Search the Community
Showing results for tags 'புதைத்தல்'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! பாகம் - 01 தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் பற்றி முதற்கண் பார்ப்போம். பிடாரச்சொற்கள் (Newly coined terms) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களானோர் சிறிலங்காப் படைத்துறையுடனோ அல்லது இந்தியப் படைத்துறையுடனோ அல்லது தமிழ் தேசவெறுப்புக் கும்பல்களுடனோ மிண்டி ஏற்படும் அடிபாடுகளால் மரணமடையும் போது அச்சாவானது "வீரச்சாவு" என்று புலிகளாலும் தமிழ் மக்களாலும் சுட்டப்பட்டது. இவ்வீரச்சாவானது களத்திடை நிகழும் போது "களச்சாவு" என்றும் களத்தில் விழுப்புண்ணேந்தி மருத்துவமனையில் பண்டுவம் பெற்றுவரும் போது அஃது பலனளிக்காது சாவடைய நேரிட்டால் "காயச்சாவு" என்றும் சுட்டப்பட்டது. எவ்வாறெயினும் வேறுபாடில்லாமல் பொத்தாம் பொதுவாக "வீரச்சாவு" என்ற சொல்லே பாரிய பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டுள்ளது. "களச்சாவு" என்ற சொல் ஆங்காங்கே இலக்கியத்திலும் இயக்கப்பாடல்களிலும் பாவிக்கப்பட்டுள்ளது. "காயச்சாவு" என்ற சொல்லின் பாவனையோ புலிகள் கால எழுத்துலகில் என்னால் காணமுடியவில்லை! வீரச்சாவடைந்த புலிவீரர் "மாவீரர்" (மா+வீரர்) என்று விளிக்கப்பட்டார். பல்பொருளுடைய இந்த மா என்ற ஓரெழுத்துச் சொல்லானது ஒருவரின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடையாகும். அத்துடன் இக்கூட்டுச்சொல்லானது மிகப் பெரிய பெருமையும் வலிமையும் உடைய வீரர் என்று வீரச்சாவடைந்த அவ்வீரரை குறிக்கிறது. இது ஆகக்குறைந்தது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் வாரத்திலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இச்சொல்லை சரியாக எப்போதிலிருந்து பாவிக்கத் தொடங்கினர் என்பது தெரியவில்லை. இம்மாவீரரின் சடலமானது "வித்துடல்" (வித்து + உடல்) என்று சுட்டப்பட்டது. இவ்வித்துடல் "துயிலும் இல்லத்தில்" புதைக்கப்படும் செயலானது "விதைத்தல்" என்று அழைக்கப்பட்டது. இச்சொல்லினை, ஒரு தாவரத்தின் வித்து (உவமை) நாட்டப்படும் போது பெரும்பாலும் முளைக்கிறது என்ற நியதியின்படி தமிழ் விடுதலை வீரர்களின் சடலங்களான (உவமேயம்) வித்துடல்கள் விதைக்கப்படும் போது அதனைக்காணும் தமிழர்களும் புதிதாய் இயக்கத்தில் சேர்வார்கள் என்று பொருள்படும் படியான உவமைச் சொல்லாக உண்டாக்கியிருந்தனர். "வீரவணக்கம்" என்ற சொல்லானது 1986ம் ஆண்டு வெளியான விடுதலைப்புலிகள் இதழில் முதன் முதலில் பாவிக்கப்பட்டுள்ளது. இது வீரச்சாவடைந்த ஒருவருக்கு செய்யும் வீரமான வணக்கம் என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது. ஒருவரின் வீரச்சாவு அறிவித்தல் வெளிவரும் போதோ அல்லது அவரது நினைவு நாள் அறிவித்தலின் போதோ இச்சொல்லானது பாவிக்கப்படுகிறது. இந்தியப் படைக்குப் பின்னான காலகட்டத்தில் மாவீரர் கல்லறைகளின் தலைப் பகுதியின் மேற்பகுதியிலும் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியிலும் 'வீரம் நிறைந்த புலி' என்ற பொருள்படத் தக்கதான சொல்லான "வீரவேங்கை" என்ற சொல் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இச்சொல் தான் தவிபுஇன் அடிப்படைத் தரநிலையும் கூட. இச்சொல்லானது துயிலுமில்லங்களில் பாவிக்கப்பட முன்னர் பொதுமக்களால் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரலாற்று ஆதரங்களும் உள்ளன. இம்மாவீரரின் தரநிலையுடனான இயக்கப்பெயருக்கு மேலே "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதைக் காண்க. படிமப்புரவு (Image Courtesy): ஈழநாதம் 1990.12.20 | பக்கம் 2 ஆகக்குறைந்தது 20/12/1990 அன்று தொடக்கமாவது "வீரவேங்கை" என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை அற்றை நாளில் வெளியான ஈழநாதம் நாளேடு மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. அற்றை நாளேட்டில் 'லெப். சுஜி' என்ற மாவீரரின் 45ம் நாள் நினைவஞ்சலி பதிவில் அவரது தரநிலைக்கு மேலே வீரவேங்கை என்ற இச்சொல் எழுதப்பட்டுள்ளது. அதாவது கல்லறை மற்றும் நினைவுக்கற்களின் மேல் எழுதப்பட்டிருப்பதைப் போன்றே - அதிலும் அவை தோற்றம் பெற முன்னரே - இச்சொல் பாவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சொற்கள் யாவும் புலிகளால் உருவாக்கப்பட்டு மக்கள் நடுவணில் பரவலறியாகி புழக்கத்திற்கு வந்தன. இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. புழக்கச் சொற்களின் பாவனை அப்படியானால் இச்சொற்களிற்கு முன்னர் எத்தகைய சொற்கள் பாவனையில் இருந்தன என்று உங்கள் மனதில் கேள்விகள் எழலாம். இதற்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்று மேற்கூறப்பட்டவை போன்ற தனியான பிடாரச் சொற்கள் (newly coined terms) இருந்ததில்லை. பொதுவாக மக்கள் நடுவணில் புழக்கத்திலிருந்த சொற்களே புலிகளாலும் கையாளப்பட்டன; வீரமரணம், Body (த.உ.: பொடி) அ புகழுடல், தகனம் அ புதைத்தல், கண்ணீர் அஞ்சலிகள் ஆகியனவே அவையாகும். எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 திகதியில் வெளியான புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இதழில் தமிழீழ விடுதலை போரின் முதல் மாவீரரான லெப். சங்கரின் வீரச்சாவின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி ஓர் சுவரொட்டி வெளியாகியிருந்தது. படிமப்புரவு: விடுதலைப்புலிகள் மாத இதழ், 1984 திசம்பர் இச்சுவரொட்டியில் அன்னாரின் தரநிலையுடன் இயக்கப்பெயருக்குப் பகரமாக முதலெழுத்துடனான இயற்பெயரே வழங்கப்பட்டுள்ளது. இயக்கப்பெயரானது மாற்றுப்பெயராக தரநிலையுடன் கீழே வழங்கப்பட்டுள்ளதைக் காண்க. இம்முறைமையானது, "லெப்டினன்ட்" வரையான தரநிலை உடையோருக்கு மட்டுமே 1987ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிவந்த அனைத்து "விடுதலைப்புலிகள்" இதழ்கள் மூலமாக அறியக்கூடியவாறு உள்ளது. எனினும், கப்டன் முதல் லெப். கேணல் ஈறான தரநிலைகளிற்கு பிற்காலத்தில் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு இறுதிவரை கடைப்பிடிக்கப்பட்ட 'தரநிலையுடனான இயக்கப்பெயர்' என்ற முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ம் ஆண்டு சூலை மாதத்தில் வெளியான விடுதலைப்புலிகள் இதழில் "கப்டன் ரஞ்சன் லாலா" என்று ஒரு போராளியின் (அடிக்கற்களில் ஒருவர்) வீரச்சாவு குறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் பிற அடிக்கற்களில் சிலரான லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ் உள்ளிட்டோரின் விரிப்புகளும் விடுதலைப்புலிகள் இதழில் வெளியாகியுள்ளன. மேலும், அச்சுவரொட்டியில் வீரச்சாவு என்ற சொற்பதத்துக்குப் பகரமாக "வீரமரணம்" என்ற சொற்பதத்தையே தொடக்கத்தில் பாவித்துள்ளனர். இச்சொல்லானது 1992 நடுப்பகுதி வரை பாவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரிருந்து "வீரச்சாவு" என்ற சொல் பாவானைக்கு வந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வீரமரணம் என்ற சொல்லும் சமாந்தரமாக கையாளப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியிலும் இதற்குப் பின்னான காலப்பகுதியிலும் "களப்பலி" (களச்சாவு என்ற சொல்லுக்கு ஈடான சொல்) பாவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரின் தொடக்க காலத்திலிருந்து 1991 இன் ஒரு குறித்த (சரியான காலம் தெரியவில்லை) காலம் வரை போராளிகளின் வித்துடல்கள் "பொடி/Body" என்றுதான் பேச்சு வழக்கில் விளிக்கப்பட்டுவந்தது. அக்கால புலிகளின் படைத்துறை ஆவணங்களில் வித்துடல்களைக் குறிக்க 'உடல்' என்ற சொல் பாவிக்கப்பட்டிருப்பதை "விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள்" என்ற கேணல் கிட்டுவால் 1988இல் எழுதப்பட்ட தொடர் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. எவ்வாறெயினும் ஆகக்குறைந்தது 1991ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்திலிருந்து "புகழுடல்" என்ற சொல்லானது போராளிகளின் வித்துடல்களைக் குறிக்க பாவிக்கப்பட்டது என்ற தகவலை 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டிலிருந்து அறியமுடிகிறது. பிடாரச்சொல்லான "வித்துடல்" என்ற சொல் புலிகள் அமைப்பில் பாவனைக்கு வந்த காலத்தை அறியமுடியவில்லை. இதே போன்று பிற்காலத்தில், 1986இலிருந்து, பாவிக்கப்பட்ட "வீரவணக்கம்" என்ற சொல்லுக்கு ஈடாக சாதாரணமாக ஒரு பொதுமகன் இறப்பாராயின் அவரை நினைவுகொள்ள பாவிக்கப்படும் "கண்ணீர் அஞ்சலிகள்" என்ற சொல்லையே புலிகளும் அவர்களின் ஆரம்ப காலத்தில் பாவித்துள்ளனர் என்பதை அவர்கள் லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் ஆகியோருக்கு 19/05/1983 அன்று ஒட்டிய சுவரொட்டிக்கள் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. தொடக்க காலத்தில் போராளிகளின் வித்துடல்கள் சுடுகாடுகளில் தகனப்பட்டன அ இடுகாடுகளில் புதைக்கப்பட்டன. அதனைச் சுட்ட தகனம் அல்லது எரியூட்டல் மற்றும் புதைத்தல் போன்ற வழக்கமான சொற்கள் பாவிக்கப்பட்டன. புலிகள் அமைப்பில் வித்துடல்களை விதைக்கும் பழக்கம் ஏற்பட்ட 1991ஆம் ஆண்டிலும் "புதைப்பு" என்ற சொல்லே இச்செயலைச் சுட்டப் பாவிக்கப்பட்டுள்ளது. விதைத்தல் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது அலுவல்சார் கட்டுரை வெளிவந்த ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏட்டில் கூட "புதைப்பு" என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது! எவ்வாறெயினும் "விதைப்பு" என்ற சொல்லின் பாவனை தொடங்கப்பட்ட காலத்தையும் அறியமுடியவில்லை. (தொடரும்) ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்