புதிய பதிவுகள்2

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

2 months 1 week ago
சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் உயர்மட்ட தேசியக் குழு Published By: Vishnu 09 Dec, 2025 | 04:26 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 22 மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக உதவிகள் கிடைத்து வருகின்றன. அனர்த்தத்துக்கு பின்னரான நடவடிக்கைகள் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் நிவாரணங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இவற்றை முகாமைத்துவம் செய்து கண்காணிப்பதற்காக என்னுடைய தலைமையில் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முப்படை மற்றும் பொலிஸ் உட்பட துறைசார் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவர். உணவு, சுகாதாரம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்து மக்களுக்கு விநியோகிப்பது என்பதற்கான ஆலோசனை இக்குழுவால் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும். மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என இந்த வலையமைப்பின் கீழ் அனர்த்த நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும். இவை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதை எமது குழு உறுதி செய்யும். அதற்கு கொள்கை ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் இக்குழு கூடி, நிவாரணப்பணகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/232832

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை

2 months 1 week ago
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை Dec 9, 2025 - 08:28 AM வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmixzqwa702jlo29n6qp7k6z3

ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம்

2 months 1 week ago
ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி கிட்டத்தட்ட குறைந்துவிட்டதாகத் தெரிந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த முதல் சவால் ஹைதர் அலியிடமிருந்துதான் வந்தது. லெவின் பி. போரிங் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்' (Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "18-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் மையமாக மைசூர் இருந்தது. உலகின் கிழக்கு வரலாற்றுப் பகுதியில் மைசூர் மிகத் துணிச்சலான மற்றும் பரபரப்பான நடவடிக்கைகளின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் மிகவும் ஆபத்தான எதிரியை எதிர்கொண்டனர். இந்தப் பகுதியின் தலைவரின் பெயர் ஹைதர் அலி." என எழுதினார். ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி வெறும் 38 ஆண்டுகளே நீடித்தாலும், இந்த குறுகிய காலத்தில் நடந்த சம்பவங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. பட மூலாதாரம்,Pharos Book இயல்பிலேயே ஒரு போர் வீரர் ஹைதர் அலி மைசூர் படையில் உயர் பதவியில் இருந்தார். 1776-ஆம் ஆண்டில் மைசூர் உடையார் மன்னரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் மைசூர் ராணுவத்தை விரிவுபடுத்தி, சிறிய அண்டை சமஸ்தானங்களைக் கைப்பற்றத் தொடங்கினார். இர்ஃபான் ஹபீப் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் எதிர்ப்பு மற்றும் நவீனமயமாக்கல்' (Resistance and Modernization Under Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "ஹைதர் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரெஞ்சு தளபதிகளை அழைத்து வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரெஞ்சு பொறியாளர்களின் உதவியை நாடினார். ஹைதர் தனக்கென கடற்படையை உருவாக்கவும் முயற்சி செய்தார். 1766-ஆம் ஆண்டில் அவரிடம் 2 பெரிய போர்க் கப்பல்கள், 7 சிறிய போர்க் கப்பல்கள் மற்றும் 40 சிறிய படகுகள் இருந்தன. இந்த அனைத்திற்கும் ஸ்டெனெட் (Stennett) என்ற ஐரோப்பியரே தளபதியாக இருந்தார்," என எழுதுகிறார். ஹைதர் அலி இயல்பிலேயே ஒரு போர் வீரராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் குதிரை சவாரி செய்வதில் மட்டுமல்ல, வாளை கையாள்வதிலும் மற்றும் துப்பாக்கி சுடுவதிலும் திறமையானவராக இருந்தார். லெவின் போரிங் எழுதுகிறார்: "ஹைதருக்கு சோர்வை சகித்துக் கொள்ளும் அபார சக்தி இருந்தது. படைகளுக்குத் தலைமை தாங்கும்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை, அதனால்தான் அவரது வீரர்கள் அவருக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தனர். ஹைதரின் சிறப்பு அம்சம், போரின் போது அமைதியாக இருந்து வேகமாக, திடீர் தாக்குதல்களைத் தொடுப்பது ஆகும், இதில் அவர் பெரும்பாலும் வெற்றி கண்டார்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலி குதிரையேற்றத்திலும், துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஹைதரின் அன்றாட வாழ்க்கை மேஸ்தர் லா டூர் தனது 'ஹைதர் மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானின் வரலாறு' (The History of Hyder and His Son Tipu Sultan) என்ற புத்தகத்தில், ஹைதர் சுமார் 5 அடி ஆறு அங்குல உயரம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மாநிறம் கொண்டவராகவும், கரடுமுரடான முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் மைல்கள் கணக்கில் நடந்தோ அல்லது குதிரை மீது பயணம் செய்தோ கடக்கும் திறன் கொண்டவர். அவர் வெள்ளை மஸ்லின் ஆடைகள் மற்றும் தலைப்பாகை அணிய விரும்பினார். "அவருக்கு ஆபரணங்கள் மீது ஆர்வம் இல்லை. பார்க்க கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவரது தோற்றம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. அவர் தினமும் நள்ளிரவில் தூங்கச் சென்று, காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார்." "மைசூர் மன்னரான பிறகு, அவர் தனது முகத்தில் இருந்த அனைத்து முடிகளையும் சவரம் செய்து கொண்டார். அவருக்கு தாடி, மீசை, இமைமுடிகள் அல்லது புருவங்கள் இல்லை. காலை 8 மணி முதல் 9 மணிவரை அவர் அரண்மனையில் இருந்து அரசவைக்கு வருவார், அதன்பிறகு பால்கனியில் ஏறி யானைகள் மற்றும் குதிரைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஹைதர் படிப்பறிவில்லாதவர். தன் பெயரின் முதல் எழுத்தை (ஹை) எழுதுவதைக் கூட அவர் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார்." ஹைதர் அலியால் கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் மொழிகளை சரளமாகப் பேச முடிந்தது. அவருக்கு பாரசீகம் மற்றும் அரபு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது. படிப்பறிவில்லை என்றாலும், அவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. பல பத்தாண்டுகளுக்கு முன் சந்தித்த ஒருவரை அடையாளம் காணும் அபார திறன் அவரிடம் இருந்தது. பட மூலாதாரம்,Getty Images ஹைதரின் சகிப்புத்தன்மை ஹைதரின் ஆட்சிக் காலத்தில் மத விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1610-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த மைசூரின் புகழ்பெற்ற தசரா திருவிழாவைத் தொடர அவர் அனுமதித்தார். அவர் தசரா திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்றார். விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானை மீது ஏறிச் செல்வதில் அவர் முன்னணியில் இருப்பார். மார்க் வில்க்ஸ் தனது 'மைசூர் வரலாற்றைக் கண்டறியும் முயற்சியில் தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' (Historical Sketches of the South of India in an Attempt to Trace the History of Mysore) என்ற புத்தகத்தில் "முஸ்லிம் மன்னர்கள் அனைவரிலும் ஹைதர் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர். அவருக்கு தனது மதப்படி பிரார்த்தனை செய்யவோ, நோன்பு இருக்கவோ தெரியாது, அவருக்கு கற்றுக்கொடுக்கப்படவும் இல்லை. அனைத்து மதங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும், கடவுளின் பார்வையில் அனைத்து மதங்களும் சமம் என்றும் அவர் பொதுவில் அறிவித்தார்." எழுதியுள்ளார். ஏ.கே. சாஸ்திரி தனது 'சிருங்கேரி தர்மஸ்தானின் பதிவுகள்' (The Records of the Sringeri Dharmasthan) என்ற புத்தகத்தில் "ஹைதர் 1769, ஏப்ரல் 27 அன்று சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஹைதர் ஜகத்குருவுக்கு ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஒரு பல்லக்கு, ஐந்து ஒட்டகங்கள் மற்றும் தேவி சாரதா அம்பாளுக்கு ஒரு புடவை, இரண்டு சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொண்ட பணப்பையை பரிசாக அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜகத்குருவை ஒரு சிறந்த மற்றும் புனிதமான ஆத்மா என்று குறிப்பிட்டுள்ளார்." என்று தெரிவித்துள்ளார். ராக்கெட் பயன்பாட்டின் முன்னோடி பட மூலாதாரம்,Gyan Publishing House 1767ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதர் அலி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரை அறிவித்தார். அப்போது ஹைதரின் படையில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இந்த அளவுக்கு ஹைதரிடம் நவீனப் படை உள்ளது என்பது கம்பெனிக்கு அப்போது தெரியாது. ஹைதரின் வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் அதிநவீன பிரெஞ்சு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அவரது பீரங்கிகளின் திறன் மற்றும் வீச்சு கம்பெனியின் படைகளை விட அதிகமாக இருந்தது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் மேரி லாஃபோன் தனது 'இண்டிகா: இந்தோ-பிரெஞ்சு உறவுகளில் கட்டுரைகள் 1630-1976 ' (Indica: Essays in Indo-French Relations 1630-1976) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "பல விஷயங்களில், ஹைதரின் வீரர்கள் ஆங்கிலேய வீரர்களை விட அதிக புத்திசாலித்தனமாகவும், தந்திரோபாய ரீதியாக சிறந்தும் விளங்கினர். எதிரிப் படைகளைக் கலைக்க ஒட்டகங்களில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதில் அவர்கள் திறமை பெற்றிருந்தனர். தனது படைகளை நகர்த்துவதற்கும் தளவாடங்களை வழங்குவதற்கும் ஹைதர் காளைகளைப் பயன்படுத்தினார், அது அக்காலத்தில் ஒரு புதிய விஷயமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்களும் அதைப் பின்பற்றினர்." இறுதியில், ஆங்கிலேயர்கள் ஹைதருடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், ஆங்கிலேயர்களைப் போரில் தோற்கடிக்கவும் ஆச்சரியப்படுத்தவும் முடியும் என்பதை இந்தியாவின் பல மன்னர்கள் உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராக்கெட்டுகளை முதன்முதலில் பயன்படுத்தியது ஹைதர் அலிதான் ஆங்கிலேயர் மீது தாக்குதல் 1780 பிப்ரவரி 7 அன்று, வட்காவ் ஒப்பந்தத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு, மராட்டியத் தலைவர் நானா பட்நாவிஸ் தனது பழைய எதிரியான ஹைதர் அலிக்குக் கடிதம் எழுதினார். அதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத் நிஜாமும் ஹைதருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். கோடைக்காலம் வந்தபோது, இந்த மூன்று சக்திகளும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான திட்டத்தில் பணியாற்றத் தொடங்கின. ஒரு மாதம் கழித்து ஹைதருக்கு பிரான்சிலிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் வந்து சேர்ந்துவிட்டதாக ஆங்கிலேயர்களின் தளமான மதராஸிற்கு (சென்னை) ஒரு செய்தி கிடைத்தது. இறுதியாக, 1780 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று, ஹைதர் அலி மீண்டும் ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த முறை அவரிடம் முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிய படை இருந்தது. அவரது படையில் 60 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 35 ஆயிரம் காலாட்படை வீரர்கள் மற்றும் 100 பீரங்கிகள் இருந்தன. ஆவணங்களின்படி, மதராஸைப் பாதுகாக்க கம்பெனியின் 30 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் உண்மையில் அந்த மாதம் எட்டு ஆயிரம் வீரர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. மார்க் வில்க்ஸ் தனது 'தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' புத்தகத்தில், "ஹைதர் முன்னேறிய வேகம் ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது. இவர்களில் பல வீரர்களின் குடும்பங்கள் ஆற்காட்டில் வசித்து வந்தனர். தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, இந்த வீரர்கள் ஆங்கிலேயர்களை விட்டு விலகினர். அவர்கள் ஹைதரிடம் சரணடைந்தனர் அல்லது லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் நிலைகளின் கதவுகளைத் திறந்து விட்டனர். மதராஸ், வேலூர் மற்றும் ஆற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தீ வைத்து, கம்பெனியின் தளவாட விநியோகத்தை ஹைதர் முழுவதுமாக அழித்தார்." என குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images முன்ரோ மற்றும் பெய்லியின் படைகள் சேரும் முயற்சி தோல்வி 1780ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தென்னிந்தியாவில் ஹைதரின் படைகளை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய படை மதராஸிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. இந்தப் படைக்கு தளபதி ஹெக்டர் முன்ரோ தலைமை தாங்கினார். இவர்தான் 15 ஆண்டுகளுக்கு முன் பக்சர் போரில் சுஜா-உத்-தௌலாவைத் தோற்கடித்தவர். இந்த முறை அவரது படையில் ஐந்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஹைதரின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட மாபெரும் படையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு 30 மைல் வடக்கே இருந்த கர்னல் வில்லியம் பெய்லிக்கு, தனது படைகளுடன் முன்ரோவின் படையுடன் இணையுமாறு உத்தரவு கிடைத்தது. குலாம் ஹுசைன் கான் தனது 'சைர் முதாக்கரின்' (Sair Mutakhareen) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். "சமுத்திரத்தின் கோப அலைகளைப் போல முழு நிலத்தையும் மூடியிருக்கும் அளவு ஹைதரிடம் அவ்வளவு வீரர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த பீரங்கிப்படைக்கு முடிவே இல்லாததுபோல் தெரிந்தது. இதற்கிடையில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது, பெய்லியின் வீரர்கள் கொற்றலையார் ஆற்றைக் கடக்க பதினொரு நாட்கள் ஆனது. இந்த நேரம் ஹைதரின் மகன் திப்பு சுல்தானுக்கு, முன்ரோ மற்றும் பெய்லியின் படைகளுக்கு இடையில் தனது 11 ஆயிரம் வீரர்களை நிறுத்த போதுமானதாக இருந்தது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் பெய்லியின் படையைச் சூழ்ந்த ஹைதரின் படை இரு படைகளுக்கும் இடையே முதல் மோதல் செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்தது. கேப்டன் முவாத் தனது 'போலிலூர் தோல்வியின் அறிக்கை' (Account of the Defeat of Pollilur) என்ற கட்டுரையில், "தொடர்ந்து பெய்த மழையில், நெல் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீரில் சண்டையிட்ட பெய்லியின் படையின் பலவீனங்கள் முழுமையாக வெளிப்பட்டன, அவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. இரு படைகளும் நேருக்கு நேர் சண்டையிடவில்லை, மாறாகத் தொலைவில் இருந்தே போரிட்டன." எனக் குறிப்பிடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்களுக்குச் சற்று முன்னால் எக்காளங்கள் மற்றும் மேளங்களின் சத்தம் கேட்டது. முன்ரோவின் வீரர்கள் தங்களுக்கு உதவ வருகிறார்கள் என்று பெய்லி கருதினார். அந்த வீரர்கள் நெருங்கி வந்தபோது, ஹைதர் தனது 25 ஆயிரம் வீரர்களுடன் தங்கள் முன் வந்துள்ளார் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். பின்னர் பெய்லியின் இளைய சகோதரர் போலிலூர் அறிக்கையில் குறிப்பிடுகையில், "நாங்கள் ஹைதரின் குதிரைப் படையால் சூழப்பட்டோம். அவர்களுக்குப் பின்னால் அவரது பீரங்கிகள் இருந்தன. சுமார் 50 பீரங்கிகள் எங்கள் சுற்றி ஒரு அரை வட்டத்தை உருவாக்கின. ஹைதர் சிறிது நேரம் சண்டையை நிறுத்த உத்தரவிட்டார். பின்னால் வந்த தனது பெரிய பீரங்கிகளை முன்னே கொண்டு வந்தார். அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அங்கே எந்த வாய்ப்பும் இல்லை." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images ஆங்கிலேயர் தோல்வி தன்னிடம் இருந்த அனைத்து வெடிமருந்துகளும் தீர்ந்த பிறகு, சரணடைய முயற்சிக்கும் விதமாக பெய்லி தனது வாளால் ஒரு கைக்குட்டையைக் கட்டி மேலே காட்டினார். பெய்லி தனது வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டார், ஆனால் சில வீரர்கள் அவரது உத்தரவைக் கேட்க முடியாமல் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக, ஹைதர் சரணடைதலை ஏற்க மறுத்துவிட்டார். அவரது குதிரைப்படை, போரில் தோற்ற ஆங்கிலேயப் படையை கொல்லத் தொடங்கியது. ஆலன் ட்ரைடன் தனது 'புலி சண்டை போட்ட போது' (When the Tiger Fought the Thistle) என்ற புத்தகத்தில், 73வது ஹைலேண்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் ஒருவரின் கூற்றை இவ்வாறு பதிவு செய்கிறார்: "மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றனர். சிலர் மூச்சுத் திணறினார்கள். சிலர் தங்கள் சக வீரர்களின் சடலங்கள் மீது விழுந்ததால் நகர முடியாமல் இருந்தனர். சிலர் யானையின் காலடியில் நசுக்கப்பட்டனர். சிலரின் உடைகள் கிழிந்துபோயின, அவர்கள் கொதிக்கும் வெயிலில் தாகத்துடன் கிடந்தனர், எளிதில் காட்டு விலங்குகளுக்கு இரையாயினர். ஆங்கிலேயப் படையில் இருந்த 86 அதிகாரிகளில், 36 பேர் கொல்லப்பட்டனர், 34 பேர் காயமடைந்தனர், மற்றும் 16 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்." பெய்லி தலையிலும் முதுகிலும் காயமடைந்தார். அவர் தனது ஒரு காலையும் இழந்தார். இறுதியாக, பெய்லி ஒரு பீரங்கி வண்டியில் கட்டப்பட்டு ஹைதரின் முன் கொண்டு வரப்பட்டார், மற்ற கைதிகளுடன் தரையில் அமர வைக்கப்பட்டார். தோல்வியடைவது மற்றும் கைதி ஆவதன் பொருள் என்ன என்பதை கம்பெனி வீரர்கள் முதல்முறையாக உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கர்னல் பெய்லி ஹைதர் அலியிடம் சரணடைதல். ஆங்கிலேய கைதிகள் கூறியது என்ன? சுமார் ஏழு ஆயிரம் ஆங்கிலேய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஜேம்ஸ் ஸ்கரி என்ற கைதி தனது 'ஜேம்ஸ் ஸ்கரியின் சிறைப்பிடிப்பு, துன்பம் மற்றும் தப்பித்தல்' (The Captivity, Suffering and Escape of James Scurry) என்ற புத்தகத்தில் "பத்து ஆண்டுகள் ஹைதரின் சிறையில் இருந்த பிறகு, நாற்காலியில் எப்படி உட்காருவது, கத்தி மற்றும் முள் கரண்டியால் எப்படிச் சாப்பிடுவது என்பதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதையும் நான் மறந்துவிட்டேன். என் தோல் கருப்பாகிவிட்டது, ஐரோப்பிய ஆடைகளை அணிய நான் விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். மாயா ஜாசனோஃப் தனது 'பேரரசின் யுகம்: கிழக்கில் வெற்றி மற்றும் சேகரிப்பு 1750-1850' (Age of the Empire Conquest and Collecting in the East 1750-1850) என்ற புத்தகத்தில், "பெய்லியின் தோல்விக்குப் பிறகு ஹைதர் சண்டையைத் தொடர்ந்திருந்தால், ஆங்கிலேயர்களின் மன உறுதி இழந்த நிலையில், செயின்ட் ஜார்ஸ் கோட்டையை அவர் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஹைதர் தனது வீரர்களைப் பாதுகாக்க விரும்பியதால், கம்பெனிக்கு அது அதிர்ஷ்டமாக அமைந்தது. அவர் கம்பெனியுடன் நேரடியாக மோதும் கொள்கையை விட்டுவிட்டு, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்." எனத் தெரிவிக்கிறார். அடுத்த சில மாதங்களில், கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ், மராட்டியர்களுடனான ஹைதரின் கூட்டணியை உடைப்பதில் வெற்றி பெற்றார். ஹேஸ்டிங்ஸ் மராட்டிய தளபதி மஹாத்ஜி சிண்டேயுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார், இதன் கீழ் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களின் நண்பர்களாக மாறினர். இதன் விளைவாக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான அடுத்த போரில் ஹைதரால் தனது வெற்றியை மீண்டும் பெற முடியவில்லை. வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple) தனது 'தி அனார்க்கி' (The Anarchy) என்ற புத்தகத்தில், "1780-இல் ஹைதர் மற்றும் அவரது கூட்டாளிகள் கம்பெனி மீதான அழுத்தத்தைக் குறைக்காமல் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் அதேநேரத்தில் இந்தியாவிலிருந்து என்றென்றும் வெளியேறியிருப்பார்கள். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் தவறியதற்காகப் புனே மற்றும் மைசூர் அரசுகள் பின்னர் எப்போதும் வருந்தின." எனக் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Bloomsbury முதுகு புற்றுநோயால் மரணம் 1782-ஆம் ஆண்டில், ஹைதருக்கு முதுகில் ஒரு கட்டி தோன்றியது. மெதுவாக அந்தக் கட்டியின் அளவு அதிகரித்தது, பின்னர் அது முதுகு புற்றுநோய் என்று தெரியவந்தது. இரண்டாவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது ஹைதரின் இந்த தீவிர நோய் அவரது பலத்தையும் வேகத்தையும் வெகுவாகக் குறைத்தது. ஒரு சாதாரண நிலையிலிருந்து உச்சிக்கு உயர்ந்த இந்த நபர், 1782 டிசம்பர் 7-ஆம் தேதி 60 வயதில் காலமானார். ஷாமா ராவ் தனது 'ஆரம்பம் முதல் 1868 வரை நவீன மைசூர்' (Modern Mysore from Beginning to 1868) என்ற புத்தகத்தில் "ஹைதரின் மரணம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமல்ல என்று கூறுவது மிகையாகாது. அவரது மரணம் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடித்தளத்தை அமைத்தது, இது அவர் உயிருடன் இருந்திருந்தால் சாத்தியமாகியிருக்காது." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev8ze8wyn1o

டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

2 months 1 week ago
டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை Published By: Vishnu 09 Dec, 2025 | 04:14 AM (எம்.மனோசித்ரா) தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள. காலநிலை நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. கடல் நிலை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232830

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 1 week ago
பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி Dec 8, 2025 - 11:32 PM இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmixglft002jfo29n5mf85vaa

தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !

2 months 1 week ago
தமிழக முதல்வருக்கு தொலைப்பேசியில் நன்றி தெரிவித்த விஜித! Dec 8, 2025 - 10:29 PM இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் தமிழக அரசு வழங்கிய ஆதரவு மற்றும் வெளிப்படுத்திய தோழமை உணர்விற்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது நன்றி தெரிவித்தார். அத்துடன், இரு தரப்பிற்கும் இடையிலான மக்கள் ரீதியான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmixecn2t02jeo29n5v3zxcwz

இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 months 1 week ago
இந்தோனேசிய வெள்ள பேரழிவு; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு 09 Dec, 2025 | 11:23 AM இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232844

கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம்

2 months 1 week ago
கலா ஓயா வெள்ள மீட்பு: கடற்படையினரை கௌரவிக்கக் கோரிக்கை Dec 8, 2025 - 09:54 PM டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர். ஆளுநர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல்கலைக்கழக மாணவர்களின் உடல் மற்றும் உள நலம் குறித்து ஆளுநர் விசாரித்தறிந்தார். அதனைத் தொடர்ந்து, பேரிடரின்போது தாம் எதிர்கொண்ட சவாலான அனுபவங்களை மாணவர்கள் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டனர். இதன்போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்களது சக பயணி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் சடலமாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் குறித்தும், அந்தத் தருணத்தில் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடி நிலை குறித்தும் ஆளுநரிடம் விவரித்தனர். மேலும், மீட்புப் பணிகளுக்காக வருகை தந்த மூன்று கடற்படை வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த அந்த ஆபத்தான சூழலில் 24 மணி நேரத்துக்கும் மேலாகத் தம்முடன் தங்கியிருந்ததோடு, வெள்ளத்தில் வீழ்ந்த சிலரையும் உயிருடன் மீட்டனர் என்பதையும் மாணவர்கள் ஆளுநரிடம் நினைவுகூர்ந்தனர். இத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அந்தக் கடற்படை வீரர்களைச் சிறப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் பரிந்துரைக்குமாறும் மாணவர்கள் ஆளுநரிடம் விசேட வேண்டுகோள் விடுத்தனர். மிகவும் ஆபத்தான சூழலில், எவ்வித தாமதமுமின்றி மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், விசேடமாக மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வழிநடத்திய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட மாணவர்கள், இந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையிலான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர். மாணவர்களால் கையளிக்கப்பட்ட குறித்த கடிதத்தை, ஆளுநர் உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனுப்பி வைத்தார். https://adaderanatamil.lk/news/cmixd3mrs02jdo29nxsgtlt9y

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம்!

2 months 1 week ago
Published By: Digital Desk 1 09 Dec, 2025 | 10:38 AM வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232841

அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு

2 months 1 week ago
சிறந்த அறிவிப்பு. நடைமுறைப்படுத்துவார்கள் என நம்புவோம். இப்போது அரச அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்க மூன்று மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறை இருக்கிறது. தனிச் சிங்கள அறிவிப்புக்களையும் அரசாங்க சுற்று நிரூபங்களையும் பார்க்கும் போது பயங்கரக் கோபம் வருவதுண்டு. சிங்களம் நன்கு தெரிந்திருந்தாலும் வேணுமெண்டு தமிழிலோ ஆங்கிலத்திலோ கதைத்தும் இருக்கிறேன். சிறிலங்கன் விமான சேவையில் தமிழர்கள் அபூர்வம். சில தமிழ் விமானிகள் இருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவர். அழகு தமிழிலே அறிவிப்புக்களை செய்திருக்கிறார். தமிழர்கள் இப்படியான துறைகளை தெரிவு வேண்டும். இல்லாவிட்டால் தமிழை ஆங்கிலத்தில்/சிங்களத்தில் எழுதி வாசிப்பதை நிறுத்த முடியாது.

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை!

2 months 1 week ago
ம், பெருந்தொகையான பணம், பொருட்கள் குவிகின்றன. கைகள் கடிக்கிறது, நாவில் நீர் ஊறுகிறது, முன்னைய காலமாக இருந்தால் பலமடங்கு ஒவ்வொரு அரசியல் வாதியின் பெயரிலும் வீட்டிலும் சேமிக்கப்பட்டிருக்கும். இப்போ ஒன்றும் செய்யமுடியவில்லை, மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அதைவிட இவரை ஜனாதிபதியாக்க பேரணி செய்த அரசியல் வாதிகள் அனுராவை புகழ்ந்துகொண்டு அவர் பக்கம் நகர ஆரம்பித்து விட்டார்கள். கூப்பாடு போட்டவர்களும் அமைதியடைந்து விட்டார்கள். இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை கூட்டி என்ன செய்தி சொல்லப்போகிறார்? சந்திரிகா கூட பலநாடுகளின் உதவி வருவதை கண்ட பின், தானும் நிதியளிக்கிறேன் என இரண்டோ, இரண்டரை மில்லியனோ அளித்திருக்கிறார். இருக்க வீடு இல்லை என்று அழுதவர், தனது பெயரும் வரவேண்டும் என் நினைத்துள்ளார் பெரிய விடயம்!

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 1 week ago
தமிழருக்கு உதவி செய்வதில் அமெரிக்காவுக்குத்தான் எவ்வளவு அவசரம் என்று இதிலிருந்து தெரிகிறது. பெருந்தெருக்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது, வாகன வசதியும் தற்போது அவசரமாக இயங்க முடியாத நிலையாக இருக்கலாம். தமிழருக்கு தாமதிக்காமல் அவசரமாக உதவி வழங்க அமெரிக்கா நினைத்து, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த தனது இராணுவ வீரர்களையும் அனுப்பியிருக்கிறது. இது புரியாமல் வந்தவர்கள் பலாலியிலிருந்து இராமேஸ்வரம் எத்தனை கிலோ மீற்றர் என விசாரித்தார்கள் என கதை எழுதவும் கூடும்.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 1 week ago
ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தை அடக்கி அழித்த இலங்கை இராணுவத்தை இயற்கை அனர்தங்களின் போது காணக்கிடைக்கவில்லை என்ற கவலை யாருக்கும் இல்லை.

கலா ஓயா வெள்ளத்தில் பேருந்தில் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் செய்த காரியம்

2 months 1 week ago
ஐயோ, இப்படியுமா? நாங்கள் ஒருபுறம் குற்றம் சாட்டுகிறோம், இவர்களோ எங்களுக்கெதிராக பாராட்டு தெரிவிக்கிறார்கள், இவர்களும் அனுராப்பக்கம் அடித்துச்செல்லப்பட்டுவிட்டார்கள். அடித்தது அனுரா அலையென்றால், டித்வா புயலுமா இப்படி அடிக்குது. இது என்ன அநிஞாயம்?

ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்

2 months 1 week ago
ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள் ; அவசரமாக பாராளுமன்றம் கூட வேண்டும் ; பிரதமரிடம் நாமல் கோரிக்கை!

2 months 1 week ago
கூடி.... என்ன சாதிக்கப்போகிறார்கள்? கூடிய பொழுது எல்லோருமாக குற்றஞ்சாட்டி, கூப்பாடு போட்டு வெளியேறினார்கள், இப்போ ஏன் கூடவேண்டுமென்று அவசரம் காட்டுகிறார் இவர்? இப்போ மக்களுக்கு வேண்டியது உதவி. இவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து என்ன எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓ..... தங்களைப்போல் நிவாரண தொகையை இவர்கள் பதுக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாரோ? கள்ளன் நினைப்பது தன்னைப்போற்தான் மற்றவர்களுமென்று. இவர் அனுராவுக்கு எதிராக ஒரு பேரணி கூட்டினார், அந்தப்பேரணி வெள்ளத்தோடு அனுரா பக்கம் அடியுண்டு போய்விட்டது. ஜனாதிபதி கனவை விட்டு, உழைத்து சாப்பிட முயற்சிக்கவும். உத்தியோகத்திற்கான கல்வித்தகமையுமில்லை, வருந்தியுழைக்க உடல் வளையாது, தந்தை வழி அரசியலும் தேறாது, விதி என்ன செய்ய நினைத்திருக்கிறதோ இவரை. ஆனால் ஒன்று, இவர் அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையே காலம் நிரூபித்து வருகிறது.

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 1 week ago
அடடே.... நிவாரணப்பொருட்கள் விமானத்தில் பலாலிக்கே வந்து இறங்கிவிட்டதா? அனுரா சொல்லி அனுப்பியிருப்பாரோ, அல்லது யாரும் தமிழரை நினைக்கமாட்டார்கள் என்று அமெரிக்காவே நினைத்து வந்திறங்கி விட்டதோ என்னவோ? இனி தமிழர் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழாது....?

மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!

2 months 1 week ago
இவர் செம்மணி நிலவரத்தை பார்வையிட சென்ற போது திருப்பி அனுப்பியிருக்கக்கூடாது என்பது என் கருத்து. எதிலும் மயிர் அளவு நுணுக்கம் பார்க்க வெளிக்கிட்டால் ஒரு கவளம் சோறு கூட சாப்பிட முடியாது.
Checked
Mon, 02/16/2026 - 18:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed