தமிழகச் செய்திகள்

இடிந்த வீடுகள், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - தமிழ்நாட்டில் திட்வா புயல் பாதிப்பு விவரம்

3 months 2 weeks ago

திட்வா புயல், தமிழ்நாடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி.

30 நவம்பர் 2025, 09:41 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

தஞ்சாவூர்

கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,ஆலமன்குறிச்சியில் இடிந்து விழுந்த வீடும், பலியான ரேணுகாவும்

கடலூர்

திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன.

மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது.

நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர்.

விழுப்புரம்

திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார்.

மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,புதுச்சேரியில் சீற்றத்தோடு காணப்படும் கடல்

புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன.

புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,காரைக்காலில் மழையால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்புத் துறையினர்

காரைக்கால்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது.

காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78v90l8kedo

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

3 months 2 weeks ago

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே !

tamilexamfailed-1764492116.jpg

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது.


தமிழ் - 216,

ஆங்கிலம் - 197,

கணிதம் - 232,

இயற்பியல் - 233,

வேதியியல் - 217,

தாவரவியல் - 147,

விலங்கியல் - 131,

வணிகவியல் 198,

பொருறியல் - 169,

வரலாறு - 68,

புவியியல் - 15,

அரசியல் அறிவியல் - 14,

கணினி பயிற்றுநர் 57,

உடற்கல்வி இயக்குநர் 102

என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும்.

ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை.

இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html

டிஸ்கி :

இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும்

அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?

'2 நாட்களாக உணவில்லை' - கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

3 months 3 weeks ago

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன.

இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

'கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. +94 773727832 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கூறியது என்ன?

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானியார் சுபைர், சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதே பயணத் திட்டம். வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இலங்கை வந்து சேர்ந்தோம். திட்வா புயல் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறிவிட்டார்கள். 24 மணிநேரங்களைக் கடந்தும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர்கள் கூட இங்கு சிக்கியுள்ளனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கடந்த 2 நாட்களாக, உறங்குவதற்கான இடமோ, உணவு மற்றும் தண்ணீரோ வழங்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் முறையான தகவல்கள் எதுவும் கூறவில்லை." என்கிறார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவிகள் ஏதும் கிடைத்ததா எனக் கேட்டபோது, "இந்திய தூதரக அதிகாரிகள் இன்று மதியம் தான் வந்து எங்களை சந்தித்தனர். தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். ஆனால் எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறினார்.

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

கொழும்பு விமான நிலையத்திலிருந்து பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி, "உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களுக்கு மேலாக எங்களால் எப்படி இருக்க முடியும். விமான நிலையத்தில் இந்திய ரூபாயை ஏற்க மறுக்கிறார்கள். அதற்காக போராட்டம் கூட நடத்தினோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்தித்து உதவுவதாக கூறினர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு இல்லாமல் இங்கு சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்" என்று கூறினார்.

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மகேஸ்வரி, "இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டன எனக் கூறுகிறார்கள். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.

நவம்பர் 27 அன்று அபுதாபியிலிருந்து இலங்கை வந்துசேர்ந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சதீஷ்குமார், "இந்திய தூதரக அதிகாரிகள் வந்து அளித்த உணவு இங்கு இருந்த பாதி பேருக்கு கூட போதவில்லை. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. நான் இந்தியாவுக்கு வர சில நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது இங்கேயே 3 நாட்கள் கழிந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்" என்று கூறினார்.

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

திட்வா புயல்

பட மூலாதாரம்,@IndiainSL

படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை விமான நிலையம் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

"'ஆபரேஷன் சாகர்பந்து' தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் C-130 விமானம் - கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றடைந்தது" என்று எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்." என்று கூறினார்.

மேலும், "இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yqdrnll3ro

Checked
Fri, 03/20/2026 - 19:44
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed