1 month ago
நகை தொலைந்ததாக பொய்யான புகார் வழங்கப்பட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது ஐயா.
1 month ago
Published By: VISHNU 04 JUL, 2025 | 10:25 PM நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும் இருக்காது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒருபுறம், நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், மறுபுறம், பொருளாதாரத்தை விரிவுபடுத்தி கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து, அவர்களை பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார். அலரி மாளிகையில் வெள்ளிக்கிழமை (04) பிற்பகல் நடைபெற்ற "சமூக சக்தி" தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். "சமூக சக்தி" தேசிய வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக, சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சமூகத்தில் பொருளாதார நன்மைகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சக்தி தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களை வரவேற்றதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். பின்னர் " சமூக சக்தி" தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கலாநிதி உபாலி பன்னிலகே சமூக சக்தி தேசிய செயற்பாட்டை அறிமுகப்படுத்தினார். சமூக சக்தி உத்தியோகபூர்வ இணையத்தளம் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு ஆற்றிய முழுமையான உரை, குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததை நாம் அறிவோம். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நாம் அடையாளம் காண முடியும். ஆனால், அந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எந்தவிதத்திலும் காரணமாகாத கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்கு உணவு கொள்வனவு செய்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், கல்விக்கான வசதிகளை உருவாக்குதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சவாலும் பொறுப்பும் உள்ளது. அது கைவிட முடியாத ஒரு பொறுப்பு ஆகும். எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணிகளில் கிராமிய வறுமையை ஒழிப்பதை ஒரு அத்தியாவசிய காரணியாக நாங்கள் கருதுகிறோம். தற்போது, பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவு நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது. நீண்ட காலமாக டொலரின்பெறுமதியை சுமார் 300 ரூபா அளவில் வைத்திருத்தல், அந்நியச் செலாவணி இருப்புக்களை முறையாக அதிகரித்தல், திறைசேரியின் வருமானத்தை நாம் எதிர்பார்த்த இலக்குகளுக்குக் கொண்டு செல்வது, வங்கி வட்டி விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்திருப்பது போன்ற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கான காரணிகளை கணிசமான அளவில் நிறைவுசெய்ய முடிந்துள்ளது. மேலும், நமது நாடு குறித்து முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை படிப்படியாக வளர்க்க முடிந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். பல புதிய திட்டங்களுக்கான ஏராளமான முன்மொழிவுகளும் கிடைத்துள்ளன. அதன் பல முக்கியமான முன்மொழிவுகள் கடந்த அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய முதலீடுகள் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் செயல்படுத்தும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக ஒருபுறம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியையும் அடைய முடியும். ஆனால், அந்தப் பொருளாதாரப் பலன்கள் கீழ்நிலைக் கிராமிய மக்களுக்கு செல்லவில்லை என்றால், புள்ளி விபரத்தில் மாத்திரம் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதில் பயனில்லை. எனவே ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியும் மறுபுறம் பொருளாதார விரிவாக்கமும் அடைய வேண்டும். கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படாவிட்டால், அவர்கள் பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இல்லாவிட்டால், சாதாரண மக்கள் பொருளாதாரத்தில் இருந்து வெளியேறும் குழுவாக மாறிவிடுவார்கள். எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதும், கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் மக்களை அந்தப் பொருளாதாரத்தில் பங்கேற்பவர்களாக மாற்றுவதும்தான் எங்களின் முக்கிய அணுகுமுறை என்பதைக் கூற வேண்டும். மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார மூலங்களை மிகவும் பயனுள்ளதாகவும், திறமையாகவும், இலாபகரமாகவும் மாற்றினால் மாத்திரமே அதனை அடைய முடியும். எனவே, கிராமிய மக்கள் தற்போது ஈடுபட்டுள்ள துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்து, இலாபகரமான தொழிலாக அதனை மாற்ற வேண்டும். மேலும், அவர்களின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அதன்படி, கிராமிய மக்களுக்கு புதிய பொருளாதார மூலங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் வலுவான பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்ற முடியும். வறுமை என்பது பொருளாதார மட்டத்தைத் தாண்டிச் செல்லும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. ஏழை மக்கள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறிவிட்டனர். எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் முக்கிய பணியாகக் கருதப்படுகிறது. இந்த விடயத்தில், கல்வி மிகவும் முக்கியமான துறையாகும். வறுமைக் கோடும், கல்வி அறிவில்லாத கோடும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. எனவே கல்வி வாய்ப்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்தாலும், எந்தவொரு சமுதாயத்திலும், எந்தக் காலத்திலும் கஷ்டப்படும் மக்கள் சமூகம் உள்ளது. வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளில் கூட இத்தகைய சமூகங்கள் உள்ளன. அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள நிவாரணத் திட்டம் தேவை. நிவாரணம் என்பது ஒரு மோசமான கருவி அல்ல. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு சமூகம் பாதுகாக்கப்படாவிட்டால், அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும், இந்தப் பொறுப்பு கணிசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டது. நிவாரணத் திட்டம் குறிப்பிடத்தக்க அரசியல்மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதால், அது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இலக்குமயப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். யார் யாருக்கு? என்ற இலக்குடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு அத்தகைய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், மேலும் சமூகமும் அதில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் ஏதாவது வழங்கினால், அவர்கள் பெறும் அனைத்தையும் நாமும் பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் சமூகத்தில் உள்ளது. அது தவறு. நமது அரசு அத்தகைய கலாசாரம், சமூக பிணைப்பு கொண்ட அரசு அல்ல. பராமரிக்க வேண்டியவர்களை எப்போதும் கவனித்துக் கொள்வது நமது கலாசார பண்பு ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட திரிவுபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இன்று உதவி பெறத் தகுதியானவர்களுக்கு நாம் உதவி வழங்க முயற்சிக்கும்போது, அதைத் தாங்களும் பெற வேண்டும் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். எனவே, ஒரு புதிய கலாசாரம் தேவை. அரசாங்கம் வழங்கும் உதவிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரமே கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் தானாக உணர வேண்டும். தனக்கு திறன் இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரருக்கு அதே திறன் இல்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்று உணர வேண்டும். ஆனால், இன்று நமது நாட்டின் கலாசாரம் என்ன? ஏதாவது கொடுக்கப்பட்டால், அதைப் பெறுவதற்கு ஒரு போராட்டம் உள்ளது. அது தனக்கு பொருத்தமானதா? இல்லையா? அவசியமா? இல்லையா? தனக்கு அதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்று சிந்திக்காமல். எனவே, மிகவும் வலுவான தரவுக் கட்டமைப்பை உருவாக்க எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் அனைவரும் அறிந்தபடி, நாம் எப்போதும் கதைக்கும் இந்த நிவாரணத் திட்டத்தை எப்போதும் நம்பியிருக்க முடியாது. எப்போதும் நிவாரணத் திட்டத்திற்கான தேவை உள்ளது. அதனால்தான் எப்போதும் நிவாரணத் திட்டம் உள்ளது. ஆனால் அது ஒரு நபருக்காகவோ, ஒரு சமூகத்திற்காகவோ மாத்திரம் அல்ல. ஏனையவர்களும் பொருளாதாரத்தின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும். இதற்காக குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கம் பணம் செலவிடப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு மட்டும் சுமார் 230 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிவாரணத் திட்டங்களுக்கு அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை உதவிகள் சென்றடையவேண்டிய சமூகத்திற்கு நாம் கொடுத்திருக்கிறோமா? அந்த பணத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நன்மைகள் பெறப்பட்டதா? இல்லை, அந்த நன்மை கிடைக்கவில்லை. பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த நாட்டில் நிவாரணத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவற்றைப் நோக்கும்போது, அவற்றில் 50% க்கும் அதிகமான தொகை உதவி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பதற்கு செலவிடப்படுகின்றன. ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டதும் அதில் ஒரு பகுதி தனக்குப் பெறுவதற்கு அதிகாரி ஒருவர் காத்திருப்பார். அவருக்கு ஒரு தொழில் இருக்கும். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு கொடுப்பனவு தேவை என்று அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிவாரணத் திட்டத்தில் ஒரு பெரிய தொகை உதவி, பெற வேண்டிய நபர்களுக்கு அன்றி உதவி வழங்குவதற்கான பொறிமுறைக்கு செலவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அது தொடர்பான பயிற்சிக்காக அதிக அளவு பணம் செலவிடப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். உதவி சென்றடையவேண்டிய சமூகத்திற்கு உதவி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் அரச அதிகாரிகளுக்கும் உள்ளது. இதனை தவறாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். தகுதியானவர்களுக்கு உதவி வழங்குவதற்கான முன்னெடுப்பொன்றை தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு அமைச்சும் ஏதாவதொன்றை வழங்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு காணப்படுகிறது. இருப்பினும், மிகவும் துல்லியமான தரவுக் கட்டமைப்பின் அடிப்படையில் என்ன வழங்கப்பட வேண்டும்? எந்த நோக்கத்தில் வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இருப்பினும், தற்போது அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனமும் திணைக்களமும் உதவி வழங்க விரும்புகின்றன. இருப்பினும், கிராமப்புற மக்களுக்குச் செல்லும் உதவிகளும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உயிர்வாழ்வதற்காக மட்டுமே எங்கள் உதவியில் அதிக பகுதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு கூட்டு முன்னெடுப்பு தேவை. அந்த முன்னெடுப்பிற்காக நாங்கள் சமூக சக்தி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது ஒரு இலக்காகக் கொண்ட திட்டமாகும். இந்தத் திட்டம் பிரதேச செயலக மட்டம் வரை தயாரிக்கப்பட வேண்டும். தற்போது, நிர்வாகக் கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் ஒரு குழந்தை இனி பிறக்கும் என்று நான் நினைக்கவில்லை. உரிய வயதை அடையும் போது, அவர் அடையாள அட்டையை பெறுவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் பொறிமுறை செயல்படுத்தப்படும். அப்படியானால், பொறிமுறையில் கீழ் மட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? அதன் தன்மையைக் கண்டறிந்து, அந்த அலகை அந்த இயல்புடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குவதே கீழ் மட்டத்திலுள்ள நிர்வாக அலகின் பொறுப்பாகும்.பிரதேச செயலக அலுவலகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த இடத்திற்காக பணத்தைச் செலவிட வேண்டிய அவசியம் உள்ளது.அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நமது அரச இயந்திரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ள ஒரு அரச இயந்திரம் என்பதையும் நான் ஏற்கிறேன். அரச அதிகாரிகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களையும் எடுத்துக் கொண்டால், அவை 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. வீதியில் உள்ள பஸ்களில் 50% க்கும் அதிகமானவை வீதியில் பயணிக்கத் தகுதியற்றவை. அலுவலகத்தில் உள்ள கணினிகள் கணிசமானவை பழமையானவையாகும். எங்கள் நிறுவனங்களில் உள்ள முறைமைகள் புதுப்பிக்கப்படவில்லை. கட்டிடங்கள் சிதைந்து வருகின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்த்தால், எங்களிடம் ஒரு அரசு இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஒரு சாதாரண கிராமவாசியைப் போல, எங்கள் பையில் கொஞ்சம் வெற்றிலையுடனும் பாக்குடனும் அலுவலகத்திற்கு வருகிறோம். அதுதான் உண்மை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மனித வளங்களுக்கு தேவையான ஆதரவு வழங்கப்பட்டது. எனவே, அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அரச இயந்திரத்தின் பௌதீக வளங்களை கட்டியமைக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்.பெளதீக வளங்களை உருவாக்குவதை விட புதிய மென்பொருள் அமைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச கட்டமைப்பை நவீனமயமாக்குவோம். இருப்பினும், பிரஜைகளுக்காக நாங்கள் அதைச் செய்வோம். அவ்வாறு நவீனமயமாக்கப்பட்ட அரசாங்கத்தில், பழைய நாற்காலியில் அதே பழைய நபர்அமர்ந்தால், அதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்த நவீனமயமாக்கப்பட்ட அரச இயந்திரத்தில் நமக்கு ஒரு புதிய அரச ஊழியர் அமர வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை நாம் வெற்றி கொள்ள முடியும். இல்லையெனில், இது ஒரு அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு கிராம உத்தியோகஸ்தரின் பணி, அபிவிருத்தி அதிகாரியின் பணி, பிரதேச செயலாளர் பணி என நாம் ஆங்காங்கே பிரித்து இதனைச் செய்ய முடியாது. அரசியல் அதிகாரத்தையும் அரச இயந்திரத்தையும் கைவிடாத ஒரு கூட்டு நடவடிக்கை தேவை. அரச இயந்திரம், அரச அதிகாரி மற்றும் குடிமகனை ஒரு கூட்டு பொறிமுறைக்குள் கொண்டுவருவதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும். அவ்வாறின்றி எதையும் வெற்றிகொள்ள முடியாது. இருக்கும் ஒரு அரசை பராமரிக்க எமக்குத் தேவையில்லை. அவ்வாறு செய்வதானால் இருக்கும் அரசை தற்பொழுது இருப்பது போன்றே பராமரிக்கலாம். வீழ்ச்சியடைந்த ஒரு அரசை கட்டியெழுப்ப , அரசியல் அதிகாரம், அரச இயந்திரம் மற்றும் குடிமகனை ஒரு ஒன்றிணைந்த நடவடிக்கைக்குள் கொண்டு வர வேண்டும். எனவே, வீழ்ச்சியடைந்த அரசில் பொருளாதாரத்தை இழந்த ஒரு சமூகம் உள்ளது. பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க அந்த சமூகத்திற்கு ஒரு கூட்டு நடவடிக்கை அவசியப்படுகிறது. இந்த சமூக சக்தி திட்டத்தை வெற்றிபெறச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கோருகிறேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார். சமூக சக்தி தேசிய கொள்கைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், தேசிய நடவடிக்கைக் குழுவின் தலைவரும் , கிராமிய அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்ததாவது, நமது நாட்டில் வறுமை பற்றிப் பேசுகையில், கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளைப் நோக்கினால், கிராமத்தை மறந்துவிடாமல் வறுமையைப் பற்றி ஆராய முடியாது. அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 6 ஆம் திகதியை உலக கிராமப்புற அபிவிருத்தித் தினமாக அறிவித்துள்ளது. நம் நாட்டில் கிராமப்புற வறுமை பற்றி பல தசாப்தங்களாக பேசப்பட்டு வருவதோடு அதை மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2000 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நம் நாட்டில் நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில், அது 1.5 மில்லியனாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், நிவாரணத்தை நம்பியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 1.8 மில்லியனை எட்டியது. வறுமையை ஒழிக்க எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகை வேகமாக நகரமயமாகி வந்தாலும், நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 79% ஆனோர் கிராமப்புறங்களில் அல்லது தோட்டங்களை அண்டியதாக வாழ்கின்றனர். எனவே, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாக, எங்கள் கொள்கைகளைத் திட்டமிடும்போது கிராமப்புற வறுமையை ஒழிப்பதை ஒரு முக்கிய எண்ணக்கருவாகக் கொண்டோம். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நம் நாட்டில் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் பலவீனங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். அந்த பலவீனங்களை ஒதுக்கி நம் நாட்டில் வறுமையை உண்மையிலேயே எவ்வாறு ஒழிப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பல நோக்கங்களை அடைய நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க உள்ள அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மாகாண ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள்,அரச அதிகாரிகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/219210
1 month ago
நகை கிடைத்ததா? பதிவு தலையைச் சுற்றுது.😇
1 month ago
Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 01:46 PM காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த இடத்தை விட்டு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால் ஒரு காவலர் இயந்திர துப்பாக்கியால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர் ஒருவர் நிலத்தில் விழுந்தார் அசையாமல் தரையில் விழுந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் 'அடடா நீங்கள் ஒன்றைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். பின்னர் அவர்கள் அதைப் பற்றி சிரித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். தனக்கு தகவல் வழங்கிய நபர் காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் நான்கு இடங்களில் பணியாற்றியவர். மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது, கட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களிற்கு அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவிலலை என பிபிசிக்கு தெரிவித்துள்ள அந்த நபர் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டால் முதலில் சுடுங்கள் பின்னர் கேள்வி கேளுங்கள் என குழுத்தலைவர் ஒருவர் தனது குழுவிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் காசாவில் பணிபுரிகின்றோம், இங்கு விதிமுறைகள் இல்லை, நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போன்ற தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றாலோ, ஆபத்தான நோக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம், எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தோம், நாங்கள் தவறிழைத்துள்ளோம், அலட்சியமாக இருந்துள்ளோம் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தளத்திலும் அந்தப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும் அங்கு யாரும் காயமடையவில்லை அல்லது சுடப்படவில்லை என மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் காசா மனிதாபிமான பவுண்டேசன் தெரிவிப்பது "முற்றிலும் நிர்வாணப் பொய்" என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குழுத் தலைவர்கள் "காசா மக்களை ஜொம்பிகூட்டங்கள்" என்று குறிப்பிட்டனர். இந்த மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினர்" என்று கூறினார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் பலமுறை கடுமையாக காயமடைந்ததாகத் தோன்றிய பல சந்தர்ப்பங்களை தான் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே தாக்குதலிற்குள்ளானார். ஸ்டன் கையெறி குண்டின் உலோகப் பகுதியால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். "இந்த உலோகத் துண்டு அவரது தலையில் நேரடியாகத் தாக்கியது அவர் அசையாமல் தரையில் விழுந்தார்" அவள் இறந்துவிட்டாளா? என்று எனக்குத் தெரியவில்லை. அவள் மயக்கமடைந்து முற்றிலும் முற்றிலும் எழ முடியாத நிலையில் காணப்பட்டாள் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219168
1 month ago
கேரளாவில் சிக்கியுள்ள போர் விமானத்தை மீட்க முடியாமல் பிரிட்டன் தடுமாறுகிறதா? என்ன நிலவரம்? படக்குறிப்பு, இந்த எஃப்-35பி போர் விமானம் ஜூன் 14ஆம் தேதி முதல் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த அதிநவீன போர் விமானம் ஒன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சிக்கிக் கொண்டிருக்கிறது. இது பேசுபொருளாவதுடன், ஒரு நாட்டின் நவீன விமானம் எப்படி வெளிநாட்டில் பல நாட்கள் சிக்கியிருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எஃப்-35பி விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூன் 14ஆம் தேதி தரையிறங்கியது. இந்திய பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலையில் சிக்கிக்கொண்ட விமானம், பிரிட்டன் ராயல் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலுக்கு திரும்ப முடியாத சூழலில் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அங்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது, ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியவில்லை. விமானம் தரையிறங்கிய பின்னர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் விமானம் தாங்கிக் கப்பலின் பொறியாளர்கள் குழு வந்து அதை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களால் இதுவரை விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்ய முடியவில்லை. "விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு பழுதுநீக்கல் வசதிக்கு விமானத்தை நகர்த்த முன்வைக்கப்பட்ட திட்டத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறப்புக் கருவிகளுடன் பிரிட்டன் பொறியாளர்கள் குழு வந்தவுடன் விமானம் ஹேங்கருக்கு (விமானத்தை நிறுத்தி வைக்கும் இடம்) கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மற்ற விமானங்களின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படும்," என பிரிட்டன் தூதரகம் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது. "பழுதுநீக்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் முடிவடைந்த பின்னர் விமானம் தனது வழக்கமான சேவைகளைத் தொடங்கும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு விமானக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் சனிக்கிழமை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். 110 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போர் விமானத்தை பிரிட்டனின் ராயல் விமானப் படையைs சேர்ந்த ஆறு அதிகாரிகள் 24 மணிநேரமும் பாதுகாத்து வருகின்றனர். மும்பையில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பாதுகாப்பு, உத்தி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சமீர் பாட்டீல், ராயல் கடற்படைக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். "அதில் ஒன்று, விமானத்தைப் பழுதுநீக்கி பறக்கச் செய்வது. இல்லையென்றால், சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் போன்ற அதைவிடப் பெரிய சரக்கு விமானத்தைப் பயன்படுத்தி அதைக் கொண்டு செல்லலாம்." போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் விவகாரம் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. விமானத்தைப் பாதுகாத்து, மீண்டும் அதன் பணிகளைத் தொடங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என திங்கள் கிழமையன்று எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பென் ஒபீஸ் ஜெக்டி அரசிடம் கேள்வி எழுப்பியதாக, யுகே டிஃபென்ஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. "விமானத்தை மீட்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன, அதற்கு இன்னமும் எத்தனை காலம் எடுக்கும் மற்றும் ஹேங்கரில் விமானம் இருக்கும்போதும் பார்வைக்குத் தெரியாமல் இருக்கும்போதும் விமானத்தின் ரகசிய தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு எப்படி உறுதி செய்யும்?" என அவர் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. விமானம் தொடர்ந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரிட்டனின் ஆயுதப் படைகள் அமைச்சர் லூக் பொலார்ட் உறுதி செய்தார். "எஃப் 35பி போர் விமானத்தால் கப்பலுக்குத் திரும்ப முடியாதபோது, முதல்தர ஆதரவளித்த நமது இந்திய நண்பர்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என அவர் தெரிவித்தார். அதோடு, "ராயல் விமானப்படையின் வீரர்கள் விமானத்துடன் எப்போதும் இருக்கிறார்கள் என்பதால் போர் விமானத்தின் பாதுகாப்பு சிறந்த கரங்களில் இருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,KERALA TOURISM படக்குறிப்பு, கேரளாவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் போலவே, போர் விமானத்திற்கும் அங்கிருந்து திரும்பச் செல்வது கடினமாக இருப்பதாக கேரளா மாநில சுற்றுலாத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது லாக்ஹீட் மார்டீனால் தயாரிக்கப்படும் எஃப் 35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (மறைந்து செயல்படும் ஆற்றல் கொண்ட) போர் விமானங்களாகும். இவற்றின் குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கத் தொடங்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகின்றன. எனவே, ஓடுதளத்தில் "எஃப் 35பி தனிமையில்" நிறுத்தி வைக்கப்பட்டு கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக ஊடகங்களில் மீம்களாக பரவி வருகின்றன. போர் விமானம் மிகவும் மலிவு விலையான 4 மில்லியன் டாலருக்கு இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக நகைச்சுவையாக ஒரு பதிவு வைரலானது. "ஆட்டோமேடிக் பார்க்கிங், புத்தம் புதிய டயர்கள், புதிய பேட்டரி மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோரை அழிக்க ஆட்டோமேடிக் துப்பாக்கி" போன்ற அம்சங்கள் இருப்பதாக அதில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் போதிய காலம் இருந்துவிட்டதால் அந்த போர் விமானத்திற்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மற்றொருவர் இந்தியா வாடகை வசூலிக்க வேண்டும் எனவும், கோஹினூர் வைரம் பொருத்தமான கட்டணமாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F-35B போர் விமானம் (சித்தரிப்புப் படம்) புதன்கிழமை கேரள அரசின் சுற்றுலா துறையும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வேடிக்கைப் பதிவுகளில் பங்கெடுத்தது. விமானத்தின் புகைப்படத்துடன், "கேரளா, நீங்கள் வெளியேறவே விரும்பாத இடம்" என சுற்றுலா துறை பதிவிட்டது. அந்தப் பதிவில் தென்னை மரங்களின் பின்னணியில் எஃப் 35பி போர் விமானம் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதன் இயற்கையான அழகுக்காக சுற்றுலா விளம்பரக் கையேடுகளில் "கடவுளின் தேசம்" என விவரிக்கப்படும் மாநிலத்திற்கு வரும் பெரும்பாலான பயணிகளைப் போலவே, இந்தப் போர் விமானமும் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை எனக் கூறும் வகையிலான வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், போர் விமானம் சிக்கிக் கொண்டிருக்கும் ஓவ்வொரு நாளும் , எஃப் 35பி மற்றும் ராயல் கடற்படையின் பிம்பத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் என்கிறார் பாட்டீல். "நகைச்சுவை துணுக்குகள், மீம்கள், வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் போன்றவை பிரிட்டன் ராயல் கடற்படையின் நற்பெயரைப் பாதிக்கின்றன. எவ்வளவு காலம் போர் விமானம் சிக்கிக்கொண்டு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தவறான தகவல்கள் பரவும்." முதலில் நினைத்ததைவிட தொழில்நுட்ப பிரச்னைகள் மேலும் மோசமானவையாகத் தெரிவதாக அவர் கூறுகிறார். ஆனால் பெரும்பாலான ராணுவங்கள் "மிகவும் மோசமான சூழ்நிலைகளுக்கு" தயார்படுத்திக் கொள்வதாகவும், போர் விமானம் வெளிநாட்டு மண்ணில் சிக்கிக்கொள்வது அத்தகைய ஒரு சூழ்நிலை எனவும் அவர் தெரிவித்தார். "இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரும்பாலான ராணுவங்கள் ஒரு நிலையான செயல்பாட்டுத் திட்டத்தை வைத்திருப்பார்கள். அப்படியிருக்க, ராயல் கடற்படையிடம் அப்படிப்பட்ட திட்டம் இல்லையா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார். அதோடு, இதைப் பற்றிய தோற்றம் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறும் அவர், "இதைப் போன்ற ஒரு சம்பவம் எதிரி மண்ணில் நடைபெற்றிருந்தால், அவர்கள் இத்தனை நேரம் எடுத்துக் கொள்வார்களா? ஒரு தொழில்முறை கடற்படைக்கு இது மிக மோசமான மக்கள் தொடர்பாக இருக்கிறது" என்றார். - திருவனந்தபுரத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து அளித்தவர் அஷரஃப் பத்தனா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vzv10zdzo
1 month ago
Published By: VISHNU 04 JUL, 2025 | 09:22 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219209
1 month ago
Published By: DIGITAL DESK 2 04 JUL, 2025 | 08:54 PM லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/219203
1 month ago
பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை. தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார். தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா? தமிழ்நாடு அரசியலும் கூட்டணி ஆட்சியும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1967 தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார். அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி பற்றி பிற கட்சிகள் என்ன சொல்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமித் ஷா சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார். அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார். பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK PAGE படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். "கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைப்பாடு மாறுமா? பட மூலாதாரம்,X/EZHIL CAROLINE படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா. அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார். ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார். ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார். கூட்டணி அரசால் நிலையான ஆட்சியைத் தர முடியாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார். இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்." "சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார். திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,X/SASI REKHA ADMK படக்குறிப்பு, அதிமுக ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா. "பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்." கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம். அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார். பட மூலாதாரம், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் படக்குறிப்பு, தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார். கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன். அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4ww6genzno
1 month ago
1 month ago
ஆண்களுக்கு, இப்படி ஒரு பொறாமையா.... 😂
1 month ago
என்ன இருந்தாலும்.... நல்ல கூறைச் சீலை வாங்கிறதெண்டதால், இந்தியாவுக்குத் தான் போகவேணும். அதுதான்... குமாரசாமி அண்ணை தன்னுடைய கொள்கையில் இருந்து U-Turn அடித்து, இந்தியாவை புகழ்ந்து தள்ளினவர் போலை இருக்கு. 😂 ஸ்ராலின் தான் வாறாரு... செம பகிடி 🤣. குதிரைக்கு கொம்பு முளைக்காததும் நல்லதுக்குத்தான். 😂
1 month ago
இன்று தான் நேரம் கிடைத்தது ஆறுதலாக வாசிக்க. உங்கள் எழுத்து நடை தனித்துவமானது. முதல் இரண்டு பந்திகளில் சொல்லப்பட்ட விடயங்களை தனித்து பார்க்கையிலும், மூன்றாம் பந்தியுடன் சேர்த்து பார்க்கையிலும் வெவ்வேறு வாசிப்பனுவங்களைத் தருகின்றது. மாதுளை பற்றிய விடயமும் அவ்வாறே. எல்லாவற்றையும் சேர்த்து வாசிக்கும் போது நல்லதொரு கதையை அனுபவத்தை வாசித்த உணர்வு வருகின்றது. --- எல்லாரும் ஒரு விதத்தில் பயந்தாங்கொள்ளிகள் தான். வாழ்க்கை முழுதும் ஏதோ ஒன்றிற்காக அஞ்சியபடியே தான் வாழ்கின்றோம். அறத்துக்கு, மற்றவர்களின் திட்டுக்கு, அரசுக்கு, அதன் சட்டங்களுக்கு, தெருவில் திடீரென அணையும் மின் விளக்குகளுக்கு, தனிமைக்கு, பெருங் கூட்டம் ஒன்றில் விடப்படுவதற்கு.. எல்லாவற்றையும் விட தவறு ஒன்று செய்து விட்டு, அதை மீட்டிப் பார்க்கும் போது மனசு கேட்கும் கேள்விகளுக்கு... என்று பயந்தபடிதான் வாழ்கின்றோம். மரணம் ஒன்று மட்டுமே பயமற்றது. எல்லா பயத்திலும் இருந்து விடுவிப்பது.
1 month ago
கு சா அண்ணைக்கு இந்தியன் ஹொலிடே விசாவில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன்🤣. திடீரென ஒரு நாள் ரஸ்யா உக்ரேனில் நடக்கும் விதமும், இந்தியா இலங்கை தமிழர் விடயத்தில் நடந்த விதமும் சரிதான் என எழுதினவர் 🤣. நல்லகாலம் தமிழ்நாடு அரசுக்கு இந்த பவர் இல்லை, இல்லாட்டில் இங்க கனபேர் “ஸ்டாலிந்தான் வாறாரு, விடியல் தரப்போறாரு” எண்டு எழுத வேண்டி வந்திருக்கும்😂.
1 month ago
1 month ago
சோளத்தில்... பலகோடி லஞ்சம் (25 மில்லியன்) மோசடியில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (04) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk
1 month ago
ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது. திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28-ந் திகதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது மரணத்திற்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய குரல் பதிவொன்று அனுப்பி இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சேவூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர். இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை பிணையில் விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsரிதன்யாவின் மரணம் - மாமியார் கைதுதிருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கு...
1 month ago
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள். இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'. தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு! அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன. சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன. இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை. Parandhu Po review | பறந்து போ விமர்சனம் சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை. அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை. பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன. இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம். கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு! காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்! தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது. இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு! நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'. Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?
1 month ago
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை. ‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது. லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார். முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது. ’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை? அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம். மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம். 3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in
1 month ago
■2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம், ■நகை, கார் என்று 3 கோடி ரூபாய் வரதட்சணை., ■5 கோடி ரூபாயை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் fixed deposit செய்தாலே 7% க்கு வட்டி கிடைத்து இருக்கும் அதாவது குறைந்தது மாதம் 3 லட்சம் ரூபாய் வருவாய்., ■இதை வைத்து அந்த பெண் 7 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட முடியும்., ■ஆக இந்த திருமணத்திலும் பெண் நல்லா வாழனும் என்பதை விட பெற்றோரின் கௌரவம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.! ■பெற்றோரின் கௌரவத்துக்கு பணத்தாசை பிடித்த மிருகங்களிடம் சிக்கி பலியான பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உண்மை உரைகல்
1 month ago
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, கிரிமினல் மூளை வேலை செய்யும். 😂 @satan @குமாரசாமி, @விசுகு ஆகியோர் என்ன மாதிரியான பிளான் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில வேளை அவர்கள் நசுக்கிடாமல் போய் கொத்துரொட்டி சாப்பிட்டு வாற ஆட்களாகவும் இருக்கலாம். 🤣
Checked
Sat, 08/09/2025 - 00:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed