ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம்
சோகச் சுமைகளால் மனதில் பாரம்
இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம்
என் கால்கள் நடந்தன வெகு தூரம்.
'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?'
வேதனையான மனம் கால்களைக் கேட்டது.
'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது'
வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது.
எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக,
புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக,
நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற
விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம்.
நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி,
இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள்,
இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம்
இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்!
'என் சோகத்தை மறக்கச்செய்த இயற்கையே உனக்கு நன்றி...
உனை வருத்தி என்னை கூட்டி வந்த கால்களே உனக்கும் நன்றி...
என் நிலை அறிந்த மூளையே உன் சிந்தனைக்கு கோடி நன்றி...'
என்று நன்றி கூறி மகிழ்ந்தது எந்தன் தெளிந்த மனம்
Recommended Comments