தமிழகச் செய்திகள்

விசிக - தவெக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?

2 weeks 1 day ago
தவெக - விசிக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது.

அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது.

திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, விஜயுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும் திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது.

 

இந்ததச் சூழலில் இன்று (டிசம்பர் 6) இதற்கான விளக்கம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்ட திருமாவளவன், இந்தப் புத்தக வெளியீட்டு விழா சார்பாக உருவான விவாதங்கள் அனைத்தும் ஒருதலைபட்சமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விழா தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அதோடு, ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியது என்ன? திருமாவளவன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து த.வெ.க தரப்பு கூறுவது என்ன? தமிழக அரசியலில் இந்த நிகழ்வு எவ்வாறாகப் பார்க்கப்படுகிறது?

எதனால் இந்த சர்ச்சை?

கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறாக இருந்தாலும் இருவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பது பல சமயங்களில் மக்கள் பார்த்த ஒன்றாகவே இருக்கிறது.

தவெக - விசிக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL

ஆனால் திருமாவளவன் விஜயுடன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது, விஜயின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு பெரும் சர்ச்சையாக மாறியது. அக்டோபர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் அரசியல் எதிரி திமுக என்று கூறினார்.

"பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.கவின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி," என்றார் விஜய்.

பிறகு, கூட்டணி குறித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருப்பினும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும், அதிகாரப் பகிர்வும் கொடுக்கப்படும்" என்று கூறினார்.

ஆனால், இந்த மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்றும், 'அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல" என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில் விஜய் தன்னுடைய மாநாட்டில் பேசியது, விசிக உடனான கூட்டணிக்கான அழைப்பாகக் கருத்தப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன், தாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக நீடிப்பதாகவும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்றும் கூறினார்.

 
அதிருப்தி தெரிவித்த திருமாவளவன்
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X

படக்குறிப்பு, விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்றே இந்த புத்தக வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, திருமாவளவன் அதைப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

விஜயின் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்படுவதற்கு முன்பாகவே இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் திருமாவளவன் என்பது அவரது அறிக்கையின் மூலம் உறுதியாகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் "விஜய் விழாவில் பங்கேற்க இசைவளித்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று மேற்கோள் காட்டிய திருமாவளவன், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராத சூழலில் ஒரு தமிழ் நாளிதழ் இதைப் பெரிய செய்தியாக வெளியிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், "ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதை அரசியலாக்கியது," என்றும் தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

"திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் ஐயத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் இதன் உள்நோக்கமாக இருக்க முடியும்," என்று பெயர் ஏதும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர்.

இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் உறுதியானதும், பலர் பல்வேறு ஊகங்களை பரப்பி வருவதாகக் கூறும் அவர், "இவர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்ற செயல் திட்டத்தோடு," இருப்பதாகக் குறிப்பிட்டார்.

 
'காய் நகர்த்தும் அரசியல் எதிரிகள்'
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X

திருமாவளவனை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற விகடனின் முடிவை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்னெழுப்பியுள்ளார்.

மேலும், இதற்குத் தானும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், "உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்க மாட்டேன். அவரை (விஜயை) வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள்," என்று விகடன் பதிப்பகத்திடம் தான் கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?" என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன்.

 
திருமாவளவனின் முடிவு குறித்து த.வெ.க கூறுவது என்ன?
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,TVK VIJAY/FACEBOOK

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "கொள்கைகளும் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டு வெவ்வேறு தலைவர்கள் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதும், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்று. இந்த நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்காமல் போனது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறினார்.

"அம்பேத்கரை எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கிறோம். இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள் என்று பலரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தொகுப்பே அந்த நூல். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரின் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக வெளியீட்டு விழாவை அரசியல் நிகழ்வாகப் பார்ப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்," என்று கூறினார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தால், அம்பேத்கரின் தியாகங்களும், சமூக நீதி, சமத்துவ அரசியல் கருத்தாக்கங்களும் பல கோடி மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட லயோலா மணி, "கூட்டணி வேறு, கொள்கை வேறு. சூழல் காரணமாகவே திருமாவளவனால் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை," என்று மேற்கோள் காட்டினார்.

"திருமாவளவன் சுயம்பாக வந்த தலைவர். அவர் மீது எங்களுக்கு கோபமோ, விமர்சனமோ இல்லை," என்றும் அவர் கூறினார்.

 
இந்த அறிக்கையை எவ்வாறு அணுகுவது?
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சர்ச்சை, தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம்,@LOYOLAMANI/X

படக்குறிப்பு, த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி (இடது)

கூட்டணிகளைப் பொறுத்தவரை நிரந்தரமான கூட்டணி என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான கிளாட்சன் சேவியர்.

"புத்தக வெளியீட்டு விழாவை ஒரு அறிவுசார் தளமாகவே பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சமகால நிகழ்வுகள் குறித்த ஊடக மற்றும் பொதுமக்களின் நினைவானது ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கக் கூடியது. ஆனால் இந்த நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து மௌனித்து இருந்தால் அது தொடர்பாகவும் விமர்சனங்கள் ஏற்படும். இத்தகைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிக்கையாகவே இதை அணுக வேண்டும்," என்று கூறினார்.

மேலும், ஒரு அரசியல் மேடையை இரு தலைவர்கள் பகிர்ந்து கொண்டால் அது கூட்டணிக்கு வழிவகுக்கும் என்று கூறிவிட இயலாது, கொள்கை ரீதியாகப் பல பத்தாண்டுகளாக திருமாவளவன் உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் சேவியர் குறிப்பிட்டார்.

"திமுகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதைச் செய்திருக்கலாம். அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பாஜகவில் இணைந்து, மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை அவர் உறுதி செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

இந்திய அரசியல் சூழலில் அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவராக திருமாவளவன் அறியப்படுகிறார். தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த தகவல்களை ஊடகத்திற்கு வெளியிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இதில் அதிகமாக உள்ளர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை," என்றும் கூறினார் அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

“மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை

2 weeks 2 days ago

“மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை 1342270.jpg கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீர்கள், மக்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதை எப்படி குறை சொல்ல முடியும். குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்கு நாங்கள் என்ன மன நோயாளியா?. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு.

நாம் தமிழர் கட்சி இந்திய அரசியலமைப்பின் படி பதிவு செய்யப்பட்ட கட்சி. 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம். தனித்து நின்று போட்டி போட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் எனக் கூறினால், இவர் தான் (வருண்குமார் ஐபிஎஸ்) நாட்டை ஆளுகின்றாரா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தபோது, பிரிவினைவாத இயக்கம் என்பது தெரியாதா? அடிப்படை தகுதியே இல்லாமல் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனாய்? உண்மையில் உன்னுடைய தாய் மொழி எது? தமிழ்த் தாய்க்கு, தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தை சொல்லி இருப்பாயா?

உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா? என்னை, என் குடும்பத்தினரை இழிவாக பேசியதற்கு வழக்கு போடுவாயா? இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய்? ஒரு 50 வருடம், அதன் பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்து பேச வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில், அவர்கள் பேசியது வெளியே வராமல், இவர் பேசிய காட்சிகள் மட்டும் ஊடகத்திற்கு வருவது எப்படி? என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாயா?. மோதுவோம் என்றாகி விட்டது வா போதுவோம்.

ஃபெஞ்சல் புயல் மட்டுமல்ல, எந்த புயலுக்கும் மத்திய அரசு வராது. தமிழக அரசு வரியை தர முடியாது என்று மத்திய அரசிடம் சொல்ல முடியுமா? முடியாதா? மாநில அரசுகளிடமிருந்து வாங்கும் வரிதான் மத்திய அரசிடம் இருக்கிறது. பேரிடர் காலங்களில் கூட உதவவில்லை என்றால் அந்த பணம் எதற்கு? பிஹார், குஜராத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய போது, மற்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது. உணவை முதலில் உறுதி செய். அதன் பின்னர், என்ன சாப்பிட வேண்டும் என சொல். மாட்டுக்கறியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது” என்று அவர் கூறினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/1342270-naam-tamilar-party-leader-seeman-slam-varum-kumar-ips-1.html

 

வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா?

2 weeks 5 days ago

வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா?
 
வட தமிழகம் - புயல்

imd.gov.in

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம்.

தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற்கரையை நோக்கி புயல்களை வழிநடத்தும் காற்று வடிவங்கள் (wind model) இதில் முக்கிய காரணிகள் ஆகும். 

கூடுதலாக, வடக்கு கடற்கரையின் நிலப்பரப்பு, அதன் தாழ்வான பகுதிகள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை, இந்த புயல்களால் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாக்கிய ஃபெஞ்சல் புயல் பலத்த மழை, பலத்த காற்றுடன் சேர்த்து, கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பரவலான வெள்ளத்தையும் ஏற்படுத்தியது.

 

வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது புதிதானது அல்ல. நீண்ட காலமாகவே, வங்கக்கடலில் ஏற்படும் புயல்களில் அதிகமானவை, தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளையே தாக்கி வந்துள்ளன என்பதை இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, 1819 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை உருவான 98 காற்று சுழற்சி தடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பெரும்பாலானவை வட கடலோர மாவட்டங்களையே அதிகமாக பாதித்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட 29 தீவிர புயல்களில் 23 புயல்கள் தமிழ்நாட்டின் வட கடலோரப்பகுதிகளில் கரையை கடந்துள்ளன. 

அதே நேரம், ஆறு தீவிர புயல்கள் மட்டுமே தென் கடலோரப் பகுதிகளில் கரையை கடந்துள்ளன. மேலும், அப்போது உருவான 25 புயல்களில் 24 புயல்களும், 44 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களில் 34 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் வட தமிழ்நாட்டை பாதித்துள்ளன.

அந்த தரவுகள், வட கடலோர மாவட்டங்களிலேயே புயல்களின் தீவிரத்தன்மை அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

வட தமிழகம் - புயல்

Royal Geographical Society via Getty

புயல்களின் தீவிரத்தன்மைக்கும் அது உருவாகும் இடத்துக்கும் தொடர்பு உள்ளது

 

பூமத்திய ரேகைக்கு அருகில் புயல்கள் குறைவு?

 

புயல்களின் தீவிரத்தன்மைக்கும் அது உருவாகும் இடத்துக்கும் தொடர்பு உள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் பொதுவாக புயல்கள் உருவாகுவது குறைவாக இருக்கும் என்றும், அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

புயல்கள் உருவாகும் போது, அவை துருவமுனையை நோக்கி நகரும். உதாரணமாக, பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள இந்தியாவுக்கு அருகில் உருவாகும் புயல்கள் வடக்கு நோக்கி நகரும். தமிழ்நாட்டில் தென் பகுதி அல்லாமல் வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது என்று, பிபிசி தமிழிடம் பேசிய வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“பூமத்திய ரேகைக்கு அருகில் பூமியின் சுழற்சி குறைவாக இருக்கும். எனவே தான் அங்கு புயல் உருவாவதில்லை. பொதுவாக, பூமத்திய ரேகையிலிருந்து 5 டிகிரி தூரத்திலேயே புயல்கள் உருவாகும். விதிவிலக்காக சில புயல்கள் பூமத்திய ரேகைக்கு 2 டிகிரி தொலைவிலும் உருவாகியுள்ளன. ஆனால், அவை அரிதான நிகழ்வு. பூமத்திய ரேகையிலிருந்து மேலே செல்லச் செல்ல (higher latitude) புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ஏ ராஜ் விளக்குகிறார்.

 
வட தமிழகம் - புயல்
வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாகும் காலமும் தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்கிறார், தனியார் வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த்

பிபிசி தமிழிடம் பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் இதே கருத்தை முன் வைக்கிறார். “அதாவது ஒரு பம்பரம் சுற்றுவது போல தான். சுற்றிக்கொண்டே இருக்கும் போது, பம்பரம் ஒரு திசையில் தனது வேகத்துக்கு ஏற்ப நகர்ந்துக் கொண்டே இருப்பது போலவே, புயலும் நகரும். புயல் தீவிரமடையும் போது, அது துருவமுனையை நோக்கி நகர்வது வழக்கம். 

பூமத்திய ரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதியில் (இந்தியா பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ளது) உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்வது வழக்கம். எனவே தான், தமிழக கடற்கரையை ஒட்டி வரும் புயல்கள் வடக்கு - வட மேற்கு திசையில் நகரும். அதனால் புயல்கள் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் என, மேலும் வடக்கு நோக்கி செல்கிறது” என்கிறார் .

வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாகும் காலமும் தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்றும், வட கிழக்குப் பருவமழை காலமும் அதனுடன் பொருந்திப் போகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வட தமிழகம் ஏன் புயல் பாதிக்கும் பகுதியாக உள்ளது?

Getty Images

"இலங்கை இல்லாமல் இருந்திருந்தால், புயல்களின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்திருக்கும்"  

 

தானே புயல்

 

இதற்கான மிக சரியான உதாரணம், 2011ம் வட தமிழகத்தைத் தாக்கிய தானே புயல். 2011-ம் ஆண்டு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, பிறகு புயலாக வலுப்பெற்றது. தானே புயல் தொடர்ந்து மேற்கு வட-மேற்கு திசையில் எந்த விலகலும் இல்லாமல் நகர்ந்து கொண்டே வந்தது. மிக தீவிர புயலாக வகைப்படுத்தப்பட்ட தானே புயல், கடலூர் அருகே மணிக்கு 140 கி.மீ வேக சூரைக்காற்றுடன் கரையை கடந்து, அப்பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

வட தமிழகம் ஏன் புயல் பாதிக்கும் பகுதியாக உள்ளது?

NASA

 

 

இலங்கை – 'தென் தமிழகத்தின் காவலன்'

 

தென் தமிழகத்துக்கு தீவிர புயல்கள் ஏற்படாமல் இருக்க பூகோள ரீதியான காரணமாக இலங்கை அமைந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

திருச்சி என்ஐடி பேராசிரியர் சுப்பராயன் சரவணன் உட்பட ஆய்வாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் இலங்கை இருப்பதன் காரணமாக, திசை திருப்பப்பட்டு, வட தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு உதவுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை இல்லாமல் இருந்திருந்தால், புயல்களின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார், வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த். 

“இலங்கைக்கு அப்பால் உருவாகும் புயல், இலங்கையை கடந்து தமிழ்நாட்டின் பக்கம் வரும்போது அவை வலுவிழந்துவிடுகிறது. மேலும், இந்திய துணைக் கண்டத்தில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி இலங்கை. அங்கு புயல்களின் தீவிரம் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டின் தெற்கு பகுதிக்கு அருகே இலங்கை அமைந்திருப்பதால், தென் தமிழ்நாட்டின் பாதுகாவலனாக இலங்கை இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார்.

வட தமிழகம் ஏன் புயல் பாதிக்கும் பகுதியாக உள்ளது?

NASA

கடந்த 2017ம் ஆண்டு தென் தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயலின் செயற்கைக்கோள் படம்

 

விதி விலக்கான புயல்கள்

 

இதற்கு விதி விலக்காக, சில புயல்கள் இருந்துள்ளன. 1964ம் ஆண்டு உருவான பாம்பன் புயல், 1992ம் ஆண்டு உருவான தூத்துக்குடி புயல், 2017ம் ஆண்டு உருவான ஒக்கி புயல் ஆகியவை தென் தமிழகத்தை தாக்கிய வலுவலான புயல்கள் ஆகும்.

“பொதுவாக இலங்கையை கடந்து ஒரு புயல் வரும் போது அது வலுவிழந்துவிடும். ஆனால், பாம்பன் புயல் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடாவை தாண்டி தென் தமிழகத்தை வந்தடைந்தது. அதேபோன்று, 1992-ம் ஆண்டில் தூத்துக்குடி புயலும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் ஏற்பட்ட புயல்களில் ஒன்றாகும்” என்று வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் விளக்குகிறார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, 1995ம் ஆண்டு வெளியான புயலின் தாக்கம் குறித்த கட்டுரையில், “இந்த புயலால் இலங்கையை விட தென் தமிழகத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் மீது காற்று மேலெழும்பியதாகும்” என்று தமிழகத்தில் குறைந்தது 200 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி புயல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல்களின் தாக்கத்திற்கு மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார் வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த், இந்திய அரபிக் கடல் பகுதியிலும், இந்திய சீனக் கடல் பகுதியிலும் உருவாகும் உயர் அழுத்தமே புயலை நகர்த்திக் கொண்டே செல்கிறது. 

எந்தப் பகுதியில் உருவாகும் உயர் அழுத்தம் புயலை நகர்த்துகிறது என்பதும், புயலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்று. உதாரணமாக, ஃபெஞ்சல் புயல் சில மணி நேரம் எங்கும் நகராமல் அமைதியாக நிலவியதற்கு இது காரணமாக அமைந்துள்ளது. எந்த உயர் அழுத்தமும் அதை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகர்த்தவில்லை என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு!

2 weeks 5 days ago

 

கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு!
christopherDec 02, 2024 22:50PM
Eye-catching landslide in Tiruvannamalai... 7 people including children killed... Bodies of 4 recovered!

திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

கரைகடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. 

குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதன் அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது. இதில் அந்த வீடும், அந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட மொத்தம் 7 பேரும் சிக்கினர். 

சம்பவம் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் தொடர் மழை மற்றும் இருட்டியதால் நேற்று இரவு மீட்பு பணிகள் தடைபட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

பாறை விழுந்த இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் எ.வ.வேலு மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தினர். 

குறுகிய சாலை வசதிக்கொண்ட அந்த பகுதியில் ஒரு வழியாக ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்தது. 

இந்த நிலையில் மண்ணுள் புதைந்து சிதைந்த நிலையில் ஒரு சிறுவனின் உடல் முதலில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட மீட்பு படையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். 

அதனையடுத்து ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பாறை விழுந்து கடந்த 24 மணி நேரமாக மண்ணில் புதையுண்ட 4 பேரின் உடல்களின் பாகங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இதனைக்கண்ட அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்க செய்தது. 

மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை கொட்டும் மழைக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


https://minnambalam.com/tamil-nadu/eye-catching-landslide-in-tiruvannamalai-7-people-including-children-killed-bodies-of-4-recovered/
 

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்?

3 weeks 1 day ago
சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.
 

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இருவரும் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்றுதான் முன்பு அவரை விமர்சித்தேன்.

இந்தக் களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும்போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருப்பதும் அரசியல்தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளைப் போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை சங்கி என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். தி.மு.க-வை எதிர்த்தாலே சங்கி என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். சீமானின் இந்த பதில் அடுத்த விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதற்கு பொதுக்கூட்டத்தில் விளக்கம் கொடுத்த சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள். நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை, பரந்தூரில் விமான நிலையம், காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்" என கொதித்தார்.

 
வானதி சீனிவாசன்
 
வானதி சீனிவாசன்
 

சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், "காவி என்பதை சீமான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பா.ஜ.க-விற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்?" என்றார்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டத்தைக் கலைஞர் கொடுத்தார். கிருபானந்த வாரியார் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை கொடுத்தார். எனவே பட்டங்கள் மற்றவர்களால்தான் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு நாமே பெற்றுக்கொள்வது பட்டமாக இருக்காது. இந்த விஷயத்தில் வானதி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது" என்றார்.

 
தராசு ஷ்யாம்
 
தராசு ஷ்யாம்
 

ஆனால், 'சீமானின் இந்த கருத்து விஜய்யை சீண்டும் வகையில் இருக்கிறது' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஏற்கெனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ரஜினிக்கும், விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது. இந்தசூழலில்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார் சீமான். இதன் மூலமாக விஜய்யை ஓரம்கட்டுகிறார். இந்த பேச்சு விஜய் மற்றும் அவரது ரசிகர்களை வெறுப்பேத்தும் வகையிலும், வம்புக்கு இழுக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும் அரசியல் சூப்பர் ஸ்டார் என தன்னை எப்படி சீமான் சொல்லிக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. தனியாக தேர்தலை சந்தித்து 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 
ப்ரியன்
 
ப்ரியன்
 

எனவே தனித்துவமான அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் சூப்பர் ஸ்டார் என்றால் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், தேர்தல்களில் அதிக வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

 

இதையெல்லாம் தமிழக அரசியலில் சீமான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனவே அவர் இவ்வளவு சீக்கிரமாக அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குத் தகுதியுடைவராக இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதுதான். தன்னைத்தானே அரசியல் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வது அவரது தன்னம்பிக்கையாக இருக்கலாம். பிறர் அதை நாகரீகமான விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை சீமான் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்? - Vikatan

 

திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!

3 weeks 2 days ago

திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்! -சாவித்திரி கண்ணன்
24-671f2218bb0bb.jpg

சீமான் – ரஜினி சந்திப்பு என்பது இரு தனி நபர் சார்ந்த சந்திப்பு அல்ல. ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த பிம்மத்திற்குள் கரைய முயற்சிக்கும் சந்திப்பாகும். ரஜினியின் போயஸ் இல்லம் அரசியல் போக்கற்றவர்களின் போக்கிடமாக கடந்த பத்தண்டுகளாக எப்படி இயங்கி வருகிறது என்பது குறித்த ஒரு அலசல்;

அதென்னவோ தெரியவில்லை. பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது.

திமுகவில் கலைஞர் சாப்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கி வளர்ந்து வந்த நிலையில் மு.க.அழகிரி ஓரம்கட்டப்பட்டார். ரஜினியை போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்தார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் பல்லாண்டுகளாக அதிகார மையமாக வாழ்ந்த சசிகலா, அதே போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு ஒரு போதும் செல்ல நினைத்ததில்லை. சிறை சென்று வந்த பிறகு அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் – பாஜகவின் கட்டளைக்கு ஏற்ப செயல்படக் கூடிய சூழலில் – ரஜினியை போயஸ் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

1205057.jpg

ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அந்த காலகட்டங்களிலும் சரி, அதன் பிறகு அமைச்சர்,துணை முதல்வர் காலகட்டங்களிலும் சரி, போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டைக் கடந்தே பலமுறை ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற காலகட்டங்களில் எல்லாம் ரஜினி வீட்டிற்கு செல்வதையே அவர் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் எடப்படியின் கை ஓங்கி கட்சியில் இருந்து விலக்கப்பட்டு, தீவிர பாஜகவின் ஆதரவாளராக வெளிப்பட்ட நிலையில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார்.

73-1.jpg

வைகோ நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அவர் திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய 1993-ல் ரொம்ப பீக்கில் இருந்தார். ஆனால், படிப்படியாக அவர் செல்வாக்கு இறங்கி 2014 ஆம் ஆண்டு மிக நலிந்த நிலையில் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்ட நிலையில், அந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மாலினி கடிதத்துடன் ரஜினியை சந்தித்தார்.

15-vaiko-rajinikanth3434-600-jpg.jpg

அதே போல திருநாவுக்கரசர் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எப்போதும் போதும் சரி போயஸ் இல்லம் சென்று ரஜினியை சந்தித்தவர் அல்ல, ஆனால் அவர் செல்வாக்கு முற்றிலும் சரிந்த காலகட்டத்தில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார். அவர் பாஜகவில் முன்பு அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு திமுக, காங்கிரஸ் என்று பயணித்த காலங்களில் எல்லாம் திரைத்துறையில் நெருங்கி பழகிய ரஜினியைத் தேடி போயஸ் இல்லம் சென்று சந்தித்ததே இல்லை. அதே சமயம் பாஜகவில் சேர்ந்த பிறகு மிக உரிமையுடன் போயஸீல் உள்ள ரஜினி இல்லம் தேடிச் சென்று சந்தித்தார்.

15_59.jpg

தமிழருவி மணியன் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இருந்து பொது வாழ்வை தொடங்கியவர். ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, காங்கிரஸ் என்று பயணித்து இறுதியில் காந்திய மக்கள் இயக்கம் கண்டவர். 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு காரணமானவர். அப்போது கூட அவர் ரஜினி என்று யாரேனும் சொன்னால், அவரெல்லாம் நடிகர் அவரிடம் நமக்கென்ன பேச்சு வேண்டியுள்ளது என அறிவார்ந்த தளத்தில் கேள்வி எழுப்புவார். ஆனால், பிறகு பாஜகவுடன் அவர் நெருக்கமான பிறகு ரஜினியை தொடர்ந்து சந்தித்து பேசும் நிலைக்கு ஆளானார்.

320-214-15138909-thumbnail-3x2-rajini.jp

இதே போலத் தான் சீமான். அரசியலில் தன் சொந்த பலத்தை நம்பி பயணித்த வரையில் அவர் ரஜினியை எடுத்தெறிந்து பேசியவர் தான். ஆனால், விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவரது கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில், இனி தன் எதிர்காலம் கேள்விக்கு உள்ளான நிலையில் ரஜினியை சந்தித்து உள்ளார். சீமான் என்பவர் தமிழக அரசியலில் திராவிடத்தை எதிர்க்கும் ஒற்றை நோக்கத்தை கொண்டு இயங்கி வருவதோடு கே.டிராகவன் மற்றும் நடிகை கஸ்தூரி விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் என்பது கவனத்திற்கு உரியது.

முன்பு தம்பி விஜய் என வாய்க்கு வாய் அடிக்கடி வலிந்து விஜய்யைப் பற்றி பேசி விஜய்யின் ஆதரவு ஓட்டுகளையெல்லாம் அறுவடை செய்து வந்த சீமானுக்கு அந்த வாய்ப்பு தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. விஜய்யும் திமுகவை உக்கிரமாக எதிர்ப்பதால் சீமானுக்கு விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இனி விஜய் பக்கம் ஓரளவேனும் சென்றுவிடும்.

k-1725773212.jpg

சீமானின் பாஜக எதிர்ப்பு பேச்சுக்கள் எல்லாம் வெறும் பசப்பல் தானேயன்றி உண்மையல்ல..என்பது சமூகதளத்தில் பரவலாக உணரப்பட்டு வருகிறது. ஆகவே, இனி வேஷம் களைவதைத் தவிர, வேறு வழியில்லை சீமானுக்கு. அதே சமயம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை வீரியமாக எடுத்துச் சென்றவர் என்ற வகையில் சீமான் அரசியல் என்பது இந்த காலகட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.

ரஜினியை பொறுத்த வரை பாஜகவிற்கு சாதகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க அடையாளம் காணப்பட்டவர். ஆனால், அது அவரது உடல் நிலை, மன நிலையால் வெற்றிகரமாக நடக்கவில்லை. ஆனால், அவரது அணுகுமுறை என்பது அனைத்து தரப்பினரோடும் இணக்கமான இருப்பது போன்ற தோற்றத்தை காட்டினாலும், அடிப்படையில் இந்திய தேசியத்திற்கும், பிராமணிய இந்துத்துவாவிற்கும் மிக விஸ்வாசமானது என்பது கவனத்திற்கு உரியது.

இந்தப் பின்னணியில் ரஜினியை சீமான் சந்தித்து இருப்பதானது – அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ரவீந்திரன் துரைசாமியின் துணையோடு இந்த சந்திப்பும், பேச்சு வார்த்தைகளும் இரண்டரை மணி நேரம் நீடித்து இருக்கும் நிலையில் –  இது வரை சமரசமற்ற தமிழ் தேசியப் போராளியாக தன்னை அடையாளம் காட்டி வந்த சீமானின் அரசியல், இனி சரிவை நோக்கி திரும்பி சென்று கொண்டிருப்பதையே உணர்த்துகிறது.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/19981/semaan-rajini-meeting-politics/

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: பல்லுயிர்ப் பெருக்க மண்டலமான அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? எதிர்ப்பு ஏன்?

3 weeks 2 days ago
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

டங்ஸ்டன் கனிமத்திற்கான தேவை இருந்தாலும் தமிழ்நாட்டில் அவை போதுமானதாக இல்லை என கூறுகின்றனர், விஞ்ஞானிகள்.

தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பேச பிபிசி தமிழ் முயன்றபோது, அவர் இதுகுறித்துப் பிறகு பேசுவார் என அவருடைய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுவது ஏன்? சுரங்கம் அமைவதால் என்ன பாதிப்பு?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது.

இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்கஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக சுரங்க அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி அலுவலகம், கடந்த 2018-19ஆம் ஆண்டில் மேலூர் தாலுகாவில் உள்ள எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும் அதை அடிப்படையாகக் கொண்டு ஏலம் விடப்பட்டதாகவும் மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

 
அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, "டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்" என பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்

மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்' என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, இங்குள்ள கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை, தேன்கூடு மலை ஆகியவை டங்ஸ்டன் கனிமத் தொகுதிக்குள் வருவதாகக் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன்.

"சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர் சுனைகள் அழிந்து போகும்' என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

மத்திய சுரங்க அமைச்கத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே டங்ஸ்டன் கனிமத் திட்டத்துக்கு எதிராக சூழல் அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தன.

 
தமிழ்நாடு அரசின் விளக்கம்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில், 'டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை' என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மத்திய அரசால் மதுரை, மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

இதே கருத்தைக் கடந்த 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வரவில்லை. அப்படியே அனுமதி கேட்டு வந்தாலும் அதை நிராகரிப்போம்," என்றார்.

மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் அதை ரத்து செய்வதற்கு அரசு வலியுறுத்தும் எனவும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

 
கிராமங்களில் எதிர்ப்பு
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

மாநில அரசு விளக்கம் கொடுத்தாலும் மதுரையில் கள நிலவரம் வேறாக உள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று (நவம்பர் 26) மதுரை அழகர் கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, வெள்ளியன்று (நவம்பர் 29) மேலூரில் கடை அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ்.

இதுதொடர்பாக, கம்பூர் ஊராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், 'டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் சிறப்புக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் செல்வராஜ், "மதுரை மாவட்டத்தில் இரண்டு பகுதிகளை டங்ஸ்டன் சுரங்கத்துக்காகத் தேர்வு செய்துள்ளதாக" கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மீனாட்சிபுரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வரை உள்ள 200 சதுர கி.மீட்டரில் பல்வேறு காலகட்டங்களில் சுரங்கத்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்றார்.

 
எதிர்ப்பை மீறி அமையுமா டங்ஸ்டன் சுரங்கம்?
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார், செல்வராஜ்.

அதேநேரம், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையுமா என்ற கேள்வியும் மேலூர் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

"மாநில அரசின் அனுமதியில்லாமல் கனிம சுரங்கத்தை அமைக்க முடியாது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார், கோ.சுந்தர்ராஜன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சுரங்கம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்பதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டால் கட்டாயப்படுத்த முடியாது" என்கிறார்.

தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் ஸ்டெர்லைட் சுரங்கத்தைத் திறப்பதற்கும் தற்போது வரை மாநில அரசு அனுமதி மறுப்பதையும் சுந்தர்ராஜன் மேற்கோள் காட்டினார்.

 
தமிழ்நாட்டில் டங்ஸ்டன் உள்ளதா?
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது என்கிறார் பொன்ராஜ்

இந்த விவகாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் விஞ்ஞானி வெ.பொன்ராஜின் கருத்து வேறாக உள்ளது.

"தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது. ஆனால், அவை வணிகரீதியாகப் பயன்படுவதற்கேற்ற வகையில் கிடைப்பதில்லை" என்கிறார்,

பிபிசி தமிழிடம் பேசிய வெ.பொன்ராஜ், "சீலைட் (scheelite) மற்றும் வால்ஃபிரமைட் (Wolframite) ஆகியவற்றின் தாதுக்களில் இருந்து டங்ஸ்டன் பிரித்தெடுக்கப்படுகிறது. எரிமலைக் குழம்பு மூலமாகவோ, நிலவியல்ரீதியாக பாறைகள் உருவான இடத்திலோ இவை அதிகமாக கிடைக்கும்" என்கிறார்.

"இந்தியாவில் ராஜஸ்தானில் அதிகளவு டங்ஸ்டன் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டங்ஸ்டன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது குறித்துப் பேசும் பொன்ராஜ், "கிரானைட் இருக்கும் பகுதிகளில் டங்ஸ்டன் இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. மதுரை மேலூரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்" என்கிறார்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, 'சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'

"உலகளவில் டங்ஸ்டன் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக சொற்பமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதற்கான தேவை அதிகமாக உள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், "உலக அளவில் சீனாவில் இருந்து சுமார் 80 சதவிகித டங்ஸ்டன் உற்பத்தி ஆகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 63.76 மெட்ரிக் டன் டங்ஸ்டனை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இதன் மதிப்பு என்பது சுமார் 1.6 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து டங்ஸ்டனை வாங்கியுள்ளனர்.

இவ்வளவு குறைவான விலையில் டங்ஸ்டன் கிடைக்கும்போது, மதுரையில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்களையும் மக்களையும் இடையூறுக்கு ஆட்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது" என்கிறார்.

ஆத்ம நிர்பார் திட்டத்தின்கீழ் இந்தியாவில் டங்ஸ்டனை தயாரிப்பதற்காக இவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், வெ.பொன்ராஜ்.

 
அரசியல் காரணங்களுக்காகத் தடுக்கப்படுகிறதா?
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், இணை பேராசிரியர் ஸ்டீபன்

ஆனால், அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை இணை பேராசிரியரான ஸ்டீபன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய உலோகமாக டங்ஸ்டன் உள்ளது. பூமியில் உள்ள அரிதான மூலப் பொருள்களில் ஒன்றான, இதன் கழிவுகளை சூழலுக்குக் கேடின்றி மறுசுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன" என்கிறார்.

டங்ஸ்டன் திட்டம் நிறுத்தப்பட்டால் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் ஸ்டீபன், "கனிம சுரங்கம் தோண்டும்போது தமிழரின் தொன்மை அடையாளங்கள் கிடைத்தால் அப்போது இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம்" என்கிறார்.

தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள மத்திய சுரங்க அமைச்சக அலுவலக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் பேச முடியவில்லை.

இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்க முயன்றது. "நாடாளுமன்றக் கூட்டத்தில் இருப்பதால் இதுதொடர்பாகப் பிறகு பேசுவார்" என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்

3 weeks 3 days ago
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன் இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷ கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மௌனம் சாதிக்கிறது. ராஜபக்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை.

தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை புலிகளின் தலைவர் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410186

ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

3 weeks 4 days ago
ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் வீதி ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.

கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த பொலிஸார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

https://athavannews.com/2024/1410141

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

3 weeks 4 days ago
தமிழ்நாடு - காவிரி வடிநிலப் பகுதிகள் - மத்திய அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை (டெல்டா) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது.

அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

சமீபத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தங்கள் சட்டத்தின் கீழ் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையா என்பது குறித்த சில கேள்விகள் - பதில்கள்.

 

கேள்வி: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் பிரச்னையின் பின்னணி என்ன?

பதில்: காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன்கள் எடுக்கும் விவகாரம் என்பது நீண்ட காலமாகவே விவசாயிகளின் எதிர்ப்பிற்குரிய விஷயமாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்ம கரிம எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் பொதுமக்கள் அப்பகுதியிலும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளில், எண்ணெய் துரப்பண ஆய்வுகள் "A" பிரிவிலிருந்து "B"க்கு மாற்றப்பட்டும் எனக் கூறப்பட்டது.

அதன்படி, கடலிலும் நிலத்திலும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளுக்கு என பொதுமக்கள் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை. இதையடுத்து, டெல்டா பகுதியில் மீண்டும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன.

இந்த நிலையில், டெல்டா பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இடம்பெற்றன.

தமிழ்நாடு - காவிரி வடிநிலப் பகுதிகள் - மத்திய அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது.

கேள்வி: இந்த சட்டத்தின் மூலம் என்ன பாதுகாப்பு கிடைத்தது?

பதில்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படும்.

விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.

இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் விநியோகம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை இதன் கீழ் தடைசெய்ய முடியாது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை இந்தச் சட்டம் பாதிக்காது.

தமிழ்நாடு - காவிரி வடிநிலப் பகுதிகள் - மத்திய அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை இந்தச் சட்டம் பாதிக்காது.

கேள்வி: இப்போது எழுந்துள்ள சர்ச்சை என்ன?

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் எழுத்து மூலமாக பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தார்:

1. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன், எரிவாயு துரப்பணத்திற்காக சூழல் அனுமதி அல்லது தடையில்லாச் சான்றிதழ் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரம் என்ன? அனுமதி கோரப்பட்ட இடங்கள், நிறுவனங்களின் விவரங்களையும் தரவும்.

3. டெல்டா மாவட்டங்கள் மாநில அரசால் சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, எண்ணெய், எரிவாயு துரப்பணத் திட்டங்களைத் தடுக்க மத்திய அளவிலான கொள்கை ஏதும் உள்ளதா?

இதற்கு மத்திய அமைச்சகம் பின்வரும் பதில்களை அளித்தது:

"1. மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. மூன்று திட்டங்களுக்கு ஏற்கனவே பெறப்பட்டிருந்த சூழல் அனுமதி மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் பின்வரும் நிறுவனங்கள் சூழல் அனுமதி கோரிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன:

  • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வுக்காக 20 கிணறுகளைத் தோண்ட ONGC அளித்த விண்ணப்பம்.
  • நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம்.
  • கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம் ஆகியவை நிலுவையில் உள்ளன.

3. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் சில பகுதிகளின் சிறப்புப் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதிகளை Eco Sensitive Zone (ESZ)/ Eco-Sensitive Area (ESA) என அறிவிக்கிறது. தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த அமைச்சகத்திற்கு அப்படி எந்தக் கோரிக்கையும் வரவில்லை. மேலும், எண்ணெய்வயல், எரிவாயு துரப்பணச் சட்டம் மற்றும் விதிகளில் இப்படி அறிவிக்க எந்த விதிமுறையும் இல்லை".

2020-ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது; ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியிருப்பதால் காவிரி டெல்டா பகுதிகள் உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களா என சர்ச்சை எழுந்தது.

தமிழ்நாடு - காவிரி வடிநிலப் பகுதிகள் - மத்திய அரசு

பட மூலாதாரம்,X/ADVTSUDHA

படக்குறிப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா

கேள்வி: ஆகவே, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அனுமதிக்கப்பட்டது செல்லாதா?

பதில்: அப்படியல்ல என்கிறார்கள் நிபுணர்கள். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு தனது சட்டத்தின் மூலமாக அறிவித்தது. மத்திய அரசு தெரிவித்துள்ள EcoSensitive Zone (ESZ )/ Eco-Sensitive Area (ESA) என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, மலை பகுதிகளை பாதுகாக்க அளிக்கப்படும் அறிவிப்பு. டெல்டா பகுதியில் உள்ள விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் இதுபோன்ற அறிவிப்பு தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணியை முதலில் பார்க்கலாம். மத்திய அரசானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான சட்டத்தை 2020ல் திருத்த முடிவுசெய்தது. ஆனால், இந்தச் சட்டம் திருத்தப்படவில்லை ''என்றார்

மேலும் அவர், ''மாறாக சில பகுதிகள் மட்டும் அரசிதழின் மூலம் அறிவிப்பாக வெளியிடப்பட்டன. அதன்படி, எண்ணெய், எரிவாயு போன்றவை இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யும் பணிகள், A பிரிவிலிருந்து B பிரிவுக்கு மாற்றப்படும். A பிரிவில் உள்ள திட்டத்திற்கு பொதுமக்களின் கருத்தைப் பெற வேண்டும். B பிரிவில் உள்ள திட்டங்களுக்கு பொது மக்களின் கருத்தைக் கேட்கத்தேவையில்லை. ஆனால், சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்தான் வழங்கவேண்டும்'' என்கிறார்

 

''இந்த நிலையில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டது. ஆகவே, புதிதாக அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்தால் மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ள பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்காது.

கடந்த ஐந்தாண்டுகளாக புதிதாக எந்தத் திட்டத்திற்கும் மாநில அரசு சூழல் அனுமதியும் வழங்கவில்லை. ஆகவே, வேளாண் மண்டலத்தைப் பாதுகாக்க மாநில அரசின் சட்டமே போதுமானது. மத்திய அரசின் ESZ ஒரு பகுதியில் அறிவிக்கப்பட்டால் ஒரு சின்ன மேம்பாட்டுத் திட்டத்தை, குறிப்பாக புதிதாக ரோடு போடுவது போன்ற திட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாது. மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், மத்திய அரசின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றச் சட்டம்தான். ஆகவே, மத்திய அரசு புதிதாக ஏதும் செய்யத் தேவையில்லை" என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?

3 weeks 4 days ago
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,IMD.GOV.IN

படக்குறிப்பு, 'ஃபெங்கல்' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது

நேற்று (நவம்பர் 25) வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 27-ஆம் தேதிக்கு அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை எங்கு மழை பெய்யும்?

நாளை தமிழகத்தின் பெருவாரியான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இங்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன
மீனவர்களுக்கான எச்சரிக்கை

நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 
'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பலத்த மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது.

இதனால் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. யாழ்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

'ஃபெங்கல்' புயல் -  தமிழ்நாடு மழை - வானிலை நிலவரம்
படக்குறிப்பு, இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தொடர்மழை காரணமாக இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மலையகத்தின் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மற்றும் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பெரிய கற்கள் சாலையில் விழுந்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை: தீப்பெட்டி தொழிற்சாலை புத்துயிர் பெறுமா?

3 weeks 5 days ago
தீப்பெட்டி தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகள் போல, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் தென் தமிழகத்தின் சில இடங்களில் இயங்கி வருகின்றன.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்திருந்தது. இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி இயங்கி வந்த பல ஆலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அந்த ஆலைகளின் உரிமையாளர்கள் கூறிவந்த நிலையில், லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.

இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெற்று இந்தியா முழுவதும் தீப்பெட்டிகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன?

விருதுநகர் மாவட்டத்திற்கு தீப்பெட்டி தொழிற்சாலை வந்த கதை

இந்தியாவிலேயே கொல்கத்தாவில் 1910-ஆம் ஆண்டு முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அங்கிருந்து சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீப்பெட்டி தொழில் நுழைந்த வரலாற்றை, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் பின்வருமாறு விவரித்தார்.

“தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த பணிகள் கிடைத்த நிலையில், எஞ்சிய நாட்களில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர்"

"மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1916ல், சிவகாசி பகுதியை சேர்ந்த அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் இருவரும், புதிய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்காக, கொல்கத்தாவுக்கு சென்றனர்.”

“அங்கு பெருவாரியாக நடைபெற்று வந்த தீக்குச்சி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலைப் பார்த்தனர். அதில் ஆர்வம் ஏற்பட்டு, அங்கேயே சில ஆண்டுகள் தங்கி, தீப்பெட்டி தொழிலை கற்றுத் தேர்ந்தனர்.” என்கிறார் பரமசிவம்.

“கொல்கத்தாவிலிருந்து சிவகாசிக்கு திரும்பிய இருவரும், 1923ல், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். சிவகாசியின் முதல் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, 'நேஷனல் தீப்பெட்டி' 1923ல் ஆரம்பிக்கப்பட்டது. சிவகாசியில் தயாரான தீப்பெட்டிகள், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், நல்ல வரவேற்பை பெற்றது.” என்று கூறினார் பரமசிவம்.

சிவகாசியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை, குடிசைத் தொழிலாக உருவாகி, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள், சாத்தூர், கோவில்பட்டி, குடியாத்தம் வரை விரிவடைந்தது. இன்று, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக லைட்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில், 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.

இந்தநிலையில் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் அக்டோபர் மாதம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

 
தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு
படக்குறிப்பு, சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி
‘பெண்கள் வாழ்வு புத்துயிர் பெறும்’

“வானம் பார்த்த பூமியில் தீப்பெட்டி தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது” என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தினமும் ரூ.375 சம்பளத்திற்கு என்னை போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.”

சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்றார் அவர்.

“தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், அவற்றை மூடிவிட்டு மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை நம்பி சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்'' என்கிறார் அவர்

தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்தது
மத்திய அரசு தடை ஏன்?

லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதி தடைக்கு பின் 20 நாட்களில் இந்தியா முழுவதும் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறுகிறார் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம்.

இது குறித்து பேசிய அவர், ”கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன லைட்டர்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் 40 சதவீதம் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது.” என்றார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சீன லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை கோரியுள்ளனர்.

இந்தநிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இருப்பினும், சீன லைட்டர்களின் உதிரி பாகங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு லைட்டர்கள் தயாரிப்படுவதாக குற்றஞ்சாட்டிய தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் இது தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்தனர்.

சீன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

கடந்த அக்டோபர் மாதம் லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

 
தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு
படக்குறிப்பு, லைட்டர்கள் குறித்த அரசின் உத்தரவுக்கு பிறகு ரூ.100 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது

"சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தீப்பெட்டிகளுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. எனினும் சீன லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்க இந்தியாவுக்குள் சீன நிறுவனம் வர வாய்ப்புள்ளதால் ஒரு முறை பயன்படுத்தும் சீன லைட்டர்கள் விற்பனை செய்ய தமிழகத்தில் முழுமையாக தடை விதிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

தீக்குச்சிகள் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது?
தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு

தொடர்ந்து பேசிய, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், “தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சிகள் தயாரிக்க மரக் குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த குச்சிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. தீக்குச்சிகள் மட்டி மரம், அல்பிஸியா, பெரு மரம் உள்ளிட்ட மூன்று வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன.” என்றார்.

இந்த மரங்கள் ஐந்து வருடங்கள் மட்டுமே வளரக்கூடிய மரங்கள், இவை முதிர்ச்சி அடைந்தால் அழிக்கப்படும் என்று கூறிய அவர், “கர்நாடகா மாநிலத்தில் காபி தோட்டத்தில் ஊடு பயிராக இந்த மரங்கள் பயிரிடப்படுகிறது. இவ்வகையான மரங்கள் அழியும் தருவாயில் இல்லை என்பதால் வனத்துறையினர் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்ததில்லை. தீக்குச்சிகள் கிடைப்பதற்கு எந்த சிக்கலும் இதுவரை ஏற்பட்டதில்லை.” என்கிறார்.

“அதேபோல் தீப்பெட்டியில் 20 சதவீதம் மெழுகு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பேப்பர் மற்றும் மெழுகு தேவைப்படும். அதுவும் போதுமானளவு கிடைக்கிறது. இந்த மெழுகு தீப்பெட்டிகள் அளவில் சிறிய அளவாக இருப்பதால் பெருநகரங்களான கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெழுகு குச்சி தீப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன” என்கிறார் எம்.பரமசிவம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இசைவாணி: பல வருடங்களுக்கு முன்பு பாடப்பட்ட ஐயப்பன் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?

3 weeks 5 days ago
பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, பாடகி இசைவாணி
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி புகார்களை அளித்து வருகின்றன இந்து அமைப்புகள். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?

பாடகி இசைவாணியால் பாடப்பட்டு, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவால் உருவாக்கப்பட்ட 'ஐ யாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' என்ற பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இந்தப் பாடலை உருவாக்கி, பாடியவர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், பெண்கள் உரிமை தொடர்பான கருத்துகளை மையமாகக் கொண்டிருந்தது.

 

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு வாரத்திற்கு முன்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இந்தப் பாடல் ஐயப்பனுக்கு எதிரான பாடல் என்றும் அந்தப் பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, சில பிரபல யூ டியூபர்களும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரினர்.

 
திரைப்பட இயக்குநர் மோகன். ஜி.

பட மூலாதாரம்,X : MOHAN G KSHATRIYAN

திரைப்பட இயக்குநர் மோகன். ஜி. இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்தியதாக இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. சென்னையிலும் ஒரு சிலர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.கவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஐயப்பனைப் பற்றி மிக மோசமான கருத்துகளைக் கொண்ட பாடலை இசைவாணி பாடியிருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.கவைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக ஒரு கருத்தைப் பதிவுசெய்தால், உடனே கைதுசெய்கிறார்கள். இந்து மதத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் கொண்டாடுகிறார்கள். உடனடியாக இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைவரின் மனதையும் புண்படுத்துவதாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார் இசைவாணி
புகார் அளித்த இசைவாணி

இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சை கடந்த வாரம் உருவானதிலிருந்தே, இசைவாணிக்கு அவரது மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆபாச செய்திகளும் படங்களும் அனுப்பப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருப்பதோடு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்துள்ளார் இசைவாணி.

இந்நிலையில் இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து, நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"2018-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப் பெரிய விவாதமும் நடந்தது. இதே காலகட்டத்தில்தான் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்ற இசைக்குழு உருவானது. சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக உரிமைகளைக் கோரும் பாடல் வரிகளோடு The Casteless Collective பல்வேறு பாடல்களை உருவாக்கியது.'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
நீலம் பண்பாட்டு மையம்

பட மூலாதாரம்,INSTAGRAM :NEELAM

படக்குறிப்பு, இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து, நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ''I am Sorry Iyyappa' என்ற பாடலும் ஆண்டாண்டு காலமாக இங்கு பேசப்பட்டுவரும் கோவில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும், பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இந்தப் பாடலைப் பாடியது இசைவாணி. எழுதி இசையமைத்தது The Casteless Collective''என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் ஒரு குழு அவதூறு பரப்பி வருகிறது என்கிறது நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கை.

அந்த அறிக்கையில் மேலும் ''அடிப்படையில் அது ஐயப்பன் சம்பந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில், கோவில் நுழைவைக் கோரும் வரிகளும் இருந்தன. இந்த முழு உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக இருக்கிறது என சமூகவலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப நினைப்பதன் மூலம் சமூகப் பதற்றத்தை உருவாக்கிவிட முடியுமென நினைக்கிறது ஒரு கூட்டம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, பாடகி இசைவாணி, இது தொடர்பாக யாரிடமும் பேச விரும்பவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

''பாடகி இசைவாணியை கடந்த ஒரு வாரகாலமாக ஆபாசமாக சித்தரித்தும் தொலைபேசியில் மிரட்டியும் சமூக வலைதளங்களில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகிவரும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான் இதில் உள்ள பேராபத்து" என நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாடகி இசைவாணி, இது தொடர்பாக யாரிடமும் பேச விரும்பவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அவரது போனும் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு பாட்டு, இப்போது திட்டமிட்டு சர்ச்சையாக்கப்படுகிறது என்கிறார் நீலம் பதிப்பகத்தின் எடிட்டரான வாசுகி பாஸ்கர்.

"அந்தப் பாடல் ஒரு கூட்டு முயற்சி. தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவைப் பொறுத்தவரை, ஒரு பாடலை யார் எழுதி, யார் பாடினாலும் அதைக் கூட்டு முயற்சியாகத்தான் கருதுவோம். இசைவாணி அந்தப் பாடலை பாட மட்டுமே செய்தார். ஆனால், இப்போது இந்தப் பாடல் தொடர்பாக அவரை மட்டுமே குறிவைக்கிறார்கள்.

சபரிமலை கோவிலுக்கு பெண்களை நுழைய அனுமதிப்பது தொடர்பாக தீர்ப்பு வந்தபோது, அந்தத் தீர்ப்பை மையமாக வைத்து, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசும்விதமாக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டது'' என்கிறார் வாசுகி பாஸ்கர்.

இப்போது பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் சபரிமலை சீஸனாகப் பார்த்து, அந்தப் பாட்டை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறார் அவர்.

மேலும், ''அவர் எங்கோ பாடிய ஒரு கிறிஸ்தவப் பாடலை எடுத்துப் போட்டு, அவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் இந்து மதத்தைப் பற்றித் தவறாகப் பாடுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, இந்தப் பிரச்னையை ஏற்படுத்துபவர்களுக்கு ஒரு மதப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது ''என கூறுகிறார் வாசுகி பாஸ்கர்.

 
வாசுகி பாஸ்கர்
படக்குறிப்பு, வாசுகி பாஸ்கர்

''இந்து அமைப்புகள், ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைவைச் சந்திக்கும்போது அவர்கள் தரப்பை நிரூபிக்க அல்லது பழிதீர்க்க இதுபோலச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அதையே செய்கிறார்கள்" என்கிறார் வாசுகி பாஸ்கர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இசைவாணி, தன் தந்தையின் மூலமாக இசையைக் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தவர்.

2017-ஆம் ஆண்டில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் முயற்சியில், இசைக் கலைஞர் டென்மா உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வில் இசைவாணி இணைந்தார். தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவின் பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்.

பிபிசியின் உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய '100 பெண்கள் 2020'-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இசைவாணியின் பெயரும் இடம்பெற்றது. 2021-ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீஸனில் இசைவாணி பங்கேற்று, 49வது நாளில் வெளியேறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

அதானி குழுமத்திடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்படும் தமிழக அதிகாரி யார்? செந்தில் பாலாஜி கூறுவது என்ன?

4 weeks ago
அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,SENTHIL BALAJI /FACEBOOK

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி செய்தியாளர், சென்னை

சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக எந்த உறவும் இல்லை என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட சூரிய மின் சக்தி ஒப்பந்தத்துக்கும் அதானி குழுமத்துக்கும் என்ன தொடர்பு? இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் அடிபடுவது ஏன்?

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்ன?

கௌதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் 8 ஜிகா வாட் சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் (SECI) பெற்றுள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, 2021-2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாநில மின் அதிகாரிகளை சந்தித்து மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட லஞ்சம் கொடுப்பதற்கான பேரத்தில் அதானி ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், மின்வாரியங்கள், மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை அதன் ஊடக தொடர்பாளர் மறுத்துள்ளார். "லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை" எனத் தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் தாங்கள் நிரபராதிகளாகவே கருதப்படுவதாக கூறியுள்ள அதானி குழும ஊடக தொடர்பாளர், வெளிப்படைத்தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்படுவது ஆகியவற்றில் தாங்கள் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் மட்டுமின்றி, இந்த ஊழலில் அஸூர் பவர் என்ற நிறுவனத்தின் பெயரும் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டு அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 
அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

"அதானி நிறுவனத்துக்கு துணை நின்ற அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் கைது செய்து சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்த வேண்டும்" என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"கூடுதல் கட்டணத்தில் அதானி குழுமத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ள கே.பாலகிருஷ்ணன், "அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் இருப்பதால் முழு விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

என்ன நடந்தது?

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் (SECI) இருந்து சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் கொள்முதல் செய்ய வைப்பதற்காக அதானி பேசியதாகவும் அதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக விவாதித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 
அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019 - 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசின் SECI - இருந்து சூரிய மின் சக்திக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது
யார் அந்த அரசு அதிகாரி?

"ஆந்திராவில் 2200 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் 650 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பெற ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது" என்கிறார், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

"அதானியிடம் இருந்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்கியதா... இல்லையா என்பது தற்போதைய பிரச்னை இல்லை" எனக் கூறும் ஜெயராம், "மத்திய அரசின் சோலார் பவர் கார்பரேஷனுக்கு அதானி மின்சாரத்தை விநியோகம் செய்கிறார். அதை வாங்க வைப்பதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதானியே ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

"2020-2021 ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என ஜெயராம் வெங்கடேசன் கூறுகிறார்.

 
அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,JEYARAM VENKATESAN / FACEBOOK

படக்குறிப்பு, இங்குள்ள எந்த அரசு அலுவலரிடம் பேரம் பேசப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் ஜெயராம் வெங்கடேசன்
ஒப்பந்தம் போடப்பட்டது எப்போது?

இதே கருத்தை வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில், 'ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து (SECI)) சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் (Power Sale Agreement) மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திர மின்வாரிய அதிகாரிக்கு 1750 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

2021 செப்டம்பர் 16-ஆம் தேதி அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை சோலார் பவர் கார்பரேஷன் மூலமாக பெறுவதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் உட்பட பல தலைவர்களும் இதில் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்
செந்தில் பாலாஜி சொன்னது என்ன?

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

"அதானி குழுமத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வணிகரீதியில் எந்த உறவும் இல்லை" என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில், பல மாநிலங்களைக் குறிப்பிட்டுக் கூறியதில் தமிழ்நாட்டின் பெயரையும் ஒரு வரியில் சேர்த்துவிட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு மத்திய மின்வாரியத்துடன் 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார்.

இந்த ஒப்பந்தம் மத்திய அரசு நிறுவனமான சோலார் பவர் கார்பரேஷனுடன் மட்டுமே கையெழுத்தாகியுள்ளதாக, அவர் கூறினார்.

சூரிய மின்சக்தி கொள்முதல் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "யாருக்கெல்லாம் சூரிய மின்சக்தி தேவைப்படுகிறதோ, அவர்கள் சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் பேசி விலையை இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர்" என்றார்.

அந்த வரிசையில், 1500 மெகாவாட் சூரிய சக்தியைப் பெறுவதற்கு 25 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

 
அதானி - தமிழ்நாடு சூரிய மின்சக்தி ஒப்பந்தம்

பட மூலாதாரம்,JAISANKAR / FACEBOOK

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர்
விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்

செந்தில்பாலாஜி கருத்தைச் சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், "அ.தி.மு.க ஆட்சியில் சூரிய ஒளி மின்சக்தியை ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதாக அ.தி.மு.க அரசு கூறியது. தற்போதைய சந்தை விலை என்பது 2 ரூபாய் என்கின்றனர். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டதா என்பது ஒப்பந்த விவரங்களை ஆராய்ந்தால் தான் தெரியும்" என்கிறார் ஜெயராம் வெங்கடேசன்.

தமிழ்நாட்டில் மின்சார கொள்முதல் என்பது 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்ததாக கூறுகிறார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர்.

"தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் இயங்குகிறது. இதற்கு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதுதான் காரணமா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-

4 weeks 1 day ago
seeman-new.webp?resize=678,375&ssl=1 சங்கி என்றால் நண்பன் என்று பொருள் -செந்தமிழன் சீமான்-

ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள்.

உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கி என்று கூறுபவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்க சென்றீர்கள் என கூறுவதில்லை… என்ன சந்தித்து உரையாடினீர்கள் என கூறுவதில்லை. இப்போது நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசியதை கூறுகிறேன்.. அதை ஏன் கூறுவதில்லை?. என்னை வந்து கேட்கிறார்கள் கள்ள உறவா என்று, நல்ல உறவே இருக்கிறது.

பொண் கொடுத்து பொண் எடுத்த சம்மந்திங்கள் போல பிரதமரும், முதலமைச்சரும் சந்திக்கின்றார்கள். ஆனால் வெளியில் வந்து எங்களை சங்கி என்கிறார்கள். இது என்ன கொடுமை? . திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால்,.. இதை எப்படி சொல்வது? … அப்படியாயின் பெருமையாக நாங்கள் சங்கி என்பதை ஏற்கதான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1409534

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?

1 month ago
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக தம்பதியர் சார்பில் வழக்கறிஞர் மூலம் நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி சார்பில் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், உணர்வு ரீதியான காரணங்களால் இருவரும் பிரிய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"மணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானும் பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்திருக்கிறார்கள். திருமண பந்தத்தில் ஏற்பட்ட உணர்வு ரீதியான சில அழுத்தங்களால் பிரியும் முடிவுக்கு இருவரும் வந்தார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தாலும், இருவரின் பந்தத்தில் ஒருவித அழுத்தம் இருந்தது. இருவருக்கும் நடுவே இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இருவராலும் அந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை" என்று வந்தனா ஷா குறிப்பிட்டுள்ளார்.

 

"நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி முகமை தகவலின்படி, விவாகரத்து முடிவை சாய்ரா பானு முதலில் வெளியிட, பின்னர் இருவர் தரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மிகுந்த வலியுடன் திருமண பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்ததாக சாய்ராவும் ஏஆர் ரஹ்மானும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வாழ்க்கையின் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வர, மக்கள் தங்களது தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுமாறு இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாய்ரா பானு - ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் 1995-ஆம் ஆண்டு நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹிமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வாழ்க்கை
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன் தான் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான். சிறுவயது முதலே இசைக் கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வியைக்கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.

விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.

1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் தொடர்ந்து அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது 32 ஆண்டுகால இசை வாழ்க்கையில் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட உலகின் உயரிய பல விருதுகளை வென்றுள்ளார்.

திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் தனது 23-வது வயதில் 1989-ஆம் அண்டு இஸ்லாமைத் தழுவினார். தன்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது எளிய வாழ்க்கை மற்றும் மனித நேயம் என்று அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த ஒரு நேர்காணலில், "இஸ்லாம் என்பது ஒரு பெருங்கடல். அதில் 70-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அன்பை போதிக்கும் சூஃபி தத்துவத்தை நான் பின்பற்றுகிறேன்." என்று தெரிவித்தார்.

57 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர், 2 கிராமி மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

 
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார்

2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையை பெற்றார்.

விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசினார். "நான் கீழே அமர்ந்திருந்தபோது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ.. இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்." என்று பின்னர் ஒரு தருணத்தில் அவர் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய கலைஞர்களுடன் இணைந்து ரஹ்மான் பணிபுரிந்துள்ளார். மக்களை ஒருங்கிணைக்க இசை ஒரு கருவியாக இருக்கும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து.

தேசிய கீதம் முதல் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரையில் இவருடைய இசை பரவியிருந்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

கோவை: ஸ்கூட்டரில் 'ஜிபிஎஸ்' பொருத்தி ஆளை கண்காணித்து வீட்டை கொள்ளையடித்த கும்பல் சிக்கியது எப்படி?

1 month ago
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் டூ வீலர்களில் ஜிபிஎஸ் பொருத்தி, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, பகலில், வீட்டில் கொள்ளையடித்துள்ளனர் (சித்தரிப்பு படம்)
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டுள்ளது. கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வீட்டில் இருந்தவர்களின் ஸ்கூட்டரில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, அவர்களது நடமாட்டத்தை கண்காணித்து இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆள் இல்லாத வீட்டில் நடந்த கொள்ளை பற்றி போலீசார் துப்பு துலக்கியது எப்படி? கொள்ளையடித்துவிட்டுச் சென்ற கும்பலை ஒரே வாரத்தில் போலீசார் பிடித்தது எப்படி?

என்ன நடந்தது?

கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு (வழக்கு எண்: 352/2024), கடந்த அக்டோபர் 21 அன்று பதிவானது. கிழக்கு சம்பந்தம் சாலையில், ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் குமார் என்பவர் தான் அந்த புகாரை அளித்திருந்தார். முதல் தகவல் அறிக்கையில், அந்த திருட்டு தொடர்பான விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

குமார், ஆர்எஸ் புரம் விசிவி ரோட்டில் மளிகைக் கடையும், ஓர் உணவகமும் வைத்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும் காலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டைப் பூட்டி விட்டு, காலை பத்தரை மணிக்குக் கடைக்குப் போய் விடுவது வழக்கம். அதே வீட்டின் கீழ் தளத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் குடியிருந்து வருகிறார்.

அக்டோபர் 21 அன்று, மதியம் இரண்டரை மணியளவில், குமாரை உடனே வருமாறு செல்வராஜ் அவசரமாக அழைத்துள்ளார். அங்கே சென்று பார்த்த போது, குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு, 60 சவரன் நகையும், ரூ.14 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

‘கார்களில் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை’

இரண்டு பேர், மாடி வீட்டிலிருந்து ஹெல்மெட் உடன் இறங்கிச் சென்றதைப் பார்த்து, வீட்டு உரிமையாளர் செல்வராஜ், நீங்கள் யாரென்று கேட்டதும், இருவரும் நிற்காமல் ஓடிச் சென்று, வெளியில் நின்ற காரில் ஏறி, பூ மார்க்கெட் பக்கமாக வேகமாகச் சென்று விட்டனர். அவரும், அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண்ணும் சத்தம் போட்டும் காரை நிறுத்தவில்லை.

அதன்பின், மாடியில் சென்று பார்த்தபோது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்து செல்வராஜ் அதிர்ச்சியடைந்து, குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் யாவும் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிலிருந்த ‘சிசிடிவி’ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் ஆட்களை அடையாளம் கண்டறிய முடியவில்லை.

ஆனால் ஏழே நாட்களில் இருவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த ஜாஹீர் உசேன், மோனிஸ் என்பதைக் கண்டு பிடித்தனர். இருவரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிப்பதற்கு முன், கொள்ளையர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குப் பயன்படுத்திய அதிநவீன தொழில் நுட்பங்கள், அவர்களைக் கைது செய்வதற்கு மேற்கொண்ட புலனாய்வு முறைகள் பற்றிய பல சுவராஸ்யமான தகவல்களை, ஆர்எஸ் புரம் போலீசார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

 
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, (சித்தரிப்பு படம்)
‘வாகனத்தில் மேக்னடிக் ஜிபிஎஸ் கருவி பொருத்தம்’

‘‘திருட்டு நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து ஆட்களை அடையாளம் காண முடியவில்லை. அதன்பின், அவர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்துத் தேடினோம். அதில் இருந்த கேரளா பதிவெண் போலி என்பது தெரியவந்தது. அதே நிறமுள்ள கார் அப்பகுதியில் உள்ள வேறு இடங்களில் வலம் வந்துள்ளதை வேறு சில சிசிடிவி பதிவுகளில் கண்டுபிடித்தோம். அந்த காரின் ஒரிஜினல் எண்ணைக் கண்டுபிடித்த போது, அது சேரன் மாநகரில் ஓரிடத்தில் தினசரி ரூ.1750-க்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரியவந்தது.’’ என்று தெரிவித்த போலீசார், தொடர்ந்து விவரித்தனர்.

‘‘அந்த காரை வாடகைக்குக் கொடுக்கும் போது, ஒரு மெசேஜ் அனுப்பி, கார் எடுப்பவரின் எண்ணை உறுதி செய்கின்றனர். அதில் தரப்பட்ட எண்ணை வைத்து, அந்த நாளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த டவர்களுக்கு உட்பட்ட பகுதியில் அந்த மொபைல் போன் பயன்பாட்டில் இருந்தது என்று பார்த்தபோது, அவர்கள் எங்கெங்கு காரை நிறுத்தி, என்னென்ன வாங்கினார்கள் என்று தெரியவந்தது."

"பூட்டை உடைப்பதற்காக சுக்ரவார்பேட்டையில் ஒரு கடையில் நிறுத்தி, டூல்ஸ் வாங்கியுள்ளனர். அந்த சிசிடிவியில்தான் அவர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது.’’ என்று போலீசார் கூறினர்.

இருவரில் ஜாஹீர் உசேன் மீது ஏற்கெனவே கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் கார் திருட்டு, அன்னுாரில் ஒரு கூட்டுக் கொலை வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆர்எஸ் புரம் போலீசார், "மோனீஸ் மீது குனியமுத்துார் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்குப் பதிவாகியுள்ளது. இவர்களிடம் விசாரித்ததில், குமாரையும், அவரின் மனைவியையும் நீண்ட காலமாகக் கண்காணித்து, அவர்களின் வீட்டில் பெரிய அளவில் பணமும், நகையும் இருக்குமென்று திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.’’ என்று கூறினர்.

 
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,AMAZON

படக்குறிப்பு, 'கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன' என்கிறார் ஆராய்ச்சியாளர் மோகன்

இந்த கொள்ளை நடப்பதற்கு முன்பாக, குமார், அவரின் மனைவி இருவரின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் கடைபிடித்த உத்திதான் இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று ஆர்எஸ் புரம் போலீசார் கூறினர்.

அதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘குமாரும், அவரின் மனைவியும் தனித்தனியாக டூ வீலர்கள் வைத்துள்ளனர். அவர்களின் கடைகளுக்கு அடிக்கடி சென்று வந்த கொள்ளையர் இருவரும், குமாருக்கும், அவரின் மனைவிக்கும் தெரியாமல், அவர்களின் டூ வீலர்களில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’ கருவியை, பொருத்தியுள்ளனர். அதை வைத்து அவர்கள் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டிற்கே சென்று பகலில் கொள்ளையடித்துள்ளனர்.’’ என்றனர்.

 
‘குழந்தைகளின் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கருவி’
கோவை, கொள்ளையர்கள் கைது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இத்தகைய ஜிபிஎஸ் கருவிகளை குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் கார்களில் பொருத்தியுள்ளனர் என்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார்

இந்த வழக்கின் புகார்தாரரான குமாரிடம், உங்கள் டூ வீலரில் ‘மேக்னடிக் ஜிபிஎஸ் பொருத்தியது உங்களுக்குத் தெரியவில்லையா என்று பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘கடைசி வரை எனக்கு அது தெரியவே இல்லை. போலீசார்தான் ‘என்னுடைய வாகனத்தில் அதைப் பொருத்தியிருப்பதாக குற்றவாளிகள் சொன்னதாகத்’ தெரிவித்து, அதை எடுத்துள்ளனர். எப்படிப் பொருத்தினார்கள், எப்போது பொருத்தினார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்ட நாட்களாக எங்களை கண்காணித்துள்ளனர்’’ என்றார்.

இது போன்று ‘மேக்னடிக் ஜிபிஎஸ்’களை வாகனங்களில், உரிமையாளருக்குத் தெரியாமல் பொருத்த முடியுமா என்பது பற்றி, வனத்துறைக்காக ‘ஜிபிஎஸ்’ பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் மோகன் பிபிசி தமிழிடம் விளக்கியபோது, ‘‘இப்போது கார்களில், டூ வீலர்களில் பொருத்தக்கூடிய அதிநவீன மேக்னடிக் ‘ஜிபிஎஸ்’கள் வந்து விட்டன. அமேசானில் 1,400 ரூபாய்க்கு இவை கிடைக்கின்றன.” என்கிறார்.

மேலும், “வாய்ஸ் ரிக்கார்டர் உடன் ஜிபிஎஸ் கருவிகளே, 3000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த கருவிகள் வாகனத்தின் ஒரு பாகம் போலவே இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த காந்தத்துடன் வைத்து, வாகனத்தின் இரும்பு பாகத்தில் ஒட்ட வைத்துவிட்டால் யாராலும் எளிதில் கண்டறிய முடியாது. வாகனத்தைப் பற்றி சற்று தெரிந்தவர்களே இதைக் கண்டுபிடிக்க முடியும்.’’ என்று தெரிவித்தார்.

கார் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘‘இத்தகைய ‘ஜிபிஎஸ்’கள் செயல்பட பேட்டரி அவசியம். முன்பு கார்களில் உள்ள பேட்டரிகளில் இவற்றை இணைக்க வேண்டியிருந்தது. இப்போது மொபைல் போன்களில் உள்ள லித்தியம் பேட்டரியுடன் இயங்கும் கைக்கு அடக்கமாக ‘ஜிபிஎஸ்’ கருவிகள் வந்து விட்டன.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “கார்களில் உள்ள பழுதுகளை சென்சார் மூலமாக ‘ஸ்கேன்’ செய்வதற்கு உதவும் ‘டயாக்னஸ்டிக் டிரபிள் கோடு கப்ளர்’ (Diagnostic Trouble Code coupler) இருக்கும். அதில் ‘ஜிபிஎஸ்’ பொருத்தினால் பேட்டரி தேவையில்லை. அதை மொபைலில் ‘ஆப்’ டவுன்லோடு செய்து, இணைத்துக் கொண்டால், வாகனத்தின் நடமாட்டத்தை, மொபைலிலேயே கவனித்துக் கொள்ளலாம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக பலரும் இவற்றை கார்களில் பொருத்தியுள்ளனர்.’’ என்று விளக்கினார்.

‘‘இந்த ‘ஜிபிஎஸ்’ கருவிகள், நகருக்குள் இருக்கும்போது, வாகனத்தின் நகர்வைத் துல்லியமாகக் காண்பிக்கும். டவர்கள் அதிகமில்லாத பகுதியாக இருந்தாலும், அதிகபட்சமாக ஒரு நிமிடம் வரை மட்டுமே தாமதமாகக் காண்பிக்கும். அதனால் இந்த கருவி பொருத்திய வாகனம், எங்கே வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் இயக்கப்படுகிறது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும். வாகனதாரர்கள் விழிப்புணர்வாய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று தெரிவித்தார் ஆராய்ச்சியாளர் மோகன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி

1 month ago

 

ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
SelvamNov 17, 2024 12:41PM
WhatsApp-Image-2024-11-17-at-12.16.24-PM

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைதான நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி  பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தநிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக குழந்தையுடன் இருந்த நடிகை கஸ்தூரி கைது என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நேற்று நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், கஸ்தூரி இன்று சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடம் சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவரை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த உள்ளனர்.



https://minnambalam.com/tamil-nadu/police-investigate-with-kasturi-in-chennai/

 

தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”

1 month ago
image

திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் காம்பவுண்ட் சுவருக்குள் இரண்டு மர்ம நபர்கள் இன்று (16) அதிகாலை 3 போத்தல்களில் அடைத்து கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. தியேட்டருக்கு எந்த சேதமும் இல்லை. மேலப்பாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. 

இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." 

தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி  எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், "நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளது.

தேசிய சுதந்திரத்துக்காக முழங்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆசாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய 'ஜெய் பஜ்ரங்பலி' என்ற கோஷம் இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய கோஷமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்டிபிஐ  கட்சியினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை முன்னெடுத்தன. 

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்க சுவருக்குள்  மர்ம நபர்கள் பெட்ரோல்  குண்டு வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/198935

Checked
Sun, 12/22/2024 - 12:59
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed