சென்னை: 85% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டதாக கூறும் உலக காட்டுயிர் நிதியம் - விளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,TNSWA
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும்.
சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான 'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது.
குறிப்பாக சென்னை பெருநகரம், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலக காட்டுயிர் நிதியத்தின் ஆய்வறிக்கை, சென்னையிலுள்ள சதுப்பு நிலங்கள் அழிந்து வருவது குறித்துப் பேசியுள்ளது, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
இந்த ஆய்வறிக்கை, சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பித்தல், வெள்ளத் தடுப்பு ஆகிய முக்கியமான இயற்கை செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கை குறித்துப் பேசும் சூழலியலாளர்கள், “இனி சதுப்பு நிலத்தில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே, மிச்சம் இருக்கும் சதுப்பு நிலங்களையாவது நாம் பாதுகாக்க முடியும்,” என்கின்றனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக" பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டதையும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சதுப்பு நில அழிவின் காரணமாக, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,ARUN SANKAR
“கடந்த 2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இது முன்பு நிகழாதது அல்ல. ஆனால், வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து காக்கும் சதுப்பு நிலங்களின் அழிவால் நிலைமை மோசமானதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை.
சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் அவை மேற்கொள்ளும் இயற்கை செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அவை,
- நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன.
- ஆறுகள், ஏரிகள், சிற்றோடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாகத் திகழ்கிறது.
- வலசை வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன.
- தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாக அவை செயல்படுகின்றன.
இதன்மூலம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றைத் தடுப்பதில் சதுப்பு நிலங்கள் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பட மூலாதாரம்,TNSWA
சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகளாக விளங்குகின்றன.
"சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் சதுப்பு நிலங்கள் குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலேயே" இத்தகைய அழிவு ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எஞ்சியிருக்கும் சதுப்புநிலங்களை உடனடியாகக் காக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வறிக்கை சுட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
அதற்கு முதல்படியாக, “எந்த வகையிலும் சதுப்பு நிலங்களை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக முடிவெடுக்க வேண்டும்” என்கிறார், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோ. சுந்தர்ராஜன்.
வெள்ளத்தைத் தடுக்க மட்டுமல்ல, வறட்சியைக் கட்டுப்படுத்தவும் சதுப்பு நிலங்கள் முக்கியம் என்கிறார் அவர்.
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கும் ‘‘தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ (Tamilnadu Wetland Mission) குறித்துக் குறிப்பிடுகிறார் சுந்தர்ராஜன்.
“இந்தத் திட்டம் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற பெரிய சதுப்பு நிலங்கள் மீதுதான் கவனம் செலுத்துகிறது. இதுதவிர, மற்ற நீர்நிலைகள் மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்திற்கான விதிமுறைகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை” என்கிறார் அவர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று என தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிடுகிறது.
“அதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்ஹாம் கால்வாய், பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன” என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு ( Russel’s Viper) மற்றும் அரிவாள் மூக்கன் (Glossy lbis), நீளவால் தாழைக்கோழி (Pheasant-tailed Jacana) உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக பள்ளிக்கரணை விளங்குகிறது.
“பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உண்மையான மொத்த பரப்பளவில், தற்போது 10% மட்டுமே எஞ்சியிருப்பதாக’ அரசின் ‘வெட்லாண்ட் மிஷன்’ இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
“சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் குறித்த நிலவரைத் தொகுப்பை அரசு (Atlas) உருவாக்க வேண்டும். அதன் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்து அங்கு யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம், சதுப்பு நிலம் குறித்த வரையறையை மக்கள் அறிந்து கொள்ள முடியும்” என்கிறார் சுந்தர்ராஜன்.
பட மூலாதாரம்,TNSWA
சதுப்பு நிலங்கள் குறித்த ஆராய்ச்சியாளரான தாமோதரன் கூறுகையில், “அனைத்துமே குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் நகரை விரிவுபடுத்த சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன” என்றார்.
சதுப்பு நிலங்களின் அழிவுக்கு அதில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளும், மக்களால் உருவாக்கப்படும் கழிவுகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“சதுப்பு நிலங்களின் பௌதீக எல்லை என்பது வேறு, அதன் சூழலியல் எல்லை என்பது வேறு. சூழலியல் எல்லை என்பது, சதுப்பு நிலத்தின் எல்லையையும் தாண்டியது. நீர்பிடிப்புப் பகுதி வரை சதுப்பு நிலத்தின் எல்லை உள்ளது. இதை மனதில் வைத்து அதன் எல்லையை வரையறுக்க வேண்டும்," என்கிறார் தாமோதரன்.
மேலும், சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் தொடர்ந்து நிலவுகின்றன என்கிறார் அவர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கடந்த 1911ஆம் ஆண்டு வருவாய் ஆவணப் பதிவுகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை முழுமையாக சர்வே செய்து, அதைத் தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் எஞ்சியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. நகராட்சி மற்றும் நீர்வளத்துறை இணைந்து இதற்காகப் பணியாற்றுகிறோம். மக்களும் இதற்கான ஒத்துழைப்பைத் தரவேண்டும். ஆக்கிரமிப்புகள் காரணமாக சதுப்பு நிலம் அழிந்திருக்கிறது. மனிதர்களால் ஏற்படும் கழிவுகளும் ஆபத்தானவையாக உள்ளன," என்றார்.
நகரமயமாக்கல் காரணமாக இத்தகைய அழிவு ஏற்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவை. ஆனால், அவை நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. திட்டங்களை இயற்கையை அழித்து மேற்கொள்ள முடியாது, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற பார்வை அரசுக்கு உள்ளது," எனத் தெரிவித்தார் தங்கம் தென்னரசு.
நீர்நிலைப் பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கக் கூடாது எனப் பல உத்தரவுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அவர், அப்படி உத்தரவுகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். அதோடு, சென்னை மற்றும் புறநகரில் இருக்கக்கூடிய ஏரிகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளையும் அரசு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு