Search the Community
Showing results for tags 'வேறு சில கடற்புலிப் போராளிகள்'.
-
2001.09.14 ஆம் நாள் இரவிலிருந்து கப்பல் தொடரணி மீதான இச்சமருக்காக நாம் தயாராகி நின்றோம். எமது சண்டைப் படகுத் தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தாக்குதலுக்காகவும் ஒரு தொகுதி விநியோகத்திற்காகவும் களமிறக்கப்பட்டிருந்தன. பங்கெடுத்திருந்த பீரங்கிப் படகுகள்: 1. காமினிப் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் இரும்பொறை. 2. பிரசாந்தன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் பகலவன். 3. மதன் படகு - கட்டளை அதிகாரி: மேஜர் சிவா. 4. ஆதிமான் படகு (ஒஸ்கார்) - கட்டளை அதிகாரி: செழியன். 5. பரந்தாமன் படகு - கட்டளை அதிகாரி: புலவர். 6. வேங்கைப் படகு - கட்டளை அதிகாரி: இனியவன். 7. போர்க் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் தியாகன். 8. பாரதிதாசன் படகு - கட்டளை அதிகாரி: சிறீராம். 9. மாதவி படகு - கட்டளை அதிகாரி: கதிர் (சின்னக்கதிர்) 10. இசையரசி படகு-கட்டளை அதிகாரி: மணியரசன் 11. மயூரன் படகு - கட்டளை அதிகாரி: லெப் கேணல் அமுதசுரபி 12. ராகினி படகு - கட்டளை அதிகாரி: கலைக்கொடி இவற்றில் 35mm Cannon , 25mm Cannon, 23mm Cannon, 20mm Cannon, 14.5 Twin Barrel, 50 கலிபர் மற்றும் இலகு இயந்திரத் துப்பாக்கிகள் என மிகச் சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு முன்னணிச் சண்டைப் படகுகளாக இச்சமரில் களமிறக்கப்பட்டன. இவ்வகைப் சண்டைப் படகுகள் எம்மால் வடிவமைக்கப்பட்டு பல போராளிகளின் கடின உழைப்பால் வன்னிக் காடுகளின் மறைவிடங்களில் தயாரிக்கப்பட்டவைகள். இப் சண்டைப் படகுகளில் கடுமையான கடற் பயிற்சிகளைப் பெற்று கடற்போரியலில் அனுபவம் வாய்ந்த குறிப்பாக தலைவரால் தரம் பிரிக்கப்பட்ட கடற்புலிகளின் படையணிப் போராளிகளே விடப்பட்டிருந்தனர். கட்டளைக் கண்காணிப்பு நிலையத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களுடன் தளபதி பிருந்தன் மாஸ்டர், தளபதி மங்களேஸ், தளபதி கலாத்தன் ஆகியோரும் கூடவே நின்று தாக்குதலை வழிநடத்தினர். 2001.09.15 மாலை 5 மணியளவில் படகுகள் அனைத்தும் கட்டைக்காடு கடற்பகுதியில் தயார் நிலையில் நங்கூரமிடப்பட்டுக் கடல் உருமறைப்பு வலைகளால் வேவு விமானங்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டன. ஒவ்வொரு சண்டைப்படகுப் போராளிகளையும் சிறிய படகொன்றில் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் வந்து சந்தித்து திட்டங்கள் பற்றி மீண்டும் மீண்டும் விளக்கியதோடு சுவையான உணவுகளும் பரிமாறிச் சென்றார். இதேவேளை நாயாற்றுக் கடற்பகுதியில் எமது பயிற்சிப் படகுகள் நான்கு எதிரியின் கண்காணிப்பை திசைதிருப்பும் நடவடிக்கைக்காக கரையோரத்தில் ஓடவிடப்பட்டிருந்தன. 2001.09.16 அதிகாலை 3:45 மணியளவில் கும்மென்ற இருளில் ஆழ்கடல் நோக்கி கப்பல் தொட ரணியை வழிமறித்துத் தகர்க்க எமது சண்டைப்படகுகள் நீர்கிழித்வாறு சென்றன. இடையில் நாகர்கோவில் கடற்பகுதியில் வழிமறித்த சிறிலங்காவின் கரையோர சுற்றுக்காவல் கலத்துடனும் அதிவேகத் தாக்குதல் திறன்கொண்ட டோராப் பீரங்கிக் கலங்களுடனும் கடும்சமர் மூண்டது . இக்கடற்சமரானது 25- 30 நிமிடங்கள்வரை மிக உக்கிரமாக நடைபெற்றது. இதில் கரையோர சுற்றுக்காவல் கலம் பாரிய சேதத்துடன் தாக்குதலிலிருந்து பின் வாங்கிச்சென்றது. மிதக்கும் மினி முகாம்கள் என வருணிக்கப்படும் டோராக் கலங்களால் இறுக்கமாகப் போடப்பட்டிருந்த வருண கிரண கடல்வேலியை உடைத்து ஒரு தொகுதி சண்டைப் படகுகளைக் கப்பல் தொடரணியை நோக்கி அனுப்பி வைப்பது எமது தொகுதிக்கு தரப்பட்ட பணியாய் இருந்தது. 6 டோரா கடற்படைக் கலங்களுடன் எமது 3 சண்டைப்படகுகள் மூர்க்கமாக மோதிக்கொண்டிருந்தன. எமது உக்கிரத் தாக்குதலில் நிலைகுலைந்தன டோராக் கலங்கள். அதிகாலை 4:35 மணியளவில் அடிவாங்கி தப்பி ஓட முயன்ற ஒரு டோராக் கலத்தை இடித்து வெடித்தது கரும்புலிப் படகு. கடலதிர பெரும் தீப்பிழம்பு சுழன்றெழுந்தது. எமது படகு அண்மித்துச் சென்றவேளை எரிந்தவாறே அக்கலம் நீரில் மூழ்கியது. மற்றைய கடற்படை டோராக்கள் ஓடித்தப்பித்தன. கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் அனோஜன்இ மேஜர் காந்தி ஆகியோரின் உயிரர்ப்பணிப்புடனும் சண்டைப்படகுகளின் தீரமிகு தாக்குதலாலும் வருண கிரண கடல்வேலி உடைக்கப்பட்டது. கப்பல் தொடரணி நோக்கிப் படகுகள் புறப்பட்டன. இதற்கிடையில் கட்டைக்காடு சுண்டிக்குளம் கடற்பகுதியில் எமது இன்னொரு தொகுதிப் சண்டைப்படகுகள் டோராப் பீரங்கிக் கலங்களுடன் மோதிக்கொண்டிருந்தன. பருத்தித்துறைக் கடற்பகுதியில் கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் கப்பல் தொடரணியை அதிகாலை 5:00 மணியளவில் நெருங்கினோம். ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்களான எஸ்.எல்.என்.எஸ் எடித்தார-2 மற்றும் எஸ்.எல்.என்.எஸ் உத்தர துணையுடன் மோதலைத் தொடுத்த டோராப் பீரங்கிக் கலங்களுடன் மீண்டும் உக்கிரச் சமர் வெடித்தது. கப்பல்கள் தமது திசையை உயரக்கடல் நோக்கி மாற்றியமைத்துச் சென்று கொண்டிருந்தது. அரை மணிநேரச் சமரின் பின்னர் ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள் தமது முழுப்பலத்தையும் பயன்படுத்தி ஓடித்தப்பின. தாக்குப்பிடிக்க முடியாத டோராக் கலங்களும் கப்பல்கள் இரண்டையும் விட்டுவிட்டு தூரவிலகின. எமது சண்டைப்படகுகள் இரண்டு கப்பலையும் சுற்றிவளைத்து வியூகம் போட்டன. கரும்புலிப் படகுகள் கப்பலைத் தகர்ப்பதற்காக புறப்படத் தயாராகின. நமது படகுப் போராளிகள் மிகவும் ஆவலுடன் கரும்புலிப் படகுகளையும் கப்பல்களையும் உற்று நோக்கியவாறு படகுத் தளத்தில் நின்று ஆரவாரித்தனர். வெடிமருந்தேற்றிய படகில் சென்ற கரும்புலிகள் “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற நமது கோசத்தை உச்சரித்துவிட்டு கையசைத்தபடி விடைபெற்றனர். அவ்வேளையே திடீரென சிறப்புத்தளபதி சூசை அவர்களின் மிக இறுக்கமான கட்டளை அனைத்து படகுக் கட்டளை அதிகாரிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டது. “கப்பலைத் தகர்க்க வேண்டாம்” கப்பலில் பொதுமக்களும் கொண்டு செல்லப்படுகிறார்கள்....! ஆகவே கட்டளைக்கேற்ப தகர்ப்பதற்கு விரைந்த கரும்புலிப் படகுகளை மீள வரவழைத்தோம். அப்படகுகள் கப்பல்களை ஒருமுறை வட்டமடித்துவிட்டு வந்து சேர்ந்தன. தாக்குதலைக் கைவிட்டு கரை திரும்பும் முடிவிற்கு வந்தவர்களாய் புறப்பட்டோம். கப்பல்கள் மீதான எமது தாக்குதல்களை பொதுமக்களுக்காக நாம் கைவிட்டது பற்றி தெரிந்து கொண்ட சிறிலங்கா கடற்படை வழிமறிப்புத் தாக்குதலை தொடுப்பதற்காக எமது படகுகளைப் பின்தொடர்ந்து தாக்குதலை தொடுத்தன. இது எமக்குச் சினத்தை மூட்டியது. எனவே திடீர்த் திட்டம் ஒன்று எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதாவது வருண கிரண நடவடிக்கையில் ஈடுபடுகின்ற டோராப் பீரங்கிக்கலங்கள் மீதான தாக்குதலை மேற்கொண்டு அடித்து மூழ்கடிப்பதென. இவ்வாறு தாக்குதலுக்கேற்ப போர்வியூகத்தை வகுத்துக்கொண்டு அதற்கேற்ப படகுகளைச் செலுத்தியவாறு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான கட்டைக்காடு கடற்பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தோம். சிறிலங்கா கடற்படையும் வலிந்தே எமது வியூகத்துள் வந்து வீழ்ந்தது. நாம் எதிர்பார்த்த மாதிரி 20க்கு மேற்பட்ட டோராக் கலங்கள் எம்மைப் பின் தொடர்ந்தன. அவைகள் தூரத்திலிருந்து எம்மீது தாக்குதலை மேற்கொண்டவாறு வந்து கொண்டிருந்தன. நாகர்கோவில் கடற்பகுதிக்கு மேலே நாம் வந்துகொண்டிருந்ததால் எமது தாக்குதலை கட்டைக்காடு அல்லது சுண்டிக்குளம் கடற்பகுதிகளுக்குள் வைத்து நடத்துவது எமக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் தாக்குதலைத் தவிர்த்தவாறே வந்து கொண்டிருந்தோம். காலை 8 மணியளவில் எம்ஐ - 24 தாக்குதல் உலங்குவானூர்திகள் துணையுடன் வருண கிரண டோராக் கலங்கள் எம்மைப் பின் தொடர்ந்து நெருங்கி பீரங்கி வேட்டுக்களைப் பொழிந்தன. இதனால் நாகர்கோவில் கடற்பகுதியில் உயரே 15 கடல்மைல் தொலைவில் பெரும் கடற்சமர் மூண்டது. 15- 20 நிமிடங்கள் நடைபெற்ற உக்கிரச் சமரில் நிலைகுலைந்தது, சிறிலங்கா கடற்படை. சேதத்திற்குள்ளான டோராக்கலங்கள் தடுமாறியபடி அகன்றன. ஒரு டோரா பீரங்கிக்கலம் முற்றாகச் செயலிழந்து எமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மேலும் பாவிக்கமுடியாதவாறு பீரங்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு அப்படியே கைவிடப்பட்டது. இச்சமரில் எமது சண்டைப்படகான பரந்தாமன் இயந்திரப் பகுதியில் வெடிபட்டு தீப்பிடித்து எமது துணிகரச் செயற்பாடுகள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதன்போது எமது படகின் தொலைத் தொடர்பாளராக பணியாற்றிய லெப்டினன் கேணல் புனிதா உட்பட இரு போராளிகள் காயங்களுக்கு உள்ளாகினர். (லெப்டினன் கேணல் புனிதா மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்சமரில் 06.10.2006 இல் வீரமரணமடைந்தவர்). இதேபோன்று சண்டைப்படகு மாதவியும் தாக்குதலுக்கு உள்ளாகி போராளிகளின் தீரமிகு செயற்பாட்டால் மீட்டெடுக்கப்பட்டது. இப்படியாக தொடர்ந்தும் தாக்குதல் வியூகத்துடன் வந்து கொண்டிருந்தாலும் சிறிலங்கா கடற்படை பின்தொடர்ந்து தாக்குவதால் பதிலுக்கு நாமும் படகுகளை அடிக்கடி திருப்பி தாக்குதல் நடத்தியவாறே வரவேண்டியேற்பட்டது. சுமாராக 14 அல்லது 15 தடவைகளுக்கு மேல் டோராக்கள் பின்தொடர்ந்து தாக்குவதும் நாம் திருப்பிக் கலைத்து தாக்கிவிட்டு வருவதுமாக சமர்கள் நீண்டன. சேதமடைந்த சிறிலங்காக் கடற்படைக் கலங்களுக்குப் பதிலாக மேலதிக கலங்கள் திருகோணமலையிலிருந்தும் மற்றும் காங்கேசன்துறை & காரைநகர் கடற்படைத் தளத்திலிருந்தும் வந்து சேர்ந்திருந்தன. அவைகளும் இணைந்துகொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தின. மீண்டும் ஒரு திடீர் வளைப்புத்தாக்குதலை டோராக்கள் மீது நடத்துவதற்கு படகுகள் தயாராக்கப்பட்டது. பிறைவடிவ வியூகத்தில் திடீரென படகுகளின் வேகத்தை அதிகரித்து பின்தொடர்ந்த அனைத்து டோராக் கலங்கள் மீதும் உக்கிரத் தாக்குதலைத் தொடங்கினோம். கட்டைக்காடு கடற்பகுதி பீரங்கி வேட்டொலிகளால் அதிர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் படைக்கலங்கள் பல கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கப்பட பல டோராக்கள் உயரக்கடல் நோக்கி ஓடித் தப்பியன. இரண்டு டோராக்கள் முற்றாக அடித்து நிறுத்தப்பட்டது. அதனைக் கட்டியிழுக்க வந்த இன்னொரு டோராவும் தாக்குதலில் சிக்குண்டு- தடுமாறியது. எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் உந்துகணைத் தாக்குதலை ஏவிய போதும் அவைகளும் நமது பீரங்கித் தாக்குதலில் சேதத்திற்குள்ளாகி களமுனையிலிருந்து கலைக்கப்பட்டன. இவ்வாறாக நீடித்த இக்கடற்சமர் 2001.09.16 மாலை 2 மணிவரை நடைபெற்று, 13 மணி நேரச் சமர், பின் முடிவுக்கு வந்தது. சிறிலங்கா கடற்படை தனது வரலாற்றில் முதன் முதலில் சந்தித்த பெரும் ஆபத்தான கடற்சமராக இச்சமர் இடம் பெற்றிருந்தது. ஏனெனில் கடற்படையின் அதிவேகத் தாக்குதற் கலங்கள், ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள், தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பன பெருமளவாக ஈடுபடுத்தப்பட்ட போதும் அதிகமான கலங்கள் கடும் சேதத்திற்குள்ளான சமராக இச்சமர் அன்றைய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இக்கடற்சமரில் மிதக்கும் மினி முகாம்கள் எனச்சொல்லப்படும் இரண்டு அதிவேக டோராக்கள் முற்றாகத் தகர்க்கப்பட்டதோடு 15 இற்கும் மேற்பட்ட டோராக்கள் மற்றும் எம்.ஐ.-24 உலங்கு வானூர்தியொன்றும் சேதமாக்கப்பட்டது. 40 இற்கு மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டதோடு 60 இற்கு மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாகியதையும் சிறிலங்கா அரச தரப்பு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் கப்பல் தொடரணி மீதான எமது தாக்குதல் கைவிடப்பட்டதுடன் எமது கடற்சமர் புலிகளான லெப்டினன் கேணல் இரும்பொறை (கடற்புலிகளின் துணைத்தளபதி), லெப்டினன் கேணல் குமுதன் (படகுக் கட்டளை அதிகாரி), கப்டன் எழிலரசன் (20மிமீ பிரதான சூட்டாளர்), லெப்டினன் திருவாணன் (25மிமீ சூட்டாளர்), மேஜர் நளன் (23மிமீ பிரதான சூட்டாளர்), மேஜர் சிவகாந்தன் (பிரதான இயந்திரப் பொறியியலாளர் ) மற்றும் கடற்கரும்புலிகளான லெப்டினன் கேணல் அனோஜன், மேஜர் காந்தி, மேஜர் நித்தியா, மேஜர் அருணா உட்பட10 கடல்வேங்கைகளை அன்றைய சமரில் இழந்திருந்தோம். இக்கப்பல் தொடரணி மீதான தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன் அதனைத் தெரிவு செய்ததற்கான முக்கியத்துவத்தை சிறப்புத்தளபதி சூசை அவர்கள் படகுக்கட்டளை அதிகாரிகளுக்கான சந்திப்பில் கூறியபோது - 27.04.2001 அன்று நடந்து முடிந்த முகமாலைச் சமரில் சிங்களத்தின் பாரிய படை முன்னகர்வு தீச்சுவாலையாக பற்றியெரிந்து முறியடிப்புப் படையணிகளாலும் பீரங்கிப் படையணிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதும், 24.07.2001 அன்று முழு உலகையே வியப்பில் ஆழ்த்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான கரும்புலிகளின் தீரமிகு தாக்குதலும் சிறிலங்கா அரசை பலவகையிலும் ஆட்டங்காண வைத்ததுபோல், கடலிலும் எதிரிக்கு விழப்போகின்ற இந்த அடி முழு உலகையே வியப்பில் ஆழ்த்திய கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான கரும்புலிகளின் தீரமிகு தாக்குதலும் சிறிலங்கா அரசை பலவகையிலும் ஆட்டங்காண வைத்ததுபோல், கடலிலும் எதிரிக்கு விழப்போகின்ற இந்த அடி போரியலில் நிச்சயம் ஒருபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தளபதி சூசை விளக்கியிருந்தார். இவ்வாறான பெரும் எதிர்பார்ப்புடன் கூடிய கப்பல் தொடரணி மீதான தாக்குதலை பல சாதகமான வாய்ப்பிருந்தும் கைவிட்டது, கப்பல்களில் சிறிலங்கா கடற்படை ”பொதுமக்களை பணயக்கைதிகளாகக் கொண்டு சென்றதால்” மட்டுமே. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை பணயம் வைத்துப் போர் செய்ததாகக் கூறிவரும் சிறிலங்கா அரசும், அதற்குத் துணைபோகும் சில நாடுகளும் இதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதேவேளை இன்னொன்றையும் இங்கே குறிப்பிடுவது சாலப் பொருத்தமாய் இருக்கும் என நம்புகிறேன். 1915 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஆர்.எம்.எஸ். லுசிரேனியா என்ற பயணிகள் மற்றும் பொருட்கள் ஏற்றும் கப்பல், அமெரிக்காவின் நியுயோர்க் துறைமுகத்திலிருந்து 2000 இற்கு மேற்பட்ட பயணிகளுடன் பிரித்தானியாவின் லிவெர்பூல் துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அயர்லாந்திலிருந்து 16 கடல் மைல் தொலைவில், ஜெர்மானிய யூ-போட் எனப்படும் நீர்மூழ்கிக் கலத்தால், நீருக்கு அடியால் சென்று தாக்கவல்ல ஏவுகணைத் தாக்குதலுக்கு (TORPEDO) உள்ளாகியது. இப் படுகொலைத் தாக்குதலில் அதில் பயணம் செய்த 128 அமெரிக்கர்கள் உட்பட1200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலானது தெரிந்து கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூறியது. இக்கூற்றை மறுத்த அன்றைய ஜெர்மானிய அரசு கப்பலில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கொண்டு செல்லப்பட்டதாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவித்தது. இவ்வாறு பொதுமக்களின் உயிரிழப்பை பொருட்படுத்தாது மேற்கொள்ளப்பட்ட அப்போதைய ஜெர்மனியக் கடற்படையின் தாக்குதலுக்கும், படையினருடன் மக்களை பணயக் கைதிகளாக ஏற்றிவந்த சிறிலங்காவின் கப்பல்கள் மீதான தாக்குதலை பொதுமக்களுக்காக கைவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்குமான வேறுபாட்டையும், போரியல் தர்மத்தையும் பன்னாட்டு அரசுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். புலவர், கடற்புலிகள்.