டொனால்ட் டிரம்ப் மீது மூன்றாவது கொலை முயற்சியா? அமெரிக்க அதிகாரிகள் கூறியது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர், பீட்டர் போவ்ஸ் மற்றும் ஹாரிசன் ஜோன்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
-
23 நிமிடங்களுக்கு முன்னர்
சனிக்கிழமையன்று (அக்டோபர் 12), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு வேட்டைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நிறைந்த கைத்துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெம் மில்லர் எனப்படும் 49 வயதான அந்த சந்தேகத்திற்குரிய நபர், ஒரு கறுப்பு நிற எஸ்.யூ.வி வாகனத்தை ஓட்டிச் சென்றபோது காவல்துறை சோதனையில் சிக்கியுள்ளார். ஒரு ஒரு பாதுகாப்புச் சோதனைச் சாவடியில், அவரது காரை நிறுத்திச் சோதித்த போது, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ‘அதிக திறன் கொண்ட ஒரு மேகசின் (Magazine)’ ஆகியவற்றைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
எந்த அசம்பாவிதமும் நடப்பதற்கு முன்னதாகவே மில்லர் கைது செய்யப்பட்டார் என ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் அதிக திறன் கொண்ட மேகசினை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கெதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் டிரம்புக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும், இந்தச் சம்பவம் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய நபரை ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்று விவரித்தார், மேலும் இந்த சம்பவம் டிரம்ப் அல்லது பேரணியில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்தது.
ஆனால் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.
ரிவர்சைடு கவுண்டி காவல்துறை அதிகாரி (ஷெரிப்) சாட் பியான்கோ கூறுகையில், “சந்தேகத்திற்குரிய நபரின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி ஊகிக்க முடியவில்லை என்றும், ஆனால் டிரம்ப் மீதான ஒரு மூன்றாவது 'படுகொலை முயற்சியை’ தனது அதிகாரிகள் தடுத்து விட்டதாகத் தான் ‘உறுதியாக’ நம்புவதாகவும்',” தெரிவித்தார்.
ஆனால் டிரம்ப் மீதான தாக்குதல் தான் அந்த நபரின் நோக்கம் என்பதை நிரூபிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் சட்ட அமலாக்க (Federal law enforcement) அதிகாரி ஒருவர் சி.பி.எஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, “இந்தச் சம்பவத்தில், கொலை முயற்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை,” என்று கூறினார்.
ஃபெடரல் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் இந்தச் சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், கூடுதலாகச் சில குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்கள்.
பியான்கோ, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். முன்னதாக அவர் டிரம்பிற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதிநிதியாகவும் அவர் செயல்படுகிறார்.
இந்த சம்பவம் இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு மணிக்கு நடந்தது, அதாவது டிரம்ப் பேரணி மேடையில் தோன்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் நடந்துள்ள இந்தச் சம்பவம், டிரம்பைச் சுற்றியுள்ள தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட இரண்டு கொலை முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கைது செய்யப்பட்ட மில்லர் மீது இரண்டு ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பின்னர் $5,000 மதிப்பிலான (ரூபாய் 4.20 லட்சம்) பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். ஃபெடரல் குற்றச்சாட்டுகள் எதுவும் அவர் மீது தாக்கல் செய்யப்படவில்லை.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று நடத்தப்பட்ட ஒரு காவல்துறை செய்தியாளர் சந்திப்பில் பேசிய பியான்கோ "எங்களால் இப்போது எல்லா தகவல்களையும் கொடுக்க முடியாது, ஏனென்றால் நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்று கூறினார்.
அந்தச் சந்தேகத்திற்குரிய நபர் முதலில் பேரணி நடக்கும் பகுதிக்கு வந்தபோது அவர் எந்த எச்சரிக்கையையும் தூண்டும்படி நடந்துகொள்ளவில்லை என்றும், ஆனால் பேரணி நடக்கும் இடத்தை நெருங்கியதும் ‘பல முறைகேடுகள் வெளிவந்தன’ எனவும் ஷெரிப் பியான்கோ கூறினார்.
அந்த நபரின் வாகனம் போலியான ‘நம்பர் பிளேட்’ கொண்டிருந்ததாகவும், வாகனத்தின் உள்ளே அனைத்தும் ஒழுங்கற்றுக் கிடந்ததாகவும் அவர் விளக்கினார்.
காரில் பல பெயர்களில் கடவுச்சீட்டுகள் மற்றும் பல ஓட்டுநர் உரிமங்கள் இருந்தன என்றும், வாகனத்தின் ‘நம்பர் பிளேட்’ வீட்டில் போலியாக தயாரிக்கப்பட்டது, அது பதிவு செய்யப்படவில்லை என்றும் ஷெரிப் கூறினார்.
தான் ‘இறையாண்மைக் குடிமக்கள் இயக்கம்’ (Sovereign Citizens) என்ற தீவிர வலதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர் என அந்தச் சந்தேகத்திற்குரிய நபர் அதிகாரிகளிடம் கூறியதாக ஷெரிப் தெரிவித்தார்.
“வாகனத்தின் நம்பர் பிளேட்டும் கூட ‘இறையாண்மை குடிமக்கள்’ என்று கூறும் தனிநபர்களின் குழுவைக் குறிப்பதாக இருந்தது," என்று காவல்துறை அதிகாரி கூறினார். ஆனால் மில்லர் அந்தக் குழுவின் ஒரு உறுப்பினர் தானா என்பதை ஷெரிப் உறுதியாக கூறவில்லை.
"அதை ஒரு போராளிக் குழு என்று நான் கூறமாட்டேன். அது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லாத ஒரு குழு. அரசாங்கமும் சட்டங்களும் அவர்களுக்குப் பொருந்தும் என்பதை அந்தக் குழு நம்பவில்லை." என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஃஎப்.பி.ஐ (FBI) ஆகிய அமைப்புகளுக்கு இந்த கைது நடவடிக்கை பற்றி தெரியும் எனவும் ஃபெடரல் அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தச் சம்பவம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என்றும், முன்னாள் அதிபர் டிரம்ப் எந்த ஆபத்திலும் இல்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தற்சமயம் ஃபெடரல் அதிகாரிகளின் சார்பில் கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், விசாரணை நடந்து வருகிறது. நேற்றிரவு நிகழ்வுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவிய பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அமெரிக்க அட்டர்னி அலுவலகம், அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஃஎப்.பி.ஐ (FBI) ஆகியவை தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளன,” என்றும் ஃபெடரல் அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை முயற்சி நடந்ததாகக் கூறப்படுவதையடுத்து, டிரம்ப்பைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மில்லர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய சனிக்கிழமை, பென்சில்வேனியாவின் பட்லரில் இரண்டாவது முறையாக பேரணியை நடத்தினார் டிரம்ப். கடந்த ஜூலை மாதம் இதே இடத்தில் தான் ஒருவர் ஸ்னைப்பர் துப்பாக்கியால் டிரம்பின் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் கூட்டத்தில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த டிரம்ப், தனது காதுகளில் ரத்தம் வழிய அங்கிருந்து வெளியேறினார்.
கடந்த செப்டம்பரில், புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ‘டிரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்புக்கு’ வெளியே கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் தற்போது சிறையில் உள்ளார். அந்த நபர் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே புதர்களுக்குள் ரைபிள் துப்பாக்கியுடன் மறைந்திருந்தபோது பிடிபட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு