புதிய பதிவுகள்

சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

1 hour 30 minutes ago
நானும் அவர் வழியே செல்வது நல்லது போல் இருக்கு அடிக்கடி மார்க் நம்ம பினாமி முகநூல்களை சந்தேகிப்பது பிடிக்கவில்லை .😄

கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம்

4 hours 48 minutes ago
கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர். மேலதிகமாக 30 படுக்கைகளை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் கிருஸ்ணபுரம் பகுதியில் தொற்று நோயியல் சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டு அங்கு கொவிட் 19 சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொவிட் 19 தொற்று காரணமாக இலகுபடுத்தலிற்காக குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/105027

டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள்

4 hours 51 minutes ago
டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி 2 இலட்சம் கையொப்பங்கள் டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரும் ஒரு இணையத்தள விருப்பம் கோரல் மனு கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட 2 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கோடை ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான கால அவகாசம் உள்ளன. டோக்கியோ உலகளாவிய நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் மற்றும் தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய பொதுமக்களை கொவிட்-19 இலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகள் இன்னும் உள்ளன. இந் நிலையில் "டோக்கியோ ஒலிம்பிக்கை நிறுத்து" (Stop Tokyo Olympics) என்று இணையத்தளத்தில் தொடங்கப்பட்ட இணையத்தள பிரச்சாரம் இரண்டு நாட்களிலேயே 187,000 க்கும் அதிகமான கையொப்பங்களை பெற்று, இரண்டு இலட்சங்களை நெருங்குகிறது. இந்த முடிவுகள் ஜப்பானின் தலைநகரில் பாரிய விளையாட்டு நிகழ்வை நடத்துவதில் பொதுமக்களின் கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொற்றுநோயின் நான்காவது அலையை எதிர்த்து, மந்தமான தடுப்பூசி பிரச்சாரத்துடன் போராடி வரும் ஜப்பானிய அரசாங்கம் டோக்கியோவிலும் மற்ற மூன்று பகுதிகளிலும் அவசரகால நிலைகளை மே இறுதி வரை நீட்டிக்க முயல்கிறது என்று அந் நாட்டு பொருளாதார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 23 ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/105045

பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்!

4 hours 52 minutes ago
பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்! பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும். ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர். ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென பிரேஸில் பொலிஸ்மா அதிபர் ரொனால்டோ ஒலிவேரா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த சோதனையில் குறிவைக்கப்பட்ட கும்பல் போதைப்பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்று அந் நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் பரந்த பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றில் பல சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரேஸிலில் பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் முக்கிய நகரங்களில் குற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எதிராக அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, தொற்றுநோய்களின் போது ரியோவின் வரிய பகுதிகளில் பொலிஸ் நடவடிக்கையை தடை செய்தது. https://www.virakesari.lk/article/105042

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன்

4 hours 55 minutes ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன் May 7, 2021 கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது. மேற்குறித்த தாக்குதலில் தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கடந்த 24ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிகாப், புர்கா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் கேள்வி – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடை பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது திட்டவட்டமாகக் கண்டறியப்படாத நிலையில் இந்தத் தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டுள்ளது? இதன் பின்னணி என்ன? பதில் – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது திட்டவட்டமாகக் கண்டறியப்படாத நிலையில் முஸ்லிம் அமைப்புகள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21, ஏப்ரல் 2019 நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாக வைத்தே தான் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி இன்றைய கோத்தபயா அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியது. தற்போதைய அரசாங்கம் எதிரணியாக இருந்த காலகட்டத்திலே தற்போதைய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும், அவர்கள் சார்ந்த பௌத்த பிக்குகளும், சிங்கள தேசியவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் தினம் தினம் புலனாய்வுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு(CID) பெரும் கோவைகளுடன் சென்று வந்தார்கள். செல்லும் பொழுதும், வரும் பொழுதும் ஊடகத்தினருடன் பேசுவார்கள். இவர்களுக்கு சார்பான 2 தனியார் சிங்கள மொழி தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த நிகழ்வுகளை மிகப் பிரமாண்டமாக மாற்றி திருத்தி எடுத்து, சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்றன. தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைவிட அதிகமாகவே செய்தார்கள். அன்றைய காலகட்டத்திலே இன்றைய அர சாங்கத்தைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கையில், எங்களிடம் சாட்சியங்கள், ஆவணங்கள் தெளிவாக இருக்கின்றன. யார் சூத்திரதாரிகள், யார் பின்னணியாளர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே மாதத்திலே குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று சொன்னார்கள். சில பிக்குகள் இவர்களை யாழ். நீதிமன்றில் நிறுத்தி தூக்கில் தொங்க விடுவோம் என்று சொன்னார்கள். இதற்கமைவாகத் தான் கத்தோலிக்க குரு மறைமாவட்ட பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை கூட இந்திய அரசாங்கத்திற்கு சார்பான பல கருத்துக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டேயிருந்தார். வழமையாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்ந்த வாக்குவங்கியாக இருந்த சிங்கள கத்தோலிக்க வாக்கு வங்கியும்கூட இந்த ஆண்டகையின் கருத்துக்களால் தடுமாறிப்போய் தேர்தலின் போது தங்களின் வாக்குகளை பெருவாரியாக ராஜபக்ஸ அரசாங்கத்திற்கே வழங்கியது. இதற்குப் பெரும் காரணம் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தான். எல்லோரும் சேர்ந்து ஆட்சி பீடம் ஏற்றி விட்டார்கள். இன்று பார்த்தால், அரசாங்கத்தை சார்ந்தவர்களின் நோக்கம் ஆட்சிபீடம் ஏறுவதாக இருந்ததே தவிர சாட்சிகள், ஆவணங்கள் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. எழுதிய, பேசிய, முன்வைத்த குற்றச் சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான சாட்சிகளும் அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே தான் இப்பொழுது இந்த உயிர்த்த ஞாயிறு விவகாரம் திசை திரும்பி பூமராங் போன்று அரசாங்கத்தை நோக்கியே பாய்கின்றது. ஆகவே தான் இந்த தடுமாற்றம். தடுமாற்றத்தின் விளைவாகத் தான் முஸ்லிம் அமைப்புகளை அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள். முஸ்லிம் நபர்களை, இஸ்லாமிய மொளலவிகளை பெயர் சொல்லி தடை செய்திருக்கின்றார்கள். இதற்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளையும், நபர்களையும் கூட அடையாளம் காட்டி விசேட வர்த்தமானி மூலம் தடை செய்திருக்கின்றார்கள். இவை எல்லாம் ராஜபக்ஸ அரசாங்கம் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும், ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவது என்ற நிரந்தரக் கொள்கைக்கு உடன்பாடாக இருக்கின்றன. கேள்வி – குண்டுத் தாக்குதல்கள் உண்மையில் மிகப் பயங்கரமானவை. இந்தத் தடை உத்தரவு எந்த வகையில் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யப் போகின்றது? பதில் – தடை உத்தரவு பாதுகாப்பை உறுதி செய்யப் போகின்றதா என்பது கேலிக்குரிய கேள்வி என்று நினைக்கின்றேன். இந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய கிண்டல், கேலியைத்தான் நீங்கள் உங்கள் கேள்வி மூலம் என்னிடம் போட்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஒருபோதும் தடையுத்தரவுகள் குண்டுத் தாக்குதலை தடை செய்யாது. உண்மையில் இந்தக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும். கண்டறிந்தால் தான் இந்த சாரான் குழு சார்ந்த இந்த பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாது தடுக்க முடியும். சாரான் ஒருபோதுமே சூத்திரதாரி அல்ல. அவரும், அவரை சார்ந்த நபர்களும் வெறும் கருவிதான். எப்பொழுதுமே ஒரு இயக்கத்தின் – அமைப்பின் தலைவர் தற்கொலைக் குண்டுதாரியாக மாறி தன்னை அழித்துக் கொள்ளமாட்டார். அத்தகைய மனோதிடம் அவருக்கு இருந்தாலும்கூட தலைவர் அழிந்து போய் விட்டால், அந்த இயக்தக்தை முன்னெடுக்க ஆள் இருக்க மாட்டார். உலகெங்கும் அப்படி நடக்காது. ஆகவே தன்னை மாய்த்துக் கொண்ட சாரான் ஒருபோதும் இந்த இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அவர் ஒரு கருவி; அவ்வளவுதான். அதற்கு அப்பால் யாரோ இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். இதைக் கேட்கும் போதே நியாயமான, நேர்மையான ஒரு சந்தேகம் மக்கள் மனங்களில் எழுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்களை விட்டு விடுங்கள். தெற்கிலே சிங்கள மக்கள் மத்தியிலே இது எழும்பியிருப்பதை அறியக்கூடியதாய் இருக்கின்றது. சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்கள அரசாங்க ஊழியர்கள், சிங்கள பௌத்த பிக்குகள், சமூக முன்னோடிகள் மற்றும் குறிப்பாக இளைய தலைமுறையினர் போன்றோர் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடிய இடமான சமூக ஊடகங்கள், போராளிகளின் கருத்தைப் பார்த்தால், அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஊடாக மிக அதிகமாகப் பயனடைந்தது வேறு யாருமல்ல, இன்றைய ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான். ஆகவே தான் இந்த அரசாங்கத்தின் மீது பல சந்தேகங்கள் இருந்துள்ளது. சந்தேகத்தை எழுப்பக் கூடிய ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன். எங்கள் மீது பாய்ந்து வருவதில் எந்த பிரயோசனமும் கிடையாது. மாறாக சந்தேக கேள்விகளுக்கு உரிய பதில்களை மக்கள் முன்னே அரசாங்கம் வைத்திட வேண்டும். ஜனாதிபதி ஒவ்வொரு வாரமும் கிராமத்தை சந்திக்கப் போகின்றேன் என்று சொல்லிப் போய்; கிராமத்து துன்பங்கள், துயரங்களை துடைக்கப் போகின்றேன் என்று போய் தனது துன்பங்களை மக்களிடம் அழுது, ஒப்பாரி வைத்து, ஓலமிட்டு வருகின்றார். ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ அதை நிறுத்திவிட்டு இந்த சந்தேகங்களுக்கு விடை தரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். அதன் மூலாகத் தான் இந்தக் குண்டுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியும். https://www.ilakku.org/?p=48997

முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்,...மாவீரன் இராவணன்

4 hours 58 minutes ago
முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம் (“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்”) உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே. மாரீசன் ஆரம்பித்து, இந்திரசித்து, கும்பகர்ணன் போன்ற பலரும் அவனுக்கு அறிவுரை சொல்லியும் அவன் கேட்காத போது வேறு வழியில்லாமல் அவன் பக்கம் இருந்து தங்கள் அழிவைத் தேடிக் கொண்டார்கள். ஆனால் அத்தனை பேரைப் பழி கொடுத்த போதும் அவன் வருந்தினானே ஒழிய மனம் மாறவில்லை. அறிவுரைகளைக் கேட்ட பின்பும் என்ன நடந்தாலும் பின் வாங்க மாட்டேன் என்ற வீரத்துடனே தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருந்தான். உதாரணத்திற்கு அவனுடைய மகன் இந்திரசித்து எதிரிகள் சாதாரண மானிடர்கள் அல்ல என்ற உண்மையைப் போரின் போது அறிந்து சொல்லி இராமனுடன் போர் புரிவதைத் தவிர்க்க முயற்சித்த போது அவன் மகனிடம் சொல்லும் சொற்கள் வீரமும், கர்வமும் நிரம்பிய சொற்கள். மிக மிக அழகாக கம்பன் இராவணன் வார்த்தைகளாகச் சொல்வதைக் கேளுங்கள். ”முன்பு இராமனுடன் போரிட்டு இறந்தவர்கள் எல்லாம் இந்தப் பகையை முடிவுகட்டுவார்கள் என்றோ, இறக்காமல் இருப்பவர்கள் எல்லாம் இராமனை வெற்றி கொள்வார்கள் என்றோ, ஏன் நீயே அவனை வென்று வருவாய் என்ற நம்பிக்கையிலோ நான் இந்தப் பகையை வளர்க்கவில்லை. என் ஒருவனையே நம்பி தான் இந்த நெடும்பகையை நான் தேடிக் கொண்டேன்”. (முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும் உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் என்னையே நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்.) ” நான் வெற்றி பெறா விட்டாலும் கூட வேதம் உள்ளளவும் இராமன் பெயர் நிலைத்து நின்றால் என் பெயரும் நிலைத்து தானல்லவா ஆக வேண்டும். இறப்பை எக்காலத்திலும் தவிர்க்க முடியுமா? அது பொதுவானதேயல்லவா? இன்றிருப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பார்கள். புகழுக்கு இறப்புண்டோ” (வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்? பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?) அவன் கூறியது போல் இராமனை அறிந்தவர் யாரும் இராவணனை அறியாமல் இருக்க முடியுமா? யுகங்கள் கழிந்த பின்னும் இராமன் புகழுடன் இராவணன் பெயரும் சேர்ந்தல்லவா நிலைத்து நிற்கிறது. போர் வருகிறது என்று முடிவானதும் அவன் மனம் பூரித்ததை கம்பன் சொல்கிறான். “சீதையின் எழிலால் மயங்கி, தினமும் ஏங்கியதால் தோள்கள் மெலிந்து போன இராவணன் போர் என்றதும் உற்சாகமான மனத்துடன் வடமேரு மலையை விட தோள்கள் உயர பூரித்தான்” என்கிறான். (பொலிந்தது ஆங்குமிகு போர் எனலோடும் நலிந்த நங்கை எழிலால், வலி நாளும் மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் வலிந்து செல்ல, மிசைச் செல்லும் மனத்தான்.) அப்படிப் போருக்குச் சென்றவன் இராமனின் வில் செய்த அற்புதங்களைக் கண்டு வியக்கிறான். முன்னாளில் தவம் செய்து பிரம்மாவிடம் வரம் வாங்கும் போது மனிதர்களாலும் கொல்லப்படக் கூடாது என்று வரம் வாங்க அவசியம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அவனைப் பொருத்த வரை மனிதர்கள் பலவீனமானவர்கள். அப்படி நினைத்திருந்தவனுக்கு இராமனின் வில் திறத்தைக் காண நேர்ந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் உண்மையான ஒரு வீரனால் தான் இன்னொரு வீரனை ரசிக்க முடியும், பாராட்ட முடியும். ஒரு காலத்தில் மானிடன் என்று இகழ்ந்த இராமனை போரின் போது கண்ட இராவணன் வியந்து மனதுக்குள் பாராட்டுகிறான். “வேதங்கள் தப்பினாலும் இவனது தனுசில் இருந்து கிளம்பும் விற்கள் தங்கள் இலக்கை சென்று சேராமல் தப்புவதில்லை” (“வேதம் தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா”) ஒரு கட்டத்தில் தனக்கு அழிவு நிச்சயம் என்று இராவணன் உணர்கிறான். அப்போது வீடணன் முன்பு இராமனை வேத முதல் நாயகன் என்று சொல்லியிருந்தது நினைவு வருகிறது. ‘அப்படியும் இருக்குமோ” என்ற சந்தேகம் அவனுக்குள் பலமாக எழுகிறது. அப்போதும் “இராமன் யாரானாலும் சரி. என் தனித்தன்மையான வீரம் மிகுந்த ஆண்மை வழி தான் நடப்பேன்” என்று துணிந்து போரைத் தொடர்கிறான். இறுதியில் “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்” என்று இராவணன் இராமனைப் போன்ற ஒரு வீரனைப் பகைவனாகப் பெற்றதற்காகப் பெருமை கொண்டு தனி ஒருவனாகவே போரிட்டு இறக்கிறான். கொடிய சிங்கத்தின் கோபம் போன்ற அவனது சினம் அடங்க, மனம் அடங்க, வஞ்சகம் போய் விட, பகைவர்களைத் தோற்றோடச் செய்த அவனுடைய கைகள் செயல் இழக்க, ஆசைகள் எல்லாம் அடங்க இராவணன் சாய்ந்த போது அவனுடைய ஒவ்வொரு முகமும் மும்மடங்கு பொலிந்ததாக கம்பன் வர்ணிக்கிறான் (வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க, வினையம் வீயத் தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல் அடங்க, ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலை அடங்க நிலை அடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா!) கம்பனின் யுத்த காண்டத்தை முழுமையாகப் படித்தவர்களுக்கு இறுதியில் இராவணன் வீழும் போது ஒருவித மரியாதையையும், பச்சாதாபத்தையும் ஏற்படுத்தி விடுகிறான் கம்பன். இராவணனுடைய குறைகள் ஆயிரம் இருந்தாலும் அவனுடைய வீரம் ஒன்றே கடைசியில் நினைவில் நிற்பதே இராவணன் என்ற கதாபாத்திரத்தின் வெற்றி. நன்றி:ஈழநேசன்

கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

5 hours 2 minutes ago
கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! AdminMay 7, 2021 கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், தென்னாசியாவுக்கு வெளியே இவ்வாறு ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள முதலாவது தீர்மானம் இதுவாகும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழின அழிப்பு இலங்கையில் நடைபெற்றுள்ளதென்பதை அங்கீகரித்து அதனை சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதலாவது வரலாற்று நிகழ்வாகும். இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 இற்கும் அதிகமான தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும். மேற்படி 104 எனும் சட்டமூலமானது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டதென்பதை அங்கீகரிப்பதுடன், அதில் கொல்லப்பட்ட உயிர்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், பாதிப்புக்குள்ளாகி வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் ஊட்டுகிறது. அத்துடன் துன்புறுத்தப்பட்ட தமிழ் மக்களை ஆற்றும் ஒரு வழியாக இருக்கும் எனவும் இது கருதப்படுகின்றது. “இது கனடாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் படிக்கல்லாகும். மேலும், நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவையிட்டு தமிழ் சமூகத்திற்கு மீண்டும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான கல்வி கற்பிப்பதற்கு ஏதுவான சட்டமொன்றை நாங்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளோம்” என மேற்படி சட்டமூலம் 104ஐ கொண்டுவந்தவரும், ஸ்காபரோ – றூஜ் பார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்தார். “தமிழின அழிப்பை தங்கள் சொந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைப்பதிலும், ஊடகங்களில் எடுத்துரைத்து அனைவரையும் ஏற்று அதனை அங்கீகரிக்கச் செய்வதிலும், சட்டமூலம் 104இன் தேவையை விளக்குவதிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்” என தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் சகான் சோமஸ்கந்தராஜா தெரிவித்தார். இதன்போது கடிதங்கள் எழுதுவது முதற்கொண்டு, தத்தமது பகுதி சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து தமிழின அழிப்பு தொடர்பாகவும், அது எப்படித் தம்மைப் பாதித்துள்ளது என்ற தகவல்களையும் ஒவ்வொரு இளையவர்களும் எவ்வாறு எடுத்துரைத்து இதற்கு வலுச் சேர்த்திருந்தனர் என்பது தொடர்பாகவும் அவர் இத்தருணத்தில் பகிர்ந்துகொண்டார். இதேபோல், கனேடிய தமிழ் இளையோர் ஒன்றியம் பொறுப்பாளர் கஜானி பாஸ்கரநாதன் கூறுகையில், தமிழின அழிப்புக் குறித்து ஒன்ராறியோ வாழ் மக்களுக்கு எடுத்து விளக்குவது முன்பை இப்போது மிகவும் முக்கியமாக உள்ளது. கல்வி மூலம் தான் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை அடையாளங்கண்டு தடுத்து நிறுத்த முடியும். அது மட்டுமன்றி, மனித குலத்துக்கு எதிராக ஏனைய இடங்களிலும் இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் இதுபோன்ற நடவடிக்கைகளால் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும்” எனவும் அவர் தெரிவித்தார். கனடாவின் பன்முகத் தன்மைக்கு முதன்மை எடுத்துக்காட்டாக விளங்கும் ஒன்ராறியோ மாநிலத்தில் பொருளாதாரத்துக்கும், கடின உழைப்புக்கும், அதன் கலாசாரத்துக்கும் கூடிய பங்காற்றும் சமூகங்களில் ஒன்றாக தமிழ் சமூகம் விளங்குகிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழிப்பிலிருந்து தப்புவதற்காக ஒன்ராறியோ மாநிலத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இன அழிப்பு நடவடிக்கையினால் இவர்களின் குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. சொல்லொணாத் துயரங்களைக் கடந்து இன அழிப்பிலிருந்து தப்பி உயிர் வாழ்வதற்காக பெருமளவிலான தமிழர்கள் ஒன்ராறியோ மாநிலத்துக்கு வந்தடைந்தனர். குடும்பங்களிலிருந்து பிரிவதும், தமது உறவினர்களை இழப்பதும் ஒரு சமூகத்தில் பாரிய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. எனவே தான், தமிழ் மக்களுக்கு நடத்தப்பட்ட அநீதியை உற்றுநோக்கி, தமிழ் மக்கள் அனுபவித்து வரும் உளவியல் தாக்கங்களையும் கூர்ந்து அணுகி, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது ஓர் இன அழிப்பு என்ற வகையில் சட்டமூலம் 104ஐ ஒன்ராறியோ மாநிலம் கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், அது எதிர்கொள்ளும் உளவியல் தாக்கங்களிலிருந்து மீண்டு வரவும், தனது இயல்பு வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கும் நடைபெற்ற இன அழிப்பினை அங்கீகரிப்பது முக்கியமானதொன்றாகும். கடந்த 2014 ஆம் ஆண்டில், ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ ஆக அறிவிக்கும் சட்டமூலத்தினை கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ரொட் ஸ்மித் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் ரொட் ஸ்மித் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்தார். மேற்படி சட்டமூலமான ‘தமிழ் மரபுத் திங்கள்’ சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு ஐந்து முறை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருந்தது. அந்த வகையில், ஸ்காபரோ – றூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் 104ஐ முதல் அறிமுகத்திலேயே அங்கீகரித்து சட்டமூலமாக்கிய முதல்வர் ஃபோர்ட் மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் அவர்களது தலைமைத்துவத்துக்காக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் இந்தச் சட்டமூலம் 104ஐ கொண்டுவந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களுக்கும் எமது நன்றிகள்” என கனேடிய தமிழர் தேசிய அவையின் பேச்சாளர் றுக்ஸா சிவநாதன் தெரிவித்துள்ளார். http://www.errimalai.com/?p=63765
Checked
Fri, 05/07/2021 - 10:17
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed