Search the Community
Showing results for tags 'நமது ஈழநாடு'.
-
தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களில் ஒன்றாக திகழ்கிறது “நமது ஈழநாடு”. தெற்காசியாவின் மிகவும் பழைமையான மற்றும் உயர் தரத்திலான செய்தித்தாள் வெளியீட்டில் தடம் பதித்த யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டு வெளியான முதலாவது தினசரியான “ஈழநாடு” பத்திரிகையை தழுவி “நமது ஈழநாடு” பத்திரிகை உருவாக்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் கோபு அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களை பணிப்பாளராகவும் மூத்த பத்திரிகையாளர் இராதையன் அவர்களை பிரதம ஆசிரியராகவும் கொண்டு புத்திஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்ட “நமது ஈழநாடு” பத்திரிகை, தமிழர்களின் உரிமைக்குரலாக 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் தினசரி பத்திரிகையாக வெளிவந்தது. வன்னியில் முதன் முதலில் நிறுவப்பட்ட ஊடகவியலாளர் பயிற்சிக்கல்லூரி மற்றும் முதலாவது சர்வதேச செய்தி முகவர் நிறுவனமான "தமிழ் செய்தி தகவல் மையம்" என்பவற்றின் தோற்றத்திற்கு பெரும் பங்கு வகித்தது நமது ஈழநாடேயாகும். இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இராதையனால் உருவாக்கப்பட்ட பல ஊடகவியலாளர்களில் சிலரான கீத் குலசேகரம் (காண்டீபன்) மற்றும் மதனசுரேந்திரன் சுதாகரன் (எழிலன்-தமிழ் ) ஆகியோரின் முயற்சியில், நமது ஈழநாடு பத்திரிகை பணிப்பாளரான சிவமாகாராஜா, இளைப்பாறிய பொறியியலாளர் ரி.எஸ். கணநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், யாழ் பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் சண்முகநாதன், மூத்த சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர் சொலமன் சிறில் ஆகியோரை போசகர்களாக கொண்டு செய்தி தகவல் மையம் யாழ்ப்பாணத்திலும் நிறுவப்பட்டு பல ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், மத தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்களை உள்வாங்கி காத்திரமான ஊடகப்பணியை முன்னொடுக்க வழிவகுத்து நமது ஈழநாடு. யாருக்கும் அடிபணியாத துணிச்சலுடன் பத்திரிகை தர்மத்தை பின்பற்றி நடுநிலையுடன் தகவல்களையும் கருத்துக்களையும் வழங்கி, தமிழீழ மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்தது நமது ஈழநாடு. மக்களை விழித்தெழ வைத்த இந்த ஊடகசேவையால் ஆடிப்போன இலங்கை அரசு தனது இரும்புக்கரத்தை நமது ஈழநாடு மற்றும் தமிழ் செய்தி தகவல் மையத்தின் மீது திருப்பியது. ஊடகத்தின் செயற்பாட்டை நிறுத்த அச்சுறுத்தல்களும் வன்முறையும் பலதடவை பிரயோகிக்கப்பட்ட போதும் பெயருக்கு ஏற்ற திமிருடன் எதிர்த்து நின்றது நமது ஈழநாடு. கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று நாவலர் வீதியில் அமைந்திருந்த நமது ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தை அத்துமீறி சோதனை நடத்திய இராணுவம், அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி உடமைகளை தீ வைத்தும் கொழுத்தினர். யாழ் பல்கலைக்கழகத்தினுள் இராணுவ வாகனத்தில் அத்துமீறி பிரவேசித்துஇ மாணவர்களை கடத்த முற்பட்ட இராணுவத்தினரை படம் பிடித்த இளம் ஊடகவியலாளரான சுதாகரன் (எழிலன்-தமிழ்) கைது செய்யப்பட்டு, அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனினும் அவர் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதியால் பாரட்டப்பட்டு விடுவிக்கப்பட்டார். இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்களை பற்றி துப்பறிந்து ஆதாரங்களை வெளியிட்ட காரணத்தால்இ காண்டீபன் மற்றும் பாரதி ஆகிய இருவருக்கும் தேசதுரோக குற்றம் சுமத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டது. இது EPDP அமைப்பின் உத்தியோகபூர்வ வானொலியான இதயவீணையல் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இதனை அனைத்து சுயாதீன ஊடகவியலாளர் அமைப்புக்களும் கண்டித்தபோதும்இ பாதுகாப்பு கருதி, அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஊடக அடக்குமுறையின் உச்சகட்டமாக நடைபெற்ற படுகொலை முயற்சியில் பிரதம ஆசிரியர் இராதையன் மயிரிழையில் உயிர் தப்பினார். எனினும் பத்திரிகையின் இயக்குனரான சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்கள் அவரது வீட்டில் வைத்து 20 ஆகஸ்ட் 2006 அன்று கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து ரி.எஸ். கணநாதன் அவர்கள் பெப்பிரவரி 2007 இல் படுகொலை செய்யப்பட்டார். இவற்றையும் மீறி பத்திரிகை இயங்கியபோது நமது ஈழநாட்டிற்கு பகுதிநேரமாகவும் உதயன் பத்திரிகையின் முழு நேர பணியாளராகவும் செயற்பட்ட இளம் ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் (ஏப்பிரல் 2007) மற்றும் இளம் ஊடகவியலாளரான சகாதேவன் டிலக்சன் (ஓகஸ்ட் 2007) ஆகியோரும் சுட்டு கொல்லப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்த அடக்குமுறைகளால் எஞ்சிய பணியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் பத்திரிகை அலுவலகம் மூடப்படவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டது. எனினும் உயிர்தப்பிய ஊடகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் நமது ஈழநாடு இணையவழியில் வலைப்பக்கமாக (Website) தனது சேவையை தொடர்கிறது. இத்தனை தியாகங்களை கடந்த வந்த இந்த பத்திரிகையின் சேவை எந்த நிலையிலும் தளராது தொடரவேண்டும் என்ற ஒர்மத்தில் 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பரிணாம வளர்ச்சிபெற்று இணைய பத்திரிகையாக (E-paper) வெளிவருகிறது. 2020 யூலை முதல் மாதாந்த பத்திரிகையாக வெளிவருகின்றது. பல வருட அனுவபமும், தளம்பாத தேசியப்பற்றும், ஆழமான சிந்தனைத்தெளிவும் ஒருங்கமைந்த ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான இராதையன் அவர்களின் ஆசியுடனும் அவரின் வழிநடத்தில் மீண்டும் இணையப்பத்திரிகையானது. மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர ஓவியருமான அஸ்வின் அவர்களைத் தொடர்ந்து அவரின் சகோதரரான ஊடகவியலாளர் அல்வின் சுகிர்தனின் அயராத முயற்சியின் வடிவமாக உருப்பெற்றது இணைய பத்திரிகை. அந்தவகையில் நமது ஈழநாடு இலங்கைத்தீவில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த உணர்வின் வெளிப்பாடக நடுநிலை பிறழாமல் ஊடக நெறிமுறைகளுக்கு உட்பட்டு, சமூக அக்கறையுடன் விடுதலை நோக்கிய பாதையில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றது. https://namathueelanadu.com/?page_id=16886