தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு
தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு

— கருணாகரன் —
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத் தரப்புகள் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இந்தச்சந்திப்பு நடந்ததாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்எம். ஏ. சுமந்திரனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இந்தத் தரப்புகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கான புரிந்துணர்வில் இணக்கம் கண்டிருந்தன. இந்த இணக்கம், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி நடத்திவரும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்கான மக்கள் அரங்குகளில் தமிழரசுக் கட்சியும் நட்பின் அடிப்படையில் கலந்து கொள்வதற்கான கதவுகளைத் திறந்தது.
ஆக இதை படிப்படியாக உருவாகி வந்த ஒரு வளர்ச்சி நிலை என்றே சொல்லலாம். ஆனால் அடுத்த கட்டத்துக்கு இது வளர்ச்சியடைவதில் அல்லது நகர்வதில் பல இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உண்டு. அவை கட்சி நலன் – மக்கள் நலன் – பிரமுகர் அல்லது அரசியல் தலைவர்களின் நலன் என்ற முக்கோண வலைப் பின்னல்களுக்குள் சிக்குண்டுள்ளது. இதைக் குறித்துப் பின்னர் பார்க்கலாம்.
அதற்கு முன், இந்தச் சந்திப்பு மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உயிர்ப்பிக்குமா? என்று சிலரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தரப்பின் பலத்தையும் அதற்கான ஐக்கியத்தையும் விரும்புவோர் இத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இது உள்ளுர மகிழ்ச்சியை அளிக்கிறது.
அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலத்தை நியாயமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும். ஏறக்குறைய அது ஒரு போஸ்மோட்டம்தான். இதைச் செய்வதற்கு திறந்த மனதுடன் ஒவ்வொரு தரப்பும் தம்மை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். அதற்குத் துணிய வேண்டும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் ஒரு தரப்பின் மீது மறுதரப்பு பழி சுமத்துவதையும் நிறுத்த வேண்டும். மக்கள் நலனை முன்னிறுத்தினால் இது எளிது. இல்லையென்றால் கடிதினம் கடிது.
ஆனால், அப்படியான ஒரு அவசியம் இன்று தமிழ் அரசியற் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அது நாடு முழுவதிலும் பெற்ற வெற்றியும் தமிழ்ப் பரப்பில் அதற்கு உருவாகியுள்ள செல்வாக்கு மண்டலமும் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தி நிலை கொண்டுள்ள விதமும் தமிழ் அரசியற் தரப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடி தனியே தமிழ்த்தேசியத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இதுவரையிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்றவற்றுக்கும் உள்ளது. ஏன் மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளுக்கும் உண்டு.
தேசிய மக்கள் சக்தி இன அடையாளக் கட்சிகளைச் சவாலுக்குட்படுத்தியுள்ளது. அதன் மீதும் இனரீதியான பார்வை இருந்தாலும் நடைமுறையில் இன அடையாள அரசியலை அது சவாலுக்குட்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையின் வெம்மை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளை எச்சரிக்கை அடைய வைத்துள்ளது. இப்பொழுது தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் இரண்டு வகையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
1. தேசிய மக்கள் சக்தியை, அதனுடைய அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இருப்பதால் அது இரண்டு மடங்கு பலமானதாக உள்ளது. மட்டுமல்ல, அதை எளிதிற் குற்றம் சாட்டுவதற்கு முடியாத ஒரு நிலையும் உண்டு. அதாவது, கடந்த கால ஆட்சியாளர்களைப்போல ஆட்சித் தவறுகள், அதிகாரத் தவறுகள், போர்க்குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதை எதிர்க்க முடியாது. மட்டுமல்ல, அதை நேரடி இனவாதச் சக்தியாக இப்பொழுது அடையாளப்படுத்தவும் முடியாது.
கடந்த கால ஜே.வி.பிக்கு அப்படியான ஒரு அடையாளத்தைச் சொல்ல முயற்சிக்கலாம். ஆனால், அதையும் தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். எப்படியென்றால், 2010 க்கு முந்திய ஜே.வி.பி வேறு. இன்றைய ஜே.வி.பி வேறு என்பதை அது நிறுவி வருகிறது. முந்திய ஜே.வி.பியானது இந்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்புக்கான எதிர்ப்பு, மாகாணசபை மீதான தயக்கம் போன்ற விடயங்களுடன் சம்மந்தப்பட்டது.
இன்றைய தேசிய மக்கள் சக்தி, இவற்றைச் சாதகமான முறையில் கையாளும் ஒரு நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அல்லது அதற்கு அமையத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. என்பதால், அதனை இன அடையாளத்துடன் அல்லது இனவாத அடையாளத்துடன் சம்மந்தப்படுத்த முடியாத அளவுக்கு அது தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சிக்கிறது. இதில் அது கணிசமான அளவுக்கு முன்னேறியும் உள்ளது. என்பதால்தான் அது வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் ஏனைய தேசிய அரசியற் கட்சிகள் பெற முடியாத இடத்தை அதனால் பெற முடிந்தது. குறிப்பாக இளைய தலைமுறை தேசிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியை வழமையான தேசிய அரசியற் சக்திகளோடு (சு.க, ஐ.தே.க, பொதுஜன பெரமுன) ஒப்பிட்டு அரசியல் செய்யவும் முடியாது. அவற்றை எதிர்கொண்டதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ளவும் முடியாது.
எனவே அதற்கு ஒரு புதிய சிந்தனை முறையும் (New Thinking method) அணுகுமுறையும் (Approach) வேலைத்திட்டமும் (Work plan) வேண்டும். இவற்றை வகுத்துக் கொள்ளாமல் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்வது கடினம். ஆகவே கடந்த காலத்தில் இவை மேற்கொண்ட அரசியல் முறைமையையும் இவை பின்பற்றிய அரசியற் கருத்துநிலை அல்லது கொள்கையையும் இனியும் அப்படியே தொடர முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஜே.வி.பியானது எப்படித் தன்னைப் புதிய சூழலுக்கு ஏற்றமாதிரி வடிவமைப்புச் செய்து கொண்டதோ, அவ்வாறு இவையும் தம்மை வடிவமைக்க வேண்டியுள்ளது.
2. இந்தத் தரப்புகள் இதுவரையில் எட்டிய – சாதித்த – அரசியல் வெற்றிகள் (அடைவுகள்) என்ன என்ற கேள்வி மக்களிடம் உருவாகியுள்ளது. இன அடிப்படையில் தமது அடையாளத்துக்காகவும் கடந்த கால ஆட்சித்தரப்புகளின் இன ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் இந்தத் தரப்புகளை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தனர். அதை இந்தத் தரப்புகள் தமக்கான வாய்ப்பாகவும் கையாண்டு வந்தன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் அரசியற் சூழல் வேறு. என்பதால் இவை புதிய அரசியல் அடையாளங்களை உருவாக்கி, அதை மக்களிடம் காட்ட வேண்டியுள்ளது. அப்படிக் காட்டவில்லை என்றால், மக்கள் இவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். மக்களுடைய உணர்வுத்தளமும் வாழ்க்கைச் சவால்களும் பிரச்சினைகளும் தேவைகளும் வேறாக விட்டது. அதைப் புரிந்து கொண்டு அரசியல் முன்னெடுப்புகளைச் செய் வேண்டிய தேவை – அவசியம் இந்தத் தரப்புகளுக்கு வரலாற்று நிர்ப்பந்தமாகியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் நாம், தமிழரசுக் கட்சி – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பையும் அதனுடைய அடுத்த கட்ட நகர்வையும் இதைக்குறித்து இவற்றின் ஆதரவாளர்கள் கொள்ளும் கனவையும் (விருப்பத்தையும்) பார்க்க வேண்டும்.
இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன.
இப்பொழுது தமிழ்த்தேசியத் தரப்புகள் மும்முனையில் – மூன்று தரப்புகளாக உள்ளன.
1. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை. இதில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி மற்றும் சரவணபவன், தவராஜா, அருந்தவபாலன் உள்ளிட்ட ஒரு தரப்பு.
2. புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ், ரெலோ, சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியவை இணைந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி.
3. இலங்கைத் தமிழரசுக் கட்சி.
தனிக்கட்சியாக இருந்தாலும் தற்போது தமிழ்ப்பரப்பில் வலுவான சக்தியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியே. ஏனைய கட்சிகளுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தலா ஒன்று என்ற அளவிலேயே உண்டு. ஆனால், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு வடக்குக் கிழக்கு முழுவதிலும் உள்ளுராட்சி சபைகளில் செல்வாக்குண்டு.
இந்த மூன்று சக்திகளும் இடைவெளிகளுடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலைப் பிரகடனம் செய்துள்ளன. அரசியல் தீர்வு, மக்களுடனான அணுமுறை, தமது அரசியலை முன்னெடுக்கும் விதம், அரசியற் கொள்கை போன்றவற்றில் துலக்கமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
இவை ஒன்றும் புதியவையும் இல்லை. கடந்த காலத்தில் தூக்கிச் சுமந்த அதே பழைய சரக்குத்தான். ஆனால், இவற்றை இன்னும் சுமந்து கொண்டேயுள்ளன. பாரம்பரிய அரசியச் சக்திகளையும் பாரம்பரிய அரசியற் சித்தாந்தங்களையும் மீள்பரிசீலனை செய்யுமாறு வரலாறும் சூழலும் வற்புறுத்துகின்றன; நிபந்தனை செய்கின்றன. இருந்த போதும் அதைப்பற்றிய எந்தவிதமான உணர்வுமின்றி, அதே சுமைகளோடு பிடிவாதம் செய்து கொண்டிருப்பதோடு, ஒன்றோடு ஒன்று முரண்பட்டுக்கொண்டும் உள்ளன. சிலவேளைகளில் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதும் உண்டு. இது மக்களுக்குச் சலிப்பையும் ஏமாற்றத்தையுமே அளிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழ்பேசும் சமூகங்களிடம் ஒரு கூட்டுக் கோரிக்கை இருந்தது, தமது அரசியற் சக்தி திரண்டிருக்க வேண்டும். அப்போதுதான் பலமானதாக இருக்கும் என்பதாக. அன்றைய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கு அப்படியான ஒரு திரண்ட சக்தியின் பலம் தேவையானதாகவும் இருந்தது.
இன்றைய நிலையில் அந்தத் திரட்சி – ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு என்பதெல்லாம் போதுமானதல்ல. அதையும் கடந்து புதிய அரசியல், புதிய முன்னெடுப்பு, புதிய அணுகுமுறை, புதிய வேலைத்திட்டம் போன்றவையே தேவை.
ஆக, மக்களுடைய நலனுக்கான முறையில் யதார்த்த அரசியலை – உலகுடன் பொருத்தக் கூடிய முறையிலான நடைமுறை அரசியலைச் சிந்திக்க வேண்டும். அதுவே மெய்யான பலத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – விடுதலையை விரும்பும் சமூகத்துக்கு அளிக்கும். அதுவரையில் இவை வெறும் தேநீர்ச் செலவீனத்தையும் பத்திகை – இணையச் செய்திகளுக்கான இடத்தையுமே எடுக்கும். அதற்கு மேல் எதுவுமே இல்லை.
இது சற்றுக் கடுமையான விமர்சனம்தான். ஆனால், தவிர்க்க முடியாதது. தேவையானது.












அருள்கார்க்கி






















