Search the Community
Showing results for tags 'இராசரத்தினம் ஈழம்'.
-
'தமிழீழத்தின் நேதாஜி' 'படிம விளக்கம்: யாழ்ப்பாணத்தில் எங்கையோ ஓரிடத்தில் நின்று புகைப்படத்திற்குப் பொதிக்கிறார் / படிமப்புரவு: நன்னிச் சோழன். ஆனால் இதை இலவச பதிப்புரிமையின் கீழ் வெளியிடுகிறேன்' மூலம்: --> 'விடுதலைப்புலிகள்', குரல் 3, சூலை 1984, பக்: 10 --> ஈழநாதத்தின் 'வெள்ளி மஞ்சரி', 26|7|1991, பக்: 5 --> 'விடுதலைப்புலிகளின் வீர வரலாறு' நூல், பக்: 8-9 எழுத்துணரியாக்கம் & தொகுப்பு: நன்னிச் சோழன் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் சாவகச்சேரியில் எடுத்த முத்தமிழ் விழாவில் தமிழீழத் தேசிய விருதான 'மாமனிதர்' வழங்கி மதிப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவரான திரு. ஆ. இராசரத்தினம் ஆவர்கள் பற்றிய குறிப்பை இங்கே தருகின்றோம். மறைந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்களின் புதல்வியர் இருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்களுடன் இயக்கத்தின் ஆரம்பக் காலத்தில் திரு ஆ. இராசரத்தினம் ஆவர்கள் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார். "எளிமை, அடக்கம், ஓயாத உழைப்பு, இலட்சியப்பற்று என்பன இந்தத் தூய இலட்சியவாதியின் மிக நல்ல பண்புகளாகும். விரிந்த நெற்றி - அதிலே விழுந்திருக்கும் சிந்தனைச் சுருக்கங்கள் - நிறைந்த சிரிப்பு - ஒளிவீசும் கண்கள் - ஒல்லியான உடம்பு - திண்ணியம் உள்ளம் இவற்றுடன் தமிழ், தமிழினம், தமிழீழ விடுதலை பற்றிய எண்ணங்களுடனேயே வாழ்ந்து வந்தார் திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள்." இந்தக் கூற்று 1976லே திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் அமரராகியபோது நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் அவரது நண்பர் ஒருவரின் எடுத்தியம்பல் ஆகும். இயல்பாகவே இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவரான திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் அனுராதபுரம் மாவடியை பிறப்பிடமாகக் கொண்டவர் - 1956இல் சிங்களம் மட்டுமே அரச கருமமொழி என்ற சட்டம் வந்ததைத் தொடர்ந்து அவரது இனவிடுதலை பற்றிய ஈடுபாடு தொடர்கிறது. 1956 முதல் 1961 வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட அறவழிப் போராட்டங்கள் அனைத்திலும் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் ஈடுபாடு காட்டியிருக்கிறார். அரசாங்க ஊழியராக பணியற்றிய வேளையிலும் தமிழர்களின் உரிமைக்கா குரலை ஓங்கியொலிக்கச் செய்வதற்கான 'மொழிவழி தொழிற்சங்கம்' அமைக்கப்படல் வேண்டும் எனக் கருதிச் செயற்பட்டவர் ஆவார். இதனால் 'தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்' என்ற அமைப்பின் முன்னோடியகாவும் செயற்பட்டார். சிறீலங்கா அரசியலமைப்பின் 29வது விதியின்படி 'சிங்களம் மட்டும் சட்டம்' வலுவற்றது என்று முன்னாள் நீதியரசர் திரு. கிறெஸ்ரர் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட 'கோடீஸ்வரன் வழக்கில்' மிகவும் தீவிர அக்கறை காட்டி உழைத்தவர். உண்மைத் தொண்டராக பற்றுறுதி மிக்க உழைப்பாளியாக விளங்கிய திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் 1961ம் ஆண்டு தமிழீழ மடங்கிலும் நடைபெற்ற அறவழிப் போராட்டமான சத்தியாக்கிரகம்(உண்மைப்பற்று), மறியல் போன்ற மக்கள் போராட்டங்கள் படைத்துறை அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது கண்டு உள்ளம் கொதித்தார். வரலாற்றின் கசப்பான அனுபவங்கள் தந்த படிப்பினைகளால் அறவழிப்பட்ட போராட்டங்களில் நம்பிக்கையிழந்து மென்முறைப் போக்கை கைவிட்டார். 1961 இல் சத்தியாக்கிரகம் முறியடிக்கப்பட்டு தமிழரசுக் கட்சி தடைச் செய்யப்பட்டு, கட்சி உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் இருந்தபோது, திரு. இராசரத்தினம் மட்டும் சும்மா இருக்கவில்லை. பல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவர் வன்முறைப் போராட்டத்தில் இறங்கினார். மிகவும் கமுக்கமான முறையில் தலைமறைவு இயக்கம் செயற்பட்டது. அரசுக்குச் சொந்தமான பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டன; யாழ். அரசாங்கச் செயலகத்தையே தீக்கிரையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் சில எதிர்பாராத தடைகளால் கைகூடவில்லை. ஆயினும் அந்த முயற்சிக்கும் முனைப்பிற்கும் யாழ்ப்பாணத்திலே அறுபதுகளிலேயே வித்திட்டவர்களில் திரு. இராசரத்தினம் முக்கியமானவர்; முதன்மையானர். மேலும், அரச உடமைகளை நாசமாக்குவதன் மூலம் தமது இனத்தின் உள்ளக்கொதிப்பை - கோபக்கனலை எடுத்துக்காட்டுவதில் முன்னின்றவர்; முனைப்புடன் ஈடுபட்டவர். சிங்கள சட்டத்தைத் தொடர்ந்து அரசாங்க வேலையிலிருந்து சிங்களம் படிக்க மறுத்து ஓய்வு பெற்றுக் கொண்ட திரு இராசரத்தினம், அதன் பின்பு தமிழீழ புரட்சியாளர்களில் ஒருவராக மாறினார். இவ்வாறாக சிங்கள வல்லாட்சி ஒடுக்குமுறையிலிருந்து தமிழீழம் விடுதலைபெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தை மனதில் இருத்தி எழுபதுகளிலும் அதற்கு முன்பாகவும் தூய பணியாற்றியவர்களுள் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் குறிப்பிடப்படவேண்டியவர் ஆகிறார். 'இலங்கை மீண்டும் எரிகிறது', 'Tamils Need a Nation, Why? : The History of Thamiraparani' என்பன போன்ற பல நூல்களை எழுதி தமிழ் மக்களின் சிக்கலை உலகின் மனசாட்சிக்கு முன் எடுத்துரைக்கப் பாடுபட்டவர் திரு ஆ. இராசரத்தினம் அவர்கள். இவற்றுள் தமிழீழ மக்கள் மத்தியில் மிகவும் பரவலறியான, 'இலங்கை மீண்டும் எரிகிறது' என்கிற நூல் இலங்கையில் சிங்கள அரசிற்கு சினத்தையூட்டிய சிறிய நூல். அதன் பெரும்பாலான பகுதியை 'சேரன்' என்ற பெயருக்குள் மறைந்து நின்று எழுதியவர் இராசரத்தினமேயேவார். இதேபோல் இவரால் எழுதப்பட்டு சிங்கள இனவாத அரசினால் தடைசெய்யப்பட்ட மற்றோர் நூல்தான் 'Why Tamils Need a Nation' (தமிழர்கட்கு ஏன் ஒரு நாடு வேண்டும்?) என்பதாகும். தொய்வு நோய் ஏற்படுத்தும் அவதி ஒருபுறமும், பசிப்பிணி ஒரு புறமும், மனைவி பிள்ளைகள் பற்றிய கவலை மற்றொரு புறமுமாக தாக்கியபோது சோர்வடையாமல் தளர்ச்சியின்றி தமிழின விடுதலைக்காக பணியாற்றிய திரு இராசரத்தினம் அவர்களின் வாழ்க்கை பல்வேறு படிப்பினைகளைத் தருவதாகும். குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைப் பீடத்தினரின் வஞ்சகத்திற்கு திரு. இராசரத்தினம் அவர்களின் கடைசிக்கால வாழ்க்கை ஒரு சாட்சியாகும். "நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன், தலைவர்களின் உதாசீனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டறிந்தேன், கண்டனம் செய்தேன்" என 1973ன் ஏப்ரல் 24ல் தனது நாட்குறிப்பில் திரு இராசரத்தினம் அவர்கள் எழுதியிருப்பது ஒருசிறு சான்று. ஆனால் எழுபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாட்டுத் தலைவர்களோடும் கட்சிகளோடும் தொடர்புகளை முதன்முதலில் ஏற்படுத்திக்கொண்ட பெருமையும் உரிமையும் திரு ஆ. இராசரத்தினம் அவர்களுக்கே சொந்தம். 1971ம் ஆண்டில் திரு. ஆ. இராசரத்தினம் அவர்கள், தமிழ்நாட்டுக்கு திரு. அமிர்தலிங்கம், திரு. கோவை மகேசன் ஆகியோருடன் வந்து அறிமுகங்களை இன்னும் வளர்த்துக்கொண்டார். 1972 ஆம் ஆண்டிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று தலைவர்களையும் செய்தியாளர்களையும் சந்திக்க வைத்து தமிழ்நாட்டிற்கு தமிழீழ சிக்கலை அறிமுகம் செய்வதற்கு காரணகருத்தாவாக விளங்கினார் என்பது மிகவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது. 1973 மார்ச் 23ல் யாழ்ப்பாணம் பண்ணப்பாலத்திற்கருகே அன்றைய சிறீலங்கா அரசின் கைக்கூலி அமைச்சரான குமாரசூரியர் சென்ற மகிழுந்தை குண்டுவைத்துத் தகர்க்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரால் காவல்துறையால் தேடப்பட்டார். காவல்துறையினர் விரித்த வலைக்குள் சிக்காமல் எப்படியோ தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றார். தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய கட்டுப்பாடான ஒரு புரட்சிகரமான இயக்கத்தை கட்டி எழுப்பும் அவாவில் தீவிரமாக செயற்பட்டவர். திரு இராசரத்தினம் அவர்களின் நாட்குறிப்பில் இருந்த சில பகுதிகளை இங்கு காணலாம். 1973 ஏப்ரல் 21: "எனது இனம் சுயஉரிமையை பெறவேண்டுமானால் பலாத்காரப் புரட்சிதான் ஒரே வழி. இதற்காக எனது உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்விடையத்தில் எனது மனம் உறுதியடைந்துகொண்டு வருகிறது." 1973 மே 6: "ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களைக் கொண்ட விடுதலைப்படை அமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். இவர்களின் உடைக்கு ஒரு நிறம்." தமிழீழத்தில் தமிழர்கள் ஆயுதப் புரட்சியை ஏற்படுத்தாது விட்டால் நமது இனம் அழிந்துவிடும் எனக் கருதிய அவர், இதற்குரிய வழிவகைகளை வகுப்பதற்காக மற்றைய நாடுகளில் நடைபெற்ற இயக்கங்களின் வரலாறுகளைக் கவனமாகப் படித்து வந்தார். 'Rebels' என்ற நூலை வாசித்துப் பார்த்ததிலிருந்து அதைப் போன்றதொரு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தார். இந்த வேளையிலேயே தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளர்களில் ஒருவரான சத்தியசீலன் கைதானதைத் தொடர்ந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்புச் சீர்குலைந்து உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தலைமறைவாகிவிட்ட நிலையில் தமிழகம் சென்றிருந்த வே. பிரபாகரனும் இராசரத்தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் மாணவர் பேரவை அமைப்பு சீர்குலைவிற்குப் பிறகு தலைமறைவானவர்கள் மீண்டும் இயங்குவதற்குத் தயங்கி நின்ற வேளையில் தமிழீழ விடுதலைக்காக ஒரு கட்டுப்பாடான விடுதலை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்த பிரபாகரனுக்கு இராசரத்தினம் அவர்களின் தொடர்பு ஒரு புதிய நம்பியைக்கையை ஊட்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்த பல்வேறு நாட்டு விடுதலை இயக்கங்களின் வரலாறுகளையும் படைத்துறை அமைப்புக்குத் தேவையான பல செய்திகளையும் தமிழில் மொழிபெயர்த்தார் திரு இராசரத்தினம் அவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு முன்னோடி இயக்கமான 'புதிய தமிழ்ப் புலிகள்' (TNT) இயக்கம் என்ற பெயர் சூட்டப்படுவதற்கு திரு இராசரத்தினம் அவர்களின் ஆலோசனை மூலகாரணமாக இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாடு சென்று விடுதலைப்படையை அமைத்துப் போராடி வீரமரணம் அடைந்தவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள். அதுபோலவே தமிழீழ விடுதலைப் போராட்டதிற்காக இலங்கையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைக்கு போராட ஒரு ஆயுதப்படையை அமைக்க வேண்டும் என்ற ஆவலில் செயற்பட்டு வந்தவர் ஆ. இராசரத்தினம் அவர்கள். தமிழ்நாட்டிலேயே அவர் தன்னுயிரையும் ஈந்துவிடவும் நேரிட்டது. மறைந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் தமிழீழ மக்களால் 'தமிழீழத்தின் நேதாஜி' என நினைவு கூரப்படுதல் பொருத்தமானதே. அவர் கனவு கண்ட 'தமிழரின் தேசிய இராணுவ அமைப்பு' என்பதும் 'தமிழீழ விடுதலைப் போராட்டம்' என்பதும் கண்முன்னான நிகழ்வுகளாக மாறியிருக்கும் இவ்வேளையில் அவரது நினைவைத் தூண்டுதல் உண்மைத் தொண்டன் ஒருவனுக்கு வழங்கப்படும் மதிப்பளிப்பு ஆகும். *********
- 15 replies
-
- 3
-
- மாமனிதர் ஆ. இராஜரத்தினம்
- இராஜரத்தினம்
-
(and 22 more)
Tagged with:
- மாமனிதர் ஆ. இராஜரத்தினம்
- இராஜரத்தினம்
- மாமனிதர் இராஜரத்தினம்
- இராசரத்தினம் ஈழம்
- மாமனிதர் திரு ஆ. இராசரத்தினம்
- இராசரத்தினம் தமிழீழம்
- ராசரத்தினம்
- ஆ. ராசரத்தினம்
- நேதாஜி
- தமிழீழத்தின் நேதாஜி
- திரு ஆ. இராசரத்தினம்
- திரு இராசரத்தினம்
- மாமனிதர் இராசரத்தினம்
- இராசரத்தினம்
- ஆ. இராசரத்தினம்
- அ. இராசரத்தினம்
- ஆ. இராஜரத்தினம்
- திரு ஆ. இராஜரத்தினம்
- திரு இராஜரத்தினம்
- ஆ. ராஜரத்தினம்
- திரு ராஜரத்தினம்
- ராஜரத்தினம்
- ராஜரட்ணம்
- மாமனிதர்