இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும்
எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும்,
இங்கலையும் மென்காற்று அங்குமலையும்
என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும்.
இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும்,
எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும்,
கங்குலிருளூடவளின் கன்னம் வழியும்
கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும்,
ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும்,
நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும்,
காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும்
கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும்,
தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும்
சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும்
நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும்
நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.