்கங்கள் தொழிற்படுகின்றன. அவை மத, அரசியல், பொருளாதாரம் எனப் பல தளங்களில் நீண்டகாலமாக இயங்கி வருவன. அங்குள்ள கிறிஸ்தவ மதபீடங்களுடனும் நெருக்கமான தொடர்புகளை யூத லொபி இயக்கங்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கிவரும் பல பில்லியன் நிதி உட்பட்ட இராணுவ உதவிகள் குறித்த கேள்விகள் அமெரிக்காவில் எழுப்பப்படுவதில்லை. மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கான அமெரிக்க உதவிகளைக் கேள்வியெழுப்பும், விமர்சிக்கும் தாராளவாதிகள், ஜனநாயகவாதிகள்கூட இஸ்ரேலுக்கான உதவிகளைக் கேள்வியெழுப்புவதில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு இஸ்ரேல் உறுதுணை

அமெரிக்கா போன்று உலகில் வேறெந்த நாடும் இஸ்ரேலுக்கு இராஜதந்திர ஆதரவினை வழங்குவதில்லை. இந்த ஆதரவு என்பதற்கான முக்கிய அடிப்படைகளில் ஒன்று மத்தியகிழக்கில் அமெரிக்காவின் நலன்கள் சார்ந்தது. 1967-இன் பின்னர்தான் (ஆறுநாள் போரின் பின்னர்) அமெரிக்கா தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கத் தொடங்கியது. பெருவாரியாக உதவத் தொடங்கியது. அதாவது சுற்றவுள்ள அரபு நாடுகள் அனைத்தினதும் இராணுவ பலத்தினை விட இஸ்ரேல் இராணுவம் வலிமையானது என நிரூபித்த பின்னர். மேலதிக பிரதேசங்களை ஆக்கிரமித்துத் தன்னையொரு மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரே அமெரிக்க உதவி பன்மடங்காக அதிகரித்தது.

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரானவை. இந்நிலையில் அவற்றுக்கிடையிலான முரண்நிலைளை அமெரிக்கா தனது நலன்களுக்குச் சாதகமாகக் கையாள்வதற்குரிய நாடாக மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளது. லெபனான், பலஸ்தீன தேசியவாத எழுச்சியைத் தடுப்பது, சோவியத்தின் நட்புநாடான சிரியாவைக் கையாள்வது, அணுவாயுத நாடான ஈரானைக் கையாள்வது என்ற அமெரிக்க நலன்களும் உள்ளன. தவிர பிராந்தியத்தில் மிகச்சிறந்த வான்படையினை இஸ்ரேல் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போர்களில் அமெரிக்க ஆயுதத் தளவாடங்களுக்கான பரிசோதனைக்களமாகவும் பார்க்கப்படுகின்றது. அது சோவியத் தயாரிப்பு ஆயுதங்களுக்கு எதிரான பரிசோதனைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு: நீண்ட வரலாறு

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாட்டுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது. அது யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து பலஸ்தீன நிலங்களில் குடியேறி படிப்படியாக அந்நிலங்களைத் தம்வசப்படுத்தி 1947-இல் இஸ்ரேல் என்ற தேசத்தை நிறுவியதற்கு முன்பிருந்து தொடங்குகின்றது அந்த வரலாறு. இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான மத்தியகிழக்கு மற்றும் யூதர்களின் குடியேற்றமும் அபகரிப்பும் தொடர்பான வரவாற்றினைத் தனிக்கட்டுரையில் பார்ப்பது பொருத்தம்.

1947-இல் ஐ.நா-வின் தீர்மானத்தின்படி யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் சர்வதேச கண்காணிப்பிற்கு உட்பட்டதாகப் பேணப்படவேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. ஆனால் 1948 ஐ.நா தீர்மானத்தை மீறி மேற்கு ஜெருசலேமினை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. கிழக்கு ஜெருசலேமினை ஜோர்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் 1967-ஆறுநாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமினைக் கைப்பற்றியது. இன்றுவரை அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு யூதக்குடியேற்றங்களைப் பெருமளவில் நிறுவியதோடு அதனைப் பலவந்தமாக சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டது. அதனைத் தலைநகரமாக்கும் முனைப்புடன் திட்டமிட்ட தீவிர நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம்

ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம் (Anti semitism) வளர்ச்சி கண்ட புறநிலையில் மறுவளமாக அவர்கள் மத்தியில் சியோனிசம் (Zionism) புதிய வடிவங்களில் எழுச்சி பெற்றது.. யூதர்கள் இனரீதியாக எல்லா மட்டங்களிலும் ஒடுக்கப்பட்டமை, அவர்களை இன அழிப்புச் செய்யும் நோக்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, புறக்கணிக்கப்பட்டமையைக் குறிக்கிறது Anti semitism எனும் யூத எதிர்ப்புவாதம். சியோனிசம் என்பது தமக்காக ‘இறைவனால் வாக்களிக்கப்பட்ட தொன்ம நாடான’ இஸ்ரேலை அடைவதற்கான விருப்பினையும் நம்பிக்கையினையும் குறிக்கிறது.

இந்நிலையில் பழைய பலஸ்தீனத்தில் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சி நிலவிய காலத்திலேயே பலஸ்தீன, அரபு மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடங்கி விட்டன. 1920 முதல் 1948 வரை பலஸ்தீனம் பிரித்தானியாவின் கீழ் இருந்தது. அதற்கு முன்னர் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் ஒட்டமான் பேரரசின் (துருக்கியப் பேரரசு) கீழ் ஆளப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்த யூதர்கள் பழைய பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்தும் கொள்வனவு செய்தும் அங்கு குடியேறினர். இன்னொரு வகையில் சொல்வதானால் பிரித்தானிய கொலனித்துவத்திலேயே பலஸ்தீனம் யூதக் கொலனித்துவமாக மாறத் தொடங்கியது. அரபு நில உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்தவர்களின் நிலங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டன என்பது வரலாறு. பிரித்தானிய கொலனித்துவம், இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிலைமைகள், அரபு-யூத முரண்படுகள், பிரித்தானிய வகிபாகம், சியோனிச நகர்வுகள் என்பன தனியான கட்டுரையில் நோக்கப்பட வேண்டியவை.

பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கான மூலம்

பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களும் முக்கிய மூலகாரணி. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இலங்கைத்தீவில் தமிழர்களின் அரசியல் உரிமை இழப்பிற்கான மூலமாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

இஸ்ரேலின் ‘தற்காப்பு உரிமை’ பற்றிக் ‘குரல் எழுப்பும்’ அரசுகள், பலஸ்தீனர்களின் வாழ்வுரிமை பற்றிக் குரல் எழுப்புவதில்லை. ஒரு படை வலுச்சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை ஒரே தட்டில் வைத்து இருதரப்பு மோதல், வன்முறைகள் என்று அணுகவோ கணிக்கவோ முடியாது.

***

ரூபன் சிவராஜா நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது

 

http://www.yaavarum.com/பலஸ்தீனம்-மீது-தொடரும்-ஒ/

‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்

3 days 16 hours ago
‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் வரலாற்றில், மிகப்பெரிய சூழலியல் அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. வழமைபோல, அதை ஒரு செய்தியாக எம்மால் கடந்து போக முடிந்திருக்கிறது. இதை நினைக்கின்ற போது, ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டேன். இந்த அனர்த்தத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும், இந்த உணர்வு நிச்சயம் வந்திருக்கும். 

கப்பல் அனர்த்தத்தின் ஆபத்து அத்தகையது; அதை எளிமையாக, இன்னொரு செய்தி போல நோக்கிய, இன்னமும் நோக்குகின்ற எமது சமூகத்தை என்னவென்று சொல்வது. பேச வேண்டிய இரண்டு முக்கியமான விடயங்களை, ஊடகங்களும் மக்களும் அமைதியாகக் கடந்து போகிறார்கள். 

முதலாவது, இந்தப் பெருந்தொற்றைக் கையாளும் அரசாங்கத்தின் செயன்முறையும் தடுப்பூசி போடுவதில் நடக்கும் தகிடுதித்தங்களும் ஆகும். இரண்டாவது, எமது கடல்வளத்தையும் வாழ்வையும் சீரழித்துள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள்  அனர்த்தம் ஆகும். 

இந்தப் பெருந்தொற்றில் இருந்து, இன்னும் சிலகாலத்தில் மீண்டுவிடலாம். ஆனால், எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. இது சார்ந்த நெருக்கடிகள் ஆழமானவை. இவை வெறுமனே, இந்தக் கப்பல் அனர்த்தத்துடன் மட்டும் முடிவடைந்து விடுவதில்லை. இதை நாம் உணராதவரை, எமக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும்  ஆபத்துகள் காத்துக் கிடக்கின்றன. 

இந்த அனர்த்தம் குறித்து உரையாடிய வேளையில், பலரின் கவலை “கொஞ்ச நாளைக்கு மீன் தின்னமுடியாது” என்றவாறாக இருந்தது. இன்னும் கொஞ்சப்பேர், “இது நடந்தது, கொழும்புக் கடலில்; அதனால், யாழ்ப்பாணத்தில் பிடிக்கின்ற மீன்களைச் சாப்பிடலாம்” என்றெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள். 

ஒருபுறம், இந்த அனர்த்தத்தை வெறுமனே மீன் தின்னும் பிரச்சினையாக மட்டும் பார்க்கப் பழகியிருக்கிறோம். இலங்கையில் திறந்த சந்தைப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தபட்ட இரண்டு தசாப்தங்களில், இலங்கையர்கள் நுகர்வு மனநிலைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். அனைத்தையும் நுகர்வு நோக்கில், தன்னலப் பார்வையில் அவதானிக்கும், முடிவெடுக்கும் ஒரு சமூகமாக மாற்றமடைந்து விட்டார்கள். இதன் மோசமான விளைவுகளில் ஒன்றுதான், இந்த அனர்த்தத்தை அலட்சியமாகக் கடந்து செல்லும் மனநிலை.  

இப்போது அக்கறை, இந்த அனர்த்தத்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பது பற்றியது. யாருக்குக் கிடைக்கும், எவ்வாறு கிடைக்கும், என்ன வகையான இலாபம் என்பன, நீண்ட உரையாடலுக்கு உரியன. ஆனால், இந்த இலாபம் தொடர்பான சிந்தனைகள் எதுவும், அனர்த்தத்தின் பாதிப்புகள் பற்றியதாவோ, நீண்டகாலச் சூழலியல் விளைவுகள் பற்றியதாகவோ இல்லை.  

இதன் பின்னணியில், நாம் கேட்கவேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், என்றென்றைக்கும் எமக்குக் கிடைக்கப் போவதில்லை. சூழலியல் சார்ந்து அக்கறையற்ற எங்களது சமூகம், இதற்கான பதில்களை வேண்டப்போவதுமில்லை; அதற்காகப் போராடப் போவதுமில்லை. 

அனர்த்தம் நிகழ்ந்து சில நாள்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூகவலைத்தளப் பதிவுகளை இட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கும் சமூகத்திடம் எதிர்பார்க்க அதிகம் இல்லை. இந்த அனர்த்தம் குறித்த அனைத்துத் தரப்புகளின் மௌனம், ஒரு மிகப்பெரிய சமூகக் குறிகாட்டி. 

அரசியல்ரீதியாகக் குறித்த நிகழ்வுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், பழியை இன்னொருவர் தலையில் கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கும் ஓர்  ஆணைக்குழுவை உருவாக்கிக் காலம் கடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அரசாங்கமும் அரச அதிகாரிகளும் குறித்த விடயத்தைத் திசைதிருப்புவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். எதிர்கட்சிகளில் ஜே.வி.பி தவிர்ந்த ஏனையவற்றின் அமைதி வியப்பளிக்கவில்லை. ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

அவர்களின் மௌனம் குறித்து, இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த விடயத்தைப் பேசாமல் விடுவது, எல்லோருக்கும் வாய்ப்பானது. ஒருபுறம் ‘இதைப் பேசி அரசை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்' என்று அவர்கள் நினைக்கக்கூடும். மறுபுறம், ‘இது நடந்தது, எங்கள் வடக்குக் கிழக்கில் அல்ல; எனவே, நாங்கள் ஏன் கருத்துச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்' என்ற கருத்துகள் வேறு. 

முதலில், இனத்துவ அடையாளங்களுக்குள் நின்றுகொண்டு, சூழலியல் பிரச்சினைகளை அணுகுவதை நிறுத்த வேண்டும். சூழலியல் சவால்கள், நம் அனைவருக்குமானவை. அதை, வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரித்து நோக்குவதில் பயனேதும் இல்லை. 

வானிலை மாற்றம் பிரதேசம் பார்ப்பதில்லை; சாதி பார்ப்பதில்லை; தமிழனா, சிங்களவனா, முஸ்லிமா என்று பார்ப்பதில்லை. இலங்கையை சுனாமி தாக்கிய காலத்தை நினைத்துப் பாருங்கள். இப்போது நாம் எதிர்நோக்கும் சூழலியல் நெருக்கடிகள், முழு இலங்கையருக்குமானது. 

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம், சூழலியல் குறித்த எமது அக்கறையின்மையையும் பொறுப்பின்மையையும் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. ‘இது ஒரு சூழலியல் அனர்த்தம்’ என்ற பரிமாணத்தைத் தாண்டி, இதுவோர் அரசியல் அனர்த்தம், சமூக அனர்த்தம். இது குறித்து, நாம் பேசியாக வேண்டும். 

முதலில், இந்த அனர்த்தம் தவிர்த்திருக்கக் கூடியதா என்ற வினாவுக்கு வருவோம். இந்த அனர்த்தம், நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடியது. இந்தக் கப்பலின் இறுதி இரண்டு வாரச் செயற்பாடுகள் பற்றித் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், இதை நாம் உறுதியாகச் சொல்லவியலும். 

எனவே, இதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் பலர். ஆனால், இதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. பழியை இலகுவாக இயற்கையின் மீதும் ‘எதிர்பாராத விபத்து' என்ற சொற்பதத்தின் மீதும் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். 

கப்பல் தீப்பற்றி எரிந்த ஆரம்ப கட்டங்களில், அத்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அது பரவுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இடமளித்தனர் என்ற குற்றச்சாட்டை, கப்பலின் தலைமை மாலுமி நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார். 

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்த இலங்கை, இந்தியாவின் உதவியைக் கோரியிருக்கிறது. கப்பல் போக்குவரத்தில், தென்னாசியாவின் மையமாக விளங்க எதிர்பார்த்திருக்கின்ற கொழும்புத் துறைமுகத்தால், இவ்வாறான கப்பல்கள் தீப்பிடிக்கும் போது, தீயைக் கட்டுப்படுத்தும் வசதிகள் இல்லை என்பது புலனாகிறது. 

கொழும்புத் துறைமுகத்தில் தரிப்பதற்காகக் கப்பல் நங்கூரமிட்டிருந்த பகுதி, நீர்கொழும்புக் கடற்பரப்பில் உள்ள ஆழமற்ற கண்டமேடைப்பகுதி. இது வேகமான கடல்நீரோட்டங்களைக் கொண்ட பகுதியும் கூட. இப்பகுதி, மீன்வளங்களின் முக்கியமான புள்ளி. இப்பகுதி 21 மீற்றர் மட்டுமே ஆழமான கடற்பரப்பு. கப்பல் 21 மீற்றரை விட அதிகமானது. இதனாலேயே கப்பல் மூழ்காமல் இருக்கிறது. கப்பலில் அபாயகரமான பொருட்கள் இருக்கின்ற கப்பலில் ஏற்கெனவே ஒருமுறை தீப்பிடித்திருக்கின்றது என்பதை அறிந்தும் அதிகாரிகள், இவ்வாறு கடல்வளத்துக்கு முக்கியமான பகுதியில் கப்பலை நங்கூரமிட அனுமதித்து இருக்கிறார்கள். 

குறித்த கப்பலில் 78 மெற்றிக் தொன் அளவிலான பிளாஸ்டிக் தட்டுகள் (plastic pallets) இருந்திருக்கின்றன. பிளாஸ்ரிக் உயிரியல் ரீதியாக அழிவடையாதவை (Non-bio-degradable). இவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு கடலில் இருக்கும். நீண்ட காலம் நீரில் இருக்கும் போது, இவை நச்சுப்பொருட்களை உறிஞ்சி வைத்திருக்கும். கப்பலில் இருந்து வெளியாகியுள்ள ஏனைய நச்சுப் பதார்தங்களையும் இவை உறிஞ்சியிருக்கும். இதை மீன்கள் உட்கொண்டு, உணவுச்சங்கியிலில் இந்தப் பிளாஸ்டிக்கையும் அது உறிஞ்சி வைத்திருக்கும் நச்சுப் பொருட்களையும் சேர்க்கும். இதனால், இதன் ஆபத்துகளை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நாம் அனுபவிக்க நேரும். 

இந்தப் பிளாஸ்டிக்குகள் இலங்கைக்கு மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள ஏனைய நாடுகளையும் சென்றடையும். கடலின் நீரோட்டங்கள் இதனை இலகுவாகச் சாத்தியப்படுத்தும். இப்போது, இலங்கைக் கடற்பரப்பில் இறந்து கரையொதிங்கியுள்ள ஆமைகள், மீன்கள், டொல்பின்கள் உட்பட்ட பல கடல்வாழ் உயிரினங்கள், பிளாஸ்டிக்கின் நச்சுத்தன்மையால் உயிரிழக்கவில்லை. மாறாக, இந்தப் பிளாஸ்டிக்குகள் அவ்வுயிரினங்களின் உணவுக்கால்வாயை அடைத்தமையால் உயிரிழந்துள்ளன. அல்லது கப்பலில் இருந்து வெளியான இரசாயன திரவியங்களிகன் பாதிப்பால் இறந்துள்ளன.  

பிளாஸ்டிக் தட்டுகள், இக்கப்பலால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை மட்டுமே. இக்கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனத் திரவங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. இவ்விடத்தில், இலங்கையர்களின் சாதனையை நினைவுகூறல் வேண்டும். சிறிய தீவாகஇருக்கின்ற போதும், உலகிலேயே ஐந்தாவது அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்களைத் தன் கடலிலே கொண்ட நாடென்ற பெருமை எமக்குரியது?

இவையனைத்தும் ஒரே திசையில், ஒரே கேள்வியையே எழுப்புகின்றன. இலங்கையர்களாகிய நாம், நமது சூழல் குறித்து எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறோம். சாதாரண மனிதர் தொட்டு, நிர்வாகிகள், அரச அலுவலர்கள், அரசியல்வாதிகள் வரை நம் அனைவரதும் அக்கறை இன்மைக்கு, நாம் கொடுத்த மிகப்பெரிய விலை இது. 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எம்-வி-எக்ஸ்பிரஸ்-பேர்ள்-அனர்த்தம்-பதில்கள்-இல்லாத-கேள்விகள்/91-274484

 

அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா

3 days 17 hours ago
அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதியின் பிரேரணையும் தவறான பிரச்சாரங்களும் - யதீந்திரா

கடந்த மே மேதம் 18ம் மிகதி அமெரிக்க காங்கிரஸில், இலங்கை தொடர்பில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. அமெரிக்க சமஸ்டி அரசுகளில் ஒன்றான வடக்கு கரலைனாவை (U.S. Representative for North Carolina’s 2nd congressional district) பிரதிநிதித்துவம் செய்யும் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவரால் இந்த பிரேரணை அறிமுகம் செய்யப்பட்டது. இவரது பெயர் (Deborah K. Ross) டெவோறா ரோஸ். ஐக்கிய அமெரிக்கா, ஐம்பது சமஸ்டி அரசுகளை உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒன்றுதான் வடக்கு கரலைனா குறித்த பிரேரணைக்கு, மேலும் நான்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸில் இதற்கு முன்னர் இவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்படதில்லையா? இதற்கு முன்னரும் இலங்கை தொடர்பில் பல பிரேரணைகள் அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு சில காங்கிரஸ் பிரதிநிதிகள் இணையனுசரனை வழங்கியிருக்கின்றனர். 2019ஆம் ஆண்டும் இது போன்றதொரு பிரேரணையை ஒரு காங்கிரஸ் பிரதிநிதி முன்வைத்திருந்தார். இந்த பிரேரணை யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் தலையீட்டை வலியுறுத்தியிருந்தது. தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணையசரனை வழங்கியிருப்பவர்களில் இவரும் ஒருவர்.

spacer.png

இதற்கு முன்னரும், இலங்கை தொடர்பில் பல பிரேரணைகள் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிடுவது பயனுடையதல்ல என்பதால் அவற்றை தவிர்த்துவிடுகின்றேன். ஒன்றை உதாரணமாக தருகின்றேன். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, அதனை ஆதரித்தும் அமெரிக்கா காங்கிரஸில் ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனை முன்வைத்தவர் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, இராஜங்கச் செயலாளராக இருந்த ஜோன் ஹெரி ஆவார். இதே போன்று பிறிதொரு காங்கிரஸ் பிரதிநிதியும் 1987 இந்தி – இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்து பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார். இது ஒரு நல்ல வாய்ப்பு. இதனை பயன்படுத்தி இலங்கையின் சமானத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே அந்த பிரேரணைகளின் சாரம்சமாகும். தற்போது முன்வைக்கபட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் உரத்துப் பேசிய பலருக்கும், இந்த விடயங்கள் தெரியாமல் இருக்கலாம்.

இதிலிருந்து அமெரிக்க காங்கிஸில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதும், அதற்கு சிலர் இணையனுசரனை வழங்குவதும் ஆச்சரியமான ஒன்றல்ல என்பது இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். அப்படியாயின் இந்த பிரேரணை தொடர்பில் ஏன் சலசலப்புக்கள் ஏற்பட்டது? நான் ஏற்கனவே குறிப்பிட்ட 2019இல் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் எவருமே பேசியிருக்கவில்லை. அரசாங்கமும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டன அறிக்கைகளை வெளியிடும் அளவிற்கு இந்த பிரேரணையில் அப்படியென்ன இருக்கின்றது?

தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த பிரேரணையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில சொற்கள்தான் அனைத்து சலசலப்புக்களுக்குமான காரணமாகும். இந்த பிரேரணையை தமிழர் தரப்புக்கள் பாராட்டியிருப்பதற்கும், அரசாங்கம் கண்டித்திருப்பதற்கும் இதுவே காரணம். அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட ஒரு பிரேரணையில், முதல் தடவையாக, வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வடகிழக்கு வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பகுதியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்பில் குறிப்பிடுகின்ற போது, சுதந்திரத்திற்கான அமைப்புக்கள் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. தமிழர் தரப்புக்கள் குறித்த பிரேரணையை பாராட்டி அறிக்கைகள் வெளியிட்டதற்கு இதுவே காரணமாகும். அரசாங்கம் இந்த பிரேரணையை கண்டித்து, அறிக்கை வெளியிட்டதற்கும் இதுவே காரணம்.

இந்த பிரேரணை மே. 18ம் திகதி, குறித்த காங்கிரஸ் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டது. ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இரண்டு வாங்கள் கழித்துத்தான், நித்திரை கலைத்திருந்தார். இது உண்மைக்கு மறானது எனவும், இதனை அமெரிக்க வெளிவிவகார குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் தினேஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்படி சொற்கள் சிங்கள-பௌத்த தேசியவாத தரப்புக்களை உசுப்பிவிட்டிருக்கின்றது. இது தொடர்பில் பலரும் எழுதியிருக்கின்றனர். இவ்வாறான எழுத்துக்கள்தான் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் விழித்துக் கொண்டமைக்கான காரணம்.

ஆனால் தமிழ்த் தேசிய சூழலில், இந்த பிரேரணை சரியாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்டபாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டதாக சிலர் விவாதிக்க முற்பட்டனர். சிலரோ, அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை இயக்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டதாக பிரச்சாரம் செய்தனர். நீண்டகாலமாக தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் காசிஆனந்தன், அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக் கொண்டுவிட்டது போல், இந்தியாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பழ நெடுமாறன், அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டது என அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது வை.கோபாலசாமியும், குறித்த பிரேரணையை அடிப்படையாகக் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதே போன்று – அமெரிக்கா, தமிழிரின் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஈழ தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். இவ்வாறான தவறான பார்வைகள், அறியாமையிலிருந்து வருகின்றதா அல்லது தெரிந்து கொண்டே தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றனரா?

spacer.png

உண்மையில், குறித்த பிரேரணையை, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்படுத்தி, பிரச்சாரங்களை மேற்கொள்வது அடிப்படையிலேயே தவறானதாகும். வடகிழக்கு தமிழர் விவகாரத்தை அமெரிக்கா மனித உரிமை விவகாரமாகவே நோக்குகின்றது. இது தொடர்பில் முன்னரும் நான் எனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அமெரிக்க வெளிவிவகார அணுகுமுறையை பொறுத்தவரையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தமாகும். இந்த அடிப்படையில்தான் 1997ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இணைத்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் விடுதலைப் புலிகளும் சேர்க்கப்படுகின்றனர். யுத்தம் முடிவுற்று 12 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, விடுதலைப் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் அடிப்படையான பார்வையில் மாற்றம் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்கா விடுதலைப் புலிகளை, ஒரு விடுதலை அமைப்பாக ஏற்றுக் கொண்டுவிட்டதாக பிரச்சாரம் செய்வதானது, ஒரு அரசியல் நேர்மையற்ற செயலாகும். மேலும் இந்த பிரேரணையின் அடிப்படையில் நோக்கினால், விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களும் கட்சிகளும்தான் சுதத்திரத்திற்காக செயற்பட்ட அமைப்புக்களாக காட்டப்பட்டிருக்கின்றது. அதாவது, சிலர் இப்போதும் ஒட்டுக் குழுக்கள், மண்டையன் குழு, என்று கிண்டல் செய்யும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கூட, மேற்படி, சுதந்திர அமைப்புக்குள் அடங்கும். நான் எந்தவொரு அமைப்பையும் இவ்வாறு விமர்சிப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வாதத்திற்காகவே இந்த விடயத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். குறித்த பிரேரணையை முன்வைத்து விவாதிப்போர், இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே, மேற்படி விடயங்களை, இங்கு வலியுறுத்தியிருக்கின்றேன்.

சில அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இடம் என்னும் புரிதலை ஏற்படுத்துதில், அமெரிக்காவில் இயங்கும் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர். அந்த அடிப்படையில் இது ஒரு சிறிய மாற்றம்தான். ஆனால் இதனை முன்வைத்து அளவுக்கதிகமாக, கற்பனைகளை வளர்த்துக் கொள்வதுதான் தவறானது. ஆனால் இவ்வாறான பிரேரணைகள் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஏனெனில் இது ஒரு சில காங்கிரஸ் பிரதிநிதிகளின் வாதம். இதனை பெரும்பாண்மையான அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவ்வாறு ஏற்றுக் கொண்டால், அமெரிக்காவின் வெளிவிவகார அணுகுமுறையில் சில அதிர்வுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கான சூழல் பிரகாசமாக இல்லை. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகார அணுகுமுறையானது மனித உரிமைகள் சார்ந்த ஒன்று. ஆனால் அதற்கு சில வரையறைகள் உண்டு. இலங்கை விடயத்தில் புதுடில்லியின் அணுகுமுறையே முதன்மையானது. அமெரிக்காவில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் கூட, அந்த மாற்றங்களின் மீது, புதுடில்லியின் கடைக்கண் பார்வை படவேண்டியது அவசியம். அவ்வாறில்லாவிட்டால் அந்த மாற்றங்கள் முழுமையடையாது.

அமெரிக்க காங்கிரஸ் என்பது 535 உறுப்பினர்களை கொண்ட ஒரு அரசியல் கட்டமைப்பு. இது பிரதிநிதிகள் சபையையும்  செனட்டையும் உள்ளடக்கியிருக்கும். அமெரிக்க பிரதிநிதிகள் சபையானது, கீழ்சபை என்று அழைக்கப்படும். செனட் மேல்சபை என்று அழைக்கப்படும். பிரதிநிதிகள் சபை 435 உறுப்பினர்களை கொண்டது. செனட் 100 உறுப்பினர்களை கொண்டது. இந்த இரண்டையும் உள்ளடக்கிய அமெரிக்க காங்கிரஸிலேயே, இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா காங்கிரஸில் முன்வைக்கப்படும் பிரேரணைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. இணைந்த பிரேரணைகள், கூட்டாக முன்வைக்கப்படும் பிரேரணைகள், சாதாரண பிரேரணைகள் என்று மூன்று வகையான பிரேரணைகள் இருக்கின்றன. இது பற்றிய விளக்கங்களுக்குள் நான் செல்லவில்லை. அது தமிழர்களுக்கு தேவையானதல்ல. தற்போது முன்வைக்கபட்டுள்ள பிரேரணை சாதாரண பிரேரணை என்னும் வகையை சேர்ந்தது. இந்த பிரேரணை அமெரிக்க ஜனாதிபதியின் பரிசீலனைக்கு செல்லாது. இந்த தகவல்கள் தற்போதைக்கு போதுமான என நினைக்கின்றேன்.

இந்தப் பிரேரணை தொடர்பிலான உண்மைகளை முன்வைக்கும் நோக்கிலேயே, இங்கு சில விடயங்களை சுட்டிக் காட்டியிருக்கின்றேன். ஏனெனில் தவறான பிரச்சாரங்கள் எந்தவொரு நன்மையையும் தராது. மக்களை போலியான நம்பிக்கைக்குள் தள்ளிவிடுவதன் மூலம், நாம் எதனையும் சாதிக்க முடியாது. 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் இவ்வாறான போலியான நம்பிக்கைகளே அதிகம் தமிழர் அரியலை ஆக்கிரமித்திருக்கின்றது.

http://www.samakalam.com/அமெரிக்கா-காங்கிரஸ்-பிரத/

 

பி.கு. பத்தியை இணைத்தவர் முக்கிய பந்தி ஒன்றை தடித்த எழுத்தில் காட்டியுள்ளார்.

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

4 days 13 hours ago


 

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

சின்னையா செல்வராஜ்

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். 

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், சந்திப்பு பிற்போடப்பட்டமை குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கத்திலிருந்தே செய்திகள் வௌிப்படுத்தப்பட்டன.  

ஜனாதிபதித் தேர்தலையடுத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர், 69 இலட்சம் பெரும்பான்மை மக்களின் வாக்குளைப் பெற்று வெற்றியீட்டிய அதே உந்துதலுடன் தன்பயணத்தைத் தொடர்ந்த ஜனாதிபதி, சிங்கள பெரும்பான்மை மக்களின் மனங்களில் ‘சிங்கம்’ என இடம்பிடித்துக்கொண்டார். 

‘நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசிவது போல்’,  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், சிறுபான்மையினரின் பக்கமாகக் கடைக்கண் பார்வை மட்டுமே பார்க்கப்பட்டது.  
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், நிவாரணக் கொடுப்பனவுகள் என்று எதுவாக இருந்தாலும் அவையெல்லாம், தென்னிலங்கையை மையப்படுத்தியே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றன. 

சிறுபான்மை இனங்கள், பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே பலருடைய குற்றச்சாட்டுகளாகும். 

பல்லினங்கள் வாழும் நாட்டில், சகலருக்கும் பொதுவானவராகவே ஜனாதிபதி இருத்தல் வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் முன்னிலையில் போட்டியிட்டவர்களும் வெற்றியீட்டியவர்களும், சிறுபான்மையின மக்களை ஓரங்கட்டிப் பார்க்கவில்லை.

அரசியல் கொள்கை கோட்பாடுகளின் பிரகாரமும் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தும், அவற்றுக்கு ஆதரவானவர்களும் இருக்கலாம்; எதிரானவர்களும் இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு ஒருவரே ஜனாதிபதியாவார். 

கடந்த கால ஜனாதிபதிகள், அவ்வாறான பேதங்களை ஓரளவுக்கேனும் மறந்து செயற்பட்டனர். ஆனால், அவ்வாறான தோற்றப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காண்பிக்கவில்லை. இல்லையேல், சுற்றியிருக்கும் பரிவாரங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. 

என்னதான் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருந்தாலும் ‘ஜனாதிபதி’ என்றொருவரால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணமுடியாது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கூறல், ஆளும் கட்சியின் ஒ‌ற்றுமை, பாராளுமன்றத்தின் அங்கிகாரம், மக்களின் ஆதரவு போன்றவை எல்லாம், ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கின்றன. 

இவற்றுக்கு ஒருபடி மேலேசெல்லவேண்டுமாயின், எதிர்க்கட்சியினரையும் அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, அரசியல் சுய இலாபத்துக்காக இல்லாது, நாடு, மக்கள், எதிர்கால சந்ததி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, தீர்மானங்கள் எட்டப்படுமாயின், ஜனாதிபதி தனித்து நிற்கவேண்டியதில்லை.  

விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காது, தான்தோன்றித்தனமாக, தன்னைச் சுற்றியிருக்கும் சிறு குழுவின் ஆலோசனைகளைப் பெற்று, அவ்வாறானவர்களை மட்டுமே திருப்திப்படுத்துவதற்கான முடிவுகள், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியதை தவிர்க்கவே முடியாது. 

“பயங்காரவாதிகளைப் போல, கொரோனாவையும் நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்” என வீராப்பு வசனங்களைப் பேசி, தனிவழியில் சென்று,  திக்குமுக்காட வேண்டிய நிலைமைக்கு  அரசாங்கம் வந்துவிட்டது.

நானென்ன செய்வதெனக் கூறி, ஒரு நாட்டின் தலைவன் கைகளை விரித்துவிடமுடியாது; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாளியாக இருக்கவேண்டும். அதற்குத் தேவையான வகையில், நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலம் தொடர்பில் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து, முடிவுகளை எடுக்கவேண்டும். 

ஜனாதிபதி, பெரும்பான்மை வாக்குகளால் வென்றிருப்பதை மறுதலிப்பதற்கு இல்லை; அந்தச் சூட்டோடு சூடாக, தங்களுக்கு ஆதரவளிக்காத தரப்பு மக்கள் பிரதிநிதிகளை  அழைத்துப் பேசி, அம்மக்களின் பிரச்சினைகளையும்  செவிசாய்த்திருந்தால், அது சிம்மாசனத்தை மென்மேலும் அலங்கரித்திருக்கும். 

‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்ற நாமம் இல்லாது ஒழிந்துவிடுமோ என்றோர் அச்சம், ஜனாதிபதியிடம் குடிகொண்டிருக்கலாம். அதனால், தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பை, இதுவரை காலமும் தவிர்த்துவந்திருக்கலாம். 

நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற பிரச்சினையென்றால், இனப்பிரச்சினையை மட்டுமே கூறமுடியும். அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான எந்தவொரு செயற்பாடும், புதிய ஜனாதிபதியின் கீழ் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று (16) ஏற்பாடாகியிருந்தது. எனினும், திகதி, நேரம் குறிக்கப்படாது அச்சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் த.தே.கூவுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாகப் பதியப்பட்டிருக்கும். 

 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2020 டிசெம்பர் அனுப்பி வைத்ததாகவும் அதன்பின்னர்,   2021 பெப்ரவரியில், நிபுணர் குழுவை சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்த கூட்டமைப்பு, இதை முன்கொண்டு செல்வது சம்பந்தமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்படுமென  கூறியது.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிவிப்பை பார்க்குமிடத்து, இப்போதைய நிலைமையில் இது தேவைதானா என, உண்மையில் நினைக்கவைத்துவிட்டது.  

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை பலமுனைகளிலும் முன்னகர்த்தி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பிலும் கட்டாயம் கதைத்தே ஆகவேண்டும். ஏனெனில், பயணக்கட்டுப்பாடுகள் எனக் கூறிக்கூறியே, தங்களுக்குத் தேவையானவற்றை இவ்வரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுவிடும். ஆனால், அரசியலமைப்பு யோசனையை எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றமுடியாது, அதற்கென சில படிமுறைகள் உள்ளன. எனவே, இப்போதைக்கு பேசவேண்டிய அதிமுக்கியமான விடயமாக அரசியலமைப்பு திருத்தம் இருந்துவிடமுடியாது.

கொரோனா தொற்றுக்காலத்தில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும், பயணக்கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொறிமுறைகளை உருவாக்குதல்  உள்ளிட்டவை தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசப்போகின்றோமென கூட்டமைப்பு அறிவித்திருக்குமாயின், ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான  தரப்பும் மெளமாய் இருந்திருக்கும். ஆனால், ‘விடயம்’ இனப்பிரச்சினைத் தீர்வோடு பயணப்பட்டதால், ‘முதல் சந்திப்பு’  வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

 ‘புலி முத்திரை’ குத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், ஜனாதிபதி சந்தித்தித்தால், “புலிகளின் கால்களில் சரணடைந்த சிங்கம்” எனப் பிரசாரம் செய்வதற்கு, இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் தென்னிலங்கை தரப்பின் வாய்களுக்கு, ‘அவல்’ போட்டதாய் அமைந்திருந்திருக்கும். அதேபோல, புலிகளின் போர்வைக்குள் இருந்து அரசியல் செய்யும் தமிழ்த்தரப்புகள், “சரணாகதி அரசியல் செய்யும் கூட்டமைப்பு” என பேரண்ட பிரசாரத்தில் குதித்திருப்பர்.   

ஆக, சந்திப்புத் தொடர்பில், முன்தம்பட்டம் அடிக்காமல் மௌனம் காத்திருந்தால், கூட்டமைப்பின் அரசியலுக்கு அது அழகுசேர்த்திருக்கும்.  மக்களுக்கு அதிரடியாய்த் தேவையான  விடயங்களை, ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு சென்று, முடிந்தவற்றைப் பெற்றிருக்கலாம்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியை கைவிடுமாறு கூறவில்லை; ஆனால், இடம், பொருள், ஏவல் அறிந்து, அரசியல் காய்களை நகர்த்தியிருக்க வேண்டும். அதில், கூட்டமைப்பு ‘கூத்தாடி’விட்டது. முன்னரே கசியவிட்ட செய்தியால், கடும்போக்கு சிங்களத் தரப்புகள், ‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்பதை நினைவூட்டி, சந்திப்பை வேண்டுமென்றே பிற்போடும் அளவுக்கு, உள் அழுத்தங்களைக் கொடுத்திருந்திருக்கலாம்.

இல்லையேல், கூட்டமைப்புக்காக ஒதுக்கியிருந்த அந்த நேரத்தில், அவசரமாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை நடத்தவேண்டி இருந்திருக்கும். ஆக, ஜனாதிபதியின் நாட்குறிப்பை மாற்றக்கூடிய அதியுச்ச அதிகாரம், அவரிடம் மட்டுமே உள்ளதென்பதை மறுதலிக்க முடியாது. 

மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (ஜூன் 16) நிகழவிருந்த அதிசயம், இறுதி செய்யப்படாது அஸ்தமனமாகி, மீண்டுமோர் உதயத்துக்கான திகதியோ நேரமோ குறிக்கப்படாது, விடப்பட்டுள்ளது எனக்கூறுவதில் தப்பேதும் இல்லை. 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஸ்தமனமானது-முதலாவது-சரணாகதி/91-274422

‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான்

4 days 18 hours ago


 

‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான்
June 18, 2021
Capture-15.jpg

 

வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேசமாக மாறி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக நாங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்காலத்தில் பாரியளவிலான அத்துமீறல்களையும், நில அபகரிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நிலையெழுந்து வருகின்றது.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் மேய்ச்சல் தரை அபகரிப்பு, தொல்பொருள் பாகாப்பு என்ற போர்வையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழிற்பேட்டையென்ற பெயரில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழர் செயற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியதாக சுமார் 150ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கம் தொழில்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

Capture.JPG-1-5-300x225.jpg

சுமார் 5000பேர் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறும், பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கியதாகவும் இந்தத் தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்தத் தொழிற் பேட்டைக்குத் தேவையான வளங்களும், மனித வளங்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டும் பெற்றுக் கொள்ளப்படுமானால், அதனை வரவேற்க முடியும். ஆனால் இந்த வேலைத் திட்டம் தேசிய ரீதியான வேலைத் திட்டம் என்ற காரணத்தினால் எதிர்காலத்தில் இப்பகுதியில் சிங்கள மக்களை பாரியளவில் குடியேற்றுவதற்கான ஒரு திட்டமாகவும் கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மட்டக்களப்பு, கல்குடாப் பகுதியின் பாசிக்குடா பகுதியில் பெருமளவான தமிழர் நிலங்கள் சுற்றுலாத் துறைக்காக தென்பகுதி வர்த்தகர்களுக்கு ஹோட்டல்கள் அமைப்பதற்கு வழங்கப்பட்டன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களையே பயன்படுத்த வேண்டும், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடனேயே இவ்வாறு நிலங்கள் வழங்கப்பட்டன.

anilana-pasikuda.jpg

ஆனால் இன்று பாசிக்குடாவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சிங்களவர்களே கடமையாற்றும் நிலையுள்ளது. அத்துடன் ஹோட்டலுக்குத் தேவையான பொருட்களும் சிங்களப் பகுதிகளில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. பாசிக்குடாப் பகுதியின் அனைத்து வளங்களையும் சிங்களவர்களே அனுபவிக்கும் நிலையில், தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாசிக்குடாக் கடற் கரையினை அண்டிய பகுதிகளில் சுமார் 100இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் பௌத்த பாடசாலையும், பௌத்த மதத்தலமும் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவை தொடர்பில் கதைப்பதற்கோ கேட்பதற்கோ யாரும் அற்ற நிலையே காணப்படுகின்றது.

கல்குடாப் பகுதியின் பாசிக்குடாப் பகுதியென்பது, தமிழர்களின் இயற்கையாக அமைந்த பொருளாதார கேந்திரத்துவமிக்க பகுதி ஆகும். இன்று அப்பகுதி பெரும்பான்மை இனத்தவர்களின் கேந்திர பூமியாக மாற்றமடைந்துள்ளது. அன்றைய காலத்தில் தமிழர்கள் முதலீடுகள் செய்ய அனுமதிக்கப்படாமல், முற்றுமுழுதாக சிங்களவர்களின் முதலீடாக ஹோட்டல்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.

இதேபோன்றதான ஒருநிலை ஏறாவூர்ப்பற்று பகுதியிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது தமிழர்கள் மத்தியில் காணப்படும் கருத்தாகும். குறிப்பாக பல காலமாக ஏறாவூர்ப்பற்று மற்றும் வாகரை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகள் சிங்களப் பேரினவாத அரசுகளினால் குறிவைக்கப்பட்ட நிலையினை காண முடிகின்றது.

குறிப்பாக வாகரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள வர்த்தகர்களுக்கு யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டன. அந்தக் காணிகள் இன்று வேலிகள் அடைக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சுமார் 100வருடங்கள் என்ற வகையில் குறித்த காணிகள் தொழில் முயற்சிகளுக்காக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தக் காணிகளில் சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.

Capture.JPG-2-3-300x176.jpg

ஏற்கனவே 2016ஆம் ஆண்டு வாகரை, ஏறாவூர் பற்று ஆகிய பகுதிகளில் யுத்தத்திற்குள் சிங்கள மக்கள் வாழ்ந்ததாக கூறி சுமார் 250 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய அரசாங்கத்திலிருந்த சில சிங்கள கடும் போக்காளர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், குறித்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்ட போதிலும், அந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

இதன் கீழ் மாங்கேணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காரமுனைப் பகுதியில் 178 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டிருந்தன. யுத்தத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்ததாகவும், மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் கூறியே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கைவிடப்பட்ட நடவடிக்கையினை 2020ஆம் ஆண்டு கைப்பற்றிய கோத்தபாய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற அனுராதா யாம்பட் தொடர்ந்த நிலையில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. இதனால் இது அடக்கி வாசிக்கப்படுகின்றது.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடாக் கடற்கரைப் பகுதியில் யுத்தத்திற்கு முன்பாக சிங்களவர்கள் வாழ்ந்ததாகத் தெரிவித்து, சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டன. நீர்கொழும்பு, சிலாபம், அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால், அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இன்று கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமிக்கும் ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்துக்கு வடமேல் திசையில் எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ சரக்குக் கப்பலின் தீயானது கிழக்குத் தமிழ் மக்களின் வயற்றிலும் தீயை மூட்டியுள்ளது.

இன்று தெற்குப் பகுதியில் உள்ள கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்து, தமது தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அவர்களின் பார்வையானது கிழக்கினை நோக்கித் திரும்புவதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கி விட்டன. இன்று கிழக்கின் கடற்பரப்புக்குள் பெருமளவு சிங்களவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சிங்களவர்களை மீனவர்கள் என்னும் போர்வையில் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இந்த சிங்களப் பேரிவாத அரசுகளுக்கு இன்றைய சூழ்நிலையினை பயன்படுத்தக் கூடிய சாத்திய நிலை அதிகளவில் காணப்படுகின்றது.

எதிர் காலத்தில் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளும் அச்சுறுத்தல்களுக்குள் செல்லும் நிலையிருக்கின்றது. தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையினையும் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தி, திட்டமிட்ட வகையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிலையை விரைவுபடுத்தக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தற்போது இந்த அரசாங்கத்திற்கு தெற்கில் உள்ள சரிவினை ஈடுசெய்வதற்கு இனவாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இந்த நிலையில் தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மூலம் தனது செல்வாக்கினை நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயற்பாட்டினை துரிதப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் தமிழர் தரப்பு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தி, தமிழர் நிலத்தினை பாதுகாப்பதற்கு என்ன செய்யப் போகின்றது என்பது அடுத்த கேள்வியாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் காணி அபகரிப்பு தொடர்பில் தொடர்ச்சியாக அதனை வைத்து அரசியல் செய்யும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, குறித்த விடயங்களைத் தடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் தமிழ் மக்களை அறிவுறுத்தவோ எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் பிரதிநிதிகள் முகநூல்கள் ஊடாக நேரலை செய்தலும், தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமற்ற விடயங்களிலும் ஈடுபட்டு வருகின்றதை காணமுடிகின்றது. வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறும் இந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அந்த சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகளை கொண்டு செல்வதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மையான விடயமாகும்.

இனிவரும் காலத்திலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இவ்வாறான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி, அது தொடர்பான சகல விடயங்களையும் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதன் மூலமே எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பினைக் காப்பற்ற முடியும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

https://www.ilakku.org/?p=52677

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை

5 days 5 hours ago
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை

எம்.எஸ்.எம். ஐயூப்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள்,  படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளிலேயே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பேரவையின் உறுப்பு நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம், இலங்கை அரசாங்கம், சிறுபான்மையினருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாவிப்பது போன்ற, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால், இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வாபஸ் பெற வேண்டும் என, ஐரோப்பிய ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி சலுகையானது, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையாகும். இதன் கீழ், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடலைப் பாதுகாத்தல், நல்லாட்சி ஆகிய விடயங்கள் தொடர்பான, 27 சர்வதேச ஒப்பந்தங்களை அமல்செய்யும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரி அறவிடமாட்டாது.

ஆனால், குறிப்பிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடு, மேல் மத்திய மட்டத்துக்கு, குறைந்த வருமானம் பெறும் நாடு (income level below ‘upper middle income’) என்று, உலக வங்கி வகைப்படுத்தியிருக்க வேண்டும். 

அத்தோடு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற ஏனைய திட்டமொன்றின் மூலம், ஐரோப்பிய நாடுகளிடமிருந்து, வேறு சலுகைகளைப் பெறாத நாடாகவும் இருக்க வேண்டும். 

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 7,000 பொருட்களுக்கு, ‘ஜீ.எஸ்.பி பிளஸ்’ திட்டத்தின் கீழ், பூரண வரிச் சலுகை வழங்கப்படுகிறது. வருடத்துக்கு 2.3 பில்லியன் யூரோ (552 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பொருட்களை, ஐரோப்பாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம், இலங்கையின் இரண்டாவது பெரும் ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா இருக்கிறது. 

இலங்கை அரசின் வருடாந்த வருமானம்,  1,400 பில்லியன் ரூபாயாக இருப்பதால், இந்த ஏற்றுமதி வருமானம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை இழப்பதால், இந்த மொத்த வருமானத்தையும் நாடு இழக்கப் போவதில்லை. ஆனால், அந்தச் சலுகையுடன் வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை, இலங்கை பொருட்களின் விலையைவிட, ஐரோப்பிய சந்தையில் குறைந்து காணப்படுவதால், இலங்கைப் பொருட்களுக்கான கிராக்கி, வெகுவாகக் குறைந்துவிடும். அதன் மூலம், நாடு பெருமளவில் ஏற்றுமதி வருமானத்தை இழக்க நேரிடும். விற்பனையின் மூலம் வருமானத்தைப் பெற்றாலும், அந்த வருமானத்தால் வரியைச் செலுத்த வேண்டி வரும். 

இந்தப் பிரேரணையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தின் காரணமாக, இலங்கைக்கு எதிராக, சர்வதேச சமூகம் இந்த வருடம் நிறைவேற்றிய இரண்டாவது பிரேரணையாகும். 

முதலாவது பிரேரணை, கடந்த மாரச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில், போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள், போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்களுக்கு எதிராகத் தத்தமது நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்றும் அந்தப் பிரேரணையின் மூலம் கூறப்பட்டது.

ஆயினும், இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கவிஞர் அஹ்னாஸ் ஜஸீம் போன்றவர்கள் இன்னமும் வழக்கு விசாரணையின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

போர்க் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களும், இன்னமும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். தீவிரவாதத்தைப் பரப்புவதாகச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்து, வழக்கு விசாரணையின்றி, மறுவாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்க, சட்ட விதிகளை அறிவித்து, கடந்த மார்ச் மாதம், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதுவும் இன்னமும் அமலில் உள்ளது.

இந்த, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை, மேற்படி வர்த்தமானி அறிவித்தல், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான வேறு சில அறிக்கைகள் ஆகியவற்றையும் நியாயமற்ற தடுத்து வைத்தல் சம்பவங்களையும் சுட்டிக் காட்டியே, ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த 10 திகதியிடப்பட்ட பிரேரணையை நிறைவேற்ற இருக்கிறது. 

அத்தோடு, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளைப் பெறும் நாடுகளைப் பற்றிய, ஐரோப்பிய ஆணைக்குழுவின் விசாரணைகளின் முடிவுகளும் இந்தப் பிரேரணைக்குக் காரணமாக அமைந்துள்ளன.

பிரேரணையை அடுத்து, நாட்டில் மனித உரிமைகள் நிலைவரத்தைச் சீராக்குவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் நிபந்தனைகளை, அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. 

“வரிச் சலுகைகளுக்காக, நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், திங்கட்கிழமை (14) கூறியதன் மூலம், அது தெரிய வருகிறது.

இரண்டாவது முறையாக, இலங்கை ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இழக்கப் போகிறது. இன்று போலவே, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், 2010ஆம் ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இரத்துச் செய்தது. 

அதன் பின்னர், அச்சலுகைகளை வழங்குவதற்காக மனித உரிமைகள் தொடர்பான 15 நிபந்தனைகளை விதித்தது. அவசரகாலச் சட்டத்தை பூரணமாக நீக்குவது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற ஜனநாயகத்துக்கான தேவைகள் அவற்றின் மூலம் எடுத்துரைக்கப்பட்டு இருந்தன. 

இன்று போலவே அன்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம், அந்நிபந்தனைகள் மூலம், நாட்டின் இறைமை பாதிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை நிராகரித்தது. 

அதன் பின்னர், 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக அரசியலமைப்புச் சபையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நிறுவியது. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக, சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தது; ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்தது. 

இவற்றின் காரணமாக, 2017ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி, இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையிலான அரசாங்கம், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், அரசியலமைப்புச் சபையை இரத்துச் செய்து, சுயாதீன ஆணைக்குழுக்களை, ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்கப் போகிறது. 

முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நல்லாட்சிமுறை நடவடிக்கைகளுக்கு முரணாக, தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இந்தப் பின்னணியிலேயே, கடந்த 10ஆம் திகதி, ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. 

பயங்கரவாதம் தொடர்பாகச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வதை எவரும் எதிர்க்கவில்லை. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர், குற்றச்சாட்டுகள் இன்றியும் நீதிமன்றங்களின் முன்நிறுத்தப்படாமலும்  தடுத்து வைக்கப்பட்டு இருப்பதையே சர்வதேச சமூகம் எதிர்க்கிறது. இதை நாட்டின் எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றன. 

இதை அரசாங்கம் தவிர்க்க முடியும். அதனால், நாட்டில் இறைமை எவ்வகையிலும் பாதிக்கப்படாது. எனவே, சற்றுச் சிந்தித்தால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை விடுத்து, தமது வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த, அரசாங்கம் கோடிக் கணக்கான நட்டத்தை அடையப் போகிறது.

அரசாங்கம், ஜீ.எஸ்.பி சலுகைகளைப் பெறுவதற்காக, 27 சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அவற்றை முறையாக அமுலாக்குவதிலேயே, அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளன. 

அவற்றை அமலாக்குவதன் மூலம், நாட்டின் இறைமை பாதிக்கப்படுமேயானால், அந்த ஒப்பந்தங்களிலிருந்து முற்றாக வெளியேற வேண்டும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-அரசாங்கத்துக்கு-எதிராக-மற்றொரு-சர்வதேச-பிரேரணை/91-274351

 

"இனவாதம்" என்ற வைரசை வைத்துக் கொண்டு... கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்??

5 days 22 hours ago
இனவாதம் என்ற வைரசை வைத்துக்கொண்டு கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்?? "இனவாதம்" என்ற வைரசை வைத்துக் கொண்டு... கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்??

பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால்தான், அது கடனை அடைக்க கடன்வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதன் விளைவாகவே அது சீனாவிடம் நெருங்கிச் சென்றது. இப்போது சீனாவின் முதலீடுகளாகக் காணப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற பல விடயங்களை இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்குத் தருவதற்கு சிறீலங்கா தயாராகக் காணப்பட்டது. ஆனால், அந்த முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில்தான் சீனா அங்கே முதலீடு செய்தது.

எனவே, இலங்கை தீவின் கடன் சுமையைக் குறைக்க உதவக்கூடிய ஒரே நாடாக அதிலும் குறிப்பாக மனித உரிமைகளை ஒரு முன்நிபந்தனையாக வைக்காத ஒரே நாடாக சீனாவை காணப்படுகிறது. இப்படித்தான் இலங்கை தீவு சீனாவின் கடன் பொறிக்குள் விழுந்தது.

சீனாவிடம் கடன் வாங்க முன்பே இலங்கை தீவு ஒரு கடனாளியாகதான் இருந்தது என்பதனை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முடிவில் சீனக் கடன் ஒரு பொறியாக மாறிய பொழுது இலங்கை தீவு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலைமைகள் தோன்றின.

இவ்வாறாக கடனில் மூழ்கியிருந்த இலங்கை தீவை கொரோனா வைரஸ் தாக்கிய பொழுது அது ஒரே நேரத்தில் கடனையும் வைரசையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஓராண்டு கால அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் இரண்டிலுமே இலங்கை தீவு எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியவில்லை என்று தெரிகிறது.

இதனால்தான், பொருளாதார அம்சங்களைக் கவனத்தில் எடுத்து நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயங்குகிறது. வைரஸை வெற்றி கொள்வது என்றால் நாட்டை முடக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால், நாட்டை முடக்கினால் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுதவிர, தனது வெளியுறவுக் கொள்கை காரணமாக அதாவது சீனச் சாய்வு வெளியுறவுக் கொள்கை காரணமாக அமெரிக்காவிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் கிடைக்கக்கூடிய உதவிகளும் வரையரைக்குட்பட்டு விட்டன. குறிப்பாக தடுப்பூசி விடயத்தில் இந்தியா இலங்கைக்கு உதவத் தயாரில்லை என்று தெரிகிறது. இந்தியா ஒப்புக்கொண்ட நிதி உதவிகளையும் அந்நாடு தற்பொழுது செய்யத் தயாராக இல்லை என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மேலும், இலங்கை இப்பொழுது நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடாக மாறி வருவதால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடமும் உதவி பெற முடியாத ஒரு நிலை உண்டு. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அண்மையில் பங்களாதேஷிடம் இலங்கை  கடன் வாங்க வேண்டி வந்தது.

இலங்கை தீவின் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றோடு ஒப்பிடுகையில் பங்களாதேஷ் மிகவும் இளைய நாடு. அது 1971ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. ஆனால், அரை நூற்றாண்டு காலத்தில் அமோக வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன் விளைவாக சில தசாப்தங்களுக்கு முன்பு கடன் வாங்கும் நாடாக இருந்த பங்களாதேஷ் இப்பொழுது கடன் கொடுக்கும் நாடாக எழுச்சி பெற்றிருக்கிறது.

இவ்வாறாக ஒருபுறம் கடன், இன்னொருபுறம் வைரஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பதற்கு இலங்கை தீவால் முடியாதிருக்கிறது. இது காரணமாக அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கத்தின் மீது சாதாரண சனங்கள் கொண்டிருந்த மாயை தகரத் தொடங்கிவிட்டதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு உள்ளேயும் அதன் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள், உழைத்தவர்கள் அதை விமர்சிக்கக் காணலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் தொகுத்து அரசாங்கம் ஈடாடிக்கொண்டிருக்கிறது என்று கூறுவது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவு.

அரசாங்கம் கடனை அடைக்க முடியவில்லை என்பது உண்மை. ஆனால், இலங்கை தீவின் பொருளாதாரம் ஒரு மிகச்சிறிய பொருளாதாரம். அது கீழே போகும்போது அதை தாங்கிப் பிடிக்கவும் தூக்கி நிறுத்தவும் சீனாவைப் போன்ற மிகப்பெரிய பொருளாதாரங்களால் முடியும். மு.திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொன்னால் இலங்கை தீவின் சிறிய உண்டியலை நிரப்ப சீனாவின் சில்லறைகளே போதும்.இவ்வாறு கடனையும் வைரசையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் அரசாங்கம் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முற்றுமுழுதாக முடக்கத் தயங்குகிறது.

போதாக்குறைக்கு, அண்மையில் கொழும்புத் துறைமுகத்தில் இரசாயனங்களுடன் தரித்து நின்ற கப்பல் தீப்பிடித்து மூழ்கியது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடாக அமையவில்லை, அதோடு சேர்த்து இலங்கை தீவின் கடற்றொழில் வாணிபத்தையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இலங்கைக்கு வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முக்கியமானது உல்லாசப் பயணத்துறை.

இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று இங்குள்ள கடல் உணவுகள் ஆகும். ஆனால், கப்பல் எரிந்து உருவாக்கிய மாசாக்கம் கடல் உணவுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. உல்லாசப் பயணிகள் கடல் உணவுகளைத் தவிர்க்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வைரஸ் தொற்றுக்கு உல்லாசப் பயணிகளும் ஒரு காரணம்தான். இது விடயத்தில் அரசாங்கம் ரிஸ்க் எடுத்து உல்லாசப் பயணிகளை உள்ளே வரவிட்டது. ஆனால், இப்பொழுது கப்பல் எரிந்து மூழ்கியதால் அந்தத் துறையிலும் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் தெரிகின்றன.

இப்படிப்பட்டதோர் அரசியல் பொருளாதாரப் பின்னணியில்தான் முழு அளவிலான சமூக முடக்கத்தின்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனவே, பயணத்தடை என்று கூறி ஒருவித அரைச் சமூக முடக்கம்தான் தற்பொழுது நாட்டில் அமுலில் உள்ளது. இந்த அரை முடக்கத்திற்குள் உற்பத்தித் துறைகள் யாவும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் கடனில் மூழ்குவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம். இது காரணமாக அரசாங்கம் சமூக முடக்கத்தைப் பயணத் தடை என்ற பெயரில் அரைகுறையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்விளைவாக பிரதான சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பொலிசாரும் படைத்தரப்பும் போக்குவரத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

ஆனால், சமூகத்தின் செல்வாக்குமிக்க பிரிவினரும் வசதி வாய்ப்புகள் அதிகமுடைய பிரிவினரும் தடையை இலகுவாககக் கடந்து விடுகிறார்கள். அவர்களிடம் பயண அனுமதி உண்டு. இப்படிப் பார்த்தால் பயணத் தடை எனப்படுவது ஏழைகளுக்கு மட்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், ஏழைகள் நாட்டின் உட்சாலைகளில் தாராளமாகத் திரிகிறார்கள். வீட்டுக்கு வெளியே வந்தால்தான் அவர்களுக்கு உழைப்பிருக்கும், பொருள் கிடைக்கும். எனவே அவர்கள் வீட்டுக்கு வெளியே வரவேண்டிய தேவை இருக்கிறது.

நாட்டின் குக்கிராமங்களில் உள்வீதிகளில் கடைகள் அரைக் கதவில் அல்லது முழுக்கதவும் திறந்திருக்கின்றன. இல்லையென்றால் கடைகளுக்கு முன்னே விலைப்பட்டியல் வைக்கும் இடத்தில் பின்கதவால் பொருட்களைப் பெறலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இந்த இடத்தில் அபத்தமான ஒரு கேள்வியைக் கேட்கலாம். வைரஸ் முன் கதவால் தான் வருமா, பின்கதவால் வராதா? அல்லது வைரஸ் பிரதான சாலைகளின் வழியாகத்தான் வருமா? ஒழுங்கைகளின் வழியே வராதா?

எனினும், இந்த அரைச்சமூக முடக்கம்கூட எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதைத்தான் ஆகப்பிந்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பயணத் தடைகளின் மூலம் நோய்த்தொற்றுச் சங்கிலியை முழுமையாக உடைக்க முடியவில்லை. அதேபோல நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் பெரியளவிற்குக் குறைக்க முடியவில்லை.

இவ்வாறு கடனுக்கும் வைரசுக்கும் இடையே தடுமாறும் இலங்கை தீவில் வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவ லண்டனை மையமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முன்வந்தன. உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனூடாகத் தருவதற்கு முயற்சித்தன.

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து வரக்கூடிய உதவிகளை தமிழ் மாவட்டங்களுக்கு மட்டும் என்று கேட்டுப் பெறுவது சரியல்ல என்றும் ஒரு பெரும் தொற்றுநோய் காலத்திலும் உதவிகளை இன ரீதியாகப் பாகுபடுத்தக் கூடாது என்றும் சுமந்திரன் லண்டன் வாழ் தமிழர்களுக்கு கூறியிருக்கிறார்.

எனவே முழு இலங்கை தீவுக்கும் என்று அந்த உதவிகளைத் தந்தால்தான் அரசாங்கத்தோடு அது தொடர்பாக உரையாடலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களும் சம்மதித்திருக்கிரார்கள். எனவே, அந்த வேண்டுகோளை சுமந்திரன் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறார். ஆனால், அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றால் அது ஒரு விதத்தில் அவர்களை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும் என்று அரசாங்கம் கருதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்கள் முயற்சிக்கலாம் என்றும் அரசாங்கம் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. எனவே, மேற்படி உதவியை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

அதேசமயம் லண்டனை மையமாகக் கொண்ட புலம்பெயர்ந்த  சிங்கள மக்கள் வழங்கிய உதவிகளை அரசாங்கம் நிபந்தனைகளின்றிப் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நிறுவனங்களாகவும் தனி நபர்களாகவும் யார்யார் என்ன உதவிகளைச் செய்தார்கள் என்ற விவரம் காட்டப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் கடனில் தத்தளிக்கும் அரசாங்கம் பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கையேந்துகிறது. அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தர முன்வந்த உதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் தரும் உதவிகளைப் பெற்றுக் கொள்கிறது. அதாவது, அரசாங்கம் இனவாதம் என்ற ஒரு வைரஸை தன்னோடு வைத்துக்கொண்டு கொவிட்-19 என்ற ஒரு வைரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது?

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்

https://athavannews.com/2021/1222867

ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா

6 days 14 hours ago
ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா
 
Capture-11-696x388.jpg
 37 Views

2021 ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோண்வோல் நகரில் ஜீ-7 எனப்படும் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் ஒரு பிரதிநிதி பங்கு கொள்கின்றார். கோவிட்-19 பெருந் தொற்று, அதற்கான தடுப்பூசி, சூழல் பாதுகாப்பு, திறந்த பொருளாதாரம், தொழில்நுட்ப மாற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சென்ற ஆண்டு பெருந்தொற்று நோய் பரவலைத் தவிர்க்க மெய்நிகர் வெளியில் நடந்த மாநாடு, இந்த ஆண்டு ஜீ-7 நாடுகளின் ஆட்சியாளர்களின் நேரடிப் பங்கேற்றலுடன் நடக்கின்றது. தற்போது உள்ள ஏழு நாடுகளின் மொத்தப் பொருளாதார உற்பத்தி உலகப் பொருளாதார உற்பத்தியின் 40% ஆகும். ஆனால் அவற்றின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 10% மட்டுமே. இதனால் இவை உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஜீ-7 வரலாறு இரசியா உள்ளே வெளியே

1973 ஜீ-4 அமெரிக்கா, பிரான்ஸ், மேற்கு ஜேர்மன், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1975இல் இத்தாலி, ஜப்பான், கனடா, ஆகிய நாடுகள் இணைந்தபோது அது ஜீ-7 எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1991 ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்திற்கு இணை உறுப்புரிமை வழங்கப்பட்டது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவிற்கு பெருமளவு நிதி உதவி ஜீ-7 நாடுகளால் வழங்கப்பட்டது. 1997 ஜூன் மாதம் இரசியாவிற்கு முழு உறுப்புரிமை வழங்கியதில் இருந்து ஜீ-8 நாடுகள் என அழைக்கப்பட்து. இரசியா 2014ஆம் ஆண்டு உக்ரேனின் கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் இரசியா வெளியேற்றப்பட்டு மீண்டும் ஜீ-7 நாடுகள் என்னும் பெயர் பெற்றது.

பெருந் தொற்று பொருளாதார மீட்சி

WhatsApp-Image-2021-06-12-at-6.56.55-PM.

பெருந்தொற்றால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு உலகெங்கிலும் உள்ள அரசுகள் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. பெருந்தொற்றால் பெருமளவு மக்கள் வேலை இழந்து வாழ முடியாமல் துயரப்படும் போது அவர்களின் கைகளில் நேரடியாக பணத்தைக் கொடுத்தன. அரச நிதி நெருக்கடியை கவனத்தில் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மக்களின் கைகளில் பணத்தையும், பொருட்களையும் இலவசமாகவும் இலகு கடனிலும் அரசுகள் திணித்தன. அதனால் நாட்டில் கொள்வனவு அதிகரித்து, பொருளாதாரம் மீள வளர்ச்சியடையும் என அரசுகள் எதிர்பார்த்தன. ஆனால் உற்பத்தித் துறையில் பெரும்பகுதி மூடி இருந்ததால், மக்கள் வாங்க முன்வந்த பொருட்கள் சந்தையில் இல்லை. அதனால் விலைகள் அதிகரித்தன. உலகெங்கும் பணவீக்கம் தலைதூக்கியுள்ளது. பணவீக்கம் அமெரிக்காவில் 5%, ஐரோப்பிய ஒன்றியத்தில் 2%, பிரித்தானியாவில் 2.5%, இலங்கையில் 4.1%, இந்தியாவில் 5.2%, சீனாவில் 8.5% என 2021 மே ஏப்ரில்,மே மாதங்களில் இருக்கின்றன. ஜீ-7 நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் பணவீக்கம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படவில்லை. பல பொருளாதார நிபுணர்கள் தற்போது உலகின் பல நாடுகளிலும் நிலவும் பணவீக்கம் தற்காலிகமானது எனக் கருதுகின்றனர்.

மாநாட்டில் முன் வைக்கப்படும் பல தீர்மானங்கள் எல்லா நாடுகளின் ஒருமித்த ஆதரவைப் பெறுவதற்காக பல மாற்றங்களுக்கு உள்ளாகும். ஜீ-7 நாடுகளின் நிதியமைச்சர்களும், நடுவண் வங்கிகளின் ஆளுநர்களும் தங்கள் மாநாட்டை ஜூன்-4ஆம் 5ஆம் திகதிகளில் முடித்துள்ளனர். அவர்கள் தயாரித்துள்ள தீர்மானம் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

 1. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பணியை உலகெங்கும் முன்னெடுத்தல்
 2. உலகெங்கும் கோவிட்-19 தொற்று நோயை ஒழித்தால் மட்டுமே அதில் இருந்து எல்லா நாடுகளும் விடுபட முடியும்
 3. எல்லா நாடுகளுக்கும் வாங்கக் கூடிய வகையில் தடுப்பூசி விநியோகித்தல். அதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவித்தல்.
 4. தடுப்பூசிகளை வாங்கத் வறிய நாடுகளுக்கு நிதி வசதி கொடுக்கும்படி பன்னாட்டு நாணய நிதியத்தை வேண்டுதல்
 5. சூழல் பாதுகாப்பிற்கு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்குதல்
 6. பல்லுயிர்ப் (எல்லா உயிரினங்கள்) பெருக்கத்தை ஊக்குவித்தல்.
 7. பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும் போது சூழல் பாதுகாப்பை அவசியமாக்குதல்.

சீனாவை ஜேர்மனி பாதுகாத்ததா?

நிதியமைச்சர்களினதும், நடுவண் வங்கி ஆளுநர்களினதும் அறிக்கையில் சீனா பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கோவிட்-19 தொற்று நோய்க்கிருமிகள் சீனாவில் இருந்து பரப்பப்பட்டதா என்பதைப் பற்றி மீள் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஜேர்மனி உடன்படவில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் போட்டியில் ஜேர்மனி தம்முடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என்ற ஜேர்மனி, தம்மால் பக்கச்சார்பாக நடக்க முடியாது என்கின்றது. அது போலவே சீனாவில் வாழும் இஸ்லாமியர்களான உய்குர் இன மக்கள் மீது சீனா பெரும் அட்டூழியத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கருதுகின்றன. அமெரிக்கா உய்குர் மக்கள் இனக்கொலைக்கு உள்ளாவதாகப் பரப்புரை செய்கின்றது. அதையும் ஜேர்மனி ஏற்கவில்லை. மேலும் அவுஸ்திரேலியாவை பொருளாதார அடிப்படையில் சீனா மிரட்டுவதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கருதுகின்றன. அந்தக் கருத்தையும் ஜேர்மனி ஆதரிக்கவில்லை. மாநாட்டு முடிவில் வெளியிடப்படும் இறுதி அறிக்கையில் சீனாவிற்கு எதிரான கருத்து ஏதும் உள்ளடக்கப்பட்டிருக்காவிடில் அதன் பின்னணியில் ஜேர்மனி இருப்பதாக உறுதியாக நம்பலாம். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக எடுக்கவிருக்கும் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்படவிருக்கும் இடைவெளிகளை ஜேர்மனி நிரப்பி பொருளாதார நலன்களை பெற முயல்வதாக அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

ஜீ-7இன் எதிர்காலம்

2050ஆம் ஆண்டு ஜீ-7 நாடு என்ற பெயர் அதன் விரிவாக்கத்திற்கு ஏற்ப மாற்றப்படும். சீனா, இந்தியா, பிரேசில், இரசியா, மெக்சிக்கோ, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகள் உள்ளடக்கப்படும்.

 

 

https://www.ilakku.org/?p=52472

 

திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி

6 days 20 hours ago
திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி

என்.கே. அஷோக்பரன்

எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். 

விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். 

இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான  உண்மையான காரணத்தைப் பார்க்கும் போது, உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலையேற்றம் ஏற்பட்டுள்ளமையை, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

ஆனால், கடந்த வருடம் உலக சந்தையில் ‘கச்சா’ எண்ணை விலை, கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்தது. உலக சந்தையில் விலை கூடும் போது, உள்ளூரில் விலையை ஏற்றும் அரசாங்கம், உலக சந்தையில் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் போது, அதன் பலனை, இலங்கை மக்களுக்கு ஏன் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே!

ஆனால், இந்த விடயம் இதோடு நிற்கவில்லை. உதய கம்மன்பில, எரிபொருள் விலையேற்றத்தை அறிவித்ததன் பின்னர், இந்த விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையை ஏற்றாது சமாளிக்க முடியாதுபோன அமைச்சரின் இயலாமையைக் காரணம் காட்டி, அவரைப் பதவி விலகக் கோரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, பகிரங்க அறிக்கையை வௌியிட்டிருக்கிறது. 

ஆம்! ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவேதான் இவ்வாறு அறிக்கையை வௌியிட்டுள்ளது. கம்மன்பில பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரல்ல; அவர் பங்காளிக் கட்சியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர். உதய கம்மன்பிலவுக்கும் பொதுஜன பெரமுவுக்கும் இடையிலான முரண்பாடுகளை, சிலமாதங்களாகவே அவதானித்து வரும் நிலையில், தமது ஆட்சியின் பங்குதாரியான கம்மன்பிலவை பதவிவிலகுமாறு, பிரதான ஆளுங்கட்சியாக பொதுஜன பெரமுன பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. 

ஆனால், பொதுஜன பெரமுனவுக்கும் கம்மன்பிலவுக்கும் இடையிலான முரண்பாடு மட்டும்தான், இதற்குக் காரணம் என்று கருதிவிடக் கூடாது. கம்மன்பில இங்கு ஒரு பலிகடாவாகப் பயன்படுத்தப்படுகிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

‘கொவிட்-19’ பெருந்தொற்றின் மூன்றாவது அலை, இலங்கையைப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஒழுக்கமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற மக்களின்  எதிர்பார்ப்பு, பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரிருந்தே தோற்றுக் கொண்டிருக்கிறது. 

எந்த முடிவையும், உறுதியாக எடுக்க முடியாத அரசாங்கமாகவே இது இருக்கிறது. குறைந்த பட்சம், பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா, தளர்த்துவதா என்பதைக்கூட, சரியாக முடிவெடுக்க முடியாமல், முதல் நாள் ஒரு கதை, மறுநாள் வேறு கதை எனத் தானும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில், பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. முதல் முறை இந்தியா, நாணய பிரதியீட்டின் ஊடாகக் காப்பாற்றியது; அடுத்த முறை, சீனா கடன் கொடுத்துக் காப்பாற்றியது. அடுத்த முறை, கையேந்த இடமில்லாமல், பங்களாதேஷிடம் போய் கையேந்தி, நாணய பிரதியீட்டைப் பெற்றுக்கொண்டு, செலுத்த வேண்டிய கடன்களைத் திக்கித் திணறிச் செலுத்திக் கொண்டிருக்கிறது. 

இலங்கையின் கடன் தரமதிப்பீடு, மிகக் குறைந்துள்ள நிலையில், அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் மிகச் சுருங்கியுள்ளன. இந்த நிலைமையில், சீனாவிடம் தஞ்சமடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. சீனாவிடம் கடன்வாங்கி, சீனக் கடன் பொறிக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

இதுதான், அரசாங்கத்தின் பொருளாதாரம், வௌிநாட்டுக் கொள்கையென்றால், இதை ஒரு குழந்தையே செய்துவிட்டுப் போய்விடுமே! இதற்கு எதற்கு, ‘வீரர்கள்’ என்ற கூச்சலும், ‘நிபுணர்களின் ஆட்சி’ என்ற வெற்றுக் கோஷமும் வேண்டிக்கிடக்கிறது?

இந்த ஆட்சி, சறுக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வோர் இடத்தைப் பார்த்தாலும், அந்தச் சறுக்கலைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, அந்தச் சறுக்கலை மறைக்க எடுத்துக்கொண்ட பிரயத்தனம்தான், மிக அதிகமாகத் தெரிகிறது. உதாரணமாக, ‘லிட்ரோ’ எரிவாயு சிலிண்டரின், எரிவாயுவின் எடை அளவைக் குறைத்து, விலையை ஏற்றாமல்செய்த ஏமாற்று வேலை ஆகும். 

உள்ளூர் விவசாயத்தை ஆதரிக்கிறோம் என்று, இறக்குமதிகளைத் தடைசெய்துவிட்டு, தற்போது பொருட்களின் விலைகள் படுபயங்கரமாக ஏறியுள்ள நிலையில், இந்நாட்டின் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அரிசியின் விலை, மஞ்சளின் விலை, ஏலக்காயின் விலை என விலையேற்றம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழி, வௌிநாட்டு இறக்குமதிகளைத் தடைசெய்வதல்ல; இது ஓர் ஆதிகால முறை; அறியாமையின் வழி.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதானால், அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வினைதிறனான உற்பத்தி முறைகள், நவீன விவசாய முறைகள், நுட்பங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். உற்பத்தியாளனிடமிருந்து, நுகர்வோரை இலகுவில், குறைந்த செலவில் சென்றடையக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறுதான், உள்ளூர் உற்பத்திகளை நீடித்துநிலைக்கத்தக்க முறையில் ஊக்குவிக்கலாமேயன்றி, இறக்குமதிகளைத் தடுப்பதால் அல்ல. 10ஆம் ஆண்டு மாணவனுக்கு உள்ள பொருளாதாரம் பற்றிய புரிதல் அளவை மட்டும் கொண்டு, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க திட்டமிட்டால், இதுபோன்ற நிலைமைகள் உருவாகலாம்.

அரசாங்கம், இப்படி மாறி மாறி சறுக்கிக்கொண்டிருக்கும் போது, பிரதான எதிர்க்கட்சி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, சக்தி இழந்து நிற்கிறது. 

ஜனநாயக நாடொன்றில், ஓர் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய அடிப்படைப் பணிகளைக் கூட, முறையாகச் செய்யத் திராணியற்ற வாய்ச்சொல் அமைப்பாகவே, இது இருக்கிறது. இன்று அரசாங்கத்தின் அபத்தமான நடவடிக்கைகளை விமர்சிப்பதற்குப் பதிலாக, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வரப்போவதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ரணில் விக்கிரமசிங்க வருவதைக் கண்டு, இவர்கள் அச்சப்படக் காரணம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையோடு அதிருப்தி கொண்டவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து விடுவார்களோ என்ற அச்சம்தான், 
இவ்வளவு காலமும் ரணிலைப் பலமற்ற தலைவர் என்று விமர்சித்தவர்கள்தான், இன்று தாம் எவ்வளவு பலமற்றவர்கள் என்பதை, மக்களுக்கு வௌிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 

ஒரு கட்சிக்குத் தேவையான அடிப்படைகள் எதுவும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை. ஏனெனில், தாம் ஒரு கட்சியா, கூட்டணியா என்பதிலேயே அவர்களிடம் தௌிவின்மை காணப்படுகிறது. 

ரணிலின் பாராளுமன்ற வருகையோடு, ஐக்கிய மக்கள் சக்தியினரின் பாதுகாப்பின்மை உணர்வு, இன்னும் அதிகரிக்கும். எதிர்க்கட்சிக்குள் அடிக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் புயல், அவர்களது உட்கட்சி முரண்பாடுகளை அதிகரிக்கும். அவர்கள் ஆளுங்கட்சியோடு முரண்படுவதை விடுத்து, தமக்குள் அதிகம் அடிபடத் தொடங்குவார்கள். இது நிச்சயம், ஆளுந்தரப்புக்குச் சாதகமானதாகவே அமையும்.

ஒரு வகையில், தமது எல்லா நடவடிக்கைகளிலும் தோற்றுக்கொண்டிருக்கும் ஓர் ஆளுங்கட்சியைக் காப்பாற்றும் கைங்கரியத்தைத்தான், இங்கு பிரதான எதிர்க்கட்சி செய்து கொண்டிருக்கிறது. 

இந்த இடத்தில்தான், இலங்கை அரசியலில் மிகப்பெரியதொரு வெற்றிடம் உணரப்படுவதை, உண்மையில் அவதானிக்கலாம். இந்தத் திறமையும், திராணியுமற்ற அரசியல் தலைமுறையிடமிருந்து, இந்த நாடு பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாது போய்விடும். 

அரசியல் என்பது ஒரு பொறுப்பு மிக்க பணி. ஆழ்ந்த அறிவும் ஆற்றலும் வினைதிறனும் நல்லெண்ணமும் இங்கு அத்தியாவசியம். ஒரு நிறுவனத்தில் பணியாற்றக்கூடத் தகுதியில்லாதவர்கள், ஒரு நாட்டை நிர்வகிக்கிறார்கள் என்றால், அந்த நாடு உருப்படுமா என்பதை யோசிக்க வேண்டும். 

நீங்கள் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் எனில், அந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்த அரசியல்வாதிகளில் எவரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று உங்களுக்குள் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்; அப்போது புரியும் இந்நாட்டின் அவல நிலை.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திணறும்-ஆளுங்கட்சி-திக்குத்-தெரியாத-எதிர்க்கட்சி/91-274183

 

 

Checked
Wed, 06/23/2021 - 01:49
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed