பூகம்பம் பிறந்த பொன்னாள்
======================
வாழ்வு அழிந்தது....
எங்கள் வளம் அழிந்தது...
பூரண கும்பம் போன்ற எங்கள் ஜீவிதம் ...
பொட்டிழந்த பூவை என பொலிவிளந்து கிடந்தது!
மாவிலை தோரணம் கொண்டலங்கரித்தது போன்ற எங்கள் முற்றம்
அலரி பூக்கள் நிறைந்து அழகிழந்து போனது!
பார்த்து பார்த்து நாம் வாசலில் வளர்த்த ரோஜாவை ..சிங்களம்
காலில் போட்டு நசுக்கி கழுத்தறுத்த பின்
எம் தாயின் காலடியில் போட்டு சென்றது!
தேம்பி தேம்பி அழுது நின்றோம்
தெய்வமே காப்பாற்று என்று கதறி அழுதோம்!
வானம் பிளந்தது ..
வந்தேன் என்று சொல்லி வல்வை மண்ணில்
சிவப்பு சூரியன் என எங்கள்
தேவன் வந்து பிறந்தான்!
தன் இரும்பு கரங்கள் கொண்டு ..
எம் தேச எல்லைகள் எங்கும்
வேலிகள் போட்டான்!
சோற்றுக்கும் , சுருட்டுக்கும்...
ஓட்டு வீட்டுக்கும் ...
ஆழமில்லா கிணற்றுக்கும்..
அதனருகே ஒரு தேசி மரத்துக்கும்
மாய்ந்து மாய்ந்து உழைத்தால் போதும்..
அதுவே வாழ்வென்று மண்டிக்கிடந்த இனத்தை..
மானத்தின் தோழில் தாங்கினீரே..
மண்டியிட்டு தொழுகிறோம் உம்மை!
மண்ணில் பிறந்த மனிதன் எவனும்..
தன் இனத்தின் பெயரால் அடையாளம் கொள்வான்..
இங்கு ஒரு மனிதனின் பெயரால் ..
ஒரு இனமே அடையாளம் கொண்டதே..
கை கூப்பி வணங்கி நிற்கிறோம்
கடவுளிலும் மேலானவரே!
வெட்டியும் குத்தியும் ...
கொன்று வீசியும் குதூகலித்து இருந்தவர் எல்லாம்..
இப்போ எட்டி நின்று பேசுகிறார் எம்மை கண்டால்...
பயம் கலந்த மரியாதை...
மரியாதை கலந்த பயம்...
என்ன தவம் செய்தோம்?
உம் காலமதில் நாம் கண் மூடாதிருக்க!
காட்டை எரித்து குளிர் காயலாம் என்று
கனவு கண்டனர்!
நெருப்பை தின்று நீர் குடிக்கலாம் என்று
நினைத்து இருந்தனர்!
அத்தனையும் நடந்திருக்கும்..
நீர் அவதாரம் எடுக்காமல் போயிருந்தால்!
கார்த்திகை - 26 உம் பிறந்த நாள் மட்டுமா?
எம்மை கொன்று தின்ன வந்தவர் காலடியில் எல்லாம்
பூகம்பம் பிறந்த பொன்னாள்..!
வீரம் என்பது ஊர் அறிந்த மூன்றெழுத்து அல்ல!
அது பிரபாகரன் என்று உலகம் அறிந்த
ஆறு எழுத்திலும் அர்த்தம் கொள்ளும்!
தலைவன் என்றானவன்..
எப்பிடி இருக்க கூடாது என்பதற்கு
உலகில் உதாரணம் பலர் உண்டு!
ஒரு தலைவன் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்பதற்கு ..
உம்மை விட்டால் வேறு எவருண்டு?
அகவை 51 ஆ உமக்கு?
ஒரு போதும் இல்லை..
உலகில் அடங்கி கிடந்து அல்லலுறும்
ஒவ்வொரு மனிதன் தாய் வயிற்றிலும்
உமக்கு ஒவ்வொரு நாளும் ஜனனம்.!
அகவை ஒன்று கூட ஒரு போதும் ஆகாது உமக்கு!
வீரம் விண் முட்டும் மாமலையே
உந்தன் அடி வாரத்தில் நாணல்களாய்
வாழ்ந்து உம் பக்கம் தலை சாய்ந்து- பின்
காய்ந்து போவதில் கரையுள்
அடங்க கௌரவம் கொண்டோம்!
தமிழ் ஈழம் என்பது நீர் காதல் கொண்ட தேசம்!
பிரபாகரன் தேசமே இனி பிறக்கும்
தமிழன் ஒவ்வொருவருக்கும் தேசம்!
வாழ்த்த வயசில்லை...
போற்றி வணங்குகிறோம்!
Recommended Comments