Search the Community
Showing results for tags 'மார்க்கண்டு தேவராஜா'.
-
எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா, சட்டத்தரணி மூலம்: https://stanislauscelestine.wordpress.com/2017/08/18/கிழக்கின்-காணி-வரலாறு/ Markkandu Devarajah(L,L,B) Mayuraagoldsmith.Switzerland, Aug 18, 2017 அம்பாறை மாவட்டத்தின் பிறந்த நாளைக் கொண்டாடலாமா? இன்றுடன் அம்பாறை மாவட்டத்திற்கு வயது 53. அடுத்த அம்பாறையின் பிறந்த நாளில் எத்தனை தமிழர் கிராமங்கள் பறி போகும் இதைத் தமிழ் அரசியல் வாதிகள் புத்தி ஜீவிகள் சிந்திப்பார்களா. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு இன்று 51ஆண்டுகள் நிறைவடைகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை, அம்பாறை, உகன, தமன ஆகிய பிரதேச செயலகங்களும், பதுளை மாவட்டத்தின் மகாஓயா, பதியத்தலாவ ஆகிய பிரதேச செயலகங்கள் இணைத்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ் பிரதேசங்களுடன் சிங்கள பிரதேசங்கள் இணைக்கப்பட்டதன் மூலமும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை செய்ததன் மூலமும் தமிழர்கள் இந்த மாவட்டத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 1960ஆம் ஆண்டுக்கு பின்னர் கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்கும் திட்டத்தின் கீழ் 10.04.1961ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டதுடன் இம்மாவட்டத்தில் தனிச்சிங்கள தொகுதியாக அம்பாறை தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 50வருடகாலமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களாகவும், காணி ஆணையாளர்களாகவும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அம்பாறை மாவட்டம் 4431.4 சதுர கிலோ மீற்றர் பரப்பையும், 610719 மக்களையும் கொண்டது. 20 பிரதேச செயலகங்களையும், 503 கிராம சேவையாளர் பிரிவுகளும், 828 கிராமங்களையும் கொண்டுள்ளது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் விளைவாக 10-4-1961 இல் அம்பாறை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அம்பாறை பிரதேசத்தில் இரண்டாவது பெரும்பான்மையாக இருந்த தமிழ் மக்கள் மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டனர். அது போன்ற திருகோணமலையையும் அம்பாறையும் பறித்தெடுத்தது போல மட்டக்களப்பு மாவட்டத்தையும் தமிழர்களிடம் பறித்தெடுப்பதற்கு இரு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒன்று தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள், இரண்டாவது தமிழர்களின் பூர்வீக கிராமங்களை முஸ்லீம் பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழ் கிராமங்களின் பெருந்தொகையான நிலங்களை முஸ்லீம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் உள்வாங்கி அதில் சிங்களவர்களையும் முஸ்லீம்களையும் குடியேற்றுவது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் போர் முடிந்த கையோடு துரிதமாக நடைபெற்று வருகிறது இன்றும் தொடர்கிறது . கிழக்கு மாகாணசபையில் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 25ஆயிரம் ஏக்கர் காணியில் சிங்கள ஊர்காவல் படையினர் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு வீடுகளையும் வேலிகளையும் அமைப்பதற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சே நிதி உதவியை வழங்கியது. தமிழ் மக்களுக்கு சொந்தமான கால்நடை மேச்சல் தரைகளையும் இவர்கள் அபகரித்துள்ளனர். அரச காணியில் சட்டவிரோதமாக இவர்கள் குடியேறியுள்ளனர் என வவுணதீவு பிரதேச செயலாளர் அங்கு குடியேறியிருக்கும் 10பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது நீதிமன்றம் இவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இன்றுவரை வெளியேறவில்லை. அரச ஆதரவும் படையினரின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதால் நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்து விட்டு தொடர்ந்து வசித்து வருகின்றனர். இந்த 25ஆயிரம் ஏக்கரிலும் 25ஆயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேறினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் குடிப்பரம்பல் வீதத்தில் நிட்சயம் மாற்றம் ஏற்படும். அது போன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாசிக்குடாவிலும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சௌக்கடியிலும் சுமார் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்கள் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடருமானால் தமிழர்கள் இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம். சிங்கள குடியேற்றம் ஒரு புறம் தமிழர் நிலங்களை அபகரித்து வரும் நிலையில் மறுபுறத்தில் தமிழர் நிலங்களை அபகரித்து முஸ்லீம் பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட தமிழ் கிராமங்களான புனானை மேற்கு, கள்ளிச்சேனை, வாகனேரி, வட்டமுன்மாரி, உட்பட 6 கிராமசேவையாளர் பிரிவுகளையும், கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த புனானை கிழக்கு, மருதங்கேணிகுளம் கிராம சேவையாளர் பிரிவுகளை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக அலகுடன் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் கிரான், வாகரை ஆகிய இரு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 47ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் முஸ்லீம் பிரதேசங்களாக மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் நாவலடி சந்தியிலிருந்து வெலிக்கந்தை வரையான தமிழர் பிரதேசம் முற்றாக முஸ்லீம் பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது. இதன் அடையாளங்களை இப்பொழுது காணமுடியும். வாகனேரி, புனானை ஆகிய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அங்கு குடியேற்றப்படாது அக்கிராமங்கள் முஸ்லீம் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுவது பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. கடந்த கால யுத்தத்தினால் தமிழர் பிரதேசங்கள் அழிந்ததும் யுத்த புனர்நிர்மாணத்தை வைத்து முஸ்லீம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட விடயங்கள் ஒன்றும் மூடு மந்திமல்ல. அஷ்ரப் தொடக்கம் ஹக்கீம் வரை புனர்வாழ்வு அமைச்சர்களாக முஸ்லீம்களே இருந்த காரணத்தாலும் முஸ்லீம்கள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த காரணத்தினாலும் முஸ்லீம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டன. மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் 1500ஏக்கர் நிலம் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு! மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் கால் நடை களுக்கென ஒதுக்கப்பட்ட வட்டமடு மேச்சல் தரையின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர் . 1976 ம் ஆண்டு அம்பாறை மட்டக்களப்பு எல்லையில் உள்ள வட்டமடுவில் கால்நடைக்காக 4741 ஏக்கர் நிலப்பரப்பு மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டது.இவ்நிலங்களை காணிச்சட்டத்திற்கு முரணானவகையில் 1500 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். வட்டமடுவில் கால்நடை மேச்சலுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை சிங்களவர்களே ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர். கிழக்கில் காணி தொடர்பான பிரச்சினைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்திருப்பதாக அண்மைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. குடியேற்றங்கள், குத்தகைகளுக்கு வழங்குதல், பதிவுகளை மேற்கொள்ளுதல், மற்றும் மீளாய்வுகள், ஆராய்வுகளை செய்தல் என்பவை இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும்.வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பிலான கடந்தகால செயற்பாடுகளாலேயே பிரச்சினைகள் ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்போதும் அதன் தொடர்ச்சி நடைபெற்று வருகிறது என்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்புற பிரதேசங்களில் 15000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியினை உதாரணமாகக்காட்டலாம். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சைக்கொடி- சுவாமிமலை கிராமசேவகர் பிரிவு 135 சி பிரிவில் கெவிழியாமடு ,கோம்பஸ்தலாவ ,புளுக்குணாவ, பன்சன்கல, ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குரிய மேய்ச்சல்தரை, வேளாண்மைக் காணிகள், மேட்டுநிலப் பயிர்செய்கை காணிகள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள், சிறியகாடுகள், குடியிருப்பு நிலங்கள் அடங்கிய பாரிய நிலப்பரப்பை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஆராயவென அம்பாறை மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் தீர்க்கமானதொரு முடிவு எட்டப்பட்டிருக்கவில்லையெனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குள் உள்ள இணைக்கப்படவுள்ள பிரதேச மக்களின் விருப்பம் கேட்கப்படாத நிலையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் பிரதேசமான பட்டிப்பளைப்பிரதேச செயலகப்பிரிவிலுள்ள காணிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பதற்று நியாயமான காரணங்கள் செல்லப்பட்வில்லை என்Nறு தெரிகிறது. காணிகள் அற்றவர்களுக்கு காணிகளை வழங்கும் வகையில் கிழக்கு மாகாண காணித் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. ஆதன் சரியான விளக்கமின்மை, அறிவித்தலின்மை போன்ற காரணங்களால் தமிழ் மக்கள் சரியாகச் செயற்படவில்லை என்றே தெரிகிறது. அதேநேரம், இதில் தமிழ் மக்களின் அக்கறை போதாமலிருக்கிறது என்பது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளது கருத்தாக இருக்கிறது. கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் பறிபோகின்றமைக்கும், அவர்கள் அதில் அக்கறை இன்றி இருப்பதற்கும் அவர்களின் எதிர்கொள்ளாத்தனமும், சிரமப்படாத மனோநிலையும் காரணமாக இருக்கலாம். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான கொடுமைகள் கஸ்ரங்கள் இவ்வாறானதொரு மனோநிலைக்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இதற்குப் பெயர் சோம்பேறித்தனம் என்றும் சொல்லாம். கிழக்கு மாகாணத்தில் காணிகளுக்கான பிரச்சினை ஒரு பாராதூரமானதாக மாறி இருக்கின்ற நிலையில், தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டாமை கவலையானதே. இருப்பிடத்தின் முக்கியம் தெரிந்த மக்களாகவும், காணிகளின் பரம்பலின் அளவுகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும் மாறவேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் மக்கள் நகரங்களையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாடி வருகின்றமையினால் தமிழ் பிரதேசங்களின் பரம்பல் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்ற விடயத்தில் யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்கில் 1985 காலப்பகுதியில் ஆரம்பித்த வன்முறைகள் உயிருக்குப் பயந்து மக்கள் பலரை சிதறி ஓடச் செய்தது. இதில் தமிழ், சிங்கள், முஸ்லிம் என்ற வித்தியாசம் இருக்கவில்லை. இக்காலப்பகுதியில் மூன்று இன மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். எல்லைக்கிராமங்களில் இருந்தவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இடம்பெயர்ந்தவர்களில் காணி கோரிய ஒரு குறிப்பிட்டளவானவர்களுக்கு வேறு பிரதேசங்களில் காணிகள் வழங்கப்பட்டு இருப்பிட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் அச்சம் காரணமாகவும் அவர்கள் மீது இருந்த நம்பிக்கைகள் காரணமாகவும் காணிகளைப் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டியிருக்கவில்லை. ஆனால் அது இப்போது தமிழ் மக்களையே பாதிக்கின்றது. தமிழ் மக்களின் அக்கறை மிகக் குறைவாகவே இருக்கின்றமையினால் பிரதேச செயலாளர்களால் எந்த விதமான வேலைத்திட்டங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றியிருக்கிறது. காணிச் சிக்கல்கள் காரணமாக நடமாடும் சேவைகளை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு கிழக்கு மாகாண சபை தள்ளப்பட்டிருந்தது. அதில் பிரதேசவாரியாக பிரச்சினைகள் அதிகம் உள்ள பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை என்ற வகையிலான குற்றச்சாட்டுகளும் உருவாகியிருந்தன. இந்த இடத்தில், காணி விடயத்தில் உண்மையான நிலைப்பாடுகளை வெளிக்கொணர வேண்டிய தேவை, காணியின் முக்கியத்துவம் குறித்து ஆராய வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவே கொள்ள வேண்டும். அதனை முன்வைத்து இந்தக் கட:டுரை வரையப்படுகிறது. இருப்பிடம், தொழில் போன்ற வற்றுக்கு காணிகள் தேவைப்படும் நிலையில் தமது ஒரு சில நலன்களுக்காக தமிழ்மக்கள் இந்த விடயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வது எதிர் காலத்தில் காணி தொடர்பான பாரதூரமான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்கள் வசித்த, வசிக்கும் காணிகள், அரச காணிகள் என்ற இரு வகையன காணிகள் இருக்கின்றன. 1985 களில் உக்கிரமடைந்த உள்நாட்டு யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகளை பாதுகாத்து வந்ததில் விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட பல போராட்ட இயங்கங்களுக்கும் பங்குண்டு. ஆனால் சமாதானத்தின் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில், அட்டைப்பள்ளம், திராய்க்கேணி, வீரமுனை, சம்மாந்துறை கோரக்கோயிலடி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பின்பகுதி, கல்முனைக்குடி, நிந்தவூர், வளத்தாப்பிட்டி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்த தமிழ் சிங்கள் மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர். அவற்றில் அதிகமான இடங்களில் தற்போது மஸ்லிம்கள் குடியிருக்கிறார்கள். அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில், பாவற்கொடிச்சேனை, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய், ஏறாவூர்- 4ஆம், 5ஆம் குறிச்சிகள், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி, திராய்க்கேணி, மயிலங்கரச்சை, காகிதநகர், உறுகாம், மட்டக்களப்பு நகரின் ஜெயந்திபுரம், சிங்களவாடி, அதேபோன்று சிப்பிமடு, தியாவட்டவான், கல்குடா, புன்னைக்குடா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்த மக்கள் தமது காணிகளை விட்டும், விற்றும் சென்றிருந்தனர். திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, நிலாவெளி, மொறவௌ, பதவியா, திரியாய் பகுதிகளில் இருந்தும் சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்தனர். ஆரம்ப காலத்தில் தமது இடங்களில் இருந்து வெளியேறிய சிங்களவர்களிடம் தமிழர்கள் காணிகளை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். அப்போது எழுத்தில் எழுதிக் கொண்டவர்கள் போக மிகுதியானவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டும் உள்ளனர். அதே போன்று முஸ்லிம்களின் காணிகளைத் தமிழர்கள் விலைக்குப் பெற்றுள்ளதுடன் நட்பு அடிப்படையிலும் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடியவர்கள், செலவுக்குப் பணம் தேவை என்ற நிலையில் குறைந்த விலைக்கும் நம்பிக்கைக்குமாக காணிகளை விற்றுள்ளர். அதே போன்று உயிர் பாதுகாப்புக்காக ஓடியவர்களும் உண்டு. பெரும்பாலானவர்கள் தமது காணிகளை விற்றுவிட்டுச் சென்றுள்ள அதே வேளை சிலர் விற்காமலும் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பின்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது மட்டக்களப்பின் திருப்பெருந்துறையில் குடியேறியுள்ளர். அதே போன்று வளத்தாப்பிட்டி, மல்வத்தை பிரதேசங்களில் இங்குராண சீனித் தொழில்சாலைப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்கள் குடியேறியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதியின் ஒரு பகுதி, மஞ்சந்தொடுவாய், ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு எல்லைப்பிரதேசம், ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி, தியாவெட்டவான், மயிலங்கரச்சை, காகித நகர், நாவலடிச் சந்தி உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து தமிழர்கள் யுத்தகாலத்தில் வெளியேறியதைத் தொடர்ந்து இப்போது முஸ்லிம்கள் குடியேறியிருக்கிறார்கள். ஓட்டமாவடி நகருக்குள் பொதுச்சந்தை அமைந்துள்ள இடம் பிள்ளையார் கோயில் ஒன்று இருந்த இடம் என்பதும், அதே போன்று தபாலகம், பிரதேச செயலகம், நுலகம் என்பன உள்ள இடங்களும் சேமக்காலையைச் சுற்றியுள்ள காணிகளும், தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிட்டு நினைவு படுத்தப்பட வேண்டியவைகளாகும். இந்த இடங்கள் தமிழர்களிடமிருந்து பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்டவை என்று பிரதேச செயலகங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பது கேள்வியாகும். அதேபோல், மட்டக்களப்பின் வவுணதீவு பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை, இருநூறுவில்லு பிரதேசங்களில் இருந்த முஸ்லிம்கள் 1985 காலப்பகுதியில் அச்சம் காரணமாக தமிழர்களுக்கு காணிகளை இடம்பெயர்ந்தபோதும், பின்பும், இவ்வாறான காணிகளை இப்போது மீண்டும் தமக்குத் தருமாறு முஸ்லிம்கள் கோரி வருகின்றனர். இதில் எவ்வாறான நியாயம் இருக்கிறது என்பது தமிழ் மக்களின் கேள்வியாகும். நம்பிக்கை, உதவி, நல்லெண்ண நோக்கங்களில் முஸ்லிம்கள் தமிழர்களிடம் காணிகளை வழங்கியிருக்கின்றனர். ஆனால் அவற்றை இப்போது கோருவதில் எந்த நல்லெண்ண நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்பது தமிழ் மக்களது முறைப்பாடாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குள் இருந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த போது அவர்களுக்கு அந்த செயலகப்பிரிவுக்குள்ளேயே நாவற்குடா கிழக்கு, மஞ்சந்தொடுவாயிலும் காணிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று வாகரைப்பிரதேச செயலகப்பிரிவுக்குள் இருந்து மதுரங்கேணிக்குளம், காரைமுனை பிரதேசங்களிலும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கள்ளிச்சை பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு ரிதிதென்ன ஜெயந்தியாய பிரதேசங்களில் மகாவலி பி திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ரிதிதென்னை எனக் கூறப்படுகின்ற பிரதேசம் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதற்கு இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கும் இந்துக் கோவில் நல்ல தொரு உதாரணமாகும். மட்டக்களப்பில் ஜெயந்திபுரம், ஏறாவூர் – புன்னைக்குடா, கல்குடா, தியாவட்டவான், சிப்பிமடு உள்ளிட்ட பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியிருந்துள்ளனர். 85 காலப்பகுதிக்கு முன்னர் மட்டக்களப்பில் சிங்கள மகாவித்தியாலயம் இயங்கியது போன்று பிரபல பாடசாலைகளான புனித மிக்கேல் கல்லூரி, புனித சிசிலியா ஆகிய பாடசாலைகளில் குறிப்பிடக் கூடிய அளவு சிங்கள மாணவ, மாணவிகள் கல்வி கற்றுள்ளனர். அதே போல் சிப்பிமடு, கல்குடா உள்ளிட்ட பிரதேசங்களிலும் சிங்கள மொழிப்பாடசாலைகள் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், குச்சவெளி, நிலாவெளிப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற சிங்கள மக்கள தமது காணிகளுக்கு உரிமை கோரும் பிரச்சினைகள் ஆரம்பித்திருக்கின்றன. அதேபோன்று மொறவௌ பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இதில் தமிழர்கள் பெரும்பாலும் உள்வாங்கப்படவில்லை. இதற்கு தமிழர்கள் அச்சம் காரணமாக அக்கறை காட்டாமலிருப்பதும் காரணமாக இருக்கிறது. அதில் தமிழர்களுக்குள்ள அச்சமான நிலை தாக்கம் செலுத்துவதுடன் அவர்களது அக்கறையின்மையும் காரணமாக அமைகிறது. அங்கு தமிழர்களுக்குரிய காணிகள் பறிபோவதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்தின் பதவியா, திரியாய் பிரதேசங்களில் தமிழர்கள் தாம் விட்டு வந்த பிரதேசக் காணிகளுக்கு செல்வதில்லை. ஏனைய முஸ்லிம், சிங்கள மக்கள அவ்வாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு இருக்கின்ற காணித்தகராறு நல்லதொரு முடிவினை எட்டுவதற்கு தமிழ் மக்கள் அக்கறையுடன் மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறானதொரு கட்டாய நிலை தமிழ் மக்கள் முன்னும் தமிழ் அரசியல்வாதிகள் முன்னும் இருக்கின்றன என்பன என்பது எப்போதும் நினைவுபடுத்தப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர்கள் ஆண்டபூமி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக்கு கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேசமாக இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணராத நிலையில் தானே எங்களில் பலர் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருக்கிறோம். கடந்த அதிபர் தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை வரைபடத்தில் சரத் பொன்சேகா வெற்றிபெற்ற பிரதேசங்களை பச்சை நிறத்திலும், மகிந்த ராசபக்ச வெற்றிபெற்ற இடங்களை சிவப்பு நிறத்திலும் அடையாளம் இட்டு காட்டியிருந்தார்கள். பச்சை நிறம் தீட்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழர் தாயகம் என்று எங்களில் பலர் பெருமைப்பட்டுக்கொண்டோம். அதற்கு ஒரு படி மேலே சென்ற சிலர் பச்சை நிறம் தீட்டப்பட்ட இடங்களை உள்ளடக்கியதே தமிழீழம் என்றும் பெருமை பேசிக்கொண்டோம். அப்போது வெளியான வரைபடத்தில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு காட்டப்பட்டிருந்த வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பெரும் பகுதிகள் இன்று தமிழர்களின் கைகளில் இல்லை என்பது எங்களில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம். மின்னாமல் முழங்காமல் தமிழர் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அந்த இடங்களுக்கு தமிழர்கள் இனிமேல் கால்வைக்க முடியாதவாறு கட்டமைப்புக்கள் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அந்த தமிழீழத்தை அடைந்தே தீருவோம். தமிழீழம் இல்லை என்றால் ஒரு துளிமண்ணும் வேண்டாம் என நாங்கள் மேற்குலக நாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் போது எங்கள் முற்றங்கள் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு வருகிறதே, இந்த யதார்த்தங்களையும் புரிந்து கொண்டு செயற்படுங்கள் என்றுதான் நாங்கள் உங்களை மன்றாட்டமாக கேட்டு வருகிறோம். இதை சொல்லி வரும் துரைரத்தினம், நிராஜ் டேவிட், இதயச்சந்திரன், ஆகியோர் சம்பந்தரின் நிகழ்ச்சிநிரலிற்கு கீழ் செயற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு. சம்பந்தரின் நிகழ்ச்சிநிரல் என்று ஒரு மண்ணாங்கட்டியும் எங்களிடம் இல்லை. எங்களின் நோக்கம் ஒன்றுதான். எங்கள் மண் பறிபோவதை தடுக்க வேண்டும். தமிழர் தாயகம் என்று நாங்கள் சொல்லும் இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் எங்களிடம் இல்லை. வேறு நோக்கங்களில் செயற்படவேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. ஊடகவியலாளர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தின் காவல் நாய்கள். தான் சார்ந்த சமூகத்திற்கு ஆபத்து ஏற்படும் பொழுது அந்தச் சமூகத்தை எச்சரிப்பதுதான் சமூகத்தின் காவல் நாய்களான ஊடகவியலாளர்களின் கடமை. தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு கைகட்டி சேவகம் செய்பவர்களாக இல்லாமல் தமிழர்களின் உரிமையை நிலை நிறுத்தக்கூடிய தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த தமிழர்கள் சம்பந்தராகவும் இருக்கலாம். அல்லது எந்த கந்தப்பராகவும் இருக்கலாம். தமிழீழம் தான் என்ற உறுதியோடு இருக்கும் போது வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கள் கைகளில் இல்லை என எங்கள் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்க்கிறீர்களே எங்கள் கனவுகளை கலைக்கப் பார்க்கிறீர்களே என்று ஒரு சிலர் என்மீது ஏவுகணை வீசுவீர்கள் என்றும் எனக்கு தெரியும். ஆனால் அந்த கனவுகளுடன் மட்டும் என்னைப்போன்ற ஊடகவியலாளர்களால் வாழ முடியாது என்பதால்தான் யதார்த்தங்களையும் இடைக்கிடையே சொல்ல விளைகிறோம். முதலில் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பிரதேசம் என்று கூறும் பகுதிகள் தமிழர்களின் கைகளில் இருக்கிறதா? உண்மையில் கிழக்கு மாகாணம் முக்கியமாக தமிழீழத்தின் தலைநகர் என்று சொல்லும் திருகோணமலையில் தமிழர்களின் நிலை என்ன என்பதை பாருங்கள் என ஒரு வரைபடத்தையும் அதில் இணைத்திருந்தேன். புள்ளிவிபர திணைக்களத்தின் விபரங்களின் படி திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகை இனவிகிதாசார ரீதியில் எவ்வாறு மாற்றமடைந்து சென்றிருக்கிறது என்பதையும் பார்ப்போம். 1932 ம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கல்லோயா திட்டம் முதல் 1977ல் ஆரம்பிக்கப்பட்ட துரித மகாவலி அபிவிருத்தி திட்டம் வரை கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை இலக்கு வைத்து 24 குடியேற்ற திட்டங்கள் இலங்கை அரசுகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 1950 ம் ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இணைத்து தமது அரசியல் நகர்வுகளையும் அதன் பின்னர் வடகிழக்கு இணைந்த சுயாட்சி கோரிக்கையையும் தமிழர்கள் முன்வைத்து போராட ஆரம்பித்த போது சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கையும் கிழக்கையும் துண்டாடி கிழக்கை முழுமையாக சிங்கள மயப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை துரிதப்படுத்த ஆரம்பித்தனர். சிங்களவர்களின் இந்த நகர்வை உணர்ந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சி 1952 ம் ஆண்டில் திருகோணமலையில் தனது மாநாட்டை நடத்தியதுடன் அந்த மாநாட்டில் திருகோணமலையை தமிழர்களின் தலைநகராகவும் பிரகடனம் செய்தனர். திருகோணமலை தமது தலைநகர் என தமிழர்கள் பெருமையாக பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தில் திருகோணமலையை தமது வசப்படுத்துவதற்காக சிங்கள தேசம் பாரிய செயற்திட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது. கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாவி திட்டங்களை உருவாக்கி திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கினர். கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கிய அதேவேளை சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைகளிலும் மாற்றங்களையும் உருவாக்கினர். மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்பதை பின்னர் பார்ப்போம். திருகோணமலை மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லையான தென்னமரவாடியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையான வெருகல் ஆறு வரையான நீண்ட கரையோர பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்கள் உள்ளன. 1827 ம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்களவர்கள் மட்டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15,663 பேராகவும், முஸ்லீம்கள் 3,245 பேராகவும் காணப்பட்டனர். இம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லீம்கள் 16.9 வீதமாகவும், சிங்களவர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர். 1921 ம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளை, முஸ்லீம்களின் சனத்தொகை 37.6 வீதமாகவும் சிங்களவர்களின் சனத்தொகை 4.4 வீதமாகவும் உயர்வடைந்திருந்தது. 1971 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்கள குடியேற்றம் மற்றும் முஸ்லீம்களின் சனத்தொகை அதிகரிப்பு என்பனவற்றை தெளிவாக காட்டியிருக்கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின் படி திருமலை மாவட்டத்தில் தமிழர்கள் (71749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லீம்கள் (59,924 பேர்) 31.8 வீதமாகவும், சிங்களவர்கள் (54,744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர். திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லீம்கள் 46.5 வீதமாகவும் உயர்வடைந்திருக்கிறார்கள். 81.76வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த விபரங்களை பார்க்கும் உங்களுக்கு திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாக இருந்த தமிழர்கள் இன்று மூன்றாவது நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். யுத்தம் காரணமாகவும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாகவும், யுத்த அழிவுகளினால் ஏற்பட்ட இறப்புவீத அதிகரிப்பும் தமிழர்களின் சனத்தொகை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். உலகில் முஸ்லீம்களின் சனத்தொகை பெருக்கத்தைப் போலவே கிழக்கு மாகாணத்திலும் அவர்களின் சனத்தொகை வீதம் ஏனைய இனங்களை விட அதிகரித்து வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் இப்போது சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டு அவைகளுக்கு சிங்கள பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. சனத்தொகையில் மட்டுமல்ல நிலப்பரப்பைக்கூட தமிழர்கள் திருகோணமலையில் இழந்துவிட்டார்கள். 2728 சதுர கிலோ மீற்றரை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் தான் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருகோணமலை நகர் மற்றும் ஈச்சலம்பற்றை, வெருகல் உள்ளடக்கிய இந்த 346 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள்ளும் தற்போது சிங்களவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. பூர்வீக தமிழ் பிரதேசங்களான கந்தளாய், கிண்ணியா, குச்சவெளி, தம்பலகாமம் பகுதிகள் இப்பொழுது முற்றுமுழுதான சிங்கள பிரதேசங்களாக மாற்றப்பட்டு விட்டது. அந்த பிரதேசத்தில் உள்ள சுமார் 240 தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதுதான் எமது தமிழீழ தலைநகரின் இன்றைய நிலை. அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை பார்ப்போம். வெருகல் தொடக்கம் பாணமை வரையான பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், 1961 ம் ஆண்டு நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்து மொனராகல, பதுளை, மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேச செயலகப் பிரிவுகளையும் இணைத்து திகாமடுல்ல மாவட்டம் (அம்பாறை) உருவாக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்தும் திட்டத்துடனேயே திகாமடுல்ல மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பக்கமாக உள்ள மன்னம்பிட்டி, உட்பட பல தமிழ் கிராமங்கள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அவை பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. திருகோணமலையையும் மட்டக்களப்பையும் துண்டாடும் வகையில் வடமுனையிலிருந்து கிரான் வரையான பிரதேசங்களிலும், அதேபோன்று மேற்கு எல்லையான புல்லுமலை வடமுனை, மற்றும் வடக்கு எல்லையான மாங்கேணி, வாகரை, பனிச்சங்கேணி, புனானை கிழக்கு, வட்டவான், மதுரங்கேணிக்குளம், கதிரவெளி, பால்சேனை, அம்பந்தனாவெளி ஆகிய கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை மட்டுமே தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது கூட நிலைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. 1961 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 1963 ம் ஆண்டில் முஸ்லீம்கள் 44 வீதமாகவும், சிங்களவர்கள் 29.3 வீதமாகவும், தமிழர் 25.2 வீதமாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007 சிங்களவர்கள் 37.5 வீதமாக உயர்வடைந்திருக்கின்ற அதேவேளை தமிழர்கள் 18.3 வீதமாகவும் முஸ்லீம்கள் 44 வீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர். இப்பொழுது சிங்கள மயமாக்கப்பட்டிருக்கும் பிரதேசங்கள் மீண்டும் தமிழர் கைகளுக்கு வரும் என சிலர் நம்பலாம். உலக நாடுகளில் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் மீட்கப்பட்டதாக உங்களில் சிலர் ஆறுதல் சொல்லலாம். ஆனால் அந்த இனங்களுக்கு உலக நாடுகளில் இருந்த ஆதரவின் ஒரு வீதமாவது எமக்கு இருக்கிறதா என்ற யதார்த்தத்தையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். தற்போது போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி என்ற பெயரில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புதிய சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அண்மையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். தீகவாவி புனித பிரதேச திட்டம் மற்றும் உல்லாசப் பிரயாண அபிவிருத்தி ஆகியவற்றின் கீழ் அம்பாறை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பிமலை பிரதேசத்தில் ( இலங்கை அரசு வைத்த பெயர் தொப்பிகல) மேற்கொள்ளப்பட்டு வரும் அக்ரோ வர்த்தக அபிவிருத்தி திட்டத்தின் கீழும் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். மகாவலி அபிவிருத்தி திட்டம் கெடா ஓயா திட்டம் உட்பட மேற்படி திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் சனத்தொகையை 55 வீதமாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களை மகிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச்சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கொண்டு வருகிறார். அரச காணிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இன விகிதாசாரத்திற்கு ஏற்பவே பங்கிடப்பட வேண்டும் என காணிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா, திட்டங்களின் கீழும், அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். இத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு வசதியாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணம் தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண நிர்வாக உயரதிகாரிகளாக மாகாண சபை நிர்வாகத்திலும் சரி மாவட்ட செயலகங்களிலும் சரி சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் றியல் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம கிழக்கு மாகாண நிர்வாக உயர்மட்டத்திற்கு சிங்களவர்களையே நியமித்து வருகிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிர்வாக சேவையை சேராத இராணுவ அதிகாரிகளாவர். திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவும், மாவட்ட புனர்வாழ்வு இணைப்பாளராக மேஜர் ஜெனரல் அமரடேவாவும், ஆளுநரின் செயலாளராக கப்ரன் ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று கிழக்கு மாகாணசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளுநரே சகல அதிகாரங்களையும் கொண்டவராக காணப்படுகிறார். முதலமைச்சர் வெறும் கைப்பொம்மையாகவே செயற்படுகிறார். கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளராக முன்னாள் திருகோணமலை அரசாங்க அதிபர் ரொட்றிக்கோ நெலுதெனிய நியமிக்கப்பட்டிருக்கிறார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் உடகே நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் காணி அமைச்சின் செயலாளர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஆசிரியர் மாகாண செயலாளருக்கு ஒரு கடிதத்தை எழுதுவதாக இருந்தால் சிங்களத்தில்தான் எழுத வேண்டும். இந்த அவலங்களுக்கு காரணம் கிழக்கு மாகாண நிர்வாகம் சிங்கள கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கைகளுக்கு சென்றதுடன் சிங்கள அரசின் கைப்பொம்மையான ஒருவர் மாகாண முதலமைச்சரானதும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மாகாணசபைக்கு பூரண அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட அந்த மாகாணசபை தமிழர்களின் கைகளை விட்டு சென்றதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை கிழக்கு மாகாண மக்கள் அனுபவித்து வருகின்றனர். அதனால்தான் சொல்லுகிறோம். மாகாண நிர்வாகமானால் என்ன நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானால் என்ன தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே எதிலும் வெற்றிபெற முடியும். அது எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கும் பொருந்தும். இதை வாசித்த உங்களில் சிலர் கிழக்கு மாகாணம்தானே பறி போயிருக்கிறது. வடமாகாணம் எங்கள் கைகளில்தானே இருக்கிறது என பெருமிதம் அடையலாம். ஆனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் இன்று எங்கள் கைகளில் இல்லை என்பதுதான் யதார்த்தம். அது பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம். மன்னம்பிட்டி தமிழ் கிராமம்: சூறையாடப்படும் நிலம் மன்னம்பிட்டி பிரதேச சபை, மகாவலி அதிகாரசபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களும் அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்களும் மன்னம்பிட்டிக் கிராமத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களைச் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமதாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக அறிய முடிகிறது. மன்னம்பிட்டி கிராமமும், மன்னம்பிட்டி பாலமும் மட்டக்களப்புக்கு செல்லும் தொடருந்து பாதையில் கல்லோயா சந்திக்கும் வாழைச்சேனைக்கும் இடையே உள்ளது. வரலாற்றுச் சான்றுகளின் படி மன்னம்பிட்டி என்ற இந்த தமிழ்க் கிராமம் 1893ல் உருவாக்கம் பெற்றிருக்கிறது. தங்களது விவசாயத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் 1897ம் ஆண்டு மகாவலிகங்கையின் கிளை நதியாகிய ஹலராவில ஆற்றினை [Galarawila River] மறித்து மன்னம்பிட்டிக் கிராம மக்கள் குளம் ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். இந்த ஆற்றினை கடக்க கட்டப்பட்டதுதான் மன்னம்பிட்டி பாலம். ஆனால் 1948ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இந்தக் குளம் அழிந்துவிட அதிகாரிகள் இதுவரைக்கும் அந்தக் குளத்தினை மீளக்கட்டவில்லை. துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்கூட மன்னம்பிட்டிக் கிராம மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை. மாறாக, மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்காக இவர்களது கிராம நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் வசித்துவந்த 250 குடும்பங்களில் 120 குடும்பங்களுக்கு வயல் நிலங்களும் இருந்திருக்கிறது. வெறும் 16 குடும்பங்களுக்கு மாத்திரமே சுவீகரிக்கப்பட்ட காணியில் அதே அளவுடைய வேறு காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஏனையோருக்கும் அவர்கள் முன்னர் வைத்திருந்த நிலங்களில் அரைப் பகுதிக்கும் குறைவான காணிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பிரதேசத்தினை ஏனைய இனக்குழுமங்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு விவசாயத் தேவைகளுக்காக மாத்திரம் அரை ஏக்கர் வயல்நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் மன்னப்பிட்டி வாசிகளுக்குச் சென்று சேரவேண்டிய நிலத்தில் பெரும்பகுதியினை மன்னம்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிசெய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சதித்திட்டம் ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக மன்னம்பிட்டி என்ற இந்தத் தமிழ்க் கிராமத்திற்கு மிகப் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொடர்புடைய அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, சட்ட விரோதமான இந்த நில அபகரிப்பினை நிறுத்துவதோடு மன்னம்பிட்டி கிராம வாசிகளுக்கு நிரந்தரமான தகுந்த தீர்வினைப் பெற்றுக்கொடுப்பார்களா?