தமிழகச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்

2 months 2 weeks ago

Published By: VISHNU

18 MAY, 2025 | 07:55 PM

image

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல்  உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215098

கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி..!

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

18 MAY, 2025 | 10:33 AM

image

இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று  பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர்.

சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின் ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://www.virakesari.lk/article/215021

நான்கு பேருக்கு மறுவாழ்வளித்த மூளைச்சாவு அடைந்த சிறுவன்..!

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

17 MAY, 2025 | 10:58 AM

image

வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14)  மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை (16)  மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் தந்தையிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரிக்கும், சிறுநீரகங்கள், கருவிழிகள் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலை மற்றும் அப்பல்லோ  வைத்தியசாலைக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

இச் சிறுவனின் உடல், உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/214950

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?

2 months 2 weeks ago

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 13 மே 2025, 02:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 மே 2025, 02:50 GMT

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட இது குறைவாகும்.

இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 2.0 ஆக உள்ள நிலையில், பிஹார் மாநிலத்தில் உச்சபட்சமாக இந்த விகிதம் 3.0 ஆக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேசம் (2.7), மத்திய பிரதேசம் (2.6), ராஜஸ்தான் (2.4), ஜார்கண்ட் (2.3) என தேசிய சராசரிக்கும் கூடுதலாக கொண்டுள்ளன.

தென் மாநிலங்கள் உட்பட 15 மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1க்கு குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் 1.4 ஆக குழந்தைப் பிறப்பு விகிதம் உள்ளது.

இதுபோன்ற ஏற்றத்தாழ்வான நிலைமை புதிதாக உருவாகவில்லை என்றாலும், கடந்த கால தரவுகளுடன் ஒப்பு நோக்கினால் தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் மேலும் சரிந்திருக்கிறது. முன்னர் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வு NFHS -5 தரவுகள் படி தமிழ்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.8 ஆக இருந்தது. தற்போது 0.3 புள்ளிகள் குறைந்துள்ளது.

இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் 1950-ம் ஆண்டில் 5.7 ஆக இருந்தது. தற்போது SRS 2021 தரவுகள் படி அது தற்போது 2.0 ஆக உள்ளது. ஒரு நாட்டில், நிலையான மக்கள் தொகையை பராமரிக்க இந்த விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும். கேரள மாநிலம் இந்த நிலையை 1988 ஆம் ஆண்டில் எட்டியது. அதையே தமிழ்நாடு 1993 ஆம் ஆண்டிலும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் 2000 ஆம் ஆண்டுகளிலும் எட்டின.

குழந்தைப் பிறப்பு விகிதம் சரியும் போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் குறையும். அதே சமயம், மக்களின் நல்வாழ்வில் ஏற்படும் தாக்கம் சராசரி ஆயுளை அதிகரிக்கும். இந்த இரண்டு போக்குகளையுமே SRS 2021 தரவுகளில் பார்க்கலாம். அதன்படி, 0-14 வயது பிரிவில் மக்கள் தொகை மெல்ல குறைந்து வந்துள்ளது.

1971-ல் 41.2% ஆக இருந்தது 2021-ல் 24.8% ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் பொருளாதாரத்தில் பங்களிக்கும் 15-59 வயது பிரிவினரின் மக்கள் தொகை 54.4%லிருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது. அதே போல, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 5.3% லிருந்து 5.9% ஆக உயர்ந்துள்ளது, அதே போல, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 6% லிருந்து 9% ஆக அதே காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதத்தை விட தென் மாநிலங்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

முதியவர்கள் அதிகம்

இந்தியாவின் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை குறித்து, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம், 2023-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% பேர் 60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பர் என்று கூறுகிறது. 2046-ம் ஆண்டுக்குள் முதியவர்கள் 0-15 வயது பிரிவினரை விட அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நாட்டிலேயே அதிக முதியவர்கள் கொண்ட மாநிலங்கள் வரிசையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. கேரள மக்கள் தொகையில் 14.4% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இது 12.9% ஆக உள்ளது என்று SRS 2021 தரவுகள் கூறுகின்றன. பிஹாரில் மிகக் குறைவாக 6.9%, அசாமில் 7%, தில்லியில் 7.1% முதியோர் உள்ளனர்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தியாவிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடம், தமிழ்நாடு இரண்டாவது இடம்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜோதி சிவஞானம், "முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றத்தின் போக்கில் ஏற்படும் இயல்பான வேறுபாடுதான். முதியவர்களுக்கு தேவையான உடல்நலம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், முதியவர்கள் காப்பகம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டை பாதிக்காது என்று கருதுகிறேன்," என்று கூறினார்.

"ஏனென்றால், தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்தவர்களின் விகிதம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் திறன்மிக்கவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள். எனவே, வேலை செய்யும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அவர்களின் உற்பத்தித் திறன் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது.

1990களின் பிற்பகுதியில் மக்கள் தொகையின் பலன்களை நாம் (demographic dividend) அனுபவித்தோம். பணியாற்றும் வயதிலான மக்கள் தொகை அதிகரித்தது. இப்போது நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம். வளர்ந்த நாடுகளை போல முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது" என்றார் அவர்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பை ஒரு பிரச்னையாக பார்க்க வேண்டாம் என்கிறார் பேரசிரியர் ஜோதி சிவஞானம்

முதியோர் விகிதம் மேலும் உயரும்!

"கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்து வருகிறது. எனவே, முதியவர்களின் பராமரிப்பு சுமை அரசுக்கு அதிகரிக்கும். அதே நேரம், உள்ளூரில் வேலை செய்வதற்கான இளைஞர்கள் குறைவாக இருப்பார்கள்" என்று கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொகை ஆய்வுகள் மையத்தின் தலைவர் டாக்டர் சத்யவான்.

அவர் மேலும் கூறும்போது, "ஒரு நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் போது எழும் முக்கிய சவால் முதியவர்களை பராமரிப்பது. அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்க வேண்டும். முதியவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொள்ள முடியாது. அவர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் வேண்டும்." என்று கூறினார்.

இந்தியாவில் வயது முதிர்ந்தவர்கள் 40% ஏழைகளாக இருக்கின்றனர். இந்தியாவில் முதியோர் மக்கள் தொகையில் தென் மாநிலங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி 2036-ம் ஆண்டுக்குள் மேலும் விரிவடையும் என்கிறது ஐ.நாவின் மக்கள் தொகை நிதியம்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதியோர் நலன் சார்ந்த திட்டங்களையும், சேவைகளையும் வழங்க அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும்.

குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது?

"ஒரு பிராந்தியத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது அந்த பகுதி பின் தங்கியிருப்பதன் அறிகுறியாகும். எனவே, இந்த பிரச்னையின் அரசியல் விளைவுகளை பார்க்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.

அவர் கூறும்போது, "படிப்பறிவு அதிகமாக உள்ள இடத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும். இந்த விகிதம் அதிகரிப்பது பின் தங்கிய நிலையின் ஒரு நேரடி அறிகுறியே" என்றார்.

கல்வியறிவு குறைந்திருப்பதாலேயே இது நடப்பதாக கூறினார், டாக்டர் சத்தியவான், அவர் கூறுகையில், "தென் மாநிலங்களில் கல்வியறிவு காரணமாக ஒரு குழந்தை அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டனர். எண்ணிக்கையா? அல்லது தரமா? என்ற கேள்வியில் தென் மாநிலங்கள் தரத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. ஒரு குழந்தைக்கு தரமான சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளது. ஆனால், வட மாநிலங்கள் இன்னும் இந்த நிலைக்கு வரவில்லை" என்றார்.

மேலும் அதனால், "வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் தென் மாநிலங்களுக்கு குடும்பம் குடும்பமாக வருவதை காண முடிகிறது, வேலை செய்பவர்களாக மட்டுமல்ல, தொழில் தொடங்குபவர்களாகவும் வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். மற்ற தென் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நகரங்கள், சிறு நகரங்கள் அதிகமாக இருப்பதால் இடம்பெயர்ந்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர்" என்று கூறினார்.

தென் மாநிலங்களில் குறையும் குழந்தைப் பிறப்பு விகிதம், அதிகரிக்கும் முதியவர் மக்கள் தொகை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதியவர்கள் மக்கள் தொகை தொடர்ந்து அதிகமாக இருந்து வரும் நாடுகளில் ஒன்று ஜப்பான்.

உத்திகள் மாற வேண்டும் !

இதன் அரசியல் விளைவுகளை பற்றி பேசிய பேராசிரியர் ஜோதி சிவஞானம், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி வெட்டப்படுவதாக கூறினார். அவர், "மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பெரும்பாலும் மக்கள் தொகை அடிப்படையிலும், தனி நபர் வருமானத்தின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. தனிநபர் வருமானம் என்பதும் மக்கள் தொகை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. எனவே, கிட்டத்தட்ட 45% நிதி மக்கள் தொகையை கொண்டு வழங்கப்படுகிறது. உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிட்டால், குறைந்த மக்கள் தொகை இருந்தாலும் அதிக உற்பத்தி கொண்டதாக தமிழ்நாடு இருக்கும், ஆனால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை" என்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா, "நாம் ஒரு சமூகமாக செயல்பட முடியுமா, இல்லையா என்ற விளிம்பில் இருக்கிறோம்" என்று குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் முதியவர்களின் மக்கள் தொகையையும் குறிப்பிட்டு 2023-ம் ஆண்டில் பேசியிருந்தார்.

அந்நாட்டின் தேசிய தரவுகள் படி ஜப்பானின் மக்கள் தொகையில் 29.1% பேர் 65வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். அதே போன்று, இத்தாலியில் 24.5% ஆகவும், பின்லாந்தில் 23.6% ஆகவும், இந்த வயதினரின் மக்கள் தொகை இருந்தது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் ஹென்ரி பி.குலூஜ், "ஐரோப்பாவின் மக்கள் தொகை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. குறைந்து வரும் பிறப்பு விகிதம், நகரமயமாக்கல், இடப்பெயர்வு ஆகியவை நமது சுகாதாரம், பராமரிப்பு, சமத்துவம் குறித்த அணுகுமுறையை மறுவடிவமைத்து வருகிறது. இதனை அச்சப்பட வேண்டிய பிரச்னையாக பார்க்க வேண்டாம், மாறாக ஆதாரத்தின் அடிப்படையிலான உத்திகளை வகுத்தெடுப்போம்" என்று பேசியிருந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg71gnxvzl9o

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

2 months 2 weeks ago

New-Project-62-1.jpg?resize=600%2C300&ss

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை பொள்ளாச்சி பொலிஸார் முதலில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வழக்கு மாநில அரசின் குற்றபுலனாய்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த 25 தொடக்கம் 28 வயதுக்கிடைப்பட்ட 05பேர் கைது செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மேலும் 04பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் குறித்த வழக்கு மீதான விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 8 பெண்களும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சி அளித்தனர்.

வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்து நிகழ்நிலை மூலமாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்படும் என கடந்த 28ம் திகதி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் , இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் கைதான 9 பேரும் குற்றாவாளிகள் என கோவை மகளீர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவர்களுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1431749

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்

2 months 2 weeks ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

13 மே 2025, 05:26 GMT

புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?

அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் , பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன்

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.

"உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன்.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்

வழக்கின் பின்னணி

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது.

இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார்

வழக்கு கடந்து வந்த பாதை

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12

* முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

* திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது.

* வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது.

* 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

* பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

* சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது.

* இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

* பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர்.

* இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.

* வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

* பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன.

* இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.

* பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

கனிமொழி

படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம்

* குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

* இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

* இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9 குற்றவாளிகள் யார்?

  • சபரி ராஜன்

  • திருநாவுக்கரசு

  • சதீஷ்

  • வசந்தகுமார்

  • மணிவண்ணன்

  • ஹெரன்பால்

  • பாபு

  • அருளானந்தம்

  • அருண்குமார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு யாரால் ஆபத்து? பிபிசி தமிழுக்கு பேட்டி

2 months 3 weeks ago

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

"மதுரையில் கிரானைட் வெட்டி எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். இதற்கு அடிப்படையாக நான் சமர்ப்பித்த அறிக்கை உள்ளதால், என் மீது அவர்களுக்கு கோபம் இருக்கலாம்" என்று கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சகாயம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.

சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

'1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு'

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.

கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தற்போது சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கு மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வருமாறு இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

கிரானைட் முறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதால் ஆஜராக முடியவில்லை எனவும் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சகாயம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மே 5-ஆம் தேதியன்று மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் கிரானைட் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சகாயம் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி லோகேஸ்வரன், "சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை. என்ன காரணம் என்பதை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

மேலும், "சகாயத்துக்கு பாதுகாப்பு கொடுக்கப்படாவிட்டால் உரிய பாதுகாப்பு வழங்குமாறு மத்திய பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்படும்" எனக் கூறி வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

பிபிசி தமிழிடம் சகாயம் கூறியது என்ன?

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?" என சகாயத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

"2012ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கை ஒன்றை அனுப்பினேன். இது பேசுபொருளாக மாறியதால் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைய குவாரிகள் மூடப்பட்டன. ஏராளமானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டதால் கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியைத் தொடங்கினேன். அப்போதே கவனமாக இருக்குமாறு பலரும் எச்சரித்தனர்" என்று கூறினார்.

இதன் பிறகு கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிப்பதற்காக 2014ஆம் ஆண்டு சகாயத்தை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"இது சவாலான பணி. இதன் பின்புலத்தில் இருந்தவர்களின் பின்னணி, அவர்களின் கடந்தகால செயல்பாடுகள், முறைகேடுகளின் அளவு, நிதி இழப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாதுகாப்பு கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கூறியது" என்றார் சகாயம்.

சகாயத்துக்கு 2-வது முறையாக பாதுகாப்பு விலக்கம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சகாயத்தின் பாதுகாப்புக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 2014 டிசம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தப் பாதுகாப்பு தொடர்ந்தது. "2020 அக்டோபர் மாதத்தில், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது" என்றார் சகாயம்.

2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசுப் பணியில் இருந்து சகாயம் விருப்ப ஓய்வு பெற்றார். "பதவியில் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை விலக்க முடியாது. பதவிக் காலத்தைத் தாண்டியும் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பது தெரிந்த ஒன்று" என்கிறார் சகாயம்.

பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியாகவே, 'எங்கள் அனுமதியில்லாமல் பாதுகாப்பை எவ்வாறு விலக்கிக் கொள்ள முடியும்?' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின்போது இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

"நீதிமன்றம் கூறியதால் உடனே பாதுகாப்பு வழங்கினார்கள். ஆனால், 2023 மே மாதம் எந்த தகவலும் இல்லாமல் பாதுகாப்பை விலக்கிக் கொண்டனர். இதன்பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு சந்தேகத்துக்கு இடமான சிலர் வந்து விசாரித்த நிகழ்வுகள் நடந்தன" என்று சகாயம் கூறினார்.

தலைமைச் செயலருக்கு கடிதம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,"கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம்" என்கிறார் சகாயம்

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக இதைப் பார்ப்பதாகக் கூறிய சகாயம், "இந்தியாவின் மிகப் பெரிய கிரானைட் ஊழலை வெளியில் கொண்டு வந்த அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதைத் தான் காவல்துறை சொல்ல விரும்புகிறது" எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

2023 மே முதல் தற்போது வரை தனது பாதுகாப்புக்கு காவலர்கள் இல்லை எனக் கூறும் சகாயம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக கூறினார்.

"நான் எழுதிய கடிதத்துக்கு டிசம்பர் மாதத்தில் டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவில் (security reveal commitee) விவாதித்து பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டிருந்தது. 2023 மார்ச் மாதம் எடுத்த முடிவைக் கூட டிசம்பர் மாதம் தான் தெரிவித்தனர்" என்கிறார் சகாயம்.

'உளவியல் ரீதியாக நெருக்கடி'

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது

"என்னுடைய நடவடிக்கைக்குப் பிறகு மதுரையில் சட்டத்துக்குப் புறம்பாக கிரானைட் வெட்டி எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரிட்டாபட்டி போன்ற பகுதிகளைக் காப்பாற்றியிருக்கிறேன். அதனால் என் மீது அவர்களுக்கு (கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்) கோபம் இருக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பை விலக்கும் விவகாரத்தில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தகவல்களைத் திரட்டிய பிறகே காவல்துறை முடிவை எடுத்திருக்க வேண்டும் என்றார், சகாயம்.

ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இதுதொடர்பாக 10 பக்கங்களில் விரிவான கடிதம் ஒன்றையும் தான் அனுப்பியுள்ளதாக, சகாயம் குறிப்பிட்டார்.

"பாதுகாப்பு பிரச்னை நீடிப்பதால், பொது இடங்களுக்குச் செல்வதை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதாகவே பார்க்கிறேன்" என்றார் சகாயம்.

காவல்துறை டி.ஜி.பி விளக்கம்

சகாயம், கிரானைட் முறைகேடு, தமிழ்நாடு, மதுரை, சட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு,பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசிவருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் மறுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2023 மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி, சகாயத்துக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து கவனத்துடன் பரிசீலனை செய்யப்பட்டு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னரே இதுகுறித்து சகாயம் பேசி வருவதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

'நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் போது ஏதேனும் குறிப்பிடும் படியான அச்சுறுத்தல் இருந்தால் அவருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்' எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் இருந்த காலத்தில் 2014 நவம்பர் முதல் 2020 அக்டோபர் வரை மெய்க்காப்பாளர் ஒருவர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டார். 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு மறு ஆய்வுக் குழு கூட்டத்தில் பாதுகாப்பை விலக்கிக் கொள்வது என முடிவெடுப்பட்டது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

'அச்சுறுத்தல் இல்லாத 22 பேர்'

ஜனவரி 2021ஆம் ஆண்டு சகாயம் விருப்ப ஓய்வில் சென்றதை சுட்டிக் காட்டியுள்ள சங்கர் ஜிவால், '2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லாத 22 நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது' எனக் கூறியுள்ளார்.

சகாயத்துக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதால்தான் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆகஸ்ட், 2023 அக்டோபர் மாதங்களில் தலைமைச் செயலாளர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோருக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள சங்கர் ஜிவால், 'எந்த அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக 2023 டிசம்பர் மாதம் சகாயத்துக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி கூறியது என்ன?

சகாயத்துக்கு எந்த தரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் தரப்பட அரசு அனுமதிக்காது என்று தமிழ்நாடு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனிம வள கொள்ளை தொடர்பான வழக்கில் தனது விசாரணை அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவிக்கலாம். எந்த விதமான கட்டுப்பாடும் அச்சுறுத்தலும் அவருக்கு எந்த தரப்பில் இருந்தும் கொடுப்பதற்கு அரசு அனுமதிக்காது. அச்சமின்றி அவர் நீதிமன்றத்தில் தன்னுடைய விசாரணை அறிக்கை குறித்து கூறலாம்" என்று தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce81vggrp03o

கண்முன்னே தாய், தந்தை பலி: இரவு முழுவதும் கால்முறிந்து தவித்த சிறுமி - தாராபுரம் விபத்துக்கு காரணம் யார்?

2 months 3 weeks ago

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 5 மே 2025

உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், தாராபுரம் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது சட்ட விரோதமானதாகும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதம் மாறுபடுகிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராகவும், ஒப்பந்ததாரர் 4வது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து வழக்கில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரை வழக்கில் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை என்பதோடு, 2 அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கேயம் செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் குள்ளக்காய் பாளையம் என்ற இடத்தில், மாந்தோப்புக்கு அருகில் சாலை விரிவாக்கத்துடன் அங்குள்ள பாலத்தை அகலப்படுத்தும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காக பாலத்தை ஒட்டி 12 அடி அளவுக்கு மிகப்பெரிய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (42), அவருடைய மனைவி ஆனந்தி (38) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் மகள் தீக்சனா (13) பலத்த காயங்களுடன் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவெல்லாம் சத்தமிட்டும் உதவி கிடைக்காத சிறுமி

தாராபுரம் அருகேயுள்ள சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ், திருப்பூர் பஞ்சம்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரும் அவருடைய மனைவியும், எட்டாம் வகுப்புப் படிக்கும் மகள் தீக்சனாவும் திருநள்ளாறு கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மே 4 அன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூவரும் திருநள்ளாறு சென்றுவிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனந்தி

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, ஆனந்தியும் அவருடைய நாகராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

விபத்து பற்றி நாகராஜின் சகோதரர் வேலுசாமி தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வந்தபோது, அந்த இடத்தில் எதுவுமே தெரியவில்லை என்றும் பள்ளத்தில் வண்டி விழுந்ததும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பெற்றோர் இறந்து விட்டதாகவும் தீக்சனா தங்களிடம் தெரிவித்ததாக வேலுசாமி கூறியுள்ளார்.

"தீக்சனா இரவெல்லாம் கத்திக் கொண்டிருந்தாலும் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால், காலையில் அந்த வழியே சென்ற கல்லுாரி மாணவர்கள் பேருந்து ஒன்றிலிருந்து இந்த சத்தம் கேட்டு, பின்பு தகவல் தெரிவித்தனர். தீக்சனாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள்தான் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.'' என்றும் வேலுசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.

முறையான அறிவிப்புப் பலகை, தடுப்புகள் வைக்காததால்தான் தனது தம்பி குடும்பத்துக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக வேலுசாமி தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குண்டடம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் கணேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாலம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் சைட் இன்ஜினியர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கெளதம், ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகியோரும் அடுத்தடுத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிஎன்எஸ் 285 (அலட்சியத்தால் பொதுவழியில் ஆபத்தை ஏற்படுத்துதல்), பிஎன்எஸ் 125 (a) -(அவசரமாக அல்லது அலட்சியமாக செய்யும் காரியத்தால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது) மற்றும் 106(1) (அலட்சியத்தால் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளின் கீழ், பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

அமைச்சர் வருவதற்கு முன் அவசரமாக வைத்த தடுப்பு

விபத்து நடந்த இடத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான கயல்விழி, விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் ஆய்வுக்கு வருவதை முன்னிட்டு, அந்த இடத்தில் அவசர அவசரமாக தகரத்தாலான தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது.

அமைச்சர் வந்தபோது அங்கிருந்த ஆனந்தியின் தாயார், ''இத்தனை பேர் இருந்தும் இப்படி என் பிள்ளையை அநியாயமாக இறக்கவிட்டு விட்டீர்களே...இதையெல்லாம் முதலிலேயே செய்திருந்தால் இப்படி இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்களே...நான் இருக்கும்போது என் பிள்ளை போய்விட்டதே.'' என்று கூறி கதறி அழுதார். அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நாகராஜ், தீக்‌ஷனா

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, தீக்சனா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இறந்து போன இருவருக்காகவும் தலா 3 லட்ச ரூபாய், சிகிச்சை பெறும் தீக்சனாவுக்கு ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் ஏழு லட்ச ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் போன உயிருக்கு இது எந்த வகையில் ஈடு செய்யும் என்று இறந்து போனவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைப் பணி செய்வோருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்து போலீசார் சமாதானம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில் பொள்ளாச்சி அருகில் சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழியில் வாகனம் விழுந்ததில், அதில் இருந்த கான்கிரீட் கம்பிகளால் இருவர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டில் பெரியநாயக்கன்பாளையம் புதிய பாலத்தின் கீழே இருந்த நடுத்திட்டில் ஒளிர் விளக்கு இல்லாததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் நடுத்திட்டில் மோதி உயிரிழந்தார். சென்னையிலும் இதேபோன்று பல விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடந்துள்ளன. ஆனால் ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் யார் மீதும் பெரும்பாலும் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.

உரிய அடையாளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் வைக்காததால், சாலைப்பணிகளில் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே குற்றவியல் அலட்சியத்துக்கு பொறுப்பாவார் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஜூலையில் ஓர் உத்தரவை வழங்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்களை விட, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

விபத்துகளை ஏற்படுத்தும் காரணிகள்

சாலைகளில் விபத்துகளில் சிக்குவோருக்கு தரப்படும் கோல்டன் ஹவர் (விபத்து நடந்த முதல் ஒரு மணிநேரத்திற்குள் வழங்கப்படும் அதிஅவசர நிலை சிகிச்சை) சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க வேண்டுமென்று 'உயிர்' அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முக்கியக் காரணமாக இருந்த கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், இந்த கோரிக்கையையும் வலியுறுத்தியிருந்தார். அதன்படி, இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில், விபத்துக்குக் காரணமாக இருந்த அதிகாரிக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்ற 198 ஏ என்ற பிரிவு அதன்பின்பே சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு,தாராபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

''இந்த விபத்து தொடர்பாக, உதவிப் பொறியாளர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதை ஒரு நல்ல துவக்கமாக கருதுகிறோம். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த விபத்திலும் எந்த அதிகாரிகளையும் வழக்கில் சேர்ப்பதில்லை. இப்போது சேர்த்திருப்பதால், அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும், இத்தகைய தவறுகளை களையவும் வாய்ப்பு ஏற்படும்.'' என்றார் கதிர்மதியோன்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு இன்ஜினியரிங் தவறே காரணம் என்பதை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இதுவரை 3 முறை ஒப்புக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் கதிர்மதியோன், அதை ஒப்புக் கொள்வதால் மட்டும் விபத்துக்கள் குறைந்து விடாது என்கிறார். அதற்கேற்ப கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்கிறார் அவர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நடக்கும் விபத்துக்களை அவர் பிபிசி தமிழிடம் பட்டியலிட்டார்.

* வேகத்தடை அமைத்துவிட்டு, அதற்கான அறிவிப்புப் பலகை வைக்காமலும், வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்காததாலும் விபத்துகள் நடக்கின்றன.

* இந்திய சாலைக்குழும விதிகளின்படி, பெரும்பாலான வேகத்தடைகளை அமைக்காமல் இஷ்டத்துக்கு அமைப்பதும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

* பல இடங்களில் வேகத்தடைக்கும், பாதசாரிகள் கடப்பதற்கும் ஒரே மாதிரியாக கோடுகள் அமைப்பதாலும் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசம் தெரியாமலிருப்பதும் விபத்துக்குக் காரணமாகிறது.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்

* ஒரே சாலையாக இருந்து அகலமான சாலையை இரு சாலையாகப் பிரிக்கும்போது, நடுத்திட்டில் ஒளிர் விளக்கு அமைக்காததால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

* சர்வீஸ் சாலைகளை ஒரே அளவில் அமைக்காமல் ஓரிடத்தில் அகலமாகவும், மற்றொரு இடத்தில் குறுகலாகவும் அல்லது வளைவாகவும் அமைப்பதும் விபத்துக்களுக்குக் காரணமாகிறது.

* சாலைகளில் உள்ள குழிகளை அவ்வப்போது மூடாமல் இருப்பதால், குழியில் விழாமலிருக்க வாகனங்கள் வலது அல்லது இடது புறமாகத் திடீரெனத் திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன.

இத்தகைய விபத்துகள் அனைத்துக்கும் அந்தப் பணியை சரியாகச் செய்யாத அல்லது கண்காணிக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காரணமென்று குற்றம்சாட்டுகிறார் கதிர்மதியோன்.

'மண் சுவர் எழுப்பி கருப்பு வெள்ளை வர்ணமடிக்க வேண்டும்'

இதே கருத்தை வலியுறுத்தும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணகுமார், ''ஒவ்வொரு ஒப்பந்தப் பணிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும்போது, அந்தப் பணியின்போது எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டுமென்பது குறித்து தெளிவாக அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதை பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் மிச்சம் பிடிப்பதே விபத்துக்கு வழிவகுக்கிறது.'' என்றார்.

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டும் மண்ணை வைத்து, குழியை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து, அதில் கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிப்பதுடன், அதற்கு 100 மீட்டர் துாரத்துக்கு முன்பே, 'சாலைப்பணி நடக்கிறது, மெதுவாகச் செல்லவும்' என்றோ அல்லது மாற்றுப்பாதையில் செல்லவும் என்றோ அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணகுமார். நீளமான இடங்களில் மாற்றுப்பாதை அமைப்பது மிக முக்கியம் என்று கூறும் அவர், தற்போது பல இடங்களில் இதை அமைப்பதில்லை என்கிறார்.

தற்போது விபத்து நடந்த இடத்தில் எந்தவித தடுப்புகளும், எச்சரிக்கை அறிவிப்புகளும் இல்லாமல் அங்கு பணி நடந்ததற்கு, அந்த இடத்தை எந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்யாததுதான் காரணம் என்று கூறும் கிருஷ்ணகுமார், இப்போதுள்ள பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் அவர்.

விபத்தில் கணவன், மனைவி பலி

பட மூலாதாரம்,VIGNESH

படக்குறிப்பு, பெரும்பாலான அதிகாரிகள் களப்பணி செய்யாமலிருப்பதுதான் இதுபோன்ற நிறைய தவறுகளுக்கும், விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணகுமார்

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்புப் பொறியாளர் (கூடுதல் பொறுப்பு) ரமேஷ், ''அந்த இடத்தில் இரண்டு தடுப்புகளை வைத்திருந்துள்ளனர். இந்த விபத்து நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு, அவ்வழியே வேகமாக வந்த இளைஞரின் பைக் அந்தத் தடுப்புகள் மீது மோதியதில் வண்டியும் தடுப்புகளும் குழிக்குள் விழுந்துவிட்டன. ஆனால் அவர் மேலேயே சாலையில் விழுந்து விட்டார். அவரே எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்.'' என்றார்.

அந்தத் தடுப்புகள் இல்லாததால்தான், குழி இருப்பது தெரியாமல் நாகராஜ் வாகனத்துடன் உள்ளே விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இருவருடைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் தரப்பட்டிருப்பதுடன், உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

''அமெரிக்காவில் சாலை பாதுகாப்பு வாரியம் (Road Safety Board) என்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு உள்ளது. அதற்கு தனித்துவமான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையின் தலையீடும் இல்லாத சாலை பாதுகாப்பு ஆணையத்தை (Road Safety Authority) மத்திய அரசு உருவாக்கி, அதற்கு சகலவித அதிகாரங்களையும் அளிக்க வேண்டும். அதுவரை இந்தியாவில் விபத்துக்களை குறைக்கவே முடியாது.'' என்கிறார் கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினராகவுள்ள கதிர்மதியோன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c045wgg169lo

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

2 months 4 weeks ago

New-Project-18-1.jpg?resize=600%2C300&ss

24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரை திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்த குழு ஒன்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதாக, தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 6 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் குழுவே கத்திமுனையில் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1430503

கோவை: 7ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் - சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும், மீட்கும் வழிகளும்

2 months 4 weeks ago

பாலியல் சம்பவங்களால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது (சித்தரிப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மே 2025

கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, கடந்த வாரத்தில் அந்தச் சிறுமி கடும் வயிற்றுவலி என்று கூறியதையடுத்து, அவரின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி ஒன்றரை மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்தபோது, இவர்களின் உறவினரான 20 வயது இளைஞர் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

மற்றொரு வழக்கில், கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளியின் தங்கையை, வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு செய்த 22 வயது இளைஞர் இதே நாளில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்முறைகளால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ், அவருடைய மைத்துனர் பெனட் ஹாரீஸ் என்பவரும் போக்சோ சட்டத்தில் கடந்த மாதத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக கோவையில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும், அதில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதிலும் சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவதும் இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு காரணமாகவே புகார்கள் அதிகரிப்பு!

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல்துறையின் மத்திய காவல் உதவி ஆணையர் சிந்து, ''இப்போது தான் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்று கூறமுடியாது. போக்சோ சட்டம் குறித்து பொதுமக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு காரணமாகவே, பெற்றோர் துணிவுடன் வந்து புகார் கொடுக்கின்றனர். தற்போது 12 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உறவினர் மீதே கூறப்பட்டுள்ள புகாரும் இந்த விழிப்புணர்வு காரணமாக தரப்பட்டிருப்பதுதான்.'' என்றார்.

முன்பு நிறைய குற்றங்களில் உறவினர்கள், நண்பர்கள் என்று கருதி, பலரும் புகார் கொடுக்காமல் தவிர்த்து வந்ததாகக் கூறும் உதவி ஆணையர் சிந்து, அதேபோல முன்பு தனியார் மருத்துவமனைகளில் நடந்த சட்டவிரோத கருக்கலைப்புகள் பற்றி தகவல் தராமல் இருந்ததாகவும், இப்போது எல்லோருமே முறையாக காவல்துறைக்குத் தகவல் தருவதும் இத்தகைய வழக்குகள் அதிகரிப்பதற்குக் காரணமென்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இதுபோல நிறைய குற்றங்கள் குறித்து, காவல்துறையின் கவனத்துக்கு வந்தாலும், பல சம்பவங்களில் புகார் கொடுக்க பெற்றோர் மறுத்துவிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் பெற்றோரே முன் வந்து புகார் கொடுத்து இருப்பதை ஒரு நல்ல மாற்றமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'' என்றார்.

இந்த சிறுமிக்கு பெற்றோர் ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டத்தில் அனுமதியிருப்பதாக உதவி ஆணையர் சிந்து தெரிவித்தார்.

அதே நேரத்தில் சில பெற்றோர் சிறு வயதிலேயே திருமண பந்தத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்வதும் இத்தகைய குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாலியல் சம்பவங்களால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப்படம்

உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்த 12 வயது சிறுமிக்கு உடல் ரீதியான தொடர் சிகிச்சையும், கண்காணிப்பும், உளவியல் ஆலோசனையும் மிக அவசியமென்று பெண் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

''12 வயது சிறுமியான அவருக்கு இந்த கர்ப்பம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கரு கலைப்பு உடலை பெருமளவில் பலவீனப்படுத்தும் என்பதால், அந்த சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புதான் மிக முக்கியம்.'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் உஷா.

உடலியல் ரீதியாக அந்த சிறுமி மீள்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்று கூறும் மருத்துவர் உஷா, சிறுமிக்குத் தேவையான உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் மட்டுமே முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனைப் படி தொடர்ச்சியாக, அவர்கள் பரிந்துரைக்கும் காலம் வரை சிகிச்சையை பாதிப்புக்கு ஆளான சிறுமி பெற வேண்டும்.

பாதிப்புக்குள்ளான 12 வயது சிறுமிக்குத் தரப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெண் மருத்துவர் ஹரிப்ரியா தேவி சஜாத், ''முதலில் அந்த சிறுமிக்கு இடமாறுதல் அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் அவரை கண்டிக்க வேண்டுமென்று நினைக்காமல், அவர் மீது தனி கவனம் செலுத்தி, அவருக்குள் இருக்கும் உடல்ரீதியான பாதிப்புகளை அறிய வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம் என்றாலும், வீட்டிலுள்ள சூழ்நிலைதான் அவரை முழுமையாக மீட்டெடுக்க உதவும். அதை நல்ல விதமாக உருவாக்கித்தர வேண்டும்.'' என்கிறார்.

இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளுக்கு, அரசு மருத்துவமனையிலேயே உளவியல் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருப்பதாகக் குறிப்பிடும் காவல் அதிகாரிகள், கோவை மாநகர காவல் துறை சார்பிலும் இளவயது பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் கொடுப்பதற்கு மனநல ஆலோசகர்களை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தனர்.

சிறுமிக்குத் தரப்பட வேண்டிய உளவியல் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனநல மருத்துவர் சந்தோஷி, ''இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதிப்பு, அவருக்கு நேர்ந்த அனுபவம், அவருக்குள் இப்போது இருக்கும் உணர்வு, அவருடைய புரிதல் திறன் ஆகியவற்றை அறிந்தபின்பே, அவருக்கு எவ்வாறு உளவியல் சிகிச்சை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். பொதுவாக எல்லோருக்கும் தருவது போன்ற சிகிச்சையை இந்த சிறுமிக்குத் தருவது பலன் தராது.'' என்கிறார்.

இந்த நேரத்தில் அவரை உடல்ரீதியாக பலப்படுத்துவதை விட உளவியல்ரீதியாக திடப்படுத்துவது அவசியம் என்கிறார் சந்தோஷி.

இதில் மனநல மருத்துவர்களின் ஆலோசனை மிக முக்கியம் என்றாலும் அதை விட அதிமுக்கியமாகப் பங்களிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான் என மனநல மருத்துவர் சந்தோஷி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cevdwplrz7vo

தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் - மழையும் வருமா?

2 months 4 weeks ago

அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில், இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 3, சனிக்கிழமை அன்று தமிழ் நாளேடுகள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'போலி சாதி சான்றிதழ் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்' - உயர் நீதிமன்றம்

இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு , போலி சாதிச் சான்றிதழ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜீவன் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் சாதி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேருகின்றனர். அவர்கள் தரும் சாதி சான்றிதழ்கள் பல போலியாக உள்ளன.

ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்யவேண்டும். ஆனால் இந்த குழு குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது இல்லை. இதனால், எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், " போலி சாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தோம்.

இடஒதுக்கீட்டு கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி சாதி சான்றிதழ் குறித்த புகார்களை குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை உருவாக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும்," என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த தம்பதியினரினர் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் அடுத்த விளக்கேத்தி கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களது மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வயதான தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து, அருகில் வசித்த உறவினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருவரின் சடலங்களில் இருந்தே துர்நாற்றம் வந்தது தெரிந்துள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.

கொலைச் சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதாகவும், நகை பணத்துக்காக கொலை நடைபெற்றுள்ளதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பிடிக்க ஈரோடு ஏ.டி.எஸ்.பி. விவேகானதன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளாதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகத்தால் பொருளாதார ஸ்திரத்தன்மை: மோதி

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோதி, "கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கடல்சார் வலிமை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் துறைமுகத் திறன் இரட்டிப்பாகியுள்ளது. செயல்திறன் மேம்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,867 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நிச்சயம். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்," என்று கூறினார்.

இன்றைய செய்திகள், முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், தமிழ்நாடு, நரேந்திர மோதி, விழிஞ்சம் துறைமுகம்,

பட மூலாதாரம்,@NARENDRAMODI/X

அதானி குழுமத்துடன் இணைந்து இந்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly109p1llno

தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

3 months ago

தமிழகத்தில் இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

 தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக  இந்திய  ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

அதன்படி, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். அவர்களை எப்போது, எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்நிய நாட்டவர்கள் உரிய பயண, அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, பல்வேறு மாநிலங்களில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஏராளமான பங்ளாதேஷ் குடிமக்கள் போலி ஆதார், வாக்காளர் அட்டைகளைப் பெற்று நீண்ட ஆண்டு காலமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அந்த  தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

https://www.thaarakam.com/news/795086fa-e007-44c6-9d05-18f45f411474

அர்ச்சகர் பயிற்சி முடித்தும் கருவறைக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் அர்ச்சகர்கள்

3 months ago

அனைத்து சாதியினரும் அர்ச்சகர், கோயில்கள், அறநிலையத் துறை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 1 மே 2025, 06:49 GMT

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது.

திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.

அவர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கான விளம்பரத்தைப் பார்த்து, திருவண்ணாமலையில் இருந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022ஆம் ஆண்டில் இணைந்தார். 2023இல் படிப்பை முடித்து தீட்சையும் பெற்றார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வரும் எனக் காத்திருக்கிறார்.

"எப்போதாவது புரோகிதத்திற்கு அழைப்பார்கள். அங்கு செல்வேன். என் தந்தையார் செயின் பாலீஷ் போடும் கடை வைத்திருக்கிறார். மீதி நேரத்தில் அந்த வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்கிறார். தான் படிப்பை முடித்தவுடன் எந்தக் கோவிலில் பணி செய்ய விருப்பம் போன்ற தகவல்களையெல்லாம் அதிகாரிகள் வாங்கிச் சென்றதாகக் குறிப்பிடும் அவர், அதற்குப் பிறகு அது தொடர்பாக ஏதும் நடக்கவில்லை என்கிறார்.

அர்ச்சகர் நியமனத்தில் ஏற்படும் தாமதங்கள்

கோகுல்நாத்தாவது படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் 2007 - 2008ஆம் ஆண்டில் துவங்கிய முதல் பயிற்சி வகுப்பில் தனது அர்ச்சகர் படிப்பை முடித்தவர்.

இப்போது அவர் ராசிபுரத்திலேயே உள்ள சிறிய கோவில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். புரோகிதம் செய்யும் வாய்ப்பு வந்தால், அதற்கும் சென்று வருகிறார். "2007-2008இல் முடித்தவர்களில் 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் சிலர் இறந்துவிட்டனர். படித்து முடித்தவர்களில் 50 சதவிகிதம் பேர் புரோகிதம் போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வருகின்றனர். பூணூல் எல்லாம் அணிந்து தீட்சை பெற்ற பிறகு, இதை விட்டுவிட்டுப் போக முடியவில்லை" என்கிறார் விஜயகுமார்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பள்ளிகளில் தங்கள் படிப்பை முடித்து, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்த இருவரைப் போல 200க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள்களுக்கு பூஜை செய்யச் செல்வதற்கான பாதையின் வழியை வழக்குகள் மறித்து நிற்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இதற்கென அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம், பயிற்சிக் காலம், கோவில்களில் நடைபெறும் பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து சில பரிந்துரைகளை அளித்தது.

பயிற்சி முடித்தும் வேலைக்காக காத்திருக்கும் அர்ச்சகர்கள்

அர்ச்சகர் நியமனம், கோயில்கள், அறநிலையத்துறை, தமிழ்நாடு

படக்குறிப்பு,அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றுள்ள அர்ச்சகர்கள் பணி நியமானத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அர்ச்சகராக்கும் நோக்கத்தில், 2007ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

அதில் திருவல்லிக்கேணி, திருவரங்கம் ஆகிய இடங்களில் வைணவ கோவில்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் மீதமுள்ள நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான அர்ச்சகர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

கடந்த 2007 - 2008ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்தப் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டபோது, மொத்தமாக 240 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் நடுவிலேயே விலகிவிட, 207 பேர் பயிற்சியை மொத்தமாக முடித்து 2008இல் தீட்சை பெற்றனர். இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, தடை ஆணையைப் பெற்றது. இதனால், இந்த மாணவர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. "தமிழக கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்ற கருத்து நிலவியதால், பணி நியமனம் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அர்ச்சகர் நியமனமும் சட்டப் போராட்டங்களும்

சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர் நியமனம், அறநிலையத் துறை

படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளை வரையறை செய்யும் விதிகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டது.

அந்தப் புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இரு சிறிய கோவில்களில் இருவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் பணிவாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், 2021இல் புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, அதே ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி 28 பேருக்குப் பணி வாய்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இந்த நியமனங்களை எதிர்த்து மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து புதிய நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருந்தபோதும், மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நடத்தத் துவங்கியது தமிழ்நாடு அரசு. 2022-23இல் 94 பேரும் 2023 - 24இல் 111 பேரும் அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர். 2024 - 2025இல் 95 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும் அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்தந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட இழுபறி

கோயில்கள், பூசாரி, பூஜை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் நீதிமன்ற தீர்ப்புகளால் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்பதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அது வெற்றியல்ல என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். "அதற்குக் காரணம், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லிவிட்டது. இதனால், ஆகம கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை இந்தத் தீர்ப்பால் ஏற்பட்டது" என்கிறார் அவர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், சில வைதீக அமைப்புகள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. "இந்த வழக்கில் அவர்கள் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால்கூட அர்ச்சகர்களை அரசு நியமிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்" என்கிறார் வாஞ்சிநாதன்.

அடுத்ததாக, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப அந்தக் கோவிலின் செயல் அலுவலர் கடந்த 2018இல் அறிவிப்பாணை வெளியிட்டார்.

ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்தக் கோவிலில் பரம்பரை அர்ச்சகராகப் பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், "ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு சாதி தடையாக இருக்காது" என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள்

உச்சநீதிமன்றம், வழக்கு நிலுவை, தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பல மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன.

மேலும், திருச்சி வயலூர் கோவிலில், அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின் கீழ் இரு அர்ச்சகர்களை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அந்த நியமனங்கள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அர்ச்சகர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி, அந்தத் தீர்ப்பிற்குத் தடையாணை பெறப்பட்டுள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்படி அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாகப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பயிற்சி முடித்தவர்களின் காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது.

"நாங்கள் அரசை நம்பிப் படித்தோம். இதுவரை வேலை கோரி மனு அளிப்பதைத் தவிர எந்தப் போராட்டங்களிலும் நாங்கள் ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணி வாய்ப்பு வழங்கப்படும் வரை எங்களுக்கு ஏதாவது ஒரு உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் எங்களுக்கு அதுவொரு சிறிய ஆறுதலாகவேனும் இருக்கும்" என்கிறார் விஜயகுமார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு ஆகியோரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இத்துறையின் கூடுதல் தலைமைச் செயலரான கே. மணிவாசனிடம் இது குறித்துக் கேட்டபோது இது தொடர்பான வழக்குகளை தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்தால்தான் இந்த விவகாரத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை எதிர்கொள்கிறோம்" என்கிறார் கே. மணிவாசன். இடைப்பட்ட காலத்தில் அந்த மாணவர்கள் உதவித்தொகை கோருவது குறித்துக் கேட்டபோது, "அதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். என்ன நடக்கிறதென பார்க்கலாம்" என்று மட்டும் பதிலளித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crld7g48n41o

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

3 months ago

New-Project-12.jpg?resize=750%2C375&ssl=

பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவார்: ரஜினிகாந்த் நம்பிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவருவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதுடன், மோடியின் தலைமையின் மீதும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மும்பையில் இன்று (01) ஆரம்பமாகியுள்ள வேவ்ஸ் எனப்படும் 2025 உலக ஆடியோ விஷூவல் பொழுது போக்கு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது 74 வயதான நடிகர் ரஜினிகாந்த், மோடியை ஒரு ‘போராளி’ என்று அழைத்தார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையை ‘கருணையுடன்’ கையாள பிரதமரை நம்புவதாகவும் பகிர்ந்து கொண்டார்.

“நமஸ்கார், மரியாதைக்குரிய பிரதமரே, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் அவர்களே. பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற நிகழ்வுக்குப் பின்னர், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் இந்த நிகழ்வை ஒத்திவைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள்.

ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் எனது பிரதமர் – நரேந்திர மோடி ஜி (sic) மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.”

“அவர் ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார், கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை நிரூபிப்பார், இந்த சூழ்நிலையையும் அவர் அழகாகவும் துணிச்சலுடனும் எதிர்கொள்வார், காஷ்மீரில் அமைதியையும் நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார்” என்று அவர் கூறினார்.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

2025 வேவ்ஸ் உச்சி மாநாடு என்பது மும்பையில் உள்ள JIO மாநாட்டு மையத்தில் நடைபெறும் நான்கு நாள் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு இந்தியாவை கலை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய முன்னணியில் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது இந்திய திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்த முக்கியப் பெயர்களுடன் தொடர்ச்சியான அறிவார்ந்த உரையாடல்களைக் கொண்டிருக்கும்.

மேலும் நாட்டின் நாட்டுப்புற நடனம் மற்றும் இசையை அதன் மென்மையான சக்தியாக எடுத்துக்காட்டும்.

gp2bqiobmaaocrc_0.jpeg?ssl=1

இந்த நிகழ்வில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அக்ஷய் குமார், கரண் ஜோஹர், ஹேமா மாலினி, மிதுன் சக்ரவர்த்தி, இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

https://athavannews.com/2025/1430224

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 months ago

நரேந்திர மோதி , சாதி வாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஏப்ரல் 2025, 11:10 GMT

புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என, ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று பிரதமர் மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பில் இதுவரை நடந்தது என்ன?

எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோதிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c75dg19vkg7o

பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!

3 months ago

process-aws.webp?resize=740%2C375&ssl=1

பெண்களின் பாதுகாப்புக் கருதி Red-Button Robotic COP சேவையை அறிமுகப்படுத்தும் தமிழக அரசு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ கோப் (Robotic COP) வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாநகரின் 200 முக்கிய இடங்களில் ரெட் பட்டன்- ரோபோட்டிக் கோப் (Red-Button Robotic COP) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் விரைவில் பொருத்தப்படவுள்ளது. 24 மணிநேரமும் இயங்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் வீதியின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பொலிஸ்  கட்டுபாட்டு அறையுடன் நேரடி தொடர்பு கொள்ளவும், உடனடியாக பொலிஸ் துறைக்கு  அழைப்பினை ஏற்படுத்தவும், அருகில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸாரை எச்சரிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆபத்தில் உள்ளவரை பொலிஸ்  கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வீடியோ கோல் மூலம் ஆபத்தில் உள்ளவரின் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் அதிகமாகக்  கூடும் இடங்கள் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குறித்த  சாதனத்தை பொருத்தத் தமிழ அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429847

பாஜக - அதிமுக கூட்டணியல்ல அது ஒரு சதி

3 months ago

ஒவ்வொரு தேர்தலிலும், ஒரே நாடகத்தை நாம் பார்க்கிறோம். பாஜக அதிமுகவுடன் கைகோர்க்க வலியுறுத்துகிறது. அதிமுக நாங்கள் பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றார்கள். எந்தக் காலத்தில் நடக்காது என்றார் தவழ்பாடி. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொய்.

வெற்றி பெறத் தவறிய பிறகும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவர்களை தெளிவாக நிராகரித்த பிறகும் கூட கூட்டணி ஏன்?

பாஜக ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டணிக்காக துடித்தது?

காரணம் என்ன தெரியுமா?

இது தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கான தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. இது ஒரு சதி வலை. பின்னுவது பிஜேபி. அடிமைக்கூட்டம் கைகட்டி மெய் வாய் மூடி தலையைக் கூட ஆட்டாமல் தமிழர்களைக் காவு கொடுக்க உதவி செய்கிறது.

அதிமுகவை படிப்படியான கையகப்படுத்தும் திட்டம். அமைதியான, கணக்கிடப்பட்ட சதி.

பாஜகவால் தமிழ்நாட்டில் தனியாக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தி மேலாதிக்கம், வட இந்திய தேசியவாதம் மற்றும் தீவிர இந்துத்துவா ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட அவர்களின் சித்தாந்தத்திற்கு தமிழ் மக்களின் மனதில் இடமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்தியக் கட்சியின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். அதிமுகவை ஒரு முகமூடியாக, ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

தமிழர்களே ஏமாறாதீர்கள் - இது இந்தியா முழுவதும் அவர்கள் பயன்படுத்திய அதே கதை.

மகாராஷ்டிராவில், அவர்கள் பல ஆண்டுகளாக சிவசேனாவைப் பிடித்துக் கொண்டனர். பின்னர் என்ன? உள்ளிருந்து பிரித்தனர். கட்சியை கடத்தினர். இன்று என்ன ஆனது?

பஞ்சாபில், அவர்கள் அகாலி தளத்தைப் பயன்படுத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுடன் அவர்களை இணைத்து அழித்தனர்.

பீகாரில், அவர்கள் நிதிஷ் குமாருக்குப் பின்னால் நின்றனர், அவரது அரசியல் வாழ்க்கையை முடிக்க முயன்றனர்.

வடகிழக்கில், அவர்கள் பிராந்தியக் கட்சிகளை ஒவ்வொன்றாக உள்வாங்கினர் - பாஜக கொடியைத் தவிர வேறொரு கட்சியின் கொடியையும் காணவில்லை.

இது கூட்டணி அரசியல் அல்ல. இது அரசியல் மனித பட்சிணி.

அவர்கள் கூட்டணியை உருவாக்கவில்லை - அதை உடைக்கிறார்கள்.

அவர்கள் கூட்டணியை ஆதரிக்கவில்லை - அவர்கள் கூட்டணிக் கட்சிகளை விழுங்குகிறார்கள்.

இப்போது, தமிழ்நாடு அவர்களின் பட்டியலில் அடுத்தது என்ன?

அவர்கள் ஏற்கனவே விளையாட்டைத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவுக்குள் பாஜக ஆதரவு முகங்களை ஊக்குவித்தல்.

உள்ளிருந்து கட்சியை பலவீனப்படுத்துதல்.

அழுத்தம் கொடுக்க மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துதல்.

ஊடகக் கதைகளை கட்டுப்படுத்துதல்.

மெதுவாக, திமுகவுக்கு முக்கிய மாற்றாக தங்களை நிலைநிறுத்துதல்.

நான் இதை உரத்த குரலில் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் - பாஜக அதிமுகவுக்கு ஆதரவளிக்க இங்கே இல்லை. பாஜக அதிமுகவை அழித்து ஒழித்து விட இங்கே உள்ளது.

சிவசேனாவிற்கு செய்தது போல. JD(U) உடன் முயற்சித்தது போல. நேர்மையாக வெற்றி பெற முடியாத ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் திட்டமிட்டது போல.

இது கூட்டணி அல்ல. இது அரசியல் கட்சிகளைக் கைதியாக்கும் உத்தி.

அதிமுக விழித்தெழாது. துரோகம் அதன் வாடிக்கையானது. பொய்களே கொள்கையானது. தலையற்ற தலைமையின் கீழ் திக்குத் தெரியாது சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டது. அழிந்தால் என்ன அழியாவிட்டால் தான் என்ன?

தமிழர்களுக்கு இதுபற்றிய எந்தக் கவலையும் தேவையில்லை. நச்சுக் களையொன்று ஊடுபயிரென பொங்கிப் பெருகும் தமிழர் வாழ்வுக்குள் ஊடுறுவத் துடிக்கிறது. அந்த நச்சுக் களைக்கு தமிழர்கள் நஞ்சிட வேண்டும்.

தமிழ்நாடு நினைவில் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு டெல்லிக்கு தலைவணங்கும் நிலம் அல்ல. டெல்லியில் இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாட்டால் ஆளப்படும் மக்கள் அல்ல.

பாஜகவுக்கு இங்கே இடமில்லை. இந்தக் கூட்டணி அரசியலை நாம் இப்போது நிறுத்தவில்லை என்றால், அவர்கள் ஒவ்வொரு குரலையும், ஒவ்வொரு கட்சியையும், மாநிலத்தில் மீதமுள்ள ஒவ்வொரு ஜனநாயகத்தையும் அழிப்பார்கள். மகாராஷ்டிராவில் மூன்றாம் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்கி விட்டார்கள்.

இது வாக்குகள் பற்றியது மட்டுமல்ல.

இது தமிழர்களின் அடையாளம் பற்றியது.

கூட்டாட்சியின் மகத்துவம் பற்றியது. சுய மரியாதையைப் பற்றியது.

இதுவெல்லாம் அடிமைகளுக்குத் தெரியாது. ஒவ்வொரு அடிமையும் ஊழல் வழக்குகளால் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலை தூக்கினால் அரசியலில் அவர்களின் முகம் காணாமல் போய் விடும் என்பதால் மவுனியாக அழிவுக்குத் துணை போகின்றார்கள்.

தமிழ்நாடு விற்பனைக்கு இல்லை.

தமிழக அரசியல் அவர்களின் விளையாட்டு மைதானம் அல்ல.

தமிழக மக்கள் இந்தச் சதிக்கு ஒருபோதும் சரணடைய மாட்டார்கள்.

https://thangavelmanickadevar.blogspot.com/

தமிழில் மருத்துவப் படிப்பு

3 months ago

எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும். மருத்துவர்களும் தமிழில் விளக்கினால் நோயாளிகள் புரிந்துகொள்வார்கள்.

மோடி எதைச் சொன்னாலும் திட்ட வேண்டியதில்லை. ஆங்கிலமே உலக மொழி, அதைக் கொண்டே நாம் வளர்ந்தோம் என அதை மிகைப்படுத்த தேவையில்லை. ஆங்கிலம் வழி படித்து வெளிநாட்டில் பணியாற்ற விரும்புவோரும் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்புவோரும் அவரவருக்கு ஏற்ப பயிலும் மொழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் நல்லது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்வழி படித்த ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடியாது என்று தீர்மானிக்க முடியுமா? ஆங்கில வழியில் படித்தோர் எல்லாரும் இங்கு ஷேக்ஸ்பிராக இருக்கிறார்களா?

இரு மொழிகளில் ஒரு திறம்படைத்த மருத்துவரால் இயங்க முடியாதா? அப்படியே இரு சாராருக்கும் வேறுபாடு தோன்றினால், தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மருத்துவப் பணிகளில் அரசு ஒட இதுக்கீடு தந்தால் அது சமத்துவத்தை ஏற்படுத்தும்.

நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன்.

AVvXsEhpTZKC9D2HCINa8irvQk23kUAkXHJ3fYuVj34wyO-KTFTFgzxwvbQTpLsCSWoLepYfeTKQbqJ9ZahB-B3MIin8DAtTsAqjmwF8-tkKh33DWbNh5xf2M9mR0sSih6CQH3bHJFEwrOEIS6d25eaoHDp51OZpx9T440G1LdSeN3Hcgf-Fq1yrWOB0rc-2cNGD=w400-h400

https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_96.html

வழக்குகளின் பிடியில் மேலும் 6 அமைச்சர்கள் - செந்தில் பாலாஜி, பொன்முடி மட்டுமல்ல

3 months ago

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,DMK/WWW.DMK.IN

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 27 ஏப்ரல் 2025, 10:07 GMT

'அமைச்சராக இல்லை என்பதால் தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வேண்டுமா... அமைச்சர் பதவி வேண்டுமா?' என, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

செந்தில் பாலாஜியின் கருத்தை அறிவதற்கு ஏப்ரல் 28 வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்தது. இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தி.மு.க அமைச்சர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போலவே, மேலும் 6 அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் என்ன?

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,V.SENTHILBALAJI/FACEBOOK

படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

தி.மு.க அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, 2011-2015 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணியிடங்களில் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் சிலர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். இதையேற்று, 2021 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதன் காரணமாக ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2024 பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யுமாறு வித்யா குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின்படி அடிப்படை உரிமை மீறப்பட்டதால் ஜாமீன் வழங்கினோம். 2 நாட்களுக்குள் அவர் அமைச்சர் ஆனதை ஏற்க முடியாது' எனக் கூறியது.

மேலும், 'ஜாமீன் வேண்டுமா.. அமைச்சராக நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டது.

இதனால் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர செந்தில் பாலாஜிக்கு வேறு வழியில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப, தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@KATPADIDMK/X

படக்குறிப்பு,2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

தி.மு.க அமைச்சரவையில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், 1996-2001 தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இதே காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 3.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது 2002 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2007 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யுமாறு துரைமுருகன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்த சென்னை சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், துரைமுருகன் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதுதவிர, 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து துரைமுருகனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 24 ஆம் தேதியன்று இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் பொன்முடி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,KPONMUDI/FACEBOOK

படக்குறிப்பு,பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.

மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.

தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.

அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை என்றால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறி ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

மீண்டும் வழக்கு விசாரணையின்போது, 'கட்சியே நடவடிக்கை எடுததும்கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்புக்குள் வருகிறது" எனக் கூறினார்.

வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக பதிவுத் துறைக்கு தான் உத்தரவிடுவதாகவும் ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

இதுதவிர, 1996-2001 தி.மு.க ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது 2002 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் 1.36 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பி, இதற்கு அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

'பொன்முடி மீதான வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற முடியும் என்றால், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கிலும் எந்த விசாரணையும் நடத்த முடியாது' எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த சூழலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து பொன்முடியும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தி.மு.க ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 1996-2001 மற்றும் 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேரையும் விடுவிதது உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் ஒழிப்புத் துறை சார்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அறக்கட்டளை சொத்துகளையும் குடும்ப சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளாக ஊழல் ஒழிப்புத் துறை கணக்கிட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து கடலுர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் கடலூர் நீதிமன்றம் முடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர்

2006-2011 தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76,40,433 அளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னையும் தன் மனைவியையும் விடுவிக்குமாறு தங்கம் தென்னரசு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையேற்று 2022 ஆம் ஆண்டு இருவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஊழல் ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

வழக்கை மறுவிசாரணை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது

தி.மு.க ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கடந்த 2006-2011 தி.மு.க அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,56,067 ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு விடுவித்தது.

தங்கம் தென்னரசு வழக்குடன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X

படக்குறிப்பு,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்

2006-2011 தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்ரமணியன், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனையை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக, குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் தொடர்பாக மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவானது. இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மா.சுப்ரமணியன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், நிலத்தை 1998 ஆம் ஆண்டே தான் வாங்கிவிட்டதாகவும் சுமார் 20 ஆண்டுகள் கழித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

நிலத்தை வாங்கியதன் மூலம் சிட்கோ மற்றும் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை எனவும் மோசடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் இடமில்லை என மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

வழக்கில் காவல்துறை மற்றும் புகார்தாரர் பார்த்திபன் ஆகியோரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மா.சுப்ரமணியனின் மனுவை கடந்த மார்ச் 28 ஆம் தேதின்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.

மா.சுப்ரமணியன் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:

திமுக, அமைச்சர்கள், தமிழ்நாடு, சட்டம், வழக்குகள்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

தி.மு.க அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி, கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு முறைகேடாக வழங்கியதாக, ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

'தடை உத்தரவு தொடரும்' என கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpzz9kzpvo

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த மாநில பல்கலை. துணைவேந்தர்கள் - போலீஸ் மிரட்டியதா?

3 months ago

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பு, திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு மத்தியில் உதகையில் இருநாள் துணைவேந்தர்கள் மாநாடு இன்று (ஏப். 25) ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தொடங்கியது.

மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

"மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் வீட்டு கதவுகளை நள்ளிரவில் தட்டி போலீஸார் எச்சரித்ததாலேயே" அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார், திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது என்ன?

உதகை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என, 34 கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இருப்பதாக ஆளுநர் மாளிகை இணையதளம் கூறுகிறது. ஆனால், அந்த பல்கலைக்கழகங்களின் சார்பாக எந்தவொரு துணைவேந்தரோ அல்லது துணைவேந்தர் பொறுப்புக் குழு பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர்கள் இல்லை, அதற்கு பதிலாக துணைவேந்தர் பொறுப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

மாநில பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆர்.என். ரவி, "துரதிருஷ்டவசமாக இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என தங்களுக்கு மாநில அரசிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, அவர்கள் என்னிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்." என்றார்.

தற்போது கூட துணைவேந்தர் ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விதிமுறைகளை மீறி தனியார் அமைப்புகள் தொடங்கி, பல்கலைக்கழக நிதியை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தான் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிடுவதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

"இது முன்னெப்போதும் நடந்திராதது. நள்ளிரவில் துணைவேந்தர் வீடுகளின் கதவுகளைத் தட்டி காவல்துறை எச்சரித்துள்ளது. 'நீங்கள் மாநாட்டுக்கு சென்றால், வீட்டுக்குச் செல்ல முடியாது. உங்கள் குடும்பத்தைக் காண முடியாது' என எச்சரித்துள்ளனர். நான் அவர்களிடம், 'உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஆபத்துக்கு ஆளாகாதீர்கள்,' என்று கூறினேன்" என ஆர்.என். ரவி கூறினார்.

தமிழ்நாட்டில் மாநில பல்கலைக்கழகங்கள், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சித்த அவர், கல்வி தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் மாறாக இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

குற்றச்சாட்டை மறுக்கும் திமுக

ஆளுநர் ஆர்.என். ரவியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறக்கணித்தது திமுக.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கற்பனையாக பேசுவதில் ஆளுநருக்கு இணையாக இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது. இந்த மாநாடு எதற்காக கூட்டப்படுகிறது, இந்த மாநாட்டின் திட்டம், பேசுபொருள் என்ன என்பதையெல்லாம் ஆளுநர் மாளிகை துணைவேந்தர்களுக்கு அனுப்பியிருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

கல்வி வளர்ச்சிக்கும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்க வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசிய குடியரசு துணைத் தலைவரை மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார் ஆளுநர். ஆளுநரும் குடியரசு துணைத் தலைவரும் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்துகொள்ளாதவர்கள். தங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்." என்றார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசு தலைவருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். அதையே டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுப் பேசினார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

பட மூலாதாரம்,TKS ELANGOVAN / X

படக்குறிப்பு,ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் டி.கே.எஸ். இளங்கோவன்

"ஆளுநர் கல்வி தொடர்பாக ஒரு கூட்டம் நடத்துகிறார் என்றால், மாநில கல்வி அமைச்சரிடம் முதலில் கேட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக எதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை பேசியிருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவருக்கு பதிலாக மத்திய கல்வி அமைச்சரை அழைத்து வந்திருக்க வேண்டும். கல்வித்துறை குறித்து குடியரசு துணைத் தலைவருக்கு என்ன தெரியும்? மாநில முதலமைச்சரிடம் இதுகுறித்து கூறினார்களா?" என டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வியெழுப்பினார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதா?

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றின் பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பிபிசி தமிழிடம் பேசினார்.

"வரும் 27ம் தேதி எங்கள் பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் இருந்தன. மேலும், இன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என காவல் துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் வரவில்லை என்றார்.

இந்த மாநாட்டில் அரசியல் நோக்கம் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவது குறித்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை.

மாநாட்டில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், "இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் சிலர் பங்கேற்கவில்லை என்பது குறித்து ஆளுநர் கவலை கொள்ளத் தேவையில்லை. எந்த சூழ்நிலையால் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வந்தவர்களுக்கு வாழ்த்து கூறுவோம், வராதவர்கள் மாநாட்டின் குறிப்புகளில் இருந்து நடந்தவற்றை கற்றுக் கொள்ளலாம்" என்றார்.

ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு

பட மூலாதாரம்,TNRAJBHAVAN

மாநாட்டுக்கு எதிர்ப்பு ஏன்?

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு தடையாகவும் மக்கள் நலனுக்கு எதிராகவும் செயல்படுகிறார் என தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஆளுநர் மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று ஏப். 08 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மசோதாக்கள் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு காலக்கெடுவும் விதித்தது.

இதையடுத்து, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறிவந்த நிலையில், அரசு-ஆளுநர் மோதல் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விரைவிலேயே ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும் செய்தி மீண்டும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. முன்னதாக, ஏப். 16 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருந்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கான அதிகாரம் முதலமைச்சருக்கு வந்துவிட்டதால், அதிகாரமில்லாத வேந்தராக ஆளுநர் தொடர்வதாக முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பிபிசி தமிழிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரே தொடர்வதாகக் கருதி, இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த துணைவேந்தர்கள் மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுவதாக, ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்த மாநாட்டுக்கு எதிராகவும் ஆளுநர், குடியரசு துணைத் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1xzkqe0eo

Checked
Sat, 08/02/2025 - 08:39
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed