Search the Community
Showing results for tags 'சுரேன் கார்த்திகேசு'.
-
“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” -றெட்பானா மக்கள்..! சமாதான காலத்தின் முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளின் தளபதி ஒருவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது “ நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேணும், சிங்கள இராணுவம் தன்னுடைய மக்களை எங்களுடைய பிரதேசங்களில் குடியேற்றி அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறது, இன்று நாம் சிங்கள இராணுவம் மட்டுமல்ல எல்லைக்கிராமங்களில் உள்ள ஊர்காவல் படையின் தாக்குதல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம்” என்று பேசியதை நான் கேட்டிருக்கின்றேன். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாறு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களிலேயே அத்துமீறி குடியேறிய சிங்களமக்களிற்கு ஆயுதங்களை சிங்கள இராணுவம் வழங்கியிருந்தன. இவர்களை ஊர்காவல் படை என்று அழைப்பர். இந்த ஊர்காவல் படையே பின்னர் சிவில் பாதுகாப்பு படை உருவாக்கத்தின் ஆரம்பம். இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நேரடி ஆளுகையின் கீழ் இயங்கும் இப்படைப்பிரிவு பல கட்டமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக றெட்பானா விசுவமடு CSD பற்றி பேச்சு தான் அனேகமானவர்களின் சமூகவலைத்தளங்களில் காணப்பட்டது. பலரின் விசனங்களையும் கோபங்களையும் அம் மக்கள் பற்றிய கவலைகளையும் தங்களுக்குரிய முறையில் வெளியிட்டிருந்தனர். வன்னியிலும் எல்லைகளை பாதுகாக்க எல்லைப்படை, கிராமியப்படை,துணைப்படை என மக்கள் கட்டுமானப்பிரிவுகளை விடுதலைப்புலிகளின் காலத்தில் காணப்பட்டது. இப்படைகளின் பணியாக சுழற்சி முறை எல்லைப்பாதுகாப்பு மற்றும் உள்ளகப்பாதுகாப்பு காணப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளின் படைய கருவிகள் தொழிற்சாலைகள் மற்றும் முன்னரங்கப்பகுதிகளில் பணியாற்றுபவர்களில் சிறிலங்கா படையினர் மற்றும் எதிர்பாராத வெடிவிபத்துகள் மற்றும் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டால் அவர்களை “போருதவிப்படைவீரர்” என்ற நிலை வழங்கி துயிலுமில்லங்களில் விதைக்கப்படுவார்கள். இது பற்றிய முழுமையான விளக்கத்தினை இங்கே நான் தரவில்லை. 2008 இல் போர் உக்கிரமான நிலைக்கு சென்றிருந்தது. வன்னியின் அனேகமான பிரதான வீதிகள் சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரின் (Long-range reconnaissance patrol-LRRP) தாக்குதல் மேலோங்கியிருந்தது. ஒருமுறை கிளிநொச்சி அறிவியல்நகர் அருகில் உள்ளகப்பாதுகாப்பு அணியினருக்கும் எல்.ஆர்.ஆர்.பி அணிக்கும் சண்டை மூண்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விசுவமடு றெட்பான மக்கள். கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் வரை துரத்திச்சென்றதுடன் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை மீட்டனர். இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தது. இளங்கோபுரம், வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,குமாரசாமிபுரம், தோரவில் மூங்கிலாறு உடையார்கட்டு, குரவில், இருட்டுமடு, சுதந்திரபுரம் விசுவமடு, புன்னைநீராவி, கண்ணகிநகர் (தட்டுவன்கொட்டி), பிரமந்தனாறு மயில்வாகனபுரம், கொழுந்துபுலவு, நாச்சிக்குடா, தொட்டியடி, பாரதிபுரம், தருமபுரம், உழவனூர் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பல பொதுமக்கள் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் கிராமிப்படைகளில் இருந்தவர்கள். அதில் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்த றெட்பான மக்கள் சிறிலங்கா படையினரின் மோதல்களில் கொல்லப்பட்டு மாவீரர்களாக துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டிருந்தனர். இது அங்கிருக்கின்ற அனேகமானவர்களுக்கு தெரிந்த விடயம். இதனை விட மட்டக்களப்பு,திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்த போராளிகள் குடும்பங்களோடு விசுவமடு, உடையார்கட்டு, வள்ளிபுனம் தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு வரைக்குமான பிரதேசங்களிலே வசித்து வந்திருந்தனர். போர் முடிந்தவுடன் சிறைவாழ்க்கையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகள் பலர் எதிர்கொண்ட பிரச்சினை -தாங்கள் என்ன வேலை செய்வது என்பதே. முன்னாள் போராளிகள் மற்றும் ஏற்கனவே இப்பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அதாவது பண்ணைகளில் பணியாற்றியவர்கள் என பல ஆயிரக்கணக்கானவருக்கு வாழ்வாதாரப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்த காலப்பகுதி அது. பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு வரைக்குமான பிரதேசங்களில் வசிக்கும் போராடும் வலுவுள்ள அத்தனைபேரும் ஆயுதப்பயிற்சி பெற்றவர்களே! (இது 2008 காலப்பகுதி) அத்துடன் விடுதலைப்புலிகள் போர்கருவித்தொழிலகங்கள் மற்றும் தளபாட உற்பத்தியகங்களில் பணியாற்றியவர்களும் இப்பிரதேசங்களைச்சேர்ந்தவர்களே! இந்த நேரத்தில் தான் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றம் மற்றும் இராணுவமயமாக்கல் என குற்றச்சாட்டுக்களை சந்தித்திருந்த போதிலும் அவர்கள் தந்திரோபாயமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே CSD. "உள்ளகக்கிளர்ச்சி" ஒன்றினை உருவாகாமல் பாதுகாக்கும் திட்டமாகவே இது காணப்பட்டது. அதாவது சிறிலங்கா அரசாங்கம் படையியல் ரீதியாக அச்சம் நிறைந்த பொதுமக்களின் பகுதிகளில் பணிபுரியும் படைப்பிரிவான சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினை ஆரம்பித்திருந்தது. போரின் பின்னரும் இவ்வாறான மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய தேவையின் நலன் கருதி முன்னாள் போராளிகள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வேளாண் பிரிவு(பண்ணை), கராத்தே பிரிவு , நடனப்பிரிவு, உதைபந்தாட்டப்பிரிவு என மற்றும் முன்பள்ளிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. இதற்கு ஆரம்பத்தில் குறைவானர்களே இணைந்திருந்தனர். முன்னாள் போராளிகள் தங்கள் பாதுகாப்பு கருதியும் மற்றும் சம்பளம் உயர்வானது என்பதன் அடிப்படையிலேயே இப்படையில் இணைந்துள்ளனர். இதில் இணையாவிட்டால் அடிக்கடி இராணுவ புலனாய்வு விசாரணைக்கு போய்வரவேண்டிய நிலை. தனியார் நிறுவனங்களில் பணியாற்றினால் அங்கே உள்ள முதலாளிகளை புலனாய்வு படையினர் பணியாற்றும்; முன்னாள் போராளிகளைப்பற்றி விசாரணை என்ற பேரில் தொந்தரவு கொடுப்பது என உளவியல் ரீதியாகவே அவர்களை மக்களிடம் இருந்து தனித்துவமாக்கும் முயற்சி சிறிலங்கா அரசுக்கு சாகதமாகவே இருந்துள்ளது. முன்னாள் போராளிகள் பலர் தாங்களாகவே சமூகப்புறக்கணிப்பு ஒன்றுக்குள் இட்டுச்செல்லப்பட்ட நிலையிலேயே CSD என்ற பாதைக்குள் செல்ல நேரிட்டது. றெட்பான விசுவமடு மக்கள் சிலருடன் பேசியிருந்தேன். நண்பர்கள் பலர் அங்கே தான் இருக்கின்றார்கள். நான் விசுவமடு மாகாவித்தியாலய பழைய மாணவன். இந்த மக்களையும் மக்களின் அப்போதைய வாழ்வாதார நிலைப்பாடுகளும் நன்கு அறிந்திருந்தேன். அனேகமான கிராமங்களுக்கு நண்பர்களுடன் சென்றிருக்கின்றேன். இரவில் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள கொட்டிலில் தான் நாங்கள் படிப்பது வழமை. விசுவமடு குளத்தில் குளிப்பதும் வழமை. நான் விசுவமடு மக்களோடு நானும் சில காலம் வாழ்ந்திருந்த அடிப்படையில் மண்ணுக்காக அந்த மக்கள் கொடுத்த விலைகள் எனக்கு தெரியும். றெட்பான மக்களோடு பேசும்போது.. அவர்கள் சொன்ன முதல் வார்த்தை “குட்டி அண்ணை”…. இன்றளவும் மறக்காமல் அந்தப்பெயரை உச்சரிக்கும் மக்களுக்கு அந்தப்பெயர் ஒரு வேதம்… அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றதையும் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள். “குட்டி அண்ணை இருந்திருந்தா இந்தளவு சனம் எங்களை பேசுங்களோ” றெட்பான மக்களின் மனக்குமுறல்களை தொலைபேசியில் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்னால் எந்த பதில்களையும் திருப்பி சொல்லமுடியாத அளவுக்கு சில கதைகளை சொல்கின்றார்கள். அந்த மக்களுக்கு ஒரு நிச்சயம் மாற்று திட்டங்களை ஏற்படுத்தவேணும் என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றேன். அவர்கள் மேலும் சொல்லியது…. “பலரும் பலவிதமான கதைகள். பலவித விளங்கங்களுடன் விசுவாசம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திட்டு எல்லாரையும் கதைக்கசொல்லுங்கோ” “நாங்கள் வாழ்க்கையில் சந்திக்காத ஒரு சமூகப்புறக்கணிப்பைச் சந்தித்திருந்தோம். யுத்தம் எங்களுக்கு வறுமையை மட்டுமல்ல மிகப்பெரிய தனிமையையும் தந்துவிட்டது. அதற்கான சூழல்களை சிறிலங்கா புலனாய்வாளர்கள் செய்து வந்தமையையும் நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் சாப்பிடவேணுமே. காலகாலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வறுமையை வரித்து கொண்டே தேசத்திற்காய் உழைத்தோம். யுத்தம் முடிந்த பின்னர் சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலத்தப்பட்டு நின்ற நேரத்தில் தான் எங்கள் முடிவு CSD குள் போனோம்.” உங்களுக்கு தெரியுமா? நீங்கள் எல்லோரும் வருசத்திற்கு ஒரு தடவை மட்டும் தான் துயிலுமில்ல பாடலை கேட்பீர்கள். நாங்கள் வித்துடல்கள் விதைப்படுகின்ற ஒவ்வொரு தடவையும் எங்கள் காதில் கேட்கும். ஒரு பூவை கூட மூன்றாக பிரிச்சு வீதியால் எடுத்துச்செல்லப்படும் மூன்று வித்துடல்களுக்கும் மலர் தூவி அனுப்பி வைத்திருக்கின்றோம். எங்கள் வாழ்க்கை சாதாரணம் தான். அந்த சாதாரணத்தை கூட வாழமுடியவில்லை. “நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” என்று றெட்பான மக்கள் கேட்கின்றார்கள். யார் இந்த குட்டி? குட்டி அண்ணையை ஏன் இந்த மக்கள் இன்றும் நேசிக்கிறார்கள். தமிழீழ போக்குவரவு ஆணையர் குட்டி (MRS குட்டி) றெட்பானா மக்களால் இந்திய இராணுவ காலப்பகுதியில் சோறூட்டி வளர்க்கப்பட்டவர். பின்னர் அதே மக்களுக்கு சோறூட்டியவர். வன்னிப்பெருநிலப்பில் வேலை இல்லையென்று யாரும் இருந்திருக்கவில்லை. அவரவர் தகைமைக்கேற்ப வேலைகளை குட்டி அண்ணையின் ஆளுகைக்குள் இருக்கின்ற நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளமுடியும். அந்த நிறுவனங்களின் விபரங்கள் பின்வருமாறு: பாண்டியன் நடுவப்பணியகம் பாண்டியன் வாணிபம் பாண்டியன் சுவையூற்று பாண்டியன் வேளாண் பண்ணை பாண்டியன் திரையரங்கம் பாண்டியன் எரிபொருள் வாணிபம் பாண்டியன் புடவை வாணிபம் பாண்டியன் பதிப்பகம் பாண்டியன் உதிரிகள் வாணிபம் பாண்டியன் முகவராண்மை பாண்டியன் ஊர்தி சுத்திகரிப்பு நிலையம் பாண்டியன் களஞ்சிய சாலைகள் பாண்டியன் மரக்கறி வழங்கல். தமிழீழ போக்குவரவு கழகம் தமிழீழ போக்குவரவுக்கழக ஊர்தி சீர்களம் (காட்டுக்கராச்) பணியாளர்களுக்கான உணவகம் (குறைந்த செலவில் மூன்று நேரச்சாப்பாடு) என்று நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கியவர். இதில் குறிப்பாக தமிழீழ போக்குவரவுக்கழகம் நடாத்திய பேருந்துச்சேவை பற்றி.. வெளிநாடுகளில் பேருந்துகளில் மாதாந்த பாஸ் நடைமுறை வன்னியிலும் இருந்தது. வெளிநாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை போன்றே வன்னியிலும் இருந்தது. வெளிநாடுகளில் சாரதிக்கு சீருடை உள்ளது போல பேருந்து சாரதிகளுக்கான தனியான சீருடை. வெளிநாடுகளில் பேருந்து நேரக்காப்பாளர்கள் போலவே வன்னியிலும் இருந்தது. வெளிநாடுகளில் பயணச்சிட்டைகளை போக்குவரவு பொலிசார் பரிசோதிப்பார்கள். ஆனால் வன்னியில் சிறப்பு பரிசோதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் அனேகமானவர்கள் பெண்களே உள்வாங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக பேருந்துக்கு மேலே மக்கள் ஏறியிருக்கமுடியாது. (முன்னைய காலத்தில் மேலே இருப்பது வழமை) இந்தளவு கட்டமைப்புக்களுக்குள் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யுத்தம் முடிந்து ஊருக்கு வந்த போது வேலையில்லா பிரச்சினை உருவாகியது. இன்றும் அவர்கள் குட்டி அண்ணையை சொல்லியே மனம் ஆறுகின்றார்கள். தன்னுடன் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல அந்த கிராமங்களைச் சேர்ந்த 700 வரைக்குமான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தவர். இன்று காணாமல் போனவர்களில் ஒருவராக அவரை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். பலரும் இம்மக்களை குறை கூறி வருகின்றார்கள். அவர்கள் உண்மையில் சூழ்நிலைக்கைதிகள். CSD என்ற இராணுவ மயமாக்கல் ஒரு வடிவமாகவே காணப்படுகிறது. 2002 இல் ஏற்படுத்தியிருந்த சாமாதானம் எவ்வாறு ஒரு பொறியாக அமைந்திருந்ததோ. அதேபோல CSD இன்னொரு பொறி… யுத்தகால வன்னி ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு 2018