எப்படி உங்களுக்கு புரிய வைப்போம்.
நகைவர நாணம் கொள்வார் நம் காந்திய வழியை வழிமொழிபவர்களும் நாகரிக சமூகத்தின் விடுதலைக்கான வழி இதுவே என்று நாசூக்காக சுட்டுபவர்களும் நடந்ததை உணர்ந்தால்.
தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையாளர்களாக மாற்றிட்ட சிங்கள நய வஞ்சக தந்திரங்களை தரணிக்குணர்த்த தன்னந்தனியனாக தமிழர்களில் ஒருவன் உண்ணா நோன்பிருந்தான். உண்மையை நேசிக்கும் உயர் குணமுள்ள உங்களிடம் கேட்கிறேன், உண்ணா நோன்பை உலகுக்குணர்திய உத்தமர் காந்தி உண்ணா நோன்பிருந்துதான் உயிர் விட்டாரா? இல்லையே! ஆனால் அயோக்கியர்களிடமிருந்து தம்முடைய உயிரை உடமையை மானத்தை காக்க ஆயுதம் ஏந்தியிருக்கும் அந்த தமிழ் மண்ணில் தமிழன் ஒருவன் உயிர் விட்டானே அது தானே உண்மை, அதுதானே வரலாறு.
இதோ அருணாசல பிரதேசத்திற்க்கு அருகில் இருக்கும் சீனா, நம்மிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, நம் நாட்டின் அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, நம்மைவிட வலிமையுள்ள சீனா, அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்க ஆசை கொண்டு ஆள் தேடி கொண்டிருக்கும் நமக்கு முன்னரே அங்கம் வகிக்கும் சீனா, தன் மக்களை வலிந்து குடியேற்றி அருணாசல பிரதேசத்தை தம் பிரதேசமாக தரணிக்குணர்த்த முற்ப்பட்டால், இந்தியாவின் இணையற்ற ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் என்ன செய்வார்கள்? அகிம்சை நாடுதானே இந்தியா? அகிம்சை நாடுதானே இந்தியா! அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து அருணாசல பிரதேசம் இந்தியாவின் பகுதி என்று அறிவிக்கத்தான் இந்திய இராணுவத்தை பயண் படுத்துவோமா? அல்லது தமிழ்நாட்டில் தரமான மந்திரங்களை பயின்ற அய்யர்களையும் அய்யங்கார்களையும் அழைத்து சென்று யாகமும் பூசையும் நடத்துவோமா? அல்லது மலையாளத்து மந்திர வாதிகளையும் நம்பூதிரிகளையும் அழைத்து மந்திரம் ஏவுவோமா?
அகிம்சை நாட்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிர்க்கப்பட்டு கர்நாடகம், பஞ்சாப், வங்காளம் என்று மொழிகளின் பெயரால் மாநிலங்கள் இருந்த போதும், தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்கே உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கதையை வரலாற்றை கேட்ட பிறகும் அகிம்சை நாட்டிலேயே அகிம்சை வழி போராட்டங்களின் கதி இதுதான் என்றபோதும் அகிம்சை வழியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 1987ல் இலங்கை பேரினவாத இனவெறியாகட்டும் இந்தியாவாகட்டும் அகிம்சைக்கும் அகிம்சை போராட்டங்களுக்கும் எதிராகத்தான் நடந்திருக்கின்றன என்பதை தன் உடலால் உயிரால் நிறுபித்து காட்டிய தீயாக செம்மல் "திலீபன்" 1987 செப்டெம்பர் 15ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திலீபன். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலங்கி நிற்க
திலீபன் அழைப்பது சாவையா - இந்த
சின்ன வயதில் இது தேவையா
திலீபன் உயிரை அளிப்பாரா - அவன்
செத்தபின் மாற்றார் பிழைப்பாரா
என உணர்ச்சி கவிஞ்சர் காசி ஆனந்தன் குமுற
விண்ணிலிருந்து பார்ப்பேன்
விடுதலையை என்ற மகன்
கண்ணெதிரே இந்த கட்டிலிலே
முடிகின்றான்
பத்தோடு ஒன்றா- இவன் பாடையிலே
போவதற்கு
சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ
தாலாட்டு பாட்டில் தமிழ் தந்த
தாய்குலமே
போராட்ட வீரன் போய் முடியப்
போகின்றான் - போய்
முடியப் போகின்றான்
போய் முடியப் போகின்றான்
என்று புதுவை இரத்தின துரை கதற உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட திலீபன் சொல்கின்றான்
" இந்த இனம் - இந்த தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்; அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது; ஆயுதம் இல்லாவிட்டாலும் உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக நியாயத்திற்க்காக நீதிக்காக அது எந்த சக்தியையும் எதிர்த்து போராடும்."
ஆனைமங்களத்து செப்பேடுகளும் அகழ்வாராய்ச்சிகளும் அதிசயித்து போற்றும், இதோ இன்றும் தஞ்சை தரணியிலே தலைநிமிர்ந்து நிற்கும் பெருவுடையார் கோயிலும் சொல்லும் இராஜராஜன், புத்த சங்கத்தினர் மனமுவந்து தங்களது அரசை அளித்த போது மறுத்தளித்து தனது 19ம் பிராயத்தில் சொன்னானே
"சொந்த தமக்கைகளையே காமுறும், தாயாதிகளையே அரசுக்காக கொள்ளும் இந்த சிங்களவரின் கிரீடத்தை எனது இடது கையாலும் தோடேன்"
என்று அந்த சிங்களவரிடமா அகிம்சை போராட்டம் வெற்றிப் பெரும்? இதயமுள்ளவர்களே இயம்பிடுங்கள். இத்தனைக்கும் பிறகும் இதுதான் வழியென்று நீங்கள் சொன்னால்!, நாங்கள் எதைச் சொல்லி எப்படி உங்களுக்கு புரிய வைப்போம்.
0 Comments
Recommended Comments
There are no comments to display.