தமிழகச் செய்திகள்

49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?

18 hours 9 minutes ago

"நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது"

படக்குறிப்பு, மகளுடன் சேர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் தேர்வான தாய் அமுதவள்ளி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 1 ஆகஸ்ட் 2025, 13:05 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பிளஸ் 2 முடித்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆறு மாதங்களாக மகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்குப் படித்து தேர்வு எழுதினேன். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை" எனக் கூறுகிறார், தென்காசியை சேர்ந்த 49 வயதான அமுதவள்ளி.

பிஸியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் அமுதவள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியிருக்கிறார்.

அதேநேரம், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்' என மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன. அதிக வயதில் மருத்துவம் படிப்பதற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமைன்று (ஜூலை 30) தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கான ((PwD category) கலந்தாய்வு புநடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் தென்காசியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான அமுதவள்ளி என்பவர் பங்கேற்றார். கலந்தாய்வு முடிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அமுதவள்ளி எழுதியுள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் டூ படிப்பை முடித்த அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணியும் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இதில் 720 மதிப்பெண்ணுக்கு 147 மதிப்பெண்ணை அமுதவள்ளி பெற்றுள்ளார். அவரது மகள் சம்யுக்தா 441 மதிப்பெண் எடுத்துள்ளார்.

"பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இருக்கிறேன். எனக்கும் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது சுயநிதி கல்லூரியில் இடம் கிடைக்குமென நம்புகிறேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சம்யுக்தா கிருபாளணி.

மகளுடன் சேர்ந்து மருத்துவம் படிக்கத் தேர்வான தாய்

படக்குறிப்பு, "நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது'' என்கிறார் அமுதவள்ளி

'மகளால் வந்த ஆர்வம்'

"1994 ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்தேன். அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுழைவுத் தேர்வும் பிளஸ் டூ மதிப்பெண்ணும் முக்கியமாக இருந்தன. அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார் அமுதவள்ளி.

ஆனால், பிஸியோதெரபிஸ்ட் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக பிபிசி தமிழிடம் கூறிய அமுதவள்ளி, "கடந்த ஓராண்டாக என் மகள் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். யாரிடமாவது சொல்லிப் படித்தால் மனப்பாடம் ஆகும் என்பதால் என்னிடம் சொல்லிப் படித்தார். அதைப் பார்த்து நானும் தேர்வு எழுதும் முடிவுக்கு வந்தேன்" என்கிறார்.

இவரின் கணவர் மதிவாணன் வழக்கறிஞராக இருப்பதால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தின் தேவைகளை அவர் கவனித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.

"கடந்த ஆண்டு நீட் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்ததால் மகளால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இந்தமுறை நானும் மகளும் இணைந்து படித்தோம். தினசரி ஆறு மணிநேரத்தை நீட் தேர்வுக்காக ஒதுக்கிப் படித்தேன்" என்கிறார், அமுதவள்ளி.

கடந்த ஆண்டு தனது மகளை நீட் பயிற்சி வகுப்பில் அமுதவள்ளி சேர்த்துள்ளார்.

'உயிரியல் பாடம் கைகொடுத்தது'

நீட் தேர்வு குறித்துப் பேசும் அமுதவள்ளி, " இயற்பியல் தேர்வு மிகக் கடினமாக இருந்தது. எல்லாம் கணக்குகளாக இருந்தால் ஒன்றும் புரியவில்லை. மத்திய பாடத்திட்டத்தில் (CBSE) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பாடம் மட்டுமே கைகொடுத்தது" என்கிறார்.

இவர் தமிழ் வழியில் பிளஸ் டூ படிப்பை முடித்துள்ளார். "நீட் தேர்வையும் தமிழ் வழியில் எழுதினேன். ஒரு கேள்விக்கு கொடுக்கப்படும் நான்கு விடைகளும் ஒன்றுபோலவே இருக்கும். அதை கண்டறிவது தொடர்பாக மகள் கொடுத்த ஆலோசனைகள் உதவியாக இருந்தன" எனக் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருந்ததாகக் கூறுகிறார், அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணி.

"என்னுடன் சேர்ந்து படித்ததால் அம்மாவும் அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். ஆனால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டது" என்கிறார்.

அதேநேரம், 49 வயதில் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிப்பதை மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன.

"இவருக்கு தற்போது 49 வயதாகிறது. படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும்"

படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

ஓய்வுபெறும் வயதில் படிக்க வரலாமா?

"மருத்துவப் படிப்பு என்பது ஐந்தரை வருடங்களாக உள்ளது. தற்போது தேர்வானவருக்கு 49 வயதாகிறது. அவர் படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும். அறுபது வயதில் ஓய்வு பெற்றவர்களும் மருத்துவம் படிக்க வருகின்றனர்" எனக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரால் எத்தனை ஆண்டுகாலம் திறனுடன் உழைக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு ஓய்வுபெறும் வயதை தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் திறனுடன் வேலை பார்க்க முடியாது என்பது தான் காரணம்" என்கிறார்.

'ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது'

"இவர்களால் சமூகத்துக்கு எந்தளவுக்கு பலன் கொடுக்க முடியும் என்பது முக்கியமானது" எனக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "ஒருவர் தனது 49 வயதுக்குள் அதிக பட்டங்களைப் படித்து திறன்களை வளர்த்திருப்பார். அவரையும் பிளஸ் 2 படிப்பவரையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள், உயிரியியல் ஆசிரியர்களும் நீட் தேர்வு எழுதுவதாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "முன்பு மருத்துவப் படிப்புக்கு 25 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்டியல் சாதியினருக்கு 30 வயதாக உச்சவரம்பு இருந்தது" என்கிறார்.

வயது வரம்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "வழக்கு நிலுவையில் உள்ளதால் வயது வரம்பைத் தளர்த்திவிட்டனர். இதனால் ஐந்து முறைக்கும் மேல் சிலர் தேர்வுகளை எழுதுகின்றனர். வயது வரம்பு நிர்ணயிக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

இந்தக் கருத்தை மறுக்கும் அமுதவள்ளி, " பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு அதிக வயதில் ஒருவர் மருத்துவம் படிக்க வந்தால் அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறலாம். ஆனால், நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது" என்கிறார்.

பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு மூட்டு ஆகியவை குறித்துப் படித்திருப்பதாகக் கூறும் அவர், "இதைத்தான் மருத்துவப் படிப்பிலும் படிக்க உள்ளேன். மருத்துவம் படிப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்காமல் இருப்பது வரவேற்கத்தக்கது" எனவும் தெரிவித்தார்.

49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

வயது உச்ச வரம்பு வழக்கில் கூறப்பட்டது என்ன?

'நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை' என்ற தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கின் முடிவில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 'பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என, 2018 ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையேற்று, தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகமும், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு இல்லை' என்று அறிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn92gnre55po

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

1 day 22 hours ago

panneerselvam-pti.jpg?resize=750%2C375&s

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் நீடிக்கவோஇ விலகவோ நிர்வாகிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது”

3 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்;

1. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொஉமீகுழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் தொஉமீகுழு தனது உறவை முறித்துக்கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொஉமீகுழு இடம்பெறாது.

2.ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

3.எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது தற்போது இல்லை. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விலகியது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441362

மண் கொள்ளையின் காயங்களை சுமந்து நிற்கும் கோவை : புகைப்படங்கள் சொல்லும் உண்மை!

1 day 23 hours ago

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,கோவை மாவட்டத்தில் மண் கொள்ளை பாதிப்பு

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் 300 கி.மீ. துாரத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியிலும், அடிவாரப்பகுதிகளிலும் வனத்துறை, அரசு நிலங்கள் தவிர்த்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பட்டா நிலங்களும் உள்ளன.

பல்வேறு காட்டுயிர்களின் வாழ்விடமாக உள்ள இங்குதான் கடந்த 20 ஆண்டுகளில் அபரிமிதமான அளவுக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண் கொள்ளையில் அதிகமான சூழலியல் பாதிப்புக்குள்ளானது, தடாகம் பள்ளத்தாக்கு.

இதில் அமைந்துள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், 24 வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் எவ்வித அனுமதியுமின்றி 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இந்த சூளைகளுக்காகவே வரன்முறையின்றி பட்டா மற்றும் அரசு நிலங்களில் மண் கொள்ளை நடந்தது.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

படக்குறிப்பு,கோவை

உயர்நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு, மண் கொள்ளை மற்றும் சூழலியல் பாதிப்புகள் குறித்து குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பட்டா நிலங்களில் மட்டுமின்றி, வனத்துறை, பூமி தான நிலம், பஞ்சமி நிலம், அறநிலையத்துறை, மின் வாரிய நிலம், பாரதியார் பல்கலைக்கழக நிலம் நீர்நிலை உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் 5 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மண் கொள்ளை நடந்திருப்பதாக சர்வே எண்களுடன் 129 பக்க அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.379 கோடி மதிப்பில் மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், ரூ.59.74 கோடி மதிப்பிற்கு சூழலியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால் மண் கொள்ளையில் மதிப்பிடப்பட வேண்டிய 808 களங்களில் (Field) 565 இடங்களில் மட்டுமே ஆய்வு நடந்தது. விடுபட்ட 241 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 9500 ஏக்கர் பரப்பளவில் 5 மீட்டரிலிருந்து 45 மீட்டர் (ஏறத்தாழ 120 அடி) வரை மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், விடுபட்ட பரப்பளவு, மண்ணுக்கான தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின்படி, ரூ.40 ஆயிரம் கோடிக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு தெரிவித்தது.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

படக்குறிப்பு,கோவை

அபராதத்தொகையை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம் முறையீடு செய்தது. அதன்படி, கனிம வளத்துறை ஆணையரால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பட்டா நிலங்களில் மட்டுமே மண் எடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அபராதத்தொகை ரூ. 13.10 கோடியாகக் குறைக்கப்பட்டது.

சூளை உரிமையாளர்கள் பலரும் சேர்ந்து ரூ.9 கோடி வரை உடனே செலுத்திவிட்டனர். மண் கொள்ளை தொடர்பான வழக்கின் காரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு, 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டு மின் இணைப்பும் கூட துண்டிக்கப்பட்டது.

அதனால் இந்தப் பகுதியில் மண் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிருந்த சூளைகள் இதே மேற்குத் தொடர்ச்சி மலையில் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் கடுமையான பல உத்தரவுகளை வழங்கினாலும், இங்கே அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதே வழக்கின் மனுதாரர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் அனைவருடைய ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது.

இதுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கும் மண் கொள்ளை, சூழல் பாதிப்புகளை விளக்கும் புகைப்படத்தொகுப்பு:

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன

கோவையில் தடாகம் பள்ளத்தாக்கில் நடந்த மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன. தடாகம் அருகே மலையடிவாரத்திலுள்ள மூலக்காடு என்ற மருதங்கரை கீழ்பதி என்ற பழங்குடியின மக்களின் கிராமத்தில் மக்களுக்காக போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் இது. அரசு நிலத்தில்தான் பொது குழாய் போடப்படுமென்ற நிலையில், இந்த குழாயைச் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு, குழாய் மட்டும் விடப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்த பின்னர் இப்போது இந்த குழாய் மட்டும் அகற்றப்பட்டு விட்டது. மேடு மேடாகவே இருக்கிறது. இதேபோலவே, மின் கம்பங்கள் உள்ள பகுதிகளிலும் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு கம்பங்கள் தனியாக நிற்கின்றன.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,தடாகம் பள்ளத்தாக்கு

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தடாகம் பள்ளத்தாக்குக்கு உட்பட்ட 5 கிராம ஊராட்சிப் பகுதிகளில் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நிலங்களில் நடந்த மண் கொள்ளையின் மாறாத சாட்சிகள். மண் எடுக்கப்பட்ட இடங்கள் சரி செய்யப்படாமல் அந்த இடங்களில் சீமைக்கருவேலங்கள் மறைத்து நிற்கின்றன.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,தடாகம் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த செங்கல்சூளைகளின் புகைபோக்கிகளின் கழுகுப்பார்வை காட்சி (இவை தற்போது செயல்பாட்டில் இல்லை)

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்தில் மண் அகழப்பட்ட இடம்

உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளால் 209 செங்கல் சூளைகள் மூடப்பட்டன. மண் எடுத்த லாரிகள், இயந்திரங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. மண் கொள்ளைக்கும், சூழலியல் இழப்பிற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மண் கொள்ளை நடந்த இடங்கள் சரி செய்யப்படவில்லை.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் (கோப்புப்படம்)

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம்

பட மூலாதாரம்,GANESH

படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு மண் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் பிடிக்கப்பட்டன

மண் கொள்ளை குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்தப் பகுதிகளை மறைப்பதற்காக சீமைக்கருவேலம் மரங்களை அங்கே வளர்த்து விட்டிருப்பதாக குற்றச்சாட்டுகயும் முன்வைக்கின்றனர். இதுவரை அந்தப் பகுதிகளில் சீமைக்கருவேலம் மரங்கள் எங்கெங்கு காணினும் நிறைந்து வளர்ந்து நிற்கின்றன.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம், யானை வழித்தடம்

படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு பதிவான காணொளியில் மணல் அகழப்பட்ட இடம் அருகே யானை நடந்து செல்கின்றது.

மண் கொள்ளைக்கு எதிரான வழக்குகளில், அந்தப் பகுதியில் யானை வழித்தடமே இல்லை என்று செங்கல்சூளை உரிமையாளர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அறிவித்துள்ள 39 வழித்தடங்களில் 2 வழித்தடங்கள் இந்த மலைப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம், யானை வழித்தடம்

படக்குறிப்பு,இயற்கை நீரோடைகள் மூடப்பட்டுள்ளன - தடாகம் பள்ளத்தாக்கு

தடாகம் பகுதியில் நடந்த மண் கொள்ளையால் 112 இயற்கை சிற்றோடைகளில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவினர் குற்றம்சாட்டினர். தற்போது செங்கல் சூளை, மண் கொள்ளை நடக்கவில்லை. மாறாக மலையடிவாரத்தில் யானை வழித்தடங்களில் மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

தடாகம் வடக்கு காப்புக்காடுக்கு அருகில், மலையடிவாரத்தில் இயற்கையான நீரோடை துவங்குமிடத்திலேயே முற்றிலும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யானைகளின் பாதையைத் தடுக்கும் வகையில், மலையடிவாரத்தில் நீளமாக சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.

மலையிட பாதுகாப்புக்குழுமம் (HACA–Hill Area Conservation Authority) மற்றும் சூழல் முக்கியத்துவமுள்ள பகுதி (Eco Sensitive Zone) மற்றும் யானை வழித்தடம் என எதையும் கண்டு கொள்ளாமல் இங்கே அனுமதியில்லாமல் மணல் அகழப்பட்டுள்ளன.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம், யானை வழித்தடம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

நீதிமன்ற உத்தரவுகளால் மணல் அள்ளும் லாரிகள், இயந்திரங்கள் அவ்வப்போது காவல்துறையால் பிடிக்கப்படுகின்றன. ஆனால் இப்போதும் ஆங்காங்கே மண் அள்ளுவது பகலில் பகிரங்கமாகவே நடந்து வருகிறது. மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம், யானை வழித்தடம்

படக்குறிப்பு,கோவை மாவட்டம் நரசிபுரம் கிராமம்

கோவை, மணல் கொள்ளை, மேற்குத் தொடர்ச்சி மலை, தடாகம், இயற்கை வளம், யானை வழித்தடம்

படக்குறிப்பு, மாதம்பட்டி கிராமம், கோவை

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் ஆனைகட்டி மலையடிவாரப் பகுதிகளில் நடந்துவந்த மண்கொள்ளை இப்போது இடம் பெயர்ந்து மாதம்பட்டி, நரசிபுரம், தொண்டாமுத்துார், கோவனுார், தோலம்பாளையம் என வேறு சில பகுதிகளில் நடந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gezpp6vldo

நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் ஆணவக்கொலை

3 days 18 hours ago

'தந்திரமாக பேசி அழைத்துச் சென்றான்' - மென்பொறியாளர் ஆணவக்கொலையில் என்ன நடந்தது?

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

படக்குறிப்பு,கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும்

29 ஜூலை 2025, 02:47 GMT

நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

படக்குறிப்பு,சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் கவின் செல்வ கணேஷ்

என்ன நடந்தது?

கொலை தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:

கவின் செல்வ கணேஷ் சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல் நலமின்றி இருந்த அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார்.

கவின் பாளையங்கோட்டை வந்திருந்ததை அறிந்த அவரது காதலியின் சகோதரரான சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக்கொலையில் முடிந்துள்ளது.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ்

சுர்ஜித் ஒப்புதல் வாக்குமூலம்

பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், "சுர்ஜித்தின் அக்காவும், கவின் செல்வ கணேஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதல் சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை சுர்ஜித் அவரது அக்காவை கண்டித்ததுடன், கவினையும் அழைத்து எச்சரித்துள்ளார்.

ஆனால், சுர்ஜித்தின் அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த சுர்ஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டதாக சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்தார்" என்று தெரிவித்தார்.

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தாய்-தந்தையே காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் செல்வ கணேஷ், சுர்ஜித்

படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட சுர்ஜித்

"கவினை தந்திரமாக பேசி சுர்ஜித் அழைத்துச் சென்றான்"

பிபிசி தமிழிடம் அழுது கொண்டே பேசிய கவினின் தாய் தமிழ் செல்வி, "எனக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ். பொறியியல் முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தான். பள்ளியில் படிக்கும் போதே கவினும் சுர்ஜித்தின் அக்காவும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பதால், எங்களது பின்னணி சுர்ஜித்தின் குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு வாரத்துக்கு முன் கீழே விழுந்த என் அப்பாவுக்கு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். அவருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுர்ஜித்தின் அக்காவிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் மருத்துவராக பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு கவின் அழைத்துச் சென்றான். கவினுடன் நான், எனது மற்றொரு மகன் மற்றும் என் சகோதரர் ஆகியோருடன் உடன் வந்திருந்தோம்." என கூறினார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார்

மேலும் பேசிய அவர், "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சித்த மருத்துவமனைக்கு என் அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த போது சுர்ஜித் அங்கே வந்தான். அவனது பெற்றோர் கவினை பார்க்க வேண்டும் என கூறியதாக சொல்லி சுர்ஜித் அழைத்தான். அதை நம்பி சுர்ஜித்துடன் கவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான்.

சித்த மருத்துவ ஆலோசனை முடிந்த பின் நானும் எனது இளைய மகனும் மற்றும் என் தம்பி கேடிசி நகர் சாலையில் சென்ற போது எனது மகனுடன் சுர்ஜித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். இதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற போது என்னை தகாத வார்த்தையில் சுர்ஜித் திட்டினான். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் என் மகனை சுர்ஜித் கொலை செய்துவிட்டான். கவினை கொலை செய்ய தூண்டிய சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார்

"ஒரு இளைஞனை சாதி மிருகமாக்கி உள்ளது"

சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பெற்றோர் காவல்துறையில் பணியாற்றும் நிலையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத இளைஞனால் அவரது அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு சாதி வன்மமே காரணம்." என்றார்.

2022ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்து ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் தேவை என்று மனு அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த தனி சட்டத்தையும் தமிழக அரசு இயற்றவில்லை என அவர் கூறினார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு அளித்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் இது பின்பற்றப்படவில்லை எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

"ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கதிர்.

நெல்லை மென்பொறியாளர் ஆணவக்கொலை, கவின் குமார் , எவிடென்ஸ் கதிர்

பட மூலாதாரம்,KATHIR

படக்குறிப்பு,ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் கதிர்

கவின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம்

சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்த பின்னரே முக்காணியில் சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjdy548e5v7o

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அமைத்த பிரமாண்ட ஏரி தற்போது எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு

5 days 3 hours ago

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 27 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன?

அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும்.

ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி.

கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார்.

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.

இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது.

அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன்.

இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சோழ கங்கம் ஏரி, ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், gangai konda cholapuram

படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று...

இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.

கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன.

திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல்.

ஷார்ட் வீடியோ

Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07

01:07

p0lsh9xj.jpg.webp

காணொளிக் குறிப்பு,

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார்.

"உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை.

அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது.

"அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன.

மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.."

ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி, gangai konda cholapuram, கங்கை கொண்ட சோழபுரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில்

இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார்.

இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல்.

மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது.

ஷார்ட் வீடியோ

Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20

01:20

p0lshdm8.jpg.webp

காணொளிக் குறிப்பு,

"இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார்.

இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன்.

"இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்."

கங்கை கொண்ட சோழீஸ்வரம், gangai konda cholapuram, கங்கை கொண்ட சோழபுரம்

ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன்.

இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

5 days 18 hours ago

27 JUL, 2025 | 10:29 AM

image

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்  ஆர்பாட்டம் நடந்தது.

524162432_738352129058663_47246045729388

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்..

524222405_738352059058670_92011522220476

இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும்.. ஐநா உரிமை ஆணையமே.. நீதி வழங்க மறுக்காதே.. இனியும் மவுனம் காக்காதே.. இந்திய அரசே.. மத்திய அரசே.. குரல் கொடு.. குரல் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு குரல் கொடு.. தமிழக அரசே தமிழக அரசே.. அழுத்தம் கொடு அழுத்தம் கொடு.. பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடு.. ” என்று கோஷமிட்டனர்.

https://www.virakesari.lk/article/221042

திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

1 week ago

அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

கட்டுரை தகவல்

  • மாயகிருஷ்ணன் கண்ணன்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது.

இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது.

அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.

சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர்.

'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை'

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ்.

"கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர்.

கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில்

"கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன்

அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன்.

கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை

திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு

இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyg8l17333o

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

1 week 1 day ago

New-Project-319.jpg?resize=750%2C375&ssl

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார்.

பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையுடன் இந்தக் கடமையை நிறைவேற்றப் போகிறேன் என்று கூறினார்.

மூத்த நடிகர் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கரகோஷம் சபையில் எழுந்தது.

கமல்ஹாசன் மாநிலங்களவையில் நுழைந்தது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

ஏனெனில் அவர் முதல் முறையாக தேசிய சட்டமன்றப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

69 வயதான அரசியல்வாதி ஜூன் 12 அன்று திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஊழல், கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்டு 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தனது கட்சியைத் தொடங்கினார்.

2019 மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி சுமார் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது.

பின்னர் அவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அங்கு கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440613

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

1 week 1 day ago

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர்.

கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'தமிழ்நாடு கள் இயக்கம்' நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது.

அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளை அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா?

கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா?

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா.

கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது?

இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார்.

''இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.'' என்கிறார் அவர்.

பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, "அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்," என்கிறார்.

தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், "அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்," என்கிறார்.

"கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார் வந்தனா.

இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால்

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்

இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை,'' என்கிறார் வந்தனா.

கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?

கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் உணவியலாளர் வந்தனா, ''எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.'' என்கிறார்.

பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார்.

கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா?

கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா?

கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் வந்தனா.

இதை மேலும் விளக்கிய அவர், "அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்," என்கிறார்.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.'

உடல் வெப்பத்தை கள் குறைக்குமா?

உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?

"கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் வந்தனா.

கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது?

கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, "ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்புச் சுவை பெறுகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்" என்கிறார்.

இதை மேலும் விவரித்த அவர், ''ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,'' என்றார்.

சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார்.

தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார்.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன்.

''கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,'' என்றார் கார்த்திகேயன்.

கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.

''உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.'' என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78n8wgpey8o

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

1 week 1 day ago

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார்.

சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன?

பெண் வழக்கறிஞரின் புகார்

சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் இணைய குற்றப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில், "கல்லூரியில் படித்தபோது ஒருவரைக் காதலித்தேன். அவருடன் தனிமையில் இருந்தபோது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். தற்போது அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவர் பரப்பிவிட்டுள்ளார்" எனக் கூறியிருந்தார்.

அந்தரங்க வீடியோ பரவினால் என்ன செய்ய வேண்டும்? பெண் வழக்கறிஞர் வழக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தனது அந்தரங்க வீடியோ காட்சிகளை இணையதளங்களில் இருந்து உடனே அகற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

"இணைய குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். ஆனால், வீடியோ காட்சிகளை நீக்குவதற்கு காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

"இந்தப் படங்களை என்சிஐஐ (Non consensual intimate images) என்று சொல்வார்கள். இவற்றை நீக்குவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பெண் வழக்கறிஞர் வழக்கில் என்ன நடந்தது?

ஜூலை 9 அன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை 48 மணிநேரத்தில் நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்குகளில் காவல் துறைக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால் உதவ முடிந்ததாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இவ்வாறு போராட முடியாத நபர்களின் நிலையை யோசிக்கவே முடியவில்லை" எனக் கூறினார்.

மேலும், "தனிநபரின் அடிப்படை உரிமையான கண்ணியத்தை உறுதி செய்து அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை" எனவும் அவர் குறிப்பிட்டதோடு, இதுதொடர்பான அறிக்கையை ஜூலை 14 அன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு கூறினார்.

இதை ஏற்க மறுத்த மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "39 இணையதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தனிப்பட்ட வீடியோவை அகற்றுவதற்கு எங்கு புகார் அளிக்க வேண்டும், அவ்வாறு புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு விரிவாக மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.

ஜூலை 22ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அபுடுகுமார் வாதிடும்போது, "தற்போது ஆறு இணையதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால் அதை நீக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, "இணைய குற்றங்களுக்கு ஆளாகும் பெண்கள் நேரடியாக தங்கள் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அகற்றுவதற்கு எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை" மத்திய அரசு வகுத்து வருவதாகக் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்யும் வகையில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்ய வேண்டும்?

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெண் வழக்கறிஞரின் வீடியோவை நீக்குவதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டது.

"ஆனால், அவை மீண்டும் பரவிக் கொண்டே இருந்தன" என்று கூறிய மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார், "நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்ட பிறகும் சுமார் 30க்கும் மேற்பட்ட இணையதளங்களில் அவை பரவியிருந்தன" என்றார்.

இந்த நிலையில், இணையதளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகிவிட்டால் உடனே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஆடையின்றி இருக்கும் படங்களை இயல்பாகவே சமூக ஊடகங்கள் நிராகரித்துவிடுகின்றன. இதுபோன்ற தளங்களில் குறைதீர் மையம் செயல்படுகிறது. அங்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், நேரடியாக போன் மூலமாகத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களுக்கு 2021ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Intermediary Guidelines and Digital Media Ethics Code Rules, 2021) வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 87 (1)(2)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இதன்படி ஒவ்வொரு சமூக ஊடக தளத்திலும் குறைதீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று அதன் உள்ளடக்கம் மற்றும் தவறான படங்கள் குறித்துப் புகார் அளித்தால் உடனே நீக்கப்பட்டுவிடுகிறது" என்று விளக்கினார், கார்த்திகேயன்.

"அது மட்டுமின்றி, தனது தனிப்பட்ட படங்கள் வெளியாகி யாரேனும் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் புகார் அளிக்கலாம். அங்கு பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்தரகப் படங்கள் வெளியிடப்பட்ட இணையதள முகவரியைப் பதிவிட்டுப் புகார் தெரிவித்தால் போதும்" எனத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவற்றோடு, இணையவழி குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் வசதியை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

"இணைய வழியில் நடக்கும் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறினால் தொடர்புடைய இணையதளங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

அதோடு, ஆபாச இணையதளங்களில் வீடியோ வெளியானால், அந்தத் தளங்களின் ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பினால் உடனே அதை நீக்கிவிடுவதாகக் கூறும் கார்த்திகேயன், "அத்தகைய நிறுவனங்களில் சில, வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருவதால் தனிநபர்களின் கோரிக்கைகளை ஏற்று நீக்கிவிடுகின்றன" என்றார்.

தாமதம் ஆவதைத் தவிர்க்க முடியுமா?

"பெண்கள் தொடர்பான தவறான படங்கள் வெளியானதாக புகார் வந்தால் 24 மணிநேரத்திற்குள் அவற்றை நீக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு நீக்கப்படுவதில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

"இணைய குற்றப் பிரிவில் புகார் அளிக்கும்போது அது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்குச் செல்கிறது. அவர்கள் தொடர்புடைய தளங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கின்றனர். இதற்கு சில நாட்கள் தேவைப்படுவதால், பாதிக்கப்பட்டவருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன."

ஒருவேளை, ஈமெயில் மூலம் புகார் தெரிவித்தும் இணையதளங்களில் இருந்து படங்களை நீக்காவிட்டால் காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். "அதன் பேரில் தொடர்புடைய இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்."

இந்த நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் விளக்கினார் கார்த்திகேயன்.

"ஆபாசப் படங்களைப் பதிவேற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவை பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதுவும் ஆடையின்றி இருப்பது போன்ற படங்கள் மற்றும் காணொளிகளை மட்டுமே நீக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன."

சென்னை உயர்நீதிமன்றம், பெண் வழக்கறிஞர் வழக்கு, அந்தரங்க வீடியோ வெளியாவை தடுக்கும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பேசினார். அவர், "இணைய குற்றங்களுக்கான 1930 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு சில காணொளிகளோ, படங்களோ இருந்தால் அதை நீக்குவதில் சிரமம் ஏற்படுவதில்லை" என்று தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "அதிக எண்ணிக்கையில் படங்கள் இருந்தால் அவை எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. அதற்கான நிபுணர்கள் காவல் துறையில் போதிய அளவுக்கு இல்லை."

இந்தக் காரணத்தால் பல நேரங்களில் தனியார் சைபர் நிபுணர்களை நாட வேண்டிய நிலை உள்ளதாகக் கூறும் அந்தப் பெண் அதிகாரி, "ஒருவேளை தனிப்பட்ட படங்களால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இணைய குற்றப் பிரிவு மூலமாக போதிய உதவிகள் வழங்கப்படுகின்றன" எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற புகார்களை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, ஒருவரின் சம்மதமின்றி படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தனிப்பட்ட படங்களால் பாதிக்கப்படுவோருக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்போது, தாமதமின்றி தீர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

சென்னை பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கு விசாரணையின்போது இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பெயரைக் குறிப்பிட்டது மட்டுமின்றி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை அடையாளம் காட்டுவதற்காக ஏழு ஆண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடத்தியது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார்.

"இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியான கூடுதல் பாதிப்பையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஆவணங்களில் இருந்து நீக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பெண்ணின் விவரங்கள் வெளியானது தொடர்பாக, நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சில தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் வாதிடும்போது, "பாலியல் வன்கொடுமை, போக்சோ ஆகிய வழக்குகள் மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவரின் பெயரை ஆவணங்களில் கூறலாமா?

பெண் வழக்கறிஞரின் பெயர் வழக்கின் அனைத்து ஆவணங்களில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டதாக அசன் முகமது ஜின்னா கூறினார். இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

"குழந்தைகள், பெண்கள் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில்தான் முதல் தகவல் அறிக்கையில் பெயர் போடக்கூடாது என காவல்துறை நினைக்கிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கூறக்கூடாது என நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது" என்கிறார், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார்.

பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின்பேரில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் அபுடுகுமார், "ஒருவரின் விருப்பமின்றி அவரது அந்தரங்க படங்களை பதிவேற்றினால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0m8mvplx94o

செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கருணாஸ் வேண்டுகோள்!

1 week 1 day ago

24 JUL, 2025 | 12:03 PM

image

எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள்  காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இனப்படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம். ஆனால் நீதிக்கு இடம் தராத ஐ.நா அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது, இனப்படுகொலையின் இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும்.

செம்மணி  மனிதப் புதைகுழி 2009ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம் அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது நடந்தாலும், சிங்களவரால் நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதை செம்மணியும் மற்ற அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

2009க்கு பின்னும் கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு கையாண்டுள்ளது என்பது இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் செம்மணியை விட சர்வதேச சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்!?

இதுவரை 80க்கும் மேற்பட்ட அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த நாட்டிலும் இதுபோல், அகழாய்வில் அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில்  முன்னோர் வாழ்வியல் படித்துள்ளோம். ஆனால், தமிழீழ தேசத்தில்தான் எலும்புக் கூடுகளின் வலியை உணரமுடிகிறது.

தாயும் குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக்கூடுகளின் காட்சி, காலம் கடந்தும் நம் காயங்களை மீண்டும் காயப்படுத்துகிறது. பள்ளிச்சிறுவர்களின் புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு  கொடுமையின் உச்சத்தை தொடுகிறது. எண்ணிலடங்கா எலும்புக்கூடுகளில் சிறுவர் சிறுமியர் அதிகம் என்பதை  உலகம் கண்டுணரா அதிர்ச்சி.

வதைக்கப்பட்டும் புதைக்கபட்டும் வல்லுறவில் மறைக்கப்பட்டும் எத்தனைப் பெண்கள்! அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள். இன்னும் இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும்  இவ்வுலகம்.

நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில் எடுத்துரைப்போம். மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல் கொடுப்போம்.

ஒன்றிய அரசு, அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவையில் குரல் கொடுக்க வேண்டும்! இதற்கு முன் தமிழினத்திற்கு செய்ததை, செம்மணி மனிதப் புதைகுழியை அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

செம்மணி நமது தமிழினப் படுகொலைக்கு சாட்சியத்திற்கு அடையாளம்.  ஆனாலும், இன்னும் இதுபோன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ  உள்ளன. காலம் ஈழத் தமிழனத்திற்கு நல்ல தீர்ப்புகள் வழங்கும். நாம்  தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/220790

கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

1 week 2 days ago

vaikoo.jpg?resize=740%2C375&ssl=1

கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து வைகோ  மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால்  இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. 

பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன.  இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.   அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.  மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.  அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும்  மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும்  வைகோ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1440330

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - வைகோ வேண்டுகோள்

1 week 2 days ago

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின்குடும்பத்தவர்களிற்கு இழப்பீடு - இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள்

23 JUL, 2025 | 01:32 PM

image

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. 

இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும்  நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

அண்மையில் 13.07.2025 அன்று ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது.

பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில்இ இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து  மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமல்லாமல்இ பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மீன்பிடி தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்துஇ கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

https://www.virakesari.lk/article/220722

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

1 week 3 days ago

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய 102 ஆவது வயதில் காலமானார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை இவர் கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார்.

https://thinakkural.lk/article/319195

சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!

1 week 4 days ago

44285166-edapp.webp?resize=750%2C375&ssl

சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத்  தொடங்கி விட்டது.  குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக  ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும்.

ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். 

https://athavannews.com/2025/1440105

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

1 week 4 days ago

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

Mani Singh SPublished: Monday, July 21, 2025, 21:40 [IST]

MK Stalin Chennai Apollo Hospital

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார்.

முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது.

https://tamil.oneindia.com/news/chennai/doctors-advise-cm-stalin-to-rest-for-3-more-days-apollo-hospital-new-report-722259.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

விரைவில் முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் ?

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்

Mani Singh SUpdated: Monday, July 21, 2025, 21:03 [IST]

Udhayanidhi Stalin MK Stalin Chennai Apollo Hospital

சென்னை: முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2 நாளில் வீடு திரும்புவார்" என்று கூறினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/when-will-chief-minister-stalin-be-discharged-from-apollo-hospital-udhayanidhi-says-this-722255.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

1 week 6 days ago

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும், இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/319082

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 weeks ago

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

19 Jul 2025, 9:51 AM

kalaingar eldest son M.K.Muthu passes away!

கலைஞரின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சசோகதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 77.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் – பத்மாவதி தம்பதியரின் மூத்த மகன் மு.க.முத்து. இவர் பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் என பல படங்களில் நடித்துள்ளார்.  

நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

image-318-1024x569.png

இந்த நிலையில் 77 வயதான மு.க. முத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் மறைவையொட்டி அவருக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/kalaingar-eldest-son-m-k-muthu-passes-away/

மது போதையில் வாழ்க்கையைத் தொலைத்த மு.க.முத்து!

-இர்ஷாத் அகமது

M-K-Muthu-Images-6-Copy.jpg

மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்;

2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில்  ஒரு கட்டுரை வெளியானது.

அப்போது நான் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தேன்.

மு.க.முத்து நடித்த திரைப்படங்களில் ஒரு படம் கூட நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால், அவர் நடித்த படங்களில் வரும் ‘காதலின் பொன் வீதியில்’, ‘மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ’, ‘மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி’ ஆகிய இனிமையான பாடல்கள் என்றென்றும் என் மனதைக் கவர்ந்தவை.

எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது, அரசியலிலும் திரைப்படத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த காலக்கட்டத்தில்,  அவருக்குப் போட்டியாக கலைஞரால் திரைத்துறைக்குள் தள்ளப்பட்டவர் மு.க.முத்து என்ற பொதுவான ஒரு கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில், மு.க.முத்து நடித்த படங்கள் அனைத்திலும்  அவரது நடை, உடை, பாவனைகள் அனைத்தும் அப்படியே எம்ஜிஆரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்.

mgr-mk-muthu.jpg

திமுக தலைவரின் மகன், முதலமைச்சரின் மகன், திரைப்பட  நடிகர், பாடகர், பணபலம், செல்வாக்கு என இத்தனை சிறப்புகள் இருந்தும் தனது இளம் வயதில் ‘சேர்வாரோடு சேர்க்கை’ காரணமாக மது, மாது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, அவரால் ஒரு சாதாரண மனிதனைப் போல கூட  சமுதாயத்தில் ஒரு ‘அந்தஸ்துடன்’ வாழ முடியவில்லை.

மு.க.முத்து குறித்த செய்திகளால் எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது பள்ளி வாழ்க்கை, சினிமாத் துறையில் மறக்க முடியாத அனுபவங்கள் என அவரது வாழ்க்கையின் இன்னொரு அழகிய பக்கம் குறித்து செய்தி வெளியிட முடிவு செய்து திருவாரூர் சென்றேன்.

பஸ்சில் சென்று திருவாரூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய என்னை அப்போதைய திருவாரூர் மாவட்ட தினமணி செய்தியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்று, அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். (கல்யாணசுந்தரத்தை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்களது நட்பு கடந்த ஆண்டு அவர் திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டு  இறக்கும் வரை தொடர்ந்தது).

மு.க.முத்து அப்போது திருவாரூரை அடுத்த குளிக்கரை என்ற கிராமத்தில்  ஒரு வீட்டின் பின்புறம் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத ஒரு மிகச் சிறிய குடிசையில் வசித்து வந்தார்.

நாங்கள் சென்றபோது மு.க.முத்து வீட்டில் இல்லை. குடிசை வீட்டிற்குள், அழுக்கடைந்த. கிழிந்த ஆடை அணிந்த ஒரு பெண், பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். அப் பெண்ணுடன் தான் மு.க.முத்து தற்போது ‘குடித்தனம்’ நடத்தி வருவதாக  அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

“மு.க.முத்து எங்கே?,” என நண்பர் கல்யாணசுந்தரம் கேட்டதற்கு, அவர் வெளியே சென்றிருப்பதாக அப்பெண் பதிலளித்தார்.

எனவே, நாங்கள் இருவரும் அவரது வருகைக்காக அவ்வீட்டின் வெளியே ரோட்டில் காத்திருந்தோம். சுமார் ஒருமணி நேர காத்திருத்தலுக்குப் பின், “ஸார், அவர் வர்றார்,” என்றார் கல்யாணசுந்தரம்.

அவர் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒருவரும் எனது பார்வையில் படவில்லை.

‘எங்கே வர்றார்?’  என நான் கேட்டேன். “ஸார், தொப்பி அணிந்து ஒருத்தர் வர்றார் பாருங்க. அவர்தான் மு.க.முத்து,” என்றார் கல்யாணசுந்தரம்.

இப்போது அவர் என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் எனதருகே நெருங்கியபோது திடீரென சாராய நெடி மூக்கைத் துளைத்து, குடலைப் புரட்டியது. வாந்தி வருவது போல குமட்டியது.

அவரது அலங்கோல நிலையைக் கண்ட எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது.

888.jpg

அதற்கு காரணம், அவர் ஒருகாலத்தில் திரைப்பட நடிகர் என்பதால் திரைப்பட ஸ்டில்களில் பார்த்த அவரது அழகிய உருவத்தை என் மனதில் நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால். அவரோ பல நாட்களாக குளிக்காத, அழுக்கடைந்த, கசங்கிய ஆடைகள் அணிந்திருந்ததுடன், தலையில் அழுக்கடைந்த ஒரு தொப்பியும் அணிந்திருந்தார். அதனால் அவரை என்னால் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவரா இவர்? என என்னால் நம்பவே முடியவில்லை.

ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு, அவரை வழிமறித்து, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை பேட்டி காண வந்திருப்பதாக கூறினேன். அவ்வளவு போதையிலும் அவர் ரொம்ப நிதானமாகவே இருந்தார். நாங்கள் சொன்ன தகவலை புன்முறுவலுடன் கேட்டுவிட்டு, எங்களை அக் குடிசை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

அங்கே உட்கார பாய் கூட இல்லை. அதனால் வெறுந் தரையில் தான் உட்கார்ந்தோம். குடிசையில் ஒரே ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறிகூட இல்லை. அக் குடிசையில் எங்களுக்கு மின்விசிறி வசதிகூட இல்லாமல் அசௌகரியமாக இருப்பதற்காகவும், எங்களுக்கு குடிக்க டீ கூட தரமுடியாத தன்னுடைய நிலையையும் வருத்தத்துடன் கூறி, அதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்டார் மு.க.முத்து.

என்னுடைய பெயரை கேட்ட மு.க.முத்து, மனதில் என்ன நினைத்தாரோ, தெரியவில்லை, தனக்கு நாகூர் ஆண்டவரை  ரொம்ப பிடிக்கும் எனக்கூறி, ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலைப் பாடினார்.

பின்னர், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக’ என்ற பாடலின் ஒருசில வரிகளையும், சிவாஜி படத்தில் வரும் ‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.

அதன் பின்னர், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க’ என்ற பாடலை பாடிக் காட்டினார்.

ஏதோ பல ஆண்டுகள் பழக்கமானவர் போல எங்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி எங்களது முதல் சந்திப்பிலேயே கலகலவெனப் பேசினார். இன்று நினைத்தாலும் அக்காட்சி எனது கண் முன்னே தோன்றுகிறது.

“சென்னையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மெயின்கார்ட் கேட் அருகேயுள்ள ஒரு பள்ளியில் என்னை சேர்த்துவிட்டாங்க. ஆனால் அங்கேயும் நான் ஒழுங்கா படிக்கல. ஃபெயிலாகிட்டேன்,” என்றார் மு.க.முத்து.

“எனக்கும் எங்க அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  நானும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். அவரும் எஸ்எஸ்எல்சியில் ஃபெயில். ஆனா அவர் வாழ்க்கையில் போராடி ஜெயிச்சு முதலமைச்சரா  ஆகிவிட்டார். நான் தான் வாழ்க்கையிலும் தோற்றுவிட்டேன்,” என சிரித்தவாறே கூறினார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனதில் உள்ள வலியை என்னால் உணர முடிந்தது.

tamil-indian-express-2023-07-28T152355.5

“என்னை எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வரணும்னு எங்கப்பா ரொம்ப முயற்சி பண்ணினார்.  ஆனால் நான் தான் அவரது பேச்சைக் கேட்டு நடக்காம, அவருக்கு ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்திவிட்டேன்,” எனக்கூறி வருத்தப்பட்டார் மு.க.முத்து.

சினிமாத் துறையில் நுழைந்தது குறித்து கேட்டதற்கு, ‘அதற்கும் எங்கப்பா தான் காரணம்,’ என்றார், மு.க.முத்து.

“எனக்கு சினிமாவில் நடிக்க கொஞ்சஞ் கூட விருப்பம் இல்லை. ஆனால், எங்க அப்பா தான் என்னை பெரியப்பா (எம்ஜிஆர்) மாதிரி ஆக்கணும்னு ஆசைப்பட்டு என்னை வற்புறுத்தி சினிமாவில் நடிக்க வெச்சார். ஆனா, எங்க பெரியப்பாவுக்கு  என்மேல எப்பவுமே ரொம்ப பிரியம். எங்க அப்பாமீது அவருக்கு கோபம் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாம நான் நடிச்ச ‘பிள்ளையோ பிள்ளை’ பட சூட்டிங்கிற்கு வந்திருந்ததோடு, படப்பிடிப்பை கிளாப் அடிச்சு தொடங்கி வச்சார் பெரியப்பா. நான் திரைத் துறையில் வெற்றி பெற்று பெரிய  ஆளா வரணும்னு மனசார வாழ்த்தினார்,” என்றார் மு.க.முத்து.

images-1.jpg

எம்ஜிஆரை பெரியப்பா என்றே குறிப்பிட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரை புகழ்ந்து பேசினார்.

“சிவாஜி சித்தப்பாவின் படங்களைவிட எனக்கு பெரியப்பா (எம்ஜிஆர்) நடிச்ச படங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அவர் நடிச்ச  படங்களை பலமுறை ஸ்கூலுக்கு ‘கட்’அடிச்சிட்டு தியேட்டருக்குப் போய்  பார்த்து ரசிச்சிருக்கேன்.

எங்க பெரியப்பாவுக்கும் என் மேல ரொம்ப பிரியம். அவரை நான் எப்போ சந்திச்சாலும், என்னை சிரித்த முகத்துடன் வரவேற்று ரொம்ப அன்பாக பேசுவார்.  ‘அப்பாவின் பேச்சைக் கேட்டு நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரணும்’னு எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்வார்,” என்றார் மு.க.முத்து.

“எங்க பெரியப்பா (எம்ஜிஆர்) இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா, இந்த அளவுக்கு என்னோட  நிலைமை மோசமா ஆகியிருக்காது. அரசியல் என்ற சனியன் தான் எங்க அப்பாவையும், பெரியப்பாவையும் பிரிச்சிருச்சு,” எனக் கூறிவிட்டு கொஞ்ச நேரம் எதுவும் பேசமுடியாமல் அமைதியானார் மு.க.முத்து. அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

தன்னுடன் ஜோடியாக நடித்தவர்களில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார்.

mu-ka-muthu_1491457531.jpg

‘லட்சுமி, மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகிய மூவருமே ரொம்ப சீனியர் நடிகைகள். ஆனா, அதையெல்லாம் கொஞ்சங்கூட பொருட்படுத்தாம என்னோட படத்தில எனக்கு  ஜோடியா நடிச்சாங்க. உண்மையிலேயே, அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு” என்றார் மு.க.முத்து.

அதே போல, நடிகர் ரவிச்சந்திரன் தான் தனக்கு முதன் முதலில்  ‘தண்ணியடிக்க’ கத்துக் கொடுத்ததாக கூறினார் மு.க.முத்து.

“நடிகர் ரவிச்சந்திரன் எங்க உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். எனக்கு முதன் முதலில் தண்ணியடிக்க கத்துக் கொடுத்ததே அவர் தான்.  அன்னைக்கு குடிக்க ஆரம்பிச்சது தான் அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும், என்னால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது,” என்றார் மு.க.முத்து.

கலைஞர் உள்பட தனது நெருங்கிய உறவினர்கள் யாரும் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனக்கூறி வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினார்.

அவரது நிலையைக் கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. என்னிடம் அப்போது சட்டைப் பையில் ரூ 300 இருந்தது. அதனால் அதில் ரூ100 கொடுக்கலாமா? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என மனதில் ஒரு தயக்கம் இருந்தது.

இந் நிலையில், பேட்டி முடிந்து நானும் நண்பர் கல்யாணசுந்தரமும் எழுந்து கிளம்ப தயாரானோம்.

அப்போது சற்றும் எதிர்பாரா வகையில், “ஏதாவது பணம் இருந்தா கொடுங்க, ஸார்,” எனக் கேட்டார் மு.க.முத்து. இதை நாங்கள் இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நான்  அதிர்ச்சியடைந்தேன். பின்னர் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு எனது சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அதில் ரூ200ஐ அவரிடம் கொடுத்தேன். ரூ100 கொடுத்தால் நாகரீகமாக இருக்காது எனக் கருதி ரூ200 கொடுத்தேன். ஆனால் அவர் மீதி  100 ரூபாயையும் தருமாறு கேட்டார்.

அதற்கு நான், “ பணம் தருவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பணம் நான் ரொம்ப  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிச்சது. ஆனா நீங்க அதை தண்ணியடிக்க கேட்கிறீங்க. அதனால உங்களுக்கு கொடுக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கு. இந்த பணத்தை தண்ணியடிக்க பயன்படுத்த மாட்டேன் என நீங்க ஒரு உறுதி கொடுத்தீங்கன்னா நான் என்னிடமுள்ள மீதி 100 ரூபாயையையும் தருகிறேன்,” என என் மனதில் பட்ட கருத்தை  தெரிவித்தேன்.

எனது வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிரித்தபடியே அமைதியாக நின்றிருந்த மு.க.முத்து, ‘நிச்சயமாக இந்த பணத்தில் தண்ணியடிக்க மாட்டேன். சாப்பாடு தான் வாங்குவேன்,” எனக் கூறினார்.

அவரது வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு முதலமைச்சரின் மகன் என்னிடம் கையேந்தும் நிலையை நினைத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் என்னிடம் மீதம் இருந்த 100 ரூபாயையும் அவரிடம் கொடுத்தேன். அதை, அவர் சிரித்த முகத்துடன் தனது இருகைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்தடைந்த நான், இச் செய்தியை எனது அலுவலகத்தில் இருந்த மோடத்தில் அடித்து, திருச்சி அலுவலகத்துக்கு அனுப்பினேன்.

ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சென்னை அலுவலகத்திலிருந்து தலைமை செய்தியாளர் டி.என். கோபாலனிடமிருந்து எனக்கு ஃபோன். “இர்ஷாத், மு.க.முத்து பற்றிய உன்னோட செய்தியை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு. அனேகமா ‘ஆல் எடிஷன்ல’ முதல் பக்க செய்தியா போடலாம் என நினைச்சிருக்கேன்,” எனக் கூறிவிட்டு, “மு.க.முத்துவின் தற்போதைய நிலை குறித்து புகைப்படம் எதுவும் இருந்தால், அதை உடனடியாக அனுப்பு,” என்றார் டிஎன்ஜி.

mk.jpg

என்னிடம் தற்போது மு.க.முத்துவின் புகைப்படம் எதுவும் இல்லை எனக் கூறிய நான், அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு, உடனடியாக நண்பர் கல்யாணசுந்தரத்தை தொடர்பு கொண்டு மு.க.முத்துவை புகைப்படம் எடுத்து அதை  திருச்சி அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்புமாறு கூறினேன். ஆனால், தற்போது இருட்டி விட்டதால் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் படம் எடுக்க முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறினார். அத்தகவலை நான் அலுவலகத்தில் தெரிவித்து விட்டேன்.

இந்நிலையில், அதற்கடுத்த ஒருமணிநேரம் கழித்து, மீண்டும் சென்னை அலுவலகத்திலிருந்து டி.என்.கோபாலனிடமிருந்து ஃபோன்.

“ஐ ஆம் வெரி ஸாரிப்பா. உன்னோட செய்தி ரெசிடென்ட்  எடிட்டருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, இந்த சமயத்தில இப்படி ஒரு செய்தியை போட்டா கலைஞர் கோவிச்சுக்குவார் என நம்ம  சேர்மன் (மனோஜ்குமார்) சொந்தாலியா ரொம்ப ஃபீல் பண்றார். அதனால் உன்னோட இச்செய்தியை நம்ம பத்திரிகையில் போட வேண்டாம் என அவர் சொல்லிவிட்டார்,” எனக் கூறிய டிஎன்ஜி, “என்ன செய்வது? சில சமயம் இப்படியெல்லாமும் நடக்கும். இதுக்காக வருத்தபடாதீங்க. மனசை தளரவிடாதீங்க,” என ஆறுதல் கூறினார்.

அதைக் கேட்டு எனக்கு வருத்தம் ஏற்பட்டது. டிஎன்ஜி கூறியபடி, நான் ஆர்வமுடன் அனுப்பியிருந்த அச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரமாகவில்லை.

கட்டுரையாளர்; இர்ஷாத் அகமது

மூத்த பத்திரிகையாளர்

குறிப்பு; கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் ஒரே மகன் மு.கமுத்து. பிறக்கும் போதே தாயை பறிகொடுத்தவர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க முத்து தந்தையின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய செய்தி ஊடகங்களில் வந்தது. அப்போது கைத்தாங்கலாக இருவர் அவரை அழைத்து வந்தனர். பிறகு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஏற்பாட்டில் உயர்தர சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. சமீபத்தில் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணிக்கும், ஆகாஷ் பாஸ்கரன் என்ற சினிமா தயாரிப்பாளருக்கும் மிக விமரிசையாக திருமணம் நடந்தது. இத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவியும் முன்னின்று நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://aramonline.in/21889/mk-muthu-liquor-karunanithi-mgr/

பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?

2 weeks 1 day ago

பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?

Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 11:08 [IST]

Edappadi Palaniswami AIADMK

காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.

அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

என்ன கட்சி

எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது.

இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த கட்சி நாம் தமிழரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.

இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/a-big-party-is-going-to-join-in-our-nda-alliance-wait-and-see-says-edappadi-palanisamy-721053.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

த வெ க, பாஜக உள்ள கூட்டணிக்கு போல வாய்ப்பில்லை. கொள்கை எதிரி என மேடை போட்டு அறிவித்து விட்டு, அதை பலதடவை சொல்லி விட்டு - அவர்களிடம் கூட்டு வைக்கும் அளவுக்கு விஜை பிஸ்கோத்து அல்ல என்றே நினைக்கிறேன்.

நா த க வாக இருக்கலாம். அண்ணனுக்கு யு டர்ன் அடிப்பது ரஸ்கு சாப்பிடுவது போல். அத்தோடு ஆர் எஸ் எஸ் சுக்கும் அண்ணனுக்கும் கொள்கையில் அதிக வேறுபாடில்லை.

ஆனால் பிரமாண்டமான கட்சி என்பதுதான் இடிக்கிறது🤣.

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

2 weeks 1 day ago

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 13:26 [IST]

Edappadi Palaniswami

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதில்

இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.

கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.

எடப்பாடி பதிலடி

முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.

அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

அமித் ஷா சொன்னது என்ன?

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/it-is-nda-rule-not-aiadmk-rule-says-annamalai-to-edappadi-palanisamy-on-alliance-721157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

தேர்தல் முடிந்ததும் எடப்பாடியும் இருக்க மாட்டார் அதிமுகவும் இராது.

தன்னையும், கட்சியையும் காப்பாற்ற ஒரே வழி - தவெக கூட்டணிதான்.

ஆனால் இப்போ பாஜகவை கழட்டி விட்டால் - வழக்குகள் சரமாரியாக பாயும்.

டெலிகேட் பொசிசன்.

Checked
Sat, 08/02/2025 - 08:39
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed