Search the Community
Showing results for tags 'நன்னிச் சோழன்'.
-
"நதி மூலம் அறியாமல் பல வாய்கள் பேசும்! - இவர் நடைபோடும் திசை மீதில் குளிர் காற்று வீசும்" இவர் யாழ்ப்பணத்தின் வலிகாமம் கோட்டத்தினை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணாவார். தணிக்கை தணிக்கை தணிக்கை தணிக்கை தணிக்கை தணிக்கை தணிக்கை ஆனதால் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கரும்புலியானார். அங்கு இவருக்கு "அன்பு" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் மிக முக்கிய இலக்கொன்றினை 10+ புலனாய்வாளர்களுடன் சேர்ந்து சென்று வெற்றிகரமாக அழித்து வீர வரலாறானார். இவருடன் சென்ற தமிழீழப் புலனாய்வாளர்களும் பின்னாளில் வீரச்சாவடைந்தனர். இவரே எமது தேசத்தின் முதல் மறைமுகக் கரும்புலியாவார். இவரிற்கு எனது வீரவணக்கம் ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில், நிலமட்டத்தோடு, சீமெந்தாலான குழாய் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது; இருபக்கத்திலும் முறையே நான்கு போடப்பட்டது. சில மீற்றர் தூரத்தில் சிங்களப் படையினர் காவலரண் அடித்து இருப்பான். இந்த ஒரு கல்லை - இவ்விடம் கண்டக்கற்கள் நிறைந்த பகுதியாகையால் - நாங்கள் நிலத்திலிருந்து வெட்டும்போது கொந்தாலி ஓசை கேட்டால் தலைக்கு மேலால் பகைவரின் சன்னம் கூவிச் செல்லும். எங்கள் மிகுதி சாப்பாட்டுக்கு காகம் வந்தாலும் இதே கதிதான். பதுங்ககழிகள் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் பாடசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டன. இந்த பதுங்ககழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள். ஒருமுறை யாழ்பாணத்திலிருந்த பரவலறியான பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள். மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள். அவர்களில் பிழையில்லை; அவர்கள் களமுனை வாழ்விற்கு பழக்கப்படாதவர்கள் என்பதோடு எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்களாவர். அங்கு காவலிற்கு நின்ற போராளிகள் மாணவர்களை சமாளித்து பார்த்தார்கள். அவர்களால் இயலவில்லை. எனவே பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் அறிவிக்கப்பட்டது. அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படுத்த முற்படும்போது சொன்னார், "தம்பியவை எங்கட போராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பாடு வந்திடும் பொறுங்கோ!". அவர் கூறியதைக் கேட்ட மாணவர்கள் சொன்னார்கள், "உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள்." என்று. பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார், "அது காலைச் சாப்பாடு" என்று. மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை! 1991ஆரம்ப பகுதியில் பதுங்ககழியின் பின்பகுதியால் வந்து சிங்களப் படைத்துறை கைப்பறியது. நேரடியாக அடித்து பிடிக்க முடியாது பிற்பகுதியால் சுற்றிவளைத்தபோது பதுங்ககழியில் இருந்த போராளிகளை பின்வாங்கச்சொல்லி பிரிகேடியர் பானு அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் பின்வாங்கினர். தகவல் வழங்குநர்: "நிக்சன்" (இவர் பதிந்திருந்த யூரியூப் கருத்தை, அவரது முதல் தர அனுபவமாகையால், இங்கே வரலாற்று ஆவணக் காப்பிற்காக பதிவாக மாற்றி இடுகிறேன்). தொகுப்பு & வெளியீடு: நன்னிச் சோழன்
-
ஓயாத அலைகள் மூன்று வடபகுதி நோக்கி திருப்பப்பட்ட போது அதன் கட்டம் மூன்று தொடங்கப்பட்டது. கட்டம் மூன்றின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் புதிய கேந்திர சமர்முனை ஒன்றைத் திறப்பதற்கான திட்டத்தை தேசியத் தலைவர் அவர்கள் கேணல் வீமன் அவர்களிடத்தில் வழங்கியிருந்தார். தலைவரின் திட்டத்தை கேணல் வீமன் (அப்போது லெப். கேணல் தரநிலையுடையவர்) போராளிகளுக்கு தெளிவாக விளக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார். தனங்கிளப்பிலிருந்த தளம் ஒன்றின் மீதான அதிரடித்தாக்குதலுக்கான திட்டத்தை கேணல் வீமன் அவர்கள் போராளிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கின்றார் தரையிறக்கத்திற்கு முன்னர் இறுதியாக அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் வீமன் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து இத்தாக்குதலின் முக்கிய நோக்கமானது வன்னி-யாழ்ப்பாணத் தொடர்பை துண்டித்திருந்த சங்குப்பிட்டி-கேரதீவு களப்பைக் கடந்து கேரதீவு கடற்தளத்தை கைப்பற்றிப் பாதுகாப்பதாகும். இப்பரப்பை மீட்பதன் மூலம் சங்குப்பிட்டி - கேரதீவு தொடர்பும் பேணப்படுவதோடு யாழ்ப்பாணம் நோக்கிய பின்னாளைய நகர்விற்கான ஒரு முன்கூட்டிய சமர்முனையையும் திறந்து வைத்திருத்தலாகும். அதன் படி 12/12/1999 அன்று காலை பத்துமணியளவில் கேணல் வீமனின் தலைமையில் (இறுதிப் போரில் சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) கேரதீவு-கிழக்கரியாலையில் தரையிறக்கமொன்று இருவேறு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது. இத்தரையிறக்கத்தில் ஜெயந்தன் படையணியின் (Regiment) கொம்பனிகள் (Company) சில, மாலதி படையணியின் கொம்பனிகள் சில, இம்ரான்-பாண்டியன் படையிணியின் சில பிரிவுகள் (Units) என்பவற்றைக் கொண்ட படைத்தொகுதியொன்று (Brigade) ஈடுபடுத்தப்பட்டது. மொத்தம் 600 போராளிகள் இதில் களமிறக்கப்பட்டனர். தரையிறங்கப் போகும் தமிழரின் படைகளிற்கான கடல்வழி நகர்விற்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். அவர்களோடு இதில் தமிழீழத்தின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையின் கடற்சிறுத்தை அணியினர் லெப். கேணல் சேரமான் தலைமையில் முக்கிய பங்காற்றினர். விடுதலைப்புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் சேணேவித் தொகுதி (Artillery battery) ஒன்றின் கட்டளையாளரான மேஜர் பாலனின் தலைமையில் தரையிறங்கப் போகும் இடத்திலிருந்த சிறிலங்கா படைநிலைகள் மீது செறிவான சேணேவி சூட்டாதரவு நடாத்தப்பட கடற்புலிகள் தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர். தரையிறக்கத்திற்காக ஆளணி காவி கட்டைப்படகொன்றில் களப்பில் பயணிக்கும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து கரையை அண்மிக்கும் ஆளணி காவி கட்டைப்படகுகள் (Dhingies) | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து கரையை அண்மித்து ஆளணியை தரையிறக்கும் கட்டைப்படகுகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து தரையிறங்கியோர் கரையைக் கடக்கும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து மாலதி படையணிப் போராளிகள் தத்தமக்கென ஒதுக்கப்பட்ட குறித்த இடங்கள் நோக்கி நகர்ந்து செல்லும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து சில படகுகள், குறிப்பாக மாலதி படையணியினரைக் காவிச் சென்றவை படையினரின் இரு முகாம்களுக்கு இடையில் தான் கொண்டுசெல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தாக்குதலை சிங்களம் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. புலிகளால் களப்பை கடக்க முடியாதென்றே சிங்களம் நம்பியிருந்தது. அந்தளவிற்கு சிங்களக் கடற்படை வலிமையாக கிளாலி, கேரதீவு, கோயிலாக்கண்டி, குருநகர் ஆகிய இடங்களில் தமது கடற்தள கதுவீ ஏந்தனங்களை நிறுவியிருந்தது. இவற்றின் கண்களில் படாமல் எம்மவரால் எதுவித களப்புக் கடப்புகளை மேற்கொள்ளமுடியாது என்றே சிங்களம் உறுதியாகயிருந்தது. இவற்றையும் மீறு நகர்ந்தால் அதனை முறியடிப்பதற்கென்று சிங்களக் கடற்படையின் சிறப்பு படகுச் சதளம் (Special Boat Squadron) நிலைநிறுத்தப்பட்டிந்தது. மீறி தமிழர் சேனை ஒரு தரையிறக்கத்தை செய்துவிடின், அதனை முறியடிப்பதற்கான அரணத்தையும் தரையிறங்கியோர் பின்வாங்கிடாதபடி கடற்படையின் தடுப்பு இருக்குமாறும் ஒரு பாரிய ஏற்பாட்டை சிங்களம் செய்திருந்தது. தரையிறங்கிய எமது படைகள் தாக்குதல் திட்டத்திற்கு ஏற்றவாறு வேகமாகவும் பாணித்தும் (சமற். நிதான) தாக்குதலை மேற்கொண்டபடி முன்னகர்ந்தன. இதில் குறிப்பிடத்தக்க மோதல் ஒன்று; முன்னர் குறிப்பிட்ட இரு முகாம்களுக்கு நடுவில் தரையிறக்கப்பட்ட புலிகளின் அணிகளின் இரு நிலைகளுக்கு நடுவால் ஊடறுத்து அவர்களுக்குப் பின்பக்கமாக சென்ற சிறிலங்காப் படையினர் பின்னருந்து முன்னோக்கி புலிகள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு புலிகளுக்கு சூட்டாதரவு வர வேண்டுமெனில் கடல்வழியாகத் தான் வர வேண்டும். எனினும் கடலிலும் கடற்புலிகளுடன் சிங்களக் கடற்படை சமராடிக்கொண்டிருந்தது. இருப்பினும் மனம்தளராது புலிகள் தமது நிலைகளையும் அணிகளையும் மீளொழுங்குபடுத்தி மீண்டும் முயற்சித்து படையினரை விரட்டியடித்தனர். அத்துடன் தமது நிலைகளையும் மீட்டனர். இம்மோதலில் கொல்லப்பட்ட படையினரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினரின் சடலங்களும் பல படைக்கலன்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. சமரின் நடுவே நடைபேசியில் கட்டளை வழங்கும் புலிகளின் அதிகாரி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து தரையிறங்கிய போராளிகளின் அடிபாட்டு உருவாக்கமொன்று தரைவழியாக நகர்ந்து அறுகுவெளியிலிருந்த தளமொன்றைத் தாக்கிப் பரம்பியது (overrun). இன்னொரு அடிபாட்டு உருவாக்கம் கடற்புலிகளின் கடல்வழித் தாக்குதலின் துணையோடு கேரதீவிலிருந்த கடற்தளத்தை தாக்கிக் கைப்பற்றினர். அத்துடன் இங்கிருந்த கதுவீ (RADAR) மற்றும் பல படைக்கலன்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். சூடை வகுப்புப் படகிலிருந்து கேரதீவு கடற்தளம் நோக்கிச் சுடும் கடற்புலிப் போராளி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து கடற்சிறுத்தை அணியின் அதிரடிக்காரனொருவன் கவிர் வகுப்பு படகிலிருந்து கேரதீவு கடற்தளம் மீது ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து சிங்களக் கடற்படையின் கேரதீவு கடற்தளம் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து அற்றைநாள் மாலைக்குள் விடுதலைப்புலிகள் கேரதீவிலிருந்து அறுகுவெளி வரையிலான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அடுத்த நாளும் தொடர்ந்த சமரில் அறுகுவெளி படைத்தளம் விடுதலைப்புலிகளால் பரம்பப்பட்டு அறுகுவெளியும் மீட்கப்பட்டது. அதே நேரம் கிழக்கரியாலையிலிருந்து முன்னகர்ந்து சில பரப்புகளை மீட்டிருந்தனர். சமரின் நடுவே சேதமடைந்திருக்கும் கோவிலினூடே முன்னகர்ந்து செல்லும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து உசாத்துணை: 'விடுதலைப்புலிகள்', தை-மாசி, 2000, பக்கம்: 4-5 & 8-10 ஓயாத அலைகள்- 3 கட்டம்- 1,2,3 நிகழ்பட ஆவணத்தின் 54:50 - 57:30 நிமிடங்கள் வரை ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Line) களமிறக்கப்பட்டார். அங்கு மாலதி/சோதியா படையணியின் ஒரு பகுதியில் (9 பேர்) போராளியாக களமாடினார். ஏறத்தாழ 10ம் மாதத்திற்குப் பின்னர் நடந்த சமரொன்றின் போது இவரின் பகுதியில் ஒருவர் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் வீரச்சாவடைந்ததாக ஒன்மரில் பிழைத்த அந்த ஒரேயொரு போராளி தெரிவித்தார். எனவே இவர் வீரச்சாவடைந்து விட்டதாகவே தெரிகிறது. இவரின் இயக்கப்பெயர் "இசைநிலா" என்பதாகும். தகவல் மூலம்: ஒன்மரில் பிழைத்த அந்த ஒரே போராளி ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
தமிழீழ வரலாற்று எழுத்தாளர்களில் ஒருவர் தான் மணலாறு விஜயன் ஆவார். இவருடைய சொந்த ஊர் வட தமிழீழத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுக் கோட்டத்தில் உள்ள செம்மலை என்ற ஊராகும். இவர் தமிழீழத் 'தலைமையின்' பணிப்பின் பேரிலே பல போரிலக்கியங்களை எழுதினார். இறுதிவரை எழுதினார். இவர் எழுதியதனுள் முதன்மையான நூல் ''வன்னிச் சமர்க்களம்" என்பதாகும். நானறிந்த வரை ஈழத்தமிழரின் போரிலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட ஒரே மிகப் பெரிய நூல் இதுவாகும். இதில் இரு பெரும் சமர்க்களங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டியது. ஆனால், இன்று இல்லை! 1992 முதல் 1998 வரை 18 இற்கும் மேற்பட்ட 'சமூகவியலோடு இயைந்த போர்வாழ்வு' பற்றிய சிறுகதை புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் முதலாவதின் பெயர் 'கடைசிச் சொத்து' என்பதாகும். இது திருகோணமலை/மட்டக்களப்பில் இருந்து மணலாற்றில் வந்து தரையிறங்கிய வாள்வெட்டு காயத்துடனான கைக்குழந்தை கொண்ட தாயொருவர், தன்னிடம் படகோட்டி கேட்ட பணத்தை தரமுடியாதலால் தனது 'கடைசிச் சொத்தான' தாலியை கழட்டி கொடுத்ததை இவர் நேரிலே கண்ட அனுபவத்தை இள பேரரையன்(Lt. Col.) அம்மா எ அன்பு என்னும் கட்டளையாளரின் நேரடி வேண்டுகோளிற்கு இணங்க அதனையும் அதனோடான அன்றைய போரியல் வாழ்வையும் இணைத்து தனது முதற் புத்தகமாக எழுதினார். இவர் எழுதிய முதலாவது நூலின் பெயர் 'மணலாறு' என்பதாகும். இது மணலாறு என்னும் ஊர் பற்றிய நூலாகும். அதன் கொழுவி: → மணலாறு - நூலகம் இவர் ஒரு பொதுமகனாக இருந்தாலும் நேரடியாக சமர்க்களத்திற்குச் சென்றெழுத இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது - புலிகளின் தலைமையால்(இவ்வாறு சென்ற பொதுமகன் இவர் மட்டுமேயென நானறிகிறேன்). அதனால் அந்த சமர்க்கள அனுபவத்தினோடே உண்மையாக நடந்தேறியவற்றை எழுத்துக்களில் வெளிக்கொணந்தவர், புலிகளின் அனுமதியினோடே! சமர்க்களத்தில் நடந்த ஒவ்வொரு விதயத்தையும் எழுதினார், சிங்களம் எப்படி நகர்கின்றது அதற்கு புலிகளின் இகல்-நகர்வுகள்(counter-moves) என்னென்ன என்றெல்லாம் அச்சொட்டாக தனது புத்தகத்தில் குறித்தெழுதினார். இதனால் தணிக்கையின்போது சிக்கல்களைச் சந்தித்தார். ஆனாலும் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு அனுமதி கிடைத்து விழாவிற்காக காத்திருந்த போது தமிழீழ தேசிய பேரழிவான 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நடந்தேறியது. அது மட்டும் நடக்கவில்லையென்றால் இன்று பல புத்தகங்கள் எமக்கு கிடைத்திருக்கும். இவர் புலிகளின் குரல் வானொலியில் 'களத்தில் சில நிமிடங்கள்' என்னும் முன்னரங்க நிலைகளில் நிற்கும் போராளிகளை நேரடியாச் சந்தித்து தான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் தலைவரின் எண்ணத்திற்கிணங்க முன்னணி காவலரண்களில் நிற்கும் போராளிகளையும் அவர்களோடு தொடர்புடைய சில விதயங்களையும் அப்படியே நிகழ்படமெடுத்து அதனை ஒரு கவிதையோடு இணைத்து ''காட்சியும் கானமும்'' என்னும் நிகழ்சியினை புலிகளின் குரலில் வழங்கினார். இந்நிகழ்சிகள் 1995 ஆம் ஆண்டு காலத்தில் நடந்ததேறியவையாகும். இவருடைய மூத்த மகளும் இளைய பிள்ளையும் போராளிகளாவர். அவர்களில் மூத்த மகள் எழுத்தாளராகவும் கவியரங்குகள் செய்பவராகவும் இருந்தார். மணலாறு விஜயன் அவர்கள் மிக வேகமாக எழுதிச் செல்லும் போது நடுவில் ஏற்படும் சிறு பிழைகளையெல்லாம் இவருடைய மகள் திருத்தி எழுதிக் கொடுப்பார். அதைக் கொண்டுபோய்த்தான் இவர் நிகழ்ச்சித் தொகுப்புகள் செய்வார். இவர் எழுதிய இன்றுமுள்ள போரிலக்கியங்கள்: மணலாறு இதுதான் இவர் எழுதிய முதலாவது நூலாகும். இது மணலாற்றுக் கோட்டம் பற்றிய நூலாகும். இதயபூமி 1 இது தமிழீழ நடைமுறையரசினால் பெயர்சூட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது படை நடவடிக்கையின் வரலாற்றைக் கொண்ட நூலாகும். இந்நடவடிக்கையானது தமிழீழத்தின் இதயபூமி என்று விரித்துரைக்கப்படும் 'மணலாற்றில்' அமைந்திருந்த மண்கிண்டிமலை படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான படை நடவடிக்கையாகும். மௌனப் புதைகுழிக்குள்-1 இப்புத்தகம் பன்னாட்டளவில் பேசப்படும் ஒரு புத்தகமாகும். இப்புத்தகமானது தென் தமிழீழத்தில் சிங்களப் படைவெறியர்களாலும் அவர்களுக்கு துணைபுரிந்த சோனகர்களின் 'ஊர்காவல்படை' யினராலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை ஆவணப்படுத்திய புத்தகமாகும். வணங்கா மண் இதுவே இவர் எழுதிய முதலாவது போரிலக்கியமாகும். இப்புத்தகமானது இந்தியா & சிறீலங்காப் படைகளுடனான சண்டைகளின் போது மணலாற்றுக் கோட்டத்தில் மாவீரரானோர் மற்றும் அவர்களோடு நின்று களமாடியோர் பற்றியதுமான புத்தகம். இனி, இவர் எழுதி அழிந்துபட்ட போரிலக்கியங்கள் பற்றி பார்ப்போம். இவர் எழுதி அழிந்துபட்ட போரிலக்கியங்கள்: வன்னிச் சமர்க்களம் இது தமிழீழ வரலாற்றில் மிகவும் முதன்மை வாய்ந்த புத்தகமாகும். ஜெயசிக்குறுயில் இருந்து ஓயாத அலைகள் மூன்றின் ஐந்து கட்டங்களையும் தாண்டி தென்மராட்சியிலிருந்து புலிகள் வெளியேறும் வரையிலான அத்துணை சமர்களங்களினதும் அச்சொட்டான முழு விரிப்பினைக் கொண்ட புத்தகம்! இது 900 சொச்சம் பக்கங்களைக் கொண்டது ஆகும். போரும் வாழ்வும் போராளிகளை பொதுமக்கள் தம் சிறகுகளினுள் வைத்து எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதை பற்றிய புத்தகம் இது. திகிலும் திரிலும் இது ஆனையிறவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்துப் போரளிகளினது பயணப் பட்டறிவுகள் பற்றிய புத்தகமாகும். இப்புத்தகம் எழுதிய போது அவரும் போராளிகளோடே பயணம் செய்தார். அப்போது தன்னால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு செல்லும்படி கூறிய ஒரு தேசப்பாற்றாளர் இவராவார். இப்புத்தகத்தில் பிரதேசவாதத்தை இவர் விதைத்தார் என்றும் இவர்மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கிழக்குப் போர்முனை தென் தமிழீழச் சமர்க்களங்கள் பற்றியவை. களத்தில் சில நிமிடங்கள் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் (Forward Defence Lines) நிற்கும் போராளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பட்டறிவுகளை எழுத்தில் கொண்டுவந்த நூல் இதுவாகும். மௌனப் புதைகுழிக்குள் பாகம்-2 சோனகர்களாலும் சிங்களவர்களாலும் தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டு- அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய நூல். இவரிடம் தலைவர் மாமா கூறிய கூற்றாக இவர் தெரிவிப்பது: "நாங்கள் வீரசாகசம் புரிபவர்களாக எங்களைக் காட்டக்கூடாது. எங்கட போராளிகள் படும் துயரங்களை முதலில் வெளியில் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட துயரங்களுக்குள் நின்றுதான் வெற்றியைத் தேடித் தருகிறார்கள் என்று சொல்ல வேண்டும். நாங்கள் அடையும் தோல்விகளையும் எழுதுங்கள். ஏனென்றால், நாங்கள் ஒரு காலத்தில் தோற்றுப் போகலாம்; திரும்பக் காட்டுக்குப் போகலாம். அந்த நேரங்களில் நாங்கள் விட்ட தவறுகளை, நாங்கள் அடைந்த தோல்விகளை சரியாக எழுத வேண்டும். வெற்றியைப் பலர் புழுகி எழுதலாம், அது எனக்கு தேவையில்லை. வெற்றி பற்றிய எழுத்து தேவை, ஆனால் நாங்கள் ஏன் சில சமர்களில் தோற்றுப் போனோம் என்பது மிக முக்கியம். அதை நீங்கள் வரலாறாக்க வேண்டும்." கூற்றுக் காலம்: ~1995 . பின்னர் 2000களின் தொடக்கத்தில் இவர் மேல் துரோகிப் பட்டம் வீசப்பட்டது. இவர்மேல் சுமத்தப்பட்ட குற்றம் யாதெனில், புலிகளினுள் நிகழ்ந்த பிரதேசவாதத்தை தனது "வன்னிச் சமர்க்களம்" என்ற நூலில் பதிந்தமையே ஆகும். மட்டு-அம்பாறை படையணிகளில் ஒன்றினது கட்டளையாளர்களில் ஒருவர் - இவரின் பெயர் உமாரமணன் என்று அறிகிறேன் - யாழ் நகரின் வாசலில் நின்றபடி யாழ் நகருக்குள் மட்டக்களபைச் சேர்ந்த படையணிகளின் கொம்பனிகளை உள்ளடக்கிய படைத்தொகுதி ஒன்றைத் தள்ளுவதற்கு ஆயத்தமாக நின்றார். அப்போது ஓ.அ. 3 இன் கட்டம் ஐந்திற்கான கட்டளைப் பணிமனையிடம் இதற்கான அனுமதியைப்பெறக் கேட்டார். அப்போது பின்தளத்தில் தலைவரோடு நின்ற யாழ்ப்பாணைத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர்களும் பொறுப்பாளர்களுமென மூன்று பேர் அதற்கான இசைவை வழங்க வேண்டாம் எனத் தலைவரைக் கேட்டுக்கொண்டனராம். ஏனெனில் யாழ்ப்பணத்தை மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றினர் என்ற பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதால். அவர்களின் அன்றைய பிரதேசவாதத்தால் அவர்களை பின்னுக்கு வரும்படியும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புதிதாகப் பயிற்சி முடித்திருந்த கொம்பனிகள் சில களமுனைக்கு அனுப்பப்படும் என்றும் கட்டளைப் பீடத்தில் இருந்தவர்கள் கட்டளை பிறப்பித்தனர். இதனால் மனமுடைந்த அந்த மட்டு- அம்பாறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர் தன் படைத்தொகுதியோடு பின்வாங்கினாராம். பின்னுக்கு வந்தவர் இவ் எழுத்தாளரைச் சந்தித்து "இன்னும் எண்ணி மூன்று நாட்களில் நாங்கள் போட்ட கட்-அவுட்களை எல்லாம் விட்டுட்டு இவங்கள் பின்னுக்கு வருவாங்கள் பாருங்கோ" என்று இவரிடம் கூறிச் சென்றாராம். அதன்படியே புலிகளும் சிங்களவரின் பல்குழல் உந்துகணைத் தாக்குதலை நின்றுபிடிக்க இயலாமல் பின்வாங்கினராம். இதை அப்படியே தனது புத்தகத்தில் பதிந்தார். இச்செயலிற்காய் புலிகளால் தூற்றலுக்கும் ஆளானவர். ஆம், கருணா பிரிந்து சிங்களத்தோடு சேர்ந்து தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு துரோகமிழைத்த போது இவர் மேல் தனது புத்தகம் மூலம் பிரதேசவாதத்தை தூண்டியதாக 'துரோகிப்' பட்டம் வீசப்பட்டது. இவரை சுடவேண்டும் என்றுகூறி இவருடைய சிற்றூரின் பாடசாலையில் ஒரு கூட்டத்தை தவிபு புலனாய்வுத்துறையின் ஒருபிரிவினர் ஒழுங்குபடுத்தினராம். ஆனால் அதையும் கடந்து துடைத்து ஒரு நாட்டுப்பற்றாளராய் தொடர்ந்து எழுதியவர் இவராவார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குள் சென்று மீண்டவர்களுள் இவரும் ஒருவர். இப்போதும் வன்னியில் வசிக்கிறார். உசாத்துணை இவர் IBC Tamilக்கு வழங்கிய செவ்வி நிகழ்படம் படிமப்புரவு: திரைப்பிடிப்பு ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
கிளாலிக் களப்பு (கடனீரேரி) என்பது எமது மக்களின் குருதி கலந்த நீர்ப்பரப்பு ஆகும். யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் கிளாலி ஊடாக பூநகரி செல்லும் மக்களை நாகதேவன்துறையிலிருந்து வோட்டர் ஜெட் & கூகர் வகுப்புப் படகுகளில் வரும் சிங்களக் கடற்படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர். பேந்து, யாழ்ப்பாணத்தைச் சூரியகதிர் நடவடிக்கை மூலம் வன்வளைப்புச் செய்த பின்னர் கேரதீவையும் அதனை அண்டிய பரப்புகளிலிருந்தும் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை சில வேளைகளில் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இதனை கிளாலியில் கடற்படைத்தளம் அமைத்து நிலைபெற்றிருந்த சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தினர் (Special Boat Squadron) செய்துதொலைத்தனர். இவ்வாறாக இக்கிளாலிக் களப்பில் 300இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யாழ். குடாநாடு நோக்கி வன்னியிலிருந்து செல்லும் போராளிகளின் கடற்போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்ததும், இக் கிளாலிக் கடற்படைத்தளமே ஆகும். அதுமட்டுமன்றி இக்கடற்படைத்தளம் இங்கு இருக்கும்மட்டும் ஆனையிறவை தாம் வெற்றிகொள்வதென்பது அவ்வளவு இலகுவானதன்று என்பதும் புலிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையால் இவற்றிற்கெல்லாம் பழிவாங்கும் விதமாக ஒரு வலிதாக்குதலை (offence) இத்தளம் மீது நடத்த வேண்டுமென்று தலைவர் அவர்கள் முடிவு செய்தார். அதற்கான வேவுத்தரவுகளைத் திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டது. இத்தாக்குதலிற்கான வேவுப்பணிகள் மேஜர் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர் அதனை செவ்வனவே நிறைவேற்றியிருந்தார். அவ்வேவிற்காக முதலில் ஆறு கடல்வேவுப்புலிகள் (திகதி தெரியவில்லை) நாளன்று சென்றனர். இத்தளமிருந்த கடற்பரப்பில் அவர்கள் பகல் வேளையில் ஊடுருவிய போது அவர்களைக் கண்டுகொண்ட சிங்களக் கடற்படையினர் படகொன்றில் இவர்களை விரட்டிச் சுடத் தொடங்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த கடல்வேவுப்புலிகள் தம்மை விரட்டியபடி நோக்கி வந்த வேகப்படகு மீது கைக்குண்டுகளை வீசித் தற்காப்பில் ஈடுபட்டபடி கரையை நோக்கி நீந்தினர். ஆனால் அதற்குள் சிங்களவரின் வேட்டுகள் ஏவுண்ணிட 4 கடல்வேவுப்புலிகள் களப்பிலையே வீரச்சாவடைந்தனர். ஏனைய இருவரும் தப்பிக் கரைமீண்டு அருகிலிருந்த காட்டுக்குள் ஓடினர். பின்னர் அடுத்த நாள் விடுதலைப்புலிகளின் கடல் அதிரடிப்படையான 'கடற்சிறுத்தைகள்'இலிருந்து நான்கு போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி வேவுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்றவர்களில் இருவர் பெண் போராளிகள் ஆவர். இக்கடற்சிறுத்தைகள் பிரிவானது சிறுத்தைப்படையின் ஒரு பிரிவாகும். இவர்களை தொடக்க காலத்தில் கேணல் ராயு அவர்கள் வளர்த்து வழிப்படுத்தியிருந்தார். கடற்சிறுத்தைகளை ஒரு இறப்பர் படகில் தளத்திற்கு அண்மைவரை கொண்டு சென்று இறக்கி விட்டனர் கடற்புலிகள். படகில் இந்நான்கு சிறுத்தைப்புலிகளுடன் மேலும் இரு கடற்புலிப் போராளிகளுமிருந்தனர். அவர்களில் ஒருவர் ஓட்டியாவார். மற்றையவர் பீகே இலகு இயந்திரச் சுடுகலச் சூட்டாளர் ஆவார். கடற்சிறுத்தைகளில் ஒரு ஆண் போராளி டொங்கானுடனும் ஒருவர் தொலைநோக்கியுடனும் சென்றிருந்தனர். ஒரு பெண் போராளி வகை-56-1 துமுக்கியுடனும் (T-56-1 rifle) இன்னொருவர் தொலைத்தொடர்பு கருவியுடனும் சென்றிருந்தனர். மேற்கொண்டு நீரடிச் சுவாச ஏந்தனங்களின் உதவியுடன் தளத்தை நெருங்கிச் சென்று வேவெடுத்தனர். தொலைநோக்கியுடன் சென்றிருந்த போராளி நன்கு கிட்டவாகச் சென்று வேவெடுத்தார். வேவில் அங்கே இரு புளூ ஸ்ரார் வகுப்புப் படகுகள், இரு கூகர் வகுப்புப் படகுகள், ஒரு கே-71 வகுப்புப் படகு மற்றும் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புப் படகு இருப்பதை அறிந்துகொள்கின்றனர். பின்னர் விடிவதற்குள் அருகிலிருந்த பற்றைக்குள் சென்று பேந்து பாதுகாப்பாகத் தளம் திரும்பினர். வேவுத்தரவுகள் மாதிரி வரைப்படப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தள மாதிரி உருவாக்கும் பணி நடைபெற்றது. அதே வேளை கடற்சிறுத்தைகள் தாக்குதலிற்கான பயிற்சிகளில் மும்முரமாக (பெயர் அறியில்லாத இடத்தில்) ஈடுபட்டனர். தாக்குதலிற்கான திட்டத்தை தலைவர் அவர்கள் வகுத்து கேணல் ராயு அவர்களிடம் வழங்கினார். அதனை கடற்சிறுத்தைக் கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் போராளிகளுக்கு விளங்கப்படுத்தினார், மாதிரி வரைபடத்தின் உதவியுடன். பழிவாங்குவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. 25/02/1998 அன்று கிளாலி கடற்படைத்தளத்தினுள் ஊடுருவித் தாக்க ஐந்தைந்து பேராகப் பிரிக்கப்பட்ட மூன்று சதளங்களைக் (Squad) கொண்ட கடற்சிறுத்தைகளைச் சேர்ந்த 15 பேர் (10 ஆண் போராளிகளும் 5 பெண் போராளிகளும்) ஆயத்தமாக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இச்சதளங்களின் தலைவர்கள் இவ்வேவிற்காகச் சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த சதளங்களுக்கும் மேஜர் குயிலன் தலைமை தாங்கிச் சென்றார். இவர்களைப் பத்திரமாக ஏற்றிப்பறிப்பதோடு இத்தாக்குதல் நடைபெறும் வேளை கிளாலி சிங்களக் கடற்படைக்கு ஆனையிறவிலிருந்து கடல்வழி உதவிகள் ஏதும் கிடைக்காமல் தடுப்பது ஆகிய பணிகள் கடற்புலி மேஜர் சுருளியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நடவடிக்கைச் சதளம் மாலை 6 மணியளவில் நாகதேவன்துறையிலிருந்து இரு உப்பயானங்களில் (Inflatable boats) வெளிக்கிட்டுச் சென்றனர். மாலை 8 மணியளவில் இறங்குதுறைக்கு அண்மையில் வைத்து, தளத்திலிருந்து 2 கடல்மைல் தொலைவில், இறக்கப்பட்டு மேற்கொண்டு நீந்தி ஊடுருவினர். இவர்கள் சாமம் 10 மணியளவில் முதலாவது காவல் வேலியை அண்மித்தனர். ஆனால் திட்டத்தின்படி கைப்பற்றிச்செல்லும் இலக்காக குறிக்கப்பட்டிருந்த கே-71 வகுப்புப் படகு அல்லது வோட்டர் ஜெட் வகுப்புப் படகு என்பனவற்றில் இரண்டுமே வெளியே சுற்றுக்காவலிற்குச் சென்றுவிட்டிருந்தன, போக்கூழாக. எனவே தாக்குதலிற்கான திட்டம் மாற்றப்பட்டு அங்கேயிருந்த மற்றைய மூன்று சுடுகலப் படகுகளில் ஒன்றைக் கைப்பற்றுவதென்று முடிவானது. புதுத் திட்டத்திற்கமைவாக சாமம் 10:30 மணியளவில் கடற்சிறுத்தைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். இவர்களுக்கு உதவியாக பூநகரியிலிருந்து கிட்டுப் பீரங்கிப் படையணியினரின் சேணேவிச் (Artillery) சூட்டாதரவும் செறிவாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இனங்காணப்பட்ட இலக்குகள் மீதும் உள்ளிருந்து வழங்கப்பட்ட ஆட்கூற்றுகளுக்கும் ஏற்ப சூடுகள் வழங்கப்பட்டன. படையினர் திணறினர்! தாக்குதல் தொடங்கி சிறிது நேரத்தில் சுட்டபடி கடற்கலமொன்றை நெருங்கிக்கொண்டிருந்த போது ஒரு ஆண் கடற்சிறுத்தைப் போராளி காயமடைந்தார். மேற்கொண்டு அடிபட்டபடி படகொன்றின் பக்கவாட்டு கம்பியின் மேலே ஏறி உள்நுழைய முற்பட்ட மற்றொரு ஆண் கடற்சிறுத்தைப் போராளி வீரச்சாவடைந்தார், படகினுள் மறைந்திருந்து சுட்ட படையினனால். எனினும் கடற்சிறுத்தைகள் தொடர்ந்து அடிபட்டனர். மேற்கொண்டு படகினுள் ஏறிய இன்னொரு கடற்சிறுத்தை அணியச் சுடுகலனை நோக்கிச் சென்ற போது அங்கே பதுங்கியிருந்த மற்றொரு சிங்களப் படையினனின் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைந்தார். ஆயினும் அடுத்தடுத்து படகினுள் ஏறிய நான்கு கடற்சிறுத்தைகள் படகைக் கைப்பற்றி ஓட்டிச்செல்ல முற்பட ஏதோ சிக்கலானதால் படகு நகர மறுத்தது. எனவே ஏனைய போராளிகள் படகைத் தள்ளி நகர்த்த முற்பட்டனர். சிலர் படையினரோடு அடிபட்டுக்கொண்டிருந்தனர். சமர் நீடிக்க அவ்விடத்தை நோக்கிச் சிங்களத் தரப்பின் எறிகணைகளும் வந்து வீழத் தொடங்கின. ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று நிலைமை மோசமடைந்தது. இனியும் படகுகளை எடுத்துச்செல்ல இயலாது என்பதை புரிந்துகொண்ட நடவடிக்கைக் கட்டளையாளர் மேஜர் குயிலன், அங்கிருந்த மூன்று படகுகளையும் உடைத்துவிட்டு பின்வாங்குவதாக கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தார். கட்டளைப்பீடமும் அதற்கு இசைவளித்தது. அச்சமயம் தொடர்பில் இருக்கும் போதே மேஜர் குயிலன் சன்னம் ஏவுண்ணி (projectile hit) வீரச்சாவடைந்தார். உடனே அவர் அருகில் நின்ற துணைக்கட்டளையாளர் அவரின் தொலைத்தொடர்புக் கருவியை எடுத்து கட்டளைப்பீடத்திற்கு நிலைமையை அறிவித்தார். கட்டளைப்பீடம் காயங்களையும் வீரச்சாவுகளையும் பின்னுக்குவிடாது அனைவரையும் ஏற்றிவருமாறு பணித்தது. பின்வாங்கும் போது இன்னுமொரு போராளியும் காயமடைந்தார். மேஜர் சுருளியின் கடற்புலிப் போராளிகள் அனைத்துக் கடற்சிறுத்தைகளை இரு கவிர் வகுப்பு கரவுப்படகுகளில் (Stealth boats) ஏற்றிக்கொண்டிருந்த்னர். அப்போது கையில் காயத்தோடு படகில் ஏற முற்பட்ட பெண் போராளியொருவர் தளர்வால் கீழே வீழ்ந்துவிட அவரைக் கவனியாமல் ஏனைய போராளிகள் தளம் திரும்புகின்றனர். ஆனால் தவறிய போராளியோ காயத்தால் களைக்காமல் தொடர்ந்து பின்னீச்சல் அடித்து அடுத்த நாள் நண்பகல் 10:35 இற்கு பூநகரியில் கரை மீண்டார். தளம் திரும்பிக்கொண்டிருந்தோரை வழிமறிப்பதற்காக ஆனையிறவிலிருந்து சிங்களப் படகுகள் இரண்டு விரைந்தன. வரும் போராளிகளின் ஏமத்திற்கு (escort) கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் மேஜர் சுருளி தலைமையில் விரைந்தன. ஆனாலும், வைகறை 5:30 மணியளவில் பூநகரிக் கரையிலிருந்து 3 அல்லது 4 கடல் மைல் தொலைவில் வைத்து பகைவரின் இரு வோட்டர் ஜெட்களோடு பின்வாங்கிக்கொண்டிருந்தவர்கள் முட்டுப்பட்டனர். அப்போது கடற்புலிகளின் ஏமப்படகுகள் வந்து சேராவிட்டாலும் இரு சிங்களச் சுடுகலப் படகுகளை நோக்கிச் சுட்டபடி அவற்றின் ஊட்டிற்குள்ளால் தம் கவிர் வகுப்புப் படகுகளைச் செலுத்திய கடற்புலி ஓட்டிகள் பத்திரமாக கடற்சிறுத்தைகளோடு தளம் திரும்பினர். இத்தாக்குதலில் கடற்படையின் களஞ்சியம் ஒன்றும் படகு ஒன்றும் அழிக்கப்பட்டது. மேலும் இரு படகுகளும் கடற்படைத்தளமும் சேதமடைந்தன. தளத்தினுள்ளிருந்த சில காவலரண்களும் அழிக்கப்பட்டன. கடற்படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டனர் என்று சிங்களப் படைத்துறை அறிவித்தது. காயமடைந்தோரின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. இத்தாக்குதலில் கடற்சிறுத்தைகள் தரப்பில் நடவடிக்கைக் கட்டளையாளர் கடற்சிறுத்தை மேஜர் குயிலன் கடற்சிறுத்தை கப்டன் சூரியன் கடற்சிறுத்தை கப்டன் ஜெயந்தன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைய மேலும் மூன்று கடற்சிறுத்தைகள் காயமடைந்தனர். உசாத்துணை: உதயன்: 27/02/1998, 01/03/1998 - இரு அடிபாட்டுக் கன்னைகளின் இழப்புகளின் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது தமிழ்நெற்: 26/02/1998 (SLN boat destroyed in commando raid - Radio) - இரு அடிபாட்டுக் கன்னைகளின் இழப்புகளின் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது திரைப்படம் : ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ - சமர் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது 25.02.1998 கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் .! - இக்கட்டுரையிலிருந்து போராளிகளின் பெயர் விரிப்புகள் கொள்ளப்பட்டன. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
மூன்றாம் ஈழப்போரில் சிங்கள வான்படையின் யாழ். குடாநாட்டிற்கான வான்வழி வழங்கல்கள் இரு அவ்ரோ வானூர்திகளின் சுட்டுவீழ்த்தலுடன் முடக்கப்பட்டதால் விரைவான வழங்கலுக்கு வழியற்றுப் போனது. இந்த நிலைமையில் தான் கடல்வழி வழங்கல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றன. அதன் போது, 1996, 1997 ஆண்டுக் காலத்தில், யாழ் குடாநாட்டில் தரிபெற்றுள்ள சிங்களப் படைக்கான கடல் வழி வழங்கலையும் நிறுத்தும் நோக்கோடு கடற்புலிகள் கடலில் பயணித்த சிங்களக் கடற்படையின் வழங்கல் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொண்டதோடு சில கப்பல்களை சிறைபிடிக்கவும் - சில நாட்கள் கழித்து விடுவித்தனர் - செய்தனர். குறிப்பாக தீவின் மேற்குக் கடற்பரப்பில் புலிகளின் வலிதாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டதால் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ் குடாநாட்டிற்குச் மூலம் செல்வது பாதுகாப்பற்றது என்பது தெரிந்ததால், முதலில் திருமலை சென்று அங்கிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்வதே நல்லம் என்று சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 1998 சனவரி மாதத்தில் அறிவுரை கூற அதன் படி சிங்களப் படையும் ஒழுகியது. இது கடலில் கடற்புலிகளின் ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவடால் ஆக கருதப்பட்டது என்று கடற்புலிகளின் சிறப்புக்கட்டளையாளர் பிரிகேடியர் சூசை குறிப்பிட்டார். இந்தச் சவடாலிற்கு முடிவு கட்டி வெல்லும் நாளிற்காக கடற்புலிகள் காத்திருந்தனர். அப்போதுதான் ஒரு உளவுத்தகவல் புலிகளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. பெப்ரவரி 22, 1998 அன்று 650 படைவீரர்களை ஏற்றவல்ல "சக்தி" என்ற தரையிறக்கக் கலத்தில் 400 வரையான படைவீரர்களும், "பப்பதா" என்ற எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலத்தில் (Landing Craft Mechanized) வகை-89 தகரிகள் (Tank) இரண்டும் அவற்றிற்கான கணைகளும் கொஞ்சப் படைவீரர்களும், 27-30 வரையான படையினரோடு "வலம்புரி" (இது தீவக மக்களின் போக்குவரத்திற்கு என்று சொல்லி கொழும்புக் கட்டுத்துறையில் கட்டப்பட்டு பின்னர் படைத்துறையால் எடுத்துக்கொள்ளப்பட்டது ஆகும்) என்ற படைய வலசை (Military ferry) ஆகியனவோடு இவற்றிற்கான ஏமத்திற்காக இரண்டு சுடுகலப் படகுகளும் இரண்டு டோறாக்களும் என மொத்த 7 கடற்கலங்கள் அடங்கிய தொடரணி ஒன்று நண்பகல் வேளையில் திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்படப் போகின்றது என்பதே அவ்வுளவுத் தகவல் ஆகும். 'சமர் நடந்த நாளில் கடற்புலிகளால் எடுக்கப்பட்ட நிகழ்படக் காட்சியிலிருந்து: இடது பக்கம் நிற்பது வலம்புரி, வலது பக்கம் நிற்பது பப்பதா | படிமப்புரவு(Img. crd.): நிதர்சனம்' 'இது ரணகஜ. மூழ்கடிக்கப்பட்ட பப்பதாவும் இதனை ஒத்த தோற்றத்தையே கொண்டது | படிமப்புரவு: navy.lk' இவை தம் பயணத்தினை வல்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகரான திருமலையிலிருந்து காலை 7 மணியளவில் வெளிக்கிட்டு பகல் நேரத்தில் முல்லைத்தீவை அடைந்து பின்னர் காங்கேசன்துறையை அடைவதற்கு மாலை 8 அல்லது 9 மணி சொச்சம் ஆகும். இவற்றில் இருந்த படைஞர்களில் பெரும்பாலானோர் தமது விடுமுறையினை முடித்து விட்டு தத்தம் கடமைகளுக்கு; தமிழீழ வல்வளைப்பிற்கு; திரும்பிக்கொண்டிருந்தவர்கள் ஆவர். அந்த இரண்டு தகரிகளும் கொழும்பில் சிறிலங்காச் சுதந்திர நாள் கொண்டாடத்தில் பங்குபெறுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் வடக்குச் சமர்க்களத்திற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தன ஆகும். இதைத் தாக்குவதற்கு கடற்புலிகள் ஆயத்தமாகினர். புறப்படுவதற்கு முன்பாக போராளிகளுடன் சேர்ந்து கட்டளையாளர்களும், கப்பலை அழிக்காது தளம் திரும்புவதில்லை என்று உறுதியெடுத்துக்கொள்கின்றனர். இந்தத் தொடரணியை தாக்குவதற்காக கடற்புலிகளின் துணைக் கட்டளையாளராகிய லெப். கேணல் நிரோஜன் அற்றைச் சமரின் தாக்குதல் கட்டளையளராக பணியமர்த்தப்பட்டார். லெப். கேணல் நிரோஜனின் தலைமையில் அவரைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட சண்டைப்படகொன்றும் அவருக்கு உதவியாக லெப். கேணல் மதியை கட்டளை அதிகாரியாகக் கொண்ட ஒரு வோட்டர்ஜெட் வகுப்புச் சண்டைப்படகும் தயாராகின. இவர்களோடு மோதியிடிப்பதற்காக கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் (இவரோடு கடற்கரும்புலிகளான மேஜர் குமரேஸ், கப்டன் ஜனார்த்தனி, கப்டன் வனிதா), கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (இவரோடு கடற்கரும்புலிகளான மேஜர் தமிழ்நங்கை, மேஜர் தமிழினியன், கப்டன் நங்கை), கடற்கரும்புலி மேஜர் மொறிஸ் (இவரோடு கடற்கரும்புலி மேஜர் மதன் (பின்னாளில் வேறொரு கடற்சமரில் வீரச்சாவடைந்தார்)) ஆகிய கடற்கரும்புலிகளைக் கட்டளை அதிகாரிகளாகக்கொண்ட மூன்று வெள்ளை வகுப்பு இடியன்களுமாக மொத்தம் 5 படகுகள் ஒரு கலத்தொகுதியாகப் (Flotilla) புறப்பட்டுச் சென்றன. இவர்களின் நோக்கம் சக்தியை மூழ்கடிப்பதாகும். இவர்களின் கலத்தொகுதியானது சிங்களத்தின் தொடரணி முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்பரப்பைத் தாண்டி வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த போது, 20 கடல்மைல் உயரத்தில், வட்டுவாகலிலிருந்து புறப்பட்டு கடற்படையை மேவியபடி 30 கடல்மைல் உயரத்தில் அவர்களை கிட்டத்தட்ட 15 மைல் தொலைவு இடைவெளி விட்டுப் பின்தொடர்ந்து சென்றது. அதாவது இவர்களுக்குக் கீழை தான் சிங்களத் தொடரணி சென்றுகொண்டிருந்தது. தமிழரின் இக்கலத்தொகுதியின் நோக்கம் சிங்களத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த "சக்தி"யை மூழ்கடிப்பதே ஆகும். அதே நேரம் வெற்றிலைக்கேணியில் சிங்களவரின் மேலதிகமான இரண்டு டோறாக்கள் வெட்டுப்போட்டு (cutout) இந்தத் தொடரணிக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டு நின்றன. அந்த இடத்தில் நின்ற டோறாக்களைத் தாக்குவதற்கு லெப். கேணல் பாலையாவின் தலைமையில் (இவருடன் கடற்கரும்புலி லெப். கேணல் சிலம்பரசனும் சென்றிருந்தார்) அவரையும் லெப். கேணல் பழனி, மேஜர் கருணாகரன் ஆகியோரையும் கட்டளை அதிகாரிகளாகக்கொண்ட மூன்று சண்டைப்படகுகளும் (கிடைக்கப்பெற்ற படிமங்களிலிருந்து இம்மூன்றில் ஒன்று வோட்டர்ஜெட் வகுப்பு என்பது என்னால் அடையாளங்காணப்பட்டது) லெப். கேணல் பாலையாவின் கட்டளை பெறும் கடற்கரும்புலி லெப். கேணல் கரனை (இவரோடு கடற்கரும்புலி கப்டன் மேகலா) கட்டளை அதிகாரியாகக் கொண்ட சூடை வகுப்பு இடியனுமாக ஒரு கலத்தொகுதி ஆயத்தமாகிச் சென்றது. இவர்கள் தொடரணியைக் காட்டிலும் உயரங்குறைவாக, 20 கடல்மைல் உயரத்தை விட, புறப்பட்டுச் சென்றனர். இவர்களின் நோக்கம் வெட்டுப்போட்டு நிற்கும் டோறாக்களில் ஒன்றை மூழ்கடிப்பதாகும். இவர்கள் வெற்றிலைக்கேணியை அண்மித்த போது மாலை 7:15 மணியளவில் டோறாவோடு முட்டுப்பட்டு மோதல் வெடித்தது. ஆனால் அந்நேரத்தில் தொடரணி பருத்தித்துறையைத் தாண்டி காங்கேசன்துறைக் கடற்பரப்புக்குள் இறங்கிக்கொண்டிருந்ததால் டோறா விலகி அதற்குப் பாதுகாப்புக்கொடுக்கச் சென்றது. எஞ்சிய டோறாவோடு லெப். கேணல் பாலையா தலைமையிலான கலத்தொகுதி அடிபட்டுக்கொண்டிருந்த போது தொடரணியில் சென்றுகொண்டிருந்த "வலம்புரி" கப்பல் தன்பாட்டில் தொடரணியிலிருந்து விலகி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தது. உடனே பாலையாவோடு நின்ற கடற்கரும்புலி லெப். கேணல் கரனின் இடியன் புறப்பட்டுச்சென்று கடற்புலிகளின் சூட்டாதரவோடு இரவு 8:00 மணியளவில் வலம்புரியோடு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இக்கலம் ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தில் கடலினுள் மூழ்கி அமிழ்ந்துவிட்டது. இங்கு கடற்சமர் நடந்துகொண்டிருந்த வேளை தொடர்ந்து தொடரணிக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த லெப். கேணல் நிரோஜனின் கலத்தொகுதி ஒரு கட்டத்தில் தொடரணியை நெருக்கியது. அதைக் கண்டவுடன் தொடரணியில் சென்றுகொண்டிருந்த இரு சுடுகலப் படகுகளும் கடற்புலிகளின் அந்தக் கலத்தொகுதியோடு பொருத விரைந்தன. சிங்களவரின் சுடுகலப் படகுகள் தமிழரின் சண்டைப்படகுகளோடு பொருத காங்கேசன்துறைக் கடற்பரப்பில் கடற்சமர் வெடித்தது. இக்கடற்சமர் நடந்துகொண்டிருப்பது பகைவரின் கடற்பரப்புக்குள் தான். மேலும் கரையிலிருந்து நீண்ட தொலைவில் சென்றுவிட்டதால் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளருடனான தொடர்பு முற்றுமுழுதாகவே துண்டிக்கப்படதொரு நிலை. இவ்வாறாக முற்றிலும் சாதகமற்றதொரு சமர்க்களத்தில் நின்றபடியே தான் கடற்சமரை வழிநடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார், லெப். கேணல் நிரோஜன். இக்கடற்சமரின் ஒரு கட்டத்தில் தமிழரின் படகுகள் பிரிந்து வேறு திசைகளில் சென்றன. பின்னர் மீண்டும் அவைகளை ஒழுங்குபடுத்திய தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன், முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை பப்பதா மீது மேற்கொள்கிறார். முதலில் கடற்கரும்புலி மேஜர் வள்ளுவனின் இடியனைக் கொண்டு சென்று பப்பதாவின் கடையார் பகுதில் மோதுவிக்கிறார். பப்பதா நிலைகுலைந்து அப்படியே நிற்கிறது. உடனே கடற்கரும்புலி கப்டன் மொறிஸை கட்டளை அதிகாரியாகக் கொண்ட குண்டுப்படகு கப்பலை நோக்கி விரைந்து சென்றது. அது கப்பலின் அணியத்தில் மோத எத்தனித்த போது பப்பதாவிலிருந்து வலுவெதிர்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்படையினரின் சூட்டில் கப்டன் மொறிஸ் ஏவுண்ணி கடும் காயத்திற்கு உள்ளாக்கிறார். உடனே விரைவாகச் செயற்பட்ட கடற்புலிகள் குண்டுப்படகிலிருந்த இரு இடியர்களோடு சேர்த்து இடியனையும் வலுத்த சேதமேற்பட முன்னர் மீட்டுப் பின்னுக்குக் கொண்டுவருகின்றனர். பேந்து, 9:30 மணியளவில், எஞ்சியிருந்த மூன்றாவது இடியனை லெப். கேணல் நிரோஜன் கொண்டு சென்று மீண்டும் அணியத்தில் இடிக்க முயற்றுவிக்க இம்முறை வெற்றிகரமாக மோதியிடிக்கப்படுகிறது, கடற்கரும்புலி மேஜர் சுலோஜனைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனால். மோதியது கப்டன் மொறிஸ் எத்தனித்த அணியத்தின் பக்கவாடு அல்லாமல் மற்றைய பக்கவாட்டில் ஆகும். தீப்பிடித்து எரிந்த கப்பல் உடனே அந்தப் பக்கமாக பப்பதா கவிழ்ந்து ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தில் மூழ்கியது. இது 17 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது. காயப்பட்ட கடற்கரும்புலி கடற்சமர்க்களத்திலேயே வீரச்சாவடைந்துவிட்டார். மேற்கொண்டு சில மணிநேரம் நீடித்த இக்கடற்சமர், அடுத்த நாள், 24/02/1998, சாமம் 2:00 மணியளவில் கடற்புலிகளின் அனைத்துக் கலத்தொகுதிகளும் தளம் திரும்பிய போது முடிவிற்கு வந்தது. தொடரணிக்கு மேலதிகப் பாதுகாப்பிற்காக திருமலையிலிருந்து விரைந்து வந்துகொண்டிருந்த டோறாக்கள் இதே நாளின் வைகறை வேளையில் இத்தொடரணியோடு சேர்ந்து கொள்ளும் சமயம் கடற்புலிகள் தம் தளத்திற்குத் திரும்பிவிட்டனர். இத் தரையிறக்கக் கலத்திலிருந்த இரு தகரிகளையும் கலத்தையும் மீட்க தம் நண்பரான இந்தியக் கடற்படையின் உதவியை நாட உதவியும் கிடைத்தது, சிங்களத்திற்கு. முதலில் கப்பலை எடுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றுக்கொண்டிருந்ததால் அதை கடலிற்கு அடியில் வைத்தே தகர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அதே நேரம் மூழ்கிய தகரிகளை மீட்க இயலாவிட்டால் அவற்றின் முக்கிய பாகங்களையாவது கழற்றி எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதலாம் திகதி கப்பலினுள்ளிருந்த இரு தகரிகளும் இந்தியரின் உதவியோடு மீட்கப்பட்டது. பின்னர் தரையிறக்கக் கலத்தையும் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அதன் முடிவு என்னவென்று என்னால் அறியமுடியவில்லை. பப்பதாவோடு மூழ்கிய மற்றொரு கடற்கலமான வலம்புரியைக் கடற்சுழி இழுத்துச் சென்றுவிட்டதால் அது மூழ்கிய இடத்தை கடற்படையினரால் ஈழப்போர் முடியும்மட்டும் கண்டுபிடிக்க இயலவில்லை. இச்சமரானது பருத்தித்துறைக் கரைக்கு அண்மையாக நடந்ததால் கரையோரத்திலிருந்த மக்கள் வீடுகளின் சாளரங்களும் கதவுகளும் அதிர்ந்தன. கரையிலிருந்த படையினர் கடலை நோக்கி வெளிச்சக்குண்டுகளை சமர் முடியுமட்டும் வீசியபடியிருந்தனர். மேலும் அவர்கள் கடலை நோக்கிச் சுடவும் செய்தனர். இவ்வேட்டொலிகளும் வெடியோசைகளும் சாமத்தில் கேட்டதால் தூக்கத்திலிருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். கடலில் சமர் நடப்பதை அறிந்து பொதுமக்கள் கரையோரம் நின்று கண்டனர். மூழ்கிய பப்பதாவின் ஒரு முனை மட்டும் கடலின் மட்டத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்ததை அடுத்த நாள் கரையோர மக்களால் காணக்கூடியவாறு இருந்தது. 24/02 வரையில் இச்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினரின் இரு தரையிறக்கக் கலத்திலுமிருந்த 108 படையினரில் (அலுவல்சாராக வெளியிடப்பட்ட எண்ணிக்கை. பெயர் பதியாமல் கப்பலில் வந்தோர் எத்தனை பேரென்பது தெரியவில்லை) 14 கடற்படையினரும் 43 தரைப்படையினரும் உட்பட 60 பேர் வரை சிங்களக் கடற்படையின் சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் தாமாக நீதிக் கரைசேர்ந்தனர். ஒரு கப்டன் உட்பட நால்வர் தமிழ்நாட்டை நோக்கி நீந்திச் சென்று கொண்டிருந்த வழியில் தமிழ்நாட்டு மீனவர்களால் மீட்கப்பட்டு இந்தியக் கடற்படயிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் வானூர்தி மூலம் சிறிலங்காவை அடைந்தனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கை சிங்களப் படைத்துறையால் முடுக்கிவிடப்பட்டது. 48 பேரின் கதி இறுதிவரை தெரியவரவில்லை. தவிபுவின் அறிக்கையின் படி, சிங்களப் படைத்துறைத் தரப்பில் இத்தாக்குதலில் மொத்தம் 62 படைஞர்கள் காயப்பட்டதோடு 47 பேர் கொல்லப்பட்டனர். தமிழர் தரப்பில் 11 கடற்கரும்புலிகள் தாய்நாட்டின் விடுதலைக்காய் தம்முயிரைத் தியாகம் செய்தனர். உயிராயுதங்களின் பெயர் விரிப்புப் பின்வருமாறு: கடற்கரும்புலி லெப். கேணல் கரன் கடற்கரும்புலி கப்டன் மேகலா கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் எ குமரேசன் கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தனி கடற்கரும்புலி கப்டன் வனிதா கடற்கரும்புலி மேஜர் மாமா எ சுலோஜன் கடற்கரும்புலி மேஜர் நைற்றிங்கேள் எ தமிழ்நங்கை கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் கடற்கரும்புலி கப்டன் நங்கை கடற்கரும்புலி மேஜர் தமிழின்பன் எ மொறிஸ் அன்னவர்கள் தவிர்த்து கடற்புலிகள் தரப்பில் வேறு யாரும் வீரச்சாவடையவில்லை. காயப்பட்டோர் விரிப்பு அறியில்லை. 'சக்தி என்ற படைக்காவிக் கப்பல் | படிமப்புரவு: வேசுபுக்கு (Sri Lanka Naval Fleet)' அன்று மூழ்கடிக்கப்பட்ட பப்பதா என்ற எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலமானது 1994 ஆம் ஆண்டு கடற்கரும்புலி மேஜர் வித்தியால் இடிக்கப்பட்டு சேதத்தோடு தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமரின் போது கடற்புலிகள் தம் முதன்மை இலக்காகக் கருதியது 'சக்தி' என்ற தரையிறக்கக் கலத்தையே ஆகும். ஆனால் புலிகளின் கெடுவேளையோ அல்லது சிங்களத்தின் நல்லவேளையோ தெரியவில்லை, வந்த மூன்று கலங்களிலையுமே வேகம் கூடியதான அது ஓடித்தப்பிப் பிழைத்தது. அது மட்டும் அம்பிட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்குமாயின் சிங்களப் படைத்துறைக்கு பேரிழப்பே ஏற்பட்டிருக்கும்! உப்புக்காற்றும் உங்கள் பெயர்சொல்லி இன்று மட்டுமல்ல, தமிழீழ வரலாறு உள்ளவரை வீசும்! உசாத்துணை: உயிராயுதம் - 7 உதயன்: 24/02/1998 உதயன்: 25/02/1998 உதயன்: 26/02/1998 உதயன்: 01/03/1998 உதயன்: 02/03/1998 தமிழ்நெற்: 23/02/1997 (Two tanks on sunk ships), (Eleven Tigers killed in naval battle), (Sea tigers sink ship carrying troops - radio) கடற்கரும்புலிகளின் படிமங்கள்: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/blacktigers லெப்.கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு எம்.ரி. கொய் தண்டையல் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
சூன் 28, 1997 அன்று சாம வேளையில் தமிழர் தலைநகராம் திருமலையின் கடற்பரப்பில் இரு படகுகளில் போராளிகளின் பயணம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஆறு போராளிகள் பயணித்துகொண்டிருந்த ஒரு படகு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் சூட்டிற்கு இலக்காகி உடைந்தது. கடலில் குதித்த போராளிகள் பல மைல்கள் நீந்திக் கரையை அடைந்தனர். இவ்வாறு ஆறு போராளிகளும் உயிர் தப்பிக் கரைமீண்ட இடம் திருமலையில் உள்ள இறக்கண்டி என்ற ஊராகும். இது முசிலீம்கள் வாழும் ஊராகும். ஆனால் கரைமீண்டோருக்கு இவ்விடையம் தெரியாது. அந்த விடுதலை வீரர்கள் அருகிலிருக்கும் தமிழரின் ஊரொன்று என எண்ணி இதில் மீண்டனரோ என்னவோ! புலிவீரர்கள் அவ்வூர் மக்களான சோனகர்களிடம் உதவி கோரினர். அதன்போது, கேட்பது தமிழீழ விடுதலை வீரர்கள் என்பதை அறிந்தவுடன் இனவெறி முற்றிப் போராளிகளை மனிதநேயமற்ற முறையில் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியதுடன் அவர்களை சிங்களப் படையினரிடம் பிடித்துக்கொடுத்து காட்டிக்கொடுக்கவும் செய்தனர். கரைமீண்டவர்களிடம் படைக்கலன்களோ இல்லை புலிகளின் மரபுவழி தற்கொலை ஏந்தனமான குப்பியோ (பிடிபட்டதால் கழற்றப்பட்டு விட்டது) கூட கைவசம் இல்லாததால் சோனகர்களிடமிருந்து தப்பிக்க வழியேதுமின்றி சிங்களப் படையினரிடம் அம்பிட நேர்ந்தது. கைதான புலிகளை சிங்களப் படையினர் தொடர்ந்து வதை உசாவல் செய்த போது தான் அவர்களில் ஒருவர் கடற்கரும்புலி என்பதும் அவருடைய பெயர் பாலன் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போராளிகள் அனைவரும் முறைமையான வதைக்கு உட்படுத்தப்பட்டனர். சித்திரவதை நாட்கணக்கில் நீண்டது. போராளிகளின் உயிர் இன்றோ நாளையோ என ஊசலாடியது. கைதானோரில் இருவர் பெண் போராளிகளுமாவர். பெண்களுக்குச் சிங்களவர் செய்யும் வேதனைகளை வாயால் விரித்திட முடியாது. சொல்ல வேண்டியதில்லை, நீங்களே அறிவீர்கள் அவற்றை. எனவே நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள், என்ன நடந்திருக்குமென! இந்தச் சோனகர்களின் மனிதநேயமற்ற இச்செயல்களின் விளைவாக இவ்வூரைச் சேர்ந்த, புலிகளைத் தாக்கியதில் தொடர்புடைய, ஒரு இசுலாமிய மதகுருவும் 10 மாணவர்களும் உட்பட 39 முசிலீம்களைப் புலிகள் கைது செய்தனர். கைது செய்ப்பட்டோர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடலால் முல்லையில் உள்ளவொரு இடத்திலுள்ள வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து, தடுப்பிலிருந்தோரில் மதகுருவும் 6 மாணாக்கரும் என எழுவர் சூலை 14, 1997 அன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டோரிடம் எஞ்சிய 32 பேரையும் விடுவிக்க வேண்டுமெனில் சோனகர்களின் காட்டிக்கொடுப்பால் சிறையில் வதைபட்டு உயிருக்குப் போராடும் தம் வீரர்கள் அறுவரையும் விடுவிக்க வேண்டுமெனப் புலிகள் நிபந்தனை சொல்லி அனுப்பிவிட்டனர். விடுவிக்கப்பட்டோர் தாம் நல்ல முறையில் புலிகளால் நடத்தப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவையிடம் தெரிவித்ததோடு புலிகளின் நிபந்தனை குறித்தும் அறியத்தந்தனர். இந்நிலையில் சூலை 16, 1997 அன்று புலிகள் திறந்த செய்தியாக இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிவித்ததோடு தம் நிபந்தனையையும் பறைந்தனர், புலிகளின் குரல் வானொலி ஊடாக. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, "நாம் தடுத்து வைத்துள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டி பல முஸ்லீம் அரசியல்வாதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்-முஸ்லீம் "இனங்கள்" இடையே நல்லுறவைப் பேணுமாறு கோருகின்றனர். "நாம் முஸ்லீம் மக்களை எமது உடன்பிறப்புகளாக மதிப்பதோடு அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் விளைவிப்பது எமது நோக்கமுமல்ல. இறக்கண்டி நிகழ்வு எமக்கு ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. "விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடும் எமது விடுதலை வீரர்களை தாக்கித் துன்புறுத்தியது போதாதென்று பகைவரிடம் காட்டிக் கொடுத்த செயல் கண்டிக்கத்தக்கது. "இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளும்படி நாம் முஸ்லீம் மக்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம். "இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகள் விடுவிக்கப்பட்டால் எம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களை உடனடியாக விடுதலை செய்ய நாம் தயாராகவிருக்கின்றோம். "இதற்கு ஆவன செய்யுமாறு முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொள்கின்றோம். "முஸ்லீம் சமூகத்துடன் நல்லுறவு பேண வேண்டுமென்ற நல்லெண்ண நோக்கிலேயே எமது தேசியத் தலைவர், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லீம் மத குருவையும் ஆறு முஸ்லீம் மாணவர்களையும் விடுதலை செய்தார்." எவ்வாறெயினும் இறுதிவரை எமது உன்னதமான விடுதலை வீரர்கள் சிங்களச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. இந்த முசிலீம்களுக்கும் என்ன நடந்ததென்று என்னாலும் அறியமுடியவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சிறையில் வதைபட்டுக்கொண்டிருந்த எமது தமிழீழ விடுதலை வீரர்களான புலிவீரர்களின் உயிர்கள் தாம் நேசித்த மக்களையும் தாய் மண்ணையும் விட்டுப் பிரிந்து சென்றன. அப்படிப் பிரிந்த உயிரொன்று இனவெறிச் சிங்கள அதிகாரிகளையே தம் தொப்பிகளை கழட்டி படைய மரியாதை செலுத்துமளவிற்கு ஒரு உன்னத தியாகத்தை செய்தது. ஆம், அந்த உயிர் எமது உயிராயுதங்களான கடற்கரும்புலிகளில் ஒருவனினதே. கரும்புலி பாலனே பகைவரும் விழி கசிய தன்னுயிரை மாய்த்தான்! முசிலீம்களால் பிடிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட பின்னர் சிங்களவர் கையிற்கும் காலிற்கும் விலங்கிட்டு அவரை சிறையில் படுக்கப்போட்டிருந்த போது நாக்கை வாயிலிருந்து நீட்டி பற்களால் கடித்தபடி வாயை மூடி தரையோடு சேர்ந்து அடித்தார்; நாக்கு தறிபட்டது! இயக்கக் கமுக்கங்களைக் காக்க வேண்டும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேறு வழியின்றி இதைச் செய்தான், அந்தப் புலி மறவன். இந்தச் செயலின் உணர்வுகளை சொற்களால் விரிக்கவோ எடைபோடவோ இயலாது. இதைச் செய்வதற்கோ ஒரு மன வலிமை வேண்டும். பாறையின் பெயர்கொண்ட ஊரில் பிறந்ததால் தான் என்னமோ, அது இவனிடம் நிறைந்தே காணப்பட்டது எனலாம். இவர் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசையோடு பல காலம் நின்றதனால் கடற்புலிகளின் பல கமுக்கங்களையும் நகர்வுகளையும் நன்கு அறிந்திருந்ததால், தான் சிங்களத்திற்கு நல்ல வேட்டை என்பதை நன்கறிந்து தன்னிடமிருந்த எந்தவொரு தகவலையும் சிங்களவர் பெற்றிக்கூடாது என்பதில் குறியாக இருந்ததன் விளைவாக யாரும் செய்யத் துணியாத இந்தத் தியாகத்தை செய்து நிறைவேற்றினார். இதனால் மயக்கமுற்றான். உடனே சிங்களவர் ஒரு படைய மருத்துவமனையில் இவரைச் சேர்ப்பித்தனர். அங்கே என்ன மாதிரியான பண்டுவம் இவருக்கு அளிக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை. சில நாட்கள் கழித்து அவர் கண்விழித்த போது தன்னைச் சுற்றிச் சிங்களப் புலனாய்வு அதிகாரிகள் நிற்பதை எண்ணித் திகைத்தார். தன்னிடமிருந்து தகவலை கறக்க அந்த இனவெறியர் ஆவலோடு இருப்பதை எண்ணி செய்வதறியாது ஒரு கணம் திகைத்தார். கையில் விலங்கிட்டு கட்டிலோடு சேர்த்திடப்பட்டிருந்ததால் தப்பியும் ஓட இயலாத நிலை. இருந்தபோதிலும் உடனே ஒரு முடிவெடுக்கிறான், அந்த உன்னத வீரன். கணப் பொழுதில் தன் தலையை கட்டில் சட்டத்தோடு அடித்து உடைத்து தற்கொலை செய்துகொள்கிறார். சிங்கள அதிகாரிகளே விழி பிதுங்கி திகைத்தனர். குழுமி நின்றோர் தம் தலையில் அணிந்திருந்த படையத் தொப்பிகளைக் கழட்டி இவரின் தியாகத்திற்கு இறுதிப் படைய மரியாதை செய்தனராம். "கடல் நடுவே படகுடைய கரையேகினான், கரையினிலே கொடியவரால் கைதாகினான், திடனோடு தன் நாவை தானே தறித்தான், தீயவருக்கும் விழி கலங்க தன்னை அழித்தான்!" --> கடற்கரும்புலிகள் பாகம்-4 இறுவெட்டிலிருந்த "பாலன் பிறந்த நிலம்" என்ற பாடலிலிருந்து இவ் உட்தகவலை 2005 ஆம் ஆண்டில் புலிகளின் இருபக்க உளவாளிகளால் கொழும்பிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் காவல்துறை அதிகாரியே (பெயர் மறந்துவிட்டேன்) தெரிவித்திருந்தார். எனவே தொடக்கத்தில் இவருக்கு, அதாவது படகு நேர்ச்சிக்கு கொஞ்ச நாட்களின் பின், புலிகள் வழங்கியிருந்த கப்டன் தரைநிலையிலிருந்து உயர்த்தப்பட்டு "மேஜர்" தரநிலை வழங்கி மதிப்பளிக்கப்பட்டார், இவரது உன்னத தியாகத்திற்காக. இவரோடு அற்றை நாளில் பிடிபட்டு வதைபட்டு வீரச்சாவடைந்த கப்டன் தும்பன், கப்டன் மேனகன், லெப். உத்தமன், 2ம் லெப். சுந்தரவதனி மற்றும் 2ம் லெப். ஆபனா ஆகியோருக்கு இந்நாளில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம். இதே பாலன் பிறந்த மண்ணான அம்பாறை மாவட்டத்தில் தாக்குதலிற்குச் சென்ற இரு போராளிகளை இது போன்று பிடித்துக்கொடுத்த நிகழ்வு 2008 ஆம் ஆண்டும் ஒருமுறை நிகழ்ந்திருந்தது, நானறிந்த வரை. இவ்வாறாக இந்த முசிலீம்களின் செயல்களால் தென் தமிழீழத்தின் நடைபெற்ற காட்டிக்கொடுப்புகள் ஏராளம். அவற்றால் நாமிழந்த உயிர்களோ எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டிக்கொடுப்புகள் ஈழப்போர் முடியும்வரை தொடர் கதையாகின. உசாத்துணை: உதயன்: 16/07/1997 பன்னாட்டு மன்னிப்பு அவை: https://www.amnesty.org/es/wp-content/uploads/2021/06/asa370191997en.pdf http://www.veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist உயிராயுதம் - 6 போரிலக்கியப் பாடல்: "பாலன் பிறந்த நிலம்" - கடற்கரும்புலிகள் பாகம்-4 இறுவெட்டு ஈகைக்கரும்புலி மேஜர் பாலன் நினைவு ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
- 2 replies
-
- 4
-
- ஆண்டு: 1997
- முஸ்லீம்கள்
-
(and 3 more)
Tagged with:
-
ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839 செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022 ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத படைத்துறைப் படையாகப் புலிகளை நிறுவியுள்ளது. 'ஆனையிறவினை மீட்டபின்னர், சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்' தமிழீழ விடுதலைப்புலிகளின் தரைப்படையணி உருவாக்கங்களும் வீறல் அதிரடிப்படைப் பிரிவுகளும் ஏப்ரல் 21 அன்று யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலில் அகலக்கால்பரப்பி பரந்து விரிந்திருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பின. 'ஆனையிறவையும் அதன் சுற்றுப்புறங்களையும் காட்டும் வரைப்படம். | படிமப்புரவு: தமிழ்நெற்' புலிகளின் படைத்துறை உருவாக்கங்களை எதிர்கொள்ளும் அதன் தென்முகப்பில், ஆனையிறவுக் களப்பு, அதன் உவர்க்கம் மற்றும் கரையோர நிலப்பகுதிகளில் மூன்று முக்கிய வலுவெதிர்ப்புக் கோடுகளால் தானைவைப்பு வலுவாக அரணப்படுத்தப்பட்டது. இவை மைல்களுக்கு கற்காரை மற்றும் எஃகுக் கட்டமைப்புகள், கண்ணிவயல்கள், முட்கம்பி அடுக்குகள், கண்ணிவயல்கள் மற்றும் கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டன. 'களப்பினுள் தாட்டுப் புதைக்கப்பட்டிருந்த கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் | படிமப்புரவு: பெயர் அறியில்லா வலைப்பூ' சிறிலங்கா தரைப்படையானது பூநகரி (நவம்பர் 93), முல்லைத்தீவு (ஜூலை 96), கிளிநொச்சி (செப்டம்பர் 98) ஆகிய தானைவைப்புகளைப் புலிகள் பரம்புவதற்காகக் கறந்த இவற்றின் வலுவெதிர்ப்பிலுள்ள ஓட்டைகள் மற்றும் வலுவீனங்களை கவனமாக கற்றறிந்தது; மற்றும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறையின் ஆலோசனை உள்ளீடுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான கேந்திர நுழைவாயிலை வைத்திருப்பதற்கு ஒரு அஞ்சத்தக்க அரண முறைமையைத் திட்டமிட்டுக் கட்டமைத்தன. 'ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கைக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் புலிகளின் தலைமையும் கட்டளையாளர்களும். | படிமப்புரவு: தமிழ்நெற்' இந்த வலுவெதிர்ப்புகள் ஆனையிறவுக்கு நேராக வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு கொத்தளம் போல கட்டமைக்கப்பட்ட பரந்தனிலுள்ள ஒரு பெரிய சிறிலங்கா படைமுகாமால் காக்கப்பட்டன. வடக்கில் அதன் பாரிய படைமுகாம்களின் வலுவெதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் "நிலையான அணுகுமுறையை" எடுத்துக்கொண்டதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் சிறிலங்கா தரைப்படையானது நீண்டகாலமாகத் திறனாயப்பட்டது. அவர்கள் சிறிலங்கா படையத் தலைமையை வல்லோச்சான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறும், இளக்கமான, பெயர்ச்சியான வலுவெதிர்ப்புக் கோடுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பரப்பில் பதிதாக்கல் வேண்டுமென்றும் வலியுறுத்தினர். ஆனையிறவின் அரணங்கள் மீளொழுங்குபடுத்தப்பட்டு வலுவூட்டப்பட்ட போது அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை. ஆனையிறவின் வலுவெதிர்ப்பென்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகளின் எவ்வுருவத்திலுமான 'அதிர்ச்சி மற்றும் மதிப்பச்சம்' என்ற கேந்திரத்திற்குத் தடுப்பாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். சிறிலங்காவின் நவீன படைத்துறை வரலாற்றில் ஆனையிறவின் வலுவெதிர்ப்பின் ஆழம் முன்னிகழ்வற்றதாகும். அதன் பிற்பகுதியான யாழ் குடாநாடானது சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த போதிலும் அங்கு விடுதலைப்புலிகளின் தவிர்க்கவியலா கமுக்க நடவடிக்கைகளானவை படைத்துறை வகையாகப் புறக்கணிக்க முடியாததாகக் கருதப்பட்டது. 51, 52 மற்றும் 53 ஆகிய மூன்று படைப்பிரிவுகள், புலிகளால் அச்சுறுத்தப்பட்ட குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் படைகளை ஒருங்குவிக்கும் வகையில் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தன. தானைவைப்பானது குடாநாட்டின் முக்கிய நகரத்திலிருந்து ஒரு கல்வீதிப்பாவாலான முதன்மை வழங்கல் பாதையையும் யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நிச்சயமற்ற முதன்மை வழங்கல் பாதையையும் கொண்டதால் 'முற்றிலும்' ஓம்பலானதாகக் கருதப்பட்டது. பரந்தனின் நன்னீர் கிணறுகளிலிருந்து ஆனையிறவிற்கான நீர் வழங்கலிற்கான மாற்றீடு பின்புறத்தில், இயக்கச்சியில், தளத்திற்கு மைல்களிற்குப் பின்னால், பாதுகாப்பாகயிருந்தது. இவற்றைத் தவிர, அதை அழிப்பதற்காக வலுவெதிர்ப்பு வேலிகளுக்குப் பின்னால் ஊடுருவும் புலிகளின் முயற்சியை முறியடிக்க, பலாலியில் ஒரு டசின் சேணேவிச் சுடுகலன்கள் அடங்கிய ஒரு சூட்டுத்தளம், ஆனையிறவு தானைவைப்பிற்குப் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஆழமாக’, அமைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தானைவைப்பின் வலுவெதிர்ப்பிற்குக் கொடுக்கப்பட்ட 'ஆழத்தின்' வலுவான கூறு, கட்டைக்காடு-வெற்றிலைக்கேணி கடற்கரையிலுள்ள சிறீலங்கா தரைப்படை, கடற்படைத் தளம் ஆகும். இது நிலம் மற்றும் வானின் தொடர்பு துண்டிக்கப்படும் போது, ஒடுவில் முயற்சியான வழங்கல் பாதையாக தொழிற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சிறிலங்காப் படைத்துறைத் தலைமையானது, அவர்களின் மேற்கத்திய பாடநூலின் 'வலுவெதிர்ப்பு ஆழம்' பற்றிய அறிவுக்கு இணங்க, புலிகள் ஆனையிறவின் 'வலுவெதிர்ப்பின் ஆழத்திற்கு' எதிராக, பாரிய கடல் கடப்புகள் மற்றும் படைத்துறை உருவாக்கங்களை போதுமான வேகத்துடன் நகர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கிய தடூகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சரியாகவே கருதினர். சிறிலங்கா படைய உசாவல் நீதிமன்றங்களின் அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிலங்கா தரைப்படை அதிகாரப் படிநிலை மற்றும் அதன் பிரித்தானிய/அமெரிக்க 'வலுவெதிர்ப்பு ஆலோசகர்கள்', முன்னோக்கிய படைநிலைகள் மீது தீவிரமான பல்லங்களை ஏவுவதன் மூலமும், முன்னோக்கிய தாக்குதல்களில் தற்கொலைப் படையினரின் அலைகளை வீசுவதால் ஊடறுத்து கட்டளை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை ஒரேயடியில் வீழ்த்துவதன் மூலமும், கடந்த காலத்தில், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை முகாம்களில் பேரளவிலான வெற்றியை பெற்றனர் என்ற பொதுவான பார்வையைக் கொள்ள முனைந்தனர். கொழும்பிலும் வெளிநாடுகளிலுமுள்ள மேற்கத்திய படைத்துறை மற்றும் புலனாய்வு ஆளணியினருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அல்லது ஆலோசனை செய்யும் சிங்கள வலுவெதிர்ப்பு ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்களால் இந்தக் கருத்து முக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டது. சிறிலங்கா தரைப்படை மற்றும் அதன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நண்பர்கள், ஆனையிறவு போன்ற பெரிய தானைவைப்பை கடுமையாக அச்சுறுத்துவதற்குத் தேவையான அளவிலான தடூகப் போர்முறைக் கேந்திரத்தை ஒருங்கிணைக்கும் திறனை தவிபு பெற்றிருக்கும் என்று வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கவில்லை. 20ஆம் நூற்றாண்டில், எந்தவொரு தேச எதிர்ப்பு ஆய்தக் குழுவும் அவ்வாறு செய்து வெற்றிபெறவில்லை - வியட் கொங் கூட. ('தியம் பியன் பூ'க்கான சமரானது அடிப்படையில் 200 சேணேவித் துண்டுகள் மற்றும் 20,000 வழக்கமான வழங்கல்துறை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆதரவுடன் 15,000 க்கும் மேற்பட்ட படையினரால் முற்றுகையிடப்பட்டதோடு வியட்நாமியருக்கு தனிப்பட்ட முறையில் சாதகமான நிலப்பரப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது ஆகும்.) 1997ஆம் ஆண்டுமுதல் போர் பற்றிய மெய்யுண்மைகளின் அடிப்படையில் அவர்களின் பார்வை ஏரணமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை. மே 1997 முதல் நவம்பர் 1999 வரை சிறீலங்கா படைத்துறையின் 'ஜெய சிக்குறுய் நடவடிக்கை'க்கு எதிரான அவர்களின் வலுவெதிர்ப்புச் சமர்களில் புலிகள் வன்னியிலுள்ள முக்கிய மக்கள்தொகை மையங்களையும் (புளியங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், மாங்குளம்), 3000க்கும் மேற்பட்ட படையினரையும் (காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்கள்), மதிப்புமிக்க படையப் பொருட்களையும் இழந்தனர். 'ஜெயசிக்குறுய் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர். | படிமப்புரவு: தமிழ்நெற்' மென்மேலும், விடுதலைப் புலிகள் 1995-96 இல், தீவின் வடகிழக்கில் இயக்கத்தின் மிகப்பெரிய வருவாய்த் தளமான யாழ்ப்பாணத்தையும் இழந்தனர். எனவே, கடுமையாக வலுவெதிர்க்கப்பட்ட தெற்கு யாழ்ப்பாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான சிக்கலான தடூகப் போரைத் தொடங்குவதற்கும், பொருண்மத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் திறனற்றவர்கள் என்ற முடிவுக்கு சிறிலங்கா தரைப்படை மிகவும் ஏரணமாக வந்தது. பின்னோக்கிப் பார்த்தால், ஆனையிறவுத் தானைவைப்பின் 'அசைக்க முடியாத பாடநூல்' மீதான சிறிலங்கா தரைப்படையின் நம்பிக்கையானது, அதைப் பார்வையிட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசதந்திரிகளின் பாராட்டுகளால் சிறியளவில் மீளுறுதிப்படுத்தப்பட்டதோடு, தெற்காசியாவின் நவீன படைத்துறை வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றுக்கு பங்களித்தது என்று ஒருவர் திறவினையாகக் கூறலாம். இது 1999 திசம்பரில் கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உள்ள சிறிலங்கா தரைப்படை-கடற்படைக் கூட்டுத்தளத்தைப் புலிகள் கறங்கி நொறுக்கியபோது கல்மேல் எழுதப்பட்ட எழுத்துப் போலானது. ஆனையிறவுத் தானைவைப்பின் முக்கிய உவர்க்கத்தலை இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து, சிறிலங்கா தரைப்படையானது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட அதிசிறப்பு 53 வது படைப்பிரிவினரைக் கொண்டு, கட்டைக்காட்டிற்கு வடக்கேயுள்ள தாளையடி முகாமை விரைவாக வலுவூட்டியதோடு வத்திராயன் பெட்டியையும் கட்டியது. புலிகள் முன்னோக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே திறன் கொண்டவர்கள், ஆனால் ஈரூடகத் தடூகத்திலில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே இந்த நகர்வு இருந்தது. (வத்திராயன் பெட்டியின் கருத்தாக்கம், தாளையடியிலிருந்து ஏ9 வீதியில் புதுக்காட்டுச் சந்தி வரையிலான கனமாக அரணப்படுத்தப்பட்ட செவ்வகக் கொத்தளம், இந்தத் தற்கோளின் அடிப்படையிலேயே அமைந்தது) சிறிலங்கா மற்றும் செந்தரப்படுத்தப்பட்ட மேற்கத்திய படைய ஞானத்தின்படி, எந்தவொரு விடுதலைப்புலிகளின் ஊடுருவல் குழுவும் தப்பிப்பிழைப்பதும் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு முக்கியமான பிற்பகுதியிலுள்ள முகாமையான (vital) சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளுக்கு ஒரு சிறும நிலைத்தன்மையற்ற அச்சுறுத்தலைக் கூடப் பொதிப்பதும் சாத்தியமற்றது என்று கருதப்பட்டது. தொடர்ந்து வந்த மூன்று வாரங்களில், புலிகள், வான்வழி ஆதரவில்லாமல் பகையின் நன்கு வலுவூட்டப்பட்ட பிற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட சமரில் சண்டையிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நவீன படைத்துறை ஞானத்திற்கு மெய்ப்பித்துக் காட்டியதன் மூலம் இன்னும் தெரிவித்து பல கற்பிதங்களை சிதறடித்தனர். 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் விரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் தரையிறக்கத் தலைமைக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ். | படிமப்புரவு: தமிழ்நெற்' 26 மார்ச் 2000 அன்று, புலிகளின் மூத்த படையக் கட்டளையாளர் கேணல் பால்ராஜ், கடற்புலிகள் 1200 படையினரையும் அவர்களது படைய வழங்கல்களையும், உரகடலில் சிறிலங்கா கடற்படையின் ஒரு பெரிய கலத்தொகுதி மூலம் அமைக்கப்பட்ட கடற்றடுப்பூடாக தங்கள் வழிக்குச் சண்டையிட்டு, சிறிலங்கா தரைப்படையின் பிற்பகுதியிலுள்ள, இரும்பு போர்த்திய வத்திராயன் பெட்டிக்கு அப்பால், குடாரப்பு-மாமுனையில் தரையிறக்கிய போது, ஒரு அரசின் மரபுவழி தரைப்படையின் எந்த ஆழமான பிற்பகுதி வலுவெதிர்ப்பையும் கேந்திர வான்வலு கொண்ட ஒரு ஆயுதப்படையைத் தவிர வேறு யாராலும் கடுமையாக அச்சுறுத்த முடியாது என்ற கருத்தாக்கத்தைப் பொய்ப்பித்தார். எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட போர்களை நடத்துவதில் ஒரு முன்னுதாரண பெயர்ச்சியை இது சைகை செய்வதை சிலர் கவனித்துள்ளனர்.
-
'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel பின்னாளில், தன் தாய் நிலம் தொடர் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தபோது, அதை மீட்க தானுமொரு கரும்புலியாய் செல்ல முடிவெடுத்தார். கரும்புலிகள் அணியில் இணைவதற்காய் காத்திருந்து அனுமதிபெற்றார். கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை இறுதிவரை தீரத்தோடு எதிர்த்து களமாடி வீரகாவியம் ஆனார். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்