Search the Community
Showing results for tags 'கல்லீரல்'.
-
கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம் "In Buckingham Palace, the butler is more powerful than the King" "பக்கிங்ஹாம் அரண்மணையில், அரசரை விட பற்லருக்கு பவர் அதிகம்" – ஒரு உள்ளூர் பிரிட்டிஷ் சிலேடை. இப்படிப் பட்ட ஒரு பற்லரைப் பற்றி இன்று பேசுவோம். நீரிழிவு தொடர்ந்து நிலைக்கவும், அதன் விளைவுகள் உடலைப் பாதித்து ஏனைய பக்க விளைவுகளைக் கொண்டு வரவும் அவசியமான கல்லீரல் பற்றிப் பேசுவது நீரிழிவைப் புரிந்து கொள்ள உதவும். கல்லீரலின் தொழில்கள் எவை? கல்லீரலுக்கு எங்கள் உடலில் பெரிதும் சிறிதுமாக பல தொழில்கள் இருக்கின்றன. முக்கியமாக, கல்லீரல் உடலின் அனுசேபத்தோடு தொடர்பான அங்கம். இதனால் தான் அது நீரிழிவிலும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், கல்லீரலின் பல தொழில்கள் உடலுக்கு இன்றியமையாதவை. உடலினுள் உணவு மூலமும், மருந்து மாத்திரைகள் வழியாகவும் புகும் பொருட்களை உடைத்து, அவற்றுள் நச்சுத் தன்மை இருந்தால் அதனை அகற்றும் வேலையையும் கல்லீரல் செய்கிறது. மறு பக்கம், உடலுக்கு அவசியமான பல புரதங்களை கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. கல்லீரல் செயலிழந்தால், எங்கள் உடலில் இரத்தம் உறைய அவசியமான பல மூலக்கூறுகள் குறைய, இரத்தக் கசிவினால் நாம் பாதிக்கப் படுவோம். உடலினுள் மீள்சுழற்சிக்காக உடைக்கப் படும் புரதங்கள், ஏனைய பொருட்களை கல்லீரல் அகற்றா விட்டால், அவை உடலில் சேர்ந்து அதனாலும் நம் உடல் நலம் கெடும். சிறந்த உதாரணம், கல்லீரல் நோயினால் பிலிருபின் மீள்சுழற்சி பாதிக்கப் பட்டால், பிலிருபின் இரத்தத்தில் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படும். இப்படி ஏராளமான உப தொழில்களை தன் வசம் வைத்திருக்கும் கல்லீரல், நீரிழிவிற்கு ஏன் முக்கியம்? குழுக்கோசும் கல்லீரலும் இரத்த குழுக்கோசை அதிகரிப்பதில் எங்கள் உணவு மூலம் உள்ளெடுக்கப் படும் மாச்சத்துகள் மட்டுமன்றி, கல்லீரலினால் உற்பத்தி செய்யப் படும் குழுக்கோசுக்கும் பங்கிருக்கிறது. நாம் உணவருந்திய பின்னர் குழூக்கோஸ் இரத்தத்தில் அதிகரிக்கும். இதை எங்கள் கணையம் உணர்ந்து இன்சுலின் ஹோமோனைச் சுரக்கும். சுரக்கப் படும் இன்சுலின், உடலின் ஏனைய கலங்களினுள் இரத்த குழுக்கோஸ் நுழைவதை ஊக்குவிக்கும். ஆரோக்கியமான ஒருவரில், இந்த நடைமுறை மூலம், உடல் குழுக்கோசைப் பாவிக்க, இரத்த குழுக்கோஸ் சாதாரணமான நிலையில் இருக்கும். விரதமிருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் 12 மணிநேரங்களுக்கு மேலாக உணவருந்தாமல் இருக்கும் போது, இரத்தத்தில் குழுக்கோஸ் குறைவதை கணையம் உணரும். இதை உணரும் கணையம், இன்சுலின் சுரப்பைக் குறைத்துக் கொண்டு, குழூக்காகோன் எனப்படும் இன்சுலினுக்கு எதிரான செயல்பாடு கொண்ட வேறொரு ஹோமோனைச் சுரக்கும். இந்த குழூக்காகோன், கல்லீரலைத் தாக்கும் போது, கல்லீரல் இரண்டு வழிகளில் இரத்த குழுக்கோசை அதிகரிக்கும்: 1. கல்லீரல் புதிதாக குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தினுள் விடும். 2. கல்லீரலில் சேமிக்கப் பட்டிருக்கும் கிளைகோஜன் எனப்படும் சேமிப்பை உடைத்து அதிலிருந்து குழுக்கோசை இரத்தத்தினுள் வெளிவிடும். இந்த வழிகளில், ஆரோக்கியமான ஒருவர் உணவு தவிர்ப்பில் 12 மணிநேரங்கள் ஈடுபட்டால், கல்லீரல் குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கும். இப்போது, கணையம் குழுக்கோஸ் அதிகரிப்பதை உணர்ந்து இன்சுலினைச் சுரக்க, உடல் குழுக்கோசைப் பயன்படுத்த ஆரம்பிக்கும். எனவே, தான் ஆரோக்கியமான ஒருவரில், 12 மணிநேரங்கள் பட்டினி கிடந்த பின்னரும், இரத்த குழுக்கோஸ் 70 முதல் 100 mg/dL வரை இருக்கிறது. இப்போது எல்லாம் சுபம் என்று உடல் உணரும். நீரிழிவின் போது என்ன நடக்கிறது? இன்சுலினுடைய தொழிற்பாடு நீரிழிவின் போது குறைகிறது - இது இன்சுலின் சுரப்புக் குறைவதாலோ அல்லது சுரக்கப் படும் இன்சுலினுக்கு உடல் துலங்கல் காட்டுவது குறைவதாலோ நிகழலாம். இந்த நிலையில், ஒரு நீரிழிவு நோயாளி உணவருந்துகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். ஆனால், இன்சுலின் செயல்பாட்டுக் குறைவால், கல்லீரல் உட்பட உடலின் அங்கங்கள் இரத்த குழுக்கோசை உள்வாங்கிப் பயன்படுத்த இயலாமல் போகும். சுருக்கமாக, இரத்தத்தில் குழுக்கோஸ் இருந்தாலும், உடலின் பெரும்பாலான அங்கங்களைப் பொறுத்த வரை நீரிழிவு நோயாளி “பட்டினி கிடக்கிறார்” என்பதாகத் தோன்றும். இதனால், கணையம் குளூக்காகோன் ஓமோன் சுரப்பை அதிகரிக்க, குழுக்காகோன் ஹோமோன் கல்லீரலைத் தாக்கும். இந்தப் “பட்டினியையும்” குழூக்காகோனையும் உணரும் எங்கள் பட்லரான கல்லீரல் இப்போது தன் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார். "பட்டினி" கிடக்கும் உடலுக்காக, கல்லீரல் குழுக்கோசை உற்பத்தி செய்து இரத்தத்தினுள் விடும். ஏற்கனவே உணவின் மூலம் கிடைத்த குழுக்கோசும் இரத்தத்தில் தேங்கிய நிலையில், கல்லீரலும் குழுக்கோசை இரத்தத்தினுள் அனுப்ப, இரத்த குழுக்கோஸ் அளவு எகிறும். இதில் இருந்து, அதிகரித்த இரத்த குழுக்கோஸ், அதனால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்பு, குருதிக் கலன்களின் பாதிப்பு என்பன தொடரும். எனவே, உடலின் இரத்த குழுக்கோசை சமநிலைப்படுத்த முயலும் கல்லீரல், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடும் வேலையைச் செய்வதால், நீரிழிவு இன்னும் மோசமாக வழி வகுத்து விடுகிறது. இதனால் தான், நீரிழிவு நோய்க்காளாகி விட்ட ஒருவரில், உணவு முறையும், உடற்பயிற்சிகளும் மட்டுமே நீரிழிவை இல்லாமலாக்கப் போதுமானவையாக இருப்பதில்லை. மெற்fபோமின் பல வழிகளில் வேலை செய்தாலும், அதன் பிரதானமான ஒரு இலக்கு கல்லீரல். கல்லீரல் குழுக்கோசைப் புதிதாக உருவாக்கி இரத்தத்தினுள் கலக்காமல் மெற்fபோமின் தடுப்பதால் இரத்த குழுக்கோஸ் அதிகரிக்காமல் தடுக்கிறது. மெற்fபோமினோடு, உணவுச் சீராக்கம், உடற்பயிற்சி என்பவற்றை இணைத்தால், நீரிழிவில் அதிகரித்த இரத்த குழுக்கோஸினால் உருவாகக் கூடிய மோசமான பின்விளைவுகளைத் தடுக்கலாம். -ஜஸ்ரின் பட உதவி, நன்றியுடன்: Rines et al., Targeting hepatic glucose metabolism in the treatment of type 2 diabetes. Nature Reviews Drug Discovery volume 15, pages786–804 (2016)