Search the Community
Showing results for tags '25/02/1998'.
-
கிளாலிக் களப்பு (கடனீரேரி) என்பது எமது மக்களின் குருதி கலந்த நீர்ப்பரப்பு ஆகும். யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் கிளாலி ஊடாக பூநகரி செல்லும் மக்களை நாகதேவன்துறையிலிருந்து வோட்டர் ஜெட் & கூகர் வகுப்புப் படகுகளில் வரும் சிங்களக் கடற்படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர். பேந்து, யாழ்ப்பாணத்தைச் சூரியகதிர் நடவடிக்கை மூலம் வன்வளைப்புச் செய்த பின்னர் கேரதீவையும் அதனை அண்டிய பரப்புகளிலிருந்தும் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை சில வேளைகளில் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இதனை கிளாலியில் கடற்படைத்தளம் அமைத்து நிலைபெற்றிருந்த சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தினர் (Special Boat Squadron) செய்துதொலைத்தனர். இவ்வாறாக இக்கிளாலிக் களப்பில் 300இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யாழ். குடாநாடு நோக்கி வன்னியிலிருந்து செல்லும் போராளிகளின் கடற்போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருந்ததும், இக் கிளாலிக் கடற்படைத்தளமே ஆகும். அதுமட்டுமன்றி இக்கடற்படைத்தளம் இங்கு இருக்கும்மட்டும் ஆனையிறவை தாம் வெற்றிகொள்வதென்பது அவ்வளவு இலகுவானதன்று என்பதும் புலிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையால் இவற்றிற்கெல்லாம் பழிவாங்கும் விதமாக ஒரு வலிதாக்குதலை (offence) இத்தளம் மீது நடத்த வேண்டுமென்று தலைவர் அவர்கள் முடிவு செய்தார். அதற்கான வேவுத்தரவுகளைத் திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டது. இத்தாக்குதலிற்கான வேவுப்பணிகள் மேஜர் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர் அதனை செவ்வனவே நிறைவேற்றியிருந்தார். அவ்வேவிற்காக முதலில் ஆறு கடல்வேவுப்புலிகள் (திகதி தெரியவில்லை) நாளன்று சென்றனர். இத்தளமிருந்த கடற்பரப்பில் அவர்கள் பகல் வேளையில் ஊடுருவிய போது அவர்களைக் கண்டுகொண்ட சிங்களக் கடற்படையினர் படகொன்றில் இவர்களை விரட்டிச் சுடத் தொடங்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த கடல்வேவுப்புலிகள் தம்மை விரட்டியபடி நோக்கி வந்த வேகப்படகு மீது கைக்குண்டுகளை வீசித் தற்காப்பில் ஈடுபட்டபடி கரையை நோக்கி நீந்தினர். ஆனால் அதற்குள் சிங்களவரின் வேட்டுகள் ஏவுண்ணிட 4 கடல்வேவுப்புலிகள் களப்பிலையே வீரச்சாவடைந்தனர். ஏனைய இருவரும் தப்பிக் கரைமீண்டு அருகிலிருந்த காட்டுக்குள் ஓடினர். பின்னர் அடுத்த நாள் விடுதலைப்புலிகளின் கடல் அதிரடிப்படையான 'கடற்சிறுத்தைகள்'இலிருந்து நான்கு போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி வேவுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்றவர்களில் இருவர் பெண் போராளிகள் ஆவர். இக்கடற்சிறுத்தைகள் பிரிவானது சிறுத்தைப்படையின் ஒரு பிரிவாகும். இவர்களை தொடக்க காலத்தில் கேணல் ராயு அவர்கள் வளர்த்து வழிப்படுத்தியிருந்தார். கடற்சிறுத்தைகளை ஒரு இறப்பர் படகில் தளத்திற்கு அண்மைவரை கொண்டு சென்று இறக்கி விட்டனர் கடற்புலிகள். படகில் இந்நான்கு சிறுத்தைப்புலிகளுடன் மேலும் இரு கடற்புலிப் போராளிகளுமிருந்தனர். அவர்களில் ஒருவர் ஓட்டியாவார். மற்றையவர் பீகே இலகு இயந்திரச் சுடுகலச் சூட்டாளர் ஆவார். கடற்சிறுத்தைகளில் ஒரு ஆண் போராளி டொங்கானுடனும் ஒருவர் தொலைநோக்கியுடனும் சென்றிருந்தனர். ஒரு பெண் போராளி வகை-56-1 துமுக்கியுடனும் (T-56-1 rifle) இன்னொருவர் தொலைத்தொடர்பு கருவியுடனும் சென்றிருந்தனர். மேற்கொண்டு நீரடிச் சுவாச ஏந்தனங்களின் உதவியுடன் தளத்தை நெருங்கிச் சென்று வேவெடுத்தனர். தொலைநோக்கியுடன் சென்றிருந்த போராளி நன்கு கிட்டவாகச் சென்று வேவெடுத்தார். வேவில் அங்கே இரு புளூ ஸ்ரார் வகுப்புப் படகுகள், இரு கூகர் வகுப்புப் படகுகள், ஒரு கே-71 வகுப்புப் படகு மற்றும் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புப் படகு இருப்பதை அறிந்துகொள்கின்றனர். பின்னர் விடிவதற்குள் அருகிலிருந்த பற்றைக்குள் சென்று பேந்து பாதுகாப்பாகத் தளம் திரும்பினர். வேவுத்தரவுகள் மாதிரி வரைப்படப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தள மாதிரி உருவாக்கும் பணி நடைபெற்றது. அதே வேளை கடற்சிறுத்தைகள் தாக்குதலிற்கான பயிற்சிகளில் மும்முரமாக (பெயர் அறியில்லாத இடத்தில்) ஈடுபட்டனர். தாக்குதலிற்கான திட்டத்தை தலைவர் அவர்கள் வகுத்து கேணல் ராயு அவர்களிடம் வழங்கினார். அதனை கடற்சிறுத்தைக் கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் போராளிகளுக்கு விளங்கப்படுத்தினார், மாதிரி வரைபடத்தின் உதவியுடன். பழிவாங்குவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. 25/02/1998 அன்று கிளாலி கடற்படைத்தளத்தினுள் ஊடுருவித் தாக்க ஐந்தைந்து பேராகப் பிரிக்கப்பட்ட மூன்று சதளங்களைக் (Squad) கொண்ட கடற்சிறுத்தைகளைச் சேர்ந்த 15 பேர் (10 ஆண் போராளிகளும் 5 பெண் போராளிகளும்) ஆயத்தமாக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இச்சதளங்களின் தலைவர்கள் இவ்வேவிற்காகச் சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த சதளங்களுக்கும் மேஜர் குயிலன் தலைமை தாங்கிச் சென்றார். இவர்களைப் பத்திரமாக ஏற்றிப்பறிப்பதோடு இத்தாக்குதல் நடைபெறும் வேளை கிளாலி சிங்களக் கடற்படைக்கு ஆனையிறவிலிருந்து கடல்வழி உதவிகள் ஏதும் கிடைக்காமல் தடுப்பது ஆகிய பணிகள் கடற்புலி மேஜர் சுருளியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நடவடிக்கைச் சதளம் மாலை 6 மணியளவில் நாகதேவன்துறையிலிருந்து இரு உப்பயானங்களில் (Inflatable boats) வெளிக்கிட்டுச் சென்றனர். மாலை 8 மணியளவில் இறங்குதுறைக்கு அண்மையில் வைத்து, தளத்திலிருந்து 2 கடல்மைல் தொலைவில், இறக்கப்பட்டு மேற்கொண்டு நீந்தி ஊடுருவினர். இவர்கள் சாமம் 10 மணியளவில் முதலாவது காவல் வேலியை அண்மித்தனர். ஆனால் திட்டத்தின்படி கைப்பற்றிச்செல்லும் இலக்காக குறிக்கப்பட்டிருந்த கே-71 வகுப்புப் படகு அல்லது வோட்டர் ஜெட் வகுப்புப் படகு என்பனவற்றில் இரண்டுமே வெளியே சுற்றுக்காவலிற்குச் சென்றுவிட்டிருந்தன, போக்கூழாக. எனவே தாக்குதலிற்கான திட்டம் மாற்றப்பட்டு அங்கேயிருந்த மற்றைய மூன்று சுடுகலப் படகுகளில் ஒன்றைக் கைப்பற்றுவதென்று முடிவானது. புதுத் திட்டத்திற்கமைவாக சாமம் 10:30 மணியளவில் கடற்சிறுத்தைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். இவர்களுக்கு உதவியாக பூநகரியிலிருந்து கிட்டுப் பீரங்கிப் படையணியினரின் சேணேவிச் (Artillery) சூட்டாதரவும் செறிவாக வழங்கப்பட்டது. ஏற்கனவே இனங்காணப்பட்ட இலக்குகள் மீதும் உள்ளிருந்து வழங்கப்பட்ட ஆட்கூற்றுகளுக்கும் ஏற்ப சூடுகள் வழங்கப்பட்டன. படையினர் திணறினர்! தாக்குதல் தொடங்கி சிறிது நேரத்தில் சுட்டபடி கடற்கலமொன்றை நெருங்கிக்கொண்டிருந்த போது ஒரு ஆண் கடற்சிறுத்தைப் போராளி காயமடைந்தார். மேற்கொண்டு அடிபட்டபடி படகொன்றின் பக்கவாட்டு கம்பியின் மேலே ஏறி உள்நுழைய முற்பட்ட மற்றொரு ஆண் கடற்சிறுத்தைப் போராளி வீரச்சாவடைந்தார், படகினுள் மறைந்திருந்து சுட்ட படையினனால். எனினும் கடற்சிறுத்தைகள் தொடர்ந்து அடிபட்டனர். மேற்கொண்டு படகினுள் ஏறிய இன்னொரு கடற்சிறுத்தை அணியச் சுடுகலனை நோக்கிச் சென்ற போது அங்கே பதுங்கியிருந்த மற்றொரு சிங்களப் படையினனின் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைந்தார். ஆயினும் அடுத்தடுத்து படகினுள் ஏறிய நான்கு கடற்சிறுத்தைகள் படகைக் கைப்பற்றி ஓட்டிச்செல்ல முற்பட ஏதோ சிக்கலானதால் படகு நகர மறுத்தது. எனவே ஏனைய போராளிகள் படகைத் தள்ளி நகர்த்த முற்பட்டனர். சிலர் படையினரோடு அடிபட்டுக்கொண்டிருந்தனர். சமர் நீடிக்க அவ்விடத்தை நோக்கிச் சிங்களத் தரப்பின் எறிகணைகளும் வந்து வீழத் தொடங்கின. ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று நிலைமை மோசமடைந்தது. இனியும் படகுகளை எடுத்துச்செல்ல இயலாது என்பதை புரிந்துகொண்ட நடவடிக்கைக் கட்டளையாளர் மேஜர் குயிலன், அங்கிருந்த மூன்று படகுகளையும் உடைத்துவிட்டு பின்வாங்குவதாக கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தார். கட்டளைப்பீடமும் அதற்கு இசைவளித்தது. அச்சமயம் தொடர்பில் இருக்கும் போதே மேஜர் குயிலன் சன்னம் ஏவுண்ணி (projectile hit) வீரச்சாவடைந்தார். உடனே அவர் அருகில் நின்ற துணைக்கட்டளையாளர் அவரின் தொலைத்தொடர்புக் கருவியை எடுத்து கட்டளைப்பீடத்திற்கு நிலைமையை அறிவித்தார். கட்டளைப்பீடம் காயங்களையும் வீரச்சாவுகளையும் பின்னுக்குவிடாது அனைவரையும் ஏற்றிவருமாறு பணித்தது. பின்வாங்கும் போது இன்னுமொரு போராளியும் காயமடைந்தார். மேஜர் சுருளியின் கடற்புலிப் போராளிகள் அனைத்துக் கடற்சிறுத்தைகளை இரு கவிர் வகுப்பு கரவுப்படகுகளில் (Stealth boats) ஏற்றிக்கொண்டிருந்த்னர். அப்போது கையில் காயத்தோடு படகில் ஏற முற்பட்ட பெண் போராளியொருவர் தளர்வால் கீழே வீழ்ந்துவிட அவரைக் கவனியாமல் ஏனைய போராளிகள் தளம் திரும்புகின்றனர். ஆனால் தவறிய போராளியோ காயத்தால் களைக்காமல் தொடர்ந்து பின்னீச்சல் அடித்து அடுத்த நாள் நண்பகல் 10:35 இற்கு பூநகரியில் கரை மீண்டார். தளம் திரும்பிக்கொண்டிருந்தோரை வழிமறிப்பதற்காக ஆனையிறவிலிருந்து சிங்களப் படகுகள் இரண்டு விரைந்தன. வரும் போராளிகளின் ஏமத்திற்கு (escort) கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் மேஜர் சுருளி தலைமையில் விரைந்தன. ஆனாலும், வைகறை 5:30 மணியளவில் பூநகரிக் கரையிலிருந்து 3 அல்லது 4 கடல் மைல் தொலைவில் வைத்து பகைவரின் இரு வோட்டர் ஜெட்களோடு பின்வாங்கிக்கொண்டிருந்தவர்கள் முட்டுப்பட்டனர். அப்போது கடற்புலிகளின் ஏமப்படகுகள் வந்து சேராவிட்டாலும் இரு சிங்களச் சுடுகலப் படகுகளை நோக்கிச் சுட்டபடி அவற்றின் ஊட்டிற்குள்ளால் தம் கவிர் வகுப்புப் படகுகளைச் செலுத்திய கடற்புலி ஓட்டிகள் பத்திரமாக கடற்சிறுத்தைகளோடு தளம் திரும்பினர். இத்தாக்குதலில் கடற்படையின் களஞ்சியம் ஒன்றும் படகு ஒன்றும் அழிக்கப்பட்டது. மேலும் இரு படகுகளும் கடற்படைத்தளமும் சேதமடைந்தன. தளத்தினுள்ளிருந்த சில காவலரண்களும் அழிக்கப்பட்டன. கடற்படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டனர் என்று சிங்களப் படைத்துறை அறிவித்தது. காயமடைந்தோரின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. இத்தாக்குதலில் கடற்சிறுத்தைகள் தரப்பில் நடவடிக்கைக் கட்டளையாளர் கடற்சிறுத்தை மேஜர் குயிலன் கடற்சிறுத்தை கப்டன் சூரியன் கடற்சிறுத்தை கப்டன் ஜெயந்தன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைய மேலும் மூன்று கடற்சிறுத்தைகள் காயமடைந்தனர். உசாத்துணை: உதயன்: 27/02/1998, 01/03/1998 - இரு அடிபாட்டுக் கன்னைகளின் இழப்புகளின் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது தமிழ்நெற்: 26/02/1998 (SLN boat destroyed in commando raid - Radio) - இரு அடிபாட்டுக் கன்னைகளின் இழப்புகளின் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது திரைப்படம் : ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ - சமர் விரிப்பு இங்கிருந்து கொள்ளப்பட்டது 25.02.1998 கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் .! - இக்கட்டுரையிலிருந்து போராளிகளின் பெயர் விரிப்புகள் கொள்ளப்பட்டன. ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்