About Me
சிறிலங்கா பெளத்த பிக்குகள் தமிழை கற்றுக் கொள்ளும் புதிய திட்டம்.
சிறிலங்காவில் சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உண்டாக்கும் வகையில் பௌத்த மதத்தை சேர்ந்த துறவிகள் தமிழ் கற்றுக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நிதியை சிறிலங்கா அரசிடம் கோரியுள்ளது அகில இலங்கை பெளத்த காங்கிரஸ் [All Ceylon Buddhist Congress - ACBC].
பெளத்த பிக்குகளுக்கு தமிழ் வகுப்புக்களை தொடங்க 208,400 சிறிலங்கா ரூபாக்கள் தேவைப்படுவதாக புத்தசாசன மற்றும் சமயத்துறை அமைச்சுவுக்கு கடிதம் ஒன்றையும் அது அனுப்பியுள்ளது.
தமிழ் பேசக்கூடிய இந்து மக்களிடம் பெளத்த மதத்தின் கொள்கைகளை பரப்பவும் அதன் மூலம் பல்லாண்டு காலமாக இரு இனத்தவர்க்கும் இடையே நிலவி வந்த வேறுபாட்டை ஒழித்து ஒற்றுமையை ஏற்படுத்தவும் அகில இலங்கை பெளத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அது மட்டுமல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பயன்படாத நிலையில் இருக்கும் பெளத்த கோயில்களை மீண்டும் நடத்தவும் உதவ போவதாக அறிவித்துள்ளது.
பெளத்த பிக்குகளுக்கான முதல் தமிழ் வகுப்புக்கள் கொழும்புவில் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளன.
இந்த வேளையில் இந்தியாவிருந்து சுவாமி தயானந்த சரஸ்வதியை தலைமையாகக் கொண்ட இந்து சமய தலைவர் குழு ஒன்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான சமய மற்றும் கலாச்சார இணைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வரவுள்ளது.
உள்நாட்டில் நடக்கவிருக்கும் இரண்டு நாள் சமய ஒருங்கிணைப்பு கருத்தரங்குகளில் இந்திய சமய தலைவர்களும் சிறிலங்காவில் உள்ள மகாபோதி சங்கத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே புரிந்துணர்வையும் , நம்பிக்கையையும் ஏற்படுத்துவது, சிறிலங்காவில் உள்ள கோவில்களை மீளக் கட்டியெழுப்புவது, பெளத்த மற்றும் இந்து சமய விழாக்களை ஏற்பாடு செய்வது குறித்து இந்த கருத்தரங்கின் போது கலந்துரையாட உள்ளனர்.
இந்த சுற்றுப் பயணத்தின் போது இந்திய சமய தலைவர்கள் சிறிலங்கா பிரதமரையும் சந்திக்க உள்ளனர்.சிறிலங்கா பெளத்த பிக்குகள் தமிழை கற்றுக் கொள்ளும் புதிய திட்டம்.