சுகம் எதுவோ?

திங்கள் முகம் சிரிக்க
திக்கெட்டும் ஒளி பொங்க
தங்க மண் பரப்பில்
தலை சாய்ந்தால் அது சுகமா?

தென்றல் தாலாட்ட
தென்னங் கீற்றிசைக்க
தன்னந் தனியிருந்து
தான் இரசித்தால் அது சுகமா?

முல்லை முகையவிழ
முசுரங்கள் தள்ளாட - அதன்
எல்லையில் போயிருந்து
எழில் பருகில் அது சுகமா?

மெல்ல மினுக்கி - வான்
மின்மினிகள் கண்சிமிட்ட
காத்திருந்நு அவ்வனப்பில்
கரைந்திடின் அது சுகமா?

அலை வந்து தாலாட்டும்
அழகான புூமியிலே
அடி பதித்து நடை பயின்றால்
அகத்திற்கு அது சுகமா?

கிழவானின் ஒளிச் சிரிப்பில்
வளமாகும் சிந்தனையால்
உளப்பாடு உயிர்ப்படையும்
இளங்காலை அது சுகமா?

அன்னையவள் அருகிருந்து - என்
அன்னமே என அணைத்தால்
அந்நேரம் அவள் அணைப்பில்
கண் அயர்ந்தால் அது சுகமா?

கண்களிலே கதைபேசி
காரியத்தில் ஒருமிக்கும்
கண்மணிகள் கரமிணைந்தால்
காதலுக்கு அது சுகமா?

அள்ளி எனைத் தூக்கி
ஆயிரம் கதை சொன்ன
அப்பா தலை வருடல்
அலுக்காத பெரும் சுகமோ?

கிள்ளி வலி தந்து
துள்ளிச் சண்டையிடும்
அக்காவின் தர்ம அடி
தந்ததுதான் ஒரு சுகமோ?
Recommended Comments