அரசியல் அலசல்

மாற்றுத்தலைமைக்கு செல்வாக்கு அதிகரிக்கிறதா?

6 hours 58 minutes ago
மாற்றுத்தலைமைக்கு செல்வாக்கு அதிகரிக்கிறதா?

கரிகாலன்

 

spacer.png
விக்கினேஸ்வரன் தலைமையிலான மீன் சின்னத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. ஆரம்பத்தில் மாற்றுத் தலைமை தொடர்பில் தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, தற்போது சம்பந்தன்- சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு சவால்விடக் கூடிய, தலைமை என்னும் அபிப்பிராயம் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்திருப்பதாகவே தெரிகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு ஐந்து  ஆசனங்களை வெற்றிகொண்டிருந்தது. ஆனால் இம்முறை  அதனை தக்க வைக்க முடியுமா என்னும் சந்தேகம் தமிழசு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

இதனை அவர்கள் பகிரங்கமாக கூறாவிட்டாலும் கூட, உண்மையான நிலைமை இதுதான்.  அதேவேளை வடக்கின் தேர்தல் களம் தொடர்பில் வெளியாகும் சுயாதீன கணிப்புக்களின் படியும், விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணியினர் ஆகக் குறைந்தது மூன்று ஆசனங்களையாவது வெற்றிபெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே வேளை வன்னித் தொகுதியிலும் இரண்டு ஆசனங்களைப் பெறக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது வடக்கில், ஒன்றில் வீடு அல்லது மீன் சின்னம் என்னும் நிலைமையே காணப்படுகின்றது. தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விக்கினேஸ்வரனை வெளியில் விட்டதால்தான் நாங்கள் தேவையில்லாத சவால் ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே கருதுகின்றனர். இதன் காரணமாகவே சுமந்திரன் தொடர்பில் அவர்கள் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர், யாழ்ப்பாண இந்துக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் தோற்றம், ஜனவசியம் இப்படியான தகுதிகளால் விக்கினேஸ்வரன் தனித்துத் தெரிகின்றார். இதுவே கூட்டமைப்பிற்கு கலக்கத்தை கொடுத்திருக்கின்றது.

கூட்டமைப்பின் மீதான அதிருப்பி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த  ஆட்சியில் அரசின் பங்காளியாக செயற்பட்ட கூட்டமைப்பால், எதனையுமே ஆக்கபூர்வமாக செய்யமுடியவில்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கடுமையாக அடிவாங்கிய பின்னர்தான் ஹம்பரலிய திட்டம் தொடர்பில் கூட்டமைப்பு சிந்தித்தது. ரணில் விக்கிரமசிங்க தீர்வு தருவார் என்று நம்பி ஐந்து  வருடங்களை கூட்டமைப்பு வீணாக்கியது. இந்தக் காலத்தில் கூட்டமைப்பை பயன்படுத்தி அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளை நீர்த்துப் போகச் செய்தது.

உண்மையில் கூட்டமைப்பின் அரச ஆதரவினால், இலங்கையின் மீதான சர்வதேசப் பார்வை முற்றிலும் மாறியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்கினேஸ்வரன் தன்னிடம் இருந்த வடக்கு முதலமைச்சர் என்னும் அதிகாரத்தை பயன்படுத்தி, இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றினார். இங்கு எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றது என்பதை சர்வதேசத்தின் முன்னால் ஆணித்தரமாக முன்வைத்தார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜதந்திரி சமந்தாபவருடன் தர்க்கம் செய்தார். இவ்வாறான காரணங்களினால்தான் சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விக்கினேஸ்வரன் மீது கோபம் கொண்டது. அவரை இரவோடு இரவாக வடக்கு மாகாண சபையிலிருந்து அகற்றத் திட்டம் தீட்டியது. இதற்கு பின்னால் ரணிலின் சூழ்சியும் இருந்திருக்கலாம். ஏனெனில் இந்தக் காலத்தில் தமிழரசு கட்சி கிட்டத்தட்ட ரணிலின் கைப்பிள்ளையாகவே இருந்தது. ஆனாலும் விக்கினேஸ்வரன் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலிருந்து விலகியோடவில்லை. தன்னுடைய கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே தமிழ் மக்கள் கூட்டணி என்னும் கட்சியை உருவாக்கினார். இருக்கின்ற கட்சியால் தான் நினைக்கும் விடயங்களை முன்னெடுக்க முடியாமல் போகின்ற போது அவருக்கு முன்னால் இருந்த ஒரேயொரு தெரிவுதான், புதியதொரு கட்சி. எனினும் குறுகிய காலத்தில் அவருடைய கட்சியை பதிவு செய்ய முடியவில்லை.

சிறிலங்கா அரசும் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் நாடாளுமன்றம் வருவதை விரும்பவில்லை. அவர் வந்தால் தங்களுக்கு நெருக்கடியாக இருக்குமென்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விக்கினேஸ்வரனை மற்றவர்களைப் போன்று கையாள முடியாது. அவர் கையாளுவதற்கு கடுமையானவர். இவ்வாறான ஒருவர்தானே இப்போது தமிழ் மக்களுக்கு தேவை!

புதுவை அண்ணர் தன்னுடைய கவிதை வரியில் சொல்லுவது போன்று காலத்தை தவறவிட்டால் பின்னர் கண்டவனெல்லாம் கதவைத் தட்டுவான். விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த க.வே.பாலகுமாரன் அண்ணன் அடிக்கடி ஒரு வாசகத்தை தன்னுடைய கட்டுரைகளுக்கு பயன்படுத்துவார். அது ஒரு அமெரிக்க சிந்தனையாளரின் கூற்று. “வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர்”. எனவே ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்திற்கு தேவையானவர்களை நீங்கள் நாடாளுமன்றம் அனுப்பாவிட்டால், பின்னர் ஒவ்வொரு தேர்தல்களிலும் பிழையானவர்களையும் தகுதியில்லாதவர்களையும்தான் தெரிவு செய்வீர்கள். நீங்கள் செய்யும் தவறுகளே உங்களை நிழல்போல் பின்தொடரும். காலங்கள் தோறும் உங்கள் விரல்களே உங்கள் கண்ணை குத்தும். சிந்தித்து வாக்களிக்கும் ஒரு மக்கள் கூட்டமே இப்போது தமிழர் தேசத்திற்கு தேவையாகும்.
 

 

http://www.samakalam.com/செய்திகள்/மாற்றுத்தலைமைக்கு-செல்வ/

சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும்

17 hours 24 minutes ago
சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும்  

கே. சஞ்சயன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 01:04

 

விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.  
முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை அவர், விடுதலைப் புலிகளுடன் பயணித்தவர்.  

போர் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயங்களில் அகமுரண்பாடுகள் ஏற்பட்டபோது, ஊடக அமையத்தில், தமது கருத்துகளை முன்வைத்து, அந்த நிகழ்வுகளில் காணப்பட்ட சில தடைக் கற்களை அகற்றியவர்.  
இதுவரை அரசியல் கருத்துகளை, ஊடக சந்திப்புகளில் வெளிப்படுத்தாத அவர், இம்முறை நேரடியாகவே அரசியல் ‘பந்தை’ எடுத்து ஆடியிருக்கிறார்.  

ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையிலும், முன்னாள், மூத்த போராளி என்ற வகையிலும் அவர் வெளியிட்டிருக்கின்ற கருத்து, ஒரு தனிநபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே அமைந்திருக்கிறது. அவரால் இலக்கு வைக்கப்பட்டவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆவார்.  

தமிழ் அரசியல் பரப்பில், சர்ச்சைகளின் நாயகன் சுமந்திரன் தான். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருப்பது வழக்கம். அவற்றை அவ்வப்போது, அவரும் உருவாக்கிக் கொள்கிறார்; அவரைச் சுற்றியிருப்பவர்களும் உருவாக்கிக் கொள்கின்றனர்.   

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், யாழ்ப்பாணத்தில் சுமந்திரனைத் தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டே, பெரும்பாலான கட்சிகள் பணியாற்றின.  

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அதி தீவிர பிரசாரங்களே, அவரை இன்னும் கூடுதலாகப் பிரபலப்படுத்தியிருந்தது. அதுவே அவரது வெற்றிக்கும் காரணமாகியது.  

தற்போதும் கூட, பொதுத்தேர்தலில், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் சுமந்திரன் மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தொடுக்கப்படும் விமர்சனங்கள், தாக்குதல்களுக்கு அப்பால், சுமந்திரனைத் தோற்கடிப்பது ஒரு, தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரல் போல, முன்னெடுக்கப்படுகிறது.  

சுமந்திரனைத் தோற்கடித்து விட்டால், தமிழ்த் தேசியம் காப்பாற்றப்பட்டு விடும்; தமிழ் ஈழம் கிடைத்து விடும்; சர்வதேச விசாரணை வந்து விடும்; இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டி விடும்; சமஷ்டி கிடைத்து விடும் என்பன போன்ற மாயைகள் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் ஒன்றில், பிரசாரங்களின் மூலம் இதுபோன்ற மாயைகள் கட்டியெழுப்பப்படுவது வழக்கம் தான். வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களைக் கவிழ்ப்பது போலத் தான், இதுபோன்ற மாயைகளின் மூலம் அவர்களைக் கவர்வதும் ஒரு பிரசார உத்தியே.  

எவ்வாறாயினும், சுமந்திரன் இப்போது எல்லாத் தரப்பினாலும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக அவரை இலக்கு வைத்திருப்பவர் தான், முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா.  
சுமந்திரன் மீது இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் செல்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல.  அந்தக் குற்றச்சாட்டுகளில் சில, அவரால் மட்டுமன்றி, ஏனைய பலராலும் முன்வைக்கப்பட்டு வருபவை என்பதை மறந்து விடக்கூடாது.  

அவற்றை உதாசீனப்படுத்தி விடவும் முடியாது.  தேர்தல் வேளையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு, சுமந்திரனுக்கு உள்ளது. அதனை அவர், முறையாகச் செய்வாரா, செய்கிறாரா என்பது வேறு விடயம்.  

அதேவேளை, சுமந்திரன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அல்லது, கோருகின்ற உரிமை, பசீர் காக்கா என்ற முன்னாள் போராளிக்கு மாத்திரமன்றி, அனைவருக்கும் இருக்கிறது.  

அது ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. இதில் யாரும் தலையீடு செய்ய முடியாது. அதை விமர்சனமும் செய்ய முடியாது.  

அதேவேளை, யாழ். ஊடக அமையத்தில் முன்னாள் மூத்த போராளியான பசீர் காக்கா, ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையில், முன்வைத்திருக்கின்ற கருத்தில் உள்ள ஆபத்தை, இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதும் அவசியமே.  

தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றுவதற்கு, சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று, அவர் கூறியிருக்கிறார்.  

அதற்காக, மாவீரரின் பெற்றோர், தலைவர் பிரபாகரனை நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுமந்திரனுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.  

ஒரு இலட்சம் வாக்குகளைப் பெறுவேன் என்ற சுமந்திரனின் கனவைத் தோற்கடிப்பது, முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோரின் கடமை என்றும், அதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  

சுமந்திரனைத் தோற்கடிப்பது துயிலுமில்லத்தில் சுடரேற்றுவதற்கு ஒப்பானது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

சுமந்திரனைத் தோற்கடிப்பதற்காக, ஆயுதப் போராட்டமும், போராளிகளும், மாவீரர்களும், அவர்களின் தியாகங்களும், புலிகளின் தலைவர் பிரபாகரனும், பணயம் வைக்கப்பட்டிருப்பது தான் பலருக்கும் உறுத்தலாக இருக்கின்ற விடயம்.  

விடுதலைப் புலிகள், தமக்கு எதிரான எவரையும், வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததில்லை.  

இயக்கத்தில் இருந்து பிரிந்து போன கருணாவைப் புலிகள் ‘துரோகி’ என்று கூறியிருந்தாலும், பிரபாகரன் அவ்வாறு ஒருபோதும் வெளிப்படையாகக் கூறியதில்லை.  அது ஒரு வகை நாகரிகம்; பண்பாடு.  கருணா பற்றிய விமர்சனங்களைப் பொதுவெளியில் முன்வைப்பதற்கு, ஒருபோதும் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை.  

அதுபோலவே, பெரும் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனி வழிக்குக் கொண்டு சென்ற அதன் தலைவர் ஆனந்தசங்கரி, புலிகளை எதிர்த்துக் கொண்டு, 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது கூட, அவரை வெளிப்படையாகத் தோற்கடிக்க வேண்டும் என்று புலிகள் கோரவில்லை.  

டக்ளஸ் தேவானந்தாவை, அரசியல் களத்தில் இருந்து அகற்றுவதற்குப் புலிகள் பல்வேறு இரகசியத் திட்டங்களை செயற்படுத்தினாலும் அவர் மீது பகிரங்க விமர்சனங்களைக் கூறி, நேரத்தை வீணடித்ததில்லை.  

தனிநபர்களுக்கு எதிரான பிரசாரங்கள், அவர்களைப் பலப்படுத்தி விடக்கூடாது, பிரபலப்படுத்தி விடக் கூடாது என்பது, அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  தமக்குச் சமதையானவர்களாக, அவர்களைக் கருதச் செய்து விடும் என்பதாலும் கூட, அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம்.  

அதுபோலத் தான், சுமந்திரனைத் தோற்கடிப்பதற்கான வேலையைச் செய்வதற்கு, பிரபாகரனையோ, மாவீரர்களையோ பணயம் வைப்பது மிகையானது.  

‘அவர்கள்’ யாரும் தனிமனிதர்களும் எவருக்கும் ஒப்பானவர்களும் அல்ல; அவர்களின் இலட்சியங்கள், தனிமனிதர்களை இலக்கு வைத்ததும் அல்ல. அவர்களின் உயர்ந்த இலட்சியத்தை, தனிமனிதர் ஒருவரை தோற்கடிப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்வதும், அந்தத் தோல்வியின் மூலம், அவர்களின் இலட்சியம் அடையப்பட்டு விட்டதாகத் திருப்தி காண முனைவதும், அபத்தமானது.  

தனியரசுக்கான இலட்சியத்தைக் கொண்டவர்களின் தியாகத்தை, தனிநபர்களின் தோல்விக்குள் சுருக்கிக் கொள்ள முடியாது.  

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், தேர்தலில் சுமந்திரன் வெற்றிபெற்று விட்டால், அதன் பின்னால் வரக்கூடிய ஆபத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.  

அவ்வாறான ஒரு நிலை வந்தால், அவமானப்பட்டு நிற்கப் போவது, இங்கு பணயம் வைக்கப்பட்டுள்ள, தலைவர் பிரபாகரனும் விடுதலைப் போராட்டமும் மாவீரர்களும் தான்.  

அவர்களின் மீது பற்றுள்ளவர்களே தோற்கடியுங்கள் என்று அழைப்பு விடுத்தும், பயனற்றுப் போய் விட்டால், அது யாருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.   

அரசியல் என்பது சாக்கடை. அதில் சேறு குளித்தவர்களால், குருதியில் குளித்துப் போராடியவர்களின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது.                                    

அதைவிட, சுமந்திரன் வெற்றி பெற்று விட்டால், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதை, அழுத்தமாகக் கூறுபவர், இன்னும் பலமடைந்து விடுவார். அது கூட, கவனத்தில் கொள்ளப்படவில்லை.   

சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டுமா- இல்லையா என்பதை விட, தமிழ்த் தேசியமும் தமிழரின் போராட்டமும் அதனை முன்னெடுத்தவர்களின் தியாகமும் போற்றப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும்.  

அந்த கௌரவத்தைக் கெடுத்து விட்டு, தேர்தலில் ஒரு தனிமனித வெற்றியையோ, தோல்வியையோ கொண்டாட முனைவது மிகமிக அபத்தம்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனைத்-தோற்கடிக்கும்-அழைப்பும்-அபத்தமும்/91-253158

தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் தேர்தல்

17 hours 25 minutes ago
தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் தேர்தல்  

 

 

-க. அகரன்  

கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என, இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கும் சூழலில், தேர்தல் எவ்வாறாயினும் நடந்துவிடக்கூடிய நிலையே, இப்பத்தி எழுதிக்கொண்டிருக்கும் பொழுதுவரையில் காணப்படுகின்றது.  

தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், இராஜாங்கனையில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.  
இதற்குமப்பால், மருத்துவர் சங்கத்தின் அறிவுரைகளையும் மீறிப் பாடசாலைகளைத் திறந்து, மாணவர்கள் மத்தியில் தொற்றை ஏற்படுத்தி, மீண்டும் பாடசாலைகளை மூடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.  

இந்நிலையில், எதிர்வரும் நாள்களில் இலங்கையில் காணப்படப்போகும் கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தையும் அதன் தாக்கத்தையும் பொறுத்தே, தேர்தலும் தீர்மானிக்கப்படப் போகின்றது என்பதே உண்மை.  

எனினும், இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தமக்கான அலையொன்று இருக்கும் போது, இந்தத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற அவாவில் உள்ளனர். இதற்காக அவர்கள், எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸோடு போட்டி போடுவார்களா, இல்லையேல் தேர்தல் பிற்போடப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில், தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.  

தமிழர் பிரதேசங்கள் எங்கும் தேர்தல் பிரசாரங்கள் வழமைக்கு மாறாக, ஒருவரை ஒருவர் நேரடியாக கூட்டிக்காட்டி பிரசாரம் செய்வதும், தமது கட்சிக்குள்ளேயே சக வேட்பாளரைத் தாக்கிப்பேசுவதும் என, அநாகரிக பிரசார யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.  

விருப்பு வாக்குமுறைத் தேர்தல் என்பதால், மக்கள் பிரதிநிதியாகுவது யார் எனப் போட்டி காணப்பட்டாலும், தற்போதைய பிரசார யுக்தி, அதி பயங்கரமானது என்பதை மறுப்பதற்கில்லை.  இந்நிலையில், யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள், சகவேட்பாளர்கள் சிலரே, தமது கட்சியின் ஒரு சில வேட்பாளர்களை, மக்கள் மத்தியில் இருந்து துடைத்தெறிந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.  

இதன் ஒரு வெளிப்பாடாகவே, தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணியின் செயலாளரான விமலேஸ்வரியின் கருத்துகள் அண்மைய நாள்களாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, தமிழரசுக் கட்சிக்கு, கனடா ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட சுமார் 21 கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்ற கேள்வியாகும்.  

வடக்கு, கிழக்கில் தேர்தல் களத்தில் உள்ள சுயேச்சைகள் முதற்கொண்டு, அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாகப் பிரசாரம் செய்து வருகின்றனரோ, அதற்கும் மேலாக அக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளரின் கருத்து, பாரதுரமானதாக அமைந்துள்ளது.  

image_41953c3e36.jpg

விமலேஸ்வரி யார் என்ற கேள்வி எழலாம். இளைஞர் சேவைகள் மன்றத்தின், வவுனியா பிராந்திய உதவிப் பணிப்பாளராக இருந்து, பின்னர் மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஆளுமை மிக்க பெண். அரசியலானாலும் சரி, சமூக விடயங்களானாலும் சரி துணிந்து கருத்துகளை முன்வைக்கும் பெண் என்ற கருத்துள்ளது.  எனினும், இவர் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கீதாஞ்சலியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதற்கப்பால், தேர்தல் பிரசாரங்களிலும் பங்குகொண்ட சம்பவங்களும் உள்ளன.   

அதற்குமப்பால், நாமல் ராஜபக்‌ஷவால் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட நீலப் படையணியின் செயற்பாடுகளிலும் பணியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் கூட, நெருங்கிச் செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான நிலையில், விமலேஸ்வரியின் கருத்துகள் எந்தப் பின்புலத்தில் இருந்து, தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன என்ற சந்தேகம் எழுவது யதார்த்தமே.  

தனி ஒரு வேட்பாளராக சுமந்திரனைத் தாக்குவதாக நினைத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, இன்று தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஏனெனில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எனப் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் நிதிகளுக்கு, என்ன நடக்கின்றது என்ற கேள்வி, அவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கு எழாவிட்டாலும் அல்லது, தமிழரசுக் கட்சியிடம் கேட்க வேண்டும் எனத் தோன்றாது விட்டாலும் கூட, தமிழ் மக்கள் மத்தியில் இந்த நிதி தொடர்பான சந்தேகம் காணப்பட்டிருந்தது.   

ஏனெனில், புலம்பெயர் தேசத்தில் இருந்து, கூட்டமைப்புக்கான நிதி அனுசரணை, அதிகளவில் உள்ளதாகக் கருத்து நிலவிவரும் நிலையிலேயே, விமலேஸ்வரியின் கருத்து, புரளியைக் கிளப்பிவிட்டுள்ளது.   

இதுபோன்று, வன்னித் தேர்தல் தொகுதியிலும் தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் வகையிலான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பல சுயேச்சைகளும் அரசியல் கட்சிகளும் களத்தில் உள்ளன.   

ஆறு ஆசனங்களைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில், 405 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே, வாக்குச் சிதறல் என்பது, அதிகமாகவே இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளப்போகின்றனர் என்ற ஐயப்பாடு காணப்படுகின்றது.  


வன்னி நிலப்பரப்போடு எவ்வித தொடர்புமற்ற பல சிங்கள வேட்பாளர்கள், பொதுஜன பெரமுனவுடன் களமிறங்கி உள்ளனர். அதற்குமப்பால் பாரிய நிதி வளத்துடன் சுயேட்சையாகவும் தென்பகுதியில் இருந்து சிங்கள வர்த்தகரொருவர் களமிறங்கி உள்ளார். இவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகளும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளதுடன், தமிழ் மக்கள் சிலரும் இவ்வாறான வேட்பாளர்களுக்காக வாக்குப் பெறும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களப் பிரதிநிதித்துவம் இன்றிக் காணப்பட்ட வன்னித் தேர்தல் தொகுதியில், இம்முறை ஒருவரையாவது கொண்டு வந்துவிட வேண்டும் எனச் சிங்கள மக்கள் மட்டுமன்றி அரசாங்கமும் எண்ணியுள்ளது.  

இது வன்னித் தேர்தல் மாவட்டத்தை  உள்ளடக்கிய வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும் எனக் கரிசனை கொண்டுள்ளனர்.  

ஆகவே, இவ்வாறான தேர்தல் சூழலில், வன்னித் தேர்தல் மாவட்டம், பாரிய இனப்பரம்பலை மாற்றியமைக்கும் களமாக மாறப்போவதைத் தமிழர்கள் உணரத்தலைப்பட வேண்டும்.   

இச் சூழலிலேயே, பிரதான தமிழ்க் கட்சிகளின் வாக்குகளை உடைத்து, தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில், பல தமிழர்களும் புதிய புதிய பெயர்களைக் கொண்ட கட்சிகளில் அறிமுகமாகிப் போட்டியிடுகின்றனர்.  

கடந்த காலங்களில், சுதந்திரக் கட்சியிலும் பொதுஜன பெரமுனவிலும் போட்டியிட்ட பல தமிழ் வேட்பாளர்கள், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வீணடித்த நிலையில், தற்போது தம்மைத் தமிழர்கள், தமிழர்களின் கட்சி என்ற கோசத்துடன், வன்னித் தேர்தல் தொகுதியில் களமிறங்கி உள்ளமையானது, தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் வீணடிப்பதற்கேயன்றி, பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்காக இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.  


இதற்குமப்பால், தமிழ் அரசியல் களத்தில் வாக்குச் சிதறல் என்பது, தவிர்க்க முடியாத நிலையில், தமக்கான பிரதிநிதித்துவத்தை ஆளுமையுள்ளதாகவும் அறிவார்த்தமாகவும் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தைத் தவறவிடும் வாய்ப்புகள் உள்ளன.   

கடந்த காலங்களில், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தியபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில், இன்று பல கட்சிகளாகத் தேர்தலை முகம் கொடுத்துள்ள தமிழர்கள், தற்போது தமது வாக்குச் சிதறல்களால் தமது பிரதிநிதித்துவத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை பெரும் துயரமே.  

இதற்குமப்பால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வாக்களிப்பு சதவீதம் குறைந்து செல்லும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்கள் விலகுவதானது, ஆரோக்கியமற்ற செயற்பாடாக இருக்கும் என்பதை உணரத்தலைப்பட வேண்டும்.  

ஆகவே, தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தவரையில், தமது தேர்தல் பிரசாரப் பணியில், முக்கிய பங்காக மக்களை வாக்களிப்புச் செய்யத் தூண்டுவது முக்கியமானதாக உள்ளது.  அதிகளவான வாக்களிப்பு இடம்பெறுமாயின் பிரதிநிதித்துவ இழப்பைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே, தமிழ் மக்கள், தமது வாக்களிப்பு சதவீதத்தைத் தமது தொகுதிகளில் அதிகரிப்பதனூடாகவே தமக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தைப் பெற வாய்ப்பாக அமையும்.  

இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தில் எவ்வாறு உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதோ, அதேபோன்றே வன்னித் தேர்தல் தொகுதியிலும் உட்கட்சி வெட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில், டெலோவால் இளம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட வேட்பாளரொருவர், அக் கட்சியால் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில், டெலோவுக்கு மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்குள் ஒதுக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.  

இதில், மயூரன் இளம் வேட்பாளராக உள்ள போதிலும், அக்கட்சியின் பிரசாரங்களில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அக்கட்சியினர், “விருப்பு வாக்குத் தேர்தல் முறையில், அவ்வாறுதான் இருக்கும்” எனத் தெரிவித்து வருகின்றனர்.  

எனவே, தமது கட்சிக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வீழ்த்திப் போட்டியிடும் இந்தத் தேர்தல் முறைக்குள், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு காப்பது என்ற கேள்வியும் அதிகமாகவே காணப்படுகின்றது.  

எனவே, வாக்காளர்கள் தீர்க்கமானதும் திடமானதுமான முடிவை எடுக்கும் பட்சத்திலேயே, இம்முறை தமிழ் மக்கள் தமது இருப்பைத் திடமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்ய முடியும் என்பது மறுப்பதற்கில்லை.    

தமிழ்க் கட்சிகள் என்ற முகமூடியுடன் போலிகள்

கடந்த காலங்களில், பெரமுனவின் பங்காளிகளாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாதவர்கள், தற்போது தாம் தனித் தமிழ்க் கட்சி என்ற போலி முகமூடியைப் போட்டு, மக்களிடம் வாக்குக் கேட்கிறார்கள் என, வன்னி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.  

image_fdc9286f2e.jpgவன்னித் தேர்தல் தொகுதி என்பது, ஒரு முக்கியமான தொகுதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில், வெற்றிலைச் சின்னத்திலும் வெவ்வேறு சின்னங்களிலும் போட்டியிட்டவர்கள், தற்போது தாங்கள் தமிழர்கள்; நாங்கள் தமிழ் கட்சியிலேயே போட்டியிடுகின்றோம்; எங்களுடைய வேட்பாளர்களும் தமிழர்தான் என்கின்ற பிரசாரத்தை முன்னெடுத்துத் தங்களைத் தமிழர்களாகக் காட்டி, எமக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்கள், இந்தப் பொதுஜன பெரமுன என்று சொல்லப்படுகின்ற மொட்டுக் கட்சியினுடைய சகோதர சகோதரி வேட்பாளர்களாகவோ, அந்தக் கட்சிகள் பொதுஜன பெரமுனவினுடைய பங்காளிக் கட்சிகளாவோ அல்லது, கூட்டாளிக் கட்சிகளாகவோ இருப்பார்கள். இவர்கள், தமிழ்க் கட்சிகளில் தனித்துக் கேட்பதற்குக் காரணம், கடந்த காலங்களிலே எங்களுடைய மக்கள், அரசாங்கக் கட்சிக்களுக்குக் கணிசமான வாக்குகளைக் கொடுக்கவில்லை. ஆகவே, அவர்கள் தமிழ்க் கட்சி என்ற அந்த முகமூடியோடு, இப்போது வந்து மக்கள் முன் நிற்கிறார்கள்.  

அவர்களுக்குத் தெரியும் தங்களுக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது என்று. அவ்வாறு தெரிந்தும், ஏன் நிற்கிறார்கள் என்றால், தமிழ்ப் பிரதிநிதிகளைக் குறைப்பதற்காகவும் எங்களுடைய வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவும் ஆகும். இவ்வாறு சுயேட்சைக் குழுக்களிலும் இதர கட்சிகளிலும் கேட்பவர்கள் 15,000 தொடக்கம் 20,000 வாக்குகளைச் சிதறடிப்பார்களேயானால், நாங்கள் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரை இழந்துவிடுவோம்.   

வன்னித் தேர்தல் தொகுதி என்பது, இப்போது சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, இனப்பரம்பலை மாற்றுகின்ற ஒரு பிரதேசமாக, அவதானிக்கப்பட்டு வருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாகவே, நாம் எமது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ள முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் கருத்து எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது, இன்றைய அரசியல் போக்கில் உணரக்கூடியதாக இருக்கிறது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களுக்கு-வாக்களிப்பதன்-அவசியத்தை-உணர்த்தும்-தேர்தல்/91-253153

இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்

17 hours 27 minutes ago
இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்  

காரை துர்க்கா   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:37

 

தற்போது மக்கள், கொரோனா வைரஸுடன் வாழப் பழகி விட்டார்கள். இது கூட, உலக நியதியே ஆகும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கலாம் என, ஆபத்துக்குள் வாழ்ந்தாலும் வழமையான நிலையில், வாழ்வதாகவே கணிசமான மக்கள் உணர்கின்றார்கள்.  

ஆபத்துக்குள் வாழ்தல் என்பது, வடக்கு, கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்த வரையில், புதிய விடயம் அல்ல. யுத்த காலத்தில் ஆள் அடையாள அட்டையை, சட்டைப் பையில் கொண்டு திரிந்தார்கள்; இன்று முகக்கவசத்தை முகத்தில் அணிந்து திரிகின்றார்கள்.  

ஆனாலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய கொரோனா வைரஸைக் காட்டிலும் உயிர் வாழ்வதற்குத் தேவையான (அரசியல்) தேர்தல் கதைகளை, சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் மக்கள் அதிகம் பகிர்ந்து கொள்கின்றார்கள்.  

அவ்வகையில், நீண்ட காலத்துக்குப் பின்னர், மங்கலகரமாக நடைபெற்ற நிகழ்வில் (பூப்புனித நீராட்டு விழா) மக்கள் கூட்டத்துடன் இருந்த போது, சுவாரஸ்யமான பல அரசியல் உரையாடல்கள் நடந்தன. சுவாரஸ்யங்கள் என்றாலும், அர்த்தங்கள் பொதிந்தவையாக அவை காணப்பட்டன.  

“நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகுது, யாருக்கு வாக்களிப்பதென்று தெரியாதபடி சனங்கள் குழம்பிப் போய் உள்ளனர்; அப்படி எங்கட சனத்தை இவங்கள் குழப்பிப் போட்டாங்கள்” என ஒருவர் கூறினார்.  

“இதில் என்ன குழப்பம் இருக்கு? ஏன், நாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப வேண்டும். நாங்கள், ஓரணியாகக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என மற்றையவர் கூறினார்.  

“நாங்கள் இவ்வளவு காலமும் இவைக்கு (கூட்டமைப்பு) வாக்களித்து, என்னத்தைக் கண்டனாங்கள்” என்றார் இன்னொருவர்.   

அந்த மற்றையவர் தொடர்ந்தார், “அவருக்கு வாக்களித்தோம், இவருக்கு வாக்களித்தோம் என நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் இதுவேதான் எங்கள் நிலைவரம்; இதனை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், நான், கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் சொன்னபடியால், கூட்டமைப்பின் ஆதரவாளர் அல்ல; அவர்கள் செய்தது எல்லாம் சரி எனச் சொல்லவும் வரல்லை. ஆனால், நாங்கள் (தமிழர்கள்) ஓர் அணியாகச் செயற்படுவதற்காக மட்டுமே, அவர்களுக்கு வாக்களிக்கச் சொல்கின்றேன்” என்றார் .   

இவர்களின் உரையாடலில் இருந்து, (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல்) தமிழ் மக்கள் இன்னும், மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். மக்களை வழி நடத்த வேண்டிய அரசியல்வாதிகளே, அவர்களை குழப்புகின்றார்கள். தமிழ் மக்கள், தாங்கள் உதிரிகளாக உதிர்ந்து போக விரும்பவில்லை என்பதை உணரக்கூடியதாக இருந்தது.  

வடக்கு, கிழக்கில் பல தமிழ் அரசியல் கட்சிகள் போட்டியிட்டு ஒவ்வொன்றும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றால், அரசாங்கம் யாருடன் பேச்சுவார்த்தைக்கு வரும். அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதற்கு, நாமே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாக அமையலாம்.  

பலமான ஓர் அணியாகச் செயற்படுதல் ஊடாகவே, பேரினவாத அரசாங்கத்தை, பேச்சு மேடைக்கேனும் கொண்டு வரலாம் என்பதில், எம்மக்கள் தெளிவாகவும் உறுதியாகவும் விருப்பமாகவும் உள்ளனர்.  

இதற்கு மேலதிகமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (வீடு) என்ற ஒற்றைச் சொல்லுக்கும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்ற செயலுக்கும் மதிப்பளித்தே, இதுவரை காலமும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வந்துள்ளார்களே தவிர, அதில் இருக்கும் தனி மனித பிரபல்யங்களையோ, அவர்களது திறமைகளையோ ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.  

ஏன், தேர்தல் வாக்களிப்புகளின் போது கூட, பலர் விருப்பு வாக்கு எண்ணுக்கு வாக்களிக்காது, தாங்கள் விரும்புகின்ற வீட்டுக்கு மட்டுமே வாக்களித்து வருகின்ற தன்மையும் கூடக் காணப்படுகின்றது.                                                                                                                                 

இதைவிட, கடந்த காலங்களில் கூட்டமைப்பின் ஊடாக மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முதலமைச்சராகவும் பதவி வகித்து, கூட்டமைப்புடன் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்கள், தங்களுக்குள் ஒற்றுமையாக, ஓரணியாகச் செயற்பட முடியாது, மேலும் முரண்படுகின்றமை கூட, கூட்டமைப்பு தனது பலத்தை முழுமையாக இழக்காது இருப்பதற்கான பிறிதொரு காரணமாகவும் அமைகின்றது.  

இதுவே மாற்று அணி தோற்றமும் எழுச்சியும் பெற முடியாமைக்கான பிரதான காரணமாகவும் அமைகின்றது. மேலும், இவ்வாறாக மாற்று அணியாகத் தொழிற்பட முனைந்தவர்களது எல்லைகள், யாழ். மாவட்டத்துக்குள் மட்டுமே சுருங்கி விட்டமை போன்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.  

ஆகவே, சுருங்கக்கூறின் ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்குப் பின்னரான காலங்களில் (2009) கூட்டமைப்பு தமிழ் மக்களின் நாடித் துடிப்புக்கு எற்ற மாதிரி இயங்கவில்லை; இயங்க முடியவில்லை.  கூட்டமைப்புக்கான மாற்று அணி என வெளிக்கிட்டவர்கள், கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையில் இயங்கினரே தவிர, தமிழ் மக்களது மனநிலையைப் புரிந்து, ஆகக்குறைந்து ஒன்றுபட்டுக் கூட இயங்கவில்லை; இயங்க முடியவில்லை.  

‘எவரொருவர் எதுவும் சாதிக்கப் போவதில்லையோ, அவர் தியாகம் செய்யத் தேவை இல்லை. சாதிக்கப் போகின்றவர்கள், கட்டாயம் நிறையத் தியாகம் செய்ய வேண்டும். யார் அதிக உயரத்தை எட்டப் போகிறார்களோ, அவர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகின்றது’ என்ற ஜேம்ஸ் அலனின் கூற்று இவ்விடத்தில் பொருத்தமாகும்.  

ஆகவே,தமிழ் மக்களுக்காகச் சாதிக்கப் போகின்றோம் என அரசியலுக்கு வந்தவர்கள், தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அதேவேளை, உன்னதமான தியாகங்களுக்கூடாகப் பயணித்த விடுதலைப் போராட்டத்தை, நடுத்தெருவில் விட முடியாது. ஆனால், நாங்கள் சிறுபிள்ளைத்தனமாகச் சண்டை போடுகின்றோம்; விரிசல்களை விரிவாக்குகின்றோம்.  

சுமந்திரன் செய்தவை, சொல்லியவை பற்றி பட்டிமன்றம் போடுகின்றோம். சரி, சுமந்திரன் செய்தவை, சொல்லியவை தொடர்பில் குழப்பம் இருந்தால், அவருக்கு விருப்பு வாக்குப் போடுவதைத் தவிர்க்கலாம் தானே. அதற்கு ஏன் எங்களது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க வேண்டும்.  

தமிழரசுக் கட்சி, சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கவலைப்படும் எம்மக்கள், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதற்கான ஆயுதமும் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி) வாக்காளர்களது கைகளில் உள்ளது தானே?   

ஒரு விடயத்தை மட்டும், அனைவரும் தயவு கூர்ந்து உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒரு கட்சிக்கு மட்டும் வாக்களித்தால் மட்டுமே, கிழக்கு மாகாணத்தில் ஐந்து (சில வேளைகளில் ஆறு) ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த முறை (2015) ஐந்து ஆசனங்கள் கிடைத்தன.   

திருகோணமலை ஒன்று, மட்டக்களப்பு மூன்று அல்லது நான்கு, அம்பாறை ஒன்று என ஆசனங்கள் கிடைக்கப் பெறும். இந்நிலையில், தமிழ் வாக்குகளின் சிதைவு, ஏனைய இனங்கள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.  

இது போலவே, வன்னித் தொகுதியிலும் நிலைமைகள் உள்ளன. கூட்டமைப்பு, கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில், வெறும் ஏழு வாக்குகளால் ஆறாவது ஆசனத்தை இழந்தது.  

இந்நிலையில், 2001ஆம் ஆண்டு காலப் பகுதிகளில், பல தமிழ்க் கட்சிகள் இருந்தாலும், தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்குச் சமாந்தரமாக, தமிழ் மக்களது ஜனநாயகப் போராட்டம் பயணிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 20.10.2001 ஆம் திகதி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  

அன்று கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகித்தன. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகிய கட்சிகள் விலகின.  

இன்று, சிங்கள பௌத்த பேரினவாதம் பேரெழுச்சி கொண்டு நிற்கின்றது. திருக்கோணேஸ்வரம், நல்லூர் முருகன் கோவில்கள் எல்லாவற்றுக்கும் தமிழர்கள் வரலாம், கும்பிடலாம்; ஆனால், அவை எங்களுடையவை என உரிமை கேட்டு விட்டது. நாளை தமிழர்களின் வீட்டு சுவாமி அறையில் இருக்கும் பிள்ளையாரும் பறிபோகலாம்.  

ஆகவே, எதிர்வரும் காலங்களில் மேலும் ஆபத்துகள் வரவுள்ளன. அழுதாலும் அவள் தானே பிள்ளை பெற வேண்டும் என்பது போல, ஆபத்துகள் எதுவானாலும் அதைத் தாங்குவதற்குப் பலம் வேண்டும்.  

சர்வதேசம் வரும் வரும் என, வராத சர்வதேசத்துக்குக் காத்திருக்க முடியாது. அரசமைப்பு வரும் வரும் என எக்காலமும் வராத யாப்புக்குக் காத்திருக்க முடியாது.  இழந்த இருப்புகள் போக, மீதியாக உள்ளவற்றைப் பாதுகாக்க, தமிழர்கள் ஓரணியாகத் திரள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே தெரிவு. 

அதற்காக வடக்கு, கிழக்கில் தனித்தவமானதும் பலமானதுமான கட்சி ஒன்றை  வெல்ல வைப்பதே, அதற்கான பாதை எனலாம். வேறு ஏதேனும் உண்டா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இழந்தவைகள்-இழந்தவைகளாகட்டும்-இருப்பவைகளையாவது-பாதுகாப்போம்/91-253150

வரலாறு முக்கியம் அமைச்சரே!

17 hours 28 minutes ago
‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’  

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூலை 14 , பி.ப. 12:18 - 0     - 57

AddThis Sharing Buttons

 

“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர்.

வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.

வரலாற்றின் பயன்பாடு இந்தளவில் மட்டுப்பட்டிருந்தால், அதற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டிய தேவையில்லை. ஆனால், வரலாறு இதைத்தாண்டிய முக்கியத்துவத்தை மனிதவாழ்வில் பெற்றுவிட்டது. “நாம் யார் தெரியுமா?”, “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த குடிகள்” என்ற பகட்டாரவாரம், ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளத்தினதும், பெருமையினதும் அடிப்படையாகப் பார்க்கப்படும் நிலையில், நிச்சயமாக வரலாறு முக்கியமாகிவிடுகிறது.

இந்த அடிப்படையில்தான், மல்கம் எக்ஸ் “ஓர் இனக்கூட்டமானது, ஒரு தனி மனிதனைப் போன்றது; அது தனது சொந்தத் திறமையைப் பயன்படுத்தும் வரை, அதன் சொந்த வரலாற்றில் பெருமை கொள்ளும், அதன் சொந்த கலாசாரத்தை வெளிப்படுத்தும் வரை, தனது தனித்தன்மையை உறுதிப்படுத்தும் வரை, அது ஒருபோதும் தன்னை முழுமைப்படுத்தாது” என்கிறார்.

ஓர் இனத்தினது மட்டுமல்ல, ஒரு தேசத்தினது அடையாளத்துக்கும் நிறுவலுக்கும், கட்டியெழுப்பலுக்கும், நீட்சிக்கும் கூட வரலாறு என்பது முக்கியத்துவமிக்கதொன்றாகவே பார்க்கப்படுகிறது.

“தேசம்” என்பதை புறக்காரணிகள் மூலம் வரையறுக்கும் கொம்யுனிச சர்வாதிகாரி ஜோசஃப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாக கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு ஆகிய அடிப்படைகளைக் கொண்டமைந்த, நிலையான மக்கள் சமூகமொன்று, ஒரு தேசமாகும்” என்கிறார்.

“தேசம்” என்பதை அகக்காரணிகள் மூலம் வரையறுக்கும் ஏனஸ்ட் றெனன், “ஒரு தேசம் என்பது, ஒருவர் செய்த தியாகம், ஒருவர் மீண்டும் செய்வதற்குத் தயாராக இருக்கும் தியாகம் என்ற உணர்வின் பாலாக, கட்டமைந்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை எண்ணத்தில் கொள்கிறது; அது நிகழ்காலத்தில் தொடர்ந்து, பொது வாழ்க்கையைக் கொண்டமைவதற்கான தௌிவான வகையில் வௌிப்படுத்தப்படும் அங்கிகாரம், விருப்பு ஆகிய உறுதியான செயற்பாடுகளினூடாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது, நித்திய பொது வாக்கெடுப்பாகும்” என்கிறார். ஆகவே, ஒரு தேசக் கட்டமைப்பில், வரலாற்றினதும், கடந்த காலத்தினதும் பங்கு, தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.   

ஆகவே, தம்மை ஒரு மக்கள் கூட்டமாக, இனமாக, தேசமாக நிறுவிக்கொள்ள விளையும் அனைத்து மக்கள் கூட்டங்களும் ஏதோவொரு வகையில் வரலாற்றின் துணையை அதற்காகத் தேடிக்கொள்கின்றன. அந்த வகையில் தமக்கு வசதியானதொரு, தம்முடைய கதைக்குப் பெருமைசேர்க்கும் வரலாற்றைக் கட்டமைக்க முயன்றுகொண்டேயிருக்கின்றன. இதை தமக்கான “பயன் தரு கடந்தகாலத்தின்” தேடல் எனலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையின் வரலாறாக “மஹாவம்சம்” உருவெடுத்ததுகூட “பயன் தரு கடந்த காலத்துக்கான” தேடலின் விளைவு எனலாம். “மஹாவம்சம்” என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை, அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான புராண இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது. ஆனால், அந்தப் புராண இலக்கியமானது, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்துக்கு அவர்கள் தேடும் “பயன் தரு கடந்தகாலத்தை” வழங்குவதாக அமைந்தைமயால், அது வரலாறாகவே சுவீகரிக்கப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டன. அந்தப் புராண இலக்கியம் மீள மீள அம்மக்கள்  கூட்டத்துக்குள் வரலாறாகப் போதிக்கப்பட்டது. அது வரலாறாக ஆக்கப்பட்டது. இது உண்மையான வரலாற்றறிஞர்கள் கூறும் வரலாற்றுக்கும் குறித்த மக்கள் கூட்டம் நம்பும் வரலாற்றுக்கும் இடையில் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகிறது.

விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவான சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம், எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞ்ஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.  

சமகால “சிங்கள-பௌத்த” அடையாளத்தின் தோற்றமும் எழுச்சியும் பிரித்தானியக் கொலனித்துவ காலத்துக்குப் பின்னானது என்பது, கணநாத் ஒபேசேகர, றிச்சட் கொம்ப்றிச், லெஸ்லி குணவர்த்தன, எச்.எல்.செனவிரத்ன, ஸ்ரான்லி ஜே தம்பையா உள்ளிட்ட பல வரலாற்று,  மானுடவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

அவ்வாறு உருவான ஒரு மக்கள் கூட்டம் தனக்கென தேடிக்கொண்ட “பயன் தரு கடந்த காலம்தான்” இன்று இலங்கையின் வரலாறாக நம்பப்படும் வரலாறு காணப்படுகிறது. இதனால்தான், அந்த வரலாறு, பல தர்க்கச்சிக்கல்களில் சிக்குண்டு நிற்கிறது. “மஹாவம்சத்தை” வரலாறாக சுவீகரித்துக்கொண்டது, தமிழர்களை “விரும்பத்தகாத அந்நியர்களாக” சித்திரிக்கும் பெரும்பான்மை இனத்-தேசிய பெருந்திரள்வாதத்துக்கு ஏற்புடையதாக அமைந்தாலும் தம்மை அதிகாரம்மிகு பெரும்பான்மை இனத்-தேசியமாக உருவாக்கிக்கொண்டதன் பின்னர், “மஹாவம்சம்” காலத்தின் அடிப்படையில் ஏற்படுத்தியிருக்கும் மட்டுப்பாடு பெருங்குறையாக உணரப்படத் தொடங்குவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

“மஹாவம்சத்தை” இலங்கையின் வரலாறாகக் கருதினால், அது “சிங்கள இனத்தின்” வரலாற்றை, விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. ஆனால், விஜயன் இங்கு வரும்போது இங்கு மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே, சிங்களவர்களுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்றாகிறது. அம்மக்களைப் பற்றிய வரலாற்றாய்வு பெருமளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை, அது பற்றி அரசாங்கமும் அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் அது பெரும்பான்மை மக்கள் சுவீகரித்துக்கொண்டுள்ள வரலாற்றுக்கு சாதகமானதாக அமையாது.

மறுபுறத்தில், விஜயனின் வருகையிலும் சில நூற்றாண்டுகள் கழித்துதான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால், பௌத்தத்துக்கு முன்பு இங்குள்ள மக்கள் வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இந்த மட்டுப்பாடுகளைக் களைய, “சிங்கள” அடையாளத்துக்கான இன்னொரு “பயன் தரு கடந்தகாலத்தை” தேடும் முயற்சி சமகாலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

அதன் ஒரு அங்கம்தான் “இராவணனை” சிங்களவனாக சித்திரிக்கும் முயற்சி. மஹாவம்சத்திலும் பழைய புராண இதிகாசமாக இராமாயணம் இருக்கிறது. இராமாயணம் பாரதக் கண்டத்தில் மட்டுமல்லாது, தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும்கூட பிரபல்யமான ஒரு புராண இதிகாசமாக இருக்கிறது.

இலங்கை பற்றிய மிகத்தொன்மையான பதிவுகளுள் ஒன்றாக இராமாணயத்தை பலரும் கருதுகிறார்கள். அன்று இலங்கையை ஆண்டவன் இராவணன். இலங்கையை சிங்களவர்களே ஆண்டார்கள் என்ற நம்பிக்கையை பலப்படுத்த வேண்டுமானால், இராவணனை சிங்களவனாக்க வேண்டிய தேவையும் அதனோடு இணைந்து ஏற்படுகிறது. இலங்கை மன்னர்களில் “எல்லாளன்” என்ற “தோற்கடிக்கப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு எதிரியைத்” தவிர மற்ற அனைவரும் சிங்களவர்களே என்றதொரு “கடந்த காலத்தை” கட்டியெழுப்பும் கைங்கரியத்தையே இன்று “சிங்கள-பௌத்த” பேரினவாத சக்திகள் முன்னெடுக்க விளைகின்றன.  

இந்த வரலாறு எழுதும் போட்டியில் தமிழர்களின் நிலை என்ன என்பது பல தமிழர்களிடையேயும் இருக்கும் முக்கிய கேள்வி. தமிழர்கள் வரலாறு பற்றியதும் “பயன்தரு கடந்த காலத்தை” கட்டியெழுப்புவதுமான போட்டியில் பங்கேற்கத்தேவையில்லை என்பது சில தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தாகும். நாம் எப்போது இங்கு வந்தோம் என்பது எம்முடைய இன்றைய தேச அடையாளத்தையும், இருப்பையும் பாதிக்காது, பாதிக்கக்கூடாது என்பது அவர்களது கருத்தாகும்.

மறுபுறத்தில், “தமிழ்க்கடவுள்” முருகன் “கத்தரகம தெவியா” ஆனதும், இன்று திருகோணமலை “கோகண்ண” ஆகிக்கொண்டிருப்பதுமெல்லாம் தமிழர்களின் அடையாளச் சிதைப்புகள் என்று பல தமிழர்கள் கோபம் கொள்கிறார்கள். சிவபக்தனான இராவணன் தமிழனே, அவன் எப்படி சிங்களவனாக முடியும் என்பது அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் தமது வரலாற்றை மீட்க வேண்டும் என்பது அவர்களது சூளுரையாக இருக்கிறது.  

வரலாறு பற்றி நாம் சிந்திக்கும் போது, இங்கு ‘புலிகேசிகள்’ தம்முடைய வரலாறு நூறு வருடங்களின் பின்னர் வரப்போகிறவர்களுக்குத் தெரியவா போகிறது என, தாமே மிகைப்படுத்தி எழுதுவதாக நாம் நினைப்பது தவறானதாகும். உண்மையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் புலிகேசியின் தேவை ஒரு மக்கள் கூட்டத்துக்கு ஏற்படும் போது, அவர்களே புலிகேசி பற்றிய வரலாற்றை தமக்குத் தேவையான விதத்தில் தேடிக்கட்டமைத்துக்கொள்வார்கள். புலிகேசி எப்படி இருந்தான் என்பதை விட, புலிகேசி எப்படி இருந்தான் என்று இருப்பது அவர்களுக்குப் பயனுள்ளதோ, அந்த வகையில் புலிகேசி கட்டியமைக்கப்படுவான். புலிகேசி அவர்களுக்கு பயனுள்ள கடந்த காலத்தை தராத பட்சத்தில், அவன் எத்தகையவனாக இருந்தாலும், அவன் வரலாற்றில் இடம்பெறமாட்டான். இதுதான் வரலாற்றின் யதார்த்தம்.

அதனால்தானோ என்னவோ “வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்கிறார் வோல்டேயர். ஆனால் இதனால் மட்டும் வரலாற்றிற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதனை நிராகரித்துவிடவும் முடியாது. ஒரு மக்கட் கூட்டத்தின் அடையாளத்தின் ஊற்று அதனுடைய வரலாறாகவே கருதப்படுகிறது. அதனால்தான் மனிதக்கூட்டங்கள் வரலாறு பற்றி பெருங்கரிசனை கொண்டிருக்கின்றன. அதனால்தான் வரலாற்றைப் புனைவதில் அவை சிரத்தை கொள்கின்றன. ஆனால் இந்த வரலாற்றுப் புனைவுச் சண்டைகளுக்குள் வரலாறு சிலவேளைகளில் தொலைந்துதான் போய்விடுகிறது.   

நிகழ்கால வாழ்வுக்கு வரலாற்றின் பங்களிப்பு என்பது குறைவானதே, ஆயினும் இன்றைய மனிதக் கூட்டங்களுக்கு அது இன்றியமையாததொன்றாக இருக்கிறது. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் அது. நாமாக உருவாக்கிக்கொண்டாலும், அதுவே உண்மையாக இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே!”.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வரலாறு-முக்கியம்-அமைச்சரே/91-253149

வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும்

21 hours 53 minutes ago
வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும்

on July 12, 2020

 

spacer.png

 

பட மூலம், president.gov.lk

கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு பேசிய ஒருவர் பின்வரும் கருத்தினை வெளியிட்டார்: “தொல்பொருளியல் திணைக்களத்தினைச் சேர்ந்தோர் இரவு வேளைகளில் வருவார்கள். அப்போது எதையாவது புதைத்து விட்டுச் செல்வார்கள். அடுத்த நாள் அதனைக் கிண்டி எடுத்துவிட்டு, அந்தப் பிரதேசம் பௌத்தர்களின் புனித பூமி என்று செல்லுவார்கள்.”

இலங்கையின் சிறுபான்மை மக்களின் மத்தியில், அதிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களிலே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மத்தியிலே, இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாக இவ்வாறான ஒரு பார்வை பரந்த அளவிலே அவதானிக்கப்படுகிறது. இந்த மக்கள் வாழும் பிரதேசங்களின் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் வன்முறையே, இவ்வாறான பார்வை ஒன்று வடக்குக் கிழக்கிலே எழுந்தமைக்கான பிரதானமான‌ காரணம் ஆகும்.

தொல்பொருளியல் வன்முறை

இலங்கை அரசின் ஒரு பாகமாக இருக்கும் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கையினைச் சிங்கள பௌத்தர்களுக்குரிய ஒரு தேசமாக உருவாக்கும் முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்து வருகிறது. எமது பாடசாலைகளிலே கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடநூல்கள் எவ்வாறு நாட்டின் சிறுபான்மை இன மக்களின் வரலாறுகளை இருட்டடிப்புச் செய்கின்றனவோ, அதே போலவே தொல்பொருளியல் திணைக்களமும் சிறுபான்மை மக்களிற்கும், இந்தத் தீவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான உறவுகளை நீர்த்துப் போகச் செய்யும் பணிகளிலே ஈடுபடுகிறது. தொல்பொருளியல் துறையினைப் பயன்படுத்தி, இவ்வாறு திட்டமிட்ட முறையிலே, அரசினால் மேற்கொள்ளப்படும் ஆதிக்க ரீதியிலான அறிவுருவாக்க, வரலாற்றுருவாக்க முயற்சிகளை இந்தக் கட்டுரை தொல்பொருளியல் வன்முறை என விளங்கப்படுத்த முற்படுகிறது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழ்த் தேசிய அடையாளத்தின் மூலமான ஒரு சுயநிர்ணய உரிமைக்கான குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்தப் பிரதேசத்தினை சிங்கள‍ பௌத்த‌ மயமாக்குவதன் மூலம், இப்பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமைக்கான கோசங்களை வலுவிழக்கச் செய்யலாம் என்பதுவும் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கு மற்றொரு காரணம் ஆகும்.

தொல்பொருளியல் செயலணி

இவ்வாறான ஒரு சூழமைவிலேயே, கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தொல்பொருளியல் முக்கியத்துவம் மிக்க இடங்களை முகாமை செய்வதற்கான ஒரு செயலணியின் நியமனம் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக அண்மையிலே வெளியிடப்பட்டது. ஒப்பீட்டளவில் நோக்குகையில் இலங்கையிலே இன, மதப் பல்வகைமை மிகவும் கூடிய மாகாணமாகக் கிழக்கு மாகாணம் அமைகின்றது. கிட்டத்தட்ட 77% ஆன தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தின் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களைப் பேணும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செயலணியிலே தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த ஒருவர் தன்னும் இடம்பெறாமை, கிழக்கில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் மத்தியில் இந்தச் செயலணி தொடர்பாக அச்ச உணர்வுகளைத் தோற்றுவித்துள்ளது. தமது சமூகங்களின் கலாசாரங்களையும், மதச் சின்னங்களையும், ஏன் தம் அடையாளம் சார் இருப்பினையும் தகர்க்கும் வகையிலேயே, இந்தச் செயலணி செயற்படக்கூடும் என்ற அச்சம் அவர்களைச் சூழ்ந்துள்ளது.

இந்தச் சூழலிலேயே இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்படுவதற்கு எவ்வாறான அரசியல் முயற்சிகள் அவசியம் என்பதனையும், அரசின் குறுகிய தேசியவாத ரீதியிலான தொல்பொருளியல் பார்வைக்கு மாற்றாக, இந்தப் பிரதேசத்திற்கென எவ்வாறான மாற்று அரசியற் பார்வை ஒன்று தேவைப்படுகிறது என்பதனையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.

வரலாறு

அதற்கு முன்னர் இந்தப் பிரதேசத்தின் வரலாறு குறித்தும் சற்று சிந்திப்பது பொருத்தமானது. ஏனெனில், அரசு எழுத முற்படும் திரிபுவாத வரலாற்றுக்கு மாற்றான ஒரு வரலாறு எம்மத்தியில் இருந்து எழ வேண்டியதும் இங்கு அவசியம். அவ்வாறான மாற்று வரலாறு என்ன என்பதனையும் நாம் கருத்தில்கொண்டே எமது எதிர்ப்பினையும், எதிர்காலம் தொடர்பான எமது பார்வையினையும் வளர்த்தெடுக்கலாம்.

சமகாலத்திலே தமிழ்த் தேசியவாதம் வடக்குக் கிழக்கினைத் தமிழர்களின் இணைந்த தாயகமாக வலியுறுத்தினும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் அது எல்லாக் காலங்களிலும், அரசியல் ரீதியாக‌ வடக்குடன் இணைந்ததாக இருக்கவில்லை. உதாரணமாக, டக்மர் ஹெல்மன் ராஜநாயகம் என்ற வரலாற்று ஆசிரியரின் கருத்தின்படி, தற்போதைய மட்டக்களப்பு மாவட்டம் ஒரு போதும் நேரடியான தமிழ் ஆட்சியின் கீழோ அல்லது யாழ்ப்பாண இராசதானியின் கீழோ இருக்கவில்லை. முதலிலே அது உருகுணை இராசதானியின் ஒரு பகுதியாகவும் பின்னர் கண்டி இராசதானியின் ஒரு நிலமானியப் பகுதியாகவும் இருந்தது.

கண்டி இராசதானி பற்றி எழுதும் வரலாற்றாசிரியர் பத்மநாதன், புல்மோட்டையில் இருந்து பாணமை வரையிலான அந்த இரசாதானியின் கிழக்குக் கரையோரத்திலே தமிழர்களும், முஸ்லிம்களும் அதிக அளவிலே வாழ்ந்தமையினைச் சுட்டிக்காட்டுகிறார். நாம் தற்கால சமூகங்களை வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தும் தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற வகைப்படுத்தல்கள் கண்டிய இராசதானிக் காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த மக்களை வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. ஏனெனில், நாம் பயன்படுத்தும் இன அடையாள‌ லேபள்களுக்கு என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த லேபள்கள் எப்போது முதன் முதலிலே பயன்படுத்தப்பட்டன? யாரினால் என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்விகளும் இங்கு முக்கியமானவை.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும், வடக்கு மாகாணமும் ஒரே அரசியல் நிர்வாகத்தின் கீழ் காலனித்துவக் காலத்திற்கு முன்னர் இருந்திருக்கவில்லை என்பதனை நாம் இந்த வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களின் மூலமாக அறிய முடியும். வரலாற்று ரீதியில் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தொடர்ச்சியாக இணைந்திருந்தமையினை நிரூபிக்க முடியாது எனினும், சம காலத்திலே இந்த இரண்டு மாகாணங்களும் இணைந்த நிலையிலும் சரி, பிரிந்த நிலையிலும் சரி, நாட்டின் அரசியலிலே மிகவும் முக்கியத்துவம் மிக்க பிரதேசங்களாக மாறியுள்ளன. இந்த இரண்டு மாகாணங்களின் பெரும்பான்மை மக்களாக, நாட்டில் ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மையாக உள்ள சமூகங்கள் இருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, அரசின் சிங்கள பௌத்த மயமாக்கத்துக்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் ஒன்று திரட்டப்பட்ட முறையிலே இந்தப் பிராந்தியத்தில் இருந்து உறுதியான முறையிலே தொடர்ச்சியாக வெளிப்பட்டவாறு இருக்கின்றன. இந்தப் பிராந்தியத்திலே ஒரு தனி அரசினை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டமும் 30 ஆண்டுகளாக இடம்பெற்றது.

சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, இந்தப் பிராந்தியத்திலே வாழும் சிங்கள மக்களின் தொகை அதிகரித்தமைக்கு இந்தப் பிராந்தியத்திலே அரசினால் முன்னெடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களும், குடியேற்றத் திட்டங்களும் பிரதானமான‌ காரணங்களாக‌ அமைந்தன. மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண ஆசிரியர் சங்கம் உள்ளடங்கலாகப் பல அமைப்புக்கள் இந்தக் குடியேற்றத் திட்டங்களிலே சில எவ்வாறு இப்பிராந்தியத்திலே தமிழ், முஸ்லிம் மக்களின் குடிப்பரம்பல் வீதத்தினைத் திட்டமிட்ட வகையில் குறைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டன என்பதனை ஆதார பூர்வமாக விளக்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியமும் தாயகக் கோட்பாடும்

வடக்குக் கிழக்கினைத் தளமாகக் கொண்டு உருவாகிய தமிழ்த் தேசிய அரசியலின் மையமாக இருக்கும், பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டினை முன்னிறுத்தியே, சிங்கள பௌத்தத் தேசியவாதத்துக்கான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும் என்ற குரல்களே இன்றும் பலமாக ஒலிக்கின்றன. தொல்பொருளியல் செயலணியினை எதிர்க்கும் நோக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை வலியுறுத்தும் குரல்கள் கூட, இந்தத் தாயகக் கோட்பாட்டினை உறுதியாகப் பற்றி நிற்கின்றன. இவ்வாறான ஒரு கோட்பாட்டினை வலியுறுத்தியவாறு இந்த இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையினையும், தோழமையினையும் கிழக்கு மாகாணத்திலே உருவாக்க முடியுமா என்று கேள்வி இங்கு எழுகிறது.

தமிழ் முஸ்லிம் உறவுகளை வளர்த்தெடுக்க நாம் முற்படுவோமாயின், வடக்குக் கிழக்கினைத் தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் உரையாடலினைக் கேள்விக்குட்படுத்த வேண்டியது அவசியம். வடக்குக் கிழக்கு தமிழருடைய தாயகம் என்பதற்குப் பதிலாக, அது யாருடைய தாயகம் என்ற கேள்வியினை எழுப்புவது தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்கும் புறமொதுக்கல்களை நாம் புரிந்து கொள்ள உதவும். வடக்குக் கிழக்குத் தமிழர்களின் தாயகம் எனின் அது முஸ்லிம்களின் தாயகம் இல்லையா? அல்லது அது அங்கு வாழும் சிங்கள மக்களின் தாயகம் இல்லையா?

வடக்குக் கிழக்குபன்மைத்துவம்சகவாழ்வு

வடக்குக் கிழக்கினை தமிழ்த் தேசம், தமிழர்களின் தாயகம் என்பவற்றுக்கு அப்பால், சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் கொடுமையினை எதிர்க்கின்ற, பன்மைத்துவத்தினைத் தாங்கிய ஒரு பூமி என்றே நான் விளங்க முற்படுகிறேன். அந்த அடிப்படையில் நோக்கும் போது வடக்குக் கிழக்கினை நாம் தேசியவாதத்தினுள்ளும், தாயகக் கோட்பாடுகளினுள்ளும் குறுக்கி வைக்கும் அபாயம் இல்லாது போகிறது. இவ்வாறான ஒரு புரிதலின் அடிப்படையில் பார்க்கும் போது, ஒடுக்கும் தன்மையான சிங்கள பௌத்தத் தேசியவாதமானது எல்லாவற்றுக்கும் முதன்மையாக வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய மொழிகள், சமயங்கள், கலாசாரங்கள் மற்றும் இனக் குழுக்களின் சகவாழ்வுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டுக்கு நாம் வர முடியும்.

சிங்கள பௌத்தத் தேசியவாதம் வடக்குக் கிழக்கிலே இருக்கும் ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத அடையாளத்தினை அழிக்க முற்படுகையில், அதன் கோரத்தினை அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பன்மைத்துவத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலாகவும் நாம் பார்க்க முடியும். சிங்கள பௌத்தத் தேசியவாதம் ஆதிக்கம் மிக்க முறைகளிலே அல்லது ஜனநாயகமற்ற முறைகளிலே ஒரு பௌத்த அடையாளத்தினை வடக்குக் கிழக்கிலே நிர்மாணிக்க அல்லது மீள் நிர்மாணிக்க முற்படுவது கூட, அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பன்மைத்துவத்தினை இல்லாதொழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடே.

ஒடுக்கும் பெரும்பான்மைத் தேசியவாதம், தொல்பொருளியல் வன்முறையினைப் பிரயோகித்துத் தனித்தனியாக இன மற்றும் மத அடையாளங்களை அழிக்கிறது என்பதனை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால், தனி அடையாள அழிப்புக்கள் எவ்வாறு அந்த நிலப்பரப்பின் ஒட்டுமொத்த அடையாள உருவத்தினைச் சிதைக்கிறது அல்லது மாற்றுகிறது என்பது பற்றி நாம் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கும் போது, இந்தப் பிராந்தியத்திலே வாழும் வேறுபட்ட சமூகங்களுக்கு இடையில் தொடர்புகளினையும், தோழமை உணர்வுகளையும் எம்மால் வளர்த்தெடுக்க முடியும்.

இவ்வாறான ஒரு அணுகுமுறையின் ஊடாக, எமது கலாசார வாழ்வு எவ்வாறு மற்றையோரின் கலாசார வாழ்வுடன், ஒரு கலாசார சகவாழ்வாக  பிணைந்திருக்கிறது என்பதனையும், அடையாளங்களின் சேர்க்கையினால் உருவாகும் அடையாளக் கலவன்களுக்கும் இந்தப் பிராந்தியத்திலே இடம் இருக்கிறது என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளுவது, எமது எதிர்ப்பின் வீரியத்தினை மேலும் கூட்டும். இந்த மாதிரியான ஒரு புரிதலே வடக்குக் கிழக்கின் வரலாற்றினை அதனுடைய எல்லா சிக்கல் தன்மைகளின் ஊடாகவும் விளங்குவதற்கு எமக்கு வழி செய்யும்.

சிங்கள பௌத்தத் தேசியவாதம் தனியே வடக்குக் கிழக்கிலே வாழும் தமிழர்களினதும், முஸ்லிம் மக்களினதும் அரசியல் இருப்புக்கு மாத்திரமல்லாது, இந்தப் பிராந்தியத்திலே காலம் காலமாக வாழ்ந்த (அவர்கள் எண்ணிக்கையிலே குறைவாக இருந்தாலும்) சிங்கள சமூகங்களினதும், பௌத்தத்தினைப் பின்பற்றியோரினதும், சகிப்புத் தன்மை மிக்க கலாசாரங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலினை விடுக்கிறது.

உதாரணமாக எம்.எச். அஷ்ரஃப் அவர்கள் எழுதிய “மணியோசை” என்ற கவிதை, தீகவாபியில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விகாரை ஜனநாயகமற்ற முறையிலே ஒரு புனித வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, அது எவ்வாறு அப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் விவசாயிகளுக்கும், தீகவாபி விகாரைக்கும் காலங்காலமாக இருந்த பிணைப்புக்களை இல்லாதொழித்தது என விபரிக்கிறது.

இந்தப் பிரகடனம் விகாரையினைச் சூழவுள்ள நிலங்களில் இருந்து முஸ்லிம் விவசாயிகளை வேரோடு பிடுங்கி எறிந்த அதேவேளை, ஏனைய சமூகங்களினை அச்சுறுத்தாத வகையில், அப்பிராந்தியத்தில் இருக்கும் ஏனைய கலாசாரங்களுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பௌத்தப் பாரம்பரியத்தினையும் இல்லாதொழித்தது. புனித வலயப் பிரகடனத்துடன், பௌத்தம் அங்கு ஒரு கோர முகத்தினை வெளிக்காட்டியது. வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்ட தாயகக் கோட்பாட்டினால் இன, கலாசார எல்லைகளைக் கடந்துபோகும் இந்த மாதிரியான உறவுகளையும், அவை எவ்வாறு சிங்கள பௌத்தத் தேசியவாதத்தினால் சிதைந்து போகின்றன என்பதனையும் விளங்கப்படுத்த முடியாது. ஒற்றை அடையாளத்தினுள் புதைந்து போயிருக்கும் இந்தக் கோட்பாடு, சமூகங்களை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்குமே ஒழிய, அவை சேர்ந்து செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தாது.

இன மையமற்ற சுயநிர்ணயம்

இன்றைய கிழக்கு மாகாணத்திலே, தமிழரும் முஸ்லிம்களும் இணைந்த நிலையில் 77% ஆன சனத்தொகையினை உருவாக்குகின்றனர். அவர்கள் தமது சமூகங்களினை மையமாகக் கொண்டு இயங்கும் இனத் தேசியவாதங்களினையும், குறுகிய நிலப்பரப்பு சார் கோட்பாடுகளினையும் விடுத்து, அவற்றின் மேலாக எழுந்து, வடக்குக் கிழக்கின் பன்மைத்துவத்தினைப் பாதுகாக்கும் வகையிலும், தமது சகவாழ்வினைக் கொண்டாடும் வகையிலும் ஒரு பதாகையின் கீழ் ஒன்றுபடுவார்களாயின், அது அரசினால் தொல்பொருளியல் பாதுகாப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் கலாசார அழிப்புக்கு, உறுதியானதும், எவரையும் புறமொதுக்காததுமான ஓர் எதிர்வினையினை வழங்கும்.

இவ்வாறான ஓர் ஒருமிப்பு தமிழ், முஸ்லிம் தேசியவாதங்களையும், தாயகக் கோட்பாடுகளையும் தாண்டி வடக்குக் கிழக்கின் பன்மைத் தன்மையினையும், அங்கு வாழும் சமூகங்களின் சகவாழ்வினையும் முதன்மைப்படுத்தும் வகையிலான ஒரு இன மையமற்ற சுயநிர்ணயம் தொடர்பான பார்வையினையும் வளர்த்தெடுக்க உதவும்.

வடக்குக் கிழக்கின் சுயநிர்ணயப் போராட்டத்துக்கு என ஒரு குறிப்பிட்ட சமய அடையாள மையம் இருக்கவில்லை. அவ்வாறான சமய மையமில்லாமை, அந்தப் போராட்டத்திலே பல சமயத்தவரும் இணைவதற்கு உதவியதாக இருந்தது. அதே போலவே அந்தப் போராட்டத்துக்கு ஒரு இன அடையாள மையமும் இருக்க வேண்டியதில்லை.

வடக்குக் கிழக்கினை நாம் தமிழர்களின் தாயகம் அல்லது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்ற அடிப்படையில் வரையறுத்து, அதனடிப்படையில் அரசின் தொல்பொருளியல் வன்முறையினை எதிர்க்கப் போகிறோமா அல்லது அது ஒரு பன்மைத்துவத்தினையும், சகவாழ்வினையும் மதிக்கும் பூமி என நிலைநிறுத்தி அந்த அடிப்படையில் இருந்து பௌத்தமயமாக்கத்தினை எதிர்க்கப் போகிறோமா? இதிலே இரண்டாவது மார்க்கம் வடக்குக் கிழக்கிலே வாழும் பல தரப்பினரையும் ஒரு குடையின் கீழே கொண்டுவரக் கூடியது. ஒரு இனத்தேசியவாதத்துக்கு இன்னொரு இனத்தேசியவாதம் பதில் அல்ல என்பதனை வெளிப்படுத்தக் கூடியது. இவ்வாறான ஒரு அணுகுமுறையே சிங்கள பௌத்தத் தேசியவாதத்துக்கு கருத்தியல் ரீதியாகவும் சரி, கட்டமைப்பு ரீதியாகவும் சரி, செயற்பாட்டுத் தளத்திலும் சரி ஒரு பலமான மாற்றினையும், எதிர்ப்பினையும் உண்டுபண்ணும்.

Mahendran-Thiruvarangan.jpg?resize=100%2மகேந்திரன் திருவரங்கன்,
தகுதிகாண் விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

 

https://maatram.org/?p=8623

புனிதமிழந்த கோஷங்கள்.

1 day 6 hours ago
புனிதமிழந்த கோஷங்கள்.

imageproxy-4-300x169.jpgமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”.

இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; ; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா ? என்று கேட்கத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை? அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர்தான் கூறவேண்டும்.

 

jaffna-elections.jpg

கடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் இராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன்; அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”…..

அங்கஜன் யார்? எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார்? அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா?

கிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவது யாருடைய வெற்றியை?

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும்; தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா? ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா? அவ்வாறு கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா? அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும்; இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா?

ஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம்; அது ஒரு செயல்; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; ;அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கும்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும்.

ஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி.

அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் ? இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு ?

இதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா? அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம்; அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உரிய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது.

விக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்?

எனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு? மக்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்.

– நிலாந்தன்https://www.kuriyeedu.com/?p=267410

வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா?

1 day 9 hours ago
வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா?
July 13, 2020

10.png
 

2020 தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்த நிலையில் மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

அந்த வரிசையில் வடக்கு அரசியல் மீது அவதானத்தைச் செலுத்தினால் அங்கும் இந்த இரண்டாம் அலை அரசியல் சூழலே நிலவுவதாக உணரமுடிகிறது. கட்சிகளையும் கொள்கைகளையும் அதன் பேசுபொருட்களையும் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். அது குறித்தே இங்கேயும் அவதானத்தைச் செலுத்தாமல் அங்கே போட்டியிடும் கட்சிகள் என்ன பேசுகின்றன என்பது பற்றி அவதானிக்கலாம்.

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசு கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழர் சமூக ஜனநாயக கட்சி ( ஈ.பி.ஆர்எல்.எப் வரதர் அணி) ஐக்கிய தேசிய கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ள அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளை சிதறடிப்பற்கென இறக்கிவிடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் (வடக்கின் பாஷையில் ஒட்டுக்குழுக்கள்) இப்படி பல அணிகள் களமிறங்கி உள்ளன. இதற்கிடையே “ஆவா” குழுவும் தமது அரசியலை முன்வைக்கும் நிலை வந்துள்ளது.

 

ஒட்டுக்குழு சுயேச்சைக்குழுக்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளுக்கும் ஓர் அரசியல் கொள்கைக் கோட்பாடு இருக்கின்றது எனலாம். ஆனால் எந்தளவு தூரம் அவை மக்கள் நலன் சார்ந்ததாக அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக உள்ளது? அல்லது அதற்கேற்ப இற்றைப்படுத்தப்படுகிறது? அதேநேரம் இளைய சமுதாயத்தை உள்வாங்கி முன்செல்கிறது? என்பதில் பல கேள்விகளை எழுப்புகிறது.

இப்போதைய ஆளுந்தரப்பின் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் அமைச்சுப் பதவி வகித்ததன் மூலம் ஒரு ஆறுதல் அரசியலை வடக்கிலே முன்னெடுத்துள்ளார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லோருமே அரசின் எதிரணி என்று இருந்திருந்தால் அரசாங்கத்தின் சேவைகளை, அபிவிருத்திகளை வடக்கு நோக்கிக் கொண்டு வருவதிலும் வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும். அதனை டக்ளஸ் சரிவர முன்னெடுத்தார் எனலாம். ஆனால் அந்த பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க அவருக்கு அடுத்ததாக வடக்கில் ஒருவரை அவர் வளர்த்தெடுத்திருக்கிறாரா என்றால் அதற்கு பதில் இல்லை. அவரை அடுத்த நிலையில் இருக்கும் எஸ்.தவராசாவும் ஓய்வு வயதை நோக்கிச் செல்கையில் சரிபிழைகளுக்கு அப்பால் டக்ளசின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கப்போவது யார்? இப்போதைய அரசு இனவாதப் போக்கோடு பௌத்த பேரினவாத கருத்தாக்கத்தை புராதன தடயங்கள் மீது கட்டமைக்க உருவாக்கியுள்ள செயலணியில் வடக்கு- கிழக்கு தமிழர் தரப்பில் ஒருவர் இல்லாத நிலையை கூட போக்கும் வல்லமை டக்ளசிடத்தில் இல்லாதிருப்பது வருத்தத்துக்கு உரியது. அவரது அமைச்சரவை பலம் இழக்கப்பட்டால் அடுத்த கட்டத்தில் அல்லது டக்ளசுக்குப் பின் ஈ.பி.டி.பி யின் நிலை என்னவாகும் என்பது பெருங்கேள்வியே.

 

இதே நிலைமையை ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் விஜயகலாவின் எதிர்கால அரசியலும் கேள்விக்கு உள்ளாகிறது. இந்தமுறை ஐக்கிய மக்கள் சக்தியும் களம் இறங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சி வந்தால் அமைச்சுப் பதவியினைக் கொண்டு செய்யக்கூடிய குறைந்தபட்சமும் குறையவே வாய்ப்புள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி க்கு அங்கே தலைமை கொடுக்கும் கணேஷ் வேலாயுதமும் புதியவரல்ல. அவரும் தமிழ்த்தேசிய தரப்புதான்.

அடுத்தது அங்கஜன் தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என சொல்லிக்கொள்ளும் மொட்டு அணி. டக்ளஸ் – விஜயகலா விடக்கூடிய இடத்தை அமைச்சுப்பதவியினூடாக இட்டு நிரப்புவார் என எதிர்பார்க்க கூடியவர். 2018 ல் 52 நாள் அரசாங்கத்தில் இவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த முறை தோல்வி கண்ட பிறகு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தமுறை அந்த வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது மக்களே வாய்ப்பு வழங்குவார்களா எனத்தெரியாது. ஏனெனில் “ ஆவா” குறூப் என அழைக்கப்பட்ட வாள்வெட்டு வன்முறைக் குழு அவருடன் அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.”ஆவா” எனும் சிங்களச் சொல்லின் அர்த்தமே “வந்துவிட்டார்கள்” என்பதுதான்.

 

அவர்களின் தலைவர் என அறியப்படும் அருண் சித்தார்த் இப்போது வடக்கு அரசியலில் பேசு பொருள் ஆகி இருக்கிறார். இப்போது சுமந்திரனுக்கு அடுத்ததாக இவரது உரையாடலே அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர் இருக்கும் இடம் சிக்கலானதுதான் என்றாலும் இவர் பேசும் விடயங்களும் மொழி ஆளுமையும் அவதானத்தைப் பெறுகின்றது. சுமந்திரனைப் பேட்டி கண்டு சர்ச்சையை ஏற்படுத்தி அதே சிங்கள ஊடகவியலாளரான சமுர்தித்தவை அருண் சித்தார்த் எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சுமந்திரனை பேட்டி காணும்போது அவர் அளித்த பதில் நிதானமானது என்றாலும் காரமானதாக இருக்கவில்லை. ஆனால், அருண் நிதானத்துடன் காட்டமாகவும் பதில் அளிக்கிறார். அதுவே அவர் குறித்த அவதானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒருவகையில் சுமந்திரனும் , அருணும் பேசுபொருள் ஆவதற்கு காரணம் என்ன என பார்ப்பதற்கு இந்த கட்டுரையின் இறுதி பந்தியையும் நீங்கள் வாசிக்க வேண்டும்.

அதுதான் “தமிழ்த்தேசியம் எனும் தலைப்பில் உரையாற்றுக” எனும் தலைப்பில் ஒரே வகுப்பின் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி வைப்பதுபோல் மூன்று அணிகள் பேசித் திரிவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (சுமந்திரன் தவிர்த்து), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒன்றாக இருந்து மூன்றாகப் பிரிந்து சண்டை இட்டுக் கொள்கின்றனவே தவிர பேசும் பொருள் ஒன்றையே சுற்றி, சுற்றி வருவதாகவே தெரிகிறது. அவர்களின் சிந்தனையில் மாற்றம் வந்திருப்பதாக தெரியவில்லை. ஆட்களில் மாற்றம் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. மாவை முதல் கஜேந்திரன் வரை எல்லாமே 25 – 50 வருடமாக பார்த்த அதே முகமும் பேச்சும். விக்கினேஷ்வரன் புதிதாக வந்த பழையவர். சமயத்தில் “சண்டையைவிட்டுட்டு அமைதியா இருங்கோ பிள்ளைகள்” என ஆசிரியர் வகுப்பறை மாணவர்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு மக்கள் செல்கின்றனர். ஒரே விஷயத்தையே மக்களிடம் மாறி மாறி முன்வைக்கிறார்கள். இளைய சமூகத்தை நோக்கிய ஒரு மாற்று அரசியலை முன்வைக்க வடக்கில் இளையவர்கள் இல்லையா என்ன ?

இவர்களுக்கு மாற்றமாக அதாவது தமிழ்த் தேசியத்துக்கு மாற்றாகவும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து போட்டியிடும் பேசும் தரப்பாக மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி (சுயேச்சைக் குழு) பறக்கவிடும் பட்டமும் நூலறும் நிலையிலேயே பறக்கிறது. அந்த மாற்று அணியில் கூடவா இளையவர்கள் இல்லை. அந்த அணிசாரந்த கலை – இலக்கிய அமைப்புகளில், கூட்டங்களில் வாய்கிழிய அரசியல் பேசும் இளைய “தோழர்கள்” தேர்தல் காலத்தில் எங்கே ஓடிவிடுகிறார்கள். பாவம் எத்தனை நாளைக்குத்தான் சி.கா.செந்திவேல் இந்த கைவண்டியை இழுப்பார். கம்பியுட்டர் சமூகம் கொஞ்சம் களம் இறங்கினால், அவர்களின், புனிதம் கெட்டுவிடப் போகிறதா என்ன?

இப்படி அரசியல் அல்லாத தளத்தில் அரசியல் பேசிவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போவதால்தான் உங்கள் கவிதைகளுக்கான பாடுபொருட்களாகும் சாதியமும், தமிழ்த் தேசியமும், ஆவா போன்ற வன்முறைகளும் கூட அரசியல் களங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி சுமந்திரன் அளவுக்கு “ஆவா அருண்” பேசுபொருள் ஆவதற்கு அவர்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் நின்று மாறுபட்ட புதிய கருத்துக்களைச் சொல்ல முனைகிறார்கள் என்பதுதான் அர்த்தம். அவர்களது உரைகள், கருத்துகள் மீதான விமர்சனம் இருந்தாலும் அவற்றைத் துணிந்து ஒரு மாற்றுக் கருத்தாக அவர்கள் முன்வைப்பதை மக்கள் பார்க்கிறார்கள்.

மாற்று சிந்தனைகளுடன் வடக்கின் அரசியலை முன்வைக்காது முன்செல்லும் வடக்கின் பெரும்போக்கு அரசியலும் கொரொனாவின் இரண்டாவது அலை போன்றதுதான். அதாவது ஏற்கனவே வந்த கொரொனாவேதான் திரும்பவும் வரும். வடக்கு மக்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
 

http://thinakkural.lk/article/54312

கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.?

1 day 10 hours ago

கொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா.?

sumo-ambi.jpg

கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா?

கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக் கொண்டவர். இவரது தந்தை மற்றும் தாத்தா கொழும்பை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரது தாத்தா ஜிஜி பொன்னம்பலம் அன்றைய காலத்தில் எடுத்த தீர்மானங்கள் அனைவரும் அறிந்ததே.

அதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டிஜி பொன்னம்பலம் தந்தை செல்வநாயகத்தை விட்டு பிரிந்து அரசாங்க அமைச்சராக பதவி ஏற்றமை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது.

அதேபோன்று வடக்கில் முன்னாள் முதல்வர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். கொழும்பில் இருந்து வடக்கு முதலமைச்சராக இறக்குமதி செய்யப்பட்டவர்.  ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் தலைவர்களை விட விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இனஅழிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றாலும் அவரும் கொழும்பின் அல்லது தென்னிலங்கையின் இறக்குமதி என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்.

கொழும்புத் தமிழ் தலைமைகளால் ஆளப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் உச்ச கொடுமையாக  சுமந்திரனின் வருகையை குறிப்பிடலாம்.  சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் அதன் தலைமைக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் சினம் கொள்ள வைத்துள்ளன.

தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டு தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த தலைவரையும் தமிழ் மக்களுக்காக உன்னதமான போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனை கொழும்பில் இருந்து நாம் ஏன் அழைத்து வரவேண்டும்?

அத்தகைய சுமந்திரன் தற்போது அம்பிகாவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றொரு புதிய நபராக அம்பிகா கருதப்படுகின்றார். இவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒருவர்தான்.

இம்முறை தேர்தலில் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் தலைமை முழுமையாக கொழும்பின் கீழ் போகக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது. சுமந்திரனின் வெற்றியுடன் அம்பிகாவும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றால் அது தமிழ் மக்களுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருகின்ற ஒரு விடயமாகும்.

பல்வேறு தியாகங்களின் மத்தியில் மிகப் பெரும் தலைவர்களை உருவாக்கிய வடகிழக்கு மண்ணில் ஏன் சிறந்த அரசியல் வாதிகள் இல்லையா? ஏன் நாம் கொழும்பிடம் கையேந்த வேண்டும்? அல்லது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்?

வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் சில விமர்சனங்களை கொண்டாலும் சிறந்த அறிவை கொண்டவர்களும் அணுகுமுறையை கொண்டவர்களும் உள்ளனர். அப்படி உள்ள நிலையில் நாம் ஏன் தென்னிலங்கையிலிருந்து கொழும்பிலிருந்து அரசியல்வாதிகள் இறக்குமதி செய்ய வேண்டும்?

பிரபாகரன் என்ற வரலாற்றில் அதி உன்னத தலைவன் உருவாகிய மண்ணிலிருந்து ஏன் எம்மால் சிறந்த அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியாது? அனைவரும் சிந்திப்போமாக…

https://www.vanakkamlondon.com/sumanthiran-ambika-13-07-2020/

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன்

1 day 14 hours ago

தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன் 

இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த வேளையிலே தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டி போடுகின்றனர் .தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் இனப்படுகொலை ரீதியாகவோ தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ரீதியாகவோ தமிழர் தலைமை சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்காது சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் இணக்க அரசியலையும் சமரச அரசியலையும் சரியான ராஜதந்திர அணுகுமுறை இன்றி விட்டுக்கொடுப்புகளுடன்  ஆதரவு வழங்கியதன் மூலம் இம் முறை தேர்தலில் இவர்களின் வாக்குப் பலம் குறைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது.

சில பிரதிநிதிகளை இம் முறை இவர்கள் இழப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகின்றது.இவர்களின் வாக்கு வங்கியின் சரிவோடு ஏனைய பல கட்சிகளில் இருந்து இம் முறை சில பிரதிநிதிகள் தெரிவாவதற்கான வாய்ப்புகளும் இருப்பது போல் தெரிகின்றது.ஆயுதப் போராட்டத்தை விமர்சித்தபடி ஜனநாயகப் பாதையை தெரிவு செய்த இவர்கள் சரியான பாதையில் பயணித்தார்களா என்பது கேள்விக்குறி தான்.பேரம் பேசும் பலத்தை நாம் இழந்திருந்தாலும் ஏதோ ஒரு வழியில் தமிழருக்கான நிரந்தர தீர்வுக்கான பாதையை தமிழர் தலைமை தேடவில்லை.

சிங்கள அரசு தாமாகவே முன் வந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தராது என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம்.இருந்த போதும் தேர்தலை பகிஸ்கரிப்பதனாலேயோ ஒதுங்கி இருப்பதனாலேயோ எந்தப் பயனும் இல்லை.மாறாக தமிழர் தரப்பு பல தோல்விகளை சந்தித்ததும் வரலாறு கற்றுத்தந்த பாடமாக நினைத்து பிழைகளில் இருந்து சிலவற்றை கற்றுக் கொண்டு நமது வழியை மீண்டும் தேட வேண்டும்.எது எப்படி இருப்பினும் அந்த மக்களே தான் சரியான தீர்ப்பை வழங்க முடியும்.

எந்தத் தேர்தலையும் விட இம் முறைத் தேர்தலில் தான் தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு போட்டி போடுகின்றனர்.இலக்கு ஒன்றாக இருந்த போதிலும் ஏன் இப்படி பிரிவினை என்று தெரியவில்லை.தேசியம் என்பது சரியோ பிழையோ என்பதற்கு அப்பால் தமிழர் இலக்கு வெல்லும் வரை முற்போக்கு தேசியமாக இது சிதைந்து போகாது சிங்கள மக்களுக்குள் இருக்கும் ஐக்கியம் போல் தமிழர் தரப்பும் ஒற்றுமைப்பட்டிருக்கவேண்டும்.மாறாக இப்போ சிதைந்துபேய் இருக்கிறது.எல்லா இன மக்களிடமும் இல்லாத பெரும் குறை தமிழனிடம் மட்டும் தான் உண்டு. தமிழன் ஒருத்தனால் தான் தன் இனத்தையே தான் இழிவாகப் பேச முடியும்.இது தமிழரின் பெரும் பலவீனம் தான்.

எதையுமே தானாக எந்த உரிமையும் சிங்கள ஆதிக்கம் எமக்குத் தராது .இணக்க அரசியல் செய்தால் என்ன சமரச அரசியல் செய்தால் என்ன ஒன்றுக்குமே இறங்கி வர மாட்டார்கள்.அதற்காகா நாம் போராடாமல் இருக்க முடியாது.பல ஆண்டுகளாக போராடுகிறான் பாலைதீனியன் ஏதோ ஒரு நம்பிக்கையுடன்.சுய உரிமையை வென்று எடுத்த நாடுகளும் உண்டு.சுய உரிமைக்காய் தொடர்ந்து போராடும் மக்களும் உண்டு.

சிங்கள மக்களோடு சேர்ந்து எமது உரிமையையோடு வாழ விருப்பம் தான் ஆனால் அவர்கள் தான் எம்மை மரத்தில் படரும் கொடி என்கிறார்களே.எமக்கு எந்த பாரம்பரிய நிலமும்  சொந்தம் இல்லை என்கிறார்களே.இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்களே.வரலாறுகளை எல்லாம் மாறுபட்டு திரித்து சொல்கிறார்களே.தமிழர் தலைவர் ஐயா சம்மந்தன் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்தாரே இணக்க அரசியலும் செய்தாரே பிரிக்கப் படாத இறைமை மிக்க இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையிலான தீர்வொவோடு சேர்ந்து வாழ்கிறோம் என்றாரே.

தமிழர் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதும் என்கிறார்களே பழையவற்றையும் இனப்பிரசினையையும் மறந்து விடும்படி சொல்கிறார்களே 13+ க்கு மேல் தீர்வு வழங்குவோம் என்று எமக்கும் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் உறுதிமொழி தந்தார்களே தந்தார்களா .உறவுகளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணீரோடு அலைகிறார்களே தமிழ் தாய்மார்.இதற்கு எல்லாம் நீதியை யார் பெற்றுத் தருவார்.

தொடர்ந்தும் நாம் எமது அருகில் இருக்கும் இந்தியாவையே நம்பி வந்தோம் ஆனால் இந்தியாவோ தமது நலன் சார்ந்த வெளி விவகாரக் கொள்கையுடன் இன்று வரை ஈழத்தமிழருக்கான அவர்களின் விருப்பு அடிப்படையில் ஒரு நிரந்தரமான எந்தத் தீர்வையும் பெற்றுத்தரவில்லை.பயங்கரவாததுக்கு எதிரான போர் என்ற இலங்கை அரசின் கவடத்தனமான ராஜதந்திரத்தில் சிக்கி அழிவை சந்தித்த ஈழத்து தமிழருக்கு இந்து சமுத்திரத்தில் பலம் மிக்க நாடக இருக்கும் இந்தியா எதோ ஒரு வழியில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுத் தந்திருக்க இவர்களால் நிச்சியமாக முடிந்திருக்கும்.

13ம் திருத்தத் சட்டம் கூடி இப்போ நீர்த்து போகும் அளவுக்கும் இதை அரசியல் அமைப்பில் இருந்து நீக்குவதற்கும் மக்கள் ஆணையை பெற அரசு முயற்சிக்கிறது.தமிழர்களின் அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் எதற்குமே அசையாது இருக்கிறதே சிங்கள ஆதிக்கம்.அப்போ தமிழர் எப்படி இணக்க அரசியல் செய்வது.

சில தேசம் இந்தியாவால் உருவாகியது .அன்று தந்தை செல்வா கேட்ட சமஸ்டீ தீர்வை இந்தியா எமக்கு பெற்றுத்தர இலங்கை அரசுக்குக்கு அன்று அழுத்தம் கொடுத்து உதவியிருந்தால் இப்படி எல்லாம் சிதறி அழிந்து ஈழத்து தமிழன் போய் இருக்க மாட்டான். எம் வேதனைக்கு எம் அருகில் இருக்கும் இந்தியாவும் ஒரு காரணமே.அவர்கள் தந்த ஆயுதத்தையும் நாம் தூக்கி இருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது அதேபோல் எம் சில தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் நாமம் காரணமாக இருந்திருக்கமாட்டோம்.விட்டு பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சமாதானத்துக்கான பாதையை நேக்கி நாம் மீண்டும் நடக்க வேண்டும்.மீண்டும் இந்திய,சர்வதேசம்,புலம் பெயர் தமிழர் இந்த முக்கோண அரசியல் அழுத்தம் இல்லாமல் தமிழருக்கான ஓர் அரசியல் தீர்வைப் பெறுவது கடினமே.இந்தப் பாதையை இனி வரும் காலங்களில் தமிழர் தலைமை சரியாகக் கையாளவேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் இதிலே எத்தனை பேர் அபிவிருத்தி என்று அரசாங்கத்துடன் சேர்வீர்களோ அமைச்சுப் பதவி எடுப்பீர்களோ அவர்கள் இப்பவே சேரலாம். பாவம்  மக்களின் வாக்கை வேண்டிவிட்டு வாக்குத் தவறாதீர்கள்.உங்களில் சிலர் உங்களை வளர்ப்பவர் எங்களை அல்ல.அதிகாரப் பகிர்வுக்காய் முதலில் உழையுங்கள் அபிவிருத்தியை தொடருங்கள்.அதிகாரம் இல்லாத அபிவிருத்தி எப்பவுமே நிலையாகாது.இது நீதியானதாகவோ மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி ஆக அமையாது அரசியல்வாதிகளும் தனி மனிதர்களும் மக்கள் பணத்தை சுரண்டுவதாகவே அமையும்.அதிகாரப்பகிர்வை மறைப்பதற்காய் அபிவிருத்தியை கையில் எடுக்கும் அரசின் சூழ்ச்சிக்குள் பதவியும் பணமும் வேண்டி உங்களை விற்று விடாதீர்.மக்களே நீங்கள் எந்தச் சமூகத்தினராகிலும் நீதியானவர்களையும் நேர்மையானவர்களையும் மக்கள் சேவை கருதி உழைப்பவர்களை தெரிவி செய்து அனுப்புங்கள்.

செர்பியா இராணுவத்தால் போஸ்னியா சிறு பான்மை இனத்திற்கு எதிரான இனப்படுகொலையை செய்த "போஸ்னியாவின் கசாப்புக்காரன்","Butcher of Bosnia",என்று அழைக்கப்பட்ட Gen. Ratko Mladic என்ற சேர்பியா இராணுவத் தளபதியை யுத்தக் குற்றவியல் நீதி மன்றம் விசாரித்தபோதே போஸ்னியா மக்கள் சார்பில் வாதாடிய சட்வாளர் கூறினார் நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்றார் .(You Can't Have Reconciliation Without Justice)அதேபோல் எந்த நல்லிணக்கமும் எந்த அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்காமல் சாத்தியமாகாது.

சிந்தித்து வாக்களியுங்கள்.அரசியல் என்பது திருடர்களின் கோட்டையாக இருந்தாலும் உங்களால் அதை மாற்ற முடியும்.உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்களுக்கு உதவுபதுபோல் வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.ஏதோ மனிதாபிமார் போல் கன கதை சொல்லி அபிவிருத்தி என்றும் அரசோடு பேசுவோம் என்றும் வருவார்கள் .இருந்தபோதும் மனிதாபிமானத்தோடு உண்மையாக உதவக் கூடியவர்களும் இருக்கிறார்கள்.எது எப்படி இருப்பினும் சரியானவர்களை இனம் கண்டு சரியான பாதையில் போக முயற்சிப்போம்.நிரந்தர அரசியல் தீர்வுக்காய் எல்லா வளிகளிலும் முயற்சிக்கும் நல்லதொரு தலைமையை தெரிவு செய்வோம்.

தமிழ்த் தேசியம் 
தனக்குள் மோதி 
உடைந்ததைப்போல 
சிங்களத் தேசியம் 
ஒரு போதும் 
தமக்குள் மோதாது.

பா.உதயன் ✍️


 

அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது

1 day 17 hours ago
‘அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’  

 

 

image_eeef64c390.jpg

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும்  பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது  பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று,  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6இல்  களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.  

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,   

கேள்வி - கிழக்குப் பல்கலைக்கழகத்திலே கடந்த 30 வருடகாலமாக விரிவுரையாளராகவும் சிரேஷ்ட ‪விரிவுரையாளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றிய கல்வியாளரான தாங்கள் உப வேந்தராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டவர். அவ்வாறிருக்கும் நிலையில் திடீரென அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டதன் காரணமென்ன?

பலரின் வேண்டுகோளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்க நான் இவ்வாறு அரசியலுக்குள் நுழைய நேரிட்டுள்ளது. 

குறிப்பாக பெண்கள் அரசியலிலே ஈடுபட வேண்டும். பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டுவரும் ஒரு நிலையுள்ளது. குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே ஒரு பெண் இதுவரை ஓர் உபவேந்தராக வருவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. 

அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நான் இரண்டு தடவைகள் முயற்சித்தேன். அதில் இறுதி வரை வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் துரதிர்ஷ்டவசமாக அது கைகூடவில்லை. 

ஆயினும் நான் ஒரு கல்வியாளர், புத்திஜீவி எனும் அளவுக்கு அப்பல்கலைக்கழகம் என்னை வளர்த்து விட்டிருக்கின்றது. இதற்கு நான் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு என்ன கைம்மாறு செய்யப்போகின்றேன் என்ற கேள்வி என்னுள் எப்போதும் எழுவதுண்டு. அதன் உந்துதல்தான் நான் ஏன் உபவேந்தராக வரக் கூடாது. வந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஆதங்கம் இருந்தது. 

ஆனால், நான் உபவேந்தராக வரவேண்டும் என்று எதிர்பார்த்தது தனியே எனக்கு ஒரு முகவரி வேண்டும் ஓர் உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 

அதனால், நான் உபவேந்தராக வந்து, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளைப் புரிவதை விட அரசியல் பலத்தோடு கூடிய எல்லையற்ற சேவைகளைச் செய்ய முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த அரசியல் நுழைவு அமைந்தது. 

அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலம், எங்களுக்கு இல்லை. அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலம் என்பது, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருப்பது அல்ல. அபிவிருத்தி சிந்தனைகளோடு சார்ந்த அரசியல் பலம் எமக்கு இருந்திருக்குமாக இருந்தால் கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ எண்ணிலடங்கா அபிவிருத்திகளை நாம் அடைந்திருக்க முடியும். 

ஆகவேதான் அரசாங்கத்தோடு சேர்ந்த அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலத்தோடு ஏன் நான் முயலக் கூடாது என்று. சிந்தித்தேன். 

கேள்வி - நீங்கள் கூறும் அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலத்தைப் பெறவேண்டும் என்பதற்காக கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ற கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

ஆம், நாங்கள் பார்க்கின்ற பெரிய கட்சிகள், கூட்டைமப்பு இப்படியான கட்சிகளைப் பற்றிப் பல கேள்விகள் ஐயப்பாடுகள், பெண்கள், இளைஞர்கள் மத்தியிலே விரக்திகள் உள்ளன. 

இந்த விரக்தி மக்களுக்கு அரசியலில் உள்ள ஆர்வத்தையும் வாக்களிக்கத் தேவையில்லை என்ற அவநம்பிக்கையையும் குறைத்து விடுமோ என்கின்ற பயம் இருந்தது. 

இவ்வேளையில் என்னைப் பல கட்சிகள் அணுகின. ஆனாலும் தமிழர் எனும் தனித்துவம் பற்றி நான் மிகக் கவனமாக இருந்தேன். தமிழர் எனும் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்காமல் அரசியல் பலத்தைப் பெற்று அரசாங்கத்தோடு இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்ளப் பேரம் பேசும் சக்தியாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனைக்கேற்ப ஆதியிலிருந்து தமிழர்களால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி. அக்கட்சி தமிழரின் உரிமைக்காகப் போராடும் ஒரு கட்சி. அதனால்தான் நான் உதய சூரியன் சின்னத்தைக் கொண்ட கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் இணைந்து கொண்டேன். 

எதிர்க்கட்சியிலே இருந்து எதுவும் முடியாது என்பதை நாங்கள் பல தசாப்த காலங்களாகக் கண்டு வந்திருக்கின்றோம். 

கேள்வி - மட்டக்களப்பில் அரசியலுக்கூடாக எதனைச் சாதிக்கலாம் என நினைக்கிறீர்கள்?

இது நல்லதொரு கேள்வி. நிச்சயமாக மட்டக்களப்பை எடுத்துக் கொண்டால், இங்கு கல்வித் தரம் மிகவும் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது. 

52.3 சதவீதம் பெண்களைக் கொண்ட மாவட்டம் இது. பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை அனுபவிக்கும் மாவட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் விதவைகள் அதிகம். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எண்ணிக்கையில் அதிகம். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த மாவட்டத்தில் அதிகம். 

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம்.  காணாமலாக்கப்பட்டோரில் தங்கி வாழும் பெண்கள் அதிகம். அத்தோடு இளம் பெண்கள் மத்தியிலே பலவிதமான சமூக கலாசாரப் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறிப்பாகத் தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள் உள்ள மாவட்டம். 

ஆகவே பெண்கள் சம்பந்தமான கண்டு கொள்ளப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு இருக்கிறது. 

எனவே, இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முடிவு கண்டாக வேண்டும். அப்படியாக இருந்தால் இந்த மாவட்டத்தின் சார்பாக ஒரு பெண் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலே இருக்க வேண்டும். 

இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பும் இங்கே பாராமுகமாக இருக்கின்றது. இந்த விடயங்கள்தான் நான் மாற்றம் காண வேண்டும் என்று அவாவுறும் என்னுடைய முக்கியமான நிகழ்ச்சி நிரலில் உள்ளன. 

வேலைவாய்ப்பை எப்படிக் கொடுக்கலாம் என்று ஆராயும்போது எங்களுடைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அதனை மூலதனமாகக் கொண்டு என்னுடைய நிபுணத்துவத்தைப் பிரயோகித்து பலவிதமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்பொழுது நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியதொரு மாற்றத்தைச் சாதித்துக் காட்ட முடியும். 

கேள்வி - மட்டக்களப்பில் கல்வித் துறையிலும் நிர்வாகத் துறையிலும் பெண்கள் உயர் பதவிகளில் கோலோச்சுகிறார்கள். ஆனால் அரசியலில் அவ்வாறு இல்லையே?

ஆம்! அது உண்மை. பெண்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணமாகும். இது எனக்கு மிகவும் வேதனையையும் சீற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விடயமாகும். 

தமிழர் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால், மட்டக்களப்பிலே ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாகப் பெண்களை ஒரு பிரதிநிதியாக, ஒரு வேட்பாளராக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. 

மக்கள் மத்தியிலே நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்சி, பெண்கள் பற்றி ஏன் அக்கறை கொள்ளவில்லை? அவர்களைப் பார்த்து நான் கேட்கின்றேன், நீங்கள் பெண்களைப் புறக்கணிக்கின்றீர்களா அல்லது ஆணாதிக்கமா அல்லது உங்களால் முடியாமற்போன காரியங்களைப் பெண்கள் சாதித்துக் காட்டி விடுவார்கள் என்ற பயமா என்றும் எனக்குக் கேட்கத் தோன்றுகின்றது. 

கூட்டமைப்பு மட்டுமல்ல மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டவில்லை. நீங்கள் கூறியதுபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலே மாவட்டச் செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற அதேவேளை மற்றுமுள்ள பல கூட்டுத்தாபன திணைக்களங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இருக்கும்போது, ஏன் அரசிலுக்குள் அதிகார முடிவெடுக்கும் அந்தஸ்தில் பெண்களைக் கொண்டு வருவதற்கு இக்கட்சிகள் அக்கறை காட்டவில்லை.? 

கூட்டமைப்பிலே சில வேட்பாளர்கள் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுகின்றார்கள். அவ்வாறானவர்கள் கடந்த 30 வருட அரசியலிலே என்ன சாதித்தார்கள் என்பது விடை காண முடியாத பெரிய கேள்வியாகும். 

அல்லது அவர்களது கல்விப் புலம், அவர்களது மொழியாற்றல், உலக நடப்புகள், உள்ளூர் நடப்புகள் பற்றிய அறிவு இவையெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள். அரசியலிலே அவர்களுடைய பங்குதான் என்ன? பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே அவர்களின் பங்கு என்ன? 

ஆகவேதான் நான் இடித்துரைக்கின்றேன். இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும். 

கேள்வி - நீங்கள் கூறும் இவ்வாறான பால்நிலைப் பாகுபாடுகள் வேரூன்றியிருக்கின்ற அரசியலுக்குள் நுழைந்து நீங்கள் அதனை முறியடித்து எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரலாம் என நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக இதை முறியடித்து மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதற்குத் துணிவுள்ள பெண்கள் முன்வரவேண்டும். நீங்கள் சொன்னதுபோல எங்களுடைய கலாசார பண்பாட்டு விடயங்களைப் பார்க்கின்றபோது குறிப்பாக தமிழ்ப் பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவதென்பது மிகவும் அசாதாரண விடயமாகும். 

ஆனால் அந்தச் சவால்களை என்னால் எதிர்கொள்ள முடியும். காரணம் என்னவென்றால் முதலாவது என்னிடமுள்ள சேவை மனப்பான்மை. அதனால்தான் நான் எனது எஞ்சியிருக்கும் பல்கலைக்கழக உயர்பதவிகளைத் துறந்துவிட்டு சவால் நிறைந்த அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றேன். இது எனது தியாகத்தின் அடிப்படையில் இடம்பெற்றதாகும். 

அடுத்தது, எனது சவால்களை எதிர்கொள்ளும் எனது மனத்துணிவு. 

நான் ஒரு தமிழ்ப் பெண்ணாக அவ்வளவு வலிகளைச் சுமந்தவள் என்கின்றபடியால் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள எந்தக் கணப்பொழுதும் நான் தயார்.

நான் கல்விப் பின்புலத்தில், அதிகார மட்டத்தில், கடந்து வந்த போர்ச் சூழலில் எத்தனையோ வலிகளைச் சுமந்து, எதிர் நீச்சலடித்து வந்துள்ளேன். இவை எல்லாம் எனக்கு உரம் சேர்த்துள்ளன. உந்துகோலாகப் பெரிய சக்திகளாக இருந்துள்ளன. 

ஆகவே, பெண் பிரதிநிதிகள் என்று வருகின்றபொழுது, பலவிதமான பிரச்சினைகள், சவால்கள் வருகின்றன. அவற்றை எதிர்கொள்ள மனத்துணிவு வேண்டும். 

நிச்சமாக இவ்வாறான எந்தச் சவால்கள் இனி எதிர்காலத்திலும் என்னை எதிர்கொண்டாலும் அவற்றை நேரெதிரே நின்று நான் முறியடித்துக் காட்டுவதுமட்டுமல்ல ஒரு பெண்ணால் இந்தக் கிழக்கு மாகாணத்திலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைச் செயலில் நிரூபிப்பேன். 

கேள்வி - இந்தத் தேர்தலிலே வெற்றி வாய்ப்புக் கிடைத்து, நாடாளுமன்றம் பிரவேசித்தால் எவற்றை முக்கியத்துவப்படுத்துவீர்கள் ?

முதலில் கிழக்கிலிருந்தும் தமிழர்கள் மத்தியிலே பன்மொழி ஆற்றல் கொண்ட ஆளுமையுள்ளவர்கள், நிபுணத்துவம் நிறைந்தவர்கள், துணிச்சலானவர்கள், தியாக மனப்பான்மை கொண்டவர்கள், நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் நாடாளுமன்றம் நுழைந்துள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன். சொந்தக் காலில் நிற்க முடியும் என்பது அங்கு நிரூபணமாகும். வெளியாரைத் தங்கியிருக்கும் நிலை இல்லை என்று உறுதிப்படுத்தும் செயற்றிட்டங்களை அமலாக்குவேன். ஒட்டுமொத்தமாக, கிழக்குத் தமிழர்கள் தலைநிமிர நான் வழிவகை செய்வேன். 

ஏன் நான் இதனைச் சொல்கின்றேன் என்றால், வெளிநாட்டிருந்து தூதுவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட வரும்போது, அவர்கள் தமிழர்களைச் சந்திக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் வடக்குக்குத்தான் அனுப்பப்படுகின்றார்கள். ஏன் கிழக்கிலே தமிழர்கள் வாழவில்லையா? கிழக்கிலே மக்களின் பிரதிநிதிகள் இல்லையா? கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்படவில்லையா? 

ஆகவேதான் நான் சொல்லுகின்றேன் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை வெளியுலகின் கண் திறக்கப்படும்படியாக நிரூபித்துக் காட்ட வேண்டும். 

கிழக்கின் அபிவிருத்தி அதையும் செயல் ரீதியாக நிரூபித்துக் காட்டுவேன். 

கேள்வி - நீங்கள் இவற்றையெல்லாம் கோடிட்டுக் காட்டினாலும் பல்லின மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திலும் நீங்கள் களமிறங்கியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் அடிக்கடி இனவாத சிந்தனைகள் தூண்டி விடப்படுவதால் அழிவுகளும் அமைதியின்மையும் அவ்வப்போது ஏற்படுகின்றன. அதனைக் கையாள என்ன வழி?

நான் இவ்விடத்தில் உதட்டளவில் கூறாமல் உள்ளத்திலிருந்து கூறுகின்றேன், பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட முடியாத எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. 

உணர்வுகளை உசுப்பேற்றக் கூடிய இவ்வகையான இன முறுகல்களைப் பார்க்கின்றபோது இவை மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டும். எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் மனத்தூய்மையோடு நோக்கப்பட வேண்டியவை. 

இதற்கு நாங்கள் தெரிவு செய்கின்ற அரசியல்வாதிகளிடம் இத்தகைய மனத்தூய்மை இருக்க வேண்டும். 

பிரச்சினையில் யார் சிக்கியிருந்தாலும் சிக்க வைக்கப்பட்டாலும் பொதுவாக மனிதர்கள் என்கின்ற வகையில் மனிதர்களை நாம் மனிதாபிமானத்தோடு மதித்து அணுக வேண்டும். 

அப்படி இருந்தாலும் இனக் கலகங்களை இலகுவாகத் தீர்த்து, அமைதியையும் அபிவிருத்தியையும் அச்சமில்லாத ஆக்கபூர்வ வாழ்வையும் தோற்றுவிக்கலாம்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியலுக்குள்-பெண்கள்-புகுவதை-ஆணாதிக்கமே-முடக்குகிறது/91-253071

வடக்கின் களம் யாருக்கு பலம்?

1 day 22 hours ago
வடக்கின் களம் யாருக்கு பலம்?
July 12, 2020
  • தாயகன்

ற்றுத் தணிந்திருந்த கொரோனா மீண்டும் வெளிக்கிளம்பி நாட்டை அச்சுறுத்தத் தொடங்கியுள்ள போதும் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தீவிர தேர்தல் பிரசார யுத்தத்தில் களமிறங்கியுள்ளன . வழக்கம் போலவே இம்முறையும் சிங்கள இனவாதம், தமிழ் இனவாதம்,முஸ்லிம் இனவாதம் என்ற ஆயுதங்கள் மூலமே தேர்தல் பிரசார யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என்று கூறுவதை தவிர்த்து தமது எதிரிக்கட்சிகள் மீது வசைபாடும்,சேறுபூசும் குற்றம்சாட்டும் பிரசாரங்களும் அதிகளவில் இடம்பெறுவதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நடக்கப்போகும் தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் வடக்கு,கிழக்கு மக்களுக்கு இந்த தேர்தலில் ஆர்வம் இல்லை என்ற விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய விடயம் உண்மையே .இந்த தேர்தல் பிரசார யுத்தத்தில் வடக்கு மாகாண கள நிலைவரமும் கவலைக்கிடமாகவே உள்ளது.

 

no-01-1024x683.jpgதேர்தல்கள் ஆணையாளர் கூறியதுபோல் இந்த தேர்தலில் வடக்கு,கிழக்கு மக்களுக்கு குறிப்பாக வடக்கு மக்களுக்கு ஆர்வம் இல்லாதபோதும் ஆர்வம் உள்ள மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இங்கு வழக்கத்துக்கு மாறாக இம்முறை கட்சிகளுக்கிடையில் கடுமையான தேர்தல் போட்டி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரசார யுத்தத்தில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய இரு பிரதான கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.

 

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்-கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டம்,வன்னி தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டங்களே உள்ளன. இதில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 28 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

no-02-1024x683.jpgஇந்த இரு மாவட்டங்களுக்குமான 13 ஆசனங்களை தமதாக்கிக் கொள்வதற்காகவே 735 வேட்பாளர்கள், 858872 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக களமிறங்கி பிரசார சமராடி வருவதனால் இம்முறை வடக்கு மாகாணத்தில் வாக்குகள் சிதறப்போகும் நிலையும் இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சில உறுப்பினர்களுக்கு இம்முறை அவர்களின் ஆசனங்கள் பறிபோகும் கள நிலைவரத்தையும் வடக்கில் காண முடிகின்றது.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலிருந்து 13 பேர் பாராளுமன்றம் சென்றனர். இதில் 11 பேர் தமிழ் கட்சிகளை பிரதிநிதிதித்துவப்படுத்திய தமிழர்களாகவும் இருவர் இரு பிரதான சிங்களக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம்களாகவும் பாராளுமன்றம் சென்றனர். இதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ் -கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 பேரும் சிங்களக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியான ஈ.பி.டி.பி.யிலிருந்து ஒருவருமான 7 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 4 பேரும் சிங்களக்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து முஸ்லிம் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து முஸ்லிம் ஒருவருமென 6 பேரும் பாராளுமன்றம் சென்றனர்.

no-03-1024x683.jpgவடக்கு தேர்தல் களத்தில் கடந்த முறை களமிறங்கிய அதே அரசியல் கட்சிகள் இம்முறையும் களமிறங்கியிருந்தால் வாக்குகளும் சிதறியிருக்காது.தேர்தல் முடிவுகளும் மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால் இந்த பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற புதியதொரு கட்சி பலமானதொரு மாற்று அணியாக களமிறங்கியுள்ளதே வடக்கில் கடும் தேர்தல் போட்டியொன்றை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் களமிறக்கத்தால் இதுவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அடைமொழியைப் பயன்படுத்தி தமது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்து வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்தான் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்த மக்கள் பலமுள்ளவர்களின் கட்சியாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இருப்பதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே யாழ்,வன்னி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்த சிலரின் பாராளுமன்ற ஆசனங்கள் பறிபோகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

no-04-1024x683.jpgஅதேவேளை வடக்கில் போட்டியிடும் ஏனைய கட்சிகளுக்கென்றுள்ள வாக்கு வங்கிகள் குறிப்பாக ஈ.பி.டி.பி ,ஐ,தே.க., ஸ்ரீல .சு.க., பொதுஜன பெரமுன ஆகியவற்றின் வாக்கு வங்கிகளும் இக்கட்சியின் வரவினால் சரியக்கூடிய கள நிலையும் உண்டு. இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் தலைவர்களான சிலர் மீதும் கொண்ட வெறுப்பின்,வேதனையின் காரணமாக மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களித்து வந்த மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான மாற்று அணியாக களமிறங்கும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய சூழலும் காணப்படுவதனால் இக்கட்சிகள் வாக்கு வங்கிகளும் சரிவை சந்திக்கலாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.ஸ்ரீதரன் 72058 வாக்குகளையும் மாவை சேனாதிராஜா 58782வாக்குகளையும் எம்.ஏ .சுமந்திரன் 58043 வாக்குகளையும் த .சித்தார்த்தன் 53740 வாக்குகளையும் ஈ.சரவணபவன் 43289 வாக்குளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவாகினர் .அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் 13071 வாக்குகளையும் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா 16399 வாக்குளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.no-05-1024x683.jpg

இதேபோன்று வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் 34620 வாக்குகளையும் செல்வம் அடைக்கலநாதன் 26397 வாக்குகளையும் சிவசக்தி ஆனந்தன் 25027 வாக்குகளையும் சிவமோகன் 18412 வாக்குளையும் பெற்ற அதேவேளை ஐ.தே .க.வில் போட்டியிட்ட ரிசாத் பதியுதீன் 26291 வாக்குளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் 7298 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

இதில் முதலில் யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை கவனத்தில் எடுத்தால் கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பு 5 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் இம்முறை அதில் 2 ஆசனங்களை இழக்க வேண்டிய கள நிலைவரம் உள்ளது.

ஏனெனில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 2013 ஆம் ஆண்டு களமிறங்கிய சி.வி.விக்னேஸ்வரன் 1,32,255 விருப்பு வாக்குகளைப்பெற்றிருந்தார். அதே கட்சியில் போட்டியிட்ட அனந்தி சசிதரன் 87,870விருப்பு வாக்குளைப் பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அருந்தவபாலன் 42 925வாக்குகளைப் பெற்று ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்தார்.அதேவேளை சுரேஷ் பிரேமச்சந்திரனும் கூட்டமைப்பில் போட்டியிட்டு 25000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நான்கு பேரும் இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ளதால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரிய வாக்குகள் பிரிந்து குறைந்தது 2 ஆசனங்களை அது இழக்கும் நிலைமையில் உள்ளது.

அதேபோன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை உள்ளது. ஏனெனில் கடந்த தேர்தலில் இக்கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான 4 பேரில் 25027 வாக்குளைப் பெற்று மூன்றாவது இடத்திலிருந்த சிவசக்தி ஆனந்தன் இம்முறை விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் களமிறங்கி உள்ளார். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியிலும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலையுள்ளது.

எனவே வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 13 ஆசனங்கள் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 9 ஆசனங்களைப் பெற்றிருந்தபோதும் இம்முறை அது 6 ஆகக் குறைவடைவதுடன் அந்த 3 ஆசனங்களையும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்றுக்கொள்ளும் களநிலைவரமே உள்ளது. ஏனைய 4ஆசனங்களையும் ஈ.பி.டி.பி.,ஐ.தே .க.,பொதுஜன பெரமுன பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 207577 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 30232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி 20025 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17309 வாக்குகளைப்பெற்றிருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று சக்தி தாமே எனக் கூறிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் [தமிழ் தேசிய மக்கள் முன்னணி] 15022 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

அதேவேளை வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு 89886 வாக்குகளைப்பெற்று 4ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 39513 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 120965 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன. இந்த ஆசனங்கள்,வாக்குகளின் எண்ணிக்கையிலேயே இம்முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதன் மூலம் தமிழ்தேசியக்கூட்டமைப்பே அதிக நெருக்கடியை சந்திக்கவுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதிலுள்ள பங்காளிக்கட்சிகளின் சண்டை,வெளியேற்றங்களினால் அது பலவீனமடைந்து நிலையில் உள்ளது. அத்துடன் அக்கூட்டமைப்பின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தற்போது உட்கட்சிப் பூசல்களினால் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அதிலுள்ள ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான,தமிழ்மக்களை விசனமடைய வைத்த கருத்துக்கள்,செயற்பாடுகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவமோ அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவமோ இதுவரையில் அவ்வாறானவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையே இவ்விரு கட்சிகள் மீதும் தமிழ் மக்களை அதிருப்தி கொள்ள வைத்துள்ளன. இந்த அதிருப்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வெளிப்படுமா?
 

http://thinakkural.lk/article/54109

ஆளுமையா? அனுதாபமா?

2 days 22 hours ago

 

ஆளுமையா? அனுதாபமா?

- கௌரி நித்தியானந்தம்

“உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத்திலும் இறக்கப்படுகிறார். இதுவே அரசியலில் பெண்களின் இன்றைய நிலை.

இலங்கையில் கடந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பன்னிரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே குறிப்பிடத்தக்களவு கல்வியறிவைக் கொண்ட தொழில் சார் வல்லுநர்கள் ஆவர். இதில் எவருக்கும் எதிராக ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இருப்பினும் இலங்கை அரசியலில் பெண்களுக்கு உரிய இடத்தையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொள்ள நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக இலங்கையில் நான்கில் ஒரு பங்கு சனத்தொகையைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிலிருந்து கடந்தமுறை தெரிவுசெய்யப்பட்ட 42 பிரதிநிதிகளுக்குள், இருவர் மாத்திரமே பெண் பிரதிநிதிகள் ஆவர். இது மொத்த சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானதாகும்.

குறித்த இரு பெண்களும் கூட வடக்கிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். முந்தைய காலங்களில் கிழக்கிலிருந்து பேரியல் அஷ்ரப் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த அஞ்சான் உம்மா ஆகியோர் முஸ்லிம் தரப்பு பெண் பிரதிநிதிகளாக இருந்திருந்தாலுமே மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதிதுவப் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வாக்காளர்களில் ஐம்பத்தியாறு வீதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்களைக் கொண்டிருந்தும் சிறுபான்மையினரின் பிரதான கட்சிகள் எவையும் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமைக்குப் பிரதான காரணமாக பெண்களுக்கு யாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இங்கே "பெண்களுக்கு யாரும் வாக்குப் போடமாட்டார்கள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த 44 சதவீத ஆண் வாக்காளர்கள் மட்டுமல்ல 56 சதவீத பெண் வாக்காளர்களையும் சேர்த்துத் தான்.

இருந்தும் முன்னைய காலங்களைப் போலல்லாது தற்போது பல கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்குக் குறித்தளவு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு வருவதக் காணலாம். அப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தெரிவு செய்யப்படும் சொற்பமான பெண்களைக் கூட வெல்லவைக்க முடியாதளவுக்கு வாக்காளர்களின் தெரிவுகள் இருக்கும் பட்சத்தில் இங்கே பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்துவதாலோ கட்சிகளில் பாதியளவு பெண் வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லிக் கேட்பதாலோ எதுவுமே ஆகிவிடப்போவதில்லை. எந்தவொரு கட்சியுமே உள்ளுக்குள் ஆண், பெண் என வேறுபாடு காட்டினாலுமே தேர்தல் களம் என்று வரும்போது இவையெல்லாவற்றையும் தாண்டி கட்சியின் வெற்றி - தோல்வி என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும்.

எனவே, அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் தமக்கு அதிக பெண்களின் வாக்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஒரு நிலை வரும்போது நிச்சயமாக எந்தவொரு கட்சியுமே கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெண்களை அதிகளவில் களமிறக்கத் துணிவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாம் கட்சிக்குப் போடும் மூன்று வாக்குகளில் குறைந்தது ஒரு வாக்கையேனும் ஒரு பெண்ணுக்குப் போடும் பட்சத்தில் அது, குறித்த பெண்ணின் வெற்றிக்கும் சேர்த்து வழிவகுக்கிறது.

பெண்களுக்குத் தைரியம் இருந்தால், மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தனித்து நிற்பது தானே... எதற்காகக் காலாகாலமாக ஆண்களால் கட்டியெளுப்பப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட கட்சிகளது நிழலுக்குப் போட்டியிடவேண்டும் என்று கேட்டால், இலங்கையின் விகிதாசாரத் தேர்தல் முறையானது பிரதானமாகக் கட்சி அரசியலுக்கே சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக சுயேச்சையாகக் களமிறங்குபவர்களின் வெற்றி எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை விளங்குவதற்கு முன்னர் ஒரு தேர்தல் மாவட்டத்தின் ஆசனப்பங்கீட்டு முறையைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகிறது.

உதாரணத்துக்கு யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய 7 ஆசனத்துக்காக அங்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில் இம்முறை 360,000 வாக்குகளே வழங்கப்படுவதாக எடுகோளாக வைத்துக்கொண்டால், அதனை வைத்து மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே எவ்வாறு ஆசனங்கள் பகிரப்படுகின்றன என்று இங்கே பார்க்கலாம்.

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் - 360,000
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 20,000
செல்லுபடியான வாக்குகள் - 340,000

குறித்த மாவட்டத்தில் A, B, C, D, E, F, G, H ஆகிய எட்டுக் கட்சிகள் மாத்திரமே போட்டியிடுகின்றன என்று வைத்துக் கொண்டு, அக்கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் கீழே தரப்படுகின்றன.

A - 175,000
B -  50,000
C -  32,000
D -  24,000
E -  19,000
F -  16,000
G - 14,000
H -  10,000

இங்கு ஏழு ஆசனங்களில் முதலாவது ஆசனமாகிய 'போனஸ்' ஆசனம், மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் வழங்கப்படும் இத்தகைய 36 போனஸ் ஆசனங்கள், 9 மாகாணங்களுக்கும் சரிசமமாகப் பங்கிடப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களும் தலா நான்கு ஆசனங்களைப் பெறுகின்றன.

பின்னர் இந்த போனஸ் ஆசனங்கள், ஒவ்வொரு மாகாணங்களுக்குள்ளே காணப்படும் தேர்தல் மாவட்டங்களுக்கிடையே பங்கிடப்படும்போது யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மட்டக்களப்பு, திருகோணமலை, நுவரேலியா, மாத்தளை போன்ற தேர்தல் மாவட்டங்கள் தலா ஓர் ஆசனத்தையும் வன்னி தேர்தல் மாவட்டம் மூன்று போனஸ் ஆசனங்களையும் ஏனைய தேர்தல் மாவட்டங்கள் அனைத்தும் தலா இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொள்கின்றன.

இங்கே யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் என்பது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும், வன்னி தேர்தல் மாவட்டம் என்பது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. எனவே, வட மாகாணத்துக்குரிய நான்கு போனஸ் ஆசனங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு ஒன்றும் வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு மூன்றுமாகப் பங்கிடப்படுகின்றன.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி A ஆனது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குரிய ஒரு போனஸ் ஆசனத்தை முதலில் பெற்றுக்கொள்கிறது.

அடுத்ததாக, மொத்த வாக்குகளில் 5% என்ற வெட்டுப்புள்ளிக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சியின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

இதனடிப்படையில் (360,000x 0.05 = 18,000) பதினெண்ணாயிரத்துக்குக் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் F,G,H ஆகியன பெற்றுக்கொண்ட மொத்தமான 40,000 வாக்குகள் கணக்கெடுக்கப்படாது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் இவை கூட ஒருவகையில் செல்லுபடியற்ற வாக்குகளாகவே கருதப்படுகின்றன. இது உண்மையாக வாக்காளர் அளித்த 20,000 செல்லுபடியற்ற வாக்குகளைவிட எண்ணிக்கையில் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது போனஸ் ஆசனம் தவிர்த்து மீதம் உள்ள 6 ஆசனங்கள், மீதி ஐந்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரிக்கப்படும். தொடர்ந்து போட்டியில் இருக்கும் கட்சிகளான A, B, C, D, E ஆகியன பெற்ற மொத்த வாக்குகள் (175,000+ 50,000+ 36,000+ 20,000+ 19,000 = 300,000) மூன்று இலட்சம் ஆகும்.

எனவே, ஓர் ஆசனத்தைப் பெறத் தேவையான வாக்குகள் (300,000/6 = 50,000) ஐம்பதினாயிரம் ஆகும். இதன்படி ஆசனப் பங்கீட்டின் முதல் சுற்றில் 50,000 வாக்குகளுக்கு ஓர் ஆசனம் வீதம் வழங்கப்பட்டு, மீதியுள்ள வாக்குகள் இரண்டாம் சுற்று ஆசனப் பங்கீட்டுக்குச் செல்லும்.

இதன் அடிப்படையில் முதல் சுற்றில் கட்சி A ஆனது 3 ஆசனங்களைப் பெற்று (175,000- 150,000= 25,000) மீதியாக இருபத்தியையாயிரம் வாக்குகளைப் பெறும் அதேவேளை, கட்சி B ஆனது  1 ஆசனத்தையும் (50,000-50,000= 0) மீதியாக எந்த வாக்குகளையும் கொண்டிராது. ஏனைய C, D, E கட்சிகளுக்கு 50,000 வாக்குகள் இல்லாததால் முதல் சுற்றில் ஆசனங்கள் எதுவும் கிடைக்காது. இருந்தும் அவர்களின் வாக்குகள் மீதியாகக் கணிக்கப்பட்டு இரண்டாம் சுற்றில் போட்டி போடும்.

இதுவரை கட்சி A க்கு ஒரு போனஸும் மூன்று ஆசனங்களுமாக நான்கு ஆசனங்களும் கட்சி B க்கு ஓர் ஆசனமுமாக மொத்தமாக 5 ஆசனங்கள் வழங்கப்பட்டுவிட்டன. எனவே தற்போது மொத்த ஏழு ஆசனங்களில் (7-5= 2) இரண்டு ஆசனங்களே மீதம் உள்ளன. இவையிரண்டும் இரண்டாம் சுற்றில் பகிரப்படும்.

இரண்டாம் சுற்று (மீதி வாக்குகள்)

A - 25,000
B - 0
C - 32,000
D - 24,000
E - 19,000

இதன் அடிப்படையில் மீதி வாக்குகள் அதிகம் உள்ள முதல் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனம் வீதம் வழங்கப்படும்.

C - 32,000 ஓர் ஆசனம்
A-  25,000 ஓர் ஆசனம்

இறுதி முடிவு

கட்சி A - 1+3+1= 5ஆசனங்கள்
கட்சி B -    1+0= 1 ஆசனங்கள்
கட்சி C-      0+1 = 1  ஆசனம்
கட்சி D-      0+0= 0 ஆசனம்
கட்சி E-      0+0 = 0 ஆசனம்

இங்கே பல கட்சிகள் போட்டி போடும் சந்தர்ப்பங்களில் வாக்குகள் பிரிவடைந்து செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது. இதில் பலர் ஐந்து சதவீத வாக்குகளைக் கூடப் பெற முடியாத சூழ்நிலை காணப்படுமாயின் அவை செல்லாத வாக்குகளாகவே ஆகிவிடக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே தான் பெரும்பாலான வாக்காளர்கள் தமது வாக்குகளை வெற்றிபெறக்கூடியது என்று கருதப்படும் கட்சிகளுக்கே அளித்து வருவதைக் காணலாம். இது சிறுபான்மையினரின் பலத்தை ஒருங்கிணைப்பதாகக் கருதினாலுமே பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலில் ஆசன வாய்ப்பைப் பெறுவதற்காக வெற்றிபெறக்கூடிய நிலையிலிருக்கும் குறித்த பிரதான கட்சியிலிருக்கும் அடிமட்ட உறுப்பினர்கள் ஏற்கெனவே ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்குப் போடும் கும்பிடுகளையும் ஜால்ராக்களையும் உள்ளே சென்று பார்த்தால், தன்முனைப்புள்ள எந்தப் பெண்ணுமே அரசியலுக்கு வரத் துணிய மாட்டார்கள். அப்படியும் அடித்துப்பிடித்து வரத்துணியும் பெண்களைக் கூட இன்னொரு பெண் வாக்காளரே தமது வாக்கை அளிக்காமல் துரத்திவிடும்போது அந்தப் பெண்கள் எங்கே தான் போவார்கள்?

இங்கே தான், 'ஆண்களின் நிழலில் எதற்காகப் பங்கு கேட்கவேண்டும்?, பெண்கள் தமக்கொரு கட்சியை ஏன் உருவாக்கக்கூடாது?' என்றொரு கருத்து என் முன்னால் சென்ற வருடம் வைக்கப்பட்டபோது, இதுவரையில் ஒருவரின் ஆளுமையின் மீது மட்டுமே நம்பிக்கைவைத்து, பாலினப் பாகுபாட்டைப் பற்றியெல்லாம் அதிகம் பேசியிராத எனக்கு இக்கருத்து அர்த்தமற்றதாகத் தெரிந்தது. ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பெண்களின் தெரிவுகளை அந்தப் பாதையை நோக்கியே மீண்டும் மீண்டும் கைகாட்டத் துணிவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவே தெரிகிறது. இதனைத் தடுக்க வேண்டுமெனில் கட்சி எதுவாக இருந்தாலும் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் பெண்களுக்குக் கொடுங்கள். அவர்கள் உங்களுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறார்கள். எமக்குள் இனம், மதம், சாதி என்று பிரிந்து நின்றது போதும். இப்போது பாலினப் பாகுபாட்டைக் காட்டி மேலும் சிறு கூறுகளாகப் பிரித்து வைக்காமல், பெண்களுக்குரிய இடத்தை அவர்களுக்கு முறையாக வழங்குங்கள். மதிப்புடன் வாழவிடுங்கள். அதற்கு அனுதாபமோ ஆளுமையோ, இல்லை அதற்கும் மேலாக சாகோதரியாக, தாயாக, நண்பியாக, நலன்விரும்பியாக அன்புடனோ உங்கள் வாக்கில் ஒன்றை மறக்காமல் கட்டாயமாக அவளுக்குப் போடுங்கள். அது போதும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆளுமையா-அனுதாபமா/91-253026

புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்

2 days 22 hours ago
புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்
July 12, 2020
  • நிலாந்தன்

 

மெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”.

இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; ; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா ? என்று கேட்கத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை? அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர்தான் கூறவேண்டும்.

 

jaffna-elections.jpg

கடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் இராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன்; அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”…..

அங்கஜன் யார்? எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார்? அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா?

கிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவது யாருடைய வெற்றியை?

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும்; தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா? ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா? அவ்வாறு கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா? அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும்; இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா?

ஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம்; அது ஒரு செயல்; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; ;அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கும்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும்.

ஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி.

அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் ? இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு ?

இதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா? அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம்; அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உரிய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது.

விக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்?

எனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு? மக்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்.

 

http://thinakkural.lk/article/53872

ஃபின்லாந்து மீதான சோவியத் படையெடுப்பும் ஸ்கன்ரிநேவியா மீது ஜேர்மனி படையெடுப்பும் – உலகப்போர் 2 – பகுதி 6

3 days 18 hours ago

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று  நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கினார். நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த  பிரிட்டன் முனைந்த போதும்  ஜேர்மனி முந்திக்கொண்டது.

 

தெற்கு பால்டிக் பிரதேசத்தை பலப்படுத்தியாகிவிட்டது என்னும் நிலையில் அடுத்து ஃபின்லாந்து மீது தனது கவனத்தை திருப்பியது சோவியத்யூனியன்.

ரஷியப் பேரரசின் ஒரு பகுதியாக நீடித்த ஃபின்லாந்து அக்ரோபர் புரட்சிக்கு பிறகே சுதந்திரத்தை அனுபவித்தது என்றாலும் அச்சமயம் கலவரமும் கலகமும் ஃபின்லாந்தை மாறி மாறி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஜனநாயக நாடாக இருந்த அந்த தேசத்தை குட்டிச்சுவராக்கியவர் Baron Mannerheim. ஸார்  மன்னரிடம் (ரஷ்ய முடியாட்சியில் அதன் மன்னரை Tsar  என அழைப்பது வழக்கம்.) ஜெனரலாக இருந்தவர். இவர் வருகைக்கு பிறகு, ஃபின்லாந்து சோவியத் எதிர்ப்புக்கான அடித்தளமாக மாறியது. யார் சோவியத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, யார் ஸ்ராலினுக்கு எதிராக சதி செய்ய வேண்டுமானாலும் சரி, இங்கே இடம் உண்டு. வரவேற்பு உண்டு.

பிரிட்டனின் மேற்பார்வையில் இங்கு வரிசையாக பல பாதுகாப்பு கோட்டைகள் அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜேர்மனி தன் பங்கிற்கு விமானத்தளங்களை அமைத்துக் கொடுத்தது. மொத்தம் 2000 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான அளவுக்குப் பெரிய தளம் அது. ஃபின்லாந்திடம் அப்போது இருந்ததோ வெறும் 150 விமானங்கள் மட்டுமே. இந்த 150 விமானங்களுக்கு இத்தனை பெரிய தளம் அங்கே அமைக்கப்பட்டதற்குக் காரணம் சோவியத்திற்கு எதிரான தளமாக  அதை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே.

 

பின்லாந்தின் எல்லைகளை குறித்த சோவியத்தின் கவலை

ஃபின்லாந்தை பலப்படுத்தவேண்டிய, தனது எல்லைகளை பாதுகாக்கவேண்டிய அவசியம் சோவியத்திற்கு இருந்தது. எதிரி தேசங்கள் வந்து கூடாரம் அமைத்து தாக்குதல் தொடுக்கும் வரை சும்மா இருப்பதற்கில்லை. போலந்து வரை வந்துவிட்ட நாசிகளால் ஃபின்லாந்தை ஆக்கிரமிக்க எத்தனை நாள் பிடிக்கும்? பிரிட்டனும் பிரான்ஸும் கூட ஜேர்மனி பக்கம் இருப்பது போல அக்கறையில்லாமல் இருப்பதால் தனக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய அவசியம் சோவியத்திற்கு.

பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தது சோவியத். ஃபின்லாந்துக்கு சோவியத்திடம் பெறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார உதவி. ஃபின்லாந்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட சிதைந்து போயிருந்தது. எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில் சோவியத் உதவிக்கரம் நீட்டினால் பற்றிக்கொள்ளும். இரண்டாவது, Leningrad Murmansk ரயில்வே பாதையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி. வெளியுலகத்தோடு  தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஃபின்லாந்துக்கு இந்த ரயில் தடம் அவசியம். சோவியத்தின் உதவி இல்லாமல் இந்தப் பாதையைப் பயன்படுத்தமுடியாது. இந்த இரு உதவிகளையும் ஃபின்லாந்துக்கு அளித்து அவர்கள் ஒப்புதலுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாமா என்று யோசித்தது சோவியத்.

ஒக்ரோபர் 5, 1939 அன்று ஃபின்லாந்தை தொடர்பு கொண்டது சோவியத். உங்கள் பிரதிநிதி யாரையாவது அனுப்பி வையுங்கள். தொங்கலில் இருக்கும் சில விஷயங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். ஃபின்லாந்தின் எதிர்வினை விசித்திரமாக இருந்தது. உடனடியாக தனது எல்லையில் ராணுவத்தைக் குவித்தது. தலைநகரம் ஹெல்ஸின்கியில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் துரிதமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது. பங்கு சந்தையை இழுத்து மூடியது, கையோடு அமெரிக்காவையும் தொடர்பு கொண்டது. ஆபத்தில் இருக்கிறோம், உதவி தேவை.

சோவியத்திற்கு புரியவில்லை. அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டோம்? ஏன் இந்த அநாவசிய பீதியும் குழப்பமும்? உட்கார்ந்து பேசலாம் என்று மட்டுமே சொன்னோம். பிறகு , புரியவைத்தார்கள். உங்கள் நாட்டின் எல்லைப்பகுதியில் இருந்து லெனின்கிராட் (தற்போதைய பெயர் சென்ற் பீற்றர்ஸ்பேர்க்) தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறது. அரசியல் குழப்படியும் பொருளாதாரக் குழப்படியும் அதிகம் இருக்கும் உங்கள் தேசத்தால் உங்கள் எல்லைகளை பாதுகாகமுடியாது. நீங்கள் அவ்வாறு தவறும் பட்சத்தில் உங்கள் எல்லைகள் எதிரிகளால் கைப்பற்றப்படும். இது சோவியத்தில் நலன்களுக்கு அச்சுறுத்தலானது.

நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுவொன்றுதான். லெனின்கிறராடில் இருந்து உங்கள் எல்லையை பின்னோக்கிக் கொண்டு செல்லுங்கள். கடல்புறத்தில் உள்ள சில சிறிய தீவுகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். பதிலுக்கு இதைவிட கூடுதல் நிலப்பரப்பை உங்களுக்கு வழங்குகிறோம். கூடுதல் என்றால் கிட்டத்தட்ட இரட்டிப்பு. தற்போதைய நிலபரப்பைப் போலவே வளமானதாக அந்தப் பிரதேசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறோம்.

இன்னொரு உதவியும் வேண்டும். லெனின்கிராடோடு இணைக்கும் Hangoe அல்லது வேறு ஏதேனும் ஒரு நுழைவாயிலை எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு லீசுக்கு கொடுங்கள். பாதுகாப்புக்காக கடல்படை தளத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆரம்பத்தில் அதற்கு இணங்குவதை போல் காட்டிக்கொண்டாலும்,  ஃபின்லாந்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் கோரிக்கைகளைத்தான் சோவியத் எழுப்பியுள்ளது என்று அரசாங்க அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் கஜன்டேர்.

பிறகுதான் பின்வாங்க ஆரம்பித்தது ஃபின்லாந்து. தருகிறோம் ஆனால் இப்போது இல்லை. முப்பது வருடம் ரொம்ப அதிகம். வேண்டுமானால் ஒரு சில ஆண்டுகள் போட்டுக்கொள்ளலாம். இரு மடங்கு பிரதேசம் போதாது. கூடுதல் பிரதேசம் தேவை. ஒரு மாதத்திற்கு இழுத்தடித்தார்கள். ஏதேதோ காரணங்கள் சொன்னார்கள். நியூயோர்க் ரைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டது. ஃபின்லாந்து சோவியத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காரணம் அமெரிக்காவின் ராஜதந்திரம். சோவியத்தோடு சேராமல் ஃபின்லாந்திடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன.

சோவியத்திற்கு புரிந்துவிட்டது. இனி ஃபின்லாந்து பயன்படாது. எதிரணியில் சிக்கிவிட்டது. சோவியத்தின் யூகம் சரிதான் என்பது நவம்பர் இறுதியில் தெளிவானது.

 

சோவியத் – பின்லாந்து யுத்தம் – Winter war

 

large.Winterkrieg.jpg.1fc487a91c2cea474b66b24f39351885.jpg

நவம்பர் 30,1939 அன்று சோவியத் படைகள் ஃபின்லாந்துக்குள் நுழைந்தன. ஃபின்லாந்து போர்பிரகடனம் செய்தது. பனிக்கால போர் (Winter war) என்று இந்த யுத்தம் அழைக்கபட்டது. இந்த யுத்தம் நடைபெற்ற போது வெப்பநிலை கிட்டத்தட்ட -45 பாகையாக இருந்தது.  

 கையோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவியையும் கோரியது. ஐரோப்பிய நாடுகள் ஃபின்லாந்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சோவியத் செய்தது  தவறுதான். என்ன இருந்தாலும் சிறிய நாடான ஃபின்லாந்தின் மீது  சோவியத் போர் தொடுத்தது முறைகேடான செயல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலை. சோவியத்தால் ஐரோப்பா போர்களமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்நிய நாடுகள் மீது தலையிடுவதே அதன் வேலையாகப் போய்விட்டது.

லீக் ஒஃவ் நேஷன்ஸ் உடனடியாக சோவியத்தை விலக்கிவைத்தது. ஆச்சரியம் என்று தான் சொல்லவண்டும். செக்கோஸ்லவாக்கியா, போலந்து என்று ஹிட்லர் வரிசையாக ஒவ்வொரு நாடாக கபளீகரம் செய்து வந்த போது சும்மா இருந்த லீக், சோவியத் என்றதும் உடனடி நடவடிக்கை எடுத்தது  விநோதம் தான். ஃபின்லாந்து மீதான சோவியத்தின் தாக்குதல் குறித்து பல வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளர்கள். சில கருத்துக்கள் பின்லாந்து மீது சோவியத் ஆக்கிரமிப்பு என்றும், வேறு சில கருத்துக்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து வருகையில் சோவியத்யூனியன் தனது எல்லைப்பாதுகாப்பிற்காக எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறுகின்றன.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மூன்றும் பெரும்குரல் எழுப்பின. ஐயோ நாம் தான் அப்போதே சொன்னோமே. நாம் பயப்படவேண்டியது ஹிட்லரை பார்த்து அல்ல. ஸ்டாலினை பாரத்துதான். எப்படி நம் கண்முன்பாகவே ஃபின்லாந்தை ஆக்கிரமிக்கிறார்கள் பாருங்கள். கம்யூனிசம் எத்தனை ஆபத்தான சித்தாந்தம் என்று படித்து படித்துச் சொன்னோமே, பார்த்தீர்களா? முதலாளிகள் முதலாளித்துவம் என்று நம்மை திட்டிக்கொண்டிருந்தார்களே, பாருங்கள். சோவியத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் இப்படித்தான் இருக்கும். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் சோவியத்தை வீழ்த்துவோம். முதலாளித்துவத்தை செழுமைப்படுத்துவோம்.

சோவியத்தை பொறுத்தவரை அது லெனின்கிராட்டை பாதுகாப்பதற்கான போர். ஆகவே தயங்காமல் முன்னேறினார்கள். முதல் கட்டமாக ஃபின்லாந்தின் ஆர்டிக் துறைமுகம் கைப்பற்றபட்டது. லெனின்கிராட்டை நெருங்குவதற்கான மார்க்கமாக அது அமைந்தது என்பதே காரணம். இதற்கு இரு வாரங்கள் பிடித்தன. இரண்டாம் கட்ட போர், ஆமை வேகத்தில் நடந்தது. கடும் குளிர் தொடங்கியிருந்தது. மூன்றவாவது கட்டம், வான்வழித் தாக்குதல். ஃபின்லாந்தின் ராணுவத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு தாக்கியழிக்கபட்டன. ஆயதத் தொழிற்சாலைகள் ரயில்ப் பாதைகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் ஆகியவை மீது குண்டுகள் வீசப்பட்டன.

large.1280px-A_Finnish_Maxim_M-32_machine_gun_nest_during_the_Winter_War.jpg.cd55e512d37dd753fde3abffb9c0f2c6.jpg

நான்காம் கட்ட போர் ஒரு மாத காலும் நீடித்தது. நோக்கம் Mannerheim Line பகுதியை உடைத்து முன்னேறுவது. ஊடுவல் கடினமானது என்று கருதபட்ட இந்தப் பகுதியில் வரிசை வரிசையாக பாதுகாப்பு கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. இதை அகற்ற முடிவு செய்த சோவியத், பலமான பீரங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது. பாதுகாப்பு அரண்களைத்தான் முதலில் தாக்கினார்கள். அரண்கள் அமைக்கப்படிருந்த அடித்தளம் தகர்க்கப்பட்டது, பிறகு கோட்டை விழுந்தது. மார்ச் 12, 1940 அன்று மாஸ்கோவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஃபின்லாந்துக்கும் சோவியத்திற்கும் இடையில் தூதுவர் போல செயற்பட முடியும். என்று கேட்கப்பட்ட போது பிரிட்டன் மறுத்துவிட்டது. பிரான்ஸுக்கும் விருப்பமில்லை. சோவியத் ஃபின்லாந்தை முடியடித்ததையும், கடினமான பாதுகாப்பு அரண்களை தகர்த்ததையும், இறுதியில் சோவியத்திடம் ஃபின்லாந்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டதையும் இந்த இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீ ஏன் சோவியத்துடன் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று சண்டைக்கு வந்தார் டலாடியர். என்னையும் சாம்பரலைனையும் விட ஸ்டாலின் பலம் வாய்ந்தவரா? ஃபின்லாந்தை காரணமாக வைத்து சோவியத் மீது போர் தொடுக்கவேண்டும் என்று இந்த இரு நாடுகளும் கணக்கு போட்டு வைத்திருந்தன. ஆனால், அதற்குள் சோவியத்  போரை முடித்து கொண்டுவிட்டது.

சோவித்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட ஸ்வீடன் ஒப்புக்கொண்டபோது பிரிட்டனும் பிரான்ஸும் முகத்தை சுளித்துக்கொண்டன. சோவியத் Mannerheim Line பகுதியை இணைத்துக்கொண்டது. ஹாங்கோ கைப்பற்றப்பட்டது. அதே சமயம், Petsamo என்னும் பகுதியையும் அதிலுள்ள நிக்கல் சுரங்கதையும் ஃபின்லாந்திடமே திருப்பித் தந்தது.

நவம்பர் 30, 1939 தொடக்கிய போர் மார்ச்13, 1940 ல் முடிவடைந்தது. 20, மார்ச் 1940 மாதம் பிரான்ஸ் பிரதமர் டலாடியர் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஃபின்லாந்தை காப்பாற்ற முடியாததால் எழுந்த கடும் விமர்சனங்களால் எடுக்கப்பட்ட முடிவு. பின்னர் பவ்ல் ரெனாய்ட் (Paul Reynaud) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சோவியத் லெனின்கிராட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகளை மாத்திரம் தேர்வு செய்து அவற்றை மட்டும் இணைத்துக்கொண்டது. இது ஆக்கிரமிப்பு போர் அல்ல, பாதுகாப்பு போர் தான் என்பதை அழுத்தமான பதிவு செய்தது. ஸ்வீடனின் ஆதரவு இதில் சோவியத்திற்கு கிடைக்காமல் விட்டிருந்தால் பிரிட்டனும் பிரான்ஸும் சோவியத்திற்கு எதிராக போரை தொடுக்க கூடி நிலைமை இருந்தது.

போலந்து பிறகு ஃபின்லாந்து. சோவியத்தின் தொடர் வெற்றி பிரிட்டனையும் பிரா்னஸையும் ஆட்டம் காணச் செய்தது. சோவியத்யூனியனுக்கு இத்தனை பலமா? பொதுவுடமை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தொழிற்சங்கம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இத்தனை சக்தி. ஃபின்லாந்து கோட்டையை தகர்த்து தவிடுபொடியாக்கும் படியான நவீன பீரங்கிகளை இவர்கள் எப்படிப்பெற்றார்கள். ஐயோ, நாம் நினைத்ததை விட அதிக பலமுள்ள தேசமாக அல்லவா இருக்கிறது சோவியத்யூனியன்? இத்தனை அபாகரமானவரா ஸ்ராலின்?  இது நமக்கு அச்சுறுத்தல் தான்.

சோவியத்தின் வெற்றி ரூமேனியாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது. அடுத்து ஒரு வேளை நம்மிடம் திரும்புவார்களோ? ரூமேனியாவின் அச்சத்திற்கு காரணம் பெஸ்ஸராபியா (Bessarabia) முதல் உலகப் போர் முடிவில், அதாவது 1918 ல், சோவியத்யூனியனிடம் இருந்து பெஸ்ஸராபியாவை கைப்பற்றியிருந்தது ரூமேனியா. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற்று, புதிய சோவியத் அரசை கட்டுமானம் செய்துகொண்டிருந்த காலகட்டம் அது. இனியொரு போர் வேண்டாம் என்று போல்ஷ்விக் கட்சி முடிவு செய்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூமேனியா பெஸ்ஸராபியாவை ஆக்கிரமித்து இணைத்துக்கொண்டது.

சோவியத்தின் பலம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுவிட்டதால், தன் மீது சோவியத் போர் தொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தது ரூமேனியா. சோவியத் போர் தொடுக்கவில்லை. ஆனால் பேசியது. நீங்கள் செய்தது தவறு. திருப்பிக்கொடுத்துவிடுங்கள். ரஷ்ய கப்பல்கள் Danube பகுதிக்குள் நுழைந்தன.  போர் எதுவும் தேவைப்படவில்லை. ரூமேனியா அடிபணிந்தது. பார்டிக் முதல் கருங்கடல் வரை Hangoe   முதல் Danube வரை எல்லைகளைப் பலப்படுத்தி விட்டாயிற்று. ஸ்ராலின் சற்றே சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

ஹிட்லர் நிமிர்ந்து உட்கார்ந்தார். மேற்குலக நாடுகளிடம் இருந்து எந்தவித தொந்தரவும் இதுவரை இல்லை. இன்னும் சொல்லப்போனால் என்னை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அவர்கள் உதவிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே அபாயம் சோவியத்யூனியன். போலந்து, ஃபின்லாந்து என்று அடுத்தடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புதிய எச்சரிக்கை செய்தியை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. இவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டியுள்ளது. ஆரம்பிக்கலாம்.

 

நோர்வே மீது ஹிட்லரின் பார்வை

நோர்வேயை தேர்வு செய்திருந்தார் ஹிட்லர். ஜேர்மனிக்கு பிரிட்டன் வைத்திருந்த செக்மேட் நோர்வே. முதல் உலகப்போர் சமயத்தில் வைத்த செக்மேட் அது. ஜேர்மனியின் தொழில் உற்பத்திக்கு(எனவே ஆயுத உற்பத்திக்கும்) இரும்பு இறக்குமதி அவசியம். ஜேர்மனி தனது இரும்பு தேவைகளுக்கு நோர்வே துறைமுகத்தைத்தான் சார்ந்திருந்தது. வடக்கு ஸ்வீடனில் உள்ள சுரங்கங்களில் இருந்து கொண்டுவரப்படும் இரும்பு நோர்வே துறைமுகம் வழியாக ஜேர்மனிக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். முதல் உலகப்போருக்கு பிறகு ஜேர்மனியின் இரும்பு போக்குவரதைக் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக பிரிட்டன் தனது ராணுவத்தளத்தை நோர்வேயில் அமைந்திருந்தது. நோர்விக் என்னும் துறைமுகத்திற்கு அருகில்.

ஒக்ரோபர் 1939 ல் இது குறித்து ஹிட்லரிடம் தெரிவிக்கபட்டது நோர்வே நமக்கு முக்கியம். ஒரு வேளை பிரிட்டன் கைப்பற்றிவிட்டால் நாம் முடங்கிவிடுவோம். ஆயுதத் தொழிற்சாலை முடங்கிப்போகும். பிரிட்டனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள் போர்த் திட்டத்தில்  நோர்வே இருக்கட்டும். அதெற்கென்ன ஆகட்டும் என்றார் ஹிட்லர். திட்டத்தை விரிவாக்குபவர்களை அவர் எப்போதும் கடிந்து கொண்டதில்லை.

பிரிட்டனும் நோர்வே குறித்து தான் சிந்தித்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் போர் கபினெட்டில் அப்போது புதிதாக இணைந்து கொண்டிருந்த சேர்ச்சில், நோர்வே மீது தீவிர ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். சாம்பர்லைனிடம் விரிவாக பேசினார். நோர்வே நமக்கு அவசியம். நோர்வே துறைமுகத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நிச்சயம் ஜேர்மனி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். இதையே சாக்காக வைத்து நோர்வேயை நாம் கைப்பற்றிவிடலாம். என்ன சொல்கின்றீர்கள். பின்னால் இது தான் நடந்தது என்றாலும் அப்போதைக்கு சாம்பர்லைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தயங்கினார்.

ஹிட்லர் இன்னொரு காரியம் செய்தார். பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் அமைதி ஒப்பந்தக் கோரிக்கை அனுப்பிப்பார்த்தார். ஒக்ரோபர் 10 ம் திகதி பிரிட்டன் ஜேர்மனியின் அமைதிக் கோரிக்கையை நிராகரித்தது. இரு தினங்களை கழித்து பிரான்ஸும் அதையே செய்தது.

சரி போ என்று விட்டுவிட்டார் ஹிட்லர். திட்டத்ததை முன்னெடுத்து செல்வதில் அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. டிசம்பர் 19, 1939 ல் இருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு ராணுவ டிவிசன் போதும் முடித்துவிடலாம் என்று ஆரம்பத்தில் திட்டமிட்டனர். பின்னர் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இரண்டு அம்சங்கள் மிகவும் முக்கியம் என்று கணித்தனர். ஒன்று, அச்சமூட்டுவது. எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தப்படவேண்டும். நோர்வேயை ஆச்சரியத்திலும் ரத்தத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கடிக்கவேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்கிறதே என்று சாம்பரலைன் திரும்பி பார்ப்பதற்குள் இந்த பிரதேசம் ஜேர்மனிக்கு சொந்தமானது என்னும் பலகையை மாட்டி நம் ஆட்களை நிறுத்திவிடவேண்டும்.

இரண்டாவது அம்சம், ராணுவ பலம். நவீன அதிவேக ஜேர்மன் போர்க்கப்பல்களை இந்த தாக்குதலின் போது நாம் பயன்படுத்தவேண்டும். அதற்கேற்றாற்போல விரிவாகத் திட்டமிடவேண்டும். துரிதமாக தாக்குதலை ஆரம்பித்து ஒவ்வொரு பிரதேசமாக கைப்பற்றிக்கொண்டே செல்லவேண்டும். சுதாகரிப்பதற்கு அவகாசம் கொடுத்துவிடக்கூடாது. போர்கப்பல்கள் மட்டுல்லாமல், விமானப்படை, ரைஃபிள் பிரிகேட், காலாட்படை அனைத்தும் தயாராகவேண்டும். 

தலைநகரம் ஒஸ்லோவும் அருகிலுள்ள நகரங்களும் பேர்கன், நார்விக், ற்ரொம்ஸோ, ற்ரொன்ட்ஹைம், ஸ்ரவாங்கர்.

(Oslo, Bergen, Narvik, Tromsö, Trondheim, Stavanger) திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஜெனரல் von Falkenhorst என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் முதல் உலகப்போரின்போது ஃபின்லாந்தில் பணியாற்றியவர். பிரதேச முன் அனுபவம் கொண்டவர். திட்டம் முழுமையடைந்ததும் அதற்கு ஒரு செல்லப்பெயர் சூட்டப்பட்டது. – Operation Weserübung.

மார்ச் முதலாம் திகதி ஹிட்லர் திட்டத்தை கொஞ்சம் நீடித்தார். எப்படியும் பெரும்படையுடன் போகப்போகிறோம். நோர்வேயுடன் சேர்ந்து கூடவே டென்மார்க்கையும் கைப்பற்றிவிடலாமே!  இப்போது விட்டால் அதற்கென்று தனியே ஒரு நடை போகவேண்டியிருக்கும். இரண்டையும் முடித்து விட்டு வந்தால் ஒரு வேலை தீர்ந்தது. என்ன சொல்கின்றீர்கள்?

டென்மார்க் முக்கியமான பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. சிறிய நாடு. ஆனால் ஜேர்மனியின் எல்லையோடு சேர்த்து ஒட்டிக்கொண்டுள்ள நாடு. சோவியத் அதன் எல்லைகளை காத்துக்கொண்டதை போல் நாங்களும் எங்கள் எல்லைகளை காத்துக்கொள்ள வேண்டாமா? நாளையே டென்மார்க்கை நுழைவாயிலாகக் கொண்டு சோவியத்தோ பிரிட்டனோ தாக்காது என்று என்ன நிச்சயம்?  அத்துடன் நோர்வே மீதான தாக்குதலுக்கு டென்மார்க் பின்தளமாக பாவிக்க வேண்டிய அவசியம் உண்டு.

மற்றொரு பக்கம், ஜேர்மனி கைப்பற்றுவதற்குள் நாம் நோர்வேயைச் சுற்றி வளைத்து விட வேண்டும் என்னும் நோக்கில் வேகவேகமாக பாய்ந்து முன்னேறியது பிரிட்டன். போரில் யாருடனும் கூட்டுச் சேராமல் தனித்து இருந்த நோர்வேயின் நடுநிலைத் தன்மையை முதலில் குலைத்தது பிரிட்டன் தான். பிரிட்டனின் அத்துமீறல் ஹிட்லரை திருப்திப்படுத்தியது. நாளை யாரும் ஜேர்மனியை குறைகூற முடியாது. அப்படி சொல்வதாக இருந்தாலும் பிரிட்டனைத் தான் முதல் ஆக்கிரமிப்பாளர் என்று அழைக்கவேண்டியிருக்கும்.

பிரிட்டன் கடற்படை தயாரானது, ஏப்ரல் 8ம் திகதி நோர்வேக்குள் பிரிட்டன் காலடி எடுத்து வைத்தது. ஜேர்மனி வரும் என்று தெரியும். நோர்வேயை கைப்பற்றும் என்றும் தெரியும். அப்படி நடக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் திட்டமிடவில்லை. வீரர்களும் குழம்பி நின்றனர்,

·        பிரிட்டன் வருவதை நோர்வே விரும்பவில்லை, ஜேர்மனி விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். நாம் என்ன செய்யவேண்டும்?

·        ஜேர்மனியை எதிர்த்து போராடவேண்டுமா அல்லது நோர்வேயை எதிர்த்தா?

·        சுரங்கங்களை நாம் என்ன செய்யவேண்டும்? அவற்றை கைப்பற்றுவது மட்டும் தான் நம்முடைய பசியா அல்லது நோர்வேயை பாதுகாக்க வேண்டுமா?

 

large.2081539658_imagesNewspaper1.jpg.a8c1f003b4f66f33ad42d289c80800e2.jpg

பிரிட்டன் குழம்பி தவித்த வேளையில் ஜேர்மனி ஏப்ரல் 9, 1940 அதிகாலை வேளை டென்மார்க்கை தாக்கியது. இது இருமுனை தாக்குதல். ஒரு பக்கம், ஜேர்மானிய தூதர் Renthe Fink  டென்மார்க்கில் அயல் துறை அமைச்சரிடம் பேசிக்கொண்டிந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் உங்களைத் தாக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நிகழலாம். உங்களை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஜேர்மனி முடிவு செய்துள்ளது. எங்கள் படைகள் வந்துகொண்டிருக்கின்றன.(அவர் பேசிக்கொண்டிருந்தபோது, படைகள் உள்ளே நுழைந்துவிட்டன.) எதிர்ப்பு காட்டவேண்டாம். அநாவசியமாக சங்கடப்படவேண்டாம். சரணடைந்துவிடுங்கள். மிச்சத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்க மறுத்தால், உங்கள் தலைநகரம் கோப்பன்ஹேகன் மீது குண்டுகள் வீசப்படும். வேறு வழி தெரியவில்லை. ஏப்ரல் 9, 1940 அன்றே மிக குறுகிய நேரத்தில் டென்மார்க் சரணடைந்தது. சண்டை சில மணி நேரங்களே நடைபெற்றதால் இழப்புகளும் மிக குறைவாகவே இருந்தது.

 

நோர்வே யுத்தம்.

large.Norway-100910-lg.jpg.cc16c0a69851a4ee567ca009b1d36314.jpgஏப்ரல் 8,1940 ல் நோர்வே தாக்குதல் ஆரம்பித்திருந்தது. வான் வழி, தரை வழி, கடல் வழி மூன்றிலும் தாக்குதல் கொடுத்தது ஜேர்மனி. இரண்டு மாதங்கள் நீடித்த இந்த யுத்தம், ஜுன் 10, 1940 ல் முடிவடைந்தது. நேச நாடுகளின் ஆதரவையும் தாண்டி ஜேர்மனி நோர்வேயை முறியடித்து ஆக்கிரமித்தது. டென்மார்க்கைப் போல் அல்லாமல், நோர்வே எதிர்ப்பு யுத்தத்தை இறுதிவரை நடத்திய பிறகே சரணடைந்தது.

வடக்கு பகுதியில் நார்விக் துறைமுகத்திற்காக மிக கடுமையான யுத்தம் நடைபெற்றது. நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து ராணுவத்தின் கூட்டு அணி நார்விக் துறைமுகத்திற்காக கடும் சண்டையிட்டது. Battle of Narvik என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த யுத்தம் பல கட்டங்களாக நடைபெற்றது. மே 28 ம் திகதி, ஜேர்மனியை முறியடிக்கவும் செய்தது. ஆனால் ஜுன் 9 ம் திகதி ஜேர்மனி நார்விக்கை மீண்டும் கைப்பற்றியது.

இத்துடன் முடிந்து விடவில்லை. ஸ்வீடனையும் தொட்டுப் பார்த்தது ஜேர்மனி. நார்வே, டென்மார்க் மற்றும் பால்டிக் கடல் பகுதிகளை கைப்பற்றிய பிறகு ஸ்வீடனையும் சுற்றி வளைத்தது. ஸ்வீடன் அவர்களுக்கு தேவையில்லை. தேவை ராணுவத் தளபாடங்களையும் துருப்புக்களையும் ஸ்வீடன் வழியாகக் கொண்டு செல்வதற்கு அனுமதி மட்டுமே. ஸ்வீடன் நடுநிலை வகித்த நாடு என்பதால் ராணுவ வழிமுறைகள் பிரயோகிக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஜுன் 18, 1940 ல் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டார்கள்.

 large.423379140_Germaninfantry.jpg.ed4c602b7539a884ec7cff9e2cb6d81c.jpg

பிரிட்டனில் அரசியல் குழப்பம்

மே 7 மற்றும் மே 8,1940 ல் பிரிட்டன் கொமன்ஸ் சபையில் சூடான விவாதங்கள் நடைபெற்றன. ஆரம்பித்து வைத்தவர் சேர் ரோஜர் கீஸ். அட்மிரல். (Sir Roger Keyes) நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.

ராணுவச் சீருடையை நான் இங்கே அணிந்து வந்ததன் காரணம் என் சக ராணுவத்தின் கவலையை  இங்கே தெரியப்படுத்த தான். என் நண்பர்கள் அனைவரும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். கடல்படையை குறை சொல்லமுடியாது. நாங்கள் முழு பலத்துடன் தான் இருக்கிறோம். பிரச்சனை, தலைமையில் தான்.

 

பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகல் – புதிய பிரதமராக சேர்ச்சில்

சாம்பர்லைன் மீது பரவலாக அதிருப்தி பரவியிருந்ததை அனைவரும் அறிவர் என்றாலும் முதல் முதலாக அதை அழுத்தமாக பதிவு செய்தவர் ரோஜர் கீஸ் தான். இவர் அமர்ந்ததும், சாம்பர்லைன் கட்சியை (கன்சர்வேடிவ் கட்சி) சேர்ந்த லியோ அமரி (Leo Amery) எழுந்தார்.

எனக்கு இந்த ஆட்சியில் சிறிதளவும் திருப்தியில்லை. போர் விவகாரங்களை நம் பிரதம மந்திரி நாம் எதிர்பார்த்தவாறு கையாளவில்லை. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய செயல் இது. புதிய தேசிய அணி ஒன்று உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம், முதல் உலகப் போரில் பிரதமர் லாயின் ஜோர்ஜ்க்கு கீழ் ராணுவ கபினெட் ஒன்று செயற்பட்டு வந்ததைப் போல் இப்போதும் ஒரு கபினெட் ஆரம்பிக்கவேண்டும். எதிரிகளோடு மோதி அழிக்கும் வலுவும் தீரமும் கொண்டவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். வெற்றிமீது தீரா காதல் கொண்ட ஒருவர் நமக்கு தேவை.

இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தையும் சொல்லி தன் உரையை முடித்துக்கொண்டார்.

உருப்படியாக ஒன்றையும் செய்யாமல் மிக நீண்ட காலமாக இங்கே அமர்ந்திருக்கிறாய். உடனே வெளியேறு. கடவுளின் பெயரால் சொல்கிறேன் வெளியேறு.

மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் (லேபர் கட்சி) ஹெர்பேர்ட் மாரிஸன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார்.

ஓ செய்யலாம், வாக்கெடுப்பு நடத்தினால்தான் எனக்கு இங்கே எத்தனை நண்பர்கள் என்று தெரியவரும். நான் தயார் என்னை என் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரதமர் சாம்பர்லைன். நிச்சயம் நான் இல்லை என்று தன் கையை உயர்த்தினார் கன்சர்வேடிவ் உறுப்பினர் ராபேர்ட் பூத்பை.

முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் என்று அறியப்பட்ட முன்னாள் பிரதமர் லாயிட் ஜோர்ஜ் எழுந்தார்.

நம் பிரதமருக்கு நண்பர்கள் யார் என்பது இங்கே முக்கியமல்ல. அது பிரச்சனையும் அல்ல. தேசம் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று சாம்பர்லைன் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். தியாகம் செய்ய இந்த தேசம் தயாராக இருக்கிறது அதற்கான ஒரு தலைமை உருவானால். என் விண்ணப்பம் இது தான். நம் பிரதமர் முதலில் தன் பதவியை தியாகம் செய்யட்டும்.

இறுதியாக சேர்ச்சில் பேசினார்.

சண்டை சச்சரவுகள் இதோடு சாகட்டும். தனிப்பட்ட சண்டைகளை மறப்போம். நம் வெறுப்பை நம் எதிரி மீது காட்டுவதற்காக சேமித்து வைப்போம். கட்சி நலனை புறக்கணிப்போம். அது இப்போது முக்கியமல்ல. நம் சக்தியை ஒன்று திரட்டுவோம். நம் தேசத்தின் ஒட்டு மொத்த வலிமையையும் ஒன்றாக்குவோம். பலமாக குதிரைகள் நம் தேசத்தை முன்னால் இழுத்துச்செல்லட்டும்.

large.1362078482_ChamperleinandChurchill.jpg.29478516807e9039860f88e1c35d9a61.jpg

விவாதத்தை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாம்பர்லைன் தோற்றுப்போனார். மே 10 ம் திகதி சாம்பர்லைன் தனது பதவியை துறந்தார். சேர்ச்சில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.(கன்சர்வேடிவ் கட்சி தலைவராக சாம்பர்லைன் நீடித்தார்) கன்சர்வேடிவ்க் கட்சி, லிபரல் கட்சி, லேபர் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து நபர்களை தேர்ந்தெடுத்து புதிய கூட்டணியை உருவாக்கினார் சேர்ச்சில்.

நோர்வே டிபேட் அல்லது நார்விக் டிபேட் என்று இந்த சம்பவம் அழைக்கப்படுகிறது. ஃபின்லாந்து தாக்குதலின் போதும் சரி, நோர்வே தாக்குதலிலும் சரி பிரிட்டன் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஜேர்மனியை வளரவிட்டது தவறு போன்ற குற்றச்சாட்டுகள் சாம்பர்லைன் மீது சுமத்தப்பட்டன. அதன் விளைவு தான் இந்த சூடான விவாதம். சாம்பர்லைனை ஆதரித்த பலரே அவருக்கு எதிராக திரும்பினர். சாம்பர்லைனின் அரசியல் அணுகுமுறையை தொடக்கம் முதலே தீவிரமாக எதிர்த்து வந்த சேர்ச்சில், இந்த முறையும் தன் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சோவியத்துக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான போரின் போது ஃபிரெஞ்சு பிரதமர் டிலாயர் பதவி விலகியதை போலவே ஜேர்மனி நோர்வே போரின் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லைன் பதவி விலகவேண்டிவந்தது.

(தொடரும்)

 

நூல்  இரண்டாம் உலகப்போர்

எழுதியவர்  மருதன்

வெளியீடு கிழக்கு பதிப்பகம்  2009 மே

விக்னேஸ்வரன் அணி சாதிக்குமா ? | C. V. விக்னேஸ்வரன் ( தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி )

4 days 1 hour ago

விக்னேஸ்வரன் அணி சாதிக்குமா ? | C. V. விக்னேஸ்வரன் ( தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி )

 

 

கருத்துக்களத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணல்

5 days 3 hours ago

 

கருத்துக்களத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா வழங்கிய நேர்காணல்

 

 

கல்வி தந்தைகளின் அலப்பறைகள்

5 days 18 hours ago
கல்வி தந்தைகளின் அலப்பறைகள்

image_f3561be92f.jpg

 

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.   

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல.   

இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சிறிய, ஆனால் புறக்கணிக்க இயலாத, ஒரு தொகையினருக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் கிட்டின. இலங்கையின் பொருளாதார விருத்தி எவ்வளவு குறைபாடானதாக இருந்த போதும், அரசாங்கத் தொழிற்றுறை தொடர்ச்சியாகவே வளர்ந்து கொண்டு வந்தது. எனவே, அவ்வாறான வேலை வாய்ப்புகள் பெருகின. அதேவேளை, கல்வி கற்றோர் தொகையும் பெருகி வந்தது.  

இந்தப் பின்னணியில், உயர் கல்விக்கான போட்டி, மேலும் வலுவடைந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் பல்கலைக்கழக அனுமதியின் எண்ணிக்கை மட்டுப்பட்டு இருந்தது. இது அரசாங்கக் கொள்கையால் என்று இல்லாமல், அவற்றுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறையாலும் பயற்றுவிப்புக்கு அவசியமான ஆய்வுகூட உபகரண வசதிகளின் போதாமையாலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கல்வியிலும் உயர்கல்வியிலும் மேலதிக அரசாங்க முதலீடு இல்லாமையாலும் ஏற்பட்ட ஒரு நிலைமை ஆகும்.  

 இந்த நிலைமையில் உயர்கல்விக்கும் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குமான போட்டி தீவிரமானது. அதன் விளைவாகப் பல்கலைக்கழக அனுமதி, ஓர் அரசியல் பிரச்சினையாகி, 1970 அளவில் பேரினவாத அரசியலின் விளைவான தரப்படுத்தலுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீவிரப்படுத்தலுக்கும் இட்டுச் சென்றது.   

நீண்ட காலமாகவே, உயர்கல்வி பற்றியும் நாட்டின் பொருளாதார விருத்தி பற்றியும் திட்டவட்டமான அரசாங்கக் கொள்கை ஒன்று இல்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டால், உயர்கல்வி இன்று எத்தகைய முட்டுச் சந்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது என விளங்கும். பாடசாலைக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்துடனும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் அயல் நாடுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வசதியாக ஆங்கிலம் மூலம் தனியார் வழங்கும் விதமாகச் சர்வதேசப் பாடசாலைகள் 1978க்குப் பிறகு நிறுவப்பட்டு வந்து, இன்று, கொஞ்சம் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கூடத் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புகின்ற அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டன.  

அதன் அடுத்த கட்டமாக, அந்நியப் பல்கலைக்கழகங்களின் ஊடுருவல் தொடங்கியது. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் படிக்கக் குறைந்த பட்சத் தகுதி பெற்ற மாணவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கிறது. பிறர் வெளிவாரிப் பட்டங்களை நாடுகின்றனர். பல்கலைக்கழகங்கள் அவற்றை ஒழுங்கு முறையாக நடத்துவதாகக் கூற இயலாது. அதைவிட, இவ்வாய்ப்புகள் மாணவர்கள் அதிகம் விரும்புகிற துறைகளில் கிட்டுவது குறைவு. எனவே, உயர்கல்வி பல விதங்களில் வணிக மயமாக்கப்பட்டு ‘சந்தையால்’ வழிநடத்தப்படுகிறது.  

இன்றைய கல்வியும் உயர்கல்வியும் திருப்திகரமானவையல்ல. அவை நாட்டை முன்னேற்றக் கூடிய திறமை கொண்ட பட்டதாரிகளை உருவாக்கத் தவறுகின்றன என்றால் அது பட்டதாரிகளின் தவறு மட்டுமல்ல. கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் குழறுபடியானவை. உயர்கல்விக்கான மூலதனத்தைச் சமூகத்துக்கு உள்ளிருந்தே திரட்ட இயலும். சமூகத்திடமிருந்து பெறுகிற கல்வியைச் சமூகப் பயனுடையதாக்க முடியும். தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த நோக்கங்கட்கு எதிர்மாறான இலக்கையுடையவை. தனியார் கல்வியை ஆதரிக்கிற பலர் பரிந்துரைக்கும் கல்வித்துறைகளும் புதிய நிபுணத்துவமும் எவை? 

உலகமயமாதல், அந்நிய நாடுகளில் வேலை வாய்ப்பு, அந்நிய முதலீட்டின் தேவைகளைச் சந்திப்பதற்கான திறமைகள் போன்று, தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முரணான கருத்துகளையே வலியுறுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது அவசியம். ஆனால் அது போதாது. பாடசாலைக் கல்விக்கு ஒரு தேசிய அடிப்படை அவசியம். கல்வித் துறைக்கு ஒரு தெளிவான தூரநோக்கு அவசியம். எனவே, இவ் விவாதம் தனியார் பல்கலைக்கழகத்துடன் நின்றுவிடாது நாட்டின் கல்விக் கொள்கை முழுவதையும் மறுபரிசீலனை செய்து, கடந்த முப்பதாண்டு காலத்தில் ஏற்பட்ட பெருங் சீரழிவிலிருந்து கல்வியை மீட்டெடுப்பது பற்றியதாகவும் இருக்க வேண்டும். 

இதைக் கல்வித் தந்தைகளால் செய்ய இயலாது. தேசிய கல்விமுறையையும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் செழுமைப்படுத்தி வளமுடையதாக்குவது காசுக்கு பட்டங்களை விற்கும் கல்வித் தந்தைகளால் செய்யக் கூடியதல்ல. அது அவர்கள் நலனுக்கு எதிரானது.   

இது தேர்தல் காலம், ஆதலால், ஒன்லைன் கல்வி, தரமான தனியார் பல்கலைக்கழகங்கள் எனப் பல ‘எருமை மாட்டு’க் கதைகளை, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு கேட்க நேரும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-தந்தைகளின்-அலப்பறைகள்/91-252977

Checked
Wed, 07/15/2020 - 02:53
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed