உலக நடப்பு

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்

3 months ago

iran-fe.webp?resize=480%2C267&ssl=1

ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்.

தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்  சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் வெடிப்புக்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருக்கலாம் என்று ஈரானிய சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் துறைமுகத்தின் உள்ள படகு முனையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429636

பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!

3 months ago

2025-04-23T114034Z_1267321301_RC2M3EADT5

பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே  நடத்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.

இதுதவிர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கம் இன்றைய தினத்தை (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

குறித்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429551

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு

3 months ago

INDPAKIRAN-1200x720-1.jpg?resize=750%2C3

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய  பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த  தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும் தமது  சகோதர நாடுகள் எனவும், இரு நாடுகளுக்கு இடையேயும்  நுாற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளதாகவும் , மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் தாம்  மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான்  இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1429580

'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?

3 months 1 week ago

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சரப்ஜித் சிங் தலிவால்

  • பதவி, பிபிசி நிருபர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"எங்களுக்கு வரும் கனவுகளிலும் மன அழுத்தம் எதிரொலிக்கிறது. கடன் தொல்லை, வேலை, மின்சாரக் கட்டணம், வீட்டுக்கடன் தவணை என பிரச்னைகளே இப்போது வாழ்க்கையாகிவிட்டது!"

கனடாவில் வசிக்கும் ரமண்தீப் சிங் என்பவரின் கவலை நிறைந்த வார்த்தைகள் இவை.

பஞ்சாபின் ஃபரித்கோட்டை சேர்ந்த ரமண்தீப் சிங், ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து தற்போது கனடாவின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்.

கனடாவுக்கு வருவதற்கு முன்பு, பஞ்சாபில் கல்லூரி ஒன்றில் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரமண்தீப் சிங்.

"கனடா என்பது போராட்டத்தின் மற்றொரு பெயர், ஆனால் கனடா ஒரு மோசமான நாடு என்றும் சொல்லிவிட முடியாது, கனடா சிறந்த நாடு, எனக்கு மிகவும் பிடித்தமான நாடு என்றாலும், கொரோனாவுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது" என்று ரமண்தீப் சிங் கூறுகிறார்.

கனடாவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வீடுகள் பற்றாக்குறை, வேலையின்மை, பணவீக்கம் என பல முக்கிய பிரச்னைகள் மக்களை பாதித்துள்ளன.

இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கைகளால் அதிகரித்த மக்கள் தொகை என்று நம்பப்படுகிறது.

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,ரமண்தீப் சிங்

நிலைமை எப்படி மாறியது?

ரமண்தீப் சிங் கட்டுமானத் துறையில் பணிபுரிகிறார். கனடாவில் கணிசமான வருமானம் தரும் தொழில் இது.

தற்போது கனடாவில் நிலவும் சூழ்நிலை குறித்த தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், "இங்கு வாழ்க்கை நடத்துவது கடினமாகிவிட்டது, வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன, பணவீக்கம் அதிகரித்து வருவதுடன், வீட்டு கடன் தவணைத் தொகை அதிகரித்துவிட்டது. இந்தக் காரணங்களால், கனடாவில் வசிக்கும் குடியேறிகள் சிரமப்படுகிறார்கள்."

"நானும் என் மனைவியும் கடினமாக உழைத்து, சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினோம். வாழ்க்கை சுமூகமாக சென்றுக் கொண்டிருந்தது. சில வருடங்களில் பழைய வீட்டை விற்றுவிட்டு, இரு மடங்கு விலையில் பெரிய வீட்டை வாங்கினோம்" என்று ரமண்தீப் கூறுகிறார்.

ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பிறகு, கனடாவில் வீட்டுச் சந்தை சரியத் தொடங்கியது, அப்போது தொடங்கிய ரமண்தீப் சிங் குடும்பத்தின் பிரச்னைகள் இன்னும் தொடர்கின்றன.

கடன் தவணை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கள் நிலைமை மோசமாகிவிட்டதாகக் கூறும் ரமண்தீப், இப்போது என்ன செய்வது என்று தனக்குப் புரியவில்லை என்று கூறுகிறார். இது தவிர, கனடாவில் பணவீக்கம் மற்றும் பிற செலவுகள் அதிகரிப்பும் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கின்றன.

"கனடாவிற்கு வந்து பத்தாண்டுகளான பிறகு, இங்கு வந்து குடியேறும் எங்கள் முடிவு தவறானது என்று இப்போது தோன்றுகிறது. வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது" என்று ரமண்தீப் சிங் கூறுகிறார்.

"தற்போது கனடாவில் வாழ்வது கடினமாகிவிட்டது, தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இல்லை. நாங்கள் இந்தியாவிலுள்ள அனைத்தையும் விற்றுவிட்டு வந்துவிட்டோம்."

"கனடா மிகவும் அழகான நாடு, எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முன்னேற வாய்ப்பளிக்கிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையால், இங்கு வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது" என்று ரமண்தீப் கூறுகிறார்.

கனடாவின் தற்போதைய நிலைமை, புலம்பெயர்ந்தோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

புதிய குடியேறிகளின் நிலைமை மேலும் கடினம்

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,கனடாவில் தற்போது புதிதாக குடியேறுபவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர்

கனடாவிற்கு புதிதாக குடியேறுபவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் கடுமையாகிவிட்டது. விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல பிரச்னைகளுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்த போராடி வருகின்றனர்.

குறிப்பாக வீட்டுப் பிரச்னை புதிய குடியேறிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ரமண்தீப்பைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த மிதுல் தேசாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கனடா வந்தார்.

தற்போது ஒண்டேரியோவில் வசித்து வரும் மிதுல் தேசாய், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிகிறார்.

"முன்பு எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் இப்போது குடியிருக்க வீடு கிடைப்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டுக்கான தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த முறை தேர்தலில் முக்கியப் பிரச்னையாக இருக்கப்போவது வீடு மற்றும் விலைவாசிதான்" என்று மிதுல் தேசாய் கூறுகிறார்.

மேலும், "சர்வதேச மாணவர்களின் வருகை கனடாவின் வீட்டு வாடகையை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. ஒரு காலத்தில் $300 ஆக இருந்த அடித்தள வீடுகளின் வாடகை $1500 முதல் $2000 வரை அதிகரித்தது" என்று மிதுல் தேசாய் கூறுகிறார்.

வீட்டு வாடகை அதிகரித்ததால், நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வீடுகளை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர்.

ஆனால் இப்போது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பல வீடுகள் காலியாக உள்ளன. இதனால், வாடகைக்கு வீடு கொடுத்து சம்பாதித்து வந்த வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வீட்டுக்கடன் தவணைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

2023-2024 ஆம் ஆண்டில் கனடா மாணவர் விசா திட்டத்தில் அப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ பெருமளவிலான மாற்றங்களைச் செய்தார். இதனால், மாணவர்களின் வருகை முன்பை விட கணிசமாகக் குறைந்துவிட்டதன் எதிரொலியாக, நாட்டின் வாடகை சந்தை நேரடியாக பாதிக்கப்பட்டதால், இப்போது வீடு மற்றும் வேலை இரண்டும் மக்களின் மன அழுத்தத்திற்கான முக்கிய காரணமாக மாறிவிட்டன.

சர்வதேச மாணவர்களின் எதிர்பார்ப்புகள்

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கனடா மிகவும் பிடித்த நாடாக இருந்து வருகிறது.

பஞ்சாப், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பிகார், கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்க வந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கனடாவிற்கு அவர்கள் வந்துள்ளனர்.

நவ்ஜோத் சலாரியா என்பவர், 2022 ஆம் ஆண்டில் மாணவராக கனடாவிற்கு வந்தவர். இவர் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போது அவர், பணி அனுமதி விசா (work permit) பெற்று வேலையில் இருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருடைய பணி அனுமதி காலாவதியாகிவிடும் என்பதால் அவரின் கவலை அதிகரித்துவிட்டது

"எனக்கு வேலை இருக்கிறது, ஆனால் கனடா நிரந்தர குடியுரிமை (PR) பெறவேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். தற்போது இது தொடர்பாக எதுவும் நடக்கவில்லை" என்று நவ்ஜோத் சலாரியா கூறினார்.

அண்மையில் நிரந்தர குடியுரிமை தொடர்பான விதிமுறைகளிலும் கனடா அரசு பெரிய மாற்றங்களைச் செய்துள்ளதால், கனடாவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் பலருடைய பணி அனுமதி விசா காலாவதியாகிவிட்டன. இதனால், கனடாவில் குடியேற வேண்டும் என்ற மாணவர்களின் கனவுகள் கானல்நீராகிவிட்டன. அதில், பஞ்சாப் மாநிலத்தின் தரன்தாரனை சேர்ந்த சிமர்ப்ரீத் சிங் என்பவரும் ஒருவர்.

"எனது பணி அனுமதி காலாவதிவிட்டதால் இனி கனடாவில் வேலை செய்ய முடியாது. வருமானம் இல்லாமல், செலவுகளுக்கு பணம் இல்லாமல் நிலைமை மோசமாகிவிட்டது" என்று சிமர்ப்ரீத் சிங் கூறினார்.

"இப்போது கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதுதான் எங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்" என்று அவர் கூறினார்.

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,2023-2024ஆம் ஆண்டில், அப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கனடாவின் மாணவர் விசா திட்டத்தில் பெரிய மாற்றங்களைச் செய்தது.

குஜராத்தை சேர்ந்த சோனல் குப்தாவும் கனடாவுக்கு கல்வி பயில வந்தவர்தான். தற்போது, அவர் நிரந்தர குடியுரிமைக்காக காத்திருக்கிறார்.

கனடாவின் நிலைமை முன்பை விட நிறைய மாறிவிட்டது என்று சோனல் குப்தா கருதுகிறார்.

"கனடாவின் தற்போதைய நிலைமைக்கு வெளிநாட்டு மாணவர்களே காரணம் என்று கனடாவின் குடிமக்கள் கருதுகின்றனர். அது உண்மையல்ல. மாணவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இங்கு வந்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு" என்று சோனல் குப்தா கூறுகிறார்.

கனடாவின் தேர்தல்களை வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சோனல் குப்தா, நிலைமை எப்படியிருந்தாலும், ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கழிப்பதாக கூறுகிறார்.

கனடாவில் வீடு பற்றாக்குறை தொடர்பான தரவுகள்

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,கனடாவில் வீட்டு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

கனடா தற்போது குடியிருப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது. அந்நாட்டு அரசின் தரவுகளின்படி, நாட்டில் சுமார் நான்கு லட்சம் வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன.

கனடாவின் ஸ்கொட்டியாபேங்க் 2021 அறிக்கையின்படி, பிற G-7 நாடுகளை விட கனடாவில் வீடுகள் குறைவாக உள்ளது. ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கான வீடுகள் தொடர்பாக பிற ஜி-7 நாடுகளுடன் ஒப்பிடும்போது கனடாவில் வீடுகளின் எண்ணிக்கை குறைவு.

2016 ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகைக்கு ஏற்ப வீடுகள் கட்டுவதற்கான வேகம் குறைந்துள்ளது என்பதை தரவு தெளிவாகக் காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டில், 1,000 பேருக்கு 427 வீடுகள் என்றிருந்த நிலை, 2020 ஆம் ஆண்டில் 424ஆகக் குறைந்துள்ளது.

"கனடாவின் மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் வீடுகள் கட்டப்படவில்லை, இது வீடுகளின் விலையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று பிராம்ப்டனில் ரியல் எஸ்டேட் சந்தையுடன் தொடர்புடைய மின்கல் பத்ரா கூறுகிறார்.

"கனடாவில் வீடு வாங்குவது என்பது இப்போது கனவாகிவிட்டது, இங்கு, கடந்த சில மாதங்களில் வீட்டு விலைகள் 15-20 சதவீதம் அதிகரித்துள்ளன" என்று மின்கெல் பத்ரா சுட்டிக்காட்டுகிறார்.

இது, வாடகை சந்தையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, வீட்டு வாடகைகள் முன்பை விடக் குறைந்துள்ளன. இதன் காரணமாக, முதலீட்டிற்காக வீடு வாங்கியவர்கள் இப்போது தவணைகளைக் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,கனடாவிற்கு மாணவர் விசாவில் சென்ற மாணவர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் 2024 அறிக்கையுடன் 2019ம் ஆண்டின் அறிக்கையை ஒப்பிடும்போது, நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளது,

கல்வி அல்லது வேலைக்காக கனடாவுக்கு தற்காலிகமாக வந்து நிரந்தர குடியுரிமை கோருவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

கனடா அரசின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 889 மாணவர்கள் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், 25,605 வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கனடாவின் நிரந்தர குடியுரிமையைப் பெற்றனர், இது 2022 ஐ விட 30 சதவீதம் அதிகம்.

2023 ஆம் ஆண்டில், கனடா 4,71,808 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்டது. இது 2022ம் ஆண்டைவிட 7.8 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு, கனடா அரசு, அதன் குடியேற்றம் மற்றும் மாணவர் அனுமதிக் கொள்கைகளில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்தது. எனவே தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

கனடா, மாணவர்கள், விசா, இந்தியர்கள், குடியுரிமை

படக்குறிப்பு,கனடாவின் நிலைமை முன்பை விட நிறைய மாறிவிட்டது என்று சோனல் குப்தா கருதுகிறார்

கனடாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் குடியேற்றம் மற்றும் குடியிருப்பு பிரச்னை மிக முக்கியமானது.

குடியிருப்புத் தவிர, அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்துவரும் வேலைவாய்ப்புகள் மற்றும் அண்மையில் அமெரிக்கா விதித்த வரியின் தாக்கம் ஆகியவையும் இந்தத் தேர்தல்களில் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

கனடாவில் லிபரல் கட்சி 2015 முதல் ஆட்சியில் உள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக, இங்குள்ள முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ், என்டிபி, கிரீன் பார்ட்டி உள்ளிட்ட எதிர்கட்சிகள் லிபரல் கட்சியை கேள்விகளால் துளைத்தெடுக்கின்றன.

குறிப்பாக, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொலியேவ் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர், தற்போதைய கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோருகின்றனர்.

லிபரல் கட்சித் தலைவரும், கனடா பிரதமருமான மார்க் கார்னி, "நாட்டில் வீட்டுவசதி நெருக்கடி நிலவுகிறது, நான் ஆட்சிக்கு வந்தால், ஐந்து லட்சம் புதிய வீடுகளைக் கட்டுவேன்" என்று கூறுகிறார்.

"கடந்த சில ஆண்டுகளாக பல காரணங்களால், குறிப்பாக குடியிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை கடினமாக உள்ளது. ஆனால் கனடாவை மேம்படுத்த எங்கள் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்று மிசிசாகா-மால்டன் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான லிபரல் கட்சியை சேர்ந்த எக்விந்தர் கஹீர் கூறுகிறார்

கடந்த 30 ஆண்டுகளாக கனடாவில் வசித்து வரும் வழக்கறிஞர் ஹர்மிந்தர் சிங் தில்லான், ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.

"கனடாவில் குடியிருப்புகள் தொடர்பான நெருக்கடி மிகப்பெரியது, குறிப்பாக 2018 முதல் 2022 வரை வீடுகளின் விலைகள் இரட்டிப்பாகிவிட்டது, 2025 தேர்தலில் வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா வரிகளை அதிகரித்துள்ளதால் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில மாணவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் குறைகிறது. ஏற்கனவே வேலையின்மையால் போராடி வரும் இளைஞர்களுக்கு இது இன்னும் பெரிய நெருக்கடியாக மாறி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce3v5wvyy4xo

30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம்; பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி

3 months 1 week ago

அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு அளித்த செயல்தான் தற்போது பாகிஸ்தானையே மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஆண்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தான், தற்போது உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அதில், “நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவுக்கும், பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். “அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம். அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/317317

அடுத்த போப் ஆண்டவர் ஆப்பிரிக்கராக இருப்பாரா? நிறவெறி தடையாக இருக்குமா?

3 months 1 week ago

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2013ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டபோது கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் ஒரு முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்டார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், லெபோ டிசெகோ

  • பதவி, சர்வதேச மத நிருபர்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி மட்டுமே அடுத்த போப் எங்கிருந்து வருவார் என்பதைக் கணிக்கக்கூடிய ஒரே காரணி என்றால், அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம்.

ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2022 மற்றும் 2023ஐ உள்ளடக்கிய இரண்டு ஆண்டு காலத்தில் இது 3.31% அதிகரித்துள்ளது. வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், உலகின் கத்தோலிக்கர்களில் 20% பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்வதாகக் காட்டுகின்றன.

இதற்கு நேர்மாறாக, ஐரோப்பா அதே காலகட்டத்தில் 0.2% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியைக் கண்டது. மேலும் 1910 மற்றும் 2010க்கு இடையில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தின் மையப் பகுதியாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, உலகின் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை இன்னும் லத்தீன் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், அங்குள்ள பல நாடுகளில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திற்கு எதிராகத் தனது வலிமையை அது இழந்து வருகிறது.

கடந்த 2022இல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள 18 நாடுகளில் லத்தீனோபரோமெட்ரோ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், கத்தோலிக்கர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 2010இல் 70 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அதுவே 2020இல் 57% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ளது

எனவே, அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் வாடிகனில் கூடும்போது, 'வேட்பாளர்' எங்கிருந்து வருகிறார் என்பதும் அடுத்த போப்பை தீர்மானிக்கும் அவர்களது முடிவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா?

நைஜீரிய கத்தோலிக்கப் பாதிரியாரும் டீபால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான பாதிரியார் ஸ்டான் சூ இலோ அப்படித்தான் நினைக்கிறார்.

"ஒரு ஆப்பிரிக்க போப் இருப்பது சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, உலகளாவிய சபையின் அமைப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.

போப் பிரான்சிஸ் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 9% ஆக இருந்த துணை-சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளைச் சேர்ந்த கார்டினல்களின் விகிதத்தை 2022இல் 12% ஆக உயர்த்தினார். இப்போது அந்த கார்டினல்களும் வாக்களிக்க உள்ளார்கள்.

"அதற்காக அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அர்த்தமல்ல" என்கிறார் பாதிரியார் சூ இலோ.

"கார்டினல்கள் மிகவும் பிரபலமான ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது தேர்வு செய்யப்படும் நபர் ஏற்கெனவே செல்வாக்கு மிக்க நபராக இருப்பார்" என்று அவர் கூறுகிறார்.

"இன்று வாடிகனில், மூத்த ஆப்பிரிக்க மதகுருமார்களில் எவரும் எந்த முக்கியப் பதவியையும் வகிக்கவில்லை என்பதுதான் சவால். அது ஒரு முக்கிய சிக்கல். போப் பதவிக்கு வரக்கூடிய ஆப்பிரிக்க கார்டினல்களை பற்றி நீங்கள் சிந்தித்தால், இன்றைய சூழலில் உலகளாவிய கத்தோலிக்க மதத்தில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி யாரும் இல்லை என்பதே நிதர்சனம்" என்கிறார் பாதிரியார் சூ இலோ.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தெற்கு சூடானுக்கு போப் பிரான்சிஸ் சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்க்க வந்தனர்.

இந்த நிலை, 2013ஆம் ஆண்டு கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் போப் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருந்ததற்கும், 2005ஆம் ஆண்டு நைஜீரிய கார்டினல் பிரான்சிஸ் அரின்ஸ், போப் பெனடிக்ட் XVI தேர்வு செய்யப்படுவதற்கு வழிவகுத்த மாநாட்டில் ஒரு சாத்தியமான வேட்பாளராக இருந்ததற்கும் நேர்மாறாக உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

"ஆப்பிரிக்கா தொடர்பான போப் பிரான்சிஸின் வெளிப்படையான மனப்பான்மையைக் கருத்தில் கொண்டால், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பது நம்மில் பலரை இன்னும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று" என்று பாதிரியார் சூ இலு கூறுகிறார்.

ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று போப்கள்

ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை மூன்று போப்கள் வந்திருந்தாலும்கூட, அதில் கடைசி போப் ஆணவடரான - போப் கெலாசியஸ் I - 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே இன்னொரு ஆப்பிரிக்க போப் வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று பலர் வாதிடுகின்றனர்.

ஆனால் சில ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள், அடுத்த போப் எங்கிருந்து வரக்கூடும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நினைக்கிறார்கள்.

நோட்டர் டேம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நைஜீரியாவில் பிறந்த கத்தோலிக்க பாதிரியாருமான பவுலினஸ் இகெச்சுக்வு ஒடோசோரும் அப்படித்தான் கருதுகிறார்.

"ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அல்லது ஐரோப்பாவில் இருந்து வருவதால், அவர்தான் பிரதான வேட்பாளர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை," என்று அவர் கூறுகிறார்.

"நீங்கள் எங்கிருந்து வந்தாலும், நீங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அனைவரின் பிரச்னைகளும் உங்கள் பிரச்னையாக மாறும். மக்கள் எங்கிருந்தாலும், அவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும், கிறிஸ்துவ சமூகத்தைக் கட்டிக்காப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே கவலையாக இருக்கும்" என்கிறார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போப் தேவாலயத்தின் தலைமை இறையியலாளராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

போப் என்பவர் பாரம்பரியத்தை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி மக்களுக்கு வழிகாட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பவுலினஸ் நினைக்கிறார்.

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு பயணம் செய்தபோது அவர் நடத்திய திறந்தவெளி திருப்பலி கூட்டத்தில் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த போப் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா என்று கேட்கப்படுவது விரக்தியை ஏற்படுத்துவதாக பாதிரியார் ஒடோசோர் கூறுகிறர். பன்மைத்துவத்தின் அடையாளமாக மட்டுமே ஒரு ஆப்பிரிக்க போப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை.

இந்தப் பார்வை, "சரி, ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு ஏன் ஒரு போப்பை வழங்கக் கூடாது' என்று மக்கள் சொல்வது போல் இருக்கிறது" என்கிறார் அவர்.

அவரது பார்வையில், ஆப்பிரிக்காவில் உள்ள விசுவாசிகளைப் பாதிக்கும் விஷயங்களை வாடிகனில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

"சில நேரங்களில், ஆப்பிரிக்கர்கள் முக்கியமற்றவர்கள் என்பது போல அல்லது அவர்களுடைய நம்பிக்கை ஏதோவொரு வகையில் தாழ்ந்ததாகவோ அல்லது போலியாகவோ பார்க்கப்படுவது போல மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது என்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதோ எனத் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"ஆப்பிரிக்கர்கள் தங்கள் பிரச்னைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்குச் செல்லவில்லை என்று உணரும்போது, அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். சரி, ஒருவேளை நம்மில் இருந்து ஒருவர் அங்கு இருந்தால் மட்டுமே நமது குரல் ஒலிக்கும் என்ற எண்ணமும் தோன்றும்" என்கிறார் பாதிரியார் ஒடோசோர்.

வாடிகனில் இனவெறியா?

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கார்டினல்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அவர்களுக்கு திருச்சபையில் உண்மையான அதிகாரம் இல்லை என்று பாதிரியார் சூ இலோ கருதுகிறார். பாதிரியார் ஒடோசோரின் கருத்தும் அதுவே.

"போப் பிரான்சிஸ் நியமிக்கும் கார்டினல்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை," என்று அவர் விளக்குகிறார்.

ஆனால், "நீங்கள் அவர்களை நியமிக்கும்போது, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் நியமிக்கும் இந்த மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள், வேலையில் அவர்களை நம்புங்கள், அதை அவர்கள் சுதந்திரமாகச் செய்யட்டும்" என்று அவர் கூறுகிறார்.

திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுக்கக்கூடிய ஒரு பிரச்னையை, பாதிரியார் சூ இலோ மற்றும் பாதிரியார் ஒடோசோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

"திருச்சபையில் இனவெறி பற்றிய கேள்வி இன்னும் உள்ளது. நாம் ஒருபோதும் அதைப் பற்றிப் பேசியதில்லை" என்று பாதிரியார் ஒடோசோர் கூறுகிறார்.

"அது ஒருவரை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும், அவர் போப் அல்லது கத்தோலிக்க தேவாலயத்திற்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, அவர் என்ன செய்தாலும் சரி, அவர் ஒரு ஆப்பிரிக்க போப்பாக மட்டுமே பார்க்கப்படுவார்."

கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்கம், போப், ஆப்பிரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் நினைத்தார்

அடுத்த போப்பை நியமிக்கும் கார்டினல்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களை, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்திருந்தார்.

இது ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைவிட சற்று குறைவு. அதாவது, யார் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டாலும், ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் போப் பிரான்சிஸ் காட்டும் முக்கியத்துவத்தை அவர்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த அணுகுமுறையை 'ஏழைகளுக்கு முன்னுரிமை' என்று அழைக்கிறார் பாதிரியார் சூ இலோ. இது, 'அவர்களது குரல்களைக் கேட்கும் ஒரு தேவாலயம், மிகவும் முற்போக்கான தேவாலயம், மிகவும் எளிமையான தேவாலயம்' என்பதில் கவனம் செலுத்துகிறது.

அடுத்ததாக திருச்சபையை வழிநடத்தப் போகும் எவரிடமும் அவர் காண விரும்பும் ஒன்று இதுதான்.

ஆச்சரியமான முடிவு

ஆனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அதற்கு மற்றொரு முக்கியக் காரணி உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

"கடவுள், பரிசுத்த ஆவி, திருச்சபையின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். அதாவது, 2013இல் போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டதைப் போல, ஓர் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம்.

"அவர் வருவார் என யாரும் கணிக்கவில்லை" என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார்.

"அடுத்த போப், திருச்சபை விவகாரங்களில் தனக்கு முன்பிருந்த போப் கொண்டிருந்த அதே பார்வையைக் கொண்டிருப்பது முக்கியமா, அல்லது அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமா?" என பாதிரியார் சூ இலோவிடம் கேள்வி எழுப்பினோம்.

"நான் ஒரு நல்ல பாதிரியாரைப் போல பதிலளிப்பேன்," என்று அவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து பேசினார்.

"பிரான்சிஸின் கண்ணோட்டத்தைத் தொடரும் ஒரு போப்பை கடவுள் நமக்குத் தருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன். அத்தகைய நபர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன்." என்றார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm24x8pg182o

கார்குண்டுவெடிப்பில் ரஸ்ய இராணுவத்தின் உயர் அதிகாரி பலி - மொஸ்கோவில் சம்பவம்

3 months 1 week ago

25 APR, 2025 | 03:55 PM

image

மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில்  இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் ரஸ்ய தலைநகரின் நெஸ்டேரோவ் பவுல்வார்ட்டில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார்.

russian_army_off.jpg

காரின் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் ரஸய இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ரஸ்யாவிற்குள் இலக்குவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/212922

உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்!

3 months 1 week ago

New-Project-299.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்!

உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (24) மீண்டும் மோதிக்கொண்டனர்.

கிரிமியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்காக அமெரிக்கத் தலைவர் ஜெலென்ஸ்கியைக் கண்டித்துள்ளார்.

கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்க அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நேரம் இது என்று ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறினார்.

“அல்லது அமெரிக்கா இந்த செயல்முறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், “இன்றைய நிலைக்கு அருகில் ஏதோ ஒரு மட்டத்தில் பிராந்திய எல்லைகளை முடக்குவதற்கும்” “நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படும் நீண்டகால இராஜதந்திர தீர்வுக்கும்” இந்த திட்டம் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்க முன்மொழிவை நன்கு அறிந்த ஒரு முன்னாள் மேற்கத்திய அதிகாரி, கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை அங்கீகரிக்கவும் அழைப்பு விடுத்ததாகக் கூறினார்.

ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, உக்ரேன் போருக்கான அமெரிக்கக் கொள்கையை ட்ரம்ப் மாற்றியுள்ளார், 2022 இல் தனது அண்டை நாட்டின் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா மீதான அழுத்தத்தைத் தளர்த்தும் அதே வேளையில், உக்ரேனை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தார்.

2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாக, தீபகற்பத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ரஷ்யாவிடம் உக்ரேன் கிரிமியாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ஜெலென்ஸ்கி செவ்வாயன்று மீண்டும் வலியுறுத்தினார்.

“இங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை. இது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு இடையேயான லண்டன் பேச்சுவார்த்தைகள் மிகுந்த உணர்ச்சிகளால் குறிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி பின்னர் ஒரு எக்ஸ் பதிவில் கூறினார்.

ஆனால் எதிர்கால கூட்டுப் பணி அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரேன் அதன் அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படியும் என்றும், கியேவின் கூட்டாளிகள், குறிப்பாக அமெரிக்கா, “அதன் வலுவான முடிவுகளுக்கு ஏற்ப செயல்படுவார்கள்” என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.

https://athavannews.com/2025/1429345

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!

3 months 1 week ago

2025-04-23T065404Z_1946830841_RC2G3EAYKJ

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!

காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம்  நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை  உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள்  இடிந்து விழுந்தன.

இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம்  வெளியிட்டுள்ளன.

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள  நிலையில் காசா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் இராணுவம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

2 ஆண்டுகளாக நீடித்து வரும் இப் போரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429336

துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை

3 months 1 week ago

23 APR, 2025 | 04:37 PM

image

துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒருசில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

turkey_earth_20251.jpg

இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/212747

சர்வதேச புத்தக தினம் – ஏப்ரல் 23

3 months 1 week ago

23 APR, 2025 | 04:02 PM

image

“புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட” - சார்ல்ஸ் வில்லியம் எலியட் (Charles William Eliot)

இன்று, சர்வதேச புத்தக தினம் ஆகும். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், சர்வதேச புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது.

வாசிப்பு ஒன்றே மனிதனை பூரணப்படுத்தும். நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். ஆக…. மனிதன் பலதரப்பட்ட புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், தன் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுவது நல்ல புத்தகங்களே என்றால் அது மிகையல்ல. 

இப்படி, மனிதனின் வாழ்வை ஒழுங்குபடுத்தக்கூடிய புத்தகங்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே சர்வதேச புத்தக தினம் ஆகும். அந்த வகையில், சர்வதேச புத்தக தினத்தின் ஆரம்பம் 1995ஆம் ஆண்டு ஆகும். புத்தகங்கள் பற்றி எடுத்துரைக்கும் பொருட்டு, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் அந்த ஆண்டு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு, உலகளவில் உள்ள எழுத்தாளர்களைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது.

world-book-day-2025.webp

இந்த நாள் உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே.லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மெனுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது.

இந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலகை விட்டு சென்றாலும், அவர்கள் இலக்கியத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்பு தலைமுறை தலைமுறையாக புத்தக வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறது.

புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும்.

நாம், புதிய சொற்களை கற்கும் போது, அறிவு மேம்பட்டு மொழி பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இதனால் எழுத்துத் திறனும் மேம்படும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும், மன அமைதியைப் பெறவும் கூட, புத்தக வாசிப்பே சிறந்த வழியாகும்.

love-to-read-books-benefits-of-reading.j

எப்போது பார்த்தாலும், கணினியிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடப்பவர்களும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை, நல்ல புத்தகங்களை வாசிக்க ஒதுக்கினால், மனம் அமைதியாகி, புத்துணர்வு ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். 

ஆகவே, புத்தகம் மனித குலத்தின் அறிவுச் சொத்து. அதனை உணர்ந்து வாசிப்புத் திறனை மேம்படுத்துவோம். வாழ்க்கையை, சிறப்புடனும், பயனுள்ள வகையிலும் கழிக்க, சுவாசிக்கும் வரை வாசிப்போம்.

bookclub-shelves-letters-read.jpg

https://www.virakesari.lk/article/212732

உக்ரேனில் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

3 months 1 week ago

New-Project-287.jpg?resize=750%2C375&ssl

உக்ரேனில் பேருந்து மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

உக்‍ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் புதன்கிழமை (23) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம், இந்த தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் Dnipropetrovsk பிராந்தியத்தின் தலைவர் செர்ஹி லைசாக் உறுதிபடுத்தியுள்ளார்.

போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

GpMlawYXMAAfdoq?format=jpg&name=large

GpMlawTWsAAu1Hw?format=jpg&name=medium

GpMlawSXAAA3Kis?format=jpg&name=large

https://athavannews.com/2025/1429256

ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்

3 months 1 week ago

ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்

April 23, 2025 11:51 am

ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் மஸ்க் ஒரு அரசியல் அங்கமாக மாறியதால் விற்பனை சரிந்ததாக கூறப்படுகிறது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாகன வருவாயில் டெஸ்லா நிறுவனம் 20 வீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் லாபம் 70 வீதத்திற்கும் அதிகமான சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு உலகம் முழுவதும் டெஸ்லாவுக்கு எதிர்ப்புகள் மற்றும் புறக்கணிப்புகளைத் தூண்டியுள்ளது.

ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில் மஸ்க்கின் பங்கு குறித்த கூக்குரலுக்கு மத்தியில் நிறுவனத்தின் அண்மைய நட்டம், நிறுவத்தின் மீதான
கவனத்தை குறைத்துள்ளதை மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

கூட்டாட்சி செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசாங்க பணியாளர்களைக் குறைப்பதற்கும் ட்ரம்பின் அரசாங்கத் துறை (டோஜ்) முயற்சியையும் அவர் மஸ்க் வழிநடத்துகிறார்.

அடுத்த மாதம் முதல் “டோஜுக்கு ஒதுக்கப்படும் நேரம்” கணிசமாகக் குறையும்” என்றும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/musk-to-reduce-doge-role-after-tesla-profits-plunge/

ட்ரம்பின் கடும் வரிகள்; உலகளாவிய பொருளாதார உற்பத்தி தொடர்பில் IMF எச்சரிக்கை!

3 months 1 week ago

New-Project-281.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பின் கடும் வரிகள்; உலகளாவிய பொருளாதார உற்பத்தி தொடர்பில் IMF எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளால், வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மெதுவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)செவ்வாயன்று (22) கூறியது.

உலகளாவிய நிதித் தலைவர்கள் ட்ரம்பின் குழுவுடன் வரிகளைக் குறைக்க ஒப்பந்தங்களைக் கோரி செவ்வாயன்று வொஷிங்டனை முற்றுகையிட்டனர்.

உண்மையில், பேச்சுவார்த்தைகளின் வேகம் விறுவிறுப்பாக இருந்தது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார்.

இதுவரை 18 வெவ்வேறு நாடுகள் திட்டங்களை வழங்கியுள்ளன.

மேலும் ட்ரம்பின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு இந்த வாரம் 34 நாடுகளைச் சந்தித்து வரிகளைப் பற்றி விவாதிக்க உள்ளது.

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் “கணிசமாக” கட்டணங்களைக் குறைத்து, சந்தைகளை உயர்த்தும் என்று ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் பல நாடுகளுக்கு 10% அடிப்படை இறக்குமதி வரியை நிர்ணயித்த பின்னர், ட்ரம்ப் திடீரென கடுமையான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.

இதேவேளை, உலகின் நம்பர் 1 பொருளாதார நாட்டில் பொருட்கள் மீதான வரிகள் ஒரு நூற்றாண்டில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.8% ஆகக் குறையும் என்று IMF கணித்துள்ளது.

இது ஏனைய நாடுகளுக்கு ஏற்படும் ஒரு வேதனை மட்டுமல்ல: அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டு 2.8% ஆக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் முழு சதவீதப் புள்ளி குறைந்து வெறும் 1.8% ஆகக் குறையும் என்றும் IMF கணித்துள்ளது.

இறக்குமதிகளின் விலை அதிகரிக்கும் போது பணவீக்கத்தில் “குறிப்பிடத்தக்க” மேல்நோக்கிய திருத்தங்கள் ஏற்படும்.

அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா 125% வரிகளை விதித்து பதிலடி கொடுத்துள்ளது.

இதன் விளைவாக இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகத் தடை ஏற்பட்டுள்ளளதாகவும் IMF கூறியுள்ளது.

https://athavannews.com/2025/1429221

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீன அரசு தடை!

3 months 1 week ago

Blog-19-American-Beef-1024x559-1.png?res

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீன அரசு தடை!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில்,  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அரசு தடைவிதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இதற்குப்  பதிலாக அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவுள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429214

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!

3 months 1 week ago

US-China-trade-war-web2.jpeg?resize=750%

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்கா-  சீனா இடையேயான வர்த்தகப்  போர் தீவிரமடைந்து வரும்  நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும்,  அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429114

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

3 months 1 week ago

New-Project-265.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார்.

ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கனடாவில் சுமார் 130 பில்லியன் டொலர் கூடுதல் செலவினங்களை உறுதியளிக்கும் லிபரல் தளம், 2025/26 பற்றாக்குறை கனடாவில் 62.3 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கணித்துள்ளது.

இது கடந் டிசம்பரில் கணிக்கப்பட்ட 42.2 பில்லியன் டொலர்களை விட மிக அதிகம்.

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக திங்களன்று வெளியிடப்பட்ட மூன்று நாள் நானோஸ் கருத்துக்கணிப்பு, லிபரல்களுக்கு 43.7 சதவீத மக்கள் ஆதரவும், கன்சர்வேடிவ்களுக்கு 36.3 சதவீத மக்கள் ஆதரவும் இருப்பதாகக் காட்டுகிறது.

https://athavannews.com/2025/1429119

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

3 months 1 week ago

New-Project-264.jpg?resize=750%2C375&ssl

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று டெல்டா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

திங்கள்கிழமை காலை டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 1213 இல், ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் பதிலளித்ததாக விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.

டெல்டாவின் கூற்றுப்படி, ஏர்பஸ் A330 விமானத்தில் 282 பயணிகளும், 10 விமான பணிப்பெண்கள் மற்றும் இரண்டு விமானிகளும் இந்த சந்தர்ப்பத்தின் போது விமானத்தில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் விமான விபத்துகளானது விமானப் பயணம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GpEer-bWQAAOKAi?format=jpg&name=large

GpEer9yWsAI92xC?format=jpg&name=large

GpFKqsOW8AAJcYJ?format=jpg&name=large

https://athavannews.com/2025/1429108

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 1 week ago

popo-francis.webp?resize=650%2C375&ssl=1

போப் பிரான்சிஸ் காலமானார்!

உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1429008

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன் குற்றசாட்டு - தடைகளையும் விதித்தது

3 months 1 week ago

20 APR, 2025 | 01:15 PM

image

ரஸ்யாவிற்கு சீனா ஆயுதங்களை விநியோகிக்கின்றது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீன அதிகாரியொருவர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான், சீனா யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு முயல்கின்றது என தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்கின்றது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர் மாநாட்டில் சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றது, சீன அரசாங்க பிரதிநிதிகள் ரஸ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டியிருந்தார்.

உக்ரைனிடம் இது குறித்த தகவல்கள் உள்ளது, எதிர்வரும் நாட்களில் அதனை வெளியிடவுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சீனாவின் மூன்று நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை அறிவித்துள்ள உக்ரைன் இந்த நிறுவனங்கள் அதிநவீன ஸ்காண்டர்(iskander missile) ஏவுகணைகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/212441

Checked
Sat, 08/02/2025 - 17:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe