உலக நடப்பு

புடின் கைது செய்யப்படுவாரா..! சர்வதேச அளவில் பரபரப்பு

3 months 2 weeks ago

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

புடின் மீது கைது பிடியாணை 

அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.

புடின் கைது செய்யப்படுவாரா..! சர்வதேச அளவில் பரபரப்பு | Putin Will Be Arrested International Sensation

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

புடின் கைது செய்யப்படுவாரா..! சர்வதேச அளவில் பரபரப்பு | Putin Will Be Arrested International Sensation

https://ibctamil.com/article/putin-will-be-arrested-international-sensation-1725397308#google_vignette

வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு!

3 months 2 weeks ago
images-1-2.jpg?resize=300,168&ssl=1 வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு!

வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

இன்னிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டதுடன் இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1398164

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்தது குடியேற்றவாசிகளின் படகு - கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் பலி

3 months 2 weeks ago

Published By: RAJEEBAN   04 SEP, 2024 | 08:12 AM

image
 

ஆங்கில கால்வாயில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகே கவிழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்கிரிஸ் நெஸ் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

pSH0Vswr.jpg

இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகில் அளவுக்கதிகமானவர்கள் காணப்பட்டனர், அதன் அடிப்பகுதி வெடித்தது, ஒரு சிலரே உயிர்காக்கும் அங்கியை அணிந்திருந்தனர் எனபிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆங்கில கால்வாயில் இந்த வருடம் அதிகளவானவர்கள் உயிரிழந்த சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவை சேர்ந்த ஆள்கடத்தல்காரர் ஒருவர் இதில் ஈடுபட்டிருக்கலாம், உயிரிழந்தவர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்களாகயிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணியொருவரும் ஆறு சிறுவர்களும் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/192796

உக்ரைனின் அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா!

3 months 2 weeks ago
images-28.jpeg?resize=275,183 உக்ரைனின் அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா!

உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சா் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோரே தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

இதேவேளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கான  கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த இராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஷியா உக்ரைன் மீது போர் ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில்,  இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலைஉக்ரைன் எதிர்கொண்டு வருகிறது.

இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398052

சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது!

3 months 2 weeks ago
chicago-train-1-7022909-1725319775587.jp சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது!

அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது

இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1397951

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!

3 months 2 weeks ago
images-3-1.jpg?resize=281,180 இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்த பிரித்தாணியா முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார்.

அதன்படி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

https://athavannews.com/2024/1397905

ஸ்வஸ்திகா சின்னத்தை ஹிட்லர் தேர்வு செய்தது ஏன்? அதற்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

3 months 2 weeks ago
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை
  • பதவி, புது டெல்லி
  • 2 செப்டெம்பர் 2024

பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும் இருந்தது. செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.

ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் கொடியில் 'ஹக்கன்க்ரூஸ்' (Hakenkreuz) அல்லது கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது ஸ்வஸ்திகாவைப் போன்ற ஒரு உருவம்.

அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்தியர்கள், குறிப்பாக யூதர்களிடையே யூத இன அழித்தொழிப்பு (ஹோலோகாஸ்ட்) பற்றிய வலிமிகுந்த நினைவுகளின் அடையாளமாக இந்த குறியீடு மாறியது.

இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்வஸ்திகா என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான ஒரு சின்னமாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவில் புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது
ஸ்வஸ்திகாவின் பொருள் என்ன?

இந்து, சமணம் மற்றும் பௌத்த மதங்களில் பிரபலமான ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல், 'சு' மற்றும் ‘அஸ்தி’ ஆகிய வேர்ச்சொற்களால் ஆனது.

‘சு’ என்றால் ‘நலம்’ என்று பொருள், 'அஸ்தி' என்றால் 'நடக்கட்டும்’ என்று பொருள். இவை சேர்ந்து உருவானது தான் ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல்.

இச்சொல்லின் குறியீட்டு அடையாளம், செங்குத்தான கோடு ஒன்றை நடுவில் ஒரு கிடைமட்டக் கோட்டால் வெட்டி, அவற்றின் நான்கு முனைகளிலிருந்தும் கோடுகளை நீட்டி, எட்டு செங்கோணங்களைக் கொண்ட ஒரு வடிவம். ஒரு ஸ்வஸ்திகாவை உருவாக்கும் போது, அதில் நான்கு இடைவெளிகள் விடப்படுகின்றன, அவற்றில் புள்ளிகளும் வைக்கப்படுகின்றன.

கணக்குப் புத்தகங்கள், புனித நூல்கள், கடைகள், வாகனங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது.

இதில், இந்து மத நம்பிக்கையின்படி நலன் ஏற்பட வேண்டி, வருணன், இந்திரன், சூரியன், குரு மற்றும் கருடன் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நான்கு திசைகள், நான்கு பருவங்கள், நான்கு யுகங்கள், நான்கு வேதங்கள், வாழ்க்கையின் நான்கு இலக்குகள் (அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்க்கையின் நான்கு நிலைகள் (குழந்தைப் பருவம், குடும்பப் பருவம், துறவறம், சன்னியாசம்) போன்ற பல கருத்துகள் இந்தக் குறியீட்டுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

'தி லாஸ்ட் விஸ்டம் ஆஃப் ஸ்வஸ்திக்' என்ற நூலின் ஆசிரியர் அஜய் சதுர்வேதியின் கூற்றுப்படி, ‘வேதக் கணிதத்தில் சத்யோ என்பது நான்கு கோணக் கனசதுரத்தைக் குறிக்கிறது. இது இந்துத் தத்துவத்தின் படி விழிப்பு, தூக்கம், கனவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலையைக் குறிக்கிறது.

ஜப்பானில் உள்ள பௌத்தர்களிடையே இந்தக் குறியீடு கௌதம புத்தரின் கால் தடங்களைக் குறிக்கும் 'மான்சி' என்று அழைக்கப்படுகிறது.

சதுர்வேதியின் கூற்றுப்படி, ஹிட்லர் இந்து தத்துவத்தில் இந்த ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவத்தையோ அர்த்தத்தையோ புரிந்து கொள்ளாமல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடைகாலத்தின் மத்தியில் வெளியிடப்பட்டது.
‘ஹேக்கன்கிராஸ் அல்லது ஹூக் கிராஸ்’

1871-ஆம் ஆண்டில், ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் சிஸ்லெமன், பண்டைய டிராய் நகரத்தை (இன்றைய துருக்கியில் இருக்கிறது) அகழாய்வு செய்த போது, மண் பாண்டங்களில் சுமார் 1,800 வகையான ‘கொக்கி சிலுவைக்’ குறியீடுகளைக் கண்டுபிடித்தார். இது ஸ்வஸ்திகா போன்ற ஒரு வடிவம். அவர் இதை ஜெர்மானிய வரலாற்றில் இருக்கும் கலைப்பொருட்களுடன் பொருத்தினார்.

டிராய் நகரத்தில் வசித்தவர்கள் ஆரியர்கள் என்றும், இந்த மண் பாண்டங்களில் காணப்பட்ட ஒற்றுமைகளை, நாஜிக்கள் ஆரியர்களுக்கும் தங்களுக்குமான இனத் தொடர்ச்சிக்கான சான்றுகள் என்று நம்புவதற்கு வழிவகுத்தது என்றும் மானுடவியலாளர் க்வென்டோலின் லேக் குறிப்பிடுகிறார்.

ஹிட்லர் தனது கட்சி சின்னமாக ஸ்வஸ்திகாவை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம், ஜெர்மானியர்கள் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் ஒற்றுமையே என நம்பப்படுகிறது.

இந்த ஒற்றுமையின் மூலம்தான் இந்தியர்களும் ஜெர்மானியர்களும் ஒரே 'தூய்மையான' ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களை நாஜிக்கள் நம்ப வைத்தனர்.

1920-ஆம் ஆண்டில், அடால்ஃப் ஹிட்லர் புதிதாக உருவாக்கப்பட்ட தனது கட்சிக்கு ஒரு சின்னத்தைத் தேடும் போது, அவர் 'ஹேக்கன்க்ரூஸ்' அல்லது வலதுசாரி ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார். 1933-ஆம் ஆண்டில், ஹிட்லரின் பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் ஸ்வஸ்திகா அல்லது கொக்கிச் சிலுவையின் வணிகப் பயன்பாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

ஜெர்மனியின் உச்ச ஆட்சியாளரான அடால்ஃப் ஹிட்லர், தனது சுயசரிதையான 'மெய்ன் காம்ப்' நூலின் ஏழாவது அத்தியாயத்தில் நாஜி கொடியின் தேர்வு, அதன் நிறங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

ஹிட்லரின் கூற்றுப்படி, புதிய கொடி 'மூன்றாம் (ஜெர்மன்) ரைக்'-ஐக் குறிக்கிறது.

நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடை காலத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், சிவப்புப் பின்னணியில் ஒரு வெள்ளை வட்டத்திற்குள் கருப்பு ‘ஹேக்கன்கிராஸ்’ இருந்தது. இந்த உருவம் இடது பக்கம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த ஸ்வஸ்திகா.

சிவப்பு நிறம் சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்தது. வெள்ளை என்பது தேசியவாதத்தின் கருத்தை பிரதிபலிக்கிறது. ஸ்வஸ்திகா ஆரியர்களின் போராட்டத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.

'தி சைன் ஆஃப் தி கிராஸ்; ஃப்ரம் கிளட்டனி டூ ஜீனோசைடு' (‘The Sign of the Cross: From Gluttony to Genocide’) என்ற புத்தகத்தில், டாக்டர் டேனியல் ரான்கூர் லாஃபேர்ரார், ஹிட்லர் தனது குழந்தைப் பருவத்தை ஆஸ்திரியாவில் உள்ள பெனடிக்டைன் மாண்டிசோரியில் கழித்தார் என்று குறிப்பிடுகிறார். அங்கு பல இடங்களில் ‘கொக்கிச் சிலுவை’ பொறிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தனது குழந்தைப் பருவ நினைவுகளுக்காக அந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், என்கிறார் அவர்.

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள், மாற்றுத்திறனாளிகள், ரோமானி மற்றும் சின்டி இன மக்கள், கறுப்பின மக்கள், ஸ்லாவ் இன மக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், சோவியத் மற்றும் போலந்து மக்கள் என, சுமார் 60 லட்சம் மக்களை இந்தக் கொடியின் கீழ் நாஜிக்கள் கொன்றனர்.

ஜெர்மனி மற்றும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூதர்கள் ஹிட்லரின் படைகளால் துன்புறுத்தப்பட்டனர். ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தச் சின்னம் ‘நவ நாஜிக்கள்’ (Neo-Nazis) மற்றும் பல வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஸ்வஸ்திகாவின் பயன்பாடு

1908-ஆம் ஆண்டு, யுக்ரேனில் யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட ஒரு பறவையின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஸ்வஸ்திகா வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. ஸ்வஸ்திகாவின் மிகப் பழமையான உருவம் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கார்பன் டேட்டிங் மூலம் அந்த கலைப்பொருள் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

இந்தக் குறியீடு, பண்டைய கிறிஸ்தவக் கல்லறைகள், ரோம் நகரின் நிலத்தடிக் கல்லறைகள், எத்தியோப்பியாவின் லாலிபெலாவில் உள்ள கல் தேவாலயம் மற்றும் ஸ்பெயினின் கோர்டோபா கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றில் காணப்படுகிறது.

யூத இன அழித்தொழிப்பான ‘ஹோலோகாஸ்ட்’ குறித்த என்சைக்ளோபீடியா குறிப்பின் படி, "7,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது. இது வானத்தில் சூரியனின் இயக்கம் மற்றும் இயக்கத்தைக் குறிக்கும்."

இந்தக் குறியீடு, வெண்கல யுகத்தின் போது ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா நாகரிக காலத் தளங்களில் காணப்படும் சில எச்சங்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில், தாமஸ் வில்சன் தனது 'தி ஸ்வஸ்திக்: தி ஏர்லியஸ்ட் நோன் சிம்பல் அண்ட் இட்ஸ் மைக்ரேஷன்ஸ்' ('The Swastik: The Earliest Known Symbol and its Migrations') என்ற புத்தகத்தில், ஸ்வஸ்திகா சின்னம் பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார். தாள்கள், கேடயங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றிலும் ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. இது ஒரு வால் நட்சத்திரத்தைக் குறிக்கும் உருவம் என்று சிலர் நம்பினர்.

 
ஸ்வஸ்திகா, ஹிட்லர், இந்துமதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்
பீர் முதல் கோகோ கோலா வரை

பண்டைய கிரேக்கர்கள் தங்கள் குடங்கள் மற்றும் குவளைகளில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்தனர். நார்வேயின் நம்பிக்கையின்படி, ஸ்வஸ்திகா என்பது 'தோர்’ என்ற கடவுளின் சுத்தியல்.

மேற்கத்திய நாடுகளில் விளம்பரம் மற்றும் ஆடைகளில் ஸ்வஸ்திகா சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் கோகோ கோலா விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

நாஜிக்களால் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரபல டேனிஷ் பீர் நிறுவனமான 'கார்ல்ஸ்பெர்க்' தனது லோகோவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைத்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஃபின்லாந்து விமானப்படையின் அதிகாரப்பூர்வ முத்திரையில் ஸ்வஸ்திகா சின்னம் இடம்பெற்றிருந்தது. பிரிட்டனில், ஸ்வஸ்திகா சாரணர் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஒரு பேட்ஜாகவும் வழங்கப்பட்டது.

நாஜி முத்திரைக்கும் மங்களச் சின்னத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

'ஹேக்கன்க்ரூஸ்' ('Hackenkreuz') இடதுபுறமாக 45 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். ஆனால், ஸ்வஸ்திகாவோ நேராக வலதுபுறமாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இஸ்ரேல்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்டு மக்கள் போராட்டம் - அவர்கள் கோருவது என்ன?

3 months 2 weeks ago
இஸ்ரேல் - பாலத்தீனிய போர்: பணயக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அக்டோபர் 7, 2023ம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்பதில் அரசும் பிரதமரும் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல்
  • எழுதியவர், டியர்பைல் ஜோர்டன், ஆலிஸ் கடி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள்.

டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 2ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் டெல் அவிவ் போன்ற பகுதிகளில் காவல்துறையின் தடுப்பையும் மீறி நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான ஹிஸ்தாத்ரட்.

 
 

முன்னதாக சனிக்கிழமையன்று பணயக் கைதிகளின் உடலை தெற்கு காஸாவில் அமைந்திருக்கும் ரஃபா பகுதியில் உள்ள பாதாள சுரங்கத்தில் கண்டெடுத்ததாக இஸ்ரேல் ராணுவப் படை (IDF) அறிவித்தது.

இறந்த பணயக் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர், கார்மெல் காட், ஈடன் யெருஷல்மி, ஹெர்ஷ் கோல்ட்பெர்க் போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோங் சருஷி, மற்றும் மாஸ்டர் ஸ்கிட் ஓரி டானினோ ஆகும்.

சனிக்கிழமை அன்று ராணுவ வீரர்கள் அவர்களை மீட்பதற்கு சில நேரங்களுக்கு முன்புதான் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும் அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதம் இருக்கும் பணயக் கைதிகளை மீட்பதில் நெதன்யாகுவும் அவரின் அரசும் தோல்வியுற்றது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் ஞாயிறு அன்று போராட்டத்தை நடத்தினார்கள்.

இஸ்ரேல் மக்களின் வேண்டுகோள்கள் என்ன?

ஞாயிறு இரவு அன்று, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அயலோன் நெடுஞ்சாலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினார்கள்.

பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் ஏறி நின்று போராட்டத்தை நடத்தினார்கள். அங்கு ஒரு சிலர் நெதன்யாகுவின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்து கொண்டு, "அவர்கள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்," என்று கோஷமிட்டனர்.

"நீங்கள்தான் தலைவர். நீங்கள்தான் இதற்கு பொறுப்பு" என்ற பதாகையை கையில் ஏந்தி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் காவல்துறையினரை சாடும் வகையிலும் கோஷங்களை எழுப்பினார்கள். "யாரை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? வெட்கப்பட வேண்டும்," என்ற தொனியில் அவர்களின் கோஷங்கள் இருந்தன.

சிலர் சாலைகளில் நெருப்பை மூட்டினார்கள். சிலர் மஞ்சள் நிற ரிப்பன்களை அணிந்து கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

தொழிலாளர் கட்சியை சேர்ந்த கொள்கை வகுப்பாளார் நாமா லஸிமியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த போராட்டம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும் நாளை என்ன நடக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது என்றும் கூறினார். காவல்துறையினர் எறிந்த கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்ட அவர் கீழே விழுந்து காயமடைந்திருந்தார்.

இஸ்ரேல் - பாலத்தீனிய போர்: பணயக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பணயக் கைதிகளை மீட்கக் கோரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள்  

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஐடனின் தந்தை எலி ஷ்டிவி, "போர் விவகாரத்தில் முடிவெடுக்கும் மக்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இனிமேல் நம்மிடம் நேரமில்லை," என்று கூறினார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றாக இணைந்து பங்கேற்றனர் என்றும், அவர்கள் அனைவரும் பணயக் கைதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நான் என்னுடைய குழந்தையை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். தற்போது அனைத்து குடும்பத்தினரும் ஒரு வகையில் பணயக் கைதிகளாகதான் இருக்கிறோம்," என்று கூறினார் எலி.

இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது என்று டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நோகா பர்க்மென் பிபிசியிடம் தெரிவித்தார்.

விதிகளை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

நகரின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். ஜெருசலேம் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதமரின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களைக் காட்டிலும் இது மிகவும் பெரியது என்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அக்டோபர் 7ம் தேதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 21 வயது மதிக்கத்தக்க நபரின் அண்ணன் யோதம் பீர் (24) டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். "6 நபர்களின் நிலை என்ன என்று கேட்ட பின்பு எங்களால் அமைதியாக இருக்க இயலவில்லை. இது மிகவும் முக்கியமான தருணம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தன்னுடைய சகோதரரை இழந்த யோதம் பீர்
படக்குறிப்பு, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தன்னுடைய சகோதரரை இழந்த யோதம் பீர்
அரசு அக்கறை காட்டவில்லை - எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் யைர் லாபிட் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

முன்னாள் பிரதமரும் யேஷ் ஆதித் கட்சியின் தலைவருமான அவர், மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட நெதன்யாகுவை கட்டாயப்படுத்த வேண்டும் என முன்பு கோரிக்கை வைத்திருந்தார்.

பொது வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அர்னோன் பார் டேவிட், மற்ற அனைத்தைக் காட்டிலும் அவர்களை விடுவித்தல் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு பதிலாக நாம் இறந்து போன நபர்களின் உடல்களைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

நெதன்யாகு அரசுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக தேசிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் பணயக் கைதிகளின் குடும்பத்தினர்.

பணயக் கைதிகளின் குடும்பத்தினர்கள் இணைந்து செயல்படும் பணயக் கைதி குடும்பங்களின் மன்றம் "ஹமாஸின் பிடியில் சிக்கி 11 மாத சித்தரவதைகள், பசி மற்றும் கொடுமையை அனுபவித்த அந்த ஆறு நபர்களும் கடந்த சில நாட்களில்தான் கொல்லப்பட்டுள்ளனர்," என்று கூறியுள்ளது.

ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டால் மீதம் இருக்கும் பணயக் கைதிகளும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

நாட்டை பாதுகாக்கவும், மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு. ஆனால், "பணயக் கைதிகளை கொலை செய்தவர்களுக்கு இந்த ஒப்பந்தம் தேவை இல்லை," என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

தீவிர வலதுசாரி சிந்தனையை கொண்ட அந்த நாட்டின் நிதி அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிக் இந்த போராட்டத்தை கண்டித்ததோடு இது ஹமாஸின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் போராட்டம் என்று தெரிவித்தார்.

காஸாவில் இன்னும் எவ்வளவு பணயக் கைதிகள் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 251 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 1200 நபர்கள் கொல்லப்பட்டனர்.

காஸாவில் உள்ள ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40,530 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸுன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்தும் ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் - எவ்வாறு பரவுகிறது? என்ன ஆபத்து?

3 months 2 weeks ago
EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும்.

‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது.

இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் 40 வயதுடைய ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 80 வயதுடைய ஒரு நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த நோய் அரிதானது என்றும், அந்நாட்டில் ஆண்டுதோறும் இந்த நோய்த்தொற்று 11 பேருக்கு மட்டுமே ஏற்படும் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention - CDC) தெரிவித்துள்ளது.

மசாசூசெட்ஸில், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் 17 பேருக்கு ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் தொற்று ஏற்பட்டது, இதனால் ஏழு பேர் இறந்தனர்.

கனடாவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடா மற்றும் கரீபியன் வரையிலும், தெற்கே அர்ஜென்டினா வரையிலும் - அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது.

 
EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
EEE என்பது என்ன? எவ்வாறு பரவுகிறது?

‘ட்ரிபிள் ஈ’ வைரஸ், கொசுக் கடி மூலம், முக்கியமாகப் பறவைகள், குதிரைகள், மற்றும் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் ஆகும்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு எந்த அறிகுறிகளும் உருவாகவில்லை.

இந்த வைரஸ் மிகவும் அரிதானது. ஆனால் இது மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இது காய்ச்சல் மற்றும் ஆபத்தான மூளை வீக்கத்தை ஏற்படுத்தும்.

தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இறக்கக் கூடும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது.

இந்த தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவாது.

பொதுவாக, கோடையின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் துவக்கத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவும். இது பெரும்பாலும் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், எப்போதாவது அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் நிகழும்.

 
EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன
EEE-இன் அறிகுறிகள் என்ன?

‘ட்ரிபிள் ஈ’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாக, 4 முதல் 10 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகளைக் ஏற்படும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது.

காய்ச்சல், சளி, உடல்வலி, மற்றும் மூட்டு வலி ஆகியவை இதில் அடங்கும்.

இந்தத் தொற்று ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இதனால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படாவிட்டால், மக்கள் முழுமையாக குணமடைகின்றனர்.

ஆனால், சிலருக்கு மெனிஞ்சிடிஸ் (meningitis - மூளைக்காய்ச்சல்) அதாவது மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளின் வீக்கம், அல்லது மூளையில் வீக்கம் ஏற்படும்.

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால பாதிப்பாக, அறிதல் குறைபாடு, ஆளுமைக் கோளாறுகள், வலிப்பு, பக்கவாதம், மற்றும் கழுத்துப் பிரச்னைகள் ஏற்படலாம்.

 
EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த வைரஸ் மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் நீர்ப்பறவைகள் போன்ற உயிரினங்களைப் பாதிக்கிறது
‘ட்ரிபிள் ஈ’ தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

ட்ரிபிள் ஈ தொற்றுக்கு தடுப்பூசி இல்லை, அதனை குணப்படுத்தும் மருந்து இல்லை.

இதற்கான சிகிச்சையில் நரம்பு வழி திரவங்கள் மற்றும் செயற்கை சுவாசம் ஆகியவை அடங்கும்.

அதிக ஆபத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மசாசூசெட்ஸில் உள்ள ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களில், தற்போது மக்கள் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.

அதற்கு கீழ்கண்ட வழிகள் அறுவுறுத்தப்பட்டிருக்கின்றன:

  • கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய அந்தி வேளைக்குப் பிறகு வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது
  • கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது
  • உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவது
  • ஜன்னல்களில் கொசு வலைகளை அமைத்தல் மற்றும் சரிசெய்தல்
  • கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும், தேங்கிய நீரை வெளியேற்றுதல்

ஆபத்தில் உள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன.

EEE வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது?

ட்ரிபிள் ஈ வைரஸ் அமெரிக்காவின் கிழக்குக் கடற்பரப்பில் இருந்து தெற்கே அர்ஜென்டினா வரையிலும், கிரேட் லேக்ஸ் மற்றும் கரீபியன் தீவுகளிலும் இருப்பதாக அறியப்படுகிறது.

இது முதன்முதலில் 1933-இல் டெலாவேர், மேரிலேண்ட், மற்றும் வர்ஜீனியாவில் குதிரைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் கொசுக்கள் இந்த வைரஸை கடத்துவதால், இது பொதுவாக மனிதர்களுக்குப் பரவுவதில்லை. ஆனால், இந்த வைரஸ் நீர்ப்பறவைகள் போன்ற அப்பகுதியில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கிறது. பல பறவை இனங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதனால் அவற்றுக்கு இதனால் நோய் ஏற்படுவதில்லை.

இந்த ஆண்டு, இந்த வைரஸால் அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்கப் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான VDCI-யின் தரவுகள் படி, 2011 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்த வைரஸால் அதிகப்படியாக 26 பேர் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மிச்சிகன் (18), புளோரிடா (9), ஜார்ஜியா (7) மற்றும் வட கரோலினா (7) ஆகிய மாகாணங்களில் அதிக EEE வைரஸ் தொற்று பதிவானதாக அந்நிறுவனம் கூறுகிறது.

2010-ஆம் ஆண்டு, பனாமாவின் டேரியன் பகுதியில் ட்ரிபிள் ஈ வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர், இரண்டு பேர் இறந்தனர் என்று ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் இருந்த 50 குதிரைகளையும் இந்த வைரஸ் தாக்கியது.

சமீபத்திய ஆண்டுகளில் டிரினிடாட் நாட்டில் இரண்டு நபர்களுக்கு ட்ரிபிள் ஈ தொற்று ஏற்பட்டது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பிரேசிலில் ஒரு நபருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.

1981-இல் அர்ஜென்டினாவில் ட்ரிபிள் ஈ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதனால் அந்நாட்டில் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை. ‘வெஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸ்’ எனப்படும் இதேபோன்ற மற்றொரு நோய் அந்த நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்னையாகும். அது அங்கு பல மனித இறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 
EEE வைரஸ், கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்ரிபிள் ஈ பரவல் அதிகரிக்குமா?

காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ட்ரிபிள் ஈ பரவல்களின் எண்ணிக்கை அதிகரிக்க க்கூடும் என்ற அச்சம் உள்ளது.

கொசுக்கள் 10C மற்றும் 32C வெப்பநிலையிலும், காற்றில் குறைந்தபட்சம் 42% ஈரப்பதம் இருக்கும் போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.

‘க்ளைமேட் சென்ட்ரல்’ என்ற ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, அமெரிக்காவின் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பகுதிகளில், 1979-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் காலகட்டம், ஆண்டுக்கு சராசரியாக 16 நாட்கள் அதிகரித்துள்ளது.

ஒரு வருடத்தில் கொசுக்கள் எந்தளவு நீண்ட காலம் சுறுசுறுப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை ட்ரிபிள் ஈ போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகளைக் கடத்தும் அபாயம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

Checked
Sun, 12/22/2024 - 12:59
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe