தமிழகச் செய்திகள்

தமிழ்நாட்டில் ஒருவர் மரணம்: தேனீக்கள் கொட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

3 months 2 weeks ago

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 21 செப்டெம்பர் 2025, 08:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன.

இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.

இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

"தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு." என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

மேலும் "மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்." என்கிறார் அவர்

"அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.

தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன்.

"தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன்.

எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார்.

"ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு." என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

"காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்." என்கிறார் அவர்.

மேலும் "கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்" என எச்சரிக்கிறார் அவர்.

ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன.

இதுகுறித்து பேசுகையில், "தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது." எனக் கூறுகிறார்.

"பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்." எனக் கூறும் அவர், "ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு." என்றார்.

"ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்?

தேனீக்கள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.

தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்.

"தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c701xr3wllxo

கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?

3 months 2 weeks ago

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 20 செப்டெம்பர் 2025

கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது.

சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, தோட்டப் பகுதியில் ரோலக்ஸ் யானை ஏற்படுத்தியுள்ள சேதம்.

கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது.

இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன.

'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்?

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, கால்நடை மருத்துவர் விஜயராகவன்

மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார்.

பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர்.

ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர்.

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார்.

அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார்.

ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல்

யானை-மனித மோதல், ரோலக்ஸ் யானை, கோவை யானை பிரச்னை

படக்குறிப்பு, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ்

பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார்.

ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார்.

யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம்

சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg4vj37nz1o

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 months 2 weeks ago

20 Sep, 2025 | 06:14 PM

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.

கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார்.

இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/225604

Checked
Sat, 01/10/2026 - 03:01
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed