போ கடலே நீயுமா?
=========================
நீல வானம் குடை பிடிக்க
நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க..
கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க
கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம் கடலே..
கொத்தும் குலையுமாய் எம்மை கொன்று சென்றாய் கடலே!
ஈவு இரக்கம் என்னவென்று தெரியாதார் நாளும் - எமை
நார்..நாராய் கிழிதெறிந்து நரபசி ஆறினரே...
குமுறி குமுறி அழுது.. கூடெரிந்த குருவிகளாய்
வழி தெரியாது நின்றோம் - கடலே
நீயும் வந்து எங்கள் விழிகளில் தீ மூட்டி போனாயே...
வெந்து ஆவியாய் போயேன் கடலே!
அன்னை என்றோம் ..மாதா என்றோம்...
தாய் என்றோம் ... எம் கரையை தாங்குபவள் என்றோம்...
அத்தனை முறையும் எம்மை பெற்றவள் பெயர் கொண்டே..உனை அழைத்தோம்..
பெற்றவள் பதற பிஞ்சினயும்..இன்னும் பேசவே தொடங்கா மழலை
அழுது நிற்க பேறு கொண்டவளையும்...
பெரிசுகளையும் ..சிறிசுகளையும்...
கரை தாண்டி வந்து சுருட்டி சென்று..கருக்கு மட்டையில் அடித்து கொன்று
காவு கொண்டு போனாய் கடலே!
இனி என்ன பெயர் கொண்டு நாம் உனை அழைக்க
நீயே சொல்லு கடலே!
தலை மூடி போன போர் வெள்ளம் கொஞ்சம் வடிய...
இனியாவது விடியாதா என்று ஏக்கத்தோடு நாம் நிமிர...
தலை மீது நெருப்பள்ளி கொட்டி போனாய் கடலே...
இனி உன்னை தாயென்று பாடமாட்டோம் கடலே!
Recommended Comments