தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய் பதிக்கும் பொறியாய், பாரிய மல
உலக வல்லாதிக்கத்தின்
அவலம் உணராக் கோட்பாடுகளும்,
ஆயுதப் பரீட்சிப்பும்
தொடர்கதையாக எம்மீது எழுதப்படுகின்றன.
தொடரும் போரும்,
கந்தகத்தோடு உழலும் வாழ்வியலும்,
பொருத்தமில்லாச் சமன்பாடுகளும்
எம்மை நோக்கித் திணிக்கப்படுகின்றன.
எங்கள் சுயமும்,
எமக்கான வாழ்வும் மறுக்கப்படுகின்றன.
குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.
ஒரு இனவாதத்தின் படர்கை எம்
வரலாறுகளை தீய்த்து மறைக்கிறது.
முற்றுப் பெறாத கால நீட்சியில்
எம்மினத்தின் வாழ்வு வேதனைக்குள்ளாகிறது.
வெற்றிக் களிப்பில் கூத்தாடும் எதிரியின் ஆட்டம்
உசுப்ப உசுப்ப உக்கிரமாகிறது விடுதலை மூச்சு.
ஒடுக்குதற்கெதிரான நிமிர்வு
வியாபிக்க விடுதலைச் சுடரில் சுதந்திர வாசனையை
எம்வாசல் நோக்கி அள்ளிவருகிறது காற்று.
அற்றதொரு பொருளுக்குள் புதையும் சுயத்தை உணர்ந்தாலே
அடங்காச்சினம் அவதாரம் எடுக்கும்
வெறுமையும் விரக்தியும் வைரம் பாயப் பாய
மரணத்தை மீறி எழும் எம்வாழ்வு.
நிமிர்ந்த பரம்பரை நிலை குலைவதில்லையென
எழுகைப் பாட்டெழுதும் ஓர்மக் கோல்கள்
அடிக்கின்ற காற்றிற்கெல்லாம் அள்ளுண்டு போகாது.
துருவப் பனிக்காட்டில் அனல்பற்றி எரிகிறது.
உருளும் உலகிருப்பில் ஊர்மூச்சு எழுகிறது.
சத்திய வேள்விகள் சாய்ந்ததாய்ச் சரிதம் இல்லை
சந்தனக் காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை
நித்திலச் சூரியனை இருள் மூடித் தின்பதில்லை
நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை
தேசத்தின் திசையெங்கும் தீ மூண்டு எரிகிறது
மனிதத்தின் உயிர்ப்பெல்லாம் மண்மூடிக் கிடக்கிறது
தமிழா உனக்கு என்ன விதி?
தணிந்தது போதும்.
தணல் மூட்டு இனி.
கந்தகம் குதறும் கார்காலப் பொழுது இது
காரணம் பலகூறி கண்வளர்தல் ஆகாது
வீட்டோடு மாப்பிள்ளை என்று கூற்றுவன் ஆனபின்னால்
வேதாந்தம் பேசுதல் விக்கினத்தைத் தீர்க்காது.
வேட்டுக்கள் மாள்வளித்தால் விதியென்று நோகாதே.
வீணே வெளிப் புலத்தில் விலகி நின்று வாடாதே.
ஊர் உறவு கூர் முனையில் உருக்குலையும் நிலை போதும்
உழு ஒடுக்கும் உலகமுகம் உடைத்தெறிவோம் வருக.
தாயகம் தன்னை நெஞ்சிலே தாங்கினால்
சாதரும் நஞ்சிலும் அமுதமே சுரக்கும்.
விழுதுகள் பலம் எது விடைதரும் காலம்.
அழுததும், தொழுததும், அலைந்ததும் போதும்.
விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம்.
உழு களம் நிமிர்கையில் உலகதை ஏற்கும்
நிலை தர முனைவதே நிகழ்காலப்பணியது.
இயல்பாய் எழுவாய் புயலாய்ச் சுழல்வாய்
தமிழா. இதுவே முடிவாய் முயல்வாய்
எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க,
விழும் கனி மடியினில் உலகமும் வியக்க
புலரும் பொழுதினில் உளக்கனல் ஏந்து.
தடைகளை உடைத்திட உலகினை உலுக்கு.
எழும் பெரும் புயலென மிளிர் தமிழ்மகவே!
தமிழ் நிலம் விரிகையில் தழுவும் கரமே!
வலுமிகக் கொண்ட வடிவம் கொள்க.
தகிக்கும் தீயாய், தளரா வலுவாய் உதிக்கும் சுடராய், ஓர்ம உணர்வாய்
பதிக்கும் பொறியாய், பாரிய மலையாய் எதுக்கும் துணிவாய் என்பதாய் எழுக.
0 Comments
Recommended Comments
There are no comments to display.