மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா?
ராஜன் குறை
மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்று ஆட்சி செய்வார். மக்களாட்சியில் கட்சித் தலைவர் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரே கட்சியை அல்லது ஒரு கூட்டணியைச் சார்ந்தவர்கள் யாரை பிரதம அமைச்சராக, முதல் அமைச்சராகத் தேர்வு செய்கிறார்களோ அவர்தான் ஆட்சிக்குத் தலைமை தாங்குவார்.
அந்தக் கட்சிக்காரர்களே எப்போது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர் பதவி இழந்து விடுவார். மராத்திய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அப்படித்தான் பதவி இழந்தார். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே பாஜக தூண்டுதலில் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
அப்படி நிகழாவிட்டால்கூட ஐந்தாண்டுக் காலம்தான் ஒருவர் ஆட்சியில் தொடர முடியும். பின்னர் மீண்டும் தேர்தல். அதில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்தால்தான் தொடர முடியும். அப்படி கட்சியினருடைய, மக்களுடைய ஆதரவை தொடர்ந்து பெறுவது யாருக்குமே பெரிய சவால்தான். ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
மன்னர் போல ஆட்சிக்கு வர விரும்பும் தனி நபரே விஜய்
விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகர். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்காக, குணசித்திர நடிப்பிற்காக புகழ் பெற்றவர் இல்லை. நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை செய்கிறார், முத்தாய்ப்பான வசனங்களை ஸ்டைலாக உச்சரிக்கிறார் ஆகிய அம்சங்களே அவரை மக்கள் திரளை கவரும் கதாநாயகன் ஆக்கின. வணிக அம்சங்களை நம்பிய வாழ்க்கை. அருவாளை எடுத்து வெறித்தனமாக வெட்ட வேண்டும். வடு மாங்கா ஊறுதுங்கோ என்று ஆட வேண்டும்.
இவ்வாறு திரைப்பட நடிகராக அவருக்குள்ள பிம்பத்தை வைத்து ஒரு தனி நபராகத்தான் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஒரு கட்சி தொடங்கியுள்ளார். ஆனால், அந்தக் கட்சியில் பல்வேறு அணிகளுக்கோ, மாவட்ட அளவிலோ வேறு யாரும் குறிப்பிடப்படத்தக்க தலைவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிப் பணிகளை நிர்வகிக்க ஒரு மேலாளரை நியமித்துள்ளார். அவர் பெயர் புஸ்ஸி ஆனந்த். மற்றபடி அவர் கட்சியில் வேறு நிர்வாகிகளோ, அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களோ கிடையாது.
விஜய்தான் கட்சி என்பதை அவர் கட்சியின் முதல் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அதில் அவர் மட்டும்தான் பேசினார். ஒரு பேச்சுக்குக் கூட வேறு பேச்சாளர்கள் கிடையாது. அவரும் கட்சி நிர்வாகிகள் பெயர்களைச் சொல்லி விளித்து பேச்சைத் தொடங்குவது தேவையற்ற சடங்கு என்று ஏளனமாகச் சொல்லி விட்டார். அவர்தான் கட்சி, அவர் ஆட்சிக்கு வருவதுதான் கட்சியின் ஒரே நோக்கம். மக்களாட்சி என்றால் என்னவென்று புரியாதவர்கள் இப்படி தனி நபர் தலைமைதான் கட்சி என்று பாமரத்தனமாக நினைத்துக் கொள்வார்கள்.
ரசிகர் மன்றங்கள் கட்சி அமைப்புகள் ஆகுமா?
மக்களாட்சி அரசியல் என்பதன் அடிப்படை வெவ்வேறு மக்கள் தொகுதிகளின் கோரிக்கைகள்தான். விவசாயிகளுக்குக் கோரிக்கைகள் இருக்கும், மீனவர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், ஆசிரியர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், வர்த்தகர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும். இவர்கள் கோரிக்கைகளுக்காக அமைப்புகள் தோன்றும். ஒரு வெகுஜன கட்சி என்பது ஒரு சில பொது முழக்கங்களுக்குள் இவர்கள் கோரிக்கைகளை ஒன்று திரட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றி பெறும். அது தவிர அந்தந்த தொகுதிகளுக்கான தனி கட்சிகளும், அமைப்புகளும் இருக்கும். அவர்கள் ஆதரவையும் பெற வேண்டும்.
பல விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளின் தொகுப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் கோரிக்கைகளுக்காக கட்சிகள் உள்ளன. வன்னியர் சங்கம் என்ற பெயரில் இயங்கிய அமைப்புதான் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. இது வன்னியர்கள் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உருவானது. கலைஞர் அவர்களையும் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% உள் ஒதுக்கீட்டை உருவாக்கினார். இப்போது அதற்குள்ளும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இப்படியாக மக்கள் தொகுதிகள் கோரிக்கை அடிப்படையில்தான் கட்சிகளாகவோ, கட்சி அணிகளாகவோ மாறும். அவைதான் மக்களாட்சி அரசியல் வேர்கள். கட்சிகளின் சமூகத்தளம்.
ரசிகர் மன்றங்களுக்கு என்று அரசியல் கோரிக்கைகள் எதுவும் இருக்க முடியாது. படம் வெளியிடுவதற்கு முன்னால் தனி ரசிகர் மன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை இருக்கலாம். ஆனால், இது முக்கியமான அரசியல் கோரிக்கை என்று யாரும் கூற மாட்டார்கள். அதற்காக வாக்களிக்கவும் மாட்டார்கள்.
மற்றபடி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மக்கள் தொகுதிகளின் அங்கமாகத்தான் இருப்பார்கள். ஒருவர் வர்த்தகராக இருப்பார். போக்குவரத்து ஊழியராக இருப்பார். ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். அவர்களுடைய அரசியல் கோரிக்கைகள் தனித்தனியானவை. ரசிகர் மன்றம் என்பது கேளிக்கைக்கான, மன உற்சாகத்திற்கான ஓர் அமைப்பு.
உதாரணமாக “ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம்” என்ற அமைப்பை நான் ஓர் ஊரில் பார்த்திருக்கிறேன். அதன் உறுப்பினர்களாக பல்வேறு பணிகளில், தொழில்களில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழிபாட்டு நேரத்தில் அங்கே கூடுவார்கள். சிவப்பு ஆடை அணிந்திருப்பார்கள். அவர்களை உடனே ஓர் அரசியல் தொகுதியாக மாற்ற முடியாது. அவரவர் தொழில்கள் சார்ந்தோ, சமூக பின்னணி சார்ந்தோதான் அவர்கள் அரசியலில் அணி திரள்வார்கள்.
திரை பிம்பத் தலைமைக்கு சமூக அடித்தளம் உண்டா?
திரைப்பட நடிகர்கள் எந்த ஊருக்குப் போனாலும் பெரும் கூட்டம் கூடும். அவர்களைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்வதால் அந்த நடிகர்கள் கூறுபவர்களுக்கு உடனே வாக்களித்துவிட மாட்டார்கள். உதாரணமாக அறுபதுகளின் பிற்பகுதி, எழுபதுகளில் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்தவர்கள், பங்கேற்றவர்கள் பலரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் ஊரில் எம்.ஜி.ஆரை பார்க்க எவ்வளவு கூட்டம் வருமோ, அதே அளவு சிவாஜியை பார்க்கவும் வரும் என்று கூறினார்கள். ஆனால், வாக்குகள் எம்.ஜி.ஆர் கட்சியான தி.மு.க-விற்கு அல்லது அ.இ.அ.தி.மு.க-விற்குத்தான் விழும். சிவாஜி ஆதரிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழாது. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையான போட்டியைத் தந்த சிவாஜியால், அரசியலில் அப்படித் தர முடியவில்லை. காரணம் என்ன?
எம்.ஜி.ஆருக்கான சமூக அடித்தளத்தை தி.மு.க உருவாக்கித் தந்தது. அந்தக் கட்சியினர் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் அறிந்து, அனைத்திற்கும் தீர்வாக முற்போக்கான, மக்கள்நல சோஷலிஸ கொள்கைகளைக் கொண்ட ஆட்சியை அமைக்க உறுதியளித்தார்கள். ‘காங்கிரஸ் தனவந்தர்களின், மேட்டுக்குடியினர் கட்சி, நாங்கள் சாமானியர்கள் கட்சி’ என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு ஏற்றாற்போல எம்.ஜி.ஆர் ஏழைகளை, எளியோரைக் காப்பவராக சினிமாவில் நடித்தார். அதனால் அந்த கட்சியினரின் அணி திரட்டலும், அவர் திரை பிம்பமும் இணைந்து போனது. அவர் தி.மு.க-விலிருந்து பிரிந்தபோதும் பல தலைவர்களை அவரால் தன்னுடன் கூட்டிச் செல்ல முடிந்தது. அவரை கடுமையாக எதிர்த்த நாவலர் நெடுஞ்செழியனே அவர் கட்சியில் இணைந்தார்.
தத்துவ மேதை, பகுத்தறிவுப் பகலவன் பெரியார் ஐம்பதாண்டுக் காலம் அவர் கால்படாத கிராமமே இல்லையென்ற அளவு தமிழ்நாட்டில் பயணம் செய்து மக்களிடையே தன்னுணர்வை மலரச் செய்தார். அரசியல் தத்துவ மேதை அண்ணா திராவிடவிய சிந்தனையை அரசியல் கோட்பாடாக பயிற்றுவித்தார். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல படைப்பாளுமை மிக்க இளைஞர்கள் ஓயாமல் உழைத்து கட்சியின் சமூக அடித்தளத்தை வடிவமைத்தார்கள். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டு அதன் நிழலில் தனக்கென ஒரு சமூக தளத்தை உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் போல வேறு எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் தி.மு.க என்ற பெருமரத்தின் நிழலில் வளர்ந்தார் என்பதுதான்.
கட்சியைத் தேடும் பிம்பத் தலைமை விஜய்
விஜய்க்கு தன்னிடம் சமூக அடித்தளம் கொண்ட கட்சி இல்லை என்பது புரிகிறது. ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்றால் சமூக அடித்தளம் கொண்ட கட்சிகளை ஆட்சியில் பங்கு தருவதாகச் சொல்லி இணைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார். ஒரு சொலவடை சொல்வார்கள்: “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன்; இருவரும் ஊதி, ஊதி தின்னலாம்” என்று ஒருவர் சாதுரியமாக சொன்னதாக. விஜய் அப்படித்தான் அரசியல் கட்சிகளைக் குறிவைக்கிறார்.
முதலில் அ.இ.அ.தி.மு.க; அரை நூற்றாண்டு கடந்த கட்சி. கிட்டத்தட்ட முப்பதாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் மிக வலுவான சமூக அடித்தளம் அதனிடம் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஒரு கருத்தொருமிப்பு கொண்ட தலைமை உருவாக பாஜக விடவில்லை. அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து, பலவீனப்படுத்தி அதன் சமூகத்தளத்தில் தான் கால் பதித்துவிடலாம் என்று நினைத்தது பாஜக. ஆனால், பாதிக்கிணறுதான் தாண்ட முடிந்தது. அ.இ.அ.தி.மு.க-வை உடைத்து விட்டது. பலவீனப்படுத்திவிட்டது. ஆனால், அதனால் அந்த இடத்தில் காலூன்ற இயலவில்லை. திராவிடவிய அரசியல் தடுக்கிறது. அதற்குச் சான்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்.
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், அவரிடம் மக்களை வசீகரிக்கும் அளவு பேச்சாற்றலோ, ஆளுமைத் திறமோ இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலா முடக்கப்பட்டுவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு சில பகுதிகளில்தான் செல்வாக்குடன் உள்ளனர். இவர்கள் யாருமே பாஜக-வை எதிர்த்து திராவிடவிய அரசியல் செய்வதில் தி.மு.க-வை முந்திச் செல்ல முடியாத அளவு ஒன்றிய அரசின் அழுத்தங்கள் உள்ளன.
இந்த நிலையில் தன்னுடைய கவர்ச்சிகரமான முகத்தை ஏற்றுக்கொண்டு இவர்கள் எல்லாம் அல்லது ஒரு சிலராவது, தங்கள் கட்சிகளின் சமூக அடித்தளத்தைக் கொண்டுவந்தால், வெறும் பிம்பமாக இருக்கும் தனக்கு ஓர் அரசியல் உடல் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் விஜய். எப்படியாவது தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜக-வின் அகில இந்திய செயல்திட்டத்திற்கு அவசியம் என்பதால் பாஜக இத்தகைய இணைவிற்கு ஒத்துழைக்கலாம் என்று நினைக்கிறார்.
அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று, கிராமம் கிராமமாக சென்று பேசி, எந்த ஊடகத்திலும் வராத எண்ணற்ற போராட்டங்களை களத்தில் நடத்தி, அகில இந்திய அளவில் முக்கியமான தலித் அரசியல் தலைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள திருமாவளவனை விஜய் குறிவைப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாக உள்ளது. இதுதான் “நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற சூதிற்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது.
விஜய் அவருடைய கட்சி மாநாட்டில் பேசியதானாலும், விகடன்-ஆதவ் அர்ஜுன் உருவாக்கிய அரக்கு மாளிகை மேடையில் பேசியதானாலும், அவருக்கென்று எந்த சொந்த அரசியல் கொள்கையும், கோட்பாடும், குறிக்கோளும் இல்லை என்பதையே தெளிவுபடுத்தியது. ஏன் அரசியல் புரிதலே அறவே இல்லை என்பதை வரி, வரியாகச் சுட்டி விளக்கலாம்.
விஜய் பிரபல நட்சத்திரம் என்பதால் மக்கள் பேராதரவில் மிதப்பதாக நினைக்கிறார். அதனால் ஆட்சிக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறார். ஊடகங்களுக்கு அரசியலை சுவாரஸ்யமாக்க இது நல்ல கதையாடல் என்பதால் அவருக்கு நிறைய வெளிச்சம் போடுவார்கள்.
ஆனால், அவர் கற்பனை செய்யும் அந்த மக்கள் ஆதரவைத் திரட்டி உதவ அவருக்கு சமூக அடித்தளம் கொண்ட கட்சி வேண்டும். அதற்கு யார் தங்கள் கட்சி சமூக அடித்தளத்தை கொடுத்து உதவினாலும் அவர்களை கூட்டணி அரசில் சேர்த்துக் கொள்வார்.
பாண்டவர்கள் தங்குவதற்காக மிக அழகான ஓர் அரக்கு மாளிகையை கெளரவர்கள் உருவாக்கினார்கள். அதில் அவர்கள் தங்கி உறங்கும்போது அதை கொளுத்தி விடலாம் என்று திட்டம். இன்று பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பெயரைக் கொண்டவரே அரக்கு மாளிகை கட்டுகிறார். திருமாவளவன் அதற்குச் செல்லவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
இன்றைய தேதியில் வங்கியில் பணம் இல்லாமல் ஒருவர் பத்து கோடிக்கு ரூபாய்க்கு பதினான்கு மாதம் கழித்த ஒரு தேதியிட்டு காசோலை வழங்கலாம். அதை நம்பி, உற்பத்திக்கான மூலப் பொருட்களை நாம் கொடுத்தால், அவர் வெற்றிகரமாக பண்டத்தை உற்பத்தி செய்து லாபம் ஈட்டினால்தான் அந்தக் காசோலைக்கு மதிப்பு. அதற்கு அடிப்படையில் அவருக்கு தொழில் தெரிந்திருக்க வேண்டும். அனுபவமற்றவர்களின் வாய்ச்சவடாலை நம்பினால் பேரிழப்புதான் மிஞ்சும்.
விஜய்யின் அரசியல் ஈடுபாடு எத்தகையது என்று தெரிந்துகொள்ள சமீபத்திய நிகழ்வு ஒன்றே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புதிய கட்சி துவங்குகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாநாட்டுக்குத் திரட்டிக் காட்டுகிறார். சில மாதங்கள் கழித்து வரலாறு காணாத புயல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர் உடனே அவர் கட்சி அணியினருக்கு ஒரு குரல் கொடுத்து, தானே தலைமையேற்றுச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டாமா? விஜய் கட்சியினர் மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நிறுவ வேண்டாமா? விஜய் அவ்வாறு செய்வதை போட்டோ ஆப்பர்சூயினிட்டி, சடங்கு, சம்பிரதாயம் என்று நினைக்கிறார்.
களத்துக்குச் செல்லாமல், மக்களை தன்னிடத்திற்குக் கூட்டி வந்து நிவாரணப் பொருட்களை வழங்குகிறார். இதுதான் அபத்தமான சடங்காக அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறது. அவரை மையப்படுத்தி சிந்திக்கிறாரே தவிர, கட்சி அணியினரைக் குறித்து அவர் சிந்திப்பதேயில்லை.
அவருக்கு அரசியல் தெரிந்தால்தானே, அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும்? மக்களுக்கு பேரிடரில் உதவி செய்வது சம்பிரதாயமா? அதுதானே ஐயா, அரசியல்? ஆனால், விஜய் ஆட்சி அமைப்பதுதான் அரசியல் என்று கூச்சமின்றி முழங்குகிறார்.
தன்னுடைய தனிநபர் திரை பிம்பத்தை வைத்து வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் அமரலாம் என்று நினைப்பதுதான் மன்னராட்சியின் சாராம்சம். அதற்குப் பதில் கட்சியில் ஒரு பொறுப்பினை ஏற்று, கட்சி அணியினருடன் பணி செய்து, உட்கட்சி பூசலுடன் மல்லுகட்டி, மக்களிடையே சென்று பேசி, உதவி செய்து, தினசரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அரசியல் செய்பவர் யாரானாலும் அவர்களே மக்களாட்சியின் மாண்பை அறிந்தவர்கள்.
ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு “கொள்கை வாரிசு தலைவர்கள்” உள்ளபடியே அனுதாபத்திற்கு உரியவர்கள். வசதியான பின்புலம் கொண்ட அவர்கள், தெரிந்த தொழிலை செய்துகொண்டு, அமைதியாக உல்லாசமாக வாழாமல், ஏன் அரசியலில் ஈடுபட்டு, நடையாய் நடந்து, நாவரளப் பேசி பாடுபடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும்.
அவர்கள் அப்படி பாடுபட்டு ஆட்சிக்கு வருவது சுயநலம் என்றால், திரை பிம்பங்கள் திடீர் தலைவராகி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தியாக தீபங்களா என்ன?
எனக்கு ஓரளவு கட்சி அமைப்பு என்றால் என்ன, கட்சி அணிகளைச் சந்திப்பது என்றால் என்ன என்று களப்பணி மூலம் தெரியும். அதனால்தான் உண்மையில் சமூக அடித்தளம் கொண்ட கட்சி அரசியல் செய்பவர்கள் யார் மீதும் எனக்குப் பரிவு உண்டு. அவர்களை வாரிசு தலைவர்கள் என்று விமர்சிப்பவர்கள், வெறும் திரை பிம்பத்தைத் தூக்கிக்கொண்டு நானும் அரசியல்வாதி என்று வருபவர்களை ரசிக்கும் விநோதம்தான் ஊடகங்கள் உருவாக்கும் மெய்நிகர் உலகம்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
https://minnambalam.com/political-news/actor-vijay-who-dreams-of-monarchy-does-he-understand-democracy-special-article-in-tamil-by-rajan-kurai/