Search the Community
Showing results for tags 'jude prakash (ஜூட் பிரகாஷ்)'.
-
---> jude prakash (ஜூட் பிரகாஷ்) எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்!