Search the Community
Showing results for tags 'சிவகார்த்திகேயன்'.
-
கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன். மிகப் புதுமையான திரைப்படம்! ‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது! ‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம். அடுத்துப் பாராட்டப்பட வேண்டியவர் சிவகார்த்திகேயன். தன்னைப் பாதிக்கும் சமுகச் சிக்கல்கள் எதையும் தட்டிக் கேட்காமல் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்து வாழும் கோடிக்கணக்கான எளிய மக்களில் ஒருவன்தான் கதைநாயகன். அவனே இயற்கைக்கு மாறான ஓர் ஆற்றல் கிடைத்ததும் கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாய் மாறுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கடைசியில் ஒரு முழு மாவீரனாகச் சிறகடித்து எழ வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வேடத்துக்கு வார்த்தெடுத்தது போலப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். இவரைத் தவிர வேறு யார் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும் இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! உயிருக்கு அஞ்சி ஓடுவது, ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் துணிவது, எதிர்பாராத ஓர் ஆற்றல் கிடைத்ததும் அதைக் கையாளத் தெரியாமல் புலம்புவது, அதுவே தன்னைச் சிக்கல்களில் மாட்டிவிடும்பொழுது என்ன செய்வதெனத் தெரியாமல் மேலே பார்த்து விழி பிதுங்க நிற்பது எனக் காட்சிக் காட்சி சிவகார்த்திகேயன் ஆட்சி! குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் இன்னொருவரிடம் கேட்டுக் கேட்டுச் சண்டையிடுவது போல் வரும் இடங்களில் எதிரிகளை மட்டுமில்லை நடிப்பிலும் நொடிக்கு நொடி அடி பின்னுகிறார் மனிதர்! நாயகனுக்கு அடுத்தபடியாகத் தூள் கிளப்புபவர் யோகிபாபு! வழக்கம் போல் ஒன்றும் தெரியாத, அனைவராலும் ஏமாற்றப்படுகிற வேடம்தான். அதில் அவர் காட்டும் அமர்த்தலான (subtle) முகக்குறிப்புகளும் நறுக்குச் சுருக்கான உரையாடல்களும் கைகொட்டிச் சிரிக்க வைக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் சரிதா! சிவாசி கணேசனோடேயே மல்லுக்கட்டிய அற்புத நடிகை, அம்மா வேடத்தைச் சும்மா ஊதித் தள்ளியிருக்கிறார். ஏதாவது சிக்கல் வரும்பொழுதெல்லாம் "அவனுங்களை..." என்று கறுவியபடி கூந்தலை அள்ளி முடிந்து அவர் கிளம்புவது நம் சென்னைத் தாய்மார்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறது. கதைநாயகி என்றாலே அவர் நாயகனின் காதலியாகவோ மனைவியாகவோதான் இருக்க வேண்டும் என்பதைத் தமிழ்த் திரையுலகம் எப்பொழுதோ உடைத்தெறிந்து விட்டது. அவ்வகையில் இந்தப் படத்தைப் பொருத்த வரை சரிதாதான் நாயகி. நாயகனின் காதலியாக வரும் அதிதி சங்கருக்குப் பெரிய காட்சிகள் இல்லை. ஆனால் கொடுத்த காட்சிகளைச் சரியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். சி.கா-வுக்கு வேலை வாங்கித் தரும் இடத்திலும் சிறு சிறு முகச்சுழிப்புகளிலும் கவனிக்க வைக்கிறார். இவரை விட அதிகம் கவனிக்க வைப்பவர் தங்கை வேடத்தில் வரும் மோனிசா பிளெசி. Black Sheep வலைக்காட்சியில் நாம் பார்த்த இளம்பெண். வழக்கம் போலவே நன்றாக நடித்திருக்கிறார். ஆனானப்பட்ட நடிப்புச் சூறாவளி சரிதாவின் பக்கத்திலேயே எப்பொழுதும் நின்று கொண்டு தனித்துத் தெரியும் அளவுக்கு இவர் நடித்திருப்பதே இவருடைய திறமைக்குப் போதுமான அத்தாட்சி. படத்தின் எதிர்நாயகனாக (villain) எதிர்பாராத தோற்றத்தில் இயக்குநர் மிசுகின். அவர் உருவமும் தோரணையும் எமன் எனும் பெயருக்கு வெகு பொருத்தம்! ஆனால் நடிக்க இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். சீற்றம், அதிர்ச்சி, வியப்பு எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியாக அவர் முறைத்துக் கொண்டே இருப்பது கை கொடுக்கவில்லை. ஆனால் ஒரு கொலையைச் செய்துவிட்டுக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக சி.கா., முன் உட்கார்ந்து பேசும் காட்சியில் அசத்தி விடுகிறார். மிசுகினின் உதவியாளராக வந்து அவரையே தூக்கிச் சாப்பிடும் புதுமையான வேடத்தில் சுனில் என ஒரு தெலுங்கு நடிகர். அருமையாக நடித்திருக்கிறார்! கடைசிக் காட்சி வரை நடிப்பும் உடல்மொழியும் யார் இவர் என கூகுளிட வைக்கின்றன. ஆனால் படத்தின் இயல்பு கெடக்கூடாது என்பதற்காக நாயகன் உட்பட யாருக்கும் ஒப்பனை (make-up) செய்யாமல் விட்ட இயக்குநர், ஒப்பனைக்காரருக்குக் காசு கொடுக்க வேண்டுமே என்பதற்காக மொத்த வேலையையும் இவரிடமே காட்டச் சொன்னது போல் அவ்வளவு ஒப்பனை! ஓங்கிப் பேசும் காட்சிகளில் அவர் முகத்தில் இருக்கும் மாவு எங்கே உதிர்ந்து விடுமோ என நமக்கே கொஞ்சம் பதறுகிறது. கோழையை வீரனாக்கும் முக்கியமான பொறுப்பில் விசய் சேதுபதி. முகத்தைக் காட்டாமலே நடித்துக் கொடுத்திருக்கிறார். அது எப்படி? படம் பாருங்கள், புரியும். இவர்கள் தவிர வட்டார அரசியலாளன், பொறுக்கித்தனம் செய்யும் பொறியாளன், பக்கத்து வீட்டுத் தானி ஓட்டுநர் (auto man), எதிர்வீட்டுச் சிறுமி எனச் சிறு சிறு வேடங்களில் வருபவர்கள் கூட மனதில் நிற்கும் வண்ணம் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனை விடப் பெரிய நாயகன் படத்தின் கதைதான். அசத்தலான கற்பனை! இயக்குநர் நினைத்திருந்தால் இதை ஓர் அறிவியல் புனைவாக (Sci-Fi) எடுத்திருக்கலாம். ஆனால் துணிந்து ஒரு மாய இயல்பியப் படமாக எடுத்திருக்கிறார். அவரை விடத் துணிச்சல் இதைப் படமாக்க ஒப்புக் கொண்ட ஆக்குநருக்கு (producer)! கொஞ்சம் பிசகினாலும் சிறுவர் படம் போல் ஆகியிருக்கக்கூடிய கதையைத் துணிந்து படமாக்கியிருக்கிறார். ஒரு வணிகப் படத்தின் முக்கியத் தேவையே அடுத்து நடக்கப் போவது என்ன என்பதைப் பார்வையாளர் கணிக்க முடியாதபடி திரைக்கதை அமைப்பதுதான். ஆனால் இந்தப் படத்திலோ அடுத்தடுத்து நடக்கப் போகிற அத்தனையையும் முன்கூட்டியே சொல்லி விடுவதுதான் கதையே! ஆனாலும் அதையே நேர்மறையாகப் பயன்படுத்தித் திரைக்கதையைச் செதுக்கி எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியிலேயே படத்தின் வகைமை (genre) என்ன என்பதை மறைமுகமாக உணர்த்தி விடுகிறார்கள். கோட்டுச் சித்திரங்களில் நகரும் அந்தக் காட்சியின் முடிச்சு அவிழும்பொழுது இரண்டு காட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு ஓ போட வைக்கிறது! ஏழை மக்களுடைய பாதுகாப்பின்மையை உணர்த்த ஒரு குளியலறைக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் துளி கூட அருவருப்பு (vulgarity) இல்லாமல் அதைப் படமாக்கியிருக்கும் விதம் இயக்குநரின் திறமைக்கும் சமுகப் பொறுப்புணர்ச்சிக்கும் நல்ல சான்று! சேரி, அடுக்குமாடிக் குடியிருப்பு என வாழ்விடங்களை மையப்படுத்திய கதையில் எந்த இடத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் வடிவமைத்த கலை இயக்குநரின் உழைப்பும் திறமையும் பாராட்டப்பட வேண்டியவை. “வண்ணாரப்பேட்டையில” பாடலும் இசையும் முதல் முறை கேட்கும்பொழுதே பிடித்துப் போகின்றன. மற்றபடி பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு நான் ஒன்றும் கலைநுட்பம் அறிந்தவன் இல்லை என்பதால் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தப்பித்தீர்கள். இல்லையென்றால் கட்டுரை இன்னும் நீண்டிருக்கும். இவ்வளவும் இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களுக்கே உரிய சில குறைபாடுகளும் படத்தில் இல்லாமல் இல்லை. ஆளுங்கட்சி அமைச்சர் தாக்க வந்தால் பிழைக்க விரும்புபவன் உடனே ஓட வேண்டியது எதிர்க்கட்சிக் கூடாரத்துக்குத்தான். அது கூடத் தெரியாமல் நாயகன் கடைசி வரை தனக்குக் கிடைத்த அற்புத ஆற்றலை மட்டுமே நம்பிக் கையைப் பிசைந்து கொண்டு நிற்பது ஏற்கும்படி இல்லை. சரி, நாயகன்தான் ஒன்றும் தெரியாதவன் என்றால் ஒரு நாளிதழுக்கே துணையாசிரியராய் இருக்கும் நாயகிக்காவது அது தெரிய வேண்டாவா? ஊகூம்! நடக்கிற சிக்கலைத் தன் நாளிதழில் வெளியிட ஒரே ஒரு முறை முயன்று தோற்பதுடன் தேங்கி விடுகிறார். படத்தின் முன்பாதி முழுக்க எல்லாரிடமும் அடி வாங்கும் நாயகன் பின்பாதியில் வீரம் வந்ததும் எத்தனை பேர் வந்தாலும் அடித்துக் கொண்டேஏஏஏ இருக்கிறார். அதுவும் சி.கா., நம் வீட்டுப் பிள்ளையாகப் போய்விட்டாரா? ஒரு கட்டத்தில் "போதும்ப்பா, உடம்பு என்னாவது?" எனச் சொல்லலாம் போல நமக்கே கவலை தொற்றிக் கொள்கிறது. ஒரு காட்சியில் மருத்துவர் ஒருவரின் மொட்டைத் தலையில் மடோன் அசுவின் சொல்லி வைத்தாற்போல் மடேரெனக் கழன்று விழுகிறது ஒரு மின்விசிறி. ஆனால் அவர் ஏதோ மாங்காய் தலையில் விழுந்தது போல் தலையைத் தடவிக் கொண்டு போகிறார்! ஊழல் அமைச்சரின் வீட்டில் முன்னாள் அமைச்சரும் புகழ் பெற்ற நடிகருமான S.S.இராசேந்திரன் அவர்களின் படம் ஆளுயரத்துக்கு. இன்னொரு காட்சியில் பாதிக்கப்பட்டு நிற்கும் நாயகனின் வீட்டில் எம்ஞ்சியார் படம். இந்தக் குறியீடுகள் மூலம் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. புரிந்தவர்கள் தெரிவித்தால் நலம். எதுவாக இருந்தாலும் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குள் சென்ற உலகின் முதல் நடிகர்” எனும் வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் S.S.R அவர்கள்; அப்பேர்ப்பட்டவர் படத்தை அவர் இறந்த பின் இப்படித் தவறாகப் பயன்படுத்தியது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. இப்படி ஆங்காங்கே பொத்தல்கள் இருந்தாலும் மொத்தத்தில் மிகச் சிறப்பான படம்! வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் இன்றைய மற்ற படங்களில் வருபவை போல் அவை கொடுமையான முறையில் படமாக்கப்படவில்லை. கவர்ச்சியான காட்சிகளும் இல்லை. எனவே குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கலாம். படம் அமேசான் பிரைமிலேயே இருக்கிறது. குறிப்பாக வீட்டில் பிள்ளைகளுடன் உட்கார்ந்து இந்தப் படத்தைப் பாருங்கள்! ஏனென்றால், நல்லவனை நாயகனாகக் காட்டும் படங்கள் இன்று அரிதாகி விட்டன. குடும்பத்துக்காக வாழ்வது, சமுகத்துக்காக உயிரைக் கொடுப்பது, சமுக அவலங்களைத் தட்டிக் கேட்பது போன்றவையெல்லாம் இப்பொழுது தேய்வழக்குகளாகி (cliche) விட்டன. "எது எப்படிப் போனால் உனக்கு என்ன? உன் வாழ்க்கையை நீ பார்த்துக் கொண்டு போ" என்பதையே திரைப்படம் முதல் பாடத்திட்டம் வரை வலியுறுத்தும் காலம் இது. திராவிடம், பொதுவுடைமை போன்ற சமுகநலன் சார்ந்த அரசியல் விழுமியங்களையெல்லாம் தன்னலனை மட்டுமே முன்னிறுத்தும் காவி அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வரும் காலக்கட்டத்தில் வாழ்கிறோம் நாம். இப்படிப்பட்ட சூழலில் "யார் எப்படிப் போனால் என்ன, நான் நன்றாக இருந்தால் போதும் என நினைப்பது வடிகட்டிய கோழைத்தனம்" எனச் செவிட்டில் அடித்துச் சொல்கிறது இந்தப் படம். அவ்வகையில் மண்டேலா போல் இதுவும் ஒரு நுட்பமான அரசியல் படமே! "யாரைக் கண்டும் அஞ்சாதே! உயிருக்கு அஞ்சி ஓடாதே! நீ எவ்வளவுதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் சமுக அவலங்கள் உன்னைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும். துணிந்து எதிர்த்து நில்! அதுதான் ஒரே தீர்வு" என்பதை நகைச்சுவை, சண்டைக்காட்சி போன்றவற்றைக் கலந்து சுவைபடச் சொல்கிறது. இப்படிப்பட்ட படத்தை நம் பிள்ளைகள் கட்டாயம் பார்க்க வேண்டும்! நம் பிள்ளைகள் கோழையாகவும் தன்னலக்காரர்களாகவும் இல்லாமல் கொஞ்சமாவது தன்மதிப்புடன் விளங்க இப்படிப்பட்ட ‘மாவீரன்’கள் கட்டாயம் தேவை. அவ்வகையில் இப்படி ஒரு படத்தை வழங்கியமைக்காக மாவீரன் குழுவினருக்கு நனி நன்றி! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி சாந்தி டாக்கீசு. - https://agasivapputhamizh.blogspot.com/2023/08/Maaveeran%20Review.html
- 1 reply
-
- 1
-
- மாவீரன்
- திரைப்படம்
- (and 7 more)