Search the Community
Showing results for tags 'பனிப்போர்'.
-
ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்